எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையை கண்டுகொள்ளும்வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இருமை’ சிவாவின் படைப்புலகின் ஆதார இயல்பை சுட்டிக்காட்டுவது. நாவல் தன்மை கொண்ட, தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. உற்சாகமாக சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் வேலனிடம் அவன் மணக்க விரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் என கதைசொல்லி சங்கரன் போட்டுடைக்கிறான். “அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதை சொன்னதற்கு அவனின் கந்தர்வ புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம்.” என எழுதுகிறார். இந்த பலூனில் ஊசிக்குத்தும் சின்னத்தனம் பல கதைகளில் வெளிப்படுகிறது. வேலன் குடும்பத்திற்காக உழைத்த லட்சிய இளைஞன். சங்கரனுக்கு எப்போதும் அவன் மீது லேசான எரிச்சலும் பொறாமையும் உண்டு. இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு செல்லும் சங்கரன் வேலன் தன் குடும்பத்தை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு ஒரு சேரிப்பகுதியில் வாழ்வதாக கேள்விப்பட்டு சந்திக்க செல்கிறான். வாழ்வின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு வந்த கதையை வேலன் சொல்கிறான். வெற்று கவுரவத்தால் வேலனின் வாழ்வை தன் குடும்பத்தினர் அழித்து விட்டதாக புகார் சொல்கிறான். “எதிரிகளை பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டணும். உடனிருக்கிறவங்கள பழி வாங்கனும்னா அழிச்சுதான் காட்டணும்.” என சொல்கிறான். தன்னை அழித்துக் கொள்வதன் வழியாக குடும்பத்தை பழித்தீர்ப்பதாக எண்ணிக் கொள்கிறான். “ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடணுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்பக்கமும் அதே தூரம் போகணும்ல,” என்றொரு வரி கதையின் மையத்தை சுட்டுகிறது. ஒருவகையில் சிவாவின் கதைகளின் மையமென இந்த வரியையே சொல்ல முடியும். உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையிலான ஊசல். ‘அவரவர் இடம்’ சாலியும், ‘விரிசல்’ சங்கரனும், ‘நிறைவு’ கலாவும் ‘சுமத்தல்’ லக்ஷ்மி டீச்சரும் ஒருமுனை என்றால் ‘இழத்தல்’, ‘நண்பனாக’ ‘பந்தயம்’ போன்ற கதைகள் மறுமுனை.
சிவாவின் மொழி நேரடியானது. காட்சிப்பூர்வமானது. கம்மாய்கள், மழுவய்யனார் கோவில், வயல்காடுகள், கோவில் திருவிழாக்கள், புளிய மரங்கள் என யாவும் காட்சி அனுபவங்கள் அளிக்கின்றன. காட்சிகள் அரிதாகவே கவித்துவமாகவோ அல்லது படிமங்களாகவோ விரிகின்றன. ‘இருமை’ கதையில் தனது இரு துருவங்களுக்கு இடையிலான அலைச்சலை பற்றி வேலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘பசும் பொன்னிற வேப்பம் காய்களை உண்ணும் காக்கைகள் தோலுக்குள் இருக்கும் சதைப் பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை நழுவ விடுவதை’ வேலன் கவனிப்பது ஒரு நல்ல குறியீடு. அவசியமானதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை தவிர்த்துவிடலாம். எதற்கு உனக்கு இந்த ஊசலாட்டம் என கேட்பது போலிருந்தது. ‘பரிசு’ கதையில் ‘காலை வெயில் போலத்தான் இப்போதும் படர்ந்துள்ளது. ஆனால் காலையில் தோன்றும் மகிழ்வு இப்போது இல்லை. ஒளி நீடிக்கும் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் மகிழ்வு அது. மறையப் போகிறதே என்பதுதான் மனதில் சுமையாக ஏறி மென்சோகத்தை மாலையில் உண்டாக்குகிறது.’ இந்த வரிகளும் ஒருவகையில் சிவாவின் ஆதார கவலையை சுட்டுவதாக கொள்ள முடியும். ஒளி மறையப் போகிறதே எனும் பதட்டம். அல்லது எப்படியும் மறைந்துவிடும் எனும் அவநம்பிக்கை.
தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான விரிசல் இதே பார்வையின் நீட்சியை கொண்டிருக்கிறது. பழுதற்ற பரப்பின் மீது சிறு விரிசல் தென்பட்டால் கூட மனம் அந்த விரிசலை நோக்கியே குவியும். அதை பூதாகரமாக்கும். எங்கும் எதிலும் நாம் விரிசலையே தேடுகிறோம், அதையே கண்டுகொள்கிறோம். சங்கர் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறான். ஒரு விடுமுறை நாளில் உணவகத்திற்கு அவசர ஆர்டர் வருகிறது. தயங்கினாலும் ஒப்புக்கொண்டு அவனும் அவனுடைய உதவியாளன் சுப்புவுமாக சமைத்து கொண்டு போய் கொடுக்கிறார்கள். முன்பணமாக கொஞ்சம் பெற்றுக்கொண்டு மீதியை உங்களுக்கு உணவு திருப்தியாக இருந்தால் கொடுங்கள் என சொல்லிவிடுகிறான். சங்கர் சமைக்கும் முறை விவரிக்கப்படுகிறது. ‘உள்ளே செல்லும்போதிருக்கும் சங்கர் அல்ல, சமைப்பவன். சமைக்கும்போது வேறொரு தனியுலகில் இருப்பவன்.’ கவனம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் சமைக்கிறான். மறுநாள் மீதி பணத்தையும் பாத்திரங்களையும் பெற செல்பவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது. தி. ஜானகிராமன் – நாஞ்சில்நாடன் கதையுலகை சேர்ந்த கதை. தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. அகங்காரச் சிறுமையும் அதை மீறி எழும் அகவிரிவையும் பேசுகிறது. ‘ஆனா என் நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்துச்சு மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால அறமும் தோக்குற காலம் வந்திடிச்சு போல,’ என சங்கர் சொல்வது தான் நன்மையின் மீதான அவநம்பிக்கையாக வெவ்வேறு கதைகளில் பரிணாமம் கொள்கிறது.
‘அவரவருக்கான இடம்’ இந்த நன்மையின் மீதான வெறுப்பை சொல்லும் மற்றுமொரு நல்ல கதை. சாலி தன் போக்கில் சரியாக நடந்துகொள்கிறாள். அப்படி சரியாக நடக்கும் பெண் பிறருக்கு பெரும் தொந்திரவாக ஆகிறாள். காரணமற்று வெறுக்கப்படுகிறாள். அவள் வீழ்வதற்காக ஊர் மொத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. நிமிர்வின் மீதான பொது வெறுப்பை எப்படி புரிந்து கொள்வது? எனது நண்பன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தான். மொத்த அலுவலகத்திலும் பணம் வாங்காத ஒரே ஆள் அவன்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு குடைச்சல். அவர்களுள் ஒருவன் இல்லை, தனித்தவன் என்பதே சிக்கல். இப்படிப்பட்டவர்கள் அளிக்கும் மன தொந்திரவு என்பது நம்மை பற்றிய சுய மதிப்பீட்டை குலைப்பது. நேர்மையின்மைக்கும் தீமைக்கும் சந்தர்ப்பத்தை குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக அதே சூழலில் ஒருவர் வாழ்ந்து காட்டுவது சமநிலையை சீர்குலைப்பது. நமது கீழ்மையை நமக்கு உணர்த்துபவர்கள் பெரும் பாதுகாப்பின்மையை அளிக்கிறார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில், ஒன்று அவர்கள் சமூக போக்குடன் இயைந்து சராசரிகளுள் ஒருவராக ஆக வேண்டும். அப்போது அனைவரும் ஆசுவாசம் கொள்வார்கள். அல்லது அவர்களை மண்ணிற்கு மனமிரங்கி வந்த கடவுளாக்கிவிட வேண்டும். அப்போது அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் மனித யத்தனங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ செயலாக, லீலையாக ஆகிவிடும். இக்கதையில் சாலி கடவுளாக்கப்படுகிறாள். இந்த இரண்டு எதிர்வினைகளுக்கு அப்பால் மனிதர்களை அவரவர் இடத்தில் வைத்து நோக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே சிக்கல். கதை இறுதியை ஒரு பெரும் தாவல் வழியாக வந்தடைகிறார். நாட்டார் தெய்வங்கள் உருவாகும் வரலாறு புரிந்தவர்களால் கதையின் தாவலை புரிந்துகொள்ள முடியும்.
சாலி பதின்ம வயதில் கோபமும் ஆங்காரமும் கொண்ட சாமானிய பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் ஒருமுறை அவளுடைய சின்னாத்தா வசைபாடியதை பரணிலிருக்கும் சிறிய திறப்பின் வழியாக பார்த்தபோது வார்த்தைகள் கேட்காத ஊமைப்படம் போல இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. அப்போது மின்னல் வெட்டென வெறுப்பை விலக்கி நோக்கும்போது எல்லாமே வேடிக்கையாக தெரிவதை கண்டடைகிறாள். வேலன் காக்கைகள் வேப்பம்பழத்தை உண்ணுவதை காணும்போது ஏற்படாமல் போன மின்னல் சாலிக்கு ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான வேறுபாடும் கூட. ‘நிறைவு’ கதையிலும் காரணமற்று பொழியப்படும் அன்பு உண்டாக்கும் எரிச்சலும் பொறாமையும் ஒரு முக்கிய சரடாக வருகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கலா எனக்கு தனிப்பட்ட முறையில் வானவன் மாதேவியை நினைவுபடுத்தினார். ஒவ்வொருவரின் மனத்திலும் இனிமையாக மட்டுமே தங்கிவிட வேண்டும் என எத்தனிக்கும் ஆன்மாக்கள். கல்பற்றாவின் சுமித்ராவை போல். ஆனால் சாலியை போல் தான் கலாவிற்கும் அவளுடைய மேன்மை மரணத்திற்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறது.
‘கண்ணாடியின் மிளிர்வு’ தொகுப்பின் முதல் கதை. சலிப்பற்ற நன்நம்பிக்கையாளர்களின் மீதான நல்லதொரு பகடிக்கதையாக வாசிக்க முடியும். அத்தை மகளின் கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக கதைசொல்லி தன் அம்மாவுடன் துக்கம் விசாரிக்க செல்கிறான். அவனுடைய கதை, அத்தை மகளை அவனுக்கு திருமணம் செய்விக்க இருந்த திட்டம் நிறைவேறாத கதை என பலவும் சொல்லப்படுகிறது. மலர்கொடி அத்தை எல்லாவற்றிலும் நேர்மறைத்தன்மையை பார்க்கும் கண் உடையவர். உற்சாகம் குன்றாத, சோர்வடையாத ஆளுமை. குறையிலும் நிறை காணும் நன்நம்பிக்கையாளர். சிறிய வீடாக இருந்தால் பராமரிப்பது எளிது என்பவர். மூத்த மகன் காதல் திருமணம் செய்துகொண்டபோது பெண் தேடும் வேலை மிச்சம் என்றவர். மருமகனின் மரணத்தை எப்படி நேர்மறையாக சொல்வார் எனும் குறுகுறுப்புடன் செல்கிறான் கதைசொல்லி. அவன் எதிர்பார்ப்பு அம்முறையும் ஈடேறியது.
‘நண்பனாக’ நட்பின் மேல்பூச்சுக்கு அடியில் இருக்கும் பொறாமையை சொல்லும் கதை. கதைசொல்லியும் அவனது நண்பன் கண்ணனும் பெண் கேட்டு செல்கிறார்கள். கண்ணன் பொன்னழகை விரும்புகிறான். அவள் இவனை நேசிக்கிறாளா இல்லையா என தெரியாததால் நேராக பொன்னழகின் அம்மாவிடமே பெண் கேட்டுச்செல்லலாம் என தீர்மானிக்கிறார்கள். பொன்னழகை கண்ணன் திருமணம் செய்துகொள்ள முக்கிய காரணம் அவனுடைய நடையற்று போன அம்மாவை அவள் நன்கு கவனித்துக் கொள்வாள் என்பதுதான். ஏனெனில் வளர்ச்சி குன்றிய அக்காவை பொன்னழகு பராமரிப்பதை கவனித்திருக்கிறான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்றை கதைசொல்லி கவனித்திருக்கிறான். “புன்னகையுடனே உள் நுழைந்தவள் உள்ளே அமர்ந்திருந்த அவள் சகோதரியை பார்த்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட அலுப்பா வெறுப்பா அல்லது சலிப்பாக என பகுத்தறியவியலா ஓர் உணர்வுடனான அம்முகம்.” கண்ணன் கதைசொல்லியிடம் அவன் முன்னர் செய்வித்த பள்ளி நண்பனின் திருமணத்தை நினைவுகூர்ந்து விசாரிக்கிறான். அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இறுக்கமாக நடப்பவன் அந்த நண்பனின் அம்மா கண்ணீருடன் தன் மகன் வாழ்வு சிக்கலானதற்கு அவன்தான் காரணம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. வீட்டை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நண்பனாகயிருப்பவன் எப்போதும் நண்பனின் நலத்தை மட்டுமே நாடுபவனாகவே இருக்கு வேண்டியதில்லை. சில நேரங்களில் சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் பெரிய பிழையில்லை என்று என் மனதிற்கு சொல்லியபடி இன்று எண்ணியபடியே எல்லாம் நடந்ததால் நிம்மதியுடன் நடந்தேன்.” ஒரு தளத்தில் இது பொறாமையை சொல்லும் கதையாகவும் மற்றொரு தளத்தில் இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்கு குற்றவாளியாக்கப்பட்டவன் எனும் முறையில் பொறுப்பிலிருந்து விடுபட்ட நிம்மதியின் கதையாகவும் தென்படுகிறது.
‘இழந்தது’ இதுவும் இரண்டு நண்பர்களின் கதைதான். நண்பனின் துரோகம் வழியாக நட்பை இழக்கும் கதை. சம்பத் பிரபா என இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். மூன்றாவது நண்பனான தேவாவை அவர்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிலில் சேர்த்துக் கொள்ளாத நண்பனுடனான கணக்கை உரிய சமயத்தில் தீர்க்கிறான். ‘நிம்மதி’ கதையில் கணவரும் மனைவியுமாக மனைவியை காதலித்தவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இறுதி திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட கதை.
சிவாவின் பல கதைகளில் கதை இறுதியில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. அவ்வகையில் செவ்வியல் சிறுகதை வடிவத்தையே பெரும்பாலான கதைகளிலும் கைக்கொள்ள முயல்கிறார். கணவர் தன் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்தவர். காதலித்தவர்களுக்கு தங்கள் இணை திருமணமாகி சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறார்களா என எப்போதும் ஒரு அச்சமும் குழப்பமும் இருக்கும். அதை நீக்கினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதை மனைவியை காதலித்த (ஆனால் அவர் பதிலுக்கு காதலிக்காக என்று நம்பப்படும்) ராமகிருஷ்ணனுக்கு உணர்த்தவே கணவன் சட்டென அந்த முடிவை எடுக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு நிம்மதி ஏற்படுத்த சென்று மனைவியின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம். இம்மூன்று கதைகளிலும் சிவா மானுட உறவுகளின் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அடையாளம் காட்டுகிறார். இவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகின் நீட்சி என்றொரு எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அவருடைய ‘தோழிகள்’ இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு இடையே ஊடாடும் அன்பும் வன்மமும் பதிவான கதை.
தொகுப்பில் மூன்று கதைகள் சற்றே அமானுடத்தன்மை கொண்டவை என சொல்லலாம். ‘கள்ளம் களைதல்’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதைசொல்லி அல்லது கதை நாயகனின் பெயர் சங்கராகவே உள்ளது. சங்கர்களில் தொடர்ச்சியும் தனித்துவமும் உள்ளன. எங்கள் பகுதிகளில் ஏழூர் செவ்வா என்பது ஒரு முக்கியமான திருவிழா. அதன் பின்புலத்தில் ஊர் வழக்கங்களை அறியாத ஆனால் ஊரைச் சேர்ந்த சங்கருக்கு நண்பன் குமார் விளக்குவது தான் கதைவடிவம். சிவாவால் இவ்வாறு ஒன்றை சீரிய முறையில் விளக்க முடிகிறது. உதாரணமாக ‘இழந்தது’ கதை வாசித்து ஒருவர் சீட்டு கம்பெனியில் எப்படி ஏமாற்றலாம் என தெரிந்து கொள்ள முடியும். கதையில் ஊர் புள்ளிகளுக்கு காழாஞ்சி கொடுப்பதற்கு முன் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. கந்தன் தன்னுடைய மனைவியின் கையை பாலன் பிடித்து இழுத்ததாக பிராது கொடுக்கிறான். இதற்கு பின்பான பாத்திர சித்தரிப்புகள், விவரணைகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இரு தரப்பிற்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என உணரச்செய்யும் சாதுர்யம் வெளிப்படும். சங்கருக்கு ஊர் வழக்கங்களை விளக்கிச்சொல்லும் குமார் வழியாக கதையின் பிற சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. “கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது. ஒரு வருசத்துக்கு அப்புறம் வந்து அவன் கையப்பிடிச்சான் இவன் அங்க தடவுனான்னு சொல்றது” என சொல்கிறான். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி பாலனின் குற்றத்தை உறுதி செய்தபோது குமார் மீண்டும் கிசுகிசுப்பான குரலில் “அதானே பார்த்தேன் விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னு” என்கிறான். மேல்தளத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கும்போதே அடியில் வேறொன்று ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சிவா. பாலனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையிலான உறவு பேசப்படுகிறது. அவர் மீது “நல்லதை மட்டுமே போதிப்பதினால் வந்த வெறுப்பு” இது சிவாவின் பாத்திர வார்ப்புகளில் ஒரு தொடர்ச்சி. அபாரமான அமானுட தருணத்தில் கதை நிறைவுறுகிறது. ஒரு சுவாரசியமான ஆவணத்தன்மையுடன் பயனிக்கும் கதை அதன் இறுதி வெளிப்பாட்டின் காரணமாக வேறொரு மெய்யியல் தளத்தை அடைகிறது.
‘பந்தயம்’ கதையும் அமானுட முடிவு கொண்ட கதைதான். கருக்கிருட்டில் அவனுடைய அக்கா வராததால் புளியம்பழம் பொறுக்க தனியாக செல்கிறான் சிறுவன் ராமன். சிறு சுழல் காற்று வீசியதும் அவனுக்கு கடந்த மாதம் அவனுடன் பந்தயம் போட்டு கண்மாய்க்குள்ளிருந்து தாமரை கொட்டையை எடுக்க சென்று கொடியில் சிக்கி செத்துப்போன சுந்தரத்தின் நினைவு வருகிறது. அது அவனுடைய ஆவி என்று அஞ்சுகிறான். சுந்தரத்தின் மரணத்திற்கு அவன்தான் காரணம் எனும் குற்ற உணர்வு அவனுக்கு. ஏதோ ஒன்று தன்னை தொடர்வதாக அஞ்சி வேகவேகமாக பிள்ளையார் கோவில் திண்ணையை நோக்கி, அங்கே சிலர் உறங்குவார்கள் என்பதால் ஓடுகிறான். ஒன்றுக்கு கழிக்கச் செல்லும் காவக்காரரின் ஓசைகளோடு அவனை தொடர்ந்த சுழலின் ஓசையையும் கேட்கிறான். அவர் கீழே விழும் ஓசையும் பிறகு அவரை தூக்கி செல்வதையும் உடலை தூக்கி செல்வதையும் ஓசைகளாக உணர்கிறான். விடிந்தபின் கதைசொல்லி ஆசுவாசமடைந்து எழுந்து செல்கிறான். ஏன்? தனக்கு நிகழ வேண்டியது காவக்காரருக்கு நிகழ்ந்து விட்டது என்பதாலா? தான் எஞ்சியிருப்பதாலா? திறந்த முடிவு கொண்ட கதை. ஒரு பேய்க் கதையாகவோ மனப்பிராந்தியை சொல்லும் கதையாகவோ வாசிக்க முடியும்.
சில கதைகளில் புலப்படும் அதீத திறந்த தன்மை ஒரு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. ‘விளையாட்டாய்’ கதைசொல்லி சிறுவயதில் விளையாட்டாய் உறவினனும் பால்ய நண்பனுமான சீனியை கிணற்றில் தள்ளிவிட்டதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வழியில் மகனை பாம்பு கடிப்பதும் இணை வைக்கப்படுகிறது. இந்த இணைவைப்பு ஒரு அகவயமான தொடர்புறுத்தல் மட்டுமே. எனினும் இந்த தொடர்பில் மெல்லிய மிஸ்டிக்தன்மை உள்ளது. சாமி பாம்பு வடிவத்தில் வரும் என நேற்று யாராவது சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன் எனும் ஒரு வரி அளிக்கும் சித்திரம். இக்கதைகளில் நாட்டார்கூறுகள் வலுவாக தென்படுகின்றன.
தொகுப்பின் சற்றே பலவீனமான கதைகள் என ‘சுமத்தல்’ ‘பரிசு’ ஆகிய கதைகளை சொல்லலாம். இரண்டுமே பள்ளிகால நினைவேக்க கதைகள். ‘சுமத்தல்’ கதையில் நினைவுகூரலாக மட்டும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொண்டு வரலாறு பாடம் எடுத்த லட்சுமி டீச்சர் வாழ்க்கையும் வரலாற்று ஆளுமையான ராணி லட்சுமி பாயும் இணை வைக்கப்படுகிறார்கள். வெளிப்புற மிடுக்குக்கு உள்ளே மருகும் சாமானிய பெண் இருப்பதை கண்டு கொள்கிறான் கதைசொல்லி. ஆனால் அதை வெளிப்படுத்தாததற்கு டீச்சர் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காமல் இருந்தாலும் என் இருநிலையிலும் கூடும் சுமையை சொல்கிறது. ‘பரிசு’ இறுதி முடிச்சு கொண்டு காலம்காலமாக பெண்களின் உள்ள கிடக்கை சொல்ல முயல்கிறது.
வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன.
பெரும்பாலான கதைகள் ‘பதாகை’ இணைய இதழில் வெளியானவை. ‘பதாகை’ வழியாக மற்றுமொரு எழுத்தாளர் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. சிவாவின் கதைகளின் நிலப்பரப்பு நான் வாழும் செட்டிநாடு – அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. செவலாங்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது சென்னையில் அரசு பணியில் உள்ளார். 45 வயதில் இலக்கிய உலகிற்குள் எழுத்தாளராக அறிமுகமாகிறார். எழுத்தாளர் கா. சிவாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதாகை சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் எழுதிவரும் திறமையான புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பதிப்பிக்கும் வாசகசாலைக்கும் வாழ்த்துக்கள்.
சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி
29.9.20