கடைசி வரை – பாவண்ணன் சிறுகதை

க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமே “ஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பி “நாலு பாட்டு போவட்டும்டா, அப்பறமா பாத்துக்கலாம்” என்று விரல்களால் சைகை காட்டினேன். உடனே அவனும் ட்ரம்பட்டை எடுத்துக்கொண்டான். உறையை மடித்து பெரிய ட்ரம் தனபாலிடம் இடது கையால் கொடுத்தான். நான் மடித்து வைத்திருந்த உறையை சின்ன ட்ரம் தேசிங்கு எடுத்துக்கொண்டு போனான்.

’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். சரியான புள்ளியில் ட்ரம்பட் வந்து சேர்ந்துகொண்டது. பல்லவியை முடித்து சரணத்தைத் தொடங்கும் வரை பதற்றம் ஒரு பாரமாக என்னை அழுத்திக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகே உடம்பும் மனசும் லேசானது. ஒருகணம் ரயில் ஜன்னலோரமாக முஸ்லிம் குல்லாயோடு எம்.ஜி.ஆர். முகம் சாய்த்து அழும் காட்சியை நினைத்துக்கொண்டேன். முதல் சரணத்தை நல்லபடியாக முடித்து மீண்டும் நாலு பேருக்கு நன்றியில் வந்து நிறுத்திவிட்டு கோவிந்தனைப் பார்த்தேன். அவன் புருவங்களை உயர்த்தி தலையசைத்ததும் நிம்மதியாக இருந்தது.

இரண்டாவது சரணத்தைத் தொடங்கிய பிறகுதான் வாசலுக்கு எதிரில் துணிக்கூரையின் கீழே பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த தாத்தாவின் உடலைப் பார்த்தேன். எழுபத்தைந்து வயதிருக்கும். தலைமாட்டில் அம்மன் விளக்கெரிந்தது. பக்கத்தில் வத்திக்கொத்துகள். பெரியவரின் தலைமுடி அடர்த்தி ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் நீளமான திருமண் கோடு. நடுவில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம். ஒரு பெரிய ரோஜா மாலை வயிறு வரைக்கும் நீண்டிருந்தது. நாலைந்து செவ்வரளி மாலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தன. வட்டமாக உட்கார்ந்திருந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். மேல்சட்டை போடாத ஒரு சின்னப் பையன் இறந்துபோனவரின் முகத்தையே பார்த்தபடி அவருடைய காலடியில் உட்கார்ந்திருந்தான். துணிக்கூரையைத் தாண்டி வேப்பமரத்தடியிலும் புங்கமரத்தடியிலும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உறவுக்காரர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். சின்னப்பிள்ளைகள் பெஞ்சுகளுக்கிடையில் புகுந்து குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

முதல் பாட்டைத் தொடர்ந்து நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தொடங்கினேன். புங்கமரத்தடியிலிருந்து இரண்டு பேர் எழுந்து வந்து தனபால் பக்கமாகச் சென்று ட்ரம்மைத் தொட்டபடி “நீங்க தவளகுப்பம்தான?” என்று கேட்டான். தனபால் தலையசைத்ததுமே ”அரியாங்குப்பத்துல ஒரு சாவு வூட்டுல ஒங்க வாசிப்ப நாங்க ஏற்கனவே கேட்டிருக்கம். நல்லா இருக்கும் ஒங்க வாசிப்பு” என்று சொன்னான். அப்போது தனபால் முகம் பூரித்துப்போவதை நான் பார்த்தேன். ”அண்ணன்தான் எங்க குரு” என்று அவன் என் பக்கமாக கை காட்டினான்.

பாட்டின் கடைசி வரியை வாசித்துக்கொண்டிருந்தபோது கூரையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை சாலையின் பக்கம் திரும்புவதைப் பார்த்து தன்னிச்சையாக என் பார்வையும் திரும்பிவிட்டது. ”என்ன பெத்த அப்பா” என்று ஓங்கிய குரலோடு அழுது கூச்சலிட்டபடி நெஞ்சில் அறைந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய ரோஜா மாலையோடு வழுக்கைத்தலையுள்ள ஒருவர் வந்தார். அவருக்குப் பக்கத்தில் நான்கு சிறுமிகள் ஒட்டிக்கொண்டு வந்தனர். “பெரிய பொண்ணு. பண்ருட்டிலேருந்து வருது” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. மூன்று தப்பட்டைக்காரர்களும் வேகமாகச் சென்று அவர்களை எதிர்கொண்டு தப்பட்டை அடித்தபடி அழைத்துவந்தார்கள்.

வந்த வேகத்தில் அந்தப் பெண் அவர் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். “எல்லாத்தயும் தொலச்சிட்டு ஊட்டோட வந்து கெடன்னு நூறுதரம் படிச்சி படிச்சி சொன்னனே. வரம்மா வரம்மான்னு சொல்லிட்டு வராமயே போயிட்டியேப்பா” என்று கதறினாள். விரிந்திருந்த அவர் கைவிரல்களை தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக்கொண்டாள். வழுக்கைத்தலைக்காரர் தன்னோடு கொண்டுவந்திருந்த மாலையை போட்டுவிட்டு முடிச்சிடப்பட்டிருந்த பெருவிரல்களைப் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பெருமூச்சோடு வெளியே வந்து தப்பட்டைக்காரர்களுக்கு பணம் கொடுத்தார்.

சிறுமிகள் அம்மாவுக்கு அருகில் சென்று நின்றுகொண்டனர். “தாத்தாவ கூப்டுங்கடி. நீங்க கூப்ட்டா தாத்தா வந்துருவாருங்கடி” என்று அசிறுமிகளை தலைமாட்டை நோக்கிச் செலுத்தினாள். “ஒரு பத்து நாள் ஒன்ன பக்கத்துல ஒக்கார வச்சி ஒனக்கு சோறு போடற பாக்கியமே இல்லாம பண்ணிட்டியேப்பா. நான் என்னப்பா பாவம் செஞ்சன்?” என்று தேம்பித்தேம்பி அவள் அழுத நிலை என் மனத்தை அசைத்தது.

நான் என்னையறியாமல் “நெஞ்சடச்சி நின்னேனே” என்று சட்டென்று தொடங்கிவிட்டேன். வழக்கமான பாடல் வரிசையை மீறி எப்படியோ வந்துவிட்டது. அது புதிய பாட்டு. இன்னும் சரியாகப் பாடிப் பழகாத பாட்டு. கோவிந்தன் திணறித்திணறி பின்தொடர்ந்து வந்து சரியான புள்ளியில் சேர்ந்துகொண்டான். தனபாலுக்கும் தேசிங்குக்கும் அது திகைப்பளித்திருக்கவேண்டும். சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்கள். இரண்டு வரி கடந்து பாட்டு நிலைகொண்ட பிறகுதான் அவர்கள் அமைதியடைந்து மறுபடியும் உட்கார்ந்தனர். தேசிங்கு செல்லமாகச் சிணுங்கியபடி தலையில் அடித்துக்கொள்வதை நான் மட்டும் பார்த்தேன்.

“ஒரு சாவு வூட்டுல ஆயிரம் சொந்தக்காரங்க கதறுவாங்க. பொரளுவாங்க. அதயெல்லாம் நாம பாக்கவே கூடாது. நம்ம வேல எதுவோ அத மட்டும்தான் செய்யணும். வந்தமா, வாசிச்சமா, கூலிய வாங்கனமான்னு போயிகினே இருக்கணும்” என்று தேசிங்கு சுட்டிக் காட்டாத நாளே இல்லை. அவன் என்னைவிட வயதில் சின்னவன். ஆனால் அவனுடைய விவேகம் எனக்கு அறவே கிடையாது. உணர்ச்சிவசப்படாதவனாக ஒருநாளும் என்னால் இருக்க முடிந்ததில்லை.

பாட்டை முடித்த பிறகுதான் மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நடுவில் எங்காவது சொதப்பிவிடுவேனோ என்று ஒவ்வொரு கணமும் தடுமாறிக்கொண்டே இருந்தேன். அதற்காகவே பார்வையை எந்தப் பக்கமும் திருப்பாமல் ஊமத்தம்பூ மாதிரி விரிந்திருந்த குழல்வாயை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி சரணத்தை முடித்து மீண்டும் பல்லவியைத் தொடங்கியபிறகுதான் நம்பிக்கையும் தெம்பும் வந்தது.

நாங்கள் பாட்டை நிறுத்துவதற்காகவே காத்திருந்ததுபோல இரண்டு சிறுவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். ஒவ்வொருவரிடமும் பிளாஸ்டிக் தம்ளரை நீட்டினான் ஒருவன். மற்றொருவன் கூஜாவிலிருந்த டீயை ஊற்றினான். அவன் தயக்கத்தோடு என்னைப் பார்த்து “இப்ப நீங்க பாடனது விழா படத்துல வர பாட்டுதாண்ணே?” என்று ஆர்வத்துடன் கேட்டான். சூடான மிடறு வாய்க்குள் இருந்த நிலையிலேயே நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு புன்னகைத்தேன். “நான் அந்தப் படத்த ரெண்டு தரம் பாத்திருக்கேண்ணே” என்று சிரித்துக்கொண்டே சென்றான்.

நாங்கள் நிறுத்தியதுமே தப்பட்டைக் குழு தொடங்கிவிட்டது. “அவுங்க கொஞ்ச நேரம் அடிக்கட்டும். நீங்க அப்பிடி நெழல்ல உக்காருங்க” என்று எங்களைப் பார்த்து சொன்னபடி ஒரு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். காலர் இல்லாத ஜிப்பா போட்டிருந்தார். தோளில் ஒரு துண்டு இருந்தது. ”நல்லா இருக்குது தம்பி ஒங்க வாசிப்பு. என் பெரிய பையன்தான் ஒங்கள பத்தி சொன்னான். பத்துகண்ணு பக்கத்துல ஒரு சாவுல ஒங்க வாசிப்ப கேட்டிருப்பான்போல. அத நெனப்புல வச்சிகினு அவுங்ககிட்ட பேசி நெம்பர வாங்கி என்கிட்ட குடுத்து பேசுங்கன்னான்” என்றார். “ஒங்களாட்டம் பெரியவங்க ஆதரவு எங்கள மாதிரி குழுக்களுக்கு பெரிய பலம்யா” என்று நன்றியோடு தலையசைத்தேன்.

அடுத்தடுத்த தெருக்களில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட்டமாக வந்து மாலை போட்டுவிட்டு நிழல் இருக்கும் பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்தார்கள்.

பூக்கூடைகளையும் மூங்கில்களையும் சுமந்து வந்த வண்டி சாலையிலிருந்து பக்கவாட்டில் ஒதுங்கி ஓரமாக நின்றது. எல்லாவற்றையும் இறக்கி ஓரமாக ஒதுக்கிவிட்டு துணிக்கூரையின் பக்கம் வந்து யாரையோ தேடுவதுபோல நின்று பார்த்தார்கள். ”இங்க, இங்க, இந்தப் பக்கமா வாங்க” என்றபடி ஜிப்பாக்காரர் கையைத் தூக்கினார். அவர்கள் நெருங்கி வருவதற்குள் “டேய் ரவி, இவுங்களுக்கு டீ குடு” என்று கூஜா வைத்திருந்த சிறுவனை அழைத்தார். அவன் ஓடி வந்து அவர்களுக்கு தம்ளர்களை நிறைத்துக் கொடுத்தான்.

“மசமசன்னு நிக்காம வேலய இப்பவே ஆரம்பிச்சி மெதுவா செஞ்சிகினே இருங்கடா. நாலு மணிக்கு எடுக்கணும். சரியா?”

அவர்கள் தலையை அசைத்தபடியே டீ பருகினார்கள். ஜிப்பாக்காரர் மீண்டும் அவர்களிடம் “அதுக்காக அவசர அடியில ஏனோதானோன்னு வேலய முடிச்சிடக்கூடாது. மரக்காணத்துக்காரர் ஊட்டுல செஞ்சிங்களே பூப்பல்லக்கு. அந்த மாதிரி செய்யணும். புரியுதா?” என்று சொன்னார்.

“ஒரு கொறயும் இல்லாம செஞ்சிடலாம்ய்யா. உங்க பேச்சுக்கு மறுபேச்சு உண்டா?. பூ வெல கன்னாபின்னான்னு ஏறிட்டுது. செலவு கொஞ்சம் கூட ஆவும். அத நீங்க பாத்துக்கிட்டா போதும்….”

“ஒனக்கு மட்டும் தனியா வெல ஏறிடுச்சாடா?” என்று காதைக் குடைந்துகொண்டே சிரித்தார் அவர். பிறகு அவர்களிடம் “சரிசரி. சொல்லிட்டிங்க இல்ல, பார்த்துக்கலாம், போங்கடா. போயி நடக்கற வேலய பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பிரதான சாலையிலிருந்து வீட்டை நோக்கிய சாலையில் வேகமாகத் திரும்பிய ஒரு புல்லட் வண்டி மெதுவாக வந்து தப்பட்டைக்காரர்களுக்கு அருகில் நின்றது. வண்டியிலிருந்து ஒருத்தி வேகமாக இறங்கி “ஐயோ அப்பா” என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். ‘எப்ப வந்தாலும் வா கண்ணு வா கண்ணுன்னு வாய் நெறய சொல்லுவியேப்பா. இப்படி ஒரு சொல்லும் சொல்லாம படுத்துங் கெடக்கறியேப்பா” என்று கூவி அழுதபடி கால்களிடையில் முகத்தைப் புதைத்தாள்.

ஜிப்பாக்காரர் என்னிடம் “ரெண்டாவது பொண்ணு. பால்வாடி டீச்சர். காட்டுமன்னார் கோயில்ல குடும்பம்” என்றார்.

வண்டியை ஓரமாக நிழல் பார்த்து நிறுத்திவிட்டு வந்தவர் கொண்டு வந்த மாலையை அவர் உடல்மீது வைத்துவிட்டு ஒருகணம் கைகுவித்து வணங்கியபடி நின்றார். அவரோடு வந்த இரண்டு பிள்ளைகளும் தன் அம்மா அழுவதைப் பார்த்தபடி கலவரத்தோடு நின்றார்கள். அவர் வெளியே வந்து தப்பட்டைக்காரரிடம் ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார்.

”கத்தரியும் பச்சநெறம், என் கர்ணர் மக தங்கநெறம், காத்துபட்டு மங்காம, கவலப்பட்டு மங்கறனே என்ன பெத்த அப்பா”

ஒப்பாரிக்குரல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் உருக்கியது.

ஜிப்பாக்காரரின் பையில் கைபேசி மணியொலித்தது. அவர் அதை எடுத்து ஒருகணம் எண்ணைப் பார்த்துவிட்டு பேசினார். மறுமுனையில் சொல்வதையெல்லாம் கேட்டபிறகு “இந்த நேரத்துல வெறகு வெலயயும் எருமுட்ட வெலயயும் பாத்தா முடியுமா ராஜா? இவனே இந்த வெல விக்கறான்னா, இன்னொருத்தவன் மட்டும் கொறஞ்ச வெலைக்கு விப்பானா என்ன? ஒரு தரம் கொறச்சி கேளு. குடுத்தா சரி. இல்லனா கேக்கற பணத்த குடுத்துட்டு வாங்கிட்டு வா” என்றார். சில கணங்களுக்குப் பிறகு மீண்டும் “நேரா சுடுகாட்டுலயே போய் எறக்கிடு ராஜா. நால்ர மணிக்கு வந்துடும், தயாரா இருக்கணும்ன்னு சுடறவன்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வை” என்றார்.

தப்பட்டைக்காரர்கள் ஓசை நின்றது. நான் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நீங்க ஆரம்பிங்க என்றபடி கையசைத்துக்கொண்டே அவர்கள் நிழலில் ஒதுங்கினார்கள்.

நான் தனபாலைப் பார்த்து தலையசைத்ததும் பையில் வைத்திருந்த தாளக்குச்சிகளை எடுத்து பெரிய ட்ரம்மின் மீது மிக மெதுவாக தொட்டு இழுத்தான். சட்டென ஒரு குடம் உருண்ட சத்தம் கேட்டது. அதற்கு பதில் சொல்வதுபோல தேசிங்கு தன் சின்ன ட்ரம்மின் மீது இழுத்து இன்னொருவிதமான சத்தத்தை எழுப்பினான். கூடியிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய கவனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்போல ஒவ்வொரு விதமாக ஓசையெழும்படி இருவரும் மாறிமாறி இழுத்தார்கள். மரப்படிக்கட்டுகளில் தடதடவென ஏறுவதுபோன்ற வினோதமான அந்தச் சத்தம் கேள்விபதில் போல இருந்தது. உச்சப்புள்ளியில் இரு சத்தங்களும் ஒன்றிணைய இருவரும் வழக்கமான வாசிப்பைத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு கால்மணி நேரம் ஓய்வே இல்லை. கவனம் சிதறாத வாசிப்பு.

அவர்கள் முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்ததுபோல நான் க்ளாரினெட்டை எடுத்து ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று தொடங்கினேன். “அண்ணனுக்கு மூடு வந்திடுச்சிடோய்” என்றபடி கோவிந்தன் ட்ரம்பட்டை எடுத்தான். கூரையில் உட்கார்ந்திருந்த பல பெரியவர்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்து எனக்குள் உண்மையாகவே உற்சாகம் ஊற்றெடுத்தது.

மூட்டைமுடிச்சுகளோடு சடங்குக்காரர் பின்தொடர இளைஞரொருவர் ஜிப்பாக்காரர் அருகில் வந்து “மளிகை சாமான்லாம் வந்துட்டுதுப்பா. எங்க எறக்கலாம்? சமையல எங்க வச்சிக்கறது? ரெண்டு மணிக்குள்ளயாவுது செஞ்சி எறக்கணும்ல. நெறய சின்ன பசங்க இருக்குது” என்று சொன்னார். “புத்துப்பட்டாரு ஊட்டு தோட்டத்துல எறக்கிடுப்பா. நான் ஏற்கனவே அவுங்ககிட்ட சொல்லிட்டேன். சும்மா சோறு, ரசம், அப்பளம் போதும். புரிதா?” என்றார் ஜிப்பாக்காரர். அவர் நகர்ந்ததுமே சடங்குக்காரர் முன்னால் வந்து நின்றார். “கொஞ்சம் இரு சிங்காரம். அவசரப்படாத. மூணாவது பொண்ணு இன்னும் வந்து சேரலையே. வந்ததுக்கு அப்புறம் யாரு கொள்ளி வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யலாம்” என்றார்.

நான் முத்துக்கு முத்தாக பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து ஆறு பாடல்கள் வாசித்தேன். இறுதியாக ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே பாட்டுக்கு வந்து சேர்ந்தேன். “அண்ணன் இங்க வந்துதான் நிறுத்துவாருன்னு நெனச்சேன், அதேமாதிரி செய்றாரு பாரு” என்று தனபாலைப் பார்த்துச் சிரித்தான் தேசிங்கு. வெயில் உச்சிக்கு ஏறிவிட்டதால் துணிக்கூரையின் நிழலிருக்கும் பக்கமாக இடம்மாறினோம்.

ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்களிடம் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். பிறகு என் பக்கமாக வந்து “நீங்களும் போய் வந்துடுங்கப்பா” என்றபடி பணம் கொடுத்தார். நான் அதை வாங்கி அப்படியே தனபாலிடம் கொடுத்து “போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்றேன். “ஏம்பா நீ போவலையா?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர். “இந்த நேரத்துல நான் சாப்படறதில்லைங்க” என்றேன் நான். அவர் உடனே “டேய் ரவி, இங்க வாடா” என்று நிழலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து “இந்தா, கூஜாவ எடுத்தும் போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா” என்று அனுப்பிவைத்தார்.

தொலைவில் பத்து பதினைந்து பேர் சேர்ந்து வருவதைப் பார்த்ததுமே ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்கள் பக்கமாகத் திரும்பி “தம்பிங்களா, இளைஞர் சங்கத்துக்காரனுங்க வரானுங்க போல. போங்க. போய் அழச்சிகினு வாங்க” என்றார். அவர்கள் அக்கணமே எழுந்து போனார்கள். தப்பட்டைகள் மட்டும் முழங்க மெளன ஊர்வலமாக வந்தது இளைஞர்கள் கூட்டம். எல்லோருமே அந்த வட்டாரத்து இளைஞர்கள். இடுப்புயரத்துக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான்குபேர் ஆளுக்கொரு பக்கம் பிடித்திருந்தனர். மெதுவாக அதை மறைந்துபோனவரின் காலடிகளில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் செல்லும் திசையில் ஜிப்பாக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக துணிக்கூரைக்கு அருகிலேயே ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. கதவைத் திறந்துகொண்டு “என்ன பெத்த தெய்வமே” என்று அலறி அழுதபடி ஓடி வந்து அவர் காலடியில் விழுந்தாள் ஒரு பெண். அவளைத் தொடர்ந்து அவளுடைய கணவர் இறங்கி வந்து மாலை போட்டு வணங்கினார். அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருக்கு அருகில் சென்று மிரட்சியோடு பார்த்தபடி நின்றார்கள்.

“மூனாவது பொண்ணு. இங்க இருக்கிற திருக்கனூருலேந்து வரதுக்கு கார் எதுக்கு சொல்லு? அற்பனுக்கு வாழ்வு வந்த அர்த்தராத்திரில கொட பிடிப்பானாம். அந்த மாதிரி கத இது” என்று எங்கோ பார்ப்பதுபோல என்னிடம் முணுமுணுத்தார் ஜிப்பாக்காரர்.

”மொத்தம் மூணு பொண்ணுங்களா அவருக்கு?”

“ஆமாமாம். மூணும் முத்துங்க” என்று கசந்த சிரிப்பை உதிர்த்தார். தொடர்ந்து “கட்டிம் போன நாள்லேருந்து ஒருநாள் கூட அவர நிம்மதியா இருக்க உட்டதில்ல” என்று பெருமூச்சு விட்டார்.

அவரே தொடரட்டும் என நான் அமைதியாக இருந்தேன். அதற்குள் சிறுவன் டீ வாங்கி வந்தான். டீத்தம்ளரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரநிழல் பக்கமாக இருவரும் சென்றோம். ஜிப்பாக்காரரின் மகன் துணிக்கூரையடியில் விளையாடிக்கொண்டிருந்த சின்னப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு மதிலோரமாக நிழலிருக்கும் பக்கமாகவே நடத்தி அழைத்துச் சென்றான்.

”ஆடு மேய்க்கறதுதான் தாத்தாவுக்கு தொழில். பத்து பாஞ்சி ஆடுங்களோட ஒரு காலத்துல சிங்கிரிகோயில்லேருந்து வந்தவருன்னு சொல்வாரு எங்க அப்பா. ஒரு கெட்ட பழக்கமில்ல. நேரம் காலமில்லாம ஆடுங்க பின்னாலயே ஓடுவாரு. பத்து ஆடு அம்பதாச்சி. அம்பது நூறாச்சி. குட்டி நல்லா பெரிசானதும் சந்தையில காசாக்கிடுவாரு. அப்பிடி சேத்த பணத்துலதான் இப்ப இருக்கற ஊட்ட கட்டனாரு.”

“அதுதான் இந்த ஊடா?” என்று ஆவலோடு கேட்டபடி அதை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.

”இது மட்டுமா செஞ்சாரு? மூணும் பொட்டபுள்ளயா பொறந்திடுச்சே நாள பின்ன ஒதவும்ன்னு ஊருக்கு வெளியே மூணு மன வாங்கி போட்டாரு. எல்லாரயுமே பள்ளிக்கூடத்துல சேத்து செலவு செஞ்சி படிக்க வச்சாரு. யாருக்கும் எந்த கொறயும் வைக்கலை. வளந்து ஆளானதும் நல்ல எடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சாரு. ஏற்கனவே சொன்னமாரி ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனய எழுதிக் குடுத்துட்டாரு. இதுக்கு மேல ஒரு அப்பன்காரன் ஒரு பொண்ணுக்கு என்ன செய்யமுடியும், நீயே சொல்லு தம்பி?”

”எல்லாக் கடமைங்களயும்தான் முடிச்சிட்டாரே”

ஜிப்பாக்காரர் பெருமூச்சு விட்டார். ”இந்த உலகத்துலயே நன்றி இல்லாத உயிர் எது தெரிமா தம்பி,?” என்று கேட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “மனுஷன்தான்” என்று அழுத்திச் சொன்னார்.

“ஒவ்வொரு பொண்ணுக்கும் அவர் செஞ்ச சீர் செனத்திக்கு கொறயே இல்ல. ஒவ்வொருத்திக்கும் புள்ள பொறக்கும்போது ஓடிஓடி நின்னு செஞ்சாரு. அந்த பொண்ணுங்களுக்கு இந்த ஊருல மண்ணு வேணாம்னு வித்துட்டு அவுங்க வாழற ஊருல போய் புதுசா ஒன்னு வாங்கிகிட்டாங்க. வித்ததோ வாங்கனதோ தப்பில்ல தம்பி. ஒரு பொண்ணு அஞ்சி லட்சத்துக்கு வித்துது. இன்னொரு பொண்ணு நாலு லட்சத்துக்கு வித்துது. கடைசி பொண்ணு ஆறு லட்சத்துக்கு வித்துது. இதுல தாத்தா செய்ய என்ன இருக்குது சொல்லுங்க. ஒரு கண்ணுல வெண்ணெ ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நீ நடந்துட்டன்னு இவரு கூட எப்ப பாத்தாலும் ஒரே சண்ட. நீ மோசக்காரன், ஓரவஞ்சன செய்யறவன்னு ஒரே பேச்சு.”

கேட்கக்கேட்க எனக்கு கசப்பாக இருந்தது. பதில் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவரு பொண்டாட்டிக்கு ஒடம்பு முடியலைன்னு ஒரு தரம் பெரியாஸ்பத்திரியில சேத்தாரு. வயசான ஆம்பளை ஒரு பொம்பள வார்டுல எப்படி தொணைக்கு இருக்க முடியும், சொல்லுங்க. அம்மா, ஒரு பத்து நாள் கூட இருந்து பாத்துக்குங்கம்மான்னு பொண்ணுங்ககிட்ட கெஞ்சனாரு. அவளக் கேளுன்னு இவ, இவளக் கேளுன்னு அவ, அப்படியே ஆளாளுக்கு சாக்குபோக்கு சொல்லி அனுப்பிட்டாங்க. கடசியில ஒரு ஆளும் வரலை. பாவம், அந்த அம்மா அனாதயா ஆஸ்பத்திரியிலயே செத்து போய்டுச்சி.”

”ஐயோ” அந்தச் சம்பவம் ஒருகணம் என் கண்முன்னால் நடப்பதுபோல இருந்தது.

“இது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும். அப்பவும் அவரு யாரயும் கொற சொல்லி நான் கேட்டதில்ல. வழக்கம்போல ஆடு மேய்ச்சிட்டு காலத்த ஓட்டனாரு. ஒருத்தி கூட எதுக்குப்பா தனியா இருக்கற, என் கூட வந்து இருன்னு கூப்புடலை. தடுமாறி தடுமாறி தாத்தாவும் காலத்த ஓட்டிட்டாரு.”

ஜிப்பாக்காரர் ஒருமுறை பெஞ்ச் மீது மாலைகளிடையில் கிடந்த தாத்தாவின் வற்றிய உடலைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“ஒருநாள் சந்தையில அனாதயா சுத்திட்டிருந்த இந்த பையன கூடவே அழச்சிட்டு வந்து ஊட்டோட வச்சிகிட்டாரு. அன்னையிலேர்ந்து அவன்தான் அவரயும் பாத்துக்கறான். ஆடுங்களயும் பாத்துக்கறான்” என்று நிறுத்தினார். பிறகு தொடர்ந்து “என்ன கேட்டா, அவன்தான் ஞாயமா அவருக்கு கொள்ளி வைக்கணும். ஆனா கர்மம் புடிச்ச ஜனங்க உடுமா என்ன?” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் சிலைபோல கால்மாட்டில் உறைந்துபோய் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனை ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். அடிவயிறு கலங்கியது.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதும் தப்பட்டைக்காரர்கள் இசை தொடங்கியது. அதற்கப் பிறகு நாங்கள் தொடங்கினோம். ஆளுக்கு அரைமணி நேரம் இசைத்தபடி இருக்க, பொழுது போய்க்கொண்டே இருந்தது. சடங்குக்காரர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சடங்குகள் அனைத்தையும் செய்துமுடித்தார். நேரம் கழியக்கழிய ஊரே கூடிவிட்டது. நிற்பதற்கே இடமில்லை.

இறுதியாக, தாத்தாவின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என அனைவரும் குரல்கொடுத்தபடி பல்லக்கை தூக்கினார்கள். நீளவாக்கில் இருந்த மூங்கிலை ஒரே நேரத்தில் அனைவரும் தோளில் தாங்க பல்லக்கு நகரத் தொடங்கியது.

பல்லக்குக்கு முன்னால் தப்பட்டை வரிசை சென்றது. அவர்களைத் தொடர்ந்து நாங்கள் சென்றோம். நான் வீடு வரை உறவு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ’மக்க கலங்குதுப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா’ பாட்டை வாசித்தேன்.

சில இளைஞர்கள் கையை உயர்த்தி, இடுப்பையசைத்து ஆடத் தொடங்கினார்கள். அவர்கள் என்னை ஏக்கமாகப் பார்ப்பதுபோல இருந்தது. உடனே அத்தகையவருக்காகவே நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ’பொறப்பு எறப்பு மனுசன் நம்ம எல்லாருக்குமே இருக்கு’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். ஆட்டக்காரர்கள் உடனே துடிப்போடு ஆடத் தொடங்கிவிட்டார்கள். நான் மீண்டும் அவர்களுக்காகவே ’ஓபாவும் இங்கதான்டா ஒசாமாவும் இங்கதான்டா’ வாசிக்க ஆரம்பித்தேன்.

இளைஞர்கள் களைத்து மனநிறைவோடு ஒதுங்கி நடக்கத் தொடங்கியதும் நான் மறுபடியும் ’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசித்தேன். அதற்கடுத்து ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு. சுடுகாடு அடையும் வரை அந்த இரு பாடல்களை மட்டுமே மாற்றி மாற்றி இசைத்தேன்.

சுடுகாட்டுக்குள் நுழைந்ததுமே நாங்கள் வாசிப்பை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கினோம். காட்டுவாகை மரங்களும் நாவல்மரங்களும் எங்கெங்கும் நிறைந்திருந்தன. வாசலிலிருந்து அரிச்சந்திரன் மேடைக்கும் தகன மேடைக்கும் செல்லும் சிமென்ட் சாலைகளில் நாவல் பழங்கள் விழுந்து நசுங்கிய நீலக்கறைகள் படிந்திருந்தன.

க்ளாரினெட்டை உறையிலிட்டு மூடியபோது சங்கடமா நிறைவா என பிரித்தறிய முடியாத உணர்வு கவிந்திருந்தது. ட்ரம்பெட்டையும் ட்ரம்களையும் உறைகளில் போட்டு மூடி நாடாவால் இழுத்துக் கட்டினான் தனபால்.

இலுப்பை மரத்தடி நிழலில் அனைத்தையும் வைத்த பிறகு “கைகால் கழுவிகினு வரம். பாத்துக்குங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் அருகிலிருந்த தண்ணீர்க்குழாயின் பக்கம் சென்றார்கள்.

நான் மரத்தில் சாய்ந்துகொள்ளச் சென்றபோதுதான் மறுபக்கத்தில் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். ஒருகணம் புரியவில்லை. அவன் சுடுகாடு வரைக்கும் எப்படி வந்தான் என்பதே எனக்குப் புரியவில்லை. வழியில் ஒரு இடத்தில் கூட அவனைப் பார்த்த நினைவே இல்லை. அவன் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அவன் மீதிருந்த பார்வையை விலக்கி சடங்குகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சடங்குகள் மட்டும் எப்போதுமே எனக்குப் புதிராகத் தோன்றுபவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் வேறுபட்டுக்கொண்டே இருப்பவை சடங்குகள். என்னால் அவற்றை மனத்தில் வரிசைப்படுத்தி இருத்திக்கொள்ளவே முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் புதுசாகத் தோன்றுவது அதனால்தான்.

அரிச்சந்திரனுக்கு படைத்த பிறகு பல்லக்கோடு தாத்தாவின் உடலைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறு அறுக்கப்பட்டது. “நெறய பேரு வேணாம். அஞ்சாறு பேரு மட்டும் நில்லுங்க. மத்தவங்க நவுந்து போங்க” என்று சடங்குக்காரர் சொன்னதும் அனைவரும் விலகினார்கள். ”அவசரமில்லாம பொறுமையா கவனமா தூக்கிட்டு வாங்க” என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

ஆறு பேரும் பக்கத்துக்கு மூன்று பேராக நின்று தலைப்பகுதியையும் இடுப்புப்பகுதியையும் கால்பகுதியையும் தாங்கியபடி தாத்தாவின் உடலைத் தூக்கிக்கொண்டு சென்று தகனமேடையில் வைத்தார்கள்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே”

திடீரென எழுந்த ஓலத்தைக் கேட்டு எல்லோருமே திகைத்து ஒருகணம் நின்றார்கள். என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் மீண்டும் ”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே” என்று ஓலமெழுந்தது. நான் நின்றிருந்த இடத்திலிருந்தே அந்த ஓலம் எழுவதை சற்று தாமதமாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவனே கைகளை நீட்டியும் தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டும் அந்த ஓலத்தை எழுப்பினான்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே.”

அந்தக் கதறலைக் கேட்கும்போதே நெஞ்சு கனத்தது. மற்றவர்களும் அவனைக் கவனித்துவிட்டார்கள். அதற்குள் அவன் அந்த ஓலத்தை நாலைந்து முறைகளுக்கும் மேல் எழுப்பிவிட்டான். மரத்தில் முட்டிக்கொண்டான். தலையிலும் நெஞ்சிலும் மாறிமாறி அடித்துக்கொண்டான்.

“எவ்ளோ வேல கெடக்குது. யாராவது அவன நிறுத்துங்களேம்பா” என்று யாரோ ஒருவர் சொல்ல, ஜிப்பாக்காரரும் மற்றவர்களும் தயக்கத்தோடு அவனை நோக்கி “இருடா தம்பி, டேய் தம்பி இருடா, சொன்ன பேச்ச கேளுடா” என்று சொன்னபடி நெருங்கினார்கள். யாராலும் நிறுத்தமுடியாதபடி ஓங்கி ஒலித்தது அவன் ஓலம்.

“யாரும் அவன தொடாதீங்க. ஆத்தா மேல சத்தியமா சொல்றேன். யாரும் தொடாதீங்க அவன” என்று கட்டளையிடும் குரலில் சொன்னபடி திடீரென எழுந்து நின்றார் சடங்குக்காரர். அவர் முகம் அதுவரை பார்த்த முகம்போலில்லை. வேறொருவர் போல நின்றிருந்தார். அனைவரும் திகைத்து விலகினார்கள். அங்கே என்ன நடக்கிறது என எதுவும் தெரியாத நிலையிலேயே அச்சிறுவன் மீண்டும் ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே என்று ஓலமிட்டான்.

எதிர்பாராத கணத்தில் சடங்குக்காரர் அவனை நோக்கி மெமெமே ம்மே என சிறுசிறு இடைவெளியுடன் அடங்கிய குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதுவரை தரையில் உட்கார்ந்திருந்த சிறுவனின் கண்கள் அந்த ஓலத்தைக் கேட்டு ஒளிபெற்றன. சட்டென எழுந்து நின்றான். அவன் மீது விழி பதிந்திருக்க, சடங்குக்காரர் தொடர்ந்து மெமெமே ம்மே என பதிலுக்கு ஓலமிட்டபடியே இருந்தார். அவன் அடிமேல் அடிவைத்து அந்த ஓலத்தின் திசையில் நடந்து வந்தான். அவன் தன்னை நெருங்கிவிட்ட பிறகே தன் ஓலத்தை முற்றிலும் நிறுத்தினார் சடங்குக்காரர்

அவன் சடங்குக்காரர் நிற்பதையே பார்க்கவில்லை. அவர் முகத்தைக்கூட பார்க்கவில்லை. அவன் கவனம் முழுக்க தாத்தாவின் முகத்தின் மீதே இருந்தது. மெல்ல குனிந்து அவர் முகத்தைத் தொட்டான். ம்ம்மே என்றான். கன்னத்தை வருடினான். காதுகளை வருடினான். மூடப்பட்ட கண்களையும் புருவங்களையும் வருடினான். மீண்டும் மீண்டும் ம்ம்மே ம்ம்மே என்று சொல்லிக்கொண்டே இருந்தான். குனிந்து அவர் காது மடல்களையும் கன்னத்தையும் பிடித்து முத்தமிட்டான். அவன் உடல் நடுங்கியது. பெருமூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. கரகத்த குரலில் ம்மெ ம்மெ என்று விசும்பினான். மெதுவாக தாத்தாவின் தலையை கீழே வைத்துவிட்டு எழுந்து மரத்தடிக்குத் திரும்பிவந்து உட்கார்ந்தான்.

கண்கள் குளமாக அந்தக் காட்சியையே பார்த்தபடி நின்றிருந்தேன். அது அப்படியே என் நெஞ்சில் உறைந்துவிட்டது. சுற்றியிருந்தவர்கள் அனைவருமே சொல்லின்றி திகைப்பில் ஆழ்ந்திருந்தார்கள்.

“வாங்கப்பா வாங்க. இப்ப வாங்க” உடைந்த குரலில் அனைவரையும் அழைத்தார் சடங்குக்காரர். துண்டால் கண்களைத் துடைத்தபடி மேடைக்குச் சென்ற ஜிப்பாக்காரர் சடங்குக்காரரின் தோளில் ஒரு கணம் கைவைத்து தட்டிக்கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்து ஒரு சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டார். சுற்றியிருந்த எருக்கம்புதர்களிடையில் கோழிகள் மேய்ந்தபடி இருக்க, தாழ்வான மரக்கிளையில் காக்கைகள் அமர்ந்திருந்தன.

சேற்றுப்படலத்தால் மூடப்பட்ட தகனக்கூட்டிலிருந்து புகையெழத் தொடங்கியது. எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள். “ஐயாமாருங்களே, எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க, திரும்பிப் பாக்காம போங்க” என்று அறிவித்தான் பிணம் சுடும் மேடையில் இருந்தவன். அவன் கையில் நீண்ட கழியை வைத்திருந்தான்.

குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எல்லோரும் வெளியே சென்றார்கள். ஜிப்பாக்காரர் தன் மகனை அருகில் கூப்பிட்டு “அவன நம்ம ஊட்டுக்கு கூப்டும் போ” என்று மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவனைச் சுட்டிக்காட்டி மெதுவான குரலில் சொன்னார். பிறகு எல்லாத் தொழிலாளிகளுக்கும் பணம் பிரித்துக்கொடுத்தார். “ஏம்பா பேண்ட் தம்பி, இங்க வா” என்று அழைத்து எங்களுக்கு உண்டான பணத்தைக் கொடுத்தார். ”இந்தா நீயும் வாங்கிக்க” என்றபடி சடங்குக்காரருக்கும் கொடுத்தார். பிணம் சுடுபவன் பக்கம் திரும்பி ”நீ என்னடா, இன்னைக்கே வாங்கிக்கறியா, நாளைக்கி வாங்கிக்கறியா?” என்று கேட்டார். “நாளைக்கே குடுங்க” என்று அவன் மேடையிலிருந்தபடியே பதில் சொன்னான்.

நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக ஜிப்பாக்காரரிடம் வந்தோம். அவர்கள் உரையாடல் காதில் விழுந்ததால் நின்றேன்.

”அவனும் மேமேங்கறான். நீயும் மேமேங்கற. மனுஷங்க பேசிக்கற பாஷ மாதிரியே தெரியலையே. ஏதாச்சிம் பிரச்சன ஆயிடுமோன்னு கடசிவரைக்கும் நெனச்சி நடுங்கிட்டிருந்தேன் தெரிமா?. எல்லாத்தயும் ஒரு செக்கன்ட்ல தீத்து வச்சிட்ட நீ. என்ன மந்திரம்டா இது?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர்.

சடங்குக்காரர் “மந்திரம்லாம் ஒன்னுமில்லைங்க. அது ஆடுங்க பாஷ” என்றார். “என்ன சொல்ற நீ? ஆடுங்களுக்கு பாஷயா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் ஜிப்பாக்காரர்.

“நம்ம புள்ளைங்க காணாம போயிட்டா எங்கடா போயிட்ட கொழந்தன்னு கேக்கறமாதிரி ஆடுங்ககிட்ட கேக்கறதுக்குத்தான் அந்த பாஷ. அந்த பையனுக்கு அவர் செத்துட்டாருங்கறதே ஒறைக்கலை. எங்கயோ காணாம போயிட்டாருன்னு நெனச்சிட்டிருக்கான். அதான் அந்த ஓலம். நான் இங்க இருக்கேன்னு குட்டி பதில் சொல்றமாதிரி சொன்னதுதான் நான் போட்ட ஓலம்.”

”இதெல்லாம் ஒனக்கு எப்படி தெரியும்?” ஜிப்பாக்காரர் ஆச்சரியத்தோடு சடங்குக்காரரின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

“எப்பவோ ஒரு தரம் எங்க ஆடு காணாம போன சமயத்துல தாத்தாதான் கண்டுபிடிச்சி குடுத்தாரு. அப்பதான் அவர் இந்த மாதிரி ஓலம் போட்டத பார்த்தன். அந்த பையன் ஓலத்த கேட்டதும் கடவுள் புண்ணியத்துல அது ஞாபகத்துல வந்துது.”

இருவருக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு சுடுகாட்டிலிருந்து வெளியே வந்தோம் நாங்கள். அந்த ஓலத்தை க்ளாரிநெட் வாசிப்பாக நிகழ்த்திப் பார்க்கத் தொடங்கியது என் மனம்.

3 comments

  1. சொத்து சுகத்தை மட்டுமே பெரிதென்று மதிக்கும் சொந்தப் பிள்ளைகள். அன்புக்காக மட்டும் ஏங்கும் யாரோ ஒரு பிள்ளை.நல்ல கதை.மரண வீட்டிலும், திருமண வீடு போல. நாகஸ்வர கச்சேரி. அரிதான சித்தரிப்பு.

  2. கடைசிவரை பாவண்ணனின் அற்புதமான கதை. பெற்ற மகள்களுக்கு இல்லாத சோகம் எடுத்து வளர்த்தவன் உள்ளத்தில் குடிகொண்டு தக்க நேரத்தில் வெளிவருகிறது. விலங்குகளின் மொழி மனத்தில் கள்ளம் கபடமின்றி இருப்பவர்க்கே புரியும் என்பதும் உணர்த்தப்படுகிறது. சாவு விழுந்த வீட்டையும், இடுகாட்டு நிகழ்வுகளையும் தன் எழுத்துகளில் பாவண்ணன் அப்படியே படம் பிடித்துள்ளார். பாராட்டுகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.