படுக்கை

கா. ரபீக் ராஜா 

திடீரென்று நா வறண்டது போன்ற உணர்வு. எதிரில்தான் முதலிரவுச் செம்பு இருந்தது. செம்பின் மேல் டம்ளர் ஒருக்கணித்து படுத்திருந்தது. சற்று நிமிர்ந்து செம்பை எடுக்கலாம் என்ற போது உடம்பின் உள்ளே பூச்சி ஊர்ந்து மூளை நோக்கி செல்வது போன்ற உணர்வு. இதே உணர்வோடு செம்பை எடுத்து டம்ளரில் நீரை ஊற்றும் முன்னே கை சக்தியை இழந்திருந்தது. கடைசியாக செம்பு விழுந்த சப்தமும் டிவியில் செய்திப்பெண் வணக்கம் சொல்லவும் சரியாக இருந்தது.

விழித்துப் பார்த்தபோது ஒரு செவிலிப் பெண் வான நிறத்தில் பேன்ட், சட்டை அணிந்திருந்தாள். என்னைப் பார்ப்பதும் எழுதுவதுமாய் இருந்த அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. சைகையாக பேச கைகளை இயக்க முயற்சிக்கையில் அது முத்தி அடைந்து மூன்று வாரங்கள் ஆயிருக்கும் என்று தோன்றியது. சற்று எட்டிப்  பார்த்தேன். கழுத்தை இயக்க முடிந்தது. ஒரு தற்காலிக மகிழ்ச்சி. சற்று எட்டிப் பார்த்தேன். கால் கட்டைவிரல் தெரிந்தது. அசைக்க முடிகிறதா என்ற முயற்சியை தொடங்கினேன். ம்ஹூம், கட்டளையை ஏற்க கட்டைவிரல் தயாராக இல்லை. சரியாக ஒரு ஈ ஒன்று அதில் உட்கார்ந்து எல்லா திசையும் சுற்றி பார்த்தது. கழுத்துக்கு கீழே செயலிழந்துள்ளன என்பதை அறிய கொஞ்ச நேரம்தான் ஆனது.

சற்று நேரத்தில் மகன் வந்தான். முகத்தில் சோகம். பேச முற்பட்டேன். வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார்கள். மீண்டும் பேச முற்பட்டேன். மீண்டும் தண்ணீர். இந்த இடத்தில் மனதை புரிந்துகொள்ள ஒரு உறவு இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்றிருந்தது.

என் தாய்க்கு ஐந்து ஆண் பிள்ளைகள். நான் மூத்தவன். எனக்குப் பிறகு அடுத்தவன் பிறக்க ஏழு வருடமானதால் தாயிடம் ஆறு வயது வரை பால் குடித்து வளர்த்தேன். நன்றாக நினைவில் உள்ளது. விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது அம்மாவை தேடுவேன். அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு மூலையில் சோகத்துடன் உட்காந்திருக்கும் தாயிடம் சென்று மடியில் படுத்துக் கொண்டு பால் குடிப்பேன், தாய்ப் பால்தான். தெருவில் விளையாடி விட்டு தாகத்தோடு வரும் சிறுவர்கள் பானையில் தண்ணீர் குடிப்பதை போல, அம்மா என்ன நிலையில் இருந்தாலும் அவள் மார்பை எட்டி பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

சரியாக ஒரு இரண்டு மணி நேரம் கழித்து என்னை வீட்டுக்கு தூக்கி வந்தார்கள். ஏன் மீண்டும் என்னை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். சிகிச்சை முடிந்து விட்டதா? இல்லை மருத்துவம் என்னை கைவிட்டு விட்டது. இது எனக்கு எப்படி தெரியும்? தெரியும், என் அப்பாவை நாங்கள் அப்படிதான் தூக்கி வந்தோம். என் தாத்தாவையும் கூட அப்பா இப்படித்தான் தூக்கிக்கொண்டு வந்திருப்பார். எனக்கும் இதுவே சரியென்று பட்டது. கழுத்தில் எதோ துளை போட்டிருகிறார்கள். பேசினால் என்ன, பேச நினைத்தாலே வலி. மிக துயரமான வலி.

வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி என்னை அங்கு ஒதுக்கி வைத்திருந்தார்கள். மனைவி செத்து ஆறு வருடமாகிறது. அந்த புண்ணியவதியை என்றுமே நான் புரிந்து கொள்ள முயற்சித்தது கிடையாது. அவள் இறப்புக்கு பின்பு என் வாழ்க்கை திண்டாட்டமாகி விடும் என்று எனக்கு முன்பே தெரியும். இந்த புரிதலும் என் அப்பாவிடம் பெற்றது தான்.

அலட்சியப்படுத்தப்பட்ட குப்பையாக இதோ ஒரு ஓரத்தில் கிடக்கிறேன். சாப்பாட்டு வேலைக்கு மட்டும் வாயில் உணவை திணிக்கிறார்கள். உணவில் எனக்கு விருப்பமா என்று யாரும் கேட்பதில்லை. பசி என்கிற உணர்வே எழாத ஒருவனிடம் புகுத்தப்படும் உணவு மலத்துக்கு சமம்.

எனக்கு ஒரு மகன், ஒரு மகள். பொதுவாக அப்பன்களுக்கு மகளை பிடிக்கும். ஆனால் எனக்கு மகனே பிடிக்கும். குழந்தை வளர்ப்பை பொறுத்தவரை கூடுமானவரை பேதம் காட்டினேன். படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் மகளை விட ஒருபடி மேலே மகனுக்கு செய்தேன். கூடவே செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். அது பணத்தின் முக்கியத்துவம் குறித்து மகனுக்கு எடுத்துரைத்த போதனைகள்தான். உலகத்தில் பணத்தை விட உயரியது எதுவுமில்லை அதற்காக எந்த அறத்தையும் மீறலாம் என்றேன். மகன் அதையே செய்தான். இதோ படுக்கையில் விழுந்து ஒரு வாரமாகிவிட்டது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தவன் இன்னும் என்னைப்  பார்க்க வரவில்லை.

சிறு குழந்தைக்கு போல மல, ஜலம் கழிப்பை உறிஞ்சிக் கொள்ளும் துணி கொண்ட ஒரு பொட்டலத்தை எனக்கு உள்ளாடையாக அணிவித்து அழகு பார்த்தார்கள். புரண்டு படுக்க திராணியற்ற ஒருவனுக்கு இது எத்தகைய அசௌகரியம் கொடுக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இணைப்பாக சர்க்கரை வியாதி எனக்கு முப்பது வருடமாக இருக்கிறது. கால் மூட்டுக்கு கீழே இருந்த காயம் ஆறாமல் அதற்கு தனியாக ஒரு சிகிச்சை ஓடிக்கொண்டிருந்தது. எதோ ஒரு களிம்பை தடவிச் செல்வார்கள். ஒரு நாள் உணவு கொடுக்க வந்த மருமகள் பதறியடித்து அலறினாள். என் காலில் எறும்புகள் மொய்த்துக் கிடந்ததாக கூறினார்கள். உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு சான்றாக காலையாவது ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும் போல!

ஒருத்தி என்னை பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். என் மாமன் மகள். முன்னாள் காதலி வேறு. மரணப்  படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு  இதைவிட கொடுமை ஒன்றும் இருக்காது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த காதல் யாருக்கும் புரியாமலே போனது. குடலிறக்க சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கும் ஒருவனை பார்க்க வந்தது போல ஆரஞ்சு பழம் வாங்கி வந்திருந்தாள் அவள். உண்மையில் ஆரஞ்சு பழ தோளைக்கூட என்னால் தொட முடியாது. எனிலும் வாங்கி வந்தவளின் திருப்திக்காக பழங்களை என் தலைமாட்டில் வைத்தார்கள். என்னை நலம் விசாரித்துவிட்டு வெளியே சென்றாள். இவனை கட்டியிருந்தால் இந்நேரம் நாம்தான் அவன் தலைமாட்டில் உட்காந்திருக்க வேண்டும் என்று நிம்மதி பெருமூச்சுடன் போயிருக்க வேண்டும்.

வாங்கி வந்த ஆரஞ்சுகளை பேரப்பிள்ளைகள் தின்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் தின்றுவிட்டு தோல்களை என் அருகிலேயே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். எனை பார்க்க வரும் உறவினர்கள் அந்த தோலையும் என்னையும் பார்ப்பது கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. ஒரு ரத்த சொந்தம் சுகரோட இவ்வளவு ஆரஞ்சு சாப்பிடவே கூடாது என்று சொல்லியே விட்டான். திங்க வழியில்லாமல் இருப்பவனுக்கு இது என்ன சோதனை?

ஒருசில நாளில் சாப்பாட்டுக்கு தவிர யாரும் என் அறைக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகள் என் அறையில் ஒளிந்து கொள்ள வருவதே ஆறுதலாக இருக்கும். சில நேரம் என் கட்டிலை சுற்றி வந்து விளையாடுவார்கள்.

ஒருநாள் பூசாரி வந்து அறையில் எதோ மந்திரங்கள் சொல்லி தண்ணீர் தெளித்துவிட்டு போனார். அவரை பார்க்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஒரு புதிய மனிதரை சந்தித்த உணர்வை தந்தது. எனையே உற்று பார்த்துவிட்டு காதுக்குள் எதோ ஓதிவிட்டு கட்டிலை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுத்தி வந்தார். வீட்டின் இருந்த உறவுகள் பயபக்தியோடு இதை பார்த்துக்கொண்டு நின்றார்கள். சோகையாக ஓடிக்கொண்டு இருந்த மின்விசிறியை அணைக்க சொன்னார். அணைத்தார்கள். கூக்குரலிட்டு கத்தினார். எனை எந்திரிக்க வைக்கும் முயற்சியாக இருக்குமோ என்று நம்பினேன். பின்பு எல்லாம் முடிந்து கிளம்பும்போது சொன்னார் அந்த பூசாரி, “கவலைப்படாதீங்க, இன்னும் பத்து நாளில் முடிஞ்சிரும்!” இதற்கு தலையணையில் என் மூச்சை நிறுத்தினாலும் எந்த எதிர்ப்பையும் காட்டியிருக்க மாட்டேனே என்று கண்ணீர் ஓடி காதுக்குள் போனது.

படுத்தே கிடப்பதால் முதுகெங்கும் புண் மற்றும் கொப்புளம் வரத் தொடங்கியுள்ளது. இதை மருமகளுக்கு நான்கு முறை சொல்ல முயற்சி செய்தேன். பதிலுக்கு அவள் எனக்கு நாப்கின் மாற்றி விட்டு சென்றாள்.

பரம எதிரி ஒருவன் என்னை பார்க்க வந்தான். எதிரியாக இருந்தாலும் நம்மை பார்க்க வந்திருக்கிறானே என அவனது பெருந்தன்மையை என் வீட்டில் இருப்பவர்களே புகழக்கூடும். அவன் முன் இப்படி சுருண்டு படுத்துக் கிடப்பது எனக்கு அவமானமாக இருந்தது. எதிரியின் எகத்தாள பார்வையை கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவன் என்ன எதிரி? என் நிலை இவனுக்குக்கூட வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.

ஒருவனுக்கு பச்சையாக துரோகம் செய்திருக்கிறேன். அவனும் என்னை காண வந்தான். பாவம் அவனுக்கு தெரியாது. நான் செய்தது துரோகம் என்று. எதிரில்தான் நிற்கிறான். எனக்கு தைரியம் சொல்கிறான். இப்போது அவனிடம் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்க முனைகிறேன். முடியவில்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலையை என்னவென்று சொல்வது? மீட்டமுடியாத மன்னிப்பு தரும் குற்றஉணர்வு ஓராயிரம் முள்படுக்கைக்கு சமம். என் கண்ணீரால் மன்னிப்பு கோரினேன். புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை.

ஒருநாள் மருமகள் ஓடி வந்தாள். கையில் மொபைல் போன். போன் திரையில் மகன் தெரிந்தான். இதை எதோ வீடியோ அழைப்பு என்றார்கள். அவன் பேசுவதும் புரியவில்லை. உயிருக்கு உயிரான மகன் இப்போது தான் பார்க்கிறேன்.  அந்த வீடியோ அழைப்பில் வெகு நாட்களுக்கு பின்னால் என் முகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. இனி காணவே கூடாது.

இப்பொழுதெல்லாம் உணவை ஏற்றுக் கொள்ள உடல் முற்றிலும் மறுக்கிறது. மனமும் தான். கொஞ்ச உணவு உள்ளே போனாலும் அது செரிமானமாகும் வரை செய்யும் பாடு நரகத்தை விட கொடியது. திருமண பந்திகளில் போட்டிபோட்டு தின்ற நாட்களை எண்ணியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது. சாப்பாடு எடுக்க மாட்டுது ரொம்ப நாள் தாக்கு பிடிக்காது, என்று வெளியே பேசிக்கொண்டது காதில் விழுந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்பொழுதே வைத்து எரித்துவிடுவார்களோ என்று அவர்கள் குரலில் தெரிந்த அவசரம் குறித்து கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.

ஒரே விட்டத்தை பார்ப்பதை தவிர எனக்கு பிரதான பொழுதுபோக்கு எதுமில்லை. இன்று இரண்டு பல்லிகள் சந்தோசமாக இருந்ததை பார்த்து வேடிக்கையாக இருந்தது. புழு, பூச்சி, வண்டுகளை கூட கவனிக்க கூட நேரமிருக்கிறது. அவைகள் தான் நேரத்துக்கு வருவதில்லை. கம்பி கட்டிய ஜன்னல் வழியே ஒரு அணில் தினம்தோறும் எட்டிப்பார்க்கும்.

கண்களை மூடுகிறோனோ இல்லையோ எதோ ஒரு கனவு வந்துவிடுகிறது. அதில் பெரும்பாலும் நான் எழுந்து நடப்பது போலவே இருக்கும். எழுந்து நடப்பதே பகல் கனவாக மாறும் என்று’ யார் கண்டது. எனிலும் கனவுகளில் கொஞ்சம் பாதுகாப்பாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உண்மை. கழுத்துக்கு கீழே உணர்வு இல்லாதது கட்டி இழுத்த மலையை சற்று கழட்டிவிட்ட உணர்வை தருகிறது. அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரும் போய்விட்டால் வேலை முடிந்தது. பாவம் வீட்டிலும் வேறு எங்கேயும் போக முடியாமல் இருக்கிறார்கள். இரவிலும் பாதுகாப்புக்கு யாரேனும் இருக்க வேண்டும். இவர்களுக்காகவே கிளம்ப வேண்டும்.

எதோ பொங்கல் பண்டிகை வந்திருக்க வேண்டும். வெளியில் பெயின்ட் அடித்து கொண்டிருக்கும் வாசம் வந்தது. எனது அறைக்கும் வேறு வண்ணம் பூசினால் நன்றாக இருக்கும். காரணம் எதிரே இருக்கும் சுவரில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஓவியம் இருந்தது. இப்போது அதில் வேறு வண்ணம் பூசினால் நிச்சயம் என்னால் இன்னொரு ஓவியத்தை கண்டு பிடித்திட முடியும். மனம் எதற்கெல்லாம் ஆசைப்படுகிறது.

இப்போதெல்லாம் கனவுகள் மறைந்து மாய உருவங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் திடமாகவே இருக்க விரும்பினேன். மரணிக்கப்  போகும் உண்மை அறிந்த மணம் காட்சி பிழை என்றாலும் படுக்கையே பிணியாக இருப்பவனுக்கு இதுவும் ஒரு சுவாரஸ்யம் தான்.

காலை முதல் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இயல்பாக செய்ய முடிந்த ஒரே விஷயமும் இப்போது உடம்பில் கல் உடைக்கும் வலியாக மாறிப்போனது. ஒருமுறை சுவாசம் விடுவதென்பது ஒரு செங்குத்து மலையில் ஏறிவிட்டு இறங்குவது போல இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த என் அறையில் இருவதுக்கு மேற்பட்டோர் குழுமியிருந்தனர். பாதி பேர் என்னை உறுதியாக வழியனுப்ப வந்திருந்தார்கள். நெஞ்சில் இருந்து கிளம்பிய சுவாசம் இப்போது இன்னும் கடினமாக மாறிவிட்டது. கை கால்களை உதறினால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று அப்போதும் நம்பினேன். இதற்கு மேல் முடியவில்லை. மார்புக்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட ஒரு கயிறு அறுந்து விழுந்தது போல இருந்தது. அது கொடுத்த வலியில் கொஞ்சம் கண்ணீர் கசிந்திருந்தது. மெதுவாக கண்ணை மூடினேன். இதுவரை இரைச்சலாக இருந்தவை ஒரு கணம் அமைதியானது. ஒரு இலவம் மூட்டையையே காதில் அடைத்தது போன்ற பேரமைதி அது.

 

2 comments

  1. கடைசி நொடிகளே வாழ்கையின் அர்த்தங்கள்
    மரணம் யாருக்கும் விதிவிலக்கு அல்ல அருமை வாழ்த்துக்கள் சகோ

  2. மிக அருமையான கதை. ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. பிரமாதம் தோழர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.