கடல் – கமலதேவி சிறுகதை

அப்பொழுதுதான் நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ?

பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம்.

லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள்.

“நித்யா…எனக்கு அத்தானி ங்கற ஊர்.மணல்மேல்குடி தாலுக்கா.இதெல்லாம் எங்க இருக்கோ.அத்தான்..அத்தான்னு பழைய பட டயலாக் மாதிரி இருக்கு,”

புடவையை சரி செய்தபடி நித்யா சிரித்தாள்.இருவரின் அப்பாக்களும் பேசி சிரித்தபடி உற்சாகமாக வந்தார்கள்.

“புதுக்கோட்டை தானே சார் பாத்துக்கலாங்க..இந்த காலத்து பிள்ளைங்க எங்கெங்கியோ வேலைக்கு போவுதுங்க…”

“கூகுள் மேப்ல பாக்கலாமா பாப்பா…”

பிள்ளைகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

“என்னதுக்கு முகத்த தூக்கி வச்சிருக்கீங்க.சின்ன வயசுல அரசாங்க உத்தியோகம் கெடக்கறதே பெரிசு…கல்யாணத்துக்கு முன்னயே வேல…கொடுத்து வச்ச பிள்ளைங்க,”என்று ஏக்கமாக லலிதாஅப்பா அதட்டினார்.

அறந்தாங்கி கஸ்தூரிபாய் விடுதியிலிருந்து கிளம்பினால் கோட்டைப்பட்டினத்திற்கு இரண்டுமணிநேரத்திற்கும் மேலாகிறது.வழியில் உஷாவுக்கு அம்பலவாணனேந்தல், சுபாவுக்கு காரணியானேந்தல் என்ற ஊர்களில் இறங்க வேண்டும்.அவர்கள் முதலில் ஊர் பெயரை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது.

வேலையில் சேர்ந்த முதல் நாள் இரவுஉணவு நேரத்தில் லலிதா நித்யாவிடம், “எனக்காச்சும் பரவாயில்ல…நீ தான் பாவம்…”என்றாள்.

புதுசா இன்னும் என்ன இருக்கோ என்று நித்யா முகம் சோர்ந்தது.அன்று கோட்டைப்பட்டின பெண்கள் பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்த கோகிலா, “நித்யா என்ன பாவம்….”என்றாள்.

“எதாச்சும் மீட்டிங்ன்னா…பேங்க் வேலைன்னா மணமேல்குடிக்குதான் நீங்க வரனும் தெரியுமா? இந்தியன் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனுமாமே எனக்கு ஸ்கூல்ல இருந்து பக்கம்,”

“நாங்க ரெண்டு பேரும் இருக்கமில்ல..சேர்ந்து வந்துருவோம்..”

தேனீ,தென்காசி,திருச்சி என்று வேவ்வேறு இடங்களில் இருந்து வந்த இவர்கள் இணைந்துகொண்டு மணல்மேல்குடியில், புதுக்கோட்டையில் அலுவலக வேலைகளை முடிக்க இரண்டுநாட்களானது.கோட்டப்பட்டினத்திலிருந்து மணல்மேல்குடி வழியெங்கும் கடல் உடன் வந்தது.உப்பளங்கள் கண்ணாடிகளாய் மின்னும் பாதைகள்.

அதில் வேலை செய்துவிட்டு பேருந்தேறும் பெண்களின் கால்களை முதல்முறைக்கு மேல் பார்ப்பதற்கு பதைத்தது.பள்ளியின் முதல்தளத்தில் நின்றால் தெரியும் தனித்த ஆள்அரவமற்ற கடற்கரையும், கருத்தக்கடலும், தொடுவானமும் எங்கேயோ வந்து விட்டதைப்போன்ற ஒரு படபடப்பை தருகிறது.

ஐந்தாம்நாள் வகுப்பறையில் நின்ற நித்யாவுக்கு சலிப்பாக இருந்தது.கோகிலாவுக்கு போல பெண்கள் பள்ளியிலாவது கிடைத்திருக்கலாம் இந்தப்பள்ளிக்கூடத்துல ஒருப்பய மதிக்க மாட்டிங்கிறான்.மொழி உச்சரிப்பு சிக்கல் வேறு.மணியடித்தால் டீச்சருக்கு முன்னாடி ஓடிப்போயிடறானுங்க.மதியத்திற்கு மேல் மீன்பிடிக்க கடற்கரைக்கு தப்பிவிடுகிறார்கள்.கட்டுப்பாடான பள்ளிகளில் படித்துவிட்டு இங்கு வந்து பட வேண்டியிருக்கிறது.

ஒரு வாரமாக ,எங்கிருக்கிறோம் ,என்ன சாப்பாடு ,என்னநினைப்பு, என்ன செய்கிறாம் என்றே தெரியாத ஒரு மனகுழப்பம்.வண்ணங்களை விசிறியடித்த ஓவியப்பலகையின் வழிதல்கள் என திக்கு தெரியாது பணிசார்ந்து இழுத்த இடம் அறியாது சென்றுகொண்டிருந்தார்கள்.இதுவரை வீடு, கல்லூரி விடுதி, பக்கத்து ஊர் தனியார்பள்ளி வேலை தவிர பெரிதாக இடமாற்றமில்லாத வாழ்க்கை.வாரஇறுதியில் ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பைத்தவிர நித்யாவிற்கு எதுவும் இல்லை.உறக்கத்தில் திடீரென்று விழிப்பு வந்தால் மறுபடி உறங்கமுடியவில்லை.இரண்டுவாரங்கள் எத்தனையோ மாதங்கள் போல நகர்ந்தது.

வெள்ளிக்கிழமை சாயுங்காலம் தலைமையாசிரியர் புதிதாக வேலைக்கு சேர்ந்த கணித ஆங்கில இயற்பியல் ஆசிரியர் மூவரையும் சனிக்கிழமை வகுப்பு வைத்து பாடம் எடுக்க சொன்னார்.அதை நினைத்துக்கொண்டே சாலை கடக்கும் போது மதீனா டீச்சர் பதறிய குரலில் அழைத்து இழுத்தார்.

“நித்யா டீச்சர்..இது ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அடிச்சு போட்டுட்டு போயிட்டேயிருப்பாங்க…ரொம்ப கவனமா இருக்கனும்,”

“தேங்ஸ் டீச்சர்..”

“இந்தவாரம் ஊருக்கு போலான்னு நெனச்சீங்களா?”

“ம்…”

“சம்பளத்த நெனங்க.எல்லாம் மறந்துடும்…”என்று அவள் கையைப்பிடித்து சாலையைக் கடந்தார்.

உஷாவும் சுபாவும் ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்.லலிதாவும் கோகிலாவும் கிட்டதட்ட அழும் நிலையிலிருந்தார்கள்.நித்யா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.ஆளுக்கொரு சமாதானம் சொல்லிக்கொண்டு இரவு உணவிற்கு பிறகு தொலைக்காட்சித்தொடர் பார்க்கத்தொடங்கினார்கள்.நித்யாவின் அலைபேசி அழைத்தது.

“நித்யா…நல்லாருக்கியா..”

தொண்டையை செறுமிக்கொண்டாள்.

“என்னாச்சு…”

“ஊருக்கு வரலான்னு நெனச்சேன்…”

“அங்க போனதுலருந்து சரியாவே பேசமாட்டிக்கிற..”

ஜனனிஅக்கா விடமாட்டாள்.அவள் பேச்சில் என்னத்தையோ வைத்திருக்கிறாள்.அவள் நெருங்கி பேசும் அனைவரும் உணரும் ஒன்று அது.

“ ஒன்னுமில்ல ஜனனி..”

“ஸ்கூல் போற வழியில புதுசா என்ன பாக்கற…நம்ம ஊர்ப்பக்கம் இல்லாதது…”

“வழியில தாமரைக்குளங்க நிறைய இருக்கு…கடற்கரை மணல்… மீன்வாடை…”

“குறிஞ்சியிலருந்து நெய்தலுக்கு போயிட்ட…நீ கலக்கு நித்யா…எனக்குதான் இங்க பதில் சொல்லமுடியல,”

ஒருவீட்டில் ஒரே தேர்வில் இருவரில் ஒருவருக்கு வேலைக்கிடைப்பது எத்தனை சங்கடம்.புன்னகைத்தே சமாளிப்பாள்.இத்தனை நாள் அவள்பக்கத்தை நினைக்கவேயில்லை.

“ச்…எனக்குதான் ரெண்டு மார்க்குல போயிடுச்சு…கடற்கரையில பள்ளிக்கூடம்..நீ லக்கி நித்தி,”என்று அக்கா பேசிக்கொண்டேயிருந்தாள்.

நித்யா காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் நிமிர்ந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கட்டிடங்கள் இரண்டையும் பார்த்தாள்.கடற்கரையில் நின்று கடற்கரையையே மைதானமாகக்கொண்ட பெரிய பள்ளிக்கூடம்.பழையக்கட்டிடம் சற்று தள்ளி நிற்கிறது.குனிந்து இளம்பச்சை நிற பருத்தி புடவையை சற்று தூக்கிப்பிடித்தபடி மைதான மணலில் நடந்தாள்.

பத்துநிமிடம் நடக்க வேண்டும்.நடந்து வரும் போதே வீசும் கடற்காற்றை உடல் தனித்து உணர்கிறது.உப்புக்காற்றுக்கென ஒரு கனமான தொடுகை. செருப்புகளுக்குள் புகுந்த மென்மணலின் நறநறப்பு பாதங்களை கூசச்செய்தது.உடலை உலுக்கிக்கொண்டாள்.முதல்தளத்தின் வகுப்பறையில் பயல்களின் ஆரவாரம்.

முதல்தளத்தின் நடைபாதை தூணருகே நின்றாள்.ஆமாம்…சங்ககாலத்து கடல்.’கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே …’என்று பனிரெண்டாம் வகுப்பில் படித்த வரி ஜனனி குரலில் கேட்டது.கடலை பார்த்து பார்த்து காத்திருந்த காத்திருப்பின் சொல்.இரங்கலும் இரங்கலின் நிமித்தமும்.அவள் சொல்லிய போது உணரவில்லை. இத்தனை பெரிய கடலை நேரடியாக பார்த்துக்கொண்டு நிற்கும் போது அப்படி யாரிடமாவது சொல்ல இந்தவாழ்வில் வாய்ப்பு கிடைக்குமா? என்று தோன்றியது.உடனே புன்னகை எழுந்தது.இங்கு வந்து மனம் கனியும் முதல் புன்னகை.சட்டென்று அலைபேசியில் தற்படம் எடுத்தாள்.

வெண்மணலாய் விரிந்து பரந்த அரவமில்லா கடற்கரையில் மீன்கள், களத்தில் காயும் நெல்மணிகளெனக் காய்கின்றன.காற்றின் சுழற்றலில் அடிவயிறு கலங்கி குமட்டலெடுத்து அவள் கண்கள் நிறைந்தன.

வெண்மணல் பரப்பு.தாழைபுதர் ஒன்று தெரிகிறது. மினுமினுக்கும் பரப்பென அலைகள் இல்லாத கடல் முடிவிலி வரை நீண்டு கிடக்கிறது.செபாஸ்டீன் சார் அன்று இதை பெண்கடல் என்று சொன்னார்.

சங்கால பெண்மனம் இன்றுவரை உறைந்து நிற்கிறதா? அன்றிருந்த புன்னை இன்றில்லை. அதன்அடியில் நிற்கும் தலைவி கண்களுக்குத் தெரியவில்லை.அவள்தான் மீன் உலர்த்தியிருக்கிறாளா? வலைகள் சிறு சிறு குன்றென குவிந்து கிடக்கின்றன.அதற்கு அப்பால் இருக்கக்கூடும்.அந்த அழகான மசூதிக்குப் பின்னால் இருக்கும் மீன்பிடிதளத்தில் காத்திருக்கக்கூடும்.தலைவிதொலைத்த புன்னங்காய் இங்கு தங்கையென வளரவில்லையா?

“என்ன டீச்சர் அப்படியே நிக்கறீங்க? “

நித்யா தடுமாறி தூணில் சாய்ந்து திரும்பி, “குட்மானிங் டீச்சர்,”என்றாள்.

“இந்த ஊரு ஒத்துக்கிச்சு போலயே..”என்றபடி பையன்களை அழைத்தார்.

நித்யா பதில் சொல்லாமல் விழிகள் விரித்து சிரித்தாள்.ஜனனியின் கிறுக்குத்தனமான பேச்சு இன்று எரிச்சலாக இல்லை.பேசிப்பேசி என்னையும் கிறுக்காகிட்டாளா!

மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.வெயில் பொழிந்து கொண்டிருந்தது.கண்கள் கூசி நிறைந்தது.கானல் பறக்கும் வெளியில் ஒருவர் வலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார்.

வாட்ஸ்ஆப்பில் ஜனனிக்கு புன்னகைக்கும் தற்படத்தை அனுப்பினாள்.உடனே ஒரு பொம்மை புன்னகை வந்தது .என்ன? என்ற கேள்வியுடன்.சகோதரியாக புன்னைமரம் நின்ற சங்ககாலத்தில் சொல்லமுடியாததை, இன்றுமட்டும் இவளிடம் எப்படி சொல்லமுடியும்? மீண்டும் ஒரு புன்னகையை அனுப்பினாள்.

ஆசிரியரை பார்ப்பதற்கான எந்த மரியாதையும் இன்றி ஒருவன் வகுப்பறைக்குள் ஓடினான்.

டிசிப்ளின் ஒபீடியன்ஸ் எல்லாம் நம்ம ஸ்டூடண்டா இருக்கும்போது சரிதான்.ஆனா ஒரு டீச்சரா அது தெரியாத குழந்தைகளுக்குத்தானே நீ வேணும்.அதுவும் பாசம் தேவைப்படற குழந்தைகளா இருக்கும்.உப்பள வேலையில அம்மாக்களுக்கு பாசத்துக்கு நேரம் குறைவா இருக்கலாம் என்று நேற்று ஜனனி சொல்லியது நினைவிற்கு வந்தது.

வகுப்பறைக்குள் நுழைந்த பையனின் முதுகில்தட்டி நகர்ந்த நித்யா, “ டீச்சர் கிளாஸ்ரூமுக்கு வந்தா எழுந்து குட்மானிங் சொல்லனும்…போகும்போது தேங்க்யூ சொல்லனும்..” என்றபடி மேசைக்கருகில் சென்றாள். பையன்கள் தயக்கத்துடன் எழுந்து நின்றார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.