தொடர்ந்து இணையத்திலும், கிண்டிலிலும், படித்துக்கொண்டிருந்ததன் சலிப்பு, மறைய. ஒரு அச்சுப்பிரதி படிக்க தோன்றியது. அவ்வகையில் சமீபத்தில் படித்த புத்தகம் பா .கண்மணி அவர்கள் எழுதிய ”இடபம் ” நாவல்.
இந்த நாவல் பெங்களூரு பின்னணியில் நடைபெறும் ஒரு பெண்ணின், வாழ்வும் ,சலிப்பும், தற்காலிக விடுதலைகளும் என ஒரு எளிய கதை. எனினும் சொல்லப்பட்ட களம், பொதுவாக யாரும் தொடாத, பங்குச்சந்தை எனும் கடலில் நீந்தும் அன்றாடம் காய்ச்சிகளுக்கான அல்லாடல்.
ஒரு சமநிலையான மனிதனுக்கு, ஒரு நாளில் பன்னிரண்டாயிரம் முறையும், சற்று வாழ்வியல் பிரச்சனைகள் சூழ்ந்த மனிதனுக்கு, நாற்பத்தி இரண்டாயிரம், முறையும் எண்ணங்கள் வருவதாக நவீன உளவியல் சொல்கிறது . யோசிக்கையில் , இத்தனை ஆயிரம் எண்ணங்கள் கொண்ட மனம் , நிதானமாக ,மெதுவாக என எதையாவது ”உணர்ந்து” இருக்குமா? என்பதே சந்தேகம் தான் . மேலும் இந்த நூற்றாண்டின் மனித மனம் என்பது ”துரிதம் ” [ SPEED /QUICK/FAST ] என்கிற கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது.
எண்பதுகளில் ஒருவர், மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார் எனில் , அதை எழுதும் பொழுதே , அதற்கான பதில் கிடைக்க ,இருபது நாள் ஆகும் என்கிற பிரக்ஞயை, கொண்டிருந்தார் .எனவே அடுத்த நாள் அவருடைய மனம் எந்த பரபரப்பையும் அடைவதில்லை. ஆனால் இன்று, அனுப்பிய குறுஞ்செய்தி மறுமுனையில் , திறக்கப்பட்டு விட்டது. என்கிற ”டபுள் டிக் ” சமிக்கை வந்தவுடனேயே , மனம் பதில் தேடி பரபரக்கிறது.
இந்த நாவலின் மனிதர்கள் அனைவரும் இந்த ” துரிதம் ” எனும் சரட்டில் கட்டப்பட்டு கதை முழுவதும் அலைகிறார்கள் . அதில் ஒருத்தி தான் நாயகி . உத்தேசமான நாற்பது வயதை நெருங்கிய முதிர்கன்னி. தனியாக வீடெடுத்து தங்கி, பொங்கி , தின்று வாழும், முற்போக்கான , அல்லது சுதந்திரமான என்கிற ” தான்”எனும் உலகில் வாழ்பவள் .முற்போக்கு , சுயசிந்தனை என தனது வாழ்வை நினைத்தது போல அமைத்துக்கொண்டதால், மகிழ்ச்சிக்கு பதிலாக , கசப்பை, புகாரை , குறைகளை மட்டுமே காணும் பூதக்கண்ணாடி யை எப்போதும் மாட்டிக்கொண்டு திரிபவள். எனவே பண்டிகைகள் கசக்கிறது. குழந்தைகள் எரிச்சலை தருகிறார்கள் , அடுத்தவர் கொண்டாட்டம் ”குறையுள்ளது” என குத்திக்காட்ட முடிகிறது. எனினும் இந்த ஒட்டுமொத்த தீமைகளால் ஆன உலகை ”சுய சம்பாத்தியம்” எனும் பணத்தால் வென்று மேலேறிட முடியும் என்கிற மாபெரும் நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் அவளால் தள்ள முடிகிறது.
அப்படி நாட்களை தள்ளிச்செல்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்பதால் , சற்று குடியும் அதற்கான நியாயங்களை , சிலப்பல உடல் சார்ந்த மீறல்களை, பணத்தை கையாடல் செய்வது வரை அனைத்தையும் அவ்வப்போது நியாயம் கற்பித்துக்கொண்டே செல்ல முடிகிறது .
‘ஒழுக்கமற்ற வாழ்வில் ஒருபோதும் மனநிறைவும் நிம்மதியும் சாத்தியமில்லை”- என்பது உலக இலக்கிய ஜாம்பவானின் வரிகள். எத்தனை உன்னதமானவை. என்பதை இந்த நாயகியின் அல்லது இன்றைய சிறிய அளவிலேனும் ஒழுக்கமற்ற ஒருவருடைய வாழ்வை, அவர்கள் அடிக்கடி சென்று சேரும் இருளை, காணும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
பங்குச்சந்தை பற்றிய அவதானிப்புகள் , வர்ணனைகள் , உள்ளூற நடக்கும் வர்த்தக விளையாட்டுகள் என அனைத்தும் , ஒருவரை இந்த துறை நோக்கி இலகுவாக இழுக்கும், மிகக்கச்சிதமானவை. பங்குச்சந்தையின் சாதக பாதகங்கள் மிகவிரிவாக, அதே நேரத்தில் அடிப்படைகள் ஒரு சாமானியருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருப்பது,
பா .கண்மணியின் பங்கு சந்தை சார்ந்த அறிவுப்பரப்புக்கு ஒரு சான்று. அல்லது அதற்கான மெனக்கெடல் நாவல் முழுவதும் தெரிகிறது . மிக அளவாக எழுதியிருப்பது தான் அதன் தனித்தன்மையும். ”புட் ஆப்ஷன்” – ”கால் ஆப்ஷன்” போன்ற பங்கு வர்த்தக செயல்பாடுகள் குறித்து இன்னும் சிலபக்கங்கள் கூடுதலாக எழுதி இருந்தால் கூட, இது ஒரு ”அள்ள அள்ள பணம் ” எனும் புத்தகம் போல மாறியிருக்கும்.
கதை நாயகி ”பணம் ” எனும் ஒற்றை புள்ளி நோக்கி ஒவ்வொரு நாளும் பாய்ந்தும், மாய்ந்தும், ஓடியும் , சாடியும், திரியும் ஒரு யட்சி. ஒருநாள் அவள் அதை வென்று விடுகிறாள். அன்றுமுதல் அவள் வேறு மனுஷி, புது வீடு ,புது வாழ்வு என அனைத்தையும், அடைந்துவிட்ட திருப்தியில், அடுத்த நாள் முதல் அவள் நடவடிக்கையில் ரசனையில் ,கண்டடைவது என்னவோ மேலும் குற்றமும் , குறையும் , எரிச்சலும், சலிப்பும் உள்ள அன்றாடத்தைத்தான்.
நமது ஆழ்மனதின் மீது மரபிற்கு எவ்வளவு பெரிய ஆளுமை உள்ளது என்பதற்கு. பெரும் செல்வம் , பணம் போன்ற விஷயங்களை சித்தர் பாடல்கள் முதல் மரபு இலக்கியம் வரை எப்படி விலக்கி வைக்கின்றன என்பதற்கு குபேரனின் உருவம் அவன் பயம் என பல்வேறு படிமங்களை சொல்லலாம் .
நாயகியின்” கனவு காட்சிகள்” மூலம் மிகச்சரியாக இந்த இடத்தை சென்று தொட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பு , நாயகி நாள்முழுவதும் லட்சங்களில் , கோடிகளில் பணமதிப்பை , கைபேசி திரையிலும் , கணினி திரையிலும் , வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியிலும், பார்த்தவண்ணம் இருக்கிறாள் . அவளுக்கு ஒருபோதும் பணமோ , செல்வமோ கனவில் வருவதில்லை , இருண்ட குகையும் , சுருள் சுருளென இறங்கிச்செல்லும் கிணறும் , நாகமும் என,
இருள் கவிழும் கனவுகள். அதை வெல்லவே மேலும் அவளுக்கு ”பக்கார்டியும்” , குறுகிய கால உறவும் தேவையாய் இருக்கிறது. இதை வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் கதை என்று எடுத்துக்கொள்ளலாம் . அந்த நாணயத்தின் பின் பக்கமோ, மொத்த வாழ்வின் மீதும் கொண்ட சலிப்பு,ஒவ்வாமை , வெறுப்பு என்கிற களிம்பு பூசிய செல்லாக்காசு.
எழுபதுகளின் பின்பகுதியில் , எண்பதுகளிலும் பிறந்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று,வேறு வாழ்க்கை அமைத்துக்கொண்டு , அல்லது திக்கி திணறி வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு மாபெரும் திரளுக்கு முன்னால், இந்த இரண்டில் எந்த திசையிலும் செல்லாமல் நின்று கொண்டிருக்கிறாள் நாயகி. ”திருமணமே சுத்த பொய்” , ”கொடுமையான வாழ்க்கை” , என ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லும் நாயகிக்க்கும். அல்லது புரட்சிகர சிந்தனை கொண்டோருக்கும் , இரண்டு வாழ்விலும் இல்லாமல் முட்டுச்சந்தில் நிற்போருக்கும் தெரியவில்லை , மனித திரளுக்கு, ”திருமணம்” தவிர வேறு நல்ல திட்டமும், சாத்தியமும் இப்போதைக்கு இல்லை. என. இருப்பதாக நம்பி அலைந்து திரிபவள் இந்த நாயகி.
பங்கு சந்தையில் ”இடபம்” {bull market} என்பது ஏறுமுகம் என்றும் ”கரடி”{ bear market} எனும் உருவகம் இறங்கு முகம் என்பதும் நாம் அறிந்தது.
இந்த நாவல், வாழ்வில் கரடியாக, ஒவ்வொரு இழப்பாக சந்தித்துக்கொண்டிருக்கும் நாயகியின் ஒரேயொரு ”இடபம்” எனும் ஏறுமுகம் குறித்து சொல்லும் இன்றைய மனிதரின் கதை . வெவ்வேறு இழப்புகளுக்கு மத்தியில் ஒரே ஒரு காளைத்துள்ளல்.
இடபம்
எதிர் வெளியீடு – http://www.ethirveliyedu.in
விலை 220ரூபாய்