வெயில் தன்னை முழு நிர்வாணமாக்கி கொளுத்தியது. இன்ன வெயில் என சொல்ல முடியாத அளவுக்கு மண்டையை சூடாக்கியது பூவரச மர இலைகளுக்கு மத்தியில் நானும்,நாட்டு துரையும் நின்றிருந்தோம், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் எங்கே போய் ஊர் சுத்தலாம் என யோசித்து கொண்டிருந்தோம்.
நாங்கள் இருவரும் அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்கிறோம். பெற்ற அப்பனும்,ஆத்தாளும் இருந்தும் அவர்களின் கையாலாகாத தனத்தால் எங்களுக்கு நேர்ந்த கதி இது.எங்கள் பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருந்து வருபவர்கள். அவர்கள் மத்தியில் விடுதி மாணவர்கள் ஆன நாங்கள் அசுத்தமானவர்களாகவே பாவிக்கப்பட்டோம்.
நாட்டு துரைக்கு அம்மா கிடையாது. அவள் தன் பழைய காதலனோடு ஓடிப் போய் விட்டாளாம். அப்பா அவரும் ஒரு குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.
அவனுக்கு எல்லாமே பாட்டிதான். போன வருடம் இந்த கிழவியும் இவனை விட்டு பிரிந்து விட்டது இதனால் வேறு வழியில்லாது இந்த மாணவர் விடுதியில் சேர்த்திருந்திருக்கிறான்.
இந்த விடுதியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சுருக்கமாக சீர்திருத்தப்பள்ளி எனலாம் . பழைய காலத்து பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி சுண்ணாம்பு அடித்து அங்கே எங்களை கைதிகளாக வளர்த்தார்கள். கட்டபொம்மனை போல கருத்த மீசையும், பன்றியின் உடலை ஒத்த உடல்வாகுடைய ராமர் தான் எங்கள் சமையல்காரர். சமையல்காரர் மட்டுமல்ல! வார்டன் ,பெற்றோர், சர்வாதிகாரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
விடுதியில் மொத்தம் 50 பேர் படித்தோம் .அதில் 40 பேருக்கு தாயோ தந்தையோ யாராவது ஒருவர் இல்லாமல் இருப்பர். அவர்களின் நான் பாக்கியசாலி என சொல்லலாம். சரியாக பத்து வயசு இருக்கும் என நினைக்கிறேன்.அம்மா என்னை ஒரு இரும்பு பெட்டியோடு இங்கு வந்து சேர்ந்தார்.
எனது பெற்றோருக்கு ஊர் முழுக்க கடன் . கடன்காரர்கள் தொல்லை தாங்காது
மஞ்சள் நோட்டீஸ் விட்டுவிட்டு கேரளாவில் ஒரு ஏலக்காய் தோட்டத்தில் கூலிகளாக கிளம்பினார்கள். என்னை யாரும் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் இந்த ஜெயிலில் தள்ளினார்கள். இங்கே படிக்க எந்த வித கட்டணமும் தேவையில்லை. அரசாங்கமே எல்லாம் பார்த்துக் கொள்ளும் என்ற வார்த்தையைக் கேட்டு என் பெற்றோரும் நம்பித்தான் சேர்த்தார்கள்.
” என்னத்தா? என் பிள்ளையை பாத்துகிறாப்புல பாத்துக்கமாட்டனா? இங்க இருக்குற அம்பது பிள்ளைகளும் நான் அப்பேன் மாதிரி தா !! நீ சங்கடப்படாம போத்தா! !
என ஒவ்வொரு முறை சமையல்காரர் எதையாவது ஐஸ் வைத்து பேசி அம்மாவிடம் 500 ரூபாய் வாங்கி விடுவார் .அது மறுநாளே ஒயின்ஷாப் கல்லாப் பெட்டியில் போய் விழுந்துவிடும். இந்த விடுதியில் வந்த புதிதில் அழுதுகொண்டே இருந்த நான்,
இதற்குமேல் இந்த அழுகை என்பது எந்த தீர்வையும் தராது என புரிந்து கொண்டேன்.
வார்டனை பொருத்தவரை என்றாவது ஒரு நாள் வருவார். அரிசி மூட்டைகளை கணக்கு பார்த்துவிட்டு ஜெகா வாங்கிவிடுவார். மற்ற எல்லாத் தேவைகளையும் ராமர் தான் பூர்த்தி செய்வார். செய்வான் என்றால் சரியாக இருக்கும்
தினமும் சோறு என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையாவது ஒன்றை போடுவார்கள் ஒவ்வொரு முறையும் சாதம் குவித்த வட்டகையில் குனிந்து சோறு வாங்க முடியாது அவ்வளவு நாற்றமடிக்கும். காவி நிறத்தில் இருக்கும் மட்டமான ரேசன் அரிசி தான் எப்போதும்.
தினமும் காலையில் சட்னி என சொல்லி கொண்டு ஒன்றை ஊற்றுவார்கள்.ஒரு கைப்பிடி அளவு பொரியலையை வைத்து 50 பேருக்கு சட்னி அரைத்தால் எப்படி இருக்கும்? வெறும் தண்ணி தானே வரும்? வாயில் வைத்து திங்க முடியாத அளவு சுத்தமாக ஒப்பாது. நானும் நாட்டு துரையும் சமையல் கட்டிலிருந்து மிளகாய்பொடியை திருடி வைத்து கொண்டு அதை டவுசர் பாக்கெட்டில் போட்டு வைத்து ஒரு வாய் சோறு, ஒரு நக்கு மிளகாய் பொடி என தின்போம். மதியம் பப்பாளி சாம்பார். தொடர்ந்து வாரம் ஐந்து நாளும் பப்பாளிதான் . அந்த மரங்கள் விடுதியை சுற்றி அதிகமிருப்பதால் இந்த ஏற்பாடு. இரவில் ரசம் ராமர் அக்குலை சுரண்டி,சுரண்டி புளியை கரைத்த ரசம்.
இதை பற்றி மேலும் சொன்னால் எனக்கு வாந்தி வந்து விடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சரியான பொருட்களை தான் தரும் ஆனால் இந்த ராமரும் வார்டனும் சேர்ந்து தரமான பொருட்களை எல்லாம் விற்று விட்டு ,மட்டமான பொருட்களை வைத்து எங்களுக்கு சமைத்துப் போடுவார்கள்.
இதை தின்று, தின்று என் நாக்கு கூட என்னிடம் தற்கொலை செய்து கொள்கிறேன் என கெஞ்சியிருக்கிறது. அப்போதெல்லாம் எனக்கு வயிற்றுக்குள் ஏதாவது கற்களைப் போட்டு நிறுத்தி விடலாமா என தோன்றும்.
நாட்டு துரைக்கு தினமும் உணவில் உள்ள புழுக்களை கண்டுபிடிப்பது ஏகப்பிரியம்.
எங்கள் விடுதியில் அவனைப் போல் யாரும் இந்த கலையை அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது. இப்படி செத்த சோற்றை தின்னும் எங்களுக்கு என்றாவது சில பணக்கார வீட்டு விசேச சோறு வரும். அப்போதெல்லாம் நாக்கில் எச்சில் ஊறும் . அதிலும் கேசரி, பொங்கல் எல்லாம் கிடைத்து விட்டால் ஏக சந்தோஷம். என்றாவது ஒரு நாள் அப்படி சோறு போடுவார்கள். எங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு துளி சிரிப்போடு ,வாய்திறந்து சொல்லா முடியாத நன்றி தான்.
அம்மா வருடத்திற்கு இரண்டு முறை வருவாள் அப்படி வரும்போது 50 ரூபாய் தந்து பார்த்து செலவு செய்து கொள் என்பாள். நாட்டுதுரைக்கு அப்படி யாரும் வருவது கிடையாது.ஈவு, இரக்கம் கருணை இவற்றின் மீது நாங்கள் நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் எப்போதாவது விழுந்த மழை போல அவை எங்கள் மேல் விழுவதுண்டு.
மேலும் வார இறுதி நாட்களில் இருவரும் வேட்டைக்கு போவோம். வேட்டைக்கு என்றால் முயல் வேட்டைக்கு தான். அப்படி போகும் போது நிறைய களவாணித்தனம் செய்வதுண்டு. தென்னந் தோப்பில் தேங்காய் திருடுவது, மாம்பழம் திருடுவது இப்படி பல திருட்டு வேலை செய்வோம். கொட்டை முந்திரி பழத்தில் சாருக்கு எந்த ஒரு குளிர்பானமும் ஈடு செய்ய முடியாது அவ்வளவு தரமான சுவையாகயிருக்கும். என்றாவது புரோட்டா திங்க வேண்டும் என்ற ஆசை வந்தால் நேராக ஊர் கடைசியில் உள்ள நாட்ராயன் கோயிலுக்குப் போவோம் அங்கே உண்டியல் நிறைய சில்லறைகள் இருக்கும். அதை தலைகீழாக குலுக்கி சில்லறைகளை எடுத்து புரோட்டா வாங்குவோம். கருப்பசாமிக்கு அவ்வப்போது படையல் வைப்பார்கள். அதையும் கூட திருடி விடுவோம். மாதத்தில் இரண்டு முறையாவது கோயிலில் கிடா வெட்டுவார்கள் அன்று போனால் கடைசி பந்தியில் உட்கார்ந்து ஒரு கட்டு கட்டுவோம்.
அன்றைக்கும் அப்படித்தான் போலீஸ்காரன் வீட்டு விருந்து. நிறைய கார் வந்திருந்தது போலீஸ்காரன் மகளுக்கு காது குத்து. வகை வகையாக சமைத்து கொண்டிருந்தார்கள். அன்று சனிக்கிழமை வேறு .வேகமாக எழுந்து வந்து விட்டதால் நேராக முல்லை பெரியாற்றில் போய் குளித்து விட்டு வந்து கோயில் பக்கத்தில் உள்ள பூவரச மர நிழலில் நின்று இருந்தோம்.
எங்களுக்கும் அந்த கோயில் பூசாரிக்கும் சுத்தமாய் ஆகாது. நாங்கள் அந்தப் பக்கமாய் போனாலே அடிப்பார். இதனால் அவர் போன பிறகு போய் சாப்பிடலாமென காத்திருந்தோம். ஆனால் அவர் போவதாயில்லை. போலீஸ்காரர் ஏதாவது பணம் தருவார் என காத்திருந்தார் போலிருக்கிறது.
நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் தான் குப்பை தொட்டி. நிறைய எச்சை இலைகள் குவிந்து கிடந்தன. எச்சில் இலைகளில் இருந்து வந்த கறிக் குழம்பின் மணம் எங்களை ஏதோ செய்தது. அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டே ஊர்ந்து போனது. வாசத்தை நுகர்ந்து கொண்டே நின்றிருந்த எங்கள் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது. என்னை பார்த்த நாட்டு துரை
” இந்த பூசாரி தாயோலி போய் தொலையிரானானு பாரு,வகுறு வேற சொரண்டுதே? ”
” டேய் அவேன் இருக்காண்டா, போன தடவை அடிவாங்கினத மறந்துட்டியா?
” அதுக்கு இவெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்தா வேலைக்கு ஆகுமா? நம்ம சாப்டா இவனுக்கு ஏன்டா எரியுது?”
” இருடா இப்பதான் சாமி தாத்தா சாப்பிட போறாரு அவர் உள்ளே போனதும் நம்ம போவோம்”
நான் சொல்லி முடிப்பதற்குள் சாமி தாத்தா பந்தியில் போய் உட்கார்ந்தார். உடனே நாட்டு துரை
” நான் போறேன் வந்தா வா ”
என. முன்னாடி ஓடினான். நானும் அவனை தொடர்ந்து போனேன் கோயில் மண்டப வாசலில் போலீஸ்காரர்கள் சிலர் வெத்தலை போட்டு கொண்டு பேசினார்கள். அவர்கள் யாரும் எங்களை கண்டு கொள்வதாய் இல்லை. கோயில் மண்டப வாசலில் நின்றிருந்த அடி குழாயில் கையை கழுவிவிட்டு உள்ளே போனான் அவனுக்கு இருந்த பசியில் என்னை கண்டு கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை.
வாசலில் நின்றிருந்த போலீஸ்காரரின் மனைவி
” தம்பி கொஞ்சம் பொறுப்பா இன்னும் பந்தி முடியல, முடிஞ்சதும் கூப்பிடுறேன்” என்றாள்.
இதை கவனித்துக் கொண்டிருந்த பூசாரி நாட்டு நாட்டுதுரையை நோக்கி வேகமாக வந்தார். வெளியே வந்ததும் அவனின் பொடணியில் கை வைத்து வெளியே தள்ளினார். அவர் கையிலிருந்த சோற்று பருக்கை நாட்டுத்துரையின் பொடணியில் அப்பியது. உடனே அந்த அக்கா
” ஏன்ணே !! சின்னப்பயலே போய் அடிக்கிற”
” இல்லமா இவங்க சொன்னா கேக்க மாட்டாங்க! ரெண்டுபேரும் நம்பர் ஒன்னு பிராடு பயலுக, இப்படிச் செஞ்சாத்தான் அடங்கு வாங்க”
என பூசாரி சொன்னதும் அந்த அக்கா எங்களை ஒரு புழுவைப் போல பார்த்தாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் ஏதோ மலைவண்டு கொட்டியது போல இருந்தது. பிறகு நாட்டு துரையும் ,நானும் மீண்டும் அந்த பூவரச மரத்தடியில் நின்றோம். கடுப்பான நாட்டுத்துரை
” இந்த கிழட்டு பூசாரி சிக்கட்டும். ஒருநாள் இல்லனா ஒரு அடி கொடுக்கத் தான் போறேன்.”
என்றான். நான் அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போய் பார்க்கலாம் என நடந்தேன். அங்கே போனதும் இலையில் படையல் வைத்து இருந்தார்கள். கருப்புசாமியின் முன்னே தேங்காய், வாழைப்பழம் , இப்படி எல்லா ஐட்டமும் இருந்தது .இலையிலிருந்த சோறை ஒரு பிளாஸ்டிக் பையில் அள்ளி போட்டேன். பிறகு வாழைப் பழம்,தேங்காய்,கறி இப்படி எல்லாவற்றையும் அள்ளியாயிற்று.
இனிமேல் அவர்களிடம் போய் நிற்க வேண்டியது இல்லை. உடனே போய் சாப்பிடலாம் என எனக்கு தோன்றியது யாருக்கும் தெரியாமல் கோவிலின் பின்புறமாக வேகமாக ஓடினேன். அங்கே நாட்டு துரையை காணவில்லை . குப்பைத் தொட்டிகள் சத்தம் கேட்டது. அருகில் போய் பார்த்தால் உள்ளே கிடந்த எச்சை சோற்றை தின்று கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் கண்டுகொள்ளாமல் அவன் அப்படி செய்தது எனக்கு மேலும் வெறியேறியது. பளார் என அவனை அறைந்தேன்.
“த்தா எந்திரிடா ? ” என மிரட்டியதும் பயந்து எழுந்து என் பின்னே வந்தான்.
நான் கையில் இருந்த பையை தூக்கி எறிந்து விட்டு வேகமாக நடக்க அவனும் என்னை தொடர்ந்தான்.
மீண்டும் நாங்கள் ஆற்றுக்கு போனோம். அங்கே போய் கொஞ்ச நேரம் குளித்தோம். நாட்டுத்துரை எதுவும் என்னிடம் பேசவில்லை. பின்பு கொஞ்ச நேரத்தில் மீன்கள் பாதி செத்தும்,சாகாமலும் நீர்ப்பரப்பில் நீந்தியடி வந்தது.
” யாரோ மீன்பிடிக்க வெடி வைக்கிறார்கள்” என்றான் அவன்.
“டேய் அது வெடியில்லடா, மருந்த கலக்கி விடுவாங்கடா ”
மீன்கள் அரை உசுராய் நிந்தியது. நான் அவற்றை பிடிக்க முயன்ற போது கையிலிருந்து நழுவி ஓடியது.
” சரி,துண்டை எடு மீன பிடிப்போம்” என முடிவெடுத்து மீன்பிடிக்க ஆயத்தமானோம். சில பெரிய மீன்களும் சிக்கியது. பிறகு இருவரும் மேலே வந்து ஆற்றோரத்தில் தீ மூட்டி மூங்கில் குச்சியில் ஒவ்வொரு மீனாக சொருகி,எங்கள் டவுசரில் ஒட்டி இருந்த உப்பு, மிளகாயை தடவி காய்ந்த தென்னஞ் சோகைகளை வைத்து தீ மூட்டி மீனை சுட்டோம். நாட்டுதுரை மீனை சுவைத்து கொண்டே என்னை பார்த்தான். எனக்கு லேசாக சிரிக்க வேண்டும் போலிருந்தது .அதற்கு முன்னமே அவன் கையில் வைத்திருந்த வறுத்த மீன்களை பார்த்து குறும்புன்னகை செய்தான்.
பிறகு மறுபடியும் ஆற்றில் கொஞ்ச நேரம் குளித்து விட்டு ஜட்டியை தலையில் மாட்டி கொண்டு வயல் வரப்புகளின் ஊடே ஓடினோம். திடிரென நான் வழுக்கு வரப்புக்குள் விழுந்தேன். என் உடலில் ஆங்காங்கே சகதிகள். நாட்டுதுரை சிரித்து கொண்டே கை கொடுத்து தூக்கி விட்டான். என் தோலில் கைபோட்டு என்னை மெதுவாக கூட்டிப் போகும் அவன் சட்டையிலும் சகதிகள் ஒட்டியிருந்தது. ஆனால் அதை பற்றி அவன் முகம் அவ்வளவாய் அலட்டிக் கொள்வதாயில்லை.