ஐ கிருத்திகா
” என்னத் தெரியிதா……?”
அவள் குனிந்து நெஞ்சில் கைவைத்துக் கேட்டாள். சிவப்பு கலரில் பெரிது, பெரிதாய் பூப்போட்ட புடவை கட்டியிருந்தாள். ரத்த சிவப்பில் முகத்திலறைகிறமாதிரி இருந்தது அவள் உடுத்தியிருந்த புடவை. தெரியும் என்று தலையாட்ட சின்னப்பொண்ணுக்கு தயக்கமாயிருந்தது. அந்த முகம் எப்போதோ கனவில் ஒருநொடி தோன்றி மறைந்த முகம் போல் அவளுக்குப்பட்டது. மூளையின் ஞாபக அடுக்குகளில் ஒரு தீர்க்கமான உருவமாக அது பதிந்திருக்காமல் அலசலாக இருந்ததில் சின்னப்பொண்ணு லேசாக இதழ் பிரியாமல் புன்னகைத்து வைத்தாள்.
அடுக்கடுக்கான படிமங்கள்…….ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்ட படிமங்கள். கோப்புகள் போல் மூளையில் ஏராளமான ஞாபகப்படிமங்கள். அடியிலிருந்து உருவமுடிந்ததேயொழிய மேலுள்ளதை அசைக்கக்கூட முடியவில்லை. ரொம்ப யோசித்தால் அடுக்குகள் குலைந்தன. கருப்பு வெள்ளையில் சிலதும், வர்ண சிதறல்களாய் சிலதும் கலந்து கட்டி நவீன ஓவியம் போல புரியாமல் குழப்பின. சின்னப்பொண்ணு மெதுவாக கால்களை நீட்டி கைகள் ஊன்றி இடுப்பை நகர்த்தி படுத்துக்கொண்டாள்.
” இது எப்புடி சின்னம்மாவுக்கு வந்துச்சு….?”
சிவப்புப் புடவை கேட்க, அந்த வீட்டிலியே இருப்பவள் முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டு தலையாட்டினாள்.
“அதான் அத்தாச்சி எங்களுக்கும் புரியல. டாக்டர்ட்ட அதப் பத்தி கேட்டா, இப்பெல்லாம் இது ரொம்ப பேருக்கு வருதுங்குறாரு.”
அவள் சொல்லிவிட்டு எழுந்து கொல்லைப்பக்கம் செல்ல, சிவப்புப் புடவைக்காரி சின்னப்பொண்ணைப் பார்த்தாள். சின்னப்பொண்ணு பார்வையை தழைத்துக்கொண்டாள். இருவரும் தன்னைப்பற்றித்தான் பேசினார்கள் என்பது அவளுக்கு புரியாமலில்லை.
‘ அதென்னவோ வந்துவிட்டதாக இவள் என்னைக்காட்டி கேட்க, அவளும் ஆமாம் சாமி போட்டாளே. அப்படியென்ன எனக்கு தெரியாமல் நாசூக்காய் எனக்குள் வந்து உட்கார்ந்துகொண்டது….’
யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
என்னத் தெரியிதா என்று கேட்டதை வைத்து அவள் ஏற்கனவே அறிமுகமானவள்தான் என்கிற ஐயமில்லா தீர்மானத்துக்கு சின்னப்பொண்ணு வந்திருந்தாள். ஆனால் யாரென்று தெளிவாகவில்லை. நிறைய யார்- கள் அவளெதிரே வந்து, என்னைய ஞாபகமிருக்கா என்கிறார்கள். ஒங்க பேரென்ன என்று கூட கேட்கிறார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு சுருக்கென்று கோபம் வருகிறது.
” சி….சின்னப்பொண்ணு…..” என்கிறாள் மெலிதாக.
” புருசன் பேரென்னா…?”
அன்று வந்த உயரமான ஆசாமி புருவம் உயர்த்தி கேட்க, சட்டென்று மனதில் ஒரு வெளிச்சப்புள்ளி விழுந்து அது அப்படியே பற்றிப்படர்ந்து சுடர் விட்டது.
முகத்தில் ஆயிரம் விளக்குகளின் ஒளி, கண்களில் நட்சத்திர ஜொலிப்பு.
” புருசன் பேரச் சொல்லு…”
” பேரு….சொல்லக்கூடாது….”
சின்னப்பொண்ணு முனகினாள்.
” ஏனாம்…?”
” அது…..அது அப்புடித்தான்….”
” என்னவோ போ…ஒந்தலையெழுத்து இந்தமாரி ஆவும்னு நான் நெனக்கவேயில்ல.”
அவர் முணுமுணுத்துவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார்.
சின்னப்பொண்ணு மெல்ல எழுந்து வாசல் பக்கம் வந்து நின்றாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. மாலைவரை கொளுத்திய வெயில் அடங்கி நிலவு மெல்ல எட்டிப்பார்த்த இரவில் காற்று லேசாக வீசியது . வெக்கை காற்று. காலடித்தடங்களின் மிச்சங்களை சுமந்து கிடந்த தெருப்புழுதியில் அவளின் பார்வை நிலைத்து மீண்டது.
” எப்பப் பாத்தாலும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்கும். எல்லாம் பழங்கததான். தீவாளிக்கு அப்பா வாங்கிக்குடுத்த சீட்டி பாவாடைய கட்டிக்கிட்டு மத்தாப்பூ கொளுத்துனது, பதினாலு வயசுல வயசுக்கு வந்தது, புட்டு சுத்துனது, பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்குனது, தாமர க்கொளத்துல நீச்சலடிச்சது, வேப்பம்பழம் பொறுக்குனது, டென்ட்டு கொட்டாயில மணல் குமிச்சி ஒக்காந்து சினிமா பாத்ததுன்னு மாத்தி, மாத்தி எதையாவது சொல்லிக்கிட்டேயிருக்கும்.”
சற்று தடிமனான அவன் சொல்ல, அந்த வீட்டிலேயே இருப்பவள் தொடர்ந்தாள்.
” ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கிம் அத சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் என் மாமனாரு பொண்ணுப் பாக்க வந்தது, இவுங்கள கட்டிக்கிட்டது, புள்ளைங்க பொறந்ததுன்னு அம்புட்டையும் வாய் ஓயாம சொல்ல ஆரமிச்சாங்க. அதுவும் மெல்ல, மெல்ல கொறஞ்சி இப்ப பேச்சே கெடையாது. ஏதாவது கேட்டா யோசனையா பாப்பாங்க. நாலஞ்சி தடவ அழுத்திக்கேட்டா, வாயத் தொறப்பாங்க. பேருமட்டும் ஞாவகம் இருக்கு. கேட்டா சொல்லிடுவாங்க. மத்ததுக்கு இஸ்டமிருந்தா சொல்றது, இல்லாட்டி வாயடைச்சி ஒக்காந்துருக்கறது….இப்புடித்தான் போவுது.”
அவள் சொல்லிவிட்டு அமைதியானாள்.
ஒரு கனத்த மௌனம் அடர்த்தியாய் அங்கு பரவிக்கொண்டது. அவர்கள் பேசியதை, தெருவை வெறித்துக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு கேட்டுக் கொண்டுதானிருந்தாள். சிலசமயம் பேச்சை உள்வாங்கும் மனம் அநேக நேரங்களில் வெட்டவெளியாய் வெறிச்சோடிக்கிடக்கும். சுற்றுப்புற சலனங்களால் ஒரு துரும்பளவும் பாதிப்பு ஏற்படாதமாதிரி அவள் கல் போல் அமர்ந்திருப்பாள்.
எல்லோரும் ஏன் தன்னைப்பற்றியே பேசுகிறார்கள் என்பது மாதிரியான ஐயம் வெகு அபூர்வமாய் ஏற்படும். அரவமற்ற குளத்தில் ஒரு சிறு கல்லை விட்டெறிந்து வட்ட நீர்ப்பரப்புகளை உருவாக்குவது போல உள் விழும் ஐயம் சுழன்று, சுழன்று மெல்ல அமிழ்ந்து போகும். அவள் முன்னே கேள்விகள் குவிந்து கிடக்கின்றன. எளிதான கேள்விகளும், அதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற தெரிந்த பதில்களும். எல்லாமே கடினமான கேள்விகளாக அவளுக்குப் பட்டன. விடை தெரியாத மாணவன் போல் அவள் மலங்க, மலங்க விழித்தாள்.
” ஆரம்பத்துல சம்பவங்களை மறப்பாங்க. அப்புறம் ஆளுங்களை……போகப்போக பேச, சாப்பிட, குளிக்க…..”
டாக்டர் சொன்னபோது சின்னப்பொண்ணு வெறுமனே அருகில் அமர்ந்திருந்தாள். சம்பவங்களின் நடுவே, உரையாடல்களின் இடையே, ஒவ்வொரு காட்சியிலும் அவள் மூன்றாம் நபராகவே இருந்தாள். காட்சிக்கு சம்மந்தமில்லாத, தொடர்பற்ற ஒரு அனாவசிய ஆளாகவே அவள் அங்கு ஒரு இடத்தை ஆக்கிரமித்திருந்தாள்.
அனைத்து விரல்களும், பார்வைகளும் தன்னைச்சுட்டுவது அவளுக்கு விசித்திரமாயிருந்தது. அதுபற்றி நிறைய யோசிக்கமுடியவில்லை . மூளையில் முன்பதிவுகள் ஏறக்குறைய அழிந்து போயிருந்தன. ஒரு புது அழிப்பானை வைத்து எழுத்துக்களை அழித்து காகிதத்தை வெள்ளையாக்கியது போல மேலடுக்குகள் பளீரென்று புத்தம்புதியதாய் பளிச்சிட்டன. அடியிலிருந்தவைகளில் ஒருசில மங்கலாக, கொஞ்சம் மக்கிப்போய் பலவீன தோற்றம் காட்டுகின்றன. எதையும் கூர்ந்து கவனிக்கமுடியவில்லை. காட்சிகள் கண்களில் படிந்த அளவுக்கு மனத்திரையில் பதியவில்லை. சுற்றிலும் அறிமுகமில்லாத மனிதர்களாய் நடமாடிக் கொண்டிருப்பது போல சின்னப்பொண்ணு உணரத்தலைப்பட்டதிலிருந்தே அவளின் அசைவுகள் குறைந்தன.
” ஆத்தா பொழுதுக்கும் மோட்டுவளைய வெறிச்சிக்கிட்டே படுத்துருக்கும். எப்பனாச்சும் எந்திரிச்சி வெளில போயி தெருவ உத்துப்பாக்கும். மனசுல என்னா நெனக்கிமோ, திரும்ப வந்து படுத்துக்கும்.”
அந்த சிறுபெண் கவலையோடு தன் வயதையொத்த பெண்ணிடம் சொன்னாள்.
” எங்காத்தாவுக்கும் இதே வயசுதான். ஆனா அதுக்கு எல்லாம் ஞாவகமிருக்கு. இப்பக்கூட புல்லறுக்க மத்தப் பொம்பளைங்களோட வயக்காட்டுப்பக்கம் போயிருக்கு.”
” இதுவும் அப்புடி இருந்ததுதான….இப்பத்தான் ஆறேழு மாசமா பச்சப்புள்ளையாட்டம் பேசாம, கொள்ளாம கெடக்கு.”
இரண்டுபேரும் சின்னப்பொண்ணை கைக்காட்டி பேசிக்கொண்டார்கள்.
” யம்மா….எந்திரிச்சி ஒக்காந்து சாப்புடு…”
அந்த தடிமனான ஆசாமி அவளை மெல்ல எழுப்பி அமரவைத்தான். தட்டில் சுடச்சுட சோறும், ரசமும் போட்டு அந்த வீட்டுக்காரி அருகில் வைத்தாள். சோற்றிலிருந்து ஆவி மேல்கிளம்பி நாசியை வருடிற்று. புழுங்கலரிசிச்சோறுக்கே உரிய வாசம் பசியை கிளர்ந்தெழச்செய்தது அனைவருக்கும், சின்னப்பொண்ணைத் தவிர.
” பாவக்காய வெங்காயம், தக்காளி சேத்து காரப்பொடி போட்டு தளதளன்னு வதக்கியிருக்கேன். ஒங்களுக்கு ரொம்ப புடிக்குமில்ல. தொட்டுக்கிட்டு சாப்புடுங்க.”
அவள் ஒரு கரண்டி காயை தட்டின் ஓரத்தில் வைத்தாள். மஞ்சளும், சிவப்புமாய் எண்ணெய் மினுமினுப்போடு தட்டில் கிடந்த பாகற்காயை பார்த்தவள் அதை மெல்ல ஒதுக்கிவிட்டு சோற்றை விரல்களால் அளைந்தாள்.
” ஒங்களுக்கு புடி……..”
அவள் சொல்லவந்ததை அவன் சைகை செய்து தடுத்தான்.
” வுடு…வேணுங்குறத சாப்புடட்டும். வெறும் சோறு தின்னு வயிறு நெறஞ்சாலும் சரிதான். வரவர ஒடம்பு பலகீனமாயிட்டே வருது. ”
அவன் குரல் கரகரத்தது. சட்டென்று துளிர்த்த கண்ணீரை மறைக்க பார்வையை தழைத்துக்கொண்டான். சின்னப்பொண்ணு சோற்றை கையிலெடுத்தாள். விரலிடுக்கின் வழியே பருக்கைகள் தட்டில் உதிர்ந்தன. மனவிரிசலுக்கிடையிலிருந்து சம்பவங்கள் உதிர்வது போல பருக்கைகள் உதிர்ந்து கொண்டேயிருந்தன. வாய்க்குப்போனது ஒரு சில பருக்கைகள் மட்டுமே.
” நான் வூட்டி வுடட்டுமா…?”
அவன் கேட்டான். சின்னப்பொண்ணு அதிர்ச்சியாய் பார்த்தாள். அந்நிய ஆண் ஊட்டி விடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பது போலிருந்தது அவளது பார்வை.
” நான் வூட்டி வுடுறம்மா…அப்பதான் நீ கொஞ்சமாச்சும் சாப்புடுவ….”
அவன் தட்டை கையிலெடுக்க, சின்னப்பொண்ணு கையை நீட்டினாள்.
” வேணாங்க……நானே சாப்புடுறேன்.”
மெலிதாக முனகினாள். அவன் திடுக்கிட்டு அந்த வீட்டுக்காரியைப் பார்த்தான்.
” அம்மா என்னைய மறந்துருச்சா….?”
” அ….அப்புடித்தான் நெனக்கிறேன். அதுக்காவ நீங்க மனச வுட்ராதீங்க. இப்புடியெல்லாம் நடக்கும்னு டாக்டர் அப்பவே சொன்னாரில்ல.”
அவள், அவனைத் தேற்றினாள். சின்னப்பொண்ணு உதிர, உதிர சோற்றை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள். செய்யும் வேலையில் பற்றில்லாது, கலைந்த சிந்தனையுடன் உண்டதில் செரித்தது கொஞ்சம், சிதறியது அநேகம். சின்னப்பொண்ணை பார்க்க வந்தவர்கள் சொல்லி, சொல்லி மாய்ந்தார்கள்.
” எடுத்துகட்டி வேல செய்யிற பொம்பள. கலியாணம், காச்சின்னா ஒடனே ஓடியாந்துருவா. சமயக்காரனுக்கு சாமான் எடுத்து குடுத்து, பந்தி கவனிச்சி ஒரு கொறை இல்லாம பாத்துக்குவா. செஞ்ச வேல தொலங்கும். நல்ல கைராசிக்காரி. இன்னிக்கி அம்புட்டையும் மறந்துட்டு கல்லு கணக்கா ஒக்காந்துருக்காளே. இது அந்த சாமிக்கே அடுக்காது.”
ஒரு பெண்மணி முந்தானையில் மூக்கை சிந்திக்கொண்டாள். எத்தனை பேர் வந்து என்ன சொல்லி என்ன….ஒரு மண்ணும் சின்னப்பொண்ணுக்கு விளங்கவில்லை.
உரிக்க, உரிக்க வெங்காயத்தில் ஒன்றுமில்லாமல் போகும். அதுபோல வரவர நினைவுகள் உரிந்து, உரிந்து விழுந்து கொண்டேயிருந்ததில் மூளையின் ஞாபக அடுக்குகள் வெற்றிடமாகிக் கொண்டிருந்தன.
ஒரு நிலைப்பாடற்ற தன்மையில், பொருந்தி போகமுடியாத சூழலில் சின்னப்பொண்ணு அவ்வபோது அசையும் ஜடமாக உட்கார்ந்திருப்பதும், படுப்பதும், எப்போதாவது எழுந்து வாசல் நோக்கி செல்வதுமாக இருந்தாள்.
அன்று அந்த சிறுபெண் சின்னப்பொண்ணை கைப்பிடித்து வெளியே அழைத்து வந்து அமரவைத்தாள். சித்திரை வெயிலின் உக்கிரம் தணிந்த இரவுப்பொழுது. வேப்பமரத்தின் இலைகள் லேசாக சலசலத்ததில் புழுக்கம் அப்பிக்கிடந்த சூழ்நிலை கொஞ்சம் மாறிற்று. நிலவை மறைப்பதும், விடுவிப்பதுமாக விளையாட்டுக்காட்டின மேகக்கூட்டங்கள். சின்னப்பொண்ணு நிலவை வெறித்தாள். வரைந்து வைத்ததுபோல் வட்டமாக, தேங்காய் பத்தை போல் அவ்வளவு வெண்மையாக இருந்தது நிலவு.
” அது என்னா சொல்லு பாப்போம்.”
அவன் கைக்காட்டி கேட்டான். அடிக்கடி பேச்சு கொடுக்க சொல்லி டாக்டர் சொல்லியிருந்தார். அவ்வளவு நாட்கள் அசிரத்தையாக இருந்தவன் திடீரென வேகம் வந்ததுபோல் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருந்தான்.
” சொல்லு ஆத்தா, அது என்னா….?”
சிறுபெண் அழுத்தமாக கேட்டது.
” நெ……லா…..”
குரல் பிசிறுதட்டி வந்தது. அவன் முகத்தில் ஒற்றைச்சுடர் ஒளிர்விட்டது.
” அம்மாவுக்கு நெலா தெரியிதுடி….”
மகிழ்ச்சியோடு, வேலைமுடித்து வந்தமர்ந்தவளிடம் சொன்னான்.
“ மேல கேளுங்க….”
அவள் சைகை காட்ட, சிறுபெண் கெஞ்சியது.
” நான் கேக்குறேம்ப்பா…”
” சரி, கேளு…”
” யாத்தா,,,, இது என்னா……?”
கையில் அணிந்திருந்த வளையலைக் காட்டிக் கேட்டாள். சின்னப்பொண்ணு சிலநொடிகள் அமைதியாயிருந்துவிட்டு,
” வ….ளவி…..” என்க,
” சூப்பரு…..ஆத்தாவுக்கு ஞாவகம் வருது” என்று
சிறுபெண் துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தது.
” அம்மாவுக்கு ஞாவக சக்தி திரும்புதுடி…”
சந்தோஷித்தவன் கேள்விகள் கேட்டே அவளை பழைய நிலைக்கு திருப்பிவிடுவது என்கின்ற முனைப்போடு அடுத்த கேள்விக்கணையை அவளை நோக்கி வீசினான்.
” நான் யாரு….?”
சின்னப்பொண்ணு சுண்டுவிரலைக் கடித்துக்கொண்டிருந்த எறும்பை தூக்கி தூர எறிந்தாள்.
” அத்த….சொல்லுங்க, இவுரு யாரு….?”
அவள், அவனை தொட்டுக்காட்டி கேட்டாள்.
” நான் யாரு….நான் யாரு……?”
அவன் பரபரத்தான்.
” நீ………..நீங்க……….”
காற்று நிரம்பிய பலூனில் ஒற்றை ஊசி ஏற்படுத்திய வெடிச்சத்தம் போல அவனுள்ளே ஏதோ சத்தம் கேட்டது.
அவன் முகம் கறுத்து சிறுத்தது. அதன்பின் கேள்விகள் கேட்பதை அவன் அறவே விட்டுவிட்டான். தேய்கின்ற நிலவு பவுர்ணமியில் பிரகாசிப்பதைப் போல மாற்றம் நிகழும் என்றெண்ணியவனுடைய நம்பிக்கை பொய்த்துப்போனது.
கூடத்தில் கிடந்த நாற்காலியும், ஒற்றை மரப்பலகையும் சின்னப்பொண்ணின் நேரங்களை பகிர்ந்துகொண்டன. வெயிலேறிய மதியப்பொழுதுகளில் அவள் வியர்வை கசகசப்போடு பலகையில் படுப்பதும், பின் மெல்ல எழுந்து வந்து நாற்காலியில் அமர்வதுமாக இருப்பு கொள்ளாமல் தனித்தியங்கிக் கொண்டிருந்தாள்.
யோசனைகளற்ற மனவெளியில் மெலிதான ஒருபயம் சன்ன இழையாக ஓடிக்கொண்டிருந்தது.
யாரையோ தேடுவதும், காணும் முகங்களின் அந்நியத்தன்மையில் மருள்வதும் அவளுடைய முகக்குறிப்பில் தெரிந்தது. புடவையிலிருந்து நைட்டிக்கு மாறியபோதும், தலை மழிக்கப்பட்டபோதும் அவள் உணர்வுகளில் சிறுதுளி மாற்றமுமில்லை.
” பொடவ கட்டிக்க தெரியல. நான் கட்டி வுட்டாலும் காமிக்கிறதில்ல. தல பூரா பேனு எழைய ஆரமிச்சிடுச்சி. அதான் மொட்டையடிச்சி நைட்டிய போட்டுவுட்டாச்சி…….”
அந்த வீட்டுக்காரி போனில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள். மறுமுனையில் ஏதோ கேட்டிருக்கவேண்டும்.
” அதெல்லாம் எதுவுமே ஞாவகமில்ல. நேத்திக்கி நின்னவாக்குல ஒண்ணுக்கு போயிட்டாங்க. ரொம்ப செரமமாத்தான் இருக்கு. அந்தசாமிதான் நல்ல வழி காட்டணும்.”
அவள் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டபடி போனை வைத்தாள். சின்னப்பொண்ணு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். வரவர பார்வையின் நிலைத்த தன்மையில் ஒட்டமுடியாமல் காட்சிகள் விலகி நழுவின. நழுவிய காட்சிகள் பாதரச குண்டுமணிகள் போல உதிர்ந்து ஓடின. உள்ளே எதுவுமற்ற அந்தகாரம். அமைதியாய் இருந்தது மனசு.
திடீரென மூளைக்குள் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு சின்னப்பொண்ணுக்கு. மின்மினிப்பூச்சிகள் அங்கிருந்து மினுக்கியபடியே பறந்து கண்கள் வழியே வெளியேற, காணும் வெளியெங்கும் மின்மினிப்பூச்சிகள்.
“அது ஒடம்புல என்னாம்மா இருக்கு…..பறக்குறப்ப பளிச்சி, பளிச்சின்னு வெளிச்சம் தெரியிது.”
சின்னப்பொண்ணு கண்களில் ஆர்வம் தேக்கி கேட்க, அவள் கையை பற்றியிருந்த அம்மா சொன்னாள்.
” அது ஒடம்புல வெளக்கு வச்சிக்கிட்டு பறக்குதுடி. அதான் இப்புடி வெளிச்சமா தெரியிது….”
” எனக்கு அத புடிச்சி தர்றியாம்மா….?”
” எங்கைகிட்ட வர்றப்ப புடிச்சி தர்றேன்டி.”
அம்மா அவள் கன்னம் திருகி முத்தமிட்டாள். இளஞ்சூடான முத்தம். புறங்கையில் மொதுமொதுவென்று வெயில் காய்ந்த நீர் படுவது போலிருந்தது
வாசமடிக்காத வியர்வை அம்மாவினுடையது. சின்னப்பொண்ணு ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடித்தாள். விளையாடிக் களைத்து ஓடி வருபவள் அம்மாவின் மடியில் பொத்தென்று விழுந்து சட்டை விலக்கி பொங்கி வழியும் மார்புகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டு இன்னொன்றில் இதழ் பொருத்திக்கொள்வாள். பீரிடும் அமுது இரண்டு நிமிடங்களில் மணி வயிற்றை நிறைத்து விடும். இன்னொருபுறம் குடிக்க தள்ளாடுவாள். அம்மா விடமாட்டாள்.
” கொஞ்சம் குடிச்சிட்டுப் போடி தங்கம். ”
இழுத்து வற்புறுத்துவாள்.
” வேணாம்….”
சின்னப்பொண்ணு தலையாட்டி ஓடுவாள்.
” அரவயிறு நொம்புனதும் எந்திரிச்சிட வேண்டியது. அப்புறம் ரெண்டே நிமிசத்துல ஓடிவரவேண்டியது. ”
செல்லமாய் திட்டு கிடைக்கும். பெரும் திறப்புக்காக காத்திருக்கும் சுரப்பு விறுவிறுக்கத் தொடங்கும். அம்மா தவித்துப்போவாள். பால் வாசமடிக்கும் அம்மா. அது அம்மாவின் பிரத்தியேக வாசமாய் சின்னபொண்ணின் மனதில் பதிந்து விட்டிருந்தது. அம்மா வேலியோரம் நின்று கிளேரியா மரத்தடியில் பால் பீய்ச்சி விடுவாள். ஒருமுறை சின்னப்பொண்ணு பார்த்துவிட்டாள்.
” எனக்கு வேணும்…..அதுக்கு ஏன் குடுத்த…?”
புடவையைப் பற்றியிழுத்து தையதக்கா என்று குதித்து, குதித்து அழுதாள். அம்மா அவளை வளைத்து அணைத்துக்கொண்டாள். நார்ப்பட்டின் மொரமொரத்த ஸ்பரிசத்தோடு கூடிய பால் வாசம் வீசிற்று.
” பொழுதுக்கும் மாராப்ப நனைச்சிக்கிட்டு…..பாக்க நல்லாவா இருக்கு.”
அப்பாவுக்கு ஏக கோபம்.
” தானா வருது. இந்தக் குட்டியும் வரவர சரியா குடிக்க மாட்டேங்குது. கொடம் தண்ணிய சரிச்சி வுட்டாப்ல கொட்டுறத பாக்குறப்ப மனசு பதறுது. அதான் இப்பெல்லாம் ஆட்டுக்குட்டிய தூக்கி மடியில போட்டுக்குறேன். அப்படியும் செலசமயம் ரவுக்க நனைஞ்சிடுது.”
குரல் சன்னஞ்சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் வாசம் கல்லிடுக்கின் தேரைப்போல உயிர் தப்பி வளர்ந்து எட்டிப் பார்த்து, மனவெளியில் செஞ்சுடராய் பற்றிப் பரவி கனன்று தகித்தது.
இரவு விடிவிளக்கின் நீல வெளிச்சம் பரவிக்கிடந்த கூடத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க சின்னப்பொண்ணு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.
” எங்கம்மாட்ட போவணும்…..எங்கம்மாட்ட போவணும்….?”
விசும்பத் தொடங்கினாள்.
One comment