மேகங்கள்
மேகங்களை வர்ணிக்க வேண்டுமெனில்
நான் மிக வேகமாக இருக்க வேண்டும்.
வேறுருவாக மாற அவைகளுக்கு
நொடிப்பொழுது போதுமானது.
அவற்றின் முத்திரை:
வடிவம், நிழல்,காட்சியாகும்விதம், அமைப்பு –அவை
எந்த ஒன்றையும் இரண்டாம் முறையாக மீட்டுருச் செய்வதில்லை.
எவ்வித நினைவுகளின் சுமையுமின்றி
உண்மைகளின் மேல் அவை மிதந்துசெல்கின்றன.
அவை பூமியில் எதற்கு சாட்சியாகவேண்டும்?
ஏதாவது நிகழும்போது அவை சிதறுகின்றன.
மேகங்களோடு ஒப்பிடும்போது,
வாழ்க்கை திடமான நிலத்திலிருக்கிறது,
பெரும்பாலும் நிரந்தரமாக , ஏறக்குறைய சாஸ்வதமாக.
மேகங்களுக்கு அருகில்
ஒரு கல்கூட சகோதரனாகத் தெரிகிறது,
நீங்கள் நம்பக்கூடிய
ஒன்றுவிட்ட சகோதரர்களாக.
விருப்பமிருப்பின் மனிதர்கள் வாழலாம்,
பிறகு, ஒருவர் பின் ஒருவராக இறக்கலாம்:
கீழே நடப்பதென்ன என்பது பற்றி
மேகங்களுக்குக் கவலையில்லை.
அதனால் அவை கர்வம் கொண்ட படைகளாய்
பூர்த்தியடையாத உங்கள் ,என் முழுவாழ்க்கையின் மீது பயணிக்கலாம்,
நாம் போனபிறகு மறைய வேண்டிய கட்டாயம் அவைகளுக்கில்லை.
பயணிக்கையில் அவைகள் பார்க்கப்பட வேண்டுமென்பதில்லை.
எதுவும் இருமுறையில்லை
எதுவும் இரண்டாம் முறையாக நிகழமுடியாது.
விளைவு ,வருத்தமான உண்மை என்னவெனில்
மேம்படுத்திக் கொள்ளவரும் நாம்
பயிற்சிக்கான வாய்ப்பின்றி வெளியேறுகிறோம்.
யாரும் மூடராக இல்லையெனினும்,
கோளின் மிகப் பெரிய முட்டாளெனினும்,
கோடையில் மீண்டும் வகுப்புக்குச் செல்லமுடியாது:
இந்தப் பாடத்திட்டம் மட்டும் வழங்கப்படுவது ஒருமுறைதான்.
எந்த நாளும் முன்தினம் போலிருப்பதில்லை,
எந்த இரண்டு இரவுகளும் எது ஆனந்தம் என்பதைச் சொல்வதில்லை
துல்லியமாக அதேவழியில்,
துல்லியமாக அதேமுத்தங்களுடன்.
ஒருநாள், யாரோ அர்த்தமின்றி
எதிர்பாராத நிகழ்வாய் உன் பெயரைக் குறிப்பிடலாம்:
மணமும் நிறமுமாய் ஒரு ரோஜா
அறைக்குள் வீசப்பட்டது போல் நானுணர்வேன்.
அடுத்த நாள், நீ என்னுடன் இங்கிருக்கிற போதும்,
கடிகாரத்தைப் பார்ப்பதை என்னால் தவிர்க்கமுடியாது :
ஒரு ரோஜா? ஒரு ரோஜா?அது என்னவாக இருக்கமுடியும்?
அது புஷ்பமா? அல்லது பாறையா?
விரைந்தோடும் நாளை நாம் ஏன்
தேவையற்ற அச்சத்தோடும், துக்கத்தோடும் எதிர்கொள்கிறோம்?
அதன் இயற்கை என்பது அது தங்காமலிருப்பதுதான்
இன்று என்பது எப்போதும் நாளையாகிப் போனதுதான்.
நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும் ( ஒத்துப் போகிறோம் )
புன்முறுவலோடும் முத்தங்களோடும்,
நட்சத்திரங்களின் கீழே இசைவானவர்களாக இருக்கிறோம்,
இருதுளி தண்ணீர் போல.
மூன்று வினோதமான சொற்கள்
எதிர்காலம் என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
முதல் அசை இறந்த காலத்திற்குச் சொந்தமாகிறது.
அமைதி என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
நான் அதை அழித்துவிடுகிறேன்.
ஒன்றுமில்லை என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
எதுவுமற்ற நிலை இருக்கமுடியாததைச் சொல்கிறேன்.
வெறுமையான குடியிருப்பில் ஒரு பூனை
சாவு — ஒரு பூனைக்கு அதைச் செய்யக்கூடாது.
ஒரு காலியான வீட்டில்
ஒரு பூனை என்ன செய்யமுடியும்?
சுவற்றில் ஏறுமா?
மரச்சாமான்களின் மீது உரசுமா?
எதுவும் இங்கே வித்தியாசமாகயில்லை,
ஆனால் எதுவும் வழக்காமாயுமில்லை
எதுவும் அசைக்கப்படவில்லை
ஆனால் நிறைய இடமிருக்கிறது.
இரவில் விளக்குகளெதுவும் ஏற்றப்படவில்லை.
மாடிப்படிகளில் அடிச்சுவடுகள்,
ஆனால் அவை புதியவை.
கோப்பையில் மீனைவைக்கும்
கையும் மாறியிருக்கிறது.
வழக்கமான நேரத்தில்
ஏதோ ஒன்று தொடங்கவில்லை.
நடந்திருக்க வேண்டிய ஏதோ
ஒன்று நடக்கவில்லை.
யாரோ எப்போதும், எப்போதும் இங்கேயிருந்தார்கள்..
பிறகு திடீரென மறைந்தார்கள்
பிடிவாதமாக மறைந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மறைவறையும் சோதிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அலமாரியும் ஆய்வுக்குள்ளாகியிருக்கிறது.
கம்பளத்தின் அடி அகழாய்வும் எதையும் சொல்லவில்லை.
கட்டளையும் கூட பழுதாகிப் போனது;
தாள்கள் எங்கும் சிதறிக்கிடந்தன.
செய்ய என்ன மீதமிருக்கிறது.
தூங்கலாம், காத்திருக்கலாம்.
அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கலாம்,
அவன் தன் முகத்தைக் காட்டட்டும்.
ஒரு பூனைக்கு என்ன செய்யக்கூடாது
என்பது பற்றிய பாடத்தை அவன் எப்போதாவது அறிவானா.
குறைந்தபட்சம்
விருப்பமில்லாதது போல
மிக மெதுவாய்
வெளிப்படையாகத் தெரியும் புண்பட்ட கையோடு
தாவுதலோ அல்லது கிறிச்சிடலோ இன்றி
அவனை நோக்கிப் பக்கவாட்டில் போகலாம்.
மூலம் : விஸ்லவா சிம்போர்ஸ்கா ( Wislawa Szymborska 1923-2012 )
ஆங்கிலம் : கிளாரே காவென் மற்றும் ஸ்டனிஸ்லா பாரன்செக் [Clare Cavanagh and Stanislaw Baranczak]