எஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை

இரவில் பாதியில் மட்டும் விழிப்பு வந்துவிட கூடாது, விழித்தால் பின் மீதி உறக்கத்தை மறந்து விட வேண்டியதுதான், இப்போது அப்படி பாதியில் எழுந்தவன் உறக்கம் வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன், பெரிய கடன்களோ, கடமைகளோ இல்லை, அதை பற்றியெல்லாம் எண்ணி வருந்த கூடிய ஆளும் நானில்லை, ஆனாலும் மனம் எப்போதும் நிலைகொள்ளாமல் தவித்தபடிதான் இருக்கிறது, அதிகாலை பெரும்பாலும் எப்போதும் பயத்துடன்தான் எழுந்திருப்பேன், பிறகு சற்று நேரத்திற்கெல்லாம் அவை வெற்று பயங்கள் என்பது மனம் புரிந்துகொண்டு சமநிலை அடையும், நடுஇரவு விழிப்பில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை, தூக்கம் வராமல் மனம் எதையாவது தேடி துழாவும், பிறகு சற்றுநேரத்திற்கெல்லாம் அந்த துழாவலை போனில் நிகழ்த்துவேன், இணைய வெளியில் எதையாவது படிக்க தேடி கொண்டிருப்பேன், ஆனால் எந்த ஒன்றிலும் மனம் நுழையாமல் தேடல் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும், எதை தேடுகிறேன் என்று எண்ணியெல்லாம் தேடுவதில்லை, வெறுமனே மேய்வது, அவ்வளவுதான், அப்படி தேடிக்கொண்டிருக்கும் போதுதான் எதேச்சையாக நானும் ரவியும் ஊட்டியில் நின்று தற்புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தேன், என் தோளில் கைபோட்டு சிரித்து கொண்டிருந்தான், இன்றில்லை அவன்.

நான் அவன் எல்லாம் ஒரே வீதிதான், அவனை முதன் முதலில் பார்த்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது, குண்டு உடலுடன் வெண்மை நிறத்தில் ஒருவன்” வேணாம் மா” என்று சொல்லி போய் கொண்டிருந்தான், பின்னாடியே அவன் அம்மா உணவு தட்டுடன் “சாப்பிடு சாமி ” என்று கெஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள், நான் அப்போது தெருவில் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன், என் மற்ற நண்பர்களுடன், எல்லோரும் கிரிக்கெட்டை விட்டு அவனையே பார்த்து கொண்டிருந்தோம், ஏனெனில் அவன் எங்கள் வயதில் இருந்தான், ஆனால் அந்த அம்மா அவனை குட்டி பிள்ளையை சாப்பிட கெஞ்சும் அம்மா போல அவனிடம் நடந்து கொண்டிருந்தாள், வசதியான குடும்பம் போல என அப்போது அவர்களை எண்ணிக்கொண்டேன்.

சில நாட்களிலேயே எங்கள் கிரிக்கெட் குழுவில் வந்து இணைந்து கொண்டான், பந்து தொலையத்தொலைய புது பந்து அவன் காசிலேயே வாங்கி கொடுப்பான், அது இல்லாமல் எல்லோருக்கும் எப்போதும் தின்பண்டம் வாங்கி கொடுத்தான், விரைவிலேயே எங்கள் குழுவில் விசேஷ உரிமையாளன் ஆனான், முதலில் இறங்கி பேட்டிங் செய்ய வைத்தோம், பந்து வீச கொடுத்தோம், அவனும் உற்சாகமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டான், இப்போதும் அவனது கிரிக்கெட் ஷாட்கள் மனதில் அப்படியே இருக்கின்றன, அழகாக பந்தை கவர் ட்ரைவ் செய்வான், தூக்கி அடிக்கும் வெறியே இருக்காது, தட்டிவிட்டு அழகாக விளையாடுவான்.

பிறகு எங்கள் நண்பர்கள் குழுவில் முக்கியமானவன் ஆனான், அம்மா அப்பா அவன் என அவன் குடும்பத்தில் மூன்று பேர்தான், மலையாள குடும்பம், அவன் அப்பா அம்மா காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் உறவினர்கள் கூட உறவேதும் இல்லை, எப்போதும் அவன் எங்களோடையே சுற்றுவான், பணம் நிறைய வைத்திருப்பான், படத்திற்க்கெல்லாம் அவன் காசுதான் எப்போதும்.

எங்கள் பள்ளிக்காலங்களில்தான் கோவை தொடர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் மற்றும் அதையொட்டிய கலவரங்கள்எல்லாம் நிகழ்ந்தது, அதுவும் நாங்கள் இருந்த பகுதியில்தான் உச்சமாக நிகழ்ந்தது, அதன் துவக்கம் இப்போதும் அப்படியே ஞாபகம் இருக்கிறது, தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம், முதல் குண்டு வெடித்ததை கேட்டு ரவிதான் சொன்னான், எனக்கு அது சரியாக கேட்க வில்லை, பின்பு அடுத்தடுத்து குண்டு வெடித்த சத்தங்கள் ஒவ்வொன்றாக மெலிதாக கேட்டன, எங்கோ தூரத்தில் பட்டாசு வைக்கிறார்கள் என்று நாங்கள் எண்ணிக்கொண்டோம், சில நிமிடங்கள் கடந்து போயிருக்கும், தெருவில் பரபரப்பு உருவாகி வருவதை உணர்ந்தேன், ஆனாலும் அப்போதும் விளையாடி கொண்டுதான் இருந்தோம், அப்போது ஒருவர் காதில் கைவைத்தபடி அலறிக்கொண்டு தெருவிற்கு உள்ளே ஓடிவந்து கொண்டிருந்தார், காது பகுதியில் தோல் சிதறி ரத்தம் வந்து கொண்டிருந்தது , ரத்தம் சொட்ட சொட்ட உள்ளே ஓடிக்கொண்டிருந்தார், அவரை தொடர்ந்து நிறைய பேர் சத்ததுடன் உள்ளே உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தனர், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது அப்போதுதான் உணர தொடங்கினோம், வந்து கொண்டிருந்தவர்கள் எங்களை பார்த்து வீட்டுக்கு ஓடுங்கடா என்றனர், ரவி “என்னாச்சு ணா ” என்று வந்து கொண்டிருப்பவர்களின் ஒருவரிடம் கேட்டான், அவர் ” நிறைய இடங்களில் குண்டு வெடிச்சிருக்கு, கலவரம், வீட்டுக்கு ஓடுங்க ” என்று சொல்லி ஓட்டமாக போய் கொண்டிருந்தார், அதை கேட்க நாங்கள் தெரித்து வீட்டுக்கு ஓடினோம், அப்போது ஒருபக்க ரத்த காயங்களுடன் இருந்த ஒருவரை இருவர் தாங்கி பிடித்து கொண்டு கூட்டிக்கொண்டு சென்று கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது யோசிக்கும் போது உணர்கிறேன் , நாங்கள் எல்லாம் அந்நேரம் பயந்து கொண்டு கொண்டிருந்த போது ரவி முகத்தில் மட்டும் புதிதாக சூழலை கண்டுகொண்டிருந்த ஆர்வம் இருந்ததை, ஆம் அவன் எங்களில் கொஞ்சம் வித்யாசமானவன், கறிக்கடையில் கோழியை கொல்வதை, அது சத்தம் போட்டு அலறுவதை, ட்ரம்மிற்க்குள் இறக்கைகள் அடித்து அலறி கொண்டிருப்பதை உற்சாகமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான், முடிவில் “பாவம்டா” என்பான். எங்கள் குழுவே ஒருவரை மாறி ஒருவர் புறணி பேசி கொண்டிருப்போம், ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்போம், ரவி யாரை பற்றியும் புகார் சொன்னதே இல்லை, மற்றவர்களை பற்றி சொல்லும்போது சிரித்து கொண்டு கேட்டு கொண்டிருப்பான், அவ்வளவுதான்.

கோவை கலவரம் என்னுள் இரண்டு விளைவுகளை உருவாக்கி இருந்தது, ஒன்று பயம், இன்னொன்று மத துவேசம், பயத்தை உணர்ந்தது ஒரு நிகழ்வின் மூலம், வெடிகுண்டுகள் வெடித்து ஒரு மூன்று மாதம் போயிருக்கும் , அப்போது நிகழ்ந்த சம்பவம் அது, அப்போதும் ரவி கூடதான் இருந்தேன், ரவிக்கு ஊசி போட வேண்டி ஒரு கிளினிக்கிற்குள் இருந்தோம், சட்டென்று மக்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர், கடைகளின் ஷட்டர்கள் வேகமாக அடைத்து கொண்டிருந்தனர், நாங்கள் இருந்த கிளினிக் ஷட்டர் வேகமாக அடைக்கப்பட்டது, நாங்கள் உள்ளே இருந்தோம், மக்கள் ஓடியதும், ஷட்டர்கள் அடைக்கப்பட்ட வேகமும், உள்ளே மாட்டிக்கொண்ட நிலையும் என்னுள் கடுமையான பதட்டத்தை உருவாக்கி விட்டது, நடுங்கி கொண்டிருந்தேன், ரவிதான் “ஒன்னும் இல்லைடா வீட்டுக்கு போயிடலாம்” என்று தைரிய படுத்தினான், ஷட்டர் சாத்தியவனிடம் “நாங்க வெளிய போயிக்கறோம் “என்று சொன்னான், ஷட்டர் சாத்தியனின் முகத்திலும் பதட்டம் அப்பியிருந்தது, “கலவரம் போல இருக்கு” என்றான், கொஞ்ச நேரம் போனது, ஷட்டர் சாத்தியவர் கொஞ்சம் திறந்து வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்தார், வெளியே ஆட்கள் அற்று அமைதியாக இருந்தது, பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஏதோ புரளியால் மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள், எல்லோரும் கலவரம் என்று எண்ணிவிட்டனர் என்று தெரிந்தது, நாங்கள் வெளியே வந்த போது எல்லா கடைகளும் திறந்து கொண்டிருந்தார்கள், எல்லோரும் வேடிக்கையை கண்டது போல பேசி கொண்டிருந்தாலும் ஒவ்வொருவர் முகத்திலும் பயம் இருந்தது, சைக்கிள் எடுத்து கிளம்பினோம், ரவி ” எல்லோரும் எப்படி ஓடினாங்க இல்ல ” என்றான் சிரித்த படி, எனக்கு எப்போது வீட்டிற்கு போவோம் என்றிருந்தது. அந்த நிகழ்விற்கு பிறகு இப்போதும் ஒரு நால்வர் சேர்ந்து ஓடினால் அந்த பயம் மீண்டெழுவதை உணர்வேன், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும். ஆனால் ரவியை இவையெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை, எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் இயல்புதான் அவனில் இருந்தது.

பத்தாவது வரை இப்படியே ஒன்றாகத்தான் எப்போதும் சுற்றி கொண்டிருந்தோம், பிறகு அவனுக்கு படிப்பில் நாட்டமில்லாமலாகி அப்பாவின் ஹோட்டல் தொழிலில் இறங்கினான், பிறகு எங்கள் சந்திப்புகள் இரவு நேரங்கள் மற்றும் ஞாயிறு கிழமைகள் என்றானது. பெரும்பாலும் அவன் அதிகம் பேசமாட்டான், நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பான், அஜித் பக்தன், எங்களில் முதலில் பைக் எடுத்து அவன்தான், அவன் பைக்கில்தான் நாங்கள் எல்லாம் பைக் ஓட்ட கற்று கொண்டோம், வண்டியை கீழேபோட்டு எடுத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டான், சிரிப்பான், அவனது சோடாபுட்டி கண் கண்ணாடிக்குள் இருக்கும் கண்களுக்குள்ளும் அந்த சிரிப்பு தெரியும், இப்போதும் அவனை நினைக்கும் போது அந்த சிரிப்புதான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

நாங்கள் பெட் மேட்ச் விளையாடுவோம் ஞாயிறு கிழமைகளில், ஒருபக்கம் தூண் மாதிரி அவுட் ஆகாமல் நின்று கொண்டிருப்பான், காலேஜ் காலத்தில் கார்க் பந்தில் விளையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோம், எங்களிடம் பாதுகாப்பு கவசங்கள் எல்லாம் இருக்காது, அதிக பட்சம் இரண்டு கால் பேடுகள், ஆளுக்கு ஒரு காலில் கட்டி விளையாடுவோம், கிட்னி பேடு கூட இருக்காது, ஆனால் இறங்கி சாத்துவோம், பந்து வீசும்போது வெறியுடன் போடுவோம், நான் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளன், முதல் ஓவர் எனக்குதான், ஸ்டம்ப் அல்ல, பேட் பிடிப்பவனின் மண்டைதான் என் இலக்காக இருக்கும், விக்கெட் வீழ்த்துவதை விட பயமுறுவதைத்தான் அதிகம் விரும்புவேன், ரவி மட்டும்தான் என் பந்தை அனாசயமாக விளையாடுபவன், பந்தை வெறுமனே தட்டுவான், அது உருண்டுகொண்டே எல்லையை நோக்கி போய்க்கொண்டிருக்கும், அஜித் தவிர அவனுக்கு மற்றொரு பிரிய கடவுள் உண்டு, அது சச்சின். சச்சின் அவுட் ஆனால் கொஞ்ச நேரத்திற்கு துக்க வீட்டில் இருப்பவனை போல இருப்பான்.

அவனுக்கும் எனக்கும் மட்டுமான இன்னொரு நெருக்கம் என்பது யாருக்கும் தெரியாமல் பலான படம் போடும் தியேட்டருக்கு செல்வது, அப்போதும் அவன்தான் செலவு செய்வான், நாளைக்கு போவது என்றால் முந்திய இரவே பேசிவிடுவோம், நான் மதியமுடன் காலேஜ் விட்டு வந்து விடுவேன், சரியாக பூமார்க்கெட் பஸ் ஸ்டாப் வந்துவிடுவேன், அவன் வந்து அழைத்து சென்றுவிடுவான், நேராக இரண்டு ஸ்டாப் தள்ளி இருக்கும் சண்முகா தியேட்டர் சென்று விடுவோம், எப்படியும் 20 படங்கள் மேல் பார்த்திருப்போம், கில்மா என்ற படம்தான் எங்களுக்கு ஜாக்பாட் என்று சொல்லவேண்டும், அந்த படம் இடையே 5 பிட் ஓட்டினார்கள். இந்த அனுபவங்கள் வழியாகத்தான் சகிலா எனக்கு பிடித்த ஒருவர் ஆனார்கள், அலட்டலே அவர் உடலிலோ முகத்திலோ இருக்காது, முற்றிலும் அமைதியான பெண்மணி, உறவு காட்சியில் மட்டும் முகத்தில் உணர்ச்சிகள் காட்டுவார்கள், அதும் படம் எடுக்கும் ஆட்களுக்காகத்தான் அது இருக்கும், இப்போது வரை தோன்றினாலும் தேடி சகிலா படங்களை பார்ப்பேன், எப்போதாவது, சின்னபையன்களிடம் மட்டும் கொஞ்சம் தாராள அனுமதி அளிப்பாள், என் நோக்கில் அவள் தேவதை, பேரன்னை, பெருமுலையம்மை !

ஒருமுறை கொஞ்சம் தாமதாக தியேட்டருக்குள் சென்றோம், வாசலில் டிக்கெட் முடிந்துவிட்டது, ப்ளாக்கில் உண்டு வேண்டுமா என்று ஒருவன் வந்துக்கேட்டான், இலக்கை அடைய என்னவேண்டுமானாலும் செய்யும் மனநிலையில் இருவரும் இருந்ததால் அவன் சொன்ன விலைக்கு வாங்கி உள்ளே சென்றோம், உள்ளே போன பிறகுதான் தெரிந்தது கூட்டமே இல்லை, டிக்கெட் கவுண்டர் காத்தாடுகிறது என்று, திரும்பி வந்து அவனிடம் கேட்டால் அவன் எங்களை மிரட்டினான், பதிலுக்கு அவனிடம் பேசும்போதுதான் தெரிந்தது, அங்கு வேலை செய்யும் ஆட்கள், கேன்டீனில் இருப்பவர்கள் எல்லாம் ஒரே கும்பல் என்று, மேலும் பேசி அடி வாங்க மனமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தோம், அன்று எங்களுக்கு நேரம் சரியில்லை போல, காட்சிகளில் உச்சக்காட்சிக்கு சரியாக முந்திய காட்சியில் கட் செய்து அடுத்த காட்சிக்கு தாவினார்கள், இப்படியே நாலைந்து முறை போனது, கடைசிவரை அல்வா கொடுக்கும் காதலியை போல ஒன்றும் காட்டாமல் ஏமாற்றி விட்டார்கள், போதாத குறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு வயதான ஆள் என் தொடைக்கு கையை கொண்டுவந்து கொண்டே இருந்தான், இரண்டுமூன்றுமுறை சொல்லியும் அவன் கேட்காது அவனது அம்மாவை நல்ல வார்த்தையில் திட்டிய பிறகுதான் தள்ளிப்போய் அவன் உட்கார்ந்தான், ஆனால் அப்போதும் அவன் அந்த புன்சிரிப்பை கைவிட வில்லை, அவனைமாதிரி ஆட்களுக்கு எல்லாம் பெரும்பாலும் குடும்பம் இருக்காது, இருந்தாலும் அந்த குடும்பத்தில் அவன் ஒப்புக்குதான் இருப்பான், இது மாதிரி தியேட்டர்கள், பொது கழிப்பிடங்கள், பஸ் இருக்கைகள்தான் அவர்களது விருப்ப வாழிடம், நிறைய இப்படியான ஆட்களை பார்த்து விட்டேன்.

நண்பன் ரவியை பற்றி சொல்ல எண்ணி எங்கெங்கோ போய்விட்டேன், எங்கள் குழுமத்தில் அவனுக்குத்தான் முதலில் திருமணம் நிகழ்ந்தது, ஆர்ப்பாட்டமாக எல்லோர் கண்ணும் படும்படி நிகழ்ந்த திருமணம் அது, அவன் அம்மா அன்று வாய்கொள்ளாத சிரிப்புடன், மிக மகிழ்வாக மண்டபத்தில் எல்லோரையும் உபசரித்து, வரவேற்று கொண்டிருந்தாள், நண்பர்கள் எல்லாம் ஆட்டம் பாட்டம் என அமர்க்கள படுத்தினோம், நான் மூன்று பீர்கள் குடித்தேன், எல்லாம் அவன் மொய் பணம்தான், நான்காவது பீர்க்கு அவனிடம் செனறு நின்றபோது முறைத்து பணம் தர மறுத்து விட்டான், புதுமணப்பெண் என்னைப்பார்த்து பயந்தது ஞாபகம் வருகிறது, மிக நல்ல பெண், உண்மையிலேயே தெய்வம் அவனுக்கு தந்த பரிசு அவள், அவனை போன்றே மென்மையான பேசும் குணம், அதே அடக்கமான சிரிப்பு, கிட்டதட்ட அவனது வெண்மை நிறமே அவளும் கொண்டிருந்தாள், அவன் உயரம் கொண்டிருந்தாள், ஆனால் உடல் ஒல்லி, இவன் குண்டு, அந்த திருமணத்தில் இரத்த சிவப்பு பட்டு சீலை உடுத்தி இருந்தாள், அவள் நிறத்திற்கு சற்றும் உறுத்தாமல் மிக பொருத்தமாக இருந்தது, இன்னொரு வித்யாசம் இவன் வட்ட முகம் கொண்டவன், குண்டு கன்னங்கள், மீசை எப்போதும் இருக்காது, அவள் நீள முகம் கொண்டிருந்தாள், நெற்றி ஏறியிருந்தது, மூக்குத்தி அவளுக்கு பெரிய அழகை உருவாக்கி கொடுத்தது என்று தோன்றியது.

காலேஜ் முடிந்ததும் எனக்கு வேலை திருப்பூரில் அமைய மாதம் ஒரு முறை என கோவை வந்து போனேன், கோவைக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள தொலைவு 55கிலோ மீட்டர்தான், ஆனால் பாழாய்ப்போன திருப்பூர் வேலைநேர வாழ்க்கை என்பது 12 மணிநேரம், எல்லா கம்பெனிகளும் 12மணிநேரம் இயங்கும், திருப்பூரில் குடி அதிகம் இருப்பதற்கு, குடும்பங்கள் சிதைவதற்கு இந்த 12 மணிநேர வேலை நேரம் முக்கிய காரணம், வேலை முடிந்தால் தூங்க மட்டுமே தோன்றும், இருநாளைக்கு, சிலசமயம் மூன்று நாளைக்கு ஒருமுறை குளிப்பேன், வேலை பிரஷர் ஆளை கொள்ளும், ஞாயிறு அன்று தூங்க மட்டுமே தோன்றும், எனவே நான்கு வாரங்களுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவேன், வந்தது தெரிந்தால் ரவி வீட்டிற்கு வருவான், சேர்ந்து tea கடை போவோம், பிறகு நம்பர்கள் கூடி பேசுவோம், அவனுக்கு குழந்தை பிறப்பது தள்ளி போவது அவனது குடும்பத்திற்குள் நிரந்தரமான ஒரு துக்கத்தை கொடுத்துக்கொண்டிருந்தை அவன் பேச்சுக்களில் அப்போது உணர்ந்தேன், பிறகு அவனை சந்திக்கும் போதெல்லாம் அவனுக்கு துக்கம் அதிகமாவது தெரிந்தது, அவன் தந்தை உடல்நலம் சீர்கெட்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக இருந்தார், ஒருமுறை அவன் வீட்டிற்கே சென்று அவரை பார்த்தேன், என்னை யாரையோ பார்ப்பது போல பார்த்தார், என்னை மட்டுமல்ல அவனையும் கூட அப்படிதான் பார்த்தார், அணுகினார்.

பிறகு ஒரு அதிகாலை வேலையில் அவனிடம் இருந்து போன் வந்தது, அப்பா தவறி விட்டதாக, நான் என் ஓனர் வீட்டிற்கு சென்று 5000அட்வான்ஸ் வாங்கி வேகமாக போய் பஸ் பிடித்து கோவை வந்து அவன் கூடவே இருந்தேன், எனக்கு அப்போது உருவான அதிர்ச்சி அவன் அம்மாவை பார்த்தபோதுதான், ஆளே வேறொரு பெண்மணி போல இருந்தார்கள், அவரிடம் எப்போதும் இருந்த அந்த களையான முகம் காணாமல் போயிருந்தது, கழுத்தில் நகைகளே காணோம், அவன் மனைவி கழுத்தில் கூட ஒன்றுமில்லாததை கவனித்தேன், அப்பா அடக்கம் முடிந்து இரண்டு நாள் நான் மற்றும் நண்பர்கள் அவன் கூடவே இருந்தோம், ஆஸ்பத்திரி செலவு அவனை கடனாளிஆக்கி இருந்தது, பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவனை சமாதானப்படுத்தி திருப்பூர் கிளம்பினேன், ரவி பற்றி ஞாபகம் வரும்போதெல்லாம் அவனை அழைத்து பேசுவேன். பிறகு ஒரு மாதம் கூட ஆகி இருந்திருக்காது, நடு இரவில் அழைத்தேன், அம்மா ஆஸ்பத்திரியில் என்றான், அடித்துபிடித்து கிளம்பி போய் பார்த்தேன், அவன் அம்மா பிழைப்பது கஷ்டம் என்றார்கள், உள்ளே போய் பார்த்தேன், கண்கள் மூடியபடி படுத்திருந்தார்கள், வெறும் எலும்பின் மீது தோல் போர்த்தியது போல உடல் இருந்தது, கண்கள் எல்லாம் உள்ளே போயிருந்தது, மூச்சு விடுவது உடல் அசைவில் தெரிந்தது, அவனை முதலில் பார்த்தபோதுதான் அவன் அம்மாவையும் முதலில் பார்த்தேன், அவன் மீது சற்று பொறாமையாக அப்போது தோன்றியது, “இவ்வளவு பாசமான அம்மாவா” என்று. மாலை 5மணி இருக்கும், இறந்து விட்டார்கள் என்று அறிவித்தார்கள், ரவி துக்கம் கொண்டிருந்தானே தவிர அழவில்லை, அது கொஞ்சம் ஆச்சிரியம் அளித்தது, ஆனால் உடலை குழியில் இறக்கும் போது சட்டெனெ வெடித்து அழ தொடங்கினான், நாங்கள் அவனை பிடித்து கொண்டோம், நீண்ட நேரம் நிற்காமல் அழுதான், நாங்கள் மாறிமாறி அவனை கட்டிக்கொண்டு சமாதானம் செய்வித்தோம், பிறகு அவனை தாங்கி பிடித்தவாறு சடங்குகளை செய்யவைத்தோம், இரவு அவனோடு உறங்கினேன், காலையில் எழுந்தபோது அவன் சன்னலை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருந்ததை பார்த்தேன், “அம்மா நம்ம மனசுல எப்பவும் இருப்பா ” என்று சொன்னேன், அவனில் சலனம் எதுவும் இல்லை, சிறிது நேரம் போக அவன் கண்களில் இருந்து நீர் கொட்டுவது தெரிந்தது, அருகே போய் அமர்ந்துகொண்டு ” அம்மா நம்மளை விட்டு போக மாட்டாங்க ” என்றேன். அவன் பதிலேதும் சொல்ல வில்லை. பிறகு இரண்டுநாள் அவன் கூடவே இருந்த பிறகு திருப்பூர் கிளம்பி சென்றேன்,

அவனிடம் தினமும் பேசிக்கொண்டிருந்தேன், பிறகு அது குறைந்து வேலை அழுத்தம் என்னை இழுத்து கொண்டது, கோவை வரும்பொழுது போய் பார்ப்பேன், அடிக்கடி விடுமுறை காரணமாக அவன் ஹோட்டல் தொழில் பாதிக்க பட்டிருந்தது, “வீட்டை விற்றால்தான் கடனை எல்லாம் அடைக்க முடியும் ” என்றான், ” எதையும் பொறுமையா முடிவெடு “என்று சொன்னேன், பிறகு சிறுவயது ஞாபகங்களை பேசி கொண்டிருந்தோம், அவன் ” நான் பேசாம தொடர்ந்து படிச்சுருக்கலாம்டா, எனக்கு இந்த ஹோட்டல் விட்டா வேற எதுவுமே தெரியாது ” என்று வருந்தினான், நான் என் வேலை பற்றி புலம்பினேன், ஆனாலும் தனியாக பனியன் கம்பெனி வைக்கும் என் ஆசையை சொன்னேன், அவன் ” அப்ப என்னை வேலைக்கு சேர்த்திக்குவியா, எனக்கு இந்த ஹோட்டல் தொழில் வேணாம்டா ” என்றான்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஹோட்டலை மூடி விட்டான், வீடும் விற்றுவிட்டான், கடன் பெரும்பாலும் அடைத்து விட்டதாகவும் மீதி பணம்தில் போகியத்தில் ஒரு வீடு பிடித்து அதில் இருப்பதாகவும் போனில் சொன்னான். விடுமுறையில் அவன் வீட்டுக்கு போனேன், ஆச்சிரியமாக பிரகாசமாக இருந்தான், அவன் மனைவியும் உற்சாகமாக இருந்தாள், குழந்தை பெறுவதற்கு மருத்துவம் பார்த்து கொண்டிருப்பதாக சொன்னான், மதியம் அவன் வீட்டில்தான் சாப்பிட்டேன், அவள் மனைவி “அண்ணா சாப்பிடுங்கண்ணா” என்று சொல்லி மூன்று ஆள் அளவு சாப்பாட்டை என்னை உண்ண வைத்து விட்டாள் , அவனும் நன்றாக சாப்பிட்டான், அங்கேயே மத்திய தூக்கம் போட்டு என் வீட்டிற்கு இரவுதான் கிளம்பினேன். பிறகு மூன்று நான்கு மாதங்கள் வேலை அதிகம் காரணமாக கோவை வரவில்லை, ஆனாலும் ரவியிடம் அடிக்கடி பேசுவேன், என் திருப்பூர் நண்பர்கள் எல்லோருக்கும் ரவியை தெரியும், என் எந்த ஒரு பேச்சிலும் ரவியின் பெயர் வராமல் இருக்காது.

மதியம் இருக்கும், என் அம்மா கூப்பிட்டாள், “உடனே கிளம்பி வா’ என்றாள், ஏன் என்றதற்கு ” ரவிக்கு ஆக்சிடன்ட், பொன்னும் கூட இருந்திருக்கா, இரண்டுபேரும் ஆஸ்பத்திரில, கிளம்பி வா ” என்றாள், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து விட்டேன், நான் எப்போதும் கும்பிடும் சின்ன மாரியாத்தாவிடம் “இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆக கூடாது “என்று வேண்டி கொண்டேன், பிறகு வரிசையாக நண்பர்கள் கூப்பிட்ட படி இருந்தார்கள், ஓனர் கார் ஏற்பாடு செய்துகொடுத்து அனுப்பினார், ஆபத்திரி போவதற்குள் இருவரும் இறந்த செய்தி வந்து விட்டது, பைக் காரில் மோதியதில் இருவருக்கும் பலத்த அடி, இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வில்லை.

போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு உடலை கொடுத்தார்கள், பெண்ணின் உறவினர்கள் நிறையபேர் வந்திருந்தனர், ரவி சார்பாக நண்பர்கள் நாங்கள் 50-60 இருந்தோம், நான் முன்னிறு சடங்குகள் செய்ய, அவனது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்தோம்.

ஒருவாரம் தொடர்ந்து வேலைக்கு போகாமல் குடித்து கொண்டிருந்தேன், என்நேரமும், அவனது திடீர் இறப்பு கொடுத்த அதிர்ச்சி, அது கடந்து இப்போதும் இந்த இரவும் தூங்க விடாமல் செய்யும் எண்ணம் என்பது, அவன், அவன் குடும்பம், மனைவி, அம்மா, தந்தை என்பது இப்போது என் ஞாபத்தில் மட்டும் இருப்பவர்கள், ஒரு குடும்பம் முற்றிலும் மண்ணில் இல்லாமல் மறைந்து விட்டது, நான் மற்றும் என் மற்ற நண்பர்கள் குடும்பம் சகிதமாக வாழ்த்துக்கொண்டிருக்க ஒரு குடும்பம் மட்டும் சற்றென்று இல்லாமல் ஆவதன் பின்னிருக்கும் மர்மம் இப்போதும் அப்படியே என்னில் புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக இருக்கிறது, விதி என்றும் கடவுளின் எண்ணம் என்றும் எண்ணிக்கொண்டால் கடந்து விட முடியும் என்று நினைக்கிறேன். அல்லது நம்மை மீறிய விஷயங்களும் உண்டு என்பதை இதன் வழியாகவே வலுவாக உணர்ந்தேன். நான் மற்றும் என் நண்பர்கள் ஞாபகத்தில் அவர்கள் இப்போது வாழ்கிறார்கள், இந்த ஞாபகம் மட்டும்தான் மீதி எஞ்சி நிற்கிறது, நாங்கள் போன பிறகு அதுவும் இல்லாமலாகி முற்றிலும் அவன் குடும்பம் வாழ்ந்ததே மறைந்து அழிந்து விடும் என்று தோன்றுகிறது.

என்னஒன்று எந்த குண்டு வெண்சிறுவர்களை பார்த்தாலும் ரவியை பார்ப்பதை போல தோன்றும், அதும் அந்த சிறுவர்களிடம் விளையாட்டு இயல்பும் சிரிப்பும் மலர்ந்த முகமும் இருந்தால் அது ரவியேதான், ரவியை கண்ட குதூகலத்துடன் அச்சிறுவர்களை அணுகுவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.