உரையாட வரும் எந்திர இரவு
கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம்
நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு
நகர்ந்து கொண்டேயிருக்கிறது
இரவின் தூரத்தைக் கடக்க
மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன
பறந்து கொண்டேயிருக்கின்றன
வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்
இப்போது பூமி சுழல்கிறது
சுழன்று கொண்டேயிருக்கிறது
ஜாமத்தின் பிரதிகளில்
ஆதியிரவைத் தேடி அலைகிறது
விழிப்பின் அஸ்தமனம்
அலைந்து கொண்டேயிருக்கிறது
தூக்கத்தின் தளத்தில் நுழைந்ததும்
விளம்பரக் கனவுகள் தாண்டி
உரையாட வரும் எந்திர இரவு
இதைத் தான் நாள்தோறும் சொல்கிறது
சொல்லிக் கொண்டேயிருக்கிறது
தூக்கம் விட்டதோ
விடியல் தொட்டதோ
பவழமல்லிகள் உதிர்கின்றன
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன
அணில்கள் கீச்சிடுகின்றன
கீச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன
மாங்குயில் கூவுகிறது
கூவிக் கொண்டேயிருக்கிறது
கடலில் கலக்கும் கவிதை
வெறும் புல்லின்
சிறு கையின்
பனிக்கோளத்தில் இந்தப்
பெறும் பூங்காவின்
பேருலகை அடக்கி
பெரும்பாறாங்கற்களையும்
துளி உளி கொண்டு
உருமாற்றி
காணி நிலத்தில் நடக்கும்
ஜோடிக் குதிரைகளுக்கு
காதலையும் காலை உணவையும் அளித்து
வெந்து தணிந்த நாட்டில்
ஒரு குடம் குளிர் மழைக் காற்றை
நிதம் முகம் முழுவதும் ஊற்றி
அவமானப்படுத்தப்பட்ட இடத்திலேயே
அனுமதிக்கப் பணித்து
அன்பு புரிந்து
அதிகாலையில் பறவைகளை எழுப்பி
எமக்காகப் பாட வைத்து
என் இடது காதில் துடிக்கும்
கடலின் இதயத்தை
புல்லாங்குழலின் குழிகளில்
இசையாக்கிப் புதைத்து
அடர்ந்த காடுகளில்
இன்னும் பல கோடி நூற்றாண்டுகளுக்கான
இசையை உலவ விட்டு
என் வலது காதில் ஊளையிடும்
காமத்தின் கோரப் பற்களை
ஒரு ஆப்பிளுக்குள்
அடக்கம் செய்து
பறந்து போய் மரக்கிளையில் அமரும்
ஆட்டுக்குட்டிகளைப் பிரசவித்து
பிறகு
இந்தக் கவிதை
போய்க் கலக்கிறது
தன் கடலில்