ஷ்யாமளா கோபு
இரவு மணி ஒன்பதிருக்கும். வாசல் கதவை மூடி தாளிட்டு விட்டு படுக்க கிளம்பினேன். தெருவில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. என் வீட்டிற்கு எதிர் வரிசையில் இடதுபுறம் நான்கு வீடு பத்து பதினைந்து தள்ளி தெருநாய்கள் இருக்கும். அந்த வீட்டு அம்மாள் தான் அவைகளுக்கு தினசரி உணவிடும் பழக்கம். தெருவினருக்கும், திருடர் பயமில்லாமல் அது ஒரு பாதுகாப்பாக இருப்பதால் அவைகளை ஒன்றும் சொல்வதில்லை. சில சமயங்களில் வெளியாட்கள் யாரேனும் தென்பட்டால் இப்படித் தான் இரவெல்லாம் குரைத்துக் கொண்டிருக்கும். அதுவும் பத்து பதினைந்து நாய்கள் ஒன்றாக ஓங்காரமிடுவது கோபத்தைக் கிளப்பத் தான் செய்யும். ஆனால் வெளியாட்களுக்குத் தான் இத்தகைய வரவேற்பு என்பதால் இப்போதும் எவரேனும் வெளியாட்கள் தெருவில் தென்படுகிறார்களா என்று காம்பவுண்டின் கேட்டிற்கு பின்புறம் நின்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தேன்.
என் வீட்டின் இடது புறம் சிறு சந்தில் இருபுறமும் இருபது சிறிய ஸ்டோர் வீடுகள் உண்டு. அவர்கள் எல்லோரும் அவரவர் வீட்டின் விளக்கைப் போட்டிருந்தார்கள். சந்தின் கடைசியில் ஒரே ஒரு ஸ்டோர் வீடு மட்டும் ரொம்ப நாட்களாக காலியாக இருந்தது. இன்று காலையில் தான் புதிதாக திருமணம் ஆன ஒரு ஜோடி குடி வந்திருந்தார்கள். காதல் திருமணம் போலும். இரு வீட்டு உறவினரோ அன்றி நண்பர்களோ இல்லாமல் இருவரும் மட்டும் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கி ஆரத்தி சுற்றக் கூட ஆளில்லாமல் தாங்களாகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.
இப்போது அவர்கள் வீட்டு வாசலில் தான் ரகளை. ஏ சாந்தா சாந்தா என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயது ஆண். அவளோ கதவைத் திறக்கவில்லை. அவன் சத்தமோ குறையவில்லை. குடித்திருப்பான் போலும். நிற்க மாட்டாதா தள்ளட்டாம். கூட இருந்த பதினைந்து பதினேழு வயது சிறுமிகள் இருவரும் ஓவென்று அழுது கொண்டிருந்தார்கள். வீட்டின் உள்ளே இருந்த இளைஞன் வெளியே வரவில்லை. அந்த இளம் பெண் மட்டும் வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் சாந்தா சாந்தா என்று அவளைக் கெஞ்சுகிரானா அல்லது அடிக்கப் போகிறானா என்று அறிந்து கொள்ள இயலாத வகையில் உளறிக் கொண்டு அவள் மீது விழுந்து கொண்டிருந்தான். அவளோ நகர நகர விடாது அவள் மீது மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தான். அந்த சிறுமிகளோ சாந்தா என்ற அந்த பெண்ணை ஓடிச் சென்று இடுப்போடு கட்டிக் கொண்டு அம்மா அம்மா என்று அலறி அழுது கொண்டிருந்தது. பார்க்க சகிக்க முடியாத பாச போராட்டம்.
அந்த சந்தில் இருக்கும் அத்தனை குடித்தனக்காரர்களும் அங்கே குழுமி விட்டார்கள். என்னால் மட்டும் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளாமல் இன்றிரவு உறங்கி விட முடியுமா என்ன? நானும் அங்கே தான் இருந்தேன்.
அந்த வீட்டின் ஓனரம்மா வந்து சாந்தாவிடம் “என்னம்மா ராவுல இவ்வளவு அக்கப்போரு பண்றீங்க?” என்று குரல் கொடுத்தாள்.சாந்தாவோ பதில் சொல்லாமல் ஓனரம்மாவைக் கண்டதும் மிகவும் பம்மியவளாக “இல்லேம்ம்மா” என்றாள்.
“இங்கே இத்தனை அக்கப்போரு நடக்குது. உன் புருஷன் எங்கே?” என்று கேட்டாள்.
“நான் தானுங்க அதும் புருஷன்” என்றான் இவ்வளவு நேரமும் சாந்தா என்று கூவி கலாட்டா செய்து கொண்டிருந்தவன்.
“என்னது?” திடுக்கிட்டது ஓனரம்மா மட்டுமல்லா கூடியிருந்த கூட்டம் முழுவதும் தான்.
“ஆமாம்ம்மா நான் தானம்மா அதும் புருஷன்.” என்றான் அவனே.
“ஏன்னா இது சாந்தா?” என்ற ஓனரம்மாவின் குரலில் கடும் கோபம் இருந்தது. அவள் கண்கள் சாந்தாவை இரு தோளிலும் பிடித்துக் கொண்டு தொங்கும் இரு சிறுமிகளிடம் பாய்ந்தது.
“இது ரெண்டும் அதும் பிள்ளைங்கம்மா. எங்களை விட்டுட்டு இந்த பயலோடு ஓடியாந்துட்டுது” என்றான் அந்த குடிகார கணவன்.
“நீ மூக்கு முட்ட குடிச்சிட்டு வேலை வெட்டிக்கு போகாம நான் சம்பாரிசிக்கினு கொண்டார ஒன்னு ரெண்டையும் பிடுங்கி அதையும் குடிச்சி கவுந்துடர”
“எல்லார் வீட்டிலும் இருக்கறது தானே. அதுக்காக கட்டின புருஷனையும் பெத்த
பிள்ளைங்களையும் ஒருத்தி இப்படி அம்போன்னு விட்டுட்டு வருவாளா என்ன?” என்று நொடித்தாள் கூட்டத்தில் ஒருத்தி.
“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள் சாந்தா.
“உன் புருஷன் என்று ஒருத்தனைக் கூட்டிக்கினு வந்தியே. அவனை வெளியே வர சொல்லு” என்று உறுமினாள் ஓனரம்மா. வெளியே வந்தவனிடம் “இதெல்லாம் தெரிந்துமா நீ இந்த பொண்ணை இட்டுக்கினு வந்தே?” என்று கேட்டாள்.
“நல்லவன் மாதிரி நிக்கறானே இவனை நம்பாதீங்கம்மா. எந்நேரமும் குடிச்சிச்சிட்டு இவளை கொல்றான். அதுவும் எத்தனை நாளைக்கு தான் இவனிடம் உதை வாங்கும். அது தான் இட்டுக்கினு வந்துட்டேன்” என்றான் மிகவும் நல்லவனைப் போல் புதுமாப்பிள்ளை.
“இந்த சின்ன பொண்ணுங்களோட கதி என்னாகும்னு நெனச்சிப் பார்த்தியா?” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
“எங்க கூடவே இருக்கட்டும். நான் காப்பாத்திக்கறேன்” என்றான் அவன்.
“யாரு பொண்ணுங்களை யார் காப்பாத்துறது?” என்று உறுமினான் சாந்தாவின் பழைய கணவன்.
“ஏண்டா நீயும் காப்பாத்த மாட்டே. என்னையும் காப்பாத்தக் கூடாதுன்னு சொல்றே. கொஞ்சமாவது மனசாட்சி வெச்சிப் பேசு” என்றான் சாந்தாவின் புது கணவன்.
“தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்” என்று கிசுகிசுத்தான் கூட்டத்தில் ஒருத்தன்.
ஓனரம்மாவின் காதில் விழுந்து விட்டது அந்த வார்த்தைகள். “யாருடா அது கெட்ட வார்த்தை பேசறது?” கோபத்துடன் கூட்டத்ததில் குரல் வந்த திசையில் ஒரு முறை முறைத்தாள். கூட்டம் அமைதியாகி விட்டது. “சாந்தா இப்போ நீ என்ன செய்யப் போறே?” என்று கேட்டாள் ஓனரம்மா.
“நான் இவரோடு தான் இருப்பேன்” என்று காலையில் திருமணம் முடித்துக் கொண்டு வந்த புது கணவனுடன் ஒண்டி நின்றாள் அவள்.
“அம்மா எங்களை விட்டுட்டுப் போய்டாதே” என்று அவளிடம் கெஞ்சினார்கள் அவள் மகள்கள் இருவரும். தன் புதுக்கணவனை பரிதாபமாக பார்த்தாள் சாந்தா.
உடனே மனம் இளகி விட்டது அவனுக்கு. “நீங்க எங்களோடு இருங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான் அவன்.
“நானும் உங்களோடு இருக்கேன். என்னையும் உங்களோடு வெச்சிக்கங்க” என்றான் சாந்தாவின் பழைய கணவன்.
“ஏய் என்ன சொன்னே?” என்றான் புது கணவன்.
“என் குடும்பம் உன்னோடு தானே இருக்கு. நான் மட்டும் தனியா இருக்க முடியுமா?”
“அதுக்கு?” பதறினான் அவன்.
“நானும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன்” என்றான் அந்த குடிகாரன்.
“என்ன சொன்னே?” என்று திடுக்கிட்டான் இந்த ட்விஸ்டை எதிர்பாராத புது மாப்பிள்ளை.
“நான் சோத்துக்கு என்ன செய்வேன்? உங்களோடு நானும் இருந்திடறேன். நீ என் பொண்டாட்டிய வெச்சிக்கோ. கூடவே என்னையும் வெச்சிக்கோ. அம்புட்டு தான்”
தலையில் அடித்துக் கொண்டாள் சாந்தா. அங்கும் இங்கும் சாந்தியில்லை அவள் வாழ்விலே. என்ன செய்வது?
இப்போது கூட்டம் முழுவதும் திகைத்து ஆகா, டேய் என்ன சொன்னே, அட வெட்கம் கெட்டவனே, இப்படி மானம் கெட்டவனுடன் அந்த பொண்ணு எப்படி வாழ முடியும்? இன்னைக்கு மானங்கெட்டு பொண்டாட்டியை அடுத்தவனுக்கு விட்டவன் நாளை குடிக்கு காசு இல்லைன்னு பெத்த பிள்ளைங்களை அடுத்தவனுக்கு வித்துடுவான் என்றெல்லாம் கூட்டத்தில் ஆளாளுக்கு பேசிக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.
மனசு வெறுத்துப் போயிற்று அந்த ஓனரம்மாவிற்கு. “ஏனம்மா சாக்கடைக்கு தப்பி பீக்குழிக்குள்ள விழுந்ததைப் போல அவனுக்குத் தப்பி இவனோடு வந்திட்டியே. உன் வயசு பெண்களை நாளை இவன் நல்லபடியா பார்த்துப்பான்னு நம்பறியா?” என்று கேட்டாள்.
“இந்த காலத்தில பெத்த தகப்பனை நம்பியே பொட்டைப் பிள்ளைங்களை விட்டுட்டு போக முடியாது. இதுல நீ இவனை நம்பி எப்படி பிழைப்பே?” என்றாள் ஒருத்தி.
“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள்.
“உன் கஷ்டம் புரியுதும்மா. இன்னைக்கு தமிழ்நாட்டுல குடிகாரனுங்க வீட்டுல நடக்கறது தான் உனக்கும் நடக்குது. ஆனால் நாம நம்ம பிள்ளைகளை கை விடக் கூடாதில்லையா?” என்றேன் நான்.
“இவன் என்னை எங்கேயும் நிம்மதியா பிழைக்க விட மாட்டான்ம்மா” என்றாள் சாந்தா.
“அது தான் தெரியுதே. இல்லாட்டி எவனாவது வெட்கம் கெட்டு உன்னை இட்டுக்கிட்டு வந்தவன் கிட்ட நானும் ஒரு ஓரத்தில் இருக்கேன் என்று சொல்வானா?” என்றேன் நான்.
வார்த்தை போட்டு வார்த்தைப் போட்டு வம்பு பெரிதாகிக் கொண்டிருந்தது. சாந்தாவின் புது கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உள்ளே வர சொன்னான். பழைய கணவனோ நானும் உள்ளே வருகிறேன் என்றான்.
என் கணவர் என்னை அழைக்கவே இதற்கு மேல் இங்கு நின்று வேடிக்கை பார்க்க முடியாது என்று என் வீட்டிற்குப் போய் விட்டேன்.
மறுநாள் காலையில் ஹவுஸ் ஓனரம்மாவிடம் கேட்டேன் முடிவு என்ன ஆயிற்று என்று. நூறுக்கு போன் பண்ணி எல்லோரையும் வண்டி ஏற்றி காவல் நிலையம் அனுப்பி விட்டதாக சொன்னார்கள். மனசு சாந்தாவிற்காக பரிதாபட்டது. எல்லோரும் அதையே பேசி பேசி அலமலந்து போனோம்.
அத்தனை இயல்பான எழுத்திலும் காட்சியமைப்பிலும் மாந்தர்களின் முகங்களை திரை நீக்கி காட்டியிருக்கீங்க மா. நாமும் அங்கு ஒரு குடித்தனமாய் நின்று வேடிக்கை பார்த்தது போன்று உணர முடிந்தது.
யார் எப்படி இருந்தாலும் இறுதியில் அவர்களுக்கிடையில் பரிதவிப்பது பெண்மைதான் என்றாகிறது.
மிகவும் அருமையான படைப்பு
வாழ்க வளமுடன் 💙💙💙💙💙