விழுகின்ற நீரின் ஒலிகளால்
வரைகின்றான் குளிக்கும் உடலை
பெரிதாக விரியும் பறவை
துளியாக ஒடுங்கும்போது
கண் மட்டுமே துடிக்கிறது
இரவில்
அமைதியாகத் ததும்பும்
கடலின் உள்ளே
தூங்காத நீரோட்டங்கள்
வரைந்து கொண்டே இருக்கின்றன
காணாத உடலை
அப்போதும்
கண் மட்டுமே துடிக்கிறது
—
குளித்து விட்டு வரும் உடலுக்காக
காத்திருக்கின்றன ஆடைகள்
ஒலியை உறிஞ்சும்
பூட்டிய அறைக்கு வெளியே
உடலும் உடையும் பொருந்துவது
கசிகிறது அரூபமாக
நெஞ்சுச் சூட்டில் கொளுத்துபவன்
கற்பூரமாக்கி வாய்க்குள் அதக்குகிறான்
உள்ளே எரிகின்றன
ஒலிக்காத உடலும்
பிய்த்தெறியப்படும் ஆடைகளும்