விரிசல் – கா.சிவா சிறுகதை

சங்கரின் அம்மாவும் அப்பாவும் காமாட்சி மெஸ்ஸுக்கு இரண்டு நாள் விடுமுறை விட்டுவிட்டு உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். இந்த மெஸ்ஸில், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் மதியமும் இரவும் உணவுண்டு, கணக்கை குறித்து வைத்துக்கொண்டு மாதம் முடிந்து சம்பளம் பெற்றவுடன் கணக்கை முடிப்பார்கள். ஓய்வென்பதால் காலையில் சாவகாசமாக எழுந்து,  டீ குடித்தபடி தினத்தந்தியை புரட்டி, திரைப்பட விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருந் சுப்பு
” அண்ணே தீபாவளிக்கு குணாவும் தளபதியும் ஒன்னா ரிலீசாகுது” என்றான்  உற்சாகமாக.

ஆனந்த விகடனில் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்”  வாசித்துக் கொண்டிருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான்.
சுப்பு புதுக்கோட்டைக்காரன். மெஸ்ஸில்  சமையலுக்கு மட்டுமில்லாமல் எல்லா வேலைக்கும் உதவியாளாக இருக்கிறான். சங்கர் ஏதாவது டிகிரி படிக்கவேன்டுமென ஆங்கிலம் இல்லாத பி.ஏ. தமிழ் படித்துவிட்டு அப்பா அம்மா நடத்திவரும் மெஸ்ஸிலேயே சமைத்துக் கொண்டிருக்கிறான்.

” ராயல்ல குணாதான் போடுவான். நான் அதத்தான் பாக்கப்போறேன் . வர்றதுன்னா நீயும் வா” என்றான் சங்கர்.

   “வேண்டாம்.  நாதமுனில தளபதி போடுவான். நான் அங்கதான் போவேன்” என்று சற்று வளர்ந்திருந்த தன் தலைமுடியை வலக்கையால் மேல் நோக்கி தள்ளியபடி கூறினான்  சுப்பு.

அப்போது, திறந்திருந்த கதவின் வழியாக பரவியிருந்த வெளிச்சம் தடைபட்டதைக் கண்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க இருவர் தயங்கியபடி நின்றார்கள். முன்னால் நின்றவர் மாநிறத்தில் புன்னகைக்க வைக்கும் முகத்துடன், வேட்டி சட்டையில் இருந்தார். பின்னால்,  பேன்ட் சட்டை அணிந்து நின்றவர்  சிவந்த நிறத்தில் இருந்தாலும் பார்த்தவுடனேயே பார்ப்பவர்  மனதில் ஒருவித கசப்பை உருவாக்கும் முகவாகுடன் இருந்தார்.

” சார், இன்னைக்கு மெஸ் லீவு ” என்றான் சங்கர்.

  “அப்படியா, இன்னிக்கு காலையில நாலு மணிக்கு என் தாத்தா காலமாயிட்டார். எண்பத்தஞ்சு வயது. வர்றவங்களுக்கு  மதியச் சாப்பாடு வேணும். பக்கத்து வீட்டுக்காரர்தான் இங்க நல்லாயிருக்கும்னு சொன்னாரு. அதான் வந்தோம்” என்றார் முன்னால் நின்றவர்.

சங்கர் யோசிப்பதைக் கண்டு சுப்பு மெல்லிய குரலில் ” கொண்டு போய் குடுக்கிறதுதானே.  ஒத்துக்குங்கண்ணே. தீபாவளிச் செலவுக்கு ஆகும் ” என்றான்

சங்கர் சற்று யோசித்தபின்,  அவர் பக்கம் திரும்பி  “உள்ளே வாங்க சார்” என்றபடி எழுந்து வழிவிட, இருவரும் உள்ளே வந்து பெஞ்சில் அமர்ந்தார்கள்.  இரண்டாவதாக வந்தவர் கல்லா டேபிளையும்  மாட்டியிருந்த விலைப் பட்டியலையும் நோக்கினார். புன்னகை முகத்தவரைப் பார்த்து
” எத்தனை பேருக்கு சார்” என்று கேட்டான் சங்கர்.

” ஒரு எம்பது பேர்க்கிட்ட எதிர்பாக்கறோம். அதிகப்பட்சமா நூறத் தாண்டாது”

“எழுபத்தஞ்சு சாப்பாடு தர்றேன். சின்னப் பசங்க, பெண்கள்லாம் கலந்து சாப்பிட்டா நூறு பேரு சாப்பிடலாம் சார்”

” ஒரு சாப்பாடு எவ்வளவு. கொண்டு வந்து கொடுத்துடுவீங்களா. தெற்கு ஜெகனாத தெருதான்”

“ஒரு சாப்பாடு பதினஞ்சு ரூபா சார். மீன் பாடி வண்டியில ஏத்திக்கிட்டு வந்துருவோம். வண்டிக்கி நீங்கதான் கொடுக்கனும். முப்பது ரூபா கேப்பாங்க”

” சாப்பாடு நல்லா இருக்கனும் தம்பி. பணத்தை இப்பவே முழுசாக் கொடுக்கனுமா”

” வேண்டாம் சார். அட்வான்சா முன்னூரு ரூபா மட்டும் கொடுத்திடுங்க. மிச்சத்த சாப்பிட்டுட்டு திருப்தியா இருந்தா மட்டும் கொடுங்க. உங்க பேரு அட்ரச எழுதிக் கொடுங்க” என்று சுப்பு நீட்டிய டைரியை வாங்கி அவரிடம் கொடுத்தான்.

” என் பேரு சிவராமன். இவரு சரவணன். என் தங்கையோட  வீட்டுக்காரர். நான் அங்க வேலையா இருப்பேன். பாத்திரங்கள எடுக்கிறப்ப இவருக்கிட்ட மிச்சப் பணத்த வாங்கிக்கிங்க” என்று அருகில்  இருந்தவரைக் கைகாட்டினார். தனக்குள் ஏதோ கணக்குப் போடுவது போன்ற முக பாவனையோடிருந்த  சரவணனை சங்கர் ஒரு கணம் நோக்கினான். எழுதி முடித்த சிவராமன்   டைரியுடன் முன்னூறு ரூபாயையும் நீட்டினார். சங்கர் வாங்கிக் கொண்டான்.
.  ****
சுப்புவிடம், இருக்கும்  வெங்காயத்தை உரித்து வெட்டச் சொல்லிவிட்டு, பெரிய கேரியர் பொருத்தப்பட்ட மிதிவண்டியில்  ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த காய்கறிச் சந்தைக்குச்  சென்றான்.  பொறியலுக்கு வாழைக்காயும் கூட்டிற்கு பெங்களூர் கத்திரிக்காய் எனச் சொல்லப்படும் சவ்சவ்வும் வாங்கிக் கொண்டான். சாம்பாருக்கு கத்தரியும் முருங்கையும் வாங்கிக் கொண்டு கூடவே கொத்தமல்லி,  கருவேப்பிலையோடு ஒரு பெட்டி நாட்டுத் தக்காளியும் வாங்கிக் கொண்டான்.
சுப்பு வெங்காயத்தை வெட்டி முடித்துவிட்டு கண்ணாடியில் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான்.  தக்காளியை அலசி வெட்டச் சொல்லிவிட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தான் சங்கர். நல்லெண்ணையை கையில் தடவிக் கொண்டு வாழைக்காயின் தோலை சீவ ஆரம்பித்தான். சீவிய காய்களை  தண்ணீருள்ள சிறிய பாத்திரத்தில் போட்டான்.
வாழைக்காயை வெட்டியவுடன் மீண்டும் கைகளில் எண்ணை தேய்த்துக் கொண்டான். சவ்சவ் சீவும்போது சுரக்கும் நீர் கையில் பசைபோல படிந்துவிடாமல் இருப்பதற்காக. சவ்சவ்வை பொடிப்பொடியாக  வெட்டியவுடன் சாம்பார் காய்களையும் வெட்டி சிறிய பாத்திரத்தில் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி வைத்தான். பச்சை மிளகாய் கீறிக்கொண்டான். கறிவேப்பிலை உறுவிக் கொண்டு,  கொத்தமல்லியை நைசாக வெட்டி நீருள்ள சிறிய கிண்ணத்தில் அள்ளிக் கொண்டான்.
சுப்பு தக்காளியை வெட்டிவிட்டு,  புளிக் கரைசலில்  வெட்டிய  தக்காளியில் கொஞ்சம் அள்ளிப்போட்டு,  கீறிய பச்சை மிளகாய் ஒரு கைப்பிடி போட்டு கையால் நன்றாகக் கசக்கிக்  கரைத்தான். கையில் மிஞ்சிய தக்காளித் தோலை குப்பையில் போட்டுவிட்டு உரித்த பூண்டை வெத்தலை இடிக்கும் சிறிய உரலில் போட்டு, ஒன்றிரண்டாக  இடித்து தனியாக எடுத்து வைத்தான்.
அடுப்படியில், மூன்று அடுப்புகள்,  இடுப்பளவு உயரத்திற்கு மண்ணைக் குழைத்து அமைக்கப்பட்டிருந்தன. இரண்டடி நீளத்திற்கு அறுக்கப்பட்ட  சவுக்குக் கட்டைகளை எடுத்துவந்து அடுப்புகளின் அருகே போட்ட சுப்பு ,  மூன்று கொட்டாங்குச்சிகளில் அடுப்பிலிருந்த சாம்பலை அள்ளி,  கேனில் இருந்த மண்ணெண்ணையை , அதில்  நிரம்புமளவு ஊற்றினான். மூன்று  அடுப்புகளிலும் ஒவ்வொன்றை வைத்துவிட்டு அவற்றின் மேல் சவுக்குக் கட்டைகளின் நுனி இருக்குமாறு வைத்தான்.
பக்கத்துத் தெருவிலிருந்த நாயர் கடையில் வாங்கி வைத்திருந்த ஆப்பம் வடைகறியை தின்று விட்டு வந்த சங்கர்,  சாமியை கும்பிட்டபடி தீக்குச்சியை பற்றவைத்து மண்ணெண்ணெயில் நனைந்திருந்த சாம்பல் மேல் வைத்தான். தீ  மெதுவாகப் படர்ந்து எரிய ஆரம்பித்தது. முதல் அடுப்பில் உலைப்பானையை கொஞ்சம் நீரூற்றி வைத்தான். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பினான் சுப்பு. அடுத்த அடுப்பில் சட்டியை வைத்து நீரூற்றி வாழைக் காய்களை கொட்டினான். இரண்டு கைப்பிடி பச்சைப் பருப்பை தூவினான். பொடியாக வெட்டிய இஞ்சியை   வெந்து கொண்டிருந்த காயின் மேல் போட்டான். காய் வெந்து மலரத் தொடங்கும் கணத்தில் சட்டியை இறக்கி, நீர் வடிவதற்கான இடைவெளிகளுடன் பின்னப்பட்ட மூங்கில் கூடையில் கொட்டி கவிழ்த்தான். மறு அடுப்பில் கூட்டுக்கு பச்சைப் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்த்து   வேகவைத்த பிறகு  சாம்பாருக்கு தனியாக துவரம் பருப்பை வேகவைத்தான். இடுப்பில் கட்டியிருந்த ஊதா நிறத் துண்டை அவிழ்த்து முகம், கழுத்து மற்றும் கைகளைத் துடைத்துவிட்டு மீண்டும் இடுப்பில் கட்டினான்.
பெரிய இரும்புக் கடாயை அடுப்பில் வைத்தான். அதில் இருந்த ஈரம் முழுக்க ஆவியானபின் புகை எழுந்தபோது இரண்டு குண்டுக் கரண்டி கடலை எண்ணெயை சுற்றி ஊற்றினான். தாளிதச் சாமான்கள் இருக்குமிடத்திலிருந்த டப்பாக்களிலிருந்து , முதலில் கடுகை எடுத்து கடாய்க்குள் தூவுவது போல போட்டான். அடுத்து சோம்பு கொஞ்சம் தூவினான். கடுகு வெடித்து முடித்தவுடன் வரமிளகாய்களை இரண்டாக பிய்த்துப் போட்டு கருவேப்பிலையையும் போட்டான். சாய்த்து வைத்திருந்த அவனின்  இடுப்பு உயரமிருந்த இரும்புக் கரண்டியை எடுத்து கடாய்க்குள் கிளறினான். கருவேப்பிலை முறுகி வாசம் எழுந்தபோது இரண்டு கைப்பிடி வெங்காயத்தைப் போட்டான். வெங்காயம் வதங்கி எண்ணெயோடு இயைந்து  இளம்பொன்னிறத்தில்   மிளிரத் தொடங்கியபோது, சுப்பு கொடுத்த திருகி வெட்டப்பட்ட தேங்காய்ப் பூவை போட்டு பிரட்டினான். சுப்புவைத் திரும்பிப் பார்த்தான். பார்வையை உணர்ந்த சுப்பு தண்ணீர் வடிந்திருந்த கூடையை தூக்கிவந்து வாழைக்காயை   கடாய்க்குள் கொட்டினான்.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான். தூள் உப்பை  கொஞ்சம் கையில் எடுத்து காயின்மேல்  தூவிய பிறகு கரண்டியை உள்ளுக்குள் கொடுத்து நன்றாகப்  பிரட்டினான். அடியிலிருந்த தாளிதங்கள் முழுக்கப் பரவின. எழுந்து பரவிய வாசணையால் சுப்புவின் முகம் மலர்ந்தது. நன்றாகக் கிளறியபின் மீண்டும் ஒரு துண்டை வாயிலிட்டு சுவைத்தான். சங்கர் முகத்தில் திருப்தி தெரிந்தது. வெட்டியிருந்த கொத்தமல்லியை தூவிவிட்டு சுப்பு எடுத்துக் கொடுத்த எவர்சில்வர் சட்டியில் அள்ளினான். பச்சைப்பருப்பின் மஞ்சள் நிறத்தோடு கொத்தமல்லியின் பசுமை கலந்து வெள்ளை வாழைக்காய், இலையும் பூவும் பழமுமாய் பொலியும் வேம்பின் கிளையினை காண்பதான கிளர்ச்சியை மனதில் உண்டாக்கியது. சங்கர்,  சமைக்கும் போது ஒரு கணமும்  நிற்காமல் மூன்று பந்துகளை தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தைக்காரனைப் போல் இயங்கினான்.
சமையல் மேடையிலிருந்த கைப்பிடி துணியால்,  கடாயை இறக்கி கால்படாத ஓரமாக வைத்துவிட்டு கால்சட்டி தண்ணீருடன் அலுமினியச் சட்டியை அடுப்பிலேற்றினான். சவ்சவ்வைக் கொட்டி வேகவைத்து கூட்டு வைக்கத் தயாரானான். கூட்டு , சாம்பார் முடித்தபின் ரசத்தை பொங்க தொடங்கும்போது இடித்த பூண்டைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினான்.  அப்போது , முதல்  அடுப்பில் சாதம் , வடிக்கத் தயாரான பதத்தில் கொதித்தது.

சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தபோது பின் பக்க கதவின் வழியே பீறிட்டு வந்த காற்று உடலில் பட்டவுடன் சங்கரின் முகம் இயல்பானது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சங்கரை,  சுப்பு சற்று அச்சத்துடன்தான் பார்ப்பான். உள்ளே செல்லும்போதிருக்கும்   சங்கர் அல்ல ,  சமைப்பவன். சமைக்கும் போது வேறொரு தனியுலகில் இருப்பவன்,  மீள்வது வெளியே வரும்போதுதான். உள்ளேயிருப்பவன் அருள் வந்த குல தெய்வக் கோயில் பூசாரி போல. இயல்பாக பேசி சிரித்துக் கொண்டிருப்பவர் எந்தக் கணத்தில் மாறினார் எனத் தெரியாமல் நம்மை யாரென்றே உணராத வேறொருவராக அருளோடு இருப்பாரே அது போல. சமையல் செய்யும் போது எதுவும் பேசுவதோ சிரிப்பதோயில்லை. தீவிரமாகவே இருக்கும் முகம் சுவை பார்க்கும்போது மட்டும் சற்று இளகும். நன்றாக இருந்துவிட்டால் கனிந்துவிடும். இன்று நன்றாக கனிந்திருந்தது.

வெளியே மணியடிக்கும் சத்தம் கேட்டு சங்கர் போய் பார்த்தான். காலையில் சந்தைக்குச்  சென்றபோது சொன்னதற்கு, சரியான நேரத்திற்கு,  இடுப்பில்  லுங்கிகட்டி , கழுத்தில் துண்டைச் சுற்றியவாறு  கந்தய்யா தன் மீன்பாடி வண்டியுடன் வந்திருந்தார். சுப்புவும் கந்தய்யாவும் சேர்ந்து எல்லாவற்றையும் தூக்கி வண்டியில் வைத்தனர். சாம்பார் மற்றும் ரசப் பாத்திரத்தில் வாழையிலைகளை பரப்பியபின் தட்டால் மூடினான் சுப்பு.  கந்தய்யா வண்டியில் சுருட்டிக் கட்டி வைத்திருந்த கயிறைப் பிரித்து பாத்திரங்கள் அதிகமாக ஆடாமல் இருக்குமாறு குறுக்கும் நெடுக்குமாக கட்டினார். முகவரியை அவரிடம் கூறி அவரை அனுப்பினார்கள். மிதிவண்டியை  சங்கர் மிதிக்க சுப்பு பின்னால் அமர,  பின் தொடர்ந்தார்கள். வழியில் இருந்த வாழையிலைக் கிருஷ்ணன் கடையில் நூறு தலையிலைகளை வாங்கி சப்பு கையில் பிடித்துக் கொண்டான்.

தேட வேண்டிய அவசியமில்லாமல் தெருவில் நுழைந்ததும்,  துணிப் பந்தலை வைத்து,   உடனேயே வீட்டை அடையாளம் கண்டுகொண்டார்கள். எடுத்து அரைமணி நேரம் ஆகியிருக்குமென சங்கர் எண்ணினான். திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடு. கழுவிய திண்ணையின் தரையெல்லாம் பாதி காய்ந்துவிட்டது. ஓரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர டேபிளில், ஈரம் பாதி காய்ந்திருந்தது.. படர்ந்து விரிந்த கிளைகளுடன் தாட்டியான காவல்காரரைப் போல  தோற்றமளித்த வேப்ப மரத்தின் பாதுகாப்பில் அந்த வீடு இருப்பதாகப் பட்டது. ஓட்டின் மேல்   பழுத்த இலைகளும் மஞ்சள் தோலும்  உதிர்ந்து கிடந்தன.

மிதிவண்டியை ஓரமாக நிறுத்திய சங்கர் திண்ணையைக் கடந்து வாசலருகே சென்றான். உள்ளே  பெண்கள், பிள்ளைகளுடன் சில வயதான ஆண்களும் கலைந்து  அமர்ந்திருந்தார்கள். அவர்களை சுற்றி நோக்கியவன்,  ஒரு நடுத்தர வயது பெண்ணை தேர்ந்து,  அழைத்தான். ஏன் அவரை அழைக்கத் தோன்றியது என மனதிற்குள் துழாவியபடியே,  சாப்பாடு கொண்டு வந்ததாகக் கூறி எங்கே இறக்க வேண்டுமெனக் கேட்டான். இப்போதுதான் குளித்திருந்ததால்,  அவர் முகத்தில், அழுத சுவடு மறைந்து துலக்கம் தெரிந்தது. காலையில் வந்தவரின் தங்கையாக இருக்குமென சங்கருக்குத் தோன்றியிருக்கிறது. அவர் கூறியபடி எல்லாவற்றையும் வீட்டிற்குள் சென்று வராந்தாவில் வைத்தார்கள். பாத்திரங்களின் விவரத்தையும் பாக்கி எவ்வளவு என்பதையும் எழுதிய தாளை அந்தப் பெண்ணிடம் கொடுத்து
” இதை சரவணன் சார்கிட்ட கொடுத்திடுங்கம்மா. காலையில எட்டு மணிக்கு வந்து பாத்திரத்தை எடுத்துக்கிட்டு மிச்ச பணத்தை வாங்கிக்கிறோம்” என்றான் சங்கர்.

       திருமணமோ அல்லது வேறு விழாவாகவோ இருந்தால் இவர்களைப் பரிமாறச் சொல்வார்கள். இம்மாதிரி நிகழ்வுகளில் அவர்களே பரிமாறிக் கொள்வார்கள்.
” நீங்க சொல்றவரு என் வீட்டுக்காரர்தான். நான் அவர்க்கிட்ட கொடுத்திடுறேன். நீங்க காலையில வாங்க ” என்றார் அந்தப் பெண்.

                    ****
காலையில் மூவரும் அங்கே  சென்றார்கள். அதிகமான ஆட்கள் இல்லை. நான்கைந்து பேர் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள். துக்கம் ஏதும் தெரியாதவாறு இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் வேப்ப மரத்தடியில் பழங்களைத் தேடி காலால் அழுத்தி கொட்டையை பிதுக்கிக் கொண்டிருந்தார்கள். சங்கரைப் பார்த்தவுடன் நேற்று பேசிய பெண் எழுந்து வந்து              ” காப்பி குடிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

     “இப்பத்தாங்க குடிச்சிட்டு வர்றோம். நேரமாயிடுச்சு. பாத்திரங்கள் எங்கேயிருக்குன்னு சொன்னீங்கன்னா எடுத்துக்கிட்டு போயிடுவோம்” என்றான் சங்கர்.

         வீட்டின் பின்பக்கம் கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை பார்த்து எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறிக் கொண்டிருந்தபோதே   அருகே வந்த அவர் கணவர் சரவணன்,  மனைவியை பார்த்து    ” நீ போய் வேலையைப் பார். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மீற முடியாத அழுத்தத்துடன் சொன்னார்.
அவர் சென்றவுடன் சங்கர் பக்கம் திரும்பி ” நீ தான் சமையல் பண்ணுனியா ” என்று கேட்டார்.

    ” ஆமா சார். ரெண்டு வருசமா நாந்தான் சார் பண்றேன்” என்றான்.

    ” இதுக்குப் பேரு சமையலா. எங்க ஊர்லயெல்லாம் ரோட்டோரக் கடையிலேயே இதவிட நல்லாயிருக்கும்” லேசாக குரலை உயர்த்தினார்.

   ” எது  சார் நல்லாயில்ல” என்று வேகமாக  முன்னால் வந்து சுப்பு  கேட்டான்.

” டேய், நீ  கந்தய்யாவைக் கூட்டிட்டு போயி பாத்திரங்களை எண்ணி எடுத்துக்கிட்டு வா ” என அவனை அடக்கி அனுப்பிவிட்டு சரவணன் பக்கம் திரும்பி ” நீங்க சொல்லுங்க சார் ” என்றான்.

   “இன்னும் என்ன சொல்லனும். பொரியல் பண்ணியிருக்க சப்புன்னு. சவ்சவ்  கூட்டு வச்சிருக்க  சவச்சவன்னு. சாம்பார்ல காயவே காணாம். ரசம் ஒரே புளிப்பு. இப்படி ஒரு கை பக்குவத்த வச்சுக்கிட்டு, எப்படி தைரியமா, திருப்தியா இருந்தா மட்டும் மிச்சப் பணத்த தாங்கன்னு கேப்ப” என்றார் வாயைக் கோணியபடி,  ஆட்காட்டி விரலை நீட்டி.

சங்கர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

” சாப்பிட்டு முடிச்சிட்டா பணத்தக் கொடுத்துடுவாங்கன்னுதானே அப்படிச் சொன்ன. நான் அப்படிக் கொடுக்க மாட்டேன். பாதிப் பணம்தான் கொடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.

   சங்கர் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்து ” முடியாதுங்க. பாதிப் பணத்த நான் வாங்கிக்க மாட்டேன். நான் சொன்ன மாதிரி திருப்தி இல்லாத சாப்பாட்டுக்கு நான் பணத்த வாங்கிக்க மாட்டேன். சரியில்லாத சாப்பாட்டைக் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்கங்க” என்று கையை கூப்பிவிட்டு திகைத்துக் கூம்ப ஆரம்பித்த அவரின் முகத்தை நோக்காமல்   திரும்பி நடந்து சைக்கிளை எடுத்தான்.  ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிய  பாத்திரங்களை வண்டியில் ஓரமாக வைத்துவிட்டு அருகில் சுப்பு   அமர்ந்து கொள்ள, கந்தய்யா  மீன்பாடி வண்டியிலேறி ஓட்ட ஆரம்பித்தார்.

                *****
மாலை டீயைக் குடித்தபடி,  தினத்தந்தியை பத்தாவது தடவை புரட்டிக் கொண்டிருந்தான் சுப்பு. நேஷனல் டேப் ரெக்கார்டரில்   தளபதி படத்தின் ” சுந்தரீ… கண்ணால் ஒரு சேதி” யை  கேட்டுக்கொண்டிருந்தான் சங்கர். “தம்பீ ” என அழைக்கும் சத்தம் கேட்டு  கதவைத் திறந்தான் சுப்பு. சிவராமனும் அவர் அக்காவும் நின்று கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்த சங்கர் ” வாங்க சார், வாங்கம்மா” என்றபடி எழுந்தான். அவர்கள் உள்ளே வந்து மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்சில் இடைவெளிவிட்டு அமர்ந்தார்கள். சங்கர் நாற்காலியில் அமர்ந்து சுப்புவைப் பார்த்தான். புரிந்துகொண்ட சுப்பு டீ வாங்குவதற்கு செம்பை எடுத்தக் கொண்டு வெளியேறினான்.

” மன்னிச்சிடுங்க சார். சாப்பாடு சரியில்லாமக் கொடுத்ததுக்கு”

” தம்பீ… நீ தாம்பா எங்களை மன்னிக்கனும்”

சங்கர் நெகிழ்ந்திருந்த அவர்களின் முகத்தை நோக்கினான். தவறு செய்யாதவனுக்கு தண்டனையளித்த அறத்தோன் முகமென துடித்துத் தளும்பிக்  கொண்டிருந்தன இருவரின்  முகங்களும்.
” இந்த மாதிரி சாப்பாட்ட நான் இதுவரைக்கும் சாப்பிட்டதில்ல. வாழக்காயி எங்க வீட்ல செஞ்சா ஒன்னு ரப்பர் மாதிரி வேகாம இருக்கும். இல்லேன்னா வெந்து கொழஞ்சு போயிருக்கும். உங்க பொரியலு அருமையா வாயில வச்சி மெல்லறப்ப மிருதுவா இருந்துச்சு. இவ்வளவு பொடியா வெட்டின சவ்சவ் கூட்ட இது வரைக்கும் பார்த்ததில்ல. அடுப்புல வச்ச வெண்ண மாதிரி, அப்படியே மென்னவுடனேயே கரைஞ்சிடுச்சு. அப்புறம் ரசம். தக்காளித் தோலோ பூண்டுத் தோலோ கண்ணுலயும் படாம நாக்குலயும் தட்டுப்படாம முதத் தடவயா சாப்பிட்டேன். தாத்தா போன துக்கத்த மறந்து அப்படியே கிறங்க வைச்சிடுச்சு” என்றார் சிவராமன்.

   ” தம்பி, நீங்கவொன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க. காலையில ஒன்னுமே சரியில்லேனுட்டு இப்ப இப்படி பேசறமேன்னு. எங்க அண்ணன் நேத்தே பணத்தை என் வீட்டுக்காரர்க்கிட்ட கொடுத்திட்டாங்க.  என் வீட்டுக்காரர் மார்க்கெட்ல தண்டலுக்கு பணம் கொடுத்து வாங்கறாரு. அடுத்தவங்க பணத்த, ஒழைப்ப அடிச்சுப் புடுங்கிற    அந்தக் கொணம் எப்பவுமே போகாது.  ஏதாவது கொற சொல்லி பணத்தைக் கொறச்சு கொடுத்திட்டு அண்ணன் கொடுத்த பணத்துல கொஞ்சம் தனக்கு வச்சுக்கலாம்னு நெனச்சுத்தான் சாப்பாடு சரியில்லையினு சொல்லிட்டார் ” என்றாள் அந்தப் பெண்.

” வெளிய போயிருந்த நான்  வந்தவுடனேயே தங்கச்சி என்கிட்ட சொன்னுச்சு. அவருக்கிட்ட ஏதாவது கேட்டா வீண் மனவருத்தந்தான் வரும். அதனால அவருக்கிட்ட எதுவும் சொல்லாம நாங்க வந்தோம் ” என்றார் சிவராமன்.

சிவராமன் தன் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து சங்கரிடம் நீட்டி ”  உங்க வேலைக்கான ஊதியம் வாங்கிக்கிங்க”  என்றார் .

சங்கர் கை நீட்டாமல்  ” சார் பணத்தை உள்ளே வைங்க. நான் நேத்து சொன்னதுதான். திருப்தியில்லாம வாங்கிக்க மாட்டேன். அவருக்கு திருப்தி இல்லையில்ல”

” இல்லப்பா அவரு பணத்துக்கா சும்மா சொன்னாரு”

“எதுவாயிருந்தாலும் சொல்லிட்டாரு. இப்ப வாங்கிட்டா நான் சொன்னது சும்மாதான்னு ஆயிடும்ல”

அவர்கள் திகைத்தபடி சங்கரைப் பார்த்துக் கொண்டிருத்தார்கள். அப்போது உள்ளே வந்த சுப்பு டீயை சொம்பின்  அடியில் கொஞ்சம் வைத்துக்கொண்டு இரு தம்ளர்களில் ஊற்றிவிட்டு , அடியில் கரையாமலிருந்த சீனியை  சற்று கலக்கி மீண்டும் தம்ளர்களில் சம அளவாக ஊற்றி,   இருவருக்கும் கொடுத்தான். அவர்கள் வாங்கி அருந்த ஆரம்பித்த பின் சங்கர் பேச ஆரம்பித்தான்.

” எங்க அப்பா மட்டும் மெட்றாசில சமையல்காரரா வேல பாத்துக்கிட்டு இருந்தார்.  நானும் என் அக்காவும்  எங்கம்மாவோட, ஊர்லதான் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தோம். எங்கப்பாதான் கடை வைக்கலாம்னு எங்கள இங்க கூப்பிட்டாரு. ஊர்ல என் பெரியப்பா இருந்தாரு. பிடிக்காதவங்க யாருமேயில்லாம  எல்லாருமே மதிக்கிற மாதிரி ஒரு மனுசன் வாழ முடியும்னு காட்டிக்கிட்டு வாழ்ந்தவர் அவர். அவர்கிட்ட அம்மா போய் கேட்டாங்க,  இந்த மாதிரி சாப்பாட்டுக் கடை வைக்கனும்னு அவங்க கூப்பிடறாங்களே போகட்டுமான்னு. அதுக்கு எங்க பெரியப்பா சொன்னாங்க ” சோறு போடறதுங்கிறது ஒரு தர்மம். அத்தக் காலத்திலேயெல்லாம் அன்ன சத்திரம்னு வச்சு எல்லாருக்கும் சோறு தானமாத்தான் கொடுத்தாங்க. இப்பத்தான் வியாபாரமா ஆக்கிட்டாங்க. பசிக்கு   சோறு போட்டுட்டு பணம் வாங்கறது தப்புதான். அவங்ககிட்டயிருந்து வாங்கறது பணமில்ல பாவம்.   இருந்தாலும் , வேலைக்காக குடும்பத்த விட்டு வேற எடத்துல கெடந்து உழைக்கற நெறயப் பேரு  பணம் வச்சிருந்தாலும் சாப்பிடக் கெடைக்காம அல்லாடறாங்க.  அவங்க மாதிரி ஆளுங்களுக்கு சாப்பாடு போட்டு பணம் வாங்கிக்கலாம். ஆனா சாப்பிட்டுட்டு  மனசுத் திருப்தியா கொடுத்தாத்தான் வாங்கனும்னு ” சொன்னாரு . நானும் அவர் சொன்னதைக் கேட்டேன். சரி அப்படியே செய்யறோம்னு அவரு  கால்ல விழுந்து துன்னூறு பூசிக்கிட்டு வந்தோம். அவரு சொன்ன மாதிரியே,  அப்பலேர்ந்து சாப்பிட்டு விட்டு வந்தப்பறம் தான் நாங்க காசு வாங்கறோம். இது வரைக்கும் யாருமே குறையின்னு ஒன்னும் சொன்னதில்லை” என்று பேசி நிறுத்தினான் சங்கர்.

 ” நேத்து நான் சொன்னவுடனேயே சரவணன் சார் முகத்தப் பார்த்தேன்.  அவர் இப்படிச் சொல்ல முடிவு பண்ணீட்டார்னு அப்பவே புரிஞ்சுடுச்சு”

” தெரிஞ்சுமா இது மாதிரி நல்லா சமைச்சீங்க”

  ” நான் நெனச்சேன், என் சாப்பாட்ட சாப்பிட்ட பின்னாடி குறை சொல்ல வாய் வராதுன்னு. ஆனா நான் முதல் தடவையா தோத்துட்டேன். எதுக்காக வேணும்மின்னாலும் பொய் சொல்வாங்க, உணவால நிறைஞ்ச மனசால அதையே சரியில்லேன்னு சொல்லிற மாட்டாங்கன்னு ரொம்ப நம்புனேன். ஆனா நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்திடுச்சு. மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால தர்மமும் தோக்குற காலம் வந்திடுச்சுபோல”
என்று உதடுகளை சுழித்தபடிக் கூறி  அவர்களை நோக்கி  கை கூப்பினான்.

  சங்கரின் வார்த்தையில் இருந்த உறுதியையும் முகத்தில் தெரிந்த அவன் மனதின் ஏமாற்றத்தையும் கண்டு இளகிய முகத்துடன் இருவரும் எழுந்தார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.