நேர்ச்சை – பானுமதி சிறுகதை

சிவன் கோயிலை ஒட்டி அதன் வடக்கே அந்தக் குளம் இருந்தது. நாற்புறமும் படிக்கட்டுகள் சீராக அமைக்கப் பட்டிருந்தன. நடுவில் நீராழி மண்டபம் காணப்பட்டது. மெல்லிய அலைகள், காற்றுக்குத் தன்னை ஒப்புவித்த இரகசியங்களைச் சொல்லின. குளத்தின் கீழ் படிக்கட்டில் கூட சப்பணமிட்டு அமரலாம் போலிருந்தது. பெரிய குளம். நீர் பளிங்கு போல் தெளிவாகத் தெரிந்ததில் வானம் ஒரு கடலென அதில் இறங்கி வந்ததைப் போலத் தோன்றியது. வட மேற்கில் குளத்தை ஒட்டிய பெரும் திண்ணை போன்ற அமைப்பில் அரச மரத்தின் கீழ் காலத்தின் சாட்சியாக பிள்ளையார் ப்ரும்மாண்டமாக அமர்ந்திருந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்தவற்றைத்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் அருகில் முணுக்முணுக்கென்று ஒரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. சுடரின் திசையைத் திருப்பி அதை அலைக்கழியாமல் செய்துவிட்டு ஒரு பெண் அவர் முன்னே கைகளைக் கூப்பி நின்றாள்-என்ன வேண்டுதலோ, முகம் நெகிழ்ந்து இறைஞ்சிக் கொண்டிருந்தது.

குளத்து நீரில் அந்த முகம் எழும்பி வந்தது; இவளைப் போலவே உடைந்து அழக் கூடுமென அச்சம் தந்த முகம். அரிய நாச்சி அம்மனின் கரு விழிகள் உறுத்துப் பார்த்திருக்க நான் நிலை கொள்ளாமல் தவித்த அந்த நாள். அம்மன் சின்னாளப் பட்டில் செம்மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்; நெற்றியில் படியும் கருங்குழற் கற்றையை சிறிதே காட்டி முடியை முற்றும் மறைத்திருந்த அந்தக் கிரீடம். அம்மன் அடியாளும் முடியற்றுத் தானிருந்தாள். அந்தத் தலையை மறைத்தது அவளது சேலை முந்தானை. அம்மனின் முகவாய்க்குழிவும், அவளின் கொங்கைகளிடையே வளைந்து இறங்கிய ஆரமும், இடை மேகலையும், வலது கரத்தில் ஏந்திய சூலமும், இடது கை சுட்டிய திருப்பாதமும்… என் கண்கள் அம்மனின் கணுக்காலையே பார்த்தன. வலக்காலை இடது தொடையில் வைத்து அமர்ந்திருந்த அந்தக் கோலத்தில் நான் நட்சத்திரக் குறி கொண்ட அந்தக் கணுக்காலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் காவி நிறத்தில் சேலையும், வெள்ளை நிறத்தில் இரவிக்கையும் அணிந்திருந்தாள். பின் கொசுவம் வைத்து கிராமத்துப் பெண்களைப் போல் சேலை கட்டியிருந்தாள். முண்டனம் செய்த தலை, அதில் சேலைத் தலைப்பையே முண்டாசு போல சுற்றியிருந்தாள். கடைசல் பிடித்த தேகம், சராசரியை விட அதிக உயரம், கைகள் கால் முட்டியைத் தொட்டன. நகைகள் எதுவும் அணியவில்லை, கழுத்தில் மட்டும் ஸ்படிக மணி மாலை இருந்தது அவளது வலது கணுக்காலிலும் அதே நட்சத்திரக் குறி.

வில்வம், கொன்றை, நந்தியாவட்டை, நாகலிங்க மரங்கள் கோயில் வளாகத்தில் காணப்பட்டன. இப்போது நான் உட்கார்ந்திருக்கும் குளத்திற்குத் தெற்கேதான் இந்த அம்மன் கோயில். நான் அரிய நாச்சி அம்மனை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். சியாமா இன்னமும் அங்கேதான் இருக்கிறாள். சியாமாவின் பிடிவாதம் தெரிந்த ஒன்றுதான் எனக்கு.

நாகஸ்வர ஒலி சிவன் கோயிலிலிருந்து வந்தது. பளபளவென்ற செப்புக் குடங்களில் குளத்தில் நீர் சேந்த வருகிறார்கள். நீர் நிரப்பும் சமயத்தில் ருத்ரம் சொல்லப்பட்டது; நிரம்பிய குடங்கள் கோயிலை நோக்கிச் செல்கையில் அப்பர் பாடலான ‘யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது’ என்ற பாடலை ஓதுவார் பாடுகையில் விதிர்த்துப் போனேன். சுவடே தெரியாமல் தான் நான் அதைச் செய்தேன்; கண்ணீர் ததும்பும் அவள் முகம் என்னிடத்தில் அதைத் தான் கேட்டது. அந்த நேரம் நான் அம்மனை நினைக்கவில்லை, இவர்களின் மரபை, தொன்மத்தை எதையும்…அந்தப் பசுங்குடில், மண் மெழுகிய தரை, மண் விளக்கு, மண் சட்டிகள், மண் கூஜாக்கள், மண்ணாலே திண்டமைத்துச் சமைத்த படுக்கை என்னை வேறொரு உலகிற்குக் கூட்டிப் போயிற்று.

நான் ஒரு தனி ஆய்வாளன். ஊர்களைச் சுற்றுவதில் தான் என் இருப்பையே உணர்வேன். ஒவ்வொரு இடமாகப் போய் அவர்களிடம் இருக்கும் வாழ்வியல் முறைகள், அவர்கள் கொண்டாடும் தெய்வங்கள் மற்றும் பண்டிகைகள், அவர்களிடம் சொல்வதற்கு மீதமுள்ள கதைகள் எனக்குப் பிடித்தமானவை. நீங்கள் கூட படித்திருக்கலாம்- ‘சஞ்சாரி’ என்ற பெயரில் நான் எழுதும் கட்டுரைகளை. என்னது-படித்ததில்லையா? நிஜங்கள் பிடிக்காது போலிருக்கிறது உங்களுக்கு. நான் சுவடிகள் படிப்பேன். அப்படித்தான் கிராமமும் இல்லாது நகரமுமில்லாது இருக்கும் இந்த ஊருக்கு ராகவன் சொல்ல வந்தேன். அவன் என் அண்ணன். நான் பிறப்பதற்கு முன் எங்கள் குடும்பம் இங்கே வசித்ததாம். அங்கே வந்த போதே ஏதோ பரபரப்பாக உணர்ந்தேன். என் உள் மனம் ஓடு ஓடு என்றது. இல்லை, என்னால் முடியவில்லை. நான் இருபது நாட்கள் தங்கினேன். சியாமா பிறந்த அன்று இரவில் அவளைக் கடத்தி ராகவனிடம் கொடுத்து ஜபல்பூருக்கு அனுப்பி வைத்தவன் நான்.

திரும்பவும் மேளச்சத்தம் கேட்டது. ‘சக்கனி ராஜ’ பாடலை ஆரம்பித்தார் அவர். ஆம், நல்ல பாதை இருக்க சந்து பொந்துகளில் அலையும் மனதை மாற்று இராமா என்று இறைஞ்சுகிறார் தியாகையர் இதில். ஆம், அவள் அப்படித்தான் கேட்டாள். அந்த மண் அறையின் பின் பாகத்தில் இரு பிரிவாகப் பிரிந்த நந்தவனம் பூக்களால் செழித்து வாசனையால் அழைத்தது. வளர்பிறையின் பதினான்காம் நாள் நிலவு வானில் பூரித்திருந்தாள். வெள்ளிக் கிரணங்கள் செடி, கொடி, பூக்களின் மேல் இருள் ஒளியென தவழும் காற்றில் மாயம் காட்டின. அர்த்தஜாம பூஜைக்காக அடித்த கோயில் மணி ரீங்கரித்துக் கொண்டு சுனாதமாகக் கேட்டது. நீண்ட பளபளப்பான வாலுள்ள பறைவைகள் இரண்டு கிளையிலிருந்து எழுந்து தாவிப் பறந்து சிறு நடனமிட்டு கூட்டுக்குத் திரும்பின. கொடி சம்பங்கி எங்கோ மறைந்திருக்கிறது தன் வாசத்தை மட்டும் என் நாசிக்கு அனுப்பி விட்டு. நான் இரவுப் பறவை. மூக்குத்திகள் மினுக்கும் வானம், இன்று நிலவின் ஒளியில் சற்று மங்கல்தான். ஒலிகள் அடங்கிய இந்தச் சூழல் மனிதர்களிடம் நிறையப் பேசுகிறது. அந்த மண் குடிலைத் தவிர ஆலய வளாகத்தில் மின் விளக்குகள் இருந்தன. அந்த நந்தவனத்தை ஒட்டி அமைந்திருந்த பெரிய அறையில் பிரிவு வாரியாக அடுக்கப்பட்டிருந்த ஏடுகளைப் படித்துக் கொண்டிருந்தவன் நிலாவில் நனைய சற்று வெளியில் வந்தேன். அதன் முகப்பில் அவளை எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோயிலின் வாழும் அம்மனென நேர்ந்து விடப் பட்டவள் அவள். அம்மனின் தினப்படி அலங்காரம் அவள் பொறுப்பு. மாலைகட்டுவது, சந்தனம் அரைப்பது, காலை, மதியம், மாலை, இரவு என்று நாலு வேளை பூஜையின் போதும் சங்கு ஊத வேண்டும்; அம்மனுக்கான நிவேதனங்களை அவள் தான் செய்ய வேண்டும். ஆடிக் கொடை, ஆவணி ஞாயிறு,, புரட்டாசி அஷ்டமி, மார்கழி ஆதிரை, தைப் பூசம் ஆகிய நாட்களில் பரிவட்டம் அவளுக்குத்தான் முதலில் கட்டுவார்கள்.

அந்தக் கோயிலில் அம்மனுக்கு சிலை செய்தவன் எப்படி அப்படி ஒரு நட்சத்திரக் குறியை கணுக்காலில் அமைத்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவளின் முப்பாட்டனாருக்குப் பாட்டனார் கோயில் கட்டி அதில் அரிய நாச்சியை உக்கிர முதல் தெய்வமென வழிபட ஆசைப்பட்டாராம். அவருக்குக் குழந்தைகளில்லை. ‘கருணையும், சாந்தமுமாக உன்னை நினைத்திருந்தேன்; உன் அழகில் ஒரு குறையில்லை;ஆனால், ஏன் பல முறை செதுக்கியும் அந்தக் குறி உன் பாதத்தில்?மூளியான சிலை என்று கோயிலையே கை விட இருந்தேன். ஒரு நாடோடி வந்தார்-“அம்மா வந்திருக்காடா, பரதேசிப் பயலே;கட்றா கோயில.” மறு பேச்சு உண்டா அதுக்கு?’ கோயில் சின்னதாக, நந்தவனம் பெரிதாக முதலில் இருந்திருக்கிறது. இப்போது பிரகாரத்தைப் பெரிதாக்கியிருக்கிறார்கள்; ஆனால் மரங்களை அழிக்கவில்லை.

ஒரு குழந்தைக்காக ஏங்கி ஏங்கி அவர் அம்மனையே சுற்றியிருக்கிறார். அவர் மனைவியோ அவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள். அவள் கண்ட கனவைச் சொல்லும் முதல் ஏடு இன்னமும் இங்கிருக்கிறது. “ஆயிரங் கண்ணுடையாள்;கையில் அமுதக் குடமுடையாள்; தாயாக வரம் தந்தேன்; குறியோடு குதலை வரும்;அதை மகிழ்வோடு எனக்குத் தா;பின்னும் பேறுண்டு;பெண் மகவு என் ஆணை” என்றாள்” என்று அந்த அம்மா புன்னகையும், வருத்தமுமாக அழுதிருக்கிறார். முதல் பெண் வலது கணுக்காலின் மேலே நட்சத்திரக் குறியோடு பிறக்க முதல் வருட நிறைவில் அவள் கோயிலுக்கு நேர்ந்து விடப் பட்டிருக்கிறாள். அவளுக்குப் பிறகு பிறந்த இரு ஆண்குழந்தைகளுக்கு அக்குறிகளில்லை. சொல்லி வைத்தது போல் ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் முதல் பெண் குழந்தை அப்படித்தான் பிறந்திருக்கிறது. கணக்குப் படிப்பும், ஜோதிடமும், திருமுறைகளும், எழுதுவதும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒரு கட்டளையென இதைச் செயல்படுத்த வேண்டி ஏடுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.

வாசலில் நின்றிருந்த வாழும் அம்மனை நான் வணங்கினேன். கண்களில் நீர் கோர்த்து முத்துச் சரம் போல் கன்னங்களில் ரச மணியாக உருண்டது.

“உன்னிடம் ஒரு உதவி வேண்டும்; அதை இரகசியமாகச் செய்ய வேண்டும். ஒரு அரை மணிக்கு முன்னால் பெண் பிறந்திருக்கிறாள், காலில் அந்தக் குறியோடு; பிள்ளை இன்னும் அழவில்லை; தாய் மயக்கத்தில் இருக்கிறாள். இந்தக் குழந்தையை எங்காவது எடுத்துக்கொண்டு போய்விடு. இந்த மண் சூழ்ந்த வாழ்க்கை என்னோடு போகட்டும். நான் அம்மனின் அடியாள் தான். ஆனால், என் வாழ்க்கையில் அவளுக்குத் தானே முக்கிய இடம். என் இளமை, என் கனவு, என் குடும்பம் என்று எதுவுமே இல்லையே; என் தனிமைகள் இவர்கள் அறியாத ஒன்று. திரும்பத் திரும்ப செய்யும் இதில் ஒரு யந்திரத்தனம் வந்து விட்டது. என்னால் முடிந்தது இவளை உன்னிடத்தில் கொடுப்பதுதான்.”

நான் திகைத்தேன்; இது என்ன விபரீதம்? இவர்களின் குல தர்மப்படி இந்தக் குழந்தை கோயில் சொத்தல்லவா? பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நான் எங்கு போவேன்? நான் அவளுக்குப் பதில் சொல்ல வாயெடுத்தேன். அவள் குழந்தையை என் காலடியில் வைத்தாள். பதறினேன்.

“பயப்படாதே. உன் தகப்பனை எனக்குத் தெரியும். அவர் எனக்குத் தோழனாக இருந்தவர்; அதனாலேயே அவமானப்பட்டு துரத்தப்பட்டவர். உடலை வைத்து கன்னிமையைக் கணிக்கும் இந்த உலகில் நான் இன்னமும் கன்னிதான்; அவர் குரு எனக்கு. போ, எடுத்துக் கொண்டு போ. உன் காரில் எல்லாம் வைத்திருக்கிறேன். உன் அப்பாவின் நல்லொழுக்கத்தின் மீது ஆணை.”

காரில் சிறு பிரம்புத் தொட்டிலில் படுக்கை போட்டு முன்பக்க சீட்டின் அடியில் வைத்திருந்தாள். இரு ஃப்ளாஸ்க்-வென்னீரும், பசும் பாலும்; அதில் சிறு குறிப்பு; குட்டிஃபீடிங் பாட்டில், இங்க் ஃபில்லர், முக்கோண முக்கோணங்களாய் தைத்து அடுக்கப்பட்ட நாப்கின்கள். ஆறு சிறு துண்டங்கள்-நுனியில் முடிச்சிட்டு குழந்தைக்கு அணிவிக்க. மற்றொரு கூடையில் எனக்கான பழங்கள், தண்ணீர். நான் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் பெட்டி, என் குறிப்புகள் உள்ள புத்தகங்கள், என் இதர சாமான்கள் டிக்கியில் ஏறின.

நான் கிராதிக் கம்பிகளுக்கிடையே தூங்கா விளக்கில் அரிய நாச்சியைத் திரும்பிப் பார்த்தேன்; அம்மன் உறுத்துப் பார்ப்பதைப் போல், சூலத்தை ஏந்தி அருகில் வருவது போல், என் உடல் சிலிர்த்தது. இதுவும் அவள் செயல்தான் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

ராகவன், சியாமாவை ஏற்றுக் கொண்டது பெரிதில்லை; அமுதா அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அவள் காரில் பதுக்கி வைத்திருந்த கடிதத்தை நிதானமாகப் படித்தேன்.

“ஆசிகள். இந்த விண்மீன் குறி எனக்குப் புரியாத ஒன்றுதான். அதில் ஏதோ செய்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும். இந்த வாழ்வு இதன் மூலம் விதிக்கப்பட்டதைத் தவிர நான் ஒரு செய்தியும் அறியவில்லை. ஆனாலும், இந்த விந்தையை முற்றாகத் தள்ள முடியவில்லை. ஏன் தலைமுறை விட்டு தலைமுறை இப்படிப் பெண் பிறக்க வேண்டும்? ஏன் ஆண் குழந்தைகள் இக்குறியில்லாமல் பிறக்கின்றன? என் முப்பாட்டனாரின் பாட்டானார் மனைவி அம்மனிடம் தன் முதல் பெண்ணை நேர்ந்து விடுவதாக வேண்டிக் கொண்டிருக்கலாம்; அதை அம்மனின் கட்டளையெனச் சொல்வதை வசதியாக உணர்ந்திருக்கலாம். அவள் அம்மன் பெயரைச் சொல்லி இதைச் செய்ததால் அப்படியே தொடரட்டும் என்று அம்மனும் விளையாடிக் கொண்டிருக்கலாம். எதுவாகத்தான் இருக்கட்டுமே.

உனக்கு சில கேள்விகள் இருக்கலாம். அன்று பிறந்த குழந்தைகள் இரண்டு. ஆனால், அந்த இன்னொரு பெண் குழந்தைக்கு நட்சத்திரக் குறியில்லை. உன்னிடம் கொடுத்த குழந்தைக்குத்தான் இருந்தது. யாரும் அருகிலில்லை; இரு குழந்தைகள் பிறந்தது அவர்களின் அம்மாவிற்கே தெரியாது. எனக்கு இது எவ்வளவு வசதி! நீ நன்றாக வளர்த்து அவளை எல்லோரையும் போல் வாழவிடுவாய் என எனக்குத் தெரியும்; நீ என் குருவின் மகன்.

நான் இன்னும் தீவிரமாக அம்மனிடம் பக்தி செய்வேன். என் விழைவுகள் வேறாக இருந்தாலும், நான் அம்மனின் அடியாள் தான். அப்படித்தான் இருக்கவும் முடியும். இனி நட்சத்திரக் குறியோடு பிறப்பவர்களை என்ன செய்வாய் என நீ கேட்கலாம்; அது காலத்தின் கையிலுள்ள பதில். ஆசிகள்.”

அரிய நாச்சி கோயிலிலிருந்து சியாமா குழப்பங்களுடன் வந்தாள்.’ சித்தப்பா, இந்த ஸ்டார் மார்க்’ என்றாள். “நீ பயோ டெக் படிக்கிறாய் கண்டுபிடி” என்றவாறே காரை இயக்கினேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.