ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய கனகா பிரதான சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் நெரிசலான தெரு வழியாக திருநின்றவூர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள். அடர் சிவப்பு வண்ண சுரிதாரும் வெளிர் சிவப்பில் பேன்ட்டும் அணிந்திருந்தவள் தோளில் கருப்பு தோல் பையை மாட்டியிருந்தாள். ஒரு கிளிப் மட்டும் மாட்டி விரித்து விடப்பட்ட கூந்தலின் மையத்தில் மல்லிகை இரு பகுதியாக தொங்கியது.
தெருவிலிருந்து நிலையத்தைப் பிரித்தபடி கிடந்த தண்டவாளத்தில், பெரிய பெட்டகங்களையும் நிலக்கரியையும் தாங்கியபடி சரக்கு ரெயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தண்டவாளத்தைக் கடப்பதற்கான மேம்பாலம் நிலையத்தின் நடுவில் உள்ளது. இவளுக்கு முதல் பெட்டியில் ஏறி இறங்குவதுதான் வசதியென்பதால் மேம்பாலத்திற்குச் செல்லாமல் பெட்டிகளை இணைத்திருக்கும் கொக்கிகளுக்கு அடியில் குனிந்தமர்ந்து நகர்ந்து தண்டவாளங்களையும் சரக்கு ரெயிலையும் கடந்து நிலைய நடைமேடையை அடைந்தாள். அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் துரித வண்டி கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது.
கனகா தமிழக அரசின் முக்கிய அலுவலகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். பத்தாவது படிக்கும் போது இவள் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பாவின் ஓய்வூதியத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வாடகை கொடுத்து எட்டாவது படிக்கும் தம்பியுடனும் அம்மாவுடனும் வாழ்வை எதிர் கொண்டாள். அப்பாவின் நண்பர் நீலகண்டன் வழிகாட்டியபடி அம்மாவுடன் அப்பா பணியாற்றிய அலுவலகத்திற்கு சென்றாள். இவர்கள் சென்றபோது அலுவலகம் சற்று நேரம் நிசப்தமடைந்தது. பேசியபடி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எழுந்துவந்து நலம் விசாரித்தார்கள். இவர்கள் உயர் அதிகாரியை சந்தித்து, கனகாவிற்கு கருணையடிப்படையில் பணி வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்தார்கள். அப்பாவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மனு தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சம்பிரதாயமாகக் கூறினார்.
அம்மா, வீட்டிற்கு வந்தவுடனேயே அங்கிருந்த ஒவ்வொருவரைப் பற்றியும் கூற ஆரம்பித்தார்.
“மூலையில கண்ணாடி போட்டுக்கிட்டு நின்னானே அவன் நரி மாதிரி. தன் தேவைக்காக சதி செய்யவும் தயங்க மாட்டான்”
“இடது பக்கம் வழுக்கை தலையோட இருந்தானே, அவன் உதவறேன்னு சொல்வான், ஆனா எதுவும் செய்யமாட்டான்”
“மஞ்சள் சுடிதார் போட்ட அந்த ஒல்லிப் பொண்ணு சிரிப்புலேயே ஒரு போலித்தனம் தெரியிது”
“கூடவே வந்தானே… வெள்ளையா சின்னப் பையன், அவன் பார்வையெல்லாம் ஒன் உடம்பு மேலேயே இருந்துச்சு”
என்று தனித்தனியாக குறிப்பிட்டு அவர்கள் எம்மாதிரியான தவறான குணத்தோடு இருக்கிறார்கள் என்று தானாகவே யூகித்து, அவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் விளக்கினார். அம்மா கூறியதை முதலில் புறந்தள்ளிய கனகா மனுவின் மீதான நடவடிக்கையை அறிய அடுத்தடுத்த முறை அலுவலகத்திற்கு செல்லும் போது அம்மா கூறியபடிதான் உள்ளதோ என எண்ண ஆரம்பித்தாள். அந்த ஒல்லிப் பெண்ணின் புன்னகை போலியானதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றி அவள் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. அரச மரத்திலிருந்து உதிரும் மெல்லிய சிறு விதைகள், கான்கிரீட் கட்டடங்களையே தகர்ப்பது போல அம்மாவின் சொல்லும் செயலும் கனகாவின் உள்ளத்தில் பதிந்து, அவளை, யாரையும் நம்பாதவளாகவும் உணர்வுரீதியாக யாருடனும் பழக முடியாதவளாகவும் ஆக்கியது.
அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அதிகாரிகளைப் பார்த்ததால் கருணை அடிப்படையிலான பணியை பனிரெண்டாவது முடித்தவுடனேயே பெற்றாள். பட்டம் பெறாவிட்டால் பதவியுயர்வு கிடைக்காது என்பதற்காக, வேலையில் சேர்ந்தபிறகு தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றாள்.
அப்பாவின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்ததால், உடன் பணியாற்றுபவர்கள் சில மாதங்கள் இவள் அப்பாவின் மேலிருந்த மரியாதையில் இவளிடம் அன்பாகப் பழகினார்கள். எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து வசைபாடிய படி இருக்கும் அம்மாவின் குணத்தினால்தான் அப்பா இறந்தார் என்று இவளுக்கு அவ்வப்போது தோன்றும். அவ்வாறு தோன்றும்போது மட்டும் அம்மாவைப் போல நடந்துகொள்ளக் கூடாது என உறுதி கொள்வாள். மரண வீடுகளுக்கு செல்லும்போது வாழ்க்கையைப் பற்றி தெளிவு வந்து புதியதாக வாழவேண்டும் என உறுதி கொள்வதும், வெளியே வந்தவுடன் பழைய வாழ்க்கையையே தொடர்வதையும் போல எடுத்த முடிவை சிறிது நேரத்திலேயே மறந்துவிடுவாள். அம்மாவைப் போல யாரையும் வசைபாட மாட்டாள். ஆனால் ஒருவரைப் பார்க்கும்போது அவரின் குறைகள் மட்டுமே இவளுக்கு பிரதானமாகப் பெரியதாகத் தெரியும்.
கனகா பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் அதே பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த துர்காவை பணியிடை நீக்கம் செய்தார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் செய்ய வேண்டிய பணியை அவள் முடிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆறு மாதம் அலையவிட்டபின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டாலும் ஒரு வயது மகனுடன் அவள் பட்ட பாடுகளை நேரில் பார்த்த கனகாவின் மனதிற்குள் இவள் அறிவை மீறிய ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்றி வலுப்பெற்றது. வேலையில்லா விட்டால் தனது குடும்ப நிலைமை மிக மோசமாகும் என்பதை எண்ணி மனதின் ஒரு மூலையில் பதட்டம் ஒரு சிவப்பு விளக்காக எப்போதும் அணையாமல் மின்னிக் கொண்டேயிருந்தது. இவளின் பணி மீது ஏதாவது பிழை சொன்னால் சற்றும் தயங்காமல், எந்த குற்றவுணர்வில்லாமல் அடுத்தவரை கை காட்டிவிட பழகிக் கொண்டாள். நன்றாக பழகுபவர்களாக இருந்தாலும் தாட்சண்யம் பார்க்க மாட்டாள். தான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என எப்போதாவது குறுகுறுக்கும் மனசாட்சியை சமாதானப்படுத்துவாள்.
*******-
மின்தொடர் வண்டி வந்து நடைமேடையில் நின்றது. மகளிர் பெட்டி தனியாக இருந்தபோதும் கனகா முதல் பெட்டியிலேயே ஏறினாள். சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் வெளியே செல்வதற்கு இதுதான் வசதி. ஆண்களைப் பார்த்து நெளியாமல் குறுகாமல் செல்லும் இவளின் உடல்மொழி ஆண்களை வழிவிட வைத்தது. கிடைத்த இடைவெளியில் நுழைந்து, சாய்ந்துகொள்ள வாகான ஒரு இடம் பார்த்து நின்றுகொண்டாள்.
கனகா, நேற்று பெற்றோர் சந்திப்புக்காக எட்டாவது படிக்கும் பையனின் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகம் செல்லவில்லை. வீட்டிலிருக்கும்போது, அழைப்பு வந்தால் பேசுவதைத் தவிர அலைபேசியை கையிலெடுக்க நேரமிருக்காது. அலைபேசியை எடுத்து புலனத்தைத் திறந்தாள். அலுவலகக் குழு பதிவுகளை முதலில் நோக்கினாள். அதில் பகிரப்பட்டிருந்த ஓர் ஆணையினைப் பார்த்தவுடன் நீண்ட நாளாக எண்ணிக் கொண்டிருந்த காஷ்மீருக்கு சென்று பனி மலைகளைக் கண்டது போன்ற பெருமகிழ்ச்சி மனதில் தோன்றியது. இவளால் வெறுக்கப்பட்டு “ஏழரை” என்று பெயர் சூட்டப்பட்ட, அலுவலகத்தின் உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த கண்டிப்பான உயரதிகாரி இவளது அலுவலகத்தில் பதவியேற்று ஒன்றரை ஆண்டாகிறது. அலுவலகத்தின் செயல்பாடுகளை நோக்கிய பிறகு, இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத் தலைவர்களுடன் மாதம் இரண்டு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார். எப்போதும் பார்க்கும் பணியைவிட கூடுதலாக, கூட்டத்திற்காக கோப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொகுத்து, கலந்து கொண்டவர்களுக்கு அனுப்புவது, அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பது என பணிச்சுமை அதிகரித்தது. ஒரே மாதிரியான பணிக்கு பழகியிருந்த கனகா, இந்தக் கூடுதல் பணியால் மிகுந்த மனச்சோர்வை அடைந்தாள்.
இவள் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு கூட்டம், நேற்று நிகழ்ந்ததுபோல இப்போதும் நினைவில் நின்றது. அகலமான நீண்ட மேசைக்கு அந்தப் பக்கம், மாடத்தில் வீற்றிருக்கும் மன்னர் போல இந்த உயரதிகாரி அமர்ந்திருக்க, மற்றவர்களெல்லாம் இந்தப்பக்கம் வணங்கியபடி தரையில் நிற்கும் குடிமக்களைப் போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார்கள். உள்ளே செல்லும்போதே அதிகாரியின் முகம் கடுத்து சிவந்திருந்ததை கனகா கவனித்தாள். அவருக்கு யாரால் என்ன மனவருத்தமோ. இவளால் ஆவதென்ன. நடந்துகொண்டிருக்கும் பணிகளின் தற்போதய நிலையைப்பற்றி வந்தவர்களிடம் அதிகாரி கேட்டபோது, கடந்த கூட்டத்தின் போது இருந்த நிலையையே இப்போதும் கூறினார்கள். மேலும் முகம் சிவந்த “ஏழரை” திரும்பி இவளை நோக்கியது. இவள் சற்று குறுகியபடி எழுந்து நின்றாள். “தினமும் வந்து ஏசியில தூங்குறீங்களா. இதயெல்லாம் கேக்கமாட்டீங்களா” என்று தொடங்கி எந்த வேலையும் பார்ப்பதில்லை, எதற்கும் பிரயோசனமில்லை எனத் தொடர்ந்து வசையாய் பொழிந்தார். அனைவரின் முன் குறுகி நின்றவளின் கால்கள் கோபத்தாலும் அவமானத்தாலும் லேசாக நடுங்கின. கண்கள் கலங்கி முகம் சிவந்து வீங்கியது. ஆனால் திட்டி முடித்தபோது, கருமேகம் பொழிந்தபின் வெண்முகிலாவதைப் போல ஏழரையின் முகத்திலிருந்த கடுப்பு மறைந்து இயல்பான தோற்றத்திற்கு வந்திருந்தது. ஆனால் கடுப்பு குடியேறிய முகத்துடன் மன்னிப்புக் கேட்டபடி அமர்ந்தாள் கனகா.
பணிக்கு சேர்ந்து பதினைந்தாண்டுகளில் இம்மாதிரி வசை வாங்கியது இதுதான் முதல்முறை. சாதாரணமாக இவளை கேள்வி கேட்டால், இயல்பாக அடுத்தவரை கைகாட்டி வசையை அவர் பக்கம் திருப்பிவிடுவாள். இந்த விசயத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள். மறுநாள் சென்று தன்னை வேறு அலுவலகத்திற்கு மாற்றுமாறு கோரிக்கைக் கடிதம் எழுதி அவரின் தனிச்செயலரிடம் கொடுத்தாள். போன வாரம் விசாரித்தபோதும் அதை ஏற்பதாகவோ மறுப்பதாகவோ எதுவும் எழுதப்படாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழரையின் மேசையிலேயே இருப்பதாகவே பதில் கிடைத்தது.
********
ரயில், மேம்பாலத்தினுள் நுழைந்து அம்பத்தூர் நிலையத்தில் நின்றது. செல்வம் தென்படுகிறாரா என்ற ஆர்வத்தோடு, ஏறுபவர்களையும் நடைமேடையில் நின்றவர்களையும் பார்த்தாள். எப்போதுமே ஆவடியிலிருந்து புறப்படும் ரெயிலில் முன்னதாகவே சென்றுவிடுவார் என்று அறிந்தபோதும் ஏனோ எதிர்பார்க்கத் தோன்றியது.
செல்வம், ஆறு மாதங்களுக்கு முன் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கனகாவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கனகா செய்த பணியை நாற்பது வயதில் இவர் செய்யத் தொடங்கினார். ஊரிலுள்ள எல்லா வேலைகளையும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பார்த்துவிட்டு கடைசி இரண்டு வருடங்கள் விற்பனையாளராகப் பணி புரிந்துவிட்டு, ஏதோவொரு உத்வேகத்தில் தேர்வெழுதி அரசுப் பணிக்கு வந்திருக்கிறார்.
பணியில் சேர்ந்த அன்று செல்வத்தைப் பார்த்த கனகாவிற்கு ஒருவித சலிப்பும் ஒவ்வாமையும் ஏற்பட்டது. இந்த வயதில் இருப்பவர் எப்படி உதவியாளர் பணியை செய்வார், இத்தனை வருடங்களாக ஒரு நிலையான வேலையை அமைத்துக் கொள்ள இவருக்குத் திறனில்லையே என்பது போன்ற எண்ணங்கள் தோன்றியது.
செல்வம் பணியில் சேர்ந்த ஒருவாரத்தில் கனகாவிற்கு ஒருபடி மேல் பதவியில் இருக்கும் அம்மையார் இவளை அழைத்து அவசர கடிதம் ஒன்றிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவினார். இவள் சற்றும் யோசிக்காமல் செல்வம்தான் கடிதத்தை என்னிடம் தெரிவிக்காமலேயே எனது மேசையில் வைத்துவிட்டார் என்று அவர்மேல் பழிசுமத்தினாள். ஒரு கணம் அதிர்ந்து திகைத்த செல்வம் செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்டு இனிமேல் இவ்வாறு நடக்காதென கூறினார்.
கனகாவிற்கே அவர் முகத்தைப் பார்த்தபோது முதல்முறையாக பாவமாக இருந்தது. இவளே, மறந்துவிட்டேன், இப்போதே நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். பெரிய தவறேதுமில்லை. ஆனால் வேலையில் சேர்ந்தபோது உண்டான, பயத்தினாலும் அச்சத்தினாலும் அடுத்தவர் மேல் பழியைப் போடும் பழக்கம் பதவி உயர்ந்த பிறகும் இவளிடமிருந்து மறையவேவில்லை.
அரசு அலுவகத்தில் எப்போதும் நிலவும் ஊமை அமைதி செல்வம் வந்தவுடன் குலைந்தது. இத்தனை வருடங்கள் வெளியே எப்படி இருந்தாரோ அதேபோல அலுவலகத்திலும் இருந்தார். இயல்பாகவே, செல்வம் பேசும் போது சத்தம் அதிகமாகக் கேட்கும். இவர் பேசுவது பிறருக்கும் கேட்குமென்பதால், அதில் ரகசியமோ அடுத்தவரைப் பற்றிய புரணியோ இருக்காது. மெல்லிய கேலியோடு பேசினாலும் புன்னகையோடு பேசுவதால் யாரும் மனம் புண்படுவதில்லை. இத்தனை வருடங்கள் வெளியே பணிபுரிந்துள்ளதால், வேலையைப் பற்றி உடலிலோ மனதிலோ அச்சத்தின் சாயல் தென்படவில்லை. பெரியவர்கள் மட்டும் உலவும் மந்தமான வீட்டில் குறும்புக் குழந்தையொன்று நுழைந்ததைப்போல, சோம்பலும் அலுப்பும் படர்ந்திருந்த அலுவலகம், செல்வம் வந்தபிறகு புதிதாக ஒளி கொண்டதாக கனகாவிற்கு தோன்றியது.
சில வாரங்களில் கனகாவிற்கு, செல்வம் மேலிருந்த சலிப்பு மாறி ஒருவித ஈர்ப்பு உண்டானது. பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே அரசுப் பணியெனும் இருட்குகைக்குள் நுழைந்தவள் சந்தித்த மனிதர்கள் அனைவரும் சம்பிரதாயமாகவே பழகினார்கள். அலுவலகத் தோழமையும் எப்போது காட்டிக் கொடுப்பார்களோ என்ற எச்சரிக்கையுடன், பிணைப்பில்லாமல்தான் இருந்தது. தன் பதவியையும் சம்பளத்தையும் கருதி மணந்து கொண்ட கணவனிடமும் பெரிதாக இணக்கம் இல்லாமல் மெல்லிய விலகல் இருந்தது.
கச்சிதமான உடற்கட்டுடன் பார்க்க அழகாக இருக்கும் தன்னிடம் பேசுவது போலவே ஒல்லிப்பிச்சானாய் பல்லி போல தோற்றமளிக்கும் தட்டச்சு செய்யும் பெண்ணிடமும், அகன்ற நெற்றியில் பெரிய குங்குமம் வைத்த அலுவலக தூய்மைப்பணி புரியும் நடுத்தர வயதுப் பெண்ணிடமும் எல்லா ஆண்களிடமும் செல்வம் பேசிப் பழகியது கனகாவிற்கு ஆச்சர்யமளித்தது.
செல்வத்தை அழைத்த கனகா “எப்படி எல்லோரையும் ஒரே மாதிரி பாக்கறீங்க” எனக் கேட்டாள்.
சற்று யோசித்தவரின் முகபாவனை, சொல்ல வேண்டியதை தனக்குள்ளேயே தொகுத்துக் கொள்வதுபோலத் தோன்றியது. “நான் விற்பனையாளர் பணிக்குச் சென்றபோது, வாடிக்கையாளர்களை வேறுபடுத்திப் பார்க்காமல், அவங்களோட கண்களை பார்த்து ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவ மனசக் கவர்கிற மாதிரி பேசக் கத்துக்கிட்டேன்” என்றார்.
“வர்றவங்க ஏதாவது குறை சொல்லிட்டு பொருள வாங்காம போறப்ப உங்களுக்கு கோபம் வராதா”
“கோபம் வெறுப்பு எல்லாந்தான் வரும். ஆனா, ஒண்ணும் செய்யமுடியாதுல்ல. அதனால, அதை அப்படியே சிரிப்பாலேயே மறச்சுக்கிட்டு அடுத்த ஆளப் பாக்க வேண்டியதுதான்” என்று சலிப்போடு உதட்டைச் சுழித்துக் கூறியபோது அவரின் கண்ணில் கூர்மையான மின்னலொன்று தோன்றி மறைந்தது.
செல்வம் அவரின் குடும்பப் புகைப்படத்தை ஒரு நாள் காட்டினார். இரண்டு பிள்ளைகளுடன் நின்றிருந்த அவரின் மனைவியின் முகம் நிறைவில் மலர்ந்திருந்தது. மற்றவர்களின் பிழைகளை மட்டுமே கருதுவது போலவே, தன்னிடம் இல்லாததை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் தன்னால், அந்தப் பெண்போல நிறைவாகப் புன்னகைக்க எப்போதுமே முடியாது எனப் புரிந்தபோது, பெரிய ஏக்கம் கனகாவின் மனதை அழுத்தியது.
கீழ், மேல் பதவி என்று பாராமல், அனைவரையும் மனிதர் என்று மட்டும் பார்த்து பழகும் செல்வம் இவளுக்கு அதிசயப் பிறவியாகத் தெரிந்தார். எந்த எதிர்பார்ப்புமின்றி சாலையோரச் கள்ளிச் செடியில் பூத்திருக்கும் நீல மலர் போலவும், யாராகயிருந்தாலும் தன் சிறிய மென்மையான வாலை ஆட்டியபடி வந்து கால் பாதங்களில் மூக்கால் உரசும் நாய்க்குட்டியைப் போலவும் திரிந்த செல்வத்தை பார்த்துக் கொண்டிருப்பதே இவளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுப்பவள் இப்போதெல்லாம் மிகவும் அவசியம் என்றால் தவிர விடுப்பு எடுப்பதில்லை.
எப்போதாவது உயர் அதிகாரியிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தால், வேறிடத்திற்கு மாறுவதற்கு அனுமதி அளித்துவிடுவாரோ என்று சற்று பதட்டம் ஏற்படும். எதுவும் எழுதவில்லை என உயரதிகாரியின் தனிச்செயலர் கூறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் உள்ளுக்குள் துள்ளியபடி வெளியேறுவாள்.
. ********
மின்தொடர் வண்டி சென்னை சென்ட்ரலில் நின்றவுடன் வேகமாக இறங்கி, முகத்தில் மோதும் எதிர்வெயிலை தாங்கியபடி செல்லும் மனிதப் பிரவாகத்தோடு கலந்து வழிந்து வெளியேறினாள். அங்கிருந்து பேருந்தேறி அவள் பணிபுரியும் உயர்ந்த கட்டடத்தை அடைந்தாள். பெரும் வெறுப்பளித்த உயரதிகாரி மாறிப் போய்விட்டார். மனதிற்குள் அமைதியை நிறைக்கும் செல்வம் பணியாற்றும் இடத்திலேயே அவரைப் பார்த்தபடியே தொடர்ந்து இருக்கலாம் என்பது வாழ்வில் இதுவரை அடையாத பெரும் கிளர்ச்சியை மனதில் ஏற்படுத்தியது.
அலுவலகத்திற்குள் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து சுற்றிலும் நோக்கினாள். செல்வத்தின் இருக்கை காலியாக இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தது. திரும்பி வாயிலைப் பார்த்தபோது மலர்ந்த முகத்துடன் செல்வம், இவளை நோக்கி வருவது தெரிந்தது. அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது.
“மேடம், அன்னிக்கி சொன்னீங்கல்ல, மாறுதல் வேணும்னு கடிதம் கொடுத்திருக்கேன், இன்னும் கையெழுத்தாகலைனு” என்று செல்வம் கேட்டதற்கு “ஆமாம், அதற்கென்ன அவரைத்தான் மாற்றிவிட்டார்களே” என்றாள் கனகா.
“நேற்று சாயங்காலம் உயரதிகாரி மாறப்போறாருன்னு செய்தி கெடச்சவுடனே உங்க ஞாபகம் வந்துச்சு. அவரு அறைக்குப் போயி அவரோட தனிச்செயலர்கிட்ட சொன்னேன். அவரும் உள்ளே போய் உங்க மனுவை ஏத்துக்கறதா கையெழுத்து வாங்கிட்டாரு. நீங்க நெனச்ச மாதிரியே வேற எடத்துக்குப் போகலாம்” என்று செல்வம் கூறியதை முழுதாக உள்வாங்காமல், அவரின் விழிகளில் மகிழ்ச்சியுடன் தெறித்த “நினைத்ததை எப்படி முடித்தேன் பார்த்தாயா” என்று கேட்கும்படியான இறுமாப்பை திகைப்புடன் நோக்கினாள்