கொல்லி மலையை மறைத்து நிற்கிறது தொடர் மழை. எட்டி எட்டிப் பார்த்து சங்கரிக்கு சலிக்கிறது. கொஞ்ச நேரம் மேற்கே பார்த்துவிட்டு அறைக்குள் வந்தாள். அதற்குள் மும்முறை அழைத்திருந்தது அலைபேசி. நேற்று அழைத்த எண்ணா என்று பார்த்தாள். இல்லை.
“இந்த நம்பர்லந்து கால் வந்துச்சு… நீங்க யாரு?”
அந்தப்பக்கம் சில குரல்களின் சலசலப்பு… பேருந்தா?
“எனக்குதான் அங்கருந்து போனு வந்துட்டேயிருக்கு… யாரு நீ… எங்கருந்து பேசுற,” என்ற அதே பெண் குரல் எரிச்சலடைய வைத்தது.
சங்கரி சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். நம்பரைத் தடை செய்த ஐந்துநிமிடத்தில் மீண்டும் மூன்று அழைப்புகள். இவை எதேச்சையான அழைப்புகளில்லை என்பது மண்டையில் உறைத்தது. சென்ற வாரத்தில் வேறொரு எண்ணிலிருந்து வெவ்வேறு தினங்களில் மூன்று அழைப்புகள்.
“சின்னப்பிள்ளைங்க கண்டபடி நம்பர போட்டுருச்சுங்க,” என்று அந்த எண்ணில் பேசிய பெண் குரல் நினைவில் வந்தது. இந்தக் குரல்தானா அது? கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் தொடுதிரையில் வழுக்கிவிழும் அம்மா எதையாச்சும் செய்து வைத்திருக்கிறார்களா என்று தேடினாள்.
‘அபிதா’ நாவலை எடுத்தபடி மெத்தையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தாள். மீண்டும் இரு தடை செய்யப்பட்ட அழைப்புகள். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கிறாள். லா.ச.ரா தன்மொழியால் மனதைப் படுத்தி எடுத்த புத்தகம்.
கண்களை மூடி அமர்ந்தாள். மூன்று நாட்களாக ஓய்ந்தபாடில்லை. நான்கு வார்த்தைகள் வேகமாகப் பேசினால் குறைந்துவிடக்கூடும்.
ஆனால் உள்ளிருக்கும் பேய் செய்யவிடாது. பொறுத்துக் கொள் என்ற ஆணையை மனதிற்குள் ஆழ ஊன்றிய பொக்கைவாய் தாத்தா மனதிற்குள் புன்னகைத்தார். சிவனே என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள். இருளுக்குள் சிகப்பு நிறம் பறந்து மறைந்தது.
இந்த அழைப்புகள் மட்டுமா காரணம்! எப்பொழுதாவது இப்படி புத்தி முறுகிக் கொள்ளும். அவிழ்க்கவே முடியாது. அதாகவே பிரிந்து மலர வேண்டும். பாடல்களை மாற்றி மாற்றி தேடினாள். வேலைக்கு ஆகவில்லை. உச்சியில் நின்று கனக்கிறது.
நல்ல மழை. கைகளில் இருந்த புத்தகத்தை வைத்தபின் வராண்டாவிற்கு வந்தாள். மழையால் தன்னை முழுதும் மூடி கொண்டிருந்தது கொல்லிமலை. சிறு பிசிராகக்கூட கண்களுக்குத் தெரியவில்லை.
சென்ற வாரத்தில் வந்த அமேசான் பெட்டி, நான்கு நாட்களுக்கு முன்பு வந்த அஞ்சலக உறை இரண்டும் நினைவிற்கு வந்தன. அதில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்தபின் பெட்டிகளை குப்பையில் போட்டோமா என்ற எண்ணம் தோன்றியது.
மீளவந்து புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் அழைப்பு. புத்தகத்தை வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கினாள். வீட்டில் மழைக்கால கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்படி அனைவரும் கூடினால் ஓயாது சிரிப்பும், பொருமல்களும், விசாரணைகளும், சொல்லித் தேய்ந்த அறிவுரைகளும், சூடான தின்பண்டமுமாக நீளும்.
அய்யா கிழக்குபுறமாக திரும்பி மேசையில் கை வைத்து தன் தம்பி பேசுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சங்கரி எட்டு வயதில் முற்றத்து மழையில் நிற்கிறாள். அம்மா ,”உள்ள வா சங்கு… ஸ்கேல் எடுத்தேன்னு வச்சிக்க…” என்று அதட்டுகிறாள்.
அய்யா, “ விடு..அதாவே வரட்டும்,” என்கிறார்.
இரவு காய்ச்சலில் போர்வைக்குள்ளிருக்கும் அவளின் கைகளைப் பற்றியபடி அவளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். மேசை விளக்கின் மெல்லிய ஔி கட்டிலுக்குள் மஞ்சளாய் பரவியிருக்கிறது.
“பாப்பாவுக்கு என்னாச்சு… கோவம் வந்தா அம்மாக்கிட்ட கோவிச்சுக்க வேண்டியதுதானே… அம்மாதானே இன்னிக்கி தப்பு செஞ்சாங்க.” என்றபடி போர்வையுடன் அணைத்துக்கொள்கிறார்.
“அய்யா. முள்ளு குத்துது,” என்றதும் அவளை மேலும் கட்டிப்பிடித்து சிரிக்கிறார்.
“என்னால நெஜமாலுமே சோறுதிங்க முடியலங்கய்யா… வாந்தி வருது. ”
“அம்மாட்ட சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்… ”
“அம்மாக்குதான் எல்லாம் தெரியுமே…”
அய்யா அம்மாவிடம் திரும்புகிறார். அம்மா இவளின் கொழுசுகாலில் கைவைக்கிறாள். சங்கரி காய்ச்சலில் காய்ந்த உதடுகளில் புன்னகை எழ, “ இப்ப எனக்கு கால் வலிக்குதுன்னு உங்களுக்கு தெரியுதுதானேம்மா,” என்கிறாள். அம்மா குனிந்து கொண்டே தலையாட்டுகிறாள். அய்யா அம்மாவின் தோளில் கைவைத்து புன்னகைக்கிறார்.
பதினைந்து வயதில் அவ்வாவின் ஒரு சொல்லிற்காக சங்கரி அதகளம் செய்து ஓய்ந்தாள். அடுத்தநாள் காலையில் அய்யா, ”எப்பவாச்சும் கோவம் வரவங்களுக்கு கோவம் மதம் பிடிக்கிற மாதிரி… கட்டுப்படுத்தனும். இல்லேன்னா அடிக்கடி கோபப்படனும்,” என்று சிரித்தார்.
“இனிமே கோபப்பட மாட்டேங்கய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியலங்கய்யா,”
“சரி… சரி. சத்திய சோதனை படிக்கிறியா…” என்றார். அய்யா மாதிரி செக் வைக்கமுடியாது.
இரு கால்களையும் தூக்கி நாற்காலி மேல் குத்துக்காலிட்டிருக்கும் அவ்வா, வாழைக்காயை எடுத்துவிட்டு மாவைத் தேடி எடுத்தது. அலைபேசியைப் பார்த்தாள். தலையை ஒரு தரம் உலுக்கிக் கொண்டாள். இது பேனைப் பெருமாளாக்கி, பெருமாளுக்கு லட்சுமியை கட்டி வைக்கும், என்ற எண்ணம் வந்ததும் சட்டென சமையலறைக்குள் நுழைந்தாள்.
“இங்க பாரு தம்பி… நாலு தடவ முன்னாடி நிக்கிற மனுசருகிட்ட அதிகாரமா பேசினா இந்த வயசுல அது ஒருமாதிரி முறுக்காத்தான் இருக்கும். ஆனா நாளாவட்டத்துல பேச்சோட தன்மையே மாறிப் போயிரும். தணிஞ்சு பேசிப் பழகு…”
சின்னய்யாவிடம் தலையாட்டிவிட்டு சமையலறை பக்கம் திரும்பி தம்பி புன்னகைத்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் மழையைப் பார்த்து முகம் மறைத்தான்.
கடலை எண்ணெயில் இட்டவுடன் வாழைக்காய் மாவுடன் எழுந்து மிதந்து உப்பியது. எடுத்ததும் துள்ளல் அடங்கியது. மீண்டும் அலைபேசி.
“மழன்னு பேஞ்சறக்கூடாது… நம்மள கிச்சன்ல தள்ளிட்டு அதுங்க பாட்டுக்கு ஊர்கதய அளக்குற வேல…”
சித்தி பேச்சோடு சேர்த்து வாழைக்காயை சீவினாள். ஆமா என்ன பண்ணலாம் என்பதைப் போல அம்மா சிரித்தாள். கழுவுத்தொட்டியை பார்த்தபடி நின்ற சங்கரியை உற்றுப் பார்த்து சித்தியிடம் ஜாடை காட்டினாள்.
“மூஞ்சபாருங்க எப்படி இருக்குன்னு…..”
“இந்தகுடும்பத்துக்குன்னு செஞ்சுவச்ச மூஞ்சி…அதபாத்துதான் நம்ம ரெண்டுபேரும் ஏமாந்து போயிட்டாம்…”என்றபடி அம்மா எண்ணெய்கரண்டியை சங்கரி கையில் கொடுத்தாள்.சித்தி புன்னகைத்தாள்.
“ந்தா பாப்பா… துரியோதனன் நம்ம நெனக்கறாப்ல இல்ல… குந்தி ஒன்னும் உங்கள மாதிரி பாவப்பட்ட அம்மா இல்ல. இந்த நெனப்பெல்லாம் கொதிக்கிற எண்ணெய்க்கிட்ட வச்சுக்காத… கவனமெல்லாம் அடுப்பு மேல இருக்கட்டும்,” என்றபடி சித்தி இரண்டு தட்டுகளை எடுத்தாள்.
“சிரிச்சு தொலை… ரெண்டு நாளா பேசாம சிரிக்காம உசுர வாங்குது சனியன்… அழுதாச்சும் தொலைக்குதா பாருங்க… ஜென்ம புத்திய எதக் கொண்டு அடிச்சாலும் மாறுமா…”
“விடுங்க… இந்த மாதிரி கோவப்படாத பிள்ளய பாக்கமுடியுமா?” என்றபடி சித்தி சங்கரியின் முதுகில் தட்டினாள்.
“நீங்க வேற. கோவப்பட்டாக்கூட சமாளிக்கலாம். இது ஊமப்பிடாரி அம்சம். மொசக்குட்டிப் பிடிக்கிற நாயோட மூஞ்சப் பாத்தா தெரியாது…”
“அட விடுங்கன்னா…” என்ற சித்தி நடையில் அமர்ந்தாள்.
மீண்டும் ஒரு அழைப்பு. இது ஒரு பொழப்புன்னு விடாம செய்யறதுக்கும் பொறுமை வேணும். எதுக்காக?
இரவு முழுவதும் மழை பெய்தது. எழுந்து நிற்கும் மலையை, இந்த நிலத்தை கரைத்துவிட எத்தனிப்பதைப் போல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய மழை வாய்த்தது. வயலாகச் சேர்த்த நிலத்தையெல்லாம் மீண்டும் தனக்கே சொந்தமாக்கிக்கொண்டு திமிறி ஓலத்துடன் நகர்ந்த ஆற்றை இன்னும் மறக்க முடிவில்லை. எத்தனை மழையும் வழிந்து ஓடத்தானே வேணும். இன்னும் கரைத்தழிக்க முடியவில்லை என புரியாததாலா மழை பெய்துகொண்டே இருக்கிறது?
மனம் புதுப்புது ஊடுவழிகளில் தேடிச் சளைத்தது. தலையணை பக்கத்தில் புத்தகம் தேமே என்று படுத்திருந்தது. அதன் மீது கைவைத்து எப்போதென்று தெரியாத கணத்தில் உறக்கத்தில் விழுந்தவளை பறவைகளின் கெச்சட்டங்கள் எழுப்பின.
அத்தனை பறவை குரலிலும் குயிலின் அழைப்பு மீறி ஒலித்தது. அவற்றிற்கு மழை முடித்து எழுந்த மெல்லொளி தந்த உற்சாகம். பக்கத்திலிருந்த பாழடைந்த வீட்டின் அடர்ந்த மரங்களின் இலைகள் பளபளத்தன. அலைபேசியைத் தட்டினாள். அதே அழைப்பு இருபத்தாறு முறை.
மெல்ல துலங்கிக் கொண்டிருந்தது காலை. மெல்லிய நீராவிப் படலத்தை விலகிக் கொண்டிருந்தது கொல்லி மலை. வாசல் படியை கழுவும்போதே மனதில் ஒருதுணுக்குறல். யாரோ பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
கோலத்தின் பாதியில் சட்டென்று நிமிர்ந்தாள். அவன், அத்தை வீட்டின் வாசலில் நின்று கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதிர்ந்து பார்வையை தழைத்தபடி திரும்பினான்.
தேநீர் அருந்தும்போது மீண்டும் அழைப்பு. வீட்டு சனீஸ்வரன்களை யாரிடமும் வம்புக்கு நிற்காதீர்கள், எந்தப் பிள்ளையிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்றால் கேட்பதில்லை.
கண்ணனுக்கும் இவன்களுக்குள்ளும் எதாவது நடந்திருக்குமா?ஆனால் பெண்குரல்தானே கேட்டது. எட்டு மணிக்கு மேல் இரும்பு கேட் பக்கத்தில் தெருவைப் பார்த்து நின்றாள்.
எதிர்வீட்டு கதிர்அண்ணன் வண்டியைக் கிளப்பி நின்று, “ஒனக்கு மட்டும் தெருவுல தேர் ஓடுதோ,”என்றபின் முகத்தை உற்றுப் பார்த்து, “ஒடம்புக்கு முடியலயா…” என்றார். இல்லை என்று தலையாட்டினாள்.
“நல்லா சோறத் தின்னுட்டு படுத்து எந்திரி… எதுன்னாலும் ஓடிப் போயிரும்,” என்றபின் வண்டியை முடுக்கினார்.
தெருவின் கடைசி வீட்டை அடுத்த நெல்வயல்களின் பசுமை காலை வெயிலில் அலையடித்தது. இடையில் டேங்க்கில் கூட நீர் பிடிக்க ஆட்களில்லை. அந்த சந்திலிருந்து கண்ணன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
கல்பாவிய செம்மண் பாதையில், கருப்பு இடைக்கயிறுடன் உச்சிச் சிண்டு அசைய குஞ்சுமணியை ஆட்டியபடி வருகிறான். இவள் முட்டி தொடும் பாவாடையுடன் ஓடிச்சென்று அவனைத் தூக்கி, எடை தாளாமல் உடல் சரிய வயிற்றில் வைத்துக் கொள்கிறாள்.
பாதையோரத்தில் பலகையைப் போட்டு செல்வராணிச் சித்தி கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். அவளின் இரு கால்களில் படுத்துக்கொண்டு கண்ணன் துள்ளுகிறான். சுடுநீரில் குளிக்க வைத்தபின் தம்பிக்கு ‘திடுக்கு தண்ணி’ ஊத்து, என்று ஈயச் செம்பில் பச்சைத் தண்ணீரை மொண்டு சங்கரியின் கைகளில் கொடுக்கிறாள்.
“தம்பி பாவம் அழுவுவான்.”
“தம்பி பயந்தறக்கூடாதுன்னுதானே… ஊத்து பிள்ளே…”
தண்ணீரை அவன் தொடையிடுக்கில் சரியாக குஞ்சிப்பூ மீது ஊற்றியதும் வீறிடுகிறான்.
“தம்பி பாவம்… தம்பி பாவம்…” என்றபடி பாவாடையைச் சுருட்டி தரையில் அமர்ந்து துண்டை மடியில் விரிக்கிறாள். கண்களில் அவன் உருவம் மங்கித் தெரிய அருகில் வந்திருந்தான். மீசையும் தாடியுமாக வளர்ந்த ஆண். கண்களைச் சிமிட்டியபடி, “ டேய் நில்றா,” என்று அழைக்க எத்தனித்த வாய், “தம்பி கொஞ்சம் நில்லு,” என்றுதான் அழைத்தது. மழை முடித்த வெயில் சுள்ளென்று எரிந்தது.
“என்ன?” என்று கண்களை இடுக்கிப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.
“என்னக்கா….”
பொற்கிளியம்மா , “ என்ன உரிமையா நிக்க சொல்றவ ,” என்று பொக்கை வாய் நிறைய சிரித்தாள். அவளுக்கு எப்படியும் பசங்களுக்குள்ளான புகைச்சல் தெரிந்திருக்கும்.
அவள் இயல்புக்கு மீறிய குரலில், “பொறந்தவனதானே உரிமையா நில்லுடான்னு சொல்லமுடியும். கூடவே பெறந்தாதானா…” என்றவள் குரல் தடுமாற நிறுத்திக் கொண்டாள். கண்ணன் நெற்றியை சுருக்கியபடி நின்றான்.
“எந் தங்கப்பிள்ளைகளா ஒரு தெருவுல பெறந்திட்டம்… உனக்கு இவனும் பொறந்தவன்தான். நீ பேசு…பேசு,” என்றபடி கைத்தடியை மடியில் சாய்த்தபடி குட்டித்திண்ணையில் அமர்ந்தாள். கண்ணன் குனிந்துகொண்டான்.
“இதென்ன புதுப் பழக்கம்… யாருக்கிட்ட பொல்லாப்போ அவங்கிட்ட வச்சுக்க வேண்டியதுதானே…”
“அதுசரி …” என்று கிழவி அதாகவே சொல்லிக் கொண்டது.
நிமிர்ந்த அவன் கண்கள் சிவந்திருந்தன. அது சினமேறிய கண்கள்.
“தெறக்கமுடியாத பூட்டுக்கு கதவ எட்டிஉதச்சானாம்…”
“யாரு கெழவி …”என்றான்.
“யாரோ ஒருத்தன்… நீ எங்க போற…”
“வயக்காடெல்லாம் மழத்தண்ணி… மோட்டை எடுத்துவிட்டு வடியவிடனும்…”
“ பசி தாங்கல….” என்றபடி எழுந்து நடந்தாள்.
சங்கரி கண்ணனைப் பார்த்தாள். அவள் பார்வையை விலக்கி நடந்தான். மண்வெட்டியுடன் வந்த வெங்கடேசுடன் பேசிக்கொண்டே முக்கால் பேண்ட்டின் பாக்கெட்டில் அலைபேசியை வைத்தபடி திரும்பிப் பார்த்துவிட்டு சென்றான்.
கணுக்காலில் பட்டின் மென்மையுடன் நித்யமல்லி உரசியது. சட்டென்று கால்களை நகர்த்திக் கொண்டாள். அவிழக் காத்திருந்த மொட்டுகள் வானத்தை நோக்கி நீண்டிருந்தன. குனிந்து அதன் இலைகளை, மலர்களை, தளிர்களை, தடவினாள். அய்யா வேட்டியை சற்றுச் சுருட்டியபடி வாசல்படியில் அமர்ந்திருந்தார். கண்களும் புன்னகையும் அவளை அருகில் அழைத்தன.
One comment