இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்

இமையம் அவர்கள் எழுதியுள்ள ‘வாழ்க வாழ்க’ ஒரு பொதுக் கூட்டத்தை சுற்றிப் பின்னப்பட்ட சமகால அரசியல் சூழ்நிலையின் கோட்டுச் சித்திரம். இமையம் அவர்களின் திமுக பின்புலம் பற்றி வாசகன் அறிந்துள்ளதால், தவிர்க்க இயலாத வண்ணம் வாசிக்கையில் இமையம் அவர்களின் சார்புத்தன்மை குறித்தக் கேள்வி மனதில் எழுகிறது,  சராசரி வாசகன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால் இது, இதைக் கடந்து நாவலின் அழகியல் குறித்து மேலும் அறிய முற்படுதலே நல்ல வாசிப்பின் அடையாளமாக இருக்கும். இமையம் அவர்களின் படைப்புகளில் பெரும்பான்மையானவற்றில் பெண் கதாப்பாத்திரங்களை முன்னிலைப்படுத்தியே நாவலின் போக்கு அமைந்திருக்கும், இந்தக் குறுநாவலும் ஆண்டாள் என்னும் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி அமைக்கப் பட்டிருக்கிறது.

நாவலின் உச்சமாக இறுதியில் நிகழும் ரசவாதக் காட்சி நாவலின் தளத்தை விரித்து உரைக்கிறது, ஒரு எளிய ,புற விவரிப்புக் கொண்ட அரசியல் சமூக எழுத்தாக மட்டும் முடிந்திருக்க வேண்டிய நாவல் அதன் எல்லையை உணரும் இடம் அது. நாவல் தனது அரசியல் யதார்த்த புரிதலின் எல்லையை ஒப்புக்கொள்கிறது. அத்தனை நேரம் வருவாரா மாட்டாரா என்று புலம்பித் தீர்க்கும் ஜனங்கள் தலைவர் ப்ரசன்னமாகவும் நொடியில் தன்வசம் இழந்து கைகளைக் கூப்புவது எதற்காக என்ற கேள்வி வாசகன் மனதில் எழுகிறது ? , வானூர்தியின் வருகையா? கூட்டத்தின் ஆரவாரத்தில் தன்னை இழந்த பிரக்ஞையா?அவ்வாறு கைகளைக் குவித்து கும்பிட வெறும் பழக்கம் மட்டும் தான் காரணமா ? வாங்கிய ஐநூறு ருபாய் காரணமா ? அழைத்து வந்த வெங்கடேச பெருமாள் பார்த்து விடப் போகிறான் என்ற தன்னுணர்ச்சியில் கும்பிடுவதுப் போல் செய்த பாவனையா ?, இவ்வாறு யதார்த்தம் மீறிய ஒரு தளத்தில் நாவல் பயணிக்க முற்படுகிறது. ஆயினும் விரைந்து யதார்த்த தொனியினை இழக்க விரும்பாது அடுத்த நிகழ்வுகள் வழி வாசகனை மீண்டும் யதார்த்தம் நோக்கித் தள்ளுகிறது , இந்த அழகியல் தேர்வு வழி ஒரு சமூக நாவல் என்பதையும் தாண்டி இறைவனுக்கும் பக்தனுக்குமான உரையாடலாக (?) இந்தக் குறு நாவலை வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இறைவன் குறித்துக் கூறியப் பிறகு பூசாரி இல்லாமல் எப்படி ? கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வெங்கடேச பெருமாள் என்னும் உள்ளூர் அரசியல்வாதியின் கதையும் இந்நாவலில் உள்ளது, எந்த வித கொள்கைக் குழப்பங்களும் இன்றி வலம் வரும் பெரிய மனிதன் வெங்கடேச பெருமாள். மக்களின் பணத்தை காக்கைக்கடி கடித்து அதிலும் கொஞ்சத்தை எடுத்து மீண்டும் வேறு காரணத்திற்காக மக்களிடமே திரும்பக் கொடுக்கும் பெரிய மனிதன், வாங்கும் மக்களிடமும் பெரிதாக சலனம் இருப்பதாக நாவலில் பதிவு இல்லை, தங்கள் பொருளாதார நிலை குறித்த அங்கலாய்ப்பு தவிர மக்களுக்கு தார்மீகக் கோபம் எதுவும் இருப்பதுப் போல் இல்லை , இப்படிப் பரஸ்பரம் நாம் சமூகமாக வந்தடைந்திருக்கும் கீழ்மை குறித்தே நாவல் உட்பிரதியாய் பேச விரும்புகிறது.

பொதுக்கூட்டம் நடக்கும் பொட்டல் ஒரு குறியீடாக தகிக்கிறது, விளை நிலங்கள் அழிக்கப்பட்டு உருவான பொட்டலின் மேடையில் நடக்கும் அவலங்களின் தொடர்ச்சி எந்த நாகரீக சமூகத்திலும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். லாரிகளிலும் வேன்களிலும் காசுக்காக வந்திறங்கிய மக்கள் உச்சி சூரியனில் தங்கள் நிலையிழந்து அமர்ந்திருக்கும் இந்தப் பொதுக்கூட்ட பொட்டல் ஒரு தகிக்கும் குறியீடு.

நாவல் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இது பலம் பலவீனம் என்பது தாண்டி பெண்களின் உரையாடல்களில் எப்போதும் இடம் பெறும் நீண்ட நீண்ட பதில் பேச்சுகள் இந்த நாவலின் எடிட் கட்டமைப்பால் சட்டென முடியும் உரையாடல்களாக மாறி விட்டன. பஸ் இருக்கைக்காக இரு பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இமையம் அவர்களின் சிறுகதை  நினைவிற்கு வந்தது.அந்தச் சிறுகதையில் இருந்தக் கட்டற்ற உரையாடல் போக்கு வாசிப்பின் லகரிகளில் ஒன்று. இந்நாவலில் அத்தகையப் பகுதிகள் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. அவை பதவி சண்டை, சாதி சண்டை, பெண் விடுதலை எனக் குறியீட்டு ரீதியான உரையாடல்களாக மாற்றப்பட்டு விட்டன, நவீன நாவலின் போக்குப் படி இது ஆசிரியரின் அழகியல்த் தேர்வு என்று ஒப்புக்கொண்டாலும் அந்தக் கட்டற்ற பகுதிகளே மனதிற்கு உகந்தவையாக இருக்கின்றன.

குடும்பச் சிக்கலில் தொடங்கி இன்னவென்று விவரிக்க முடியாத நிலையில் ஆண்டாள் இருக்கையில் நாவல் முடிகிறது, அத்தனை குடும்ப பாரத்தையும் சுமக்கும்  ஆண்டாள் கதாப்பாத்திரம் வலுவாக மனதில் பதிகிறது, “எதுக்கு வெயில் நேரத்தில் அழுவுற வுடு” என்று கண்ணகி ஆண்டாளை தேற்றுகையில் சகப் பெண்ணின் பரிவும் அதே நேரத்தில் அனைத்தும் அறிந்த ஒரு உலகத்தின் கீற்றை நாம் காண்கிறோம். உணர்ச்சிப் பிழம்பாக நாம் பெண்களைப் புரிந்து வைத்திருக்கையில் அழுகையைக் கூட திட்டமிட்டபடி செய்ய வல்ல, அனைத்தும் அறிந்த பெண்கள் உலகினைப் புரிந்துக் கொள்ள இந்த ஒற்றை வரி உதவுகிறது.

திருவிழாவைக் காணவந்த உற்சாகத்தில் இருந்த ஆண்டாளும், தெரு மக்களும் நேரம் செல்ல செல்ல வெளியேறமுடியாத ஒரு நெருக்கடியான விளையாட்டில் இருப்பதை உணர்கின்றனர்,வெளியேறும் வழி உடைமைக்கும் உயிருக்கும் பாதகம் விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. சேலைக்கும் ஐநூறு பணத்திற்கும் ஆசைப்பட்டு வந்தவர்கள் தானே நாம் என்ற சுயபச்சாதாபம் முன் அவர் குடும்பங்களின் பொருளாதார சூழல் குறித்து வாசகன் எண்ணிப் பார்க்க நாவலின் துவக்கத்திற்குச் செல்ல வேண்டும். தனிப்பட்ட தார்மீகச் சிக்கல் சுமை என்றாக , கோடிகள் செலவாகும் பொதுக்கூட்டத்தின் முன் கோடி மக்களின் வறுமைச் சூழல் குறித்த தார்மீகக் கேள்வியே “வாழ்க வாழ்க” என்ற புதினமாக மாறியிருக்கிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.