நகரின் மையத்தில் இப்படி ஒரு காடா? இல்லை பொறுங்கள்! காட்டில் தான் நகரம் இருக்கிறது. பெரிய கல்தூண்கள் கொண்டு எழுப்பப்பட்ட தேவாலயம். எதிரேயே பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி. சுற்றிலும் சோலைகள், அங்கே ஒரு அசோக மரம், ஒன்றல்ல பல. அதன் மூடிலே கல் பெஞ்சில் ஏசுவடியான் அமர்ந்திருக்க, அருகிலே திரேசம்மாள் மண்டியிட்டு ஜெபித்தபடி இருந்தாள். ‘சர்வவல்லமை படைத்த பரமமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே… ‘ தேவாலய ஒலிபெருக்கி சப்தங்களை பரப்பிக்கொண்டிருந்தது. பின் பல குரல்கள் ஒரே அலைவரிசையில் ‘ஆஆஆ ஆ ஆமேமேமேமேன்’ என்றது. ‘திரேசா, சம்மணம் போடு. ஆண்டவரு மன்னிப்பாரு. ராவுல காலு உலையினு என்கிட்டே சொல்லப்பிடாது’. திரேஸ் எதுவும் கூறாமல் கண்களால் ஏசுவடியானை நோக்கியபடி, ஒரு கையால் மண்ணை ஊன்றி கால்களை மடக்கி சிறுபிள்ளை போல அமர்ந்தாள். ‘கானா ஊரில், ஒரு கல்யாண வீட்டிலே, நம் தேவகுமாரன்…’ பாஸ்டர் ஞானசேகரன் தேவாலயத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
“நம்ம வீட்டுலயும் அற்புதம் நடந்துச்சு தெரியுமாட்டி திரேசி. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ” ஏசுவடியான் கொப்பளித்த சிரிப்பை மீண்டும் உள்ளே தள்ளியபடி கூறினார். நக்கலான நாக்குமடிப்பு அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது. சுருக்கங்கள் சிவந்தது. நீலகண்டப் பிள்ளை தேவசகாயம் ஆகாவிட்டால், ஏசுவடியான் உண்டா? இல்லை பக்கத்தில் சப்பணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் திரேசம்மாள் மணமுடித்து, வாழ்ந்து அனுபவித்து, கர்த்தரின் பாதத்தில் இந்த கல்கோயில் ஆலயத்தில் அசோகமரத்தின் காற்றைத்தான் சுவீகரிக்க முடியுமா? எப்படியோ, இதென்ன புராணக்கதையா? ஏசுவடியான் திரேசம்மாள் கதை.
குமாரகோயில் சமீபம், மேலாங்கோடு போகும் வழி. அக்கா தங்கச்சிமாரின் கோயில் இங்கேதான். கருக்கள் நேரம் அங்கே போக ஆண்கள் உண்டா? போத்தி செல்கிறாறே, அவருக்கு குல மாடன் துணையுண்டு. நீலகண்டன் போவான், சிறுவனாய் மாங்காய் எடுக்க போவதுண்டு. மாங்காய் எடுக்க போய், சிலச் சமயம் புளியம்பழமும் கைநிறைத்து வருவதுண்டு. விசாலாட்சியம்மாள் கஞ்சிக்கு, மாங்காயை உப்பில் ஊறப்போட்ட துண்டையும், புளியை கரைத்து கொஞ்சம் காய்ந்த வத்தலும், கருவேப்பிலை, கடுகுயிட்டு தாளித்து புளித்தண்ணியுமாய் கொடுப்பாள். வயிறுக்கு கஞ்சி போதும், கஞ்சிக்கு அரிசி வேண்டும். எப்பேர்ப்பட்ட குடும்பம், குமாரக்கோயிலின் முன்வாசல் விரியும் நேர்ச் சாலையில் கிணத்தடி கொண்ட வீடு நீலகண்டனின் அய்யா ஆறுமுகம் பிள்ளையின் வீடு. ஆறுமுகம், கட்டியவள் விசாலாட்சியம்மாள், மகன் நீலகண்டப்பிள்ளை, மொத்தமாய் மூவர். கூடவே உடன்பிறந்தார் என மொத்தக்குடும்பமாய் தலைதலைமுறையாய் நெற்புரை நிறையும் மூட்டைகளோடு, வீட்டின் பின்னே வெண்ணிப்பறை முட்ட தேங்காயையும் கொண்ட வீடு. சொத்து சுகம் இருக்க ஒருத்தி பற்றாமல், எங்கெல்லாமோ குடித்து சல்லாபித்து நோயோடு வந்தான் ஆறுமுகம். ஆறுமுகம் உடன்பிறந்தார் ஆறு, நான்கு ஆம்பிள்ளையாள், ரெண்டு பொம்பளையாள். நோயோடு வந்தவனின் சொத்து ஐந்தாய் பிரிய, மேலாங்கோடு பிரியும் சந்திப்பில் ஓரமாய் கால்சென்ட் பங்கில் ஓலைக்குடிசை உதயம் ஆயிச்சு. வந்தவர்கள் ஆறுமாதம் தாண்டும் முன்னே மூவரின் எண்ணிக்கை ரெண்டாய் ஆனது. ஆறுமுகம் பரலோகப்பதவி அடைந்தான். பின்னே கஞ்சிக்கு அரிசி, தம்பிமாரின் கருணையால் அவ்வப்போது வரும். பண்டிகைக்கு காய்கறி கொஞ்சம் கருணை மீறி கிடைக்கும். யார் கை தடுக்கிறதோ.
நீலகண்டன் அங்குள்ள பள்ளிக்கு பின்னால் புளியம்பழம் பறிக்க போய், நல்லவேளை கீழே விழுந்தான். கீழே விழுவது நல்லவேளையா? அன்னம்மாள் கண்ணில் அவன் பட, வாஞ்சையோடு தலையை தடவிக்கொடுத்து அவன் கதையை கேட்டாள். பெரிய கதையா? எல்லோரும் அறிந்த குடிகார மகனின் கதை. ‘படிக்க வெய்க்கேன் படிப்பியாடா’, ‘பள்ளிக்கூடம் போலாமா? அப்டினா படிப்பேன்’. விசாலாட்சியும் சரியென்றாள். படித்தான், நீலகண்டன் தேவசகாயம் ஆனான். கிறிஸ்துவன் ஆனான், யார் சொல்லியும் அல்ல. சித்தப்பா ஒன்றுக்கு நான்காய் இருந்தும், கால்வயிறு மாத்திரமே நிறையும், படிப்பும் ஆகாரமும் கிடைக்க, கூடவே மெசியாவின் கதையும், பழைய ஏற்பாடும் படிக்க, அவன் தேவசகாயம் ஆனான். கிடைத்த கணக்காளர் வேலையில் உடும்புப்பிடி. அற்புதம்மாள் அவனோடு படித்தவள். அம்மையின், அய்யாவின் பெயர் தெரியாதவள். சர்வம் சந்தோசம், கல்யாணம். ஏசுவடியான் பிறந்தான், ஒரே மகன். சகாயம் சொல்வார் ‘நீ யேசுக்க மவன்லா. அதானாக்கும் உனக்கு ஏசுவடியான்னு பேரு’.
‘தேவனாலே கூடாத காரியம் எதுவுமில்லை’
ஏசுவடியான் எதிலும் தனி, படிப்பிலும் முன்னே, விளையாட்டிலும் முன்னே, கூட்டுக்காரன் சொல்லுவான் அவனிடம் ‘நீ வலிய காரியமாக்கும். ஊரெல்லாம் சுத்தி, மாங்கா களவாண்டாலும். ராவு முழிச்சு படிக்க’. ரவி வாத்தியார் சிலநேரம் சொல்வதுண்டு ‘கலப்புக்கு பிறந்த பிள்ளைக்கு விஷேஷ மூளைலா. விளைச்சல் அதிகம்’. இது பாராட்டா, வசவா, ஏசுவடியானுக்கு என்ன தெரியும். வளர்ந்த பிராயத்தில் தெரிந்தது ரவி வாத்தியாரின் வார்த்தைகள் நளியென்று. அவனும் வாத்தியார் ஆனான், குமாரக்கோயில் ஆறுமுகம் பிள்ளையின் வழி, புத்தளம் தோப்பு வீட்டில் விஸ்தாரித்தது. வந்த குடும்பம் ஆறுமுகம் எனும் பேரோடு நின்றது. ஏசுவடியான் கைகளில் விவிலியம் ஏந்தாத இரவில்லை. அப்பாவின் முன்னே காலை, மாலை ஜெபம்.
‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’.
இதற்கிடையே எதிர்த்த வீட்டு சுதாகரனின் மகள் திரேசியின் குட்டிக்கோரா பவுடர் வாசம், அத்தோடு அவளின் வியர்வை மணம் அவனை அலைக்கழித்தது. ‘என்ன ஐசுவரியம் நிறைஞ்ச முகம். அருளு உண்டு அவள கட்டினா. சிலப்பம் அவள பாக்கையில நிலவு காலைல வந்துட்டோனு தோணும்.’ அவனின் கவிதை இரவுகள், கூட்டுக்காரனின் கதறல் புத்தளம் தோப்பு தாண்டி மணக்குடி கடலில் கலக்கும். இதெல்லாம் சுதாகரன் அறியாமல் போகுமா? ஈத்தாமொழி தேங்காய் வியாபாரி. வாத்தியார் வீட்டு சம்பந்தம். என்ன கேள்வி கிடக்கிறது? ஆகட்டும் பார்க்கலாம் என்பது போல நடந்தது புத்தளம் திருச்சபையில் பங்குத்தந்தை லாசரஸ் தலைமையில் ‘இம்மையிலும் மறுமையிலும், சுகத்திலும் துக்கத்திலும், உனக்கு நானாய், எனக்கு நீயாய் இருவருக்கும் சம்மதம்’ சுபமங்களம்.
ஏசுவடியானுக்கு சிறுவயதில் அப்பாவை கண்டாலே நடுக்கம், கருக்கள் நேரம் கையில் புத்தகம் இல்லையேல், அப்பனின் கையில் பிரம்பிருக்கும். இதற்காகவே கோட்டார் வீதி போய் பிரம்பு வாங்கிவந்தார். அதன் விலை இரண்டு ருபாய், போய் வரச்செலவு நான்கு ருபாய். புளியம்பழம் பறித்த கையில் புத்தகங்கள் கொடுக்க இவனுக்கு அன்னம்மாள் தேவையில்லை. அப்பன் இருக்கிறானே! கூடவே ஞாயிறு இறைச்சியும். வாரம் மூன்று நாள் நெய்மீனோ, சாளையோ, நெத்திலியோ, பாறத்துண்டமோ குழம்பில் கொதிக்கும். இப்படியிருக்க படிக்க வேண்டாமா? பிரம்படியின் வினையல்லவோ இவனும் பிரம்பை கையில் எடுத்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
கல்யாணம் நடக்கும், அத்துணை கனவுகளும் கிறக்கங்களும் பெண்ணுடலை முதல் தடவை கண்டதும், மனம் காமவிடுதலை அடையும். பின் காணக்காண லயிப்பும் குறையும், இயக்கமும் இயந்திரம் போல வாரம் ஒருமுறை முறைவைத்து நடந்தாக வேண்டும். ஏனோ! காதல் கசக்கும். வாழ்ந்தாக வேண்டுமே. எங்கும், இன்னார் முன்னிலையில் ஆண்டவரையும் சேர்த்துதான், நடந்த திருமணம் வாழும் போது கேட்பார் நாதியில்லை. ஏசுவடியான், திரேசி அப்படியில்லை. குட்டிக்கோரா மணம் புத்தளம் தோப்பு வீடு நிரம்பும். ஏசுவடியான் தெங்கின் மூடில் இருந்தபடி நோக்கிய பார்வையெல்லாம் அறியாதவளா திரேசம்மாள். பெண்டிருக்கே உள்ள வெட்கம் ததும்பி அவளும் கண்டிருக்காளே, எதிர்த்த வீட்டு வாத்தியாரை. புத்தளம் திருச்சபையில் லாசரஸிற்கு விருப்பமானவன். கையில் மைக் பிடித்து பாடும் பாடல்கள், தமிழ் வாத்தியார் அவனாய் வரியெழுதி பாடுவான்.
‘கொல்கொதா மலையும் அழுதிருக்கும்,
எத்தனையோ சிலுவை
ஏந்திய மார்பு இது.
உன் இரத்தம் பட்டதும்,
என் பாவம் கரைந்தது’.
குருத்தோலை நாளில் லாசரஸ் பின்னே இவனே செல்வான். எங்கே நடக்கிறேனோ, அங்கெல்லாம் முன்னே உன் பாதச்சுவடு வேண்டும். திரேசம்மாள் அப்படித்தான். அவன் ‘என் பவுனே’ என்பான், பதிலுக்கு அவள் ‘நீரு என் வைரம்’ என்பாள். புத்தளம் ஊரில் எங்கு கல்யாணமோ, லாசரஸ் அடுத்து, பத்திரிகை வாத்தியார் வீட்டுக்குத்தான். அவரும் சும்மா இல்லை, கொடுப்பதில் கர்ணனின் பக்கத்து வீட்டுக்காரர். புத்தளம், தெங்கம்புதூர் யாராய் இருந்தால் என்ன, படிப்பிற்கு இல்லை என சொல்லாதவர். பின்னே, அன்னம்மாள் படிப்பை கொடுத்த நீலகண்டன் (எ) தேவசகாயத்தின் புதல்வனாயிற்றே.
பறக்கை பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார் பஜாஜ் செட்டாக்கில் செல்வார். தமிழ் வகுப்பில் பிடித்தும், பிடிக்காதுதுமாய் சரிபாதி கூட்டம் இவரின் குரலில், பாடத்திட்டத்தில் உண்டோ இல்லையோ இப்பாடலை கடக்காமல் படிப்பை முடித்திருக்க முடியுமா? “கம்பராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில், மாரீசன் அழகிய புள்ளிமானா மாறி சீதைய அழகில மயக்கி, ராமனை ‘சாமி, இம்மானை மனையாளுக்கு பிடித்து தர கேட்க, ராமன் அதை பிடிக்க போறான், மாரீசன் கள்ளன், அவன் அய்யனின் குரலில் ‘அய்யோ சீதை’ எனக்கூக்குரலிட” இங்கே அய்யோ என ஏசுவடியான் அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து ராமனாய் போல அவனும் மாற, பின் வழக்கமான பாடலோடு சீதையின் துயரத்திற்கு வருவான். “சீதை பாடுகிறாள்
“பிடித்து நல்கு, இவ் உழை”
என, பேதையேன்
முடித்தனென், முதல் வாழ்வு’
என, மொய் அழல்
கொடிப் படிந்தது என, நெடுங்
கோள் அரா
இடிக்கு உடைந்தது என,
புரண்டு ஏங்கினாள். இங்க உழைனா என்ன, உழை னா மான், அழகான மானை பிடித்து நல்கு, எனக்காக நீரே பிடிச்சு தாரும் என் சுவாமி. இப்படி சொல்லிட்டேனே, எனக்கு புத்தியில்லயா, மண்டைக்கு வழியில்லாத பொம்பளையாய்ட்டேனே. முடிஞ்சிட்டு என் வாழ்க்கை. மொய் அழல், அழல்னா நெருப்பு. கொடி படிந்தது. நெருப்பு கொடிய பிடிச்சி எரிச்சது போல, நெடுங்கோள் அரா. அரானா பாம்பு. இப்போ தெரியாடே, நாம அரணைணு சொல்லுகேமே. அரா எங்க இருந்து வந்திருக்கு. அரா பாம்பு, அரணை பாம்பு மாறி இருக்க இன்னொன்னு. கம்பன பாத்தியிலா மக்ளே. எப்படி பாடுகான்.காட்டுக்கு நடுவுல நிக்கிற சீத கொடி, பாம்பு, நெருப்பு அதான் காட்டுத்தீ, எல்லாமே காட்டுல உள்ளதே பாட்டுல வருகு. உவமைக்கு எங்கேயுமே போகல. காட்டுக்குள்ள சொல்ல தேடுகான். சொல்லு எத்தனையோ சொல்லு, நாம பேசுறது கொஞ்சம். கம்பன் அத்தனை சொல்ல உபயோகப்படுத்துகான். மக்ளே, நம்ம கன்யாரி தமிழு. கண்டவன் சொல்லுகானு, பேசாம போய்டாதீங்க. பேசுனாதான் மொழி நிக்கும். புரிஞ்சா, நீங்க எல்லாரும் படிக்கிற பிள்ளைகளு நம்ம மொழிய பேசணும். கம்பன், யாரு. அவன படிங்க. நானும் இன்னைக்கும் வீட்டுல போய் புத்தகத்த எடுக்கேன். மறந்திர கூடாதுலா. பைபிளும் ஒன்னு, கம்பராமாயணமும் ஒன்னு. சொல்லணும்.” இங்கே எதை மீறியோ வெப்ராளப்படுவான். பின் நிதானமாய் “உங்கள்ள தமிழ் மேலே படிக்கணும் நினைப்பு உள்ளவன் கம்பன கட்டாயம் படிக்கணும். கொடுங்கோள், கோளு அப்படினா என்ன, மனசுலாச்சா. உருண்டையா தடி கணக்கா. கொடுன்னு ஒரு சொல்லு இங்கே உபயோகப் படுத்திருக்கான். கொடுன்னா கொடுமையான தடி கணக்கா பாம்பு. மலைபாம்புன்னு நினக்கேன். இடிக்கு உடைந்தது, நல்ல சத்தமா கேக்கிற இடிக்கு பயந்து கட்ட மாறி கிடக்காம். அதே மாறி புரண்டு புரண்டு வருத்தபடுகா” சொல்லி முடிக்கும் போது கம்பனாய் நிற்பான். ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் வியந்து நிற்பார்கள். அப்படி ஒரு விளக்கம் கொடுப்பான். பத்தாம் வகுப்பில் முதல் பெஞ்சில் இருக்கும் ஜோசப், கம்பனில் மயங்கி புத்தளத்திற்கு சைக்கிளில் செல்வான் ஏசுவடியான் வீட்டிற்கு கம்பராமாயணம் கேட்க. கம்பனின் வரியா, இல்லை ஏசுவடியானின் விளக்கமா.அவனே அறிவான் உண்மையை.
முத்தாய் இரண்டு ஆண்பிள்ளைகள். ஜெபநேசன், மரியநேசன். கான்வென்டில் படிப்பு, படிப்பிற்கும் குறைவில்லை. ஜோசப் வருவதில் அவர் பிள்ளைகளுக்கு மனக்குறை உண்டு “அப்பா, நல்ல கொஞ்சுகீங்க அவன. எங்கள படிச்சியா, இல்லையானு மட்டும் கேக்கீங்க”. “மக்கா உங்களுக்குத்தான் எல்லாம், கம்பன பாடினா, லயிக்கணும். ரெண்டு பேரும் கேக்க மாட்டுக்கீங்க. நாள் முழுக்க வீடியோ கேம் தான்”. “போப்பா, கம்பன் கிம்பண்ணு. நீங்க அவனையே கொஞ்சுங்க”. “ஏண்டே உங்கள நான் கொஞ்சலையா, நீங்க கேட்டீங்க, வீடியோ கேம் வீட்டுல இருக்கு. அவனுக்கு கம்பன பிடிச்சிருக்கு. நல்ல பய. நல்லா வருவான்” என்றார் மக்கமாரை தூக்கியபடி ஏசுவடியான்.
மூத்தவன் இன்ஜினியர் ஆனான், இளையவன் அவன் பங்கிற்கு டாக்டர். மக்கமாரின் கல்யாணம் புத்தளம் தோப்பு வீடு முழுக்க கோலாகலம். பந்தலும், மின்விளக்கு அலங்காரமும், மனம் நிறைந்த பந்தியுமாய், வந்தவரின், வாழ்த்தியவரின் மனதில் என்றுமுண்டு. இரண்டு மருமகளும் காரோடு வந்தார்கள். பவுசும் அதிகம், மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை, மணாளனை மயக்குவதில். மயங்கினாள், ஆகவே மயக்குகிறாள். பெயரனும், பெயர்த்தியும் எடுத்தாச்சு. திரேஸ், ஏசுவடியான் உறங்கவும் சொல்ல ஆரம்பிப்பாள் “அத்தைனு மரியாதைய கேக்கனா. வயசுக்கு கொடுக்கணும். டாக்டரும், இன்ஜினியரும் பேசுகானுகளா. ஏங்க நீங்க எதுக்கு. உங்கள மதிக்காளா”. “எட்டி நாம அப்பனுக்கும், அம்மைக்கும் வயசு காலத்துலயும் பயந்தோம். செல்லம் கொடுத்து வளத்தோம். எங்க அப்பா குரலுக்கு நா நடுங்குவேன். இப்போ உள்ள பிள்ளைகளுக்கு வேல அதிகம். கோபமும் அதிகம். நாம பிராயத்துல பண்ணாதுதா. அவனுக என் குரலுக்கு பயப்படுகானுக. அவனுக மரியாதை போதாதா. கிடட்டி சும்மா. என் பவுனு. கோவத்துல கூட கண்ணம் சிவக்கே. வயசு ஆயி எனக்கு பல்லு அங்கயிங்க ஆடுகு. நீ குமரு மாரில இருக்க. அத்தை என்ன இந்த வயசுல நம்மல விட அழகா இருக்கேன்னு புகைச்சலா இருக்கும்” என்றபடி சிரித்தார். திரேசுக்கு தெரியும் அவரின் மனக்குறை இருந்தும் தன்னை சமாதானப்படுத்தும் ஏசுவடியானின் காலை மெதுவாய் பிடித்துக்கொடுத்தாள் “இப்போ காலு உளைச்சலு இருக்கா”. “அதுபாட்டுக்கு காலுல மட்டும் இருக்கு, நல்லவேளை மேலே ஏறி முதுகு, கழுத்துனு வரல” மீண்டும் அதே சிரிப்பு. இப்போது திரேசின் முகத்திலும்.
கிடைக்கும் பென்சன் பணத்திற்கு குறைவில்லை, நேரத்திற்கு தேவாலயம். பெயரன், பெயர்த்தியோடு கொஞ்சம் விளையாட்டு. அப்புறம் பைபிள், சிலநேரம் கம்பராமாயணம். மீதிநேரம் எல்லாமுமே மொத்தமாய் திரேசம்மாள் ‘என் பவுனு திரேஸ்’. ஜோசப் எப்போதாவது இவ்வழியே வந்தால் வாத்தியாரை காணமால் போன நாளில்லை . வந்தால் கம்பனின் மணம் புத்தளத்தில் கூடி வீசும். காலம் நகரும், அதானே அதன் வேலை. பென்சன் பணம் மாத்திரம் போதவில்லை, நேரம் நிறைய இருக்கிறது, வீட்டிலேயே இருப்பதால், அடுத்தவனின் கஷ்டமும் இந்த கிழவனின் கண்களில் படுகிறதே. மக்கமார் கொடுப்பது கொஞ்சம்தான், சாப்பாட்டிற்கு குறைவில்லை. சொத்து எல்லாம் அவரவர் பெயரிலே பதிச்சாச்சு, அவரவர் பாடு. புத்தளம் தாண்டியும் மணக்குடி போகும் வழியில் மணக்காவிளையிலும் தோப்பும், வீடும் உண்டு. புத்தளம் திருச்சபையில் முதல் குடும்பம், சொத்துள்ளவன் ஆள்கிறான். இதெல்லாம் இருந்தும் பணமும், தங்கமும், இன்னும் இன்னும் என்கிறதே. பாவம் ஏசுவடியான் செல்லம் கொடுத்து வளர்த்த பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டத்தையும் பழக்கியிருக்கலாம். அண்ணனுக்கும் தம்பிக்கும் கொடுக்கும் கையில்லை. அவர்களை சொல்லி குற்றமில்லை, பழக்கமில்லை. எல்லாம் கிடைத்தது, புத்தளம் தோப்பு வீட்டில் கிடைக்காததா! தாத்தா தேவசகாயம் சேர்த்த சொத்து, அப்பா ஏசுவடியான் தயவால் வளர்ந்தது. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும் ஜெபநேசன், மரியநேசன் வாழ்த்தப்பட்டவர்கள். கம்பனை கையில் எடுக்கும் போதெல்லாம் மருமகள்கள் கேட்பார்கள் “எதுக்கு மாமா, இந்த புக். இது சாத்தான் கதை. எங்க சபையிலே சொன்னாங்க. இந்து கடவுள் எல்லாம் சாத்தான். எங்க அப்பா, மாடன் கோயிலை பாத்தாலே ஓடிறணும்னு சொல்லிருக்கு. நீங்க இந்த எழவ நடுவீட்டுல படிக்கீங்க”. “மக்கா, படிச்ச பிள்ளைகளு நீங்க. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எப்பவும் உண்டு. ஆனா, இதெல்லாம் இலக்கியம். கடவுள் எல்லாருக்கும் உண்டு. நமக்கு ஆண்டவரு மாதிரி, அவங்களுக்கு ராமரு. ஆனா கம்பராமாயணம் தமிழ் தெரிஞ்ச எல்லாரும் படிக்கணும். நீங்க சொல்லுங்க. உங்களுக்கும் சொல்லி தாரேன். நா தமிழ் வாத்தியாருமா”. ஆண்டவர் என்ன பாவம் செய்தார், அவர் இருந்தால் சொல்லியிருப்பார், இப்போது ஏசுவடியான் மருமகள்களை திருத்த யாராயிருக்கிறார். “உங்க அப்பா கண்ட புக்லாம் வீட்டுல கத்தி பாடுகாரு. கர்த்தரு இருக்க வீட்டுல சாத்தானை கூட்டுகாரு”. விதியோ என்னவோ டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் வேலை கொஞ்சம் கரைய, கட்டியவளின் வாக்கு ராத்திரி கூட, மனம் கனமேறியது. தவிர்த்து அப்பனின் கொடுக்கும் குணமும்.
‘எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர், எங்கள் சத்துருக்கள் எங்களை பரியாசம் பண்ணுகிறார்கள்’.
விளைவு, அப்பனை கேள்வி கேட்கும் பிள்ளைகள் “அப்பா, நீங்க கொடுக்கது தப்பு சொல்லல. இருக்கத கொடுப்போம். நம்ம சொத்தை அழிக்காண்டாம். சும்மா கிடங்க வீட்டுல. எம்பொண்டாட்டி தங்கம் போல தாங்குகாளே. மதிக்காண்டாம். அவளும் படிச்சவத்தான்’ என்றான் மரியநேசன். “தம்பி சொல்லத்துல என்ன தப்பு. நமக்கு அப்புறம் மத்தவங்களுக்கு. எம்மாமியார் வீட்டுல கேக்கா, தூக்கி தூக்கி அடுத்தவனுக்கு கொடுத்தா, உமக்கு என்ன கடைசில. உங்க அப்பனுக்கு…இல்லப்பா, வேண்டாம். உங்க மரியாதை கெடவேண்டாம். வீட்டுல இருங்க. வருஷம் ஒருவாட்டி வேளாங்கன்னி போங்க. யாரு வேண்டாம்னு சொன்னா. போதும். இருக்க சொத்தை காப்பாத்திக்கிடனும், அதான் புத்திசாலித்தனம். அம்மைக்கு எதுக்கு எடுத்தாலும் கோவம். அவளுக்கு மண்டைக்கு வழியில்ல” இது ஜெபநேசன். பொறுத்தவரை பேசவைத்தது கடைசி சொல். “ஏம்ப்பா, எம்பிள்ளைகள் பேசுகு. எத்தனை நாளாச்சு உங்க குரல கேட்டு. எம்பொண்டாட்டிக்கு மண்டைக்கு சரியில்லையா? லேய் பிள்ளைகளுக்குன்னு வாழுகா. பவுனுல அவ. அழுக்கில்ல அவ மனசுல. உங்க வழப்பு சரியில்ல. தப்பு நான்தான். போறோம். எங்கயோ போறோம். ஒருத்தனும் வரக்கூடாது, பின்னாடி. எட்டி நீ உள்ளத சொன்ன. நான்தான் கிறுக்கு. பிள்ளைகளு அப்படி இப்படின்னு சொல்லிட்டேன். கிடைக்கத எடு, எம்பணத்துல வாங்குனது மாத்திரம். நடட்டி. சகாயம் பிள்ளை நா. என்ன எழவு தெரியும் அவனுகளுக்கு, நான் தப்பு” வெளியிறங்கி நடக்கும் வரை யாரும் தடுக்கவில்லை. பழைய திருச்சபை தந்தை லாசரஸ் வெட்டூர்ணிமடம் அருகே இல்லம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஏசுவடியான் ஓரிருமுறை சென்றிருக்கிறார். அங்கே சென்றார்கள். நிம்மதி.
அங்கே கம்பன் மீண்டும் பிறந்தான். ஞாயிறு கல்கோயில் தேவாலயத்தில் உள்ளே கொஞ்ச நேரம். மீதி திரேசுடன் இந்த அசோகமரத்தின் நிழலில் கொஞ்சம் பேச்சு, நிறைய சிரிப்பு. “நம்ம வீட்டுல தேவகுமாரன் வந்தாரோ என்னவோ, திராட்சை ரசம் வெட்டூர்ணிமடத்துல கிடைக்கு, இதுவும் அதிசயம் தானே. எத்தனை நாளாச்சு கம்பன பாடி. அதிசயம்” என்றார் ஏசுவடியான் கல்பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து. “எப்பா, கர்த்தரே. நீரு ஊமையாட்டும்ன்னு நினச்சுட்டேன். அந்த வீட்டுல இருக்க வர. என்னமா பாடுகீறு. அதே தொண்டை. உழை, அரா ன்னு. எனக்கு நிம்மதிய கொடுத்த ஆண்டவரே”. இதற்கிடையே தேவாலயத்தில் இருந்து ஆட்கள் வெளியே வர, ஒருவர் நேர்த்தியான உடையில் இவர்களை நோக்கி வர. இருவரும் புரியாமல் அவரையே நோக்கினர் “சார், என்ன ஓர்மை உண்டா. நா ஜோசப், கம்பராமாயணம் படிக்க உங்க வீட்டுக்கு சின்னதுலே வந்தேனே”. “ஜோசப் இருக்கு, ஓர்மை இருக்கு. வீட்டுல எல்லாம் சுகமா.”, வழக்கமான உபசரிப்பு எல்லாம் முடிந்து திரேஸின் வாயால் முழுக்கதையையும் கேட்டு ஜோசப் அதிர்ந்தான் “சார், என் வீட்டுக்கு வாங்க நான் பிள்ளை போல பாத்துக்கிடுகேன்”.கண்கலங்கியிருக்கிறதா ஆம்? நிறைந்திருக்கிறது. “அதுலாம் வேண்டாம். நல்லாயிருக்க, கர்த்தருக்க கிருபையில உனக்கு குறையில்லை. முடிஞ்சா வெட்டூர்ணிமடம் எங்க ஹோமுக்கு வா. முடிஞ்சத அங்க செய். எனக்கு அது போதும்”. விடைபெற்று ஜோசப் நகர்ந்தான், உள்ளுக்குள் ஒரே எண்ணம் நாளை அந்த ஹோமுக்கு செல்லவேண்டும். அவர் கேட்டதை செய்ய வேண்டும். சட்டென நின்றான், அவரை நோக்கி ஓடினான் “சார், எனக்கு ரெண்டு பிள்ளைகளு. உங்க ஹோமுக்கு அனுப்புகேன். கம்பராமாயணம் சொல்லி கொடுப்பீங்களா”. “அதுக்கென்ன அனுப்பு கம்பன பாட புண்ணியம் வேண்டும்”. சுருக்கங்கள் சிவந்த அதே புன்னகையோடு தன் பவுனைப் பார்த்தாள் திரேசம்மாள்.