A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும்
சென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம் முன்னர். அழுக்கு உடையுடன் கொரோனா முகமூடிக்குள் அசைந்த அவரது தாடையை ஊகித்தவாறு, “பார்த்து ஒரு வருடமிருக்கும், இருந்தும் உங்கள் புன்னகை இன்னும் நினைவிருக்கிறது” என்ற சொல்ல நினைத்து, “அதே புன்னகை!“ என்று மட்டும் சொன்னேன்.
அவர் தாடையை நன்கு அசைத்தவாறே, ”ஆனால் அப்போது நாம் சந்தித்த உலகம் வேறு; அந்த உலகத்தில், யாரையாவது சந்திக்கும்போது கைகுலுக்கும் வழக்கமிருந்தது,” என்றார்.
ஆம், இரு உலகங்களுக்கு இடையில் கைகுலுக்க முடியாத அழுத்தமான கோடு இன்றிருக்கிறது.
கோட்டிற்கு இந்தப்பக்க உலகில் கட்டாயத்தின் பேரில் நிறைய வழக்கங்களை எதிர் கொள்ள வேண்டியாகிறது. அதே சமயம் நேர்மறை பழக்கங்களும் இல்லாமல் இல்லை.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நான் வாழும் லண்டனிற்கு கிழக்கில் முப்பது மைல்கள் தள்ளி இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணங்கள் ஆரம்பித்திருக்கிறேன்.
உண்மையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாகவே குழுவாக ஒவ்வொரு சனிக்கிழமை காலைதோறும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நான் சமீபத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்.
நாங்கள் ஆங்காங்கே குழு குழுவாகச் சேர்ந்து கொண்டு நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (Hanningfield) ஒரு சுற்று வருவோம். தோராயமாக முப்பது மைல்கள். சில சமயங்களில் சில நண்பர்கள் இன்னொரு சுற்றும் சென்று வருவதுண்டு.
நான் வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி The Endeavour எனும் பப்பிற்கு வெளியே காத்திருக்கும் ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நகரத்தின் இன்னொரு மூலைக்கு சைக்கிளை விட்டு, நான்கு மைல்கள் தொலைவில் Blue Lion எனும் பப்பில் காத்திருக்கும் மற்ற குழு நண்பர்களுடன் இணைந்து கொண்ட பின் நகரத்திற்கு வெளியே செல்லும் ஒற்றைப் பாதையில் சீராகச் செல்வோம். பின்னர் The Three Compasses எனும் பப்பிற்கு வரும்போது எட்டு அல்லது பத்து மைல்கள் கடந்திருப்போம். அதன் பின் The Old windmill …இப்படியாக சிறு கிராமங்களை தொட்டுச் செல்லும் வழியெங்கும் மதுபான விடுதிகளே எங்களது மைல்கற்கள்.
இப்படியாக காலை 7 மணி வாக்கில் அவரவர் இருப்பிடங்களிலிருந்து ஓரிருவராக சேர்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பயணம் மெல்ல நகரத்தை விட்டு வெளியே ஒற்றை கிராம பாதையை நோக்கி நகரும். வழியில் ஓரிடத்தில் A12 எனும் மோட்டார் பாதையை நாங்கள் ஓர் குறுகிய பாலத்தின் வழியாக கடப்போம். பாலத்தின் அடியில்,இரு வழிப்பாதைகள் கொண்ட மோட்டார் சாலை. இம்மாதிரியான A சாலைகளில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 70 மைல்கள்.
கிராம ஒற்றை வரிசைப் பாதையில், சுற்றிலும் வேனிற்கால வண்டுகளையும் பூச்சிகளின் ரீங்காரங்களையும் மட்டும் கேட்டபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு போகையில் இந்த மோட்டார் பாதையின் இரைச்சல் தூர அருவிச்சத்தம் போல் மெல்லியதாய் கேட்க ஆரம்பிக்கும். மோட்டார் பாதையை நெருங்க நெருங்க அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். அருவி கண்களில் படாது. ஆனால் அருகில் பெரும் உற்சாக அருவியை உணர முடியும். திடுமென ஒரு திருப்பத்தில் சிறு பாலத்தைக் கடக்கும்போது A12 எனும் அருவி நமக்கு கீழே உற்சாகமாக கண்களில் படும்.
பாலத்தைக் கடந்து போகையில் அருவியின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்து தூரத்து இடி போல் மறைந்துவிடும்
பின் ஒடுங்கி குழைந்து வயல்களின் நடுவில் பெரிய அளவு வரப்பு போன்ற பாதையில் எங்கள் பயணம் போகும்.
வாழ்க்கை மாதிரி இந்தப் பாதையும். சீராக ஒரே நேர் நிலையில் இருப்பதில்லை. போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சரசரவென இறக்கம் இறங்கும். மிதிக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் காலை தாராள வெயிலும் காற்றும் முகத்தில் உற்சாகமாக அடிக்க ஆசுவாசமாக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பிக்கும்போது இறக்கம் சட்டென வலது புறத்தில் திரும்பும். திரும்பும் இடத்தில் கள்ளமாக இருக்கும் சிறு கற்களை கவனமாக கவனித்து தவிர்த்து திரும்பினால் பாதை பெரும் மேடாக நம் முன் நின்று சிரிக்கும். கியர்களை மாற்றி, வேகம் குறைந்து மூச்சிறைத்து மேட்டிற்கு பழகிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் இறக்கம் சிரித்துக்கொண்டே எதிர்படும்.
மேடுகள் நினைவிருப்பது போல் இறக்கங்கள் நினைவிலிருப்பதில்லை.
ஆகஸ்ட் இறுதி வாரங்களில் அறுவடை முடிந்திருந்த வயல்களில் நடுவில் மொத்தமாக குவித்து சுருட்டப்பட்ட வைக்கோற் பொதிகள் அமைதியாக அமர்ந்திருந்தன. பொதிகள் எனில் சாலை போடும் இயந்திரங்களின் உருளை அளவிற்கு சுருட்டப்பட்ட பொதிகள். பின் வந்த வாரங்களில் அவை வயல்களிலிருந்து அகற்றப்பட்டு பாதையோரத்தில் இருக்கும் பண்ணை முற்றங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டேன்.
ஒரு L வடிவ பாதை திருப்பத்தில் கருப்பு பெர்ரிகள் கொத்து கொத்தாக காலை ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சைக்கிளை உடனே நிறுத்த முடியாது, திரும்ப வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டே திரும்பினால் கருப்பு பெர்ரிகளும் மஞ்சள் நிற பெர்ரிகள் மீண்டும் தென்பட்டன…மீண்டும்…
மொத்தப் பாதை முழுவதும் இருமருங்கிலும் பெர்ரிச்செடிகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன.
சில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு மலையேறு பயணத்தில் வழிகாட்டி, பிரிட்டன் காட்டுப் பகுதியில் காணக்கூடிய பெர்ரிச்செடிகளில் ஏழுவகை மனிதர் உண்ணக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பாதையில் அந்த வகையான பெர்ரிகள் ஏராளமாக தென்பட்டன. நீல நிற பில்பெர்ரிகள், மஞ்சள் நிற பெர்ரிகள் (Rowan), சிவப்பு பெர்ரிகள் (Cloudberry, Crowberry, Cranberry) போன்ற பல வகையான பெர்ரிகள் தென்பட்டாலும் கருப்பு பெர்ரிகள் பொதுவாக சுவை மிகுந்தவை. இருபது மைல்கள் கொண்ட பாதையில் எங்கு சைக்கிளை நிறுத்தினாலும் கைக்கெட்டும் தூரத்தில், முட்களோடு இப்பெர்ரிகள் முது வேனிற்காலத்தில் ஆரவாரித்தன.
நானும் சக நண்பரும் ஓரிரு நிமிடங்களில் பெரிய பீங்கான் குப்பியில் நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு கருப்பு பெர்ரிகளைப் பறித்துவிட்டோம். பின்னர் செப்டம்பர் வாரங்களிலும் நிறைய பறிக்கக் கிடைத்தது.
திரும்ப வீட்டிற்கு வந்து நன்கு கழுவி விட்டு அவ்வப்போது கொறிக்க வைத்துக் கொள்வேன்.
இந்தியாவில் வாழும்போது பனம் பழம் அல்லது இலந்தை அல்லது வேறு பழங்கள் பறித்து தின்னல் போன்ற கிராம வாழ்க்கைக்கான அனுபவம் அமையவில்லை. மேட்டில் சைக்கிளை மிதிக்கையில், வழியெங்கும் பெர்ரிகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் அவற்றை நினைத்துக்கொண்டே வந்தேன்.
ஆனால், வழியில் பண்ணைகளை கடக்கும்போது ஓரிரு முறை சேவல்கள் கூவும் ஒலி கேட்டோம், குதூகளித்தோம்!
வழியில் அவ்வப்போது பெரும் பண்ணை வீடுகள் படும். பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். இல்லாவிட்டாலும் நானே வித்தியாசப்படுத்திக் கொள்வேன். ESK house எனும் எசக்கியின் இல்லம் எனக்கு ஓர் குறிப்பிட்ட மைல்கல்.
நீர்த்தேக்கத்தை (402 ஹெக்டர் பரப்பளவு) சுற்றி வரும் பாதையில் ஓரிடத்தில் நீர் தேக்கத்தின் கரையில் எதிர்படும் பாலத்தில் பயணத்தை நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை வாழைப்பழத்தை உரித்துக்கொண்டே பாலத்தை ஒட்டிய கம்பிகள் வைத்த சுவற்றின் நானும் இன்னொரு நண்பரும் சாய்ந்து கொண்டு நீர்த்தேக்கத்தைப் பார்த்தோம். கரையின் ஓரத்தில் வரிசையாக அமர்ந்திருந்த கருப்பு கழுத்து வாத்துகள் சப்தங்கள் எழுப்பிக்கொண்டே ஒரு சேரப் பறந்து நீர்த்தேக்கத்தினுள் சென்று மீண்டும் அமர்ந்தன. ஓர் நீள கறுத்த மணி மாலை உரத்த சப்தங்களுடன் பறந்து போவதைப் போன்று இருந்தது.
அவைகளுக்கு எதிரே இன்னும் சற்று உயரத்தில் பெரு கொக்குகள் பெரும் V வடிவில் சப்தத்துடன் பறந்து கடந்து சென்றன
சட்டென சென்ற சனிக்கிழமை விஷ்ணுபுர நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி உரையாடல் நினைவிற்கு வந்தது.
இயற்கையைப் பற்றி, கவனித்தலைப் பற்றி எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டது எனும் கேள்விக்கு, 1967, ஒரு டிசம்பர் அதிகாலை 5:30 மணியளவில் திருச்சிக்கு அருகிலுள்ள ஓர் ஏரியில் பறவைகளைக் காண அமர்ந்திருந்த போது பனி மூட்டத்தினுள் பெரு வாத்துக்கூட்டம் (Bar headed goose) ஒன்று சப்தங்களுடன் வந்தமர்ந்த தருணம் அபார அனுபவமாக இருந்தது என்றும் அதைப் பற்றி எழுதிய அனுபவமே தனக்கு மேலும் எழுத தூண்டுதலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பெரு வாத்துகள் வானில் மிக அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை – 7,000 மீட்டர்களுக்கும் மேல் (23,000ft) உயரத்தில் காணப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.
டென்சிங், எட்மண்ட் ஹிலாரி குழுவின் ஒருவரான ஜார்ஜ், இப்பறவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஓர்அதிகாலையில் ஏரியின் அருகில் இப்பெரும் வாத்துகளை கண்ட சந்தர்ப்பம் எத்தகைய அபார மனக்கிளர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.
இந்த கருப்பு கழுத்து வாத்துகளுடன் வேறு ஏராளமான வாத்துகளும் கொக்குகளும் சிறு குருவிகளும், மேக்பைகளும் நீர் த்தேக்கப் பரப்பில் உலவிக்கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. அவைகளுக்கேயான தனி பிரபஞ்ச உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
கறுப்பு கழுத்து வாத்து என நான் குறிப்பிட்டிருந்தாலும் அவை வாத்து என்பதற்கான என் மனபிம்பத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தன. மொபைல் போன் காமிரா கண்களின் வழி கவனித்தபோது அவற்றின் சிறு கண்கள் மோதிரத்தில் பொதிந்த பவழங்கள் போலிருந்தன – வீட்டிற்கு திரும்ப வந்து இணையத்தில் தேடியபோது அவை black necked Grebe எனப்படும் வாத்து வகை என அறிந்தேன்.
கொஞ்சம் ஆர்வம் கொண்டு கவனித்தாலே போதும், நம்மால் இது போல் நம்முடன் இருக்கும் ஆனால் நாம் உணரா இன்னொரு உலகை சற்றேயாயினும் கண்டுகொள்ள இயலும். காலின் இல்போர்ட் எனும் ஆங்கிலேய வனப் பாதுகாவலர் கானுறை வாழ்க்கையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்-
இயற்கையை/கானுலகை கவனிக்கும் வழக்கம் உங்களை நிதானப்படுத்தும்; ஆச்சரியப்படுத்தும், வாழ்க்கை எனும் இப்பெரிய விஷயத்தை உங்களுக்கு அடையாளம் காட்டும், உங்களின் சிறிய, ஆனால் மிக முக்கிய பங்கைப் பற்றி யோசிக்கவைக்கும், என்று.
நம் இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய விலங்குகள் பறவைகள் பற்றிய சித்திரங்கள் திகைக்க வைக்கும் அளவிற்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இளம் வயதில், பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு சுட்ட குருவியின் கழுத்து வித்தியாசமாக, மஞ்சளாக இருப்பதைக் கவனித்து அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து வாழ்க்கையே பறவையியலாக மாறிப்போன சலீம் அலியின் கதையை நாம் அறிவோம்.
நம் அனைவருக்கும் ஒரே வழி இல்லைதான். ஆனால் அனைவரின் வழியெங்கும் பல வகையான பெர்ரிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு தருணத்தில், திருப்பத்தில் கவனித்துவிட்டால் போதும்…
***
இப்படியாப்பட்ட ஓர் சனிக்கிழமை மதியத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போனில் தகவல் வந்தது. எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து செடிகள் அவரது தோட்டத்தில் படருகின்றன. வெட்டுவதில் ஆட்சேபணை உண்டா என்று கேட்டு. இல்லை என்று சொல்லிவிட்டேன். மாலை அவர் ஒரு தகவலும் படமும் அனுப்பியிருந்தார். “உங்கள் தோட்டத்திலிருந்து கரும் பெர்ரி செடிகளும் எங்களது தோட்டத்தில் படர்ந்திருக்கின்றன. அருமையான சுவை..!”