ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி

‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர்.

நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி நூல்கட்டை பிடித்து கையில் எடுத்துக் கொண்டேன். மொத்த வகுப்பறையின் கண்களும் என்னையே வெறித்தன.

மூன்று மாதங்கள் முன்னால் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கென்று டெய்ஸி டீச்சர் மனதில் ஒரு நல்ல மரியாதையான இடம் கூட இருந்திருக்கலாமென்று நினைக்கிறேன். உறுதியாக சொல்ல தெரியவில்லை.

 

நான் காய்ச்சல் விடுமுறை முடித்து வந்திருந்த அந்த காலை முதல் வகுப்பில், டெய்ஸி டீச்சர் தாவரவியலை தள்ளி வைத்து விட்டு வகுப்பின் நடுவே இருந்த மேசையோடு சாய்ந்து நின்று அறிவுரைகளை எங்கள் முன்னால் குவித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

‘படிப்பில போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. ‘

‘என்ன கேல்ஸ், புரிஞ்சதா? ‘

‘யேஸ் மிஸ்’ அங்குமிங்குமாக சில குரல்கள் ஒரே சீராக எழுந்து அடங்கியது.

எவ்வளவு உன்னதமான வரிகள். நான் சிலாகித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

‘நான் இப்ப என்ன சொன்னேன்னு சொல்லு. ‘ டீச்சர் எழுப்பி நிறுத்தியிருந்தது என்னை.

‘படிப்பில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது. ‘  மனதில் வாங்கியிருந்ததை வார்த்தை மாறாமல் ஒப்பித்தேன்.

‘உனக்கு தான் இத சொன்னேன். இனிமே யாரையும் பார்த்து பொறாமை படாத. உட்காரு.’ இப்பொழுது வகுப்பின் மொத்தக் கண்களும் என்மீது.

‘நான் யாரை பார்த்து பொறாமை பட்டேன். ‘ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை.

மணிச்சத்தம் அமைதியை கலைத்தது.

‘பிரேக்ல ஸ்டாப் ரூம் வா’ டீச்சர் வாசலுக்கு போகும்பொழுது திரும்பி பார்த்து   முதல் பெஞ்சில் இருந்த என்னிடம் சொல்லிவிட்டு போனாள். என் கன்னங்களில் நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த வகுப்பில் நடத்தப்பட்ட கணிதச் சமன்பாடுகள் எதுவும் என் காதில் விழவில்லை. மனம் தேம்பிக் கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டான்ஸி மெல்ல முழங்கையில் விரலால் சீண்டினாள்.

‘ தாமரை, மிஸ் ஏன் அப்படி சொன்னாங்கன்னு எனக்கு தெரியும். ‘

ஆச்சரியத்தில் விரிந்திருந்த கண்களோடு ஸ்டான்ஸி பக்கம் திரும்பினேன்.

‘ரேவதி தான் ஏதோ மிஸ்கிட்ட போட்டு கொடுத்திருக்கா. நேத்து ஸ்வாலஜி ரெக்கார்ட் வைக்க ஸ்டாஃவ் ரூம் போனப்ப அவ டெய்ஸி மிஸ்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருந்தா. என்ன சொல்லிட்டு இருந்தான்னு எனக்கு கேட்கல. ஆனா மிஸ் ரொம்ப ஸீரியஸா கேட்டுகிட்டு இருந்தாங்க. ‘

ரேவதி கடந்த சில நாட்களாகவே என்னிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள். எனது அப்பாவும் ரேவதியின் அப்பாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்கள். பதவியில் ரேவதியின் அப்பா சற்று உயர்வான இடத்தில் இருப்பவர். எனது பரீட்சை மதிப்பெண்களை எனது அப்பாவின் வாயிலிருந்து பிடுங்கி அதை ஒப்பீடு செய்து ரேவதியை திட்டுவது அவளது அப்பாவின் வழக்கம். நாளடைவில் ரேவதிக்கு இது பெருங்கோபமாக என்மீது திரும்பியிருந்தது.அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஏதோ நடத்தியிருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது.

ஸ்டாவ் ரூமில் டெய்ஸி டீச்சர் முன்னால் நின்று கொண்டிருந்தேன். சிறிய புஷ்பம் டீச்சர் உடன் இருந்தாள்.

‘ஆர்த்திய விட ஒரு மார்க்காச்சு பைனல் எக்ஸாம்ல கூடுதலா வாங்கி காட்டுவேன்னு ரேவதிகிட்ட சொன்னியாம்மே. அவ பர்ஸ்ட் வரவே கூடாது சொன்னியாமே. இந்த வயசில அப்படியென்ன  பொறாமை உனக்கு. ‘

ஆர்த்தி எல்லா ஆசிரியைகளுக்கும் கூடுதல் பிடித்தமான மாணவி. மூன்று காரணங்கள். முதலாவது ஆர்த்தியின் அப்பா வழி பாட்டி ராணி இதே பள்ளியில் முன்னால் ஆசிரியை.  பள்ளி நிர்வாக போர்டில் இருக்கும் மதர்களின் நடுவே இன்றும் அவளுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இரண்டாவது, ஆர்த்தியின் அம்மா நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது புற்றுநோயில் தவறி போயிருந்தாள். மூன்றாவது தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்த்தியின் அப்பா அலெக்ஸ்.

இந்த வருடம் பண்ணிரெண்டாம் வகுப்பின் முதல் மாணவியாக ஆர்த்தி தான் வரவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு வகுப்பு நடத்தும் எல்லா ஆசிரியைகளுக்கும் உள்ளூர இருந்தது. தலைமையாசிரியை வரையிலும் கூட. டெய்ஸி டீச்சருக்கும், சிறிய புஷ்பம் டீச்சருக்கும் கொஞ்சம் கூடுதலாகவே அந்த எதிர்பார்ப்பு ஒரு நோயைப் போல உடல் முழுவதும் பரவியிருந்தது.

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும், டெய்ஸி டீச்சர் என்னை நம்புவதற்கு  துளியளவேனும் தயாராக இல்லை. கொலை குற்றம் செய்ததை மாதிரி அவள் கண்கள் அன்றிலிருந்து என்னை துரத்த ஆரம்பித்திருந்தது. கூடவே சிறிய புஷ்பம் டீச்சரும் கைகோர்த்திருந்தாள். கணக்கு வகுப்புகளில் நான் தவறான விடையை சொல்லும் வரையிலும் வரிசையாக என்னிடம் சூத்திரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விக்கு தாக்குபிடிக்க முடியாமல் நான் தவறான விடையை சொல்லும் அந்த நிமிடத்தில் டீச்சரின் முகத்தில் பிரகாசம் துளிர்க்கும். நான் வகுப்பின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுவேன். சில நேரங்களில் எனது வெற்றியை ஏற்று கொள்ள முடியாமல், அன்றைய மொத்த வகுப்பு நேரத்தையும் என்னிடம் சூத்திரங்கள் கேட்கவே செலவிட்டு  இருண்ட முகத்தோடு டீச்சர் வெளியேறிய நாட்களும் உண்டு. தாவரவியல் வகுப்பிலும் பெரும்பாலான கேள்விகள் என்மீதே வீசப்பட்டன. தாக்குதல் கேள்விகளாக இருக்கும் வரை தாக்குபிடிக்க தெம்பிருந்த எனக்கு, தாக்குதல் மதிப்பெண் குறைப்பீடாக மாறி இரண்டாம் ரேங்கில் இருந்து பண்ணிரெண்டாம் ரேங்கிற்கு தள்ளபட்டபோது தாக்குபிடிக்கத் தெம்பில்லாமல் போய்விட்டது.

 

அப்பாவின் முன்  உடைந்து அழுது கொண்டு நின்றேன்.

‘எதுக்கு இப்ப இவ்வளவு அழுக. ‘

‘வேணும்னே மார்க் குறைச்சிட்டாங்க. சத்தியமா நான் நல்லா தான் எழுதினேன். ‘

‘அதான் நான் உன்ன நம்புறேன் சொல்லிடன்ல. கண்ண தொட. ‘

‘… .. .. ‘ என் அழுகை இன்னும் கூடியது.

‘அழுகைய நிறுத்து. ‘

நான் நிறுத்துவதாக இல்லை.

‘நிறுத்துங்கம்லா.’ அப்பாவின் அதட்டலில் வீடே அதிர்ந்தது.

நான் உறைந்து நின்றேன்.

‘போய் ரஃப் நோட்டும் பென்னும் எடுத்துட்டு வா. ‘ அதட்டலாக கட்டளை வந்தது.

அடுத்த நிமிடம் பேனாவும் ரஃப் நோட்டும் ஏந்தி அப்பா முன்னால் நின்று கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

‘உட்காரு’

‘ நான் சொல்லுகத போல செய். பரீட்சை பேப்பர்ல இருக்க ஒவ்வொரு விடையையும் நீயே திருத்தி  ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மார்க் வரும்ன்னு  நோட்ல எழுது. தப்ப பொறுத்து அரை மார்க்ல இருந்து குறைக்கணும். நிறைய தப்பு இருந்தா மார்க்கே போடாத அந்த விடைக்கு.’

அப்பா தொடர்ந்தார், ‘ ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மார்க் வரும்ண்ணு எழுதிட்டு கடைசியா மொத்தமா கூட்டு. சரியா மனசாட்சிபடி திருத்தி எழுதணும். கூடுதலா போட கூடாது. அப்பாக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா அப்பாவே திருத்தி தந்திருப்பேன். ‘

‘… .. ‘ நான் குனிந்து முதல் கேள்வியை திருத்த ஆரம்பித்திருந்தேன்.

நாளடைவில் திட்டமிட்ட மதிப்பெண் குறைப்பீடுகள் என்னை அச்சறுத்துவது மொத்தமாக நின்று போயிருந்தது.

காலாண்டு, அரையாண்டு போன்ற பரீட்சை மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் தான் வரவேண்டும் என்கிற விதி பள்ளியில் இருந்தது.

அப்பா பள்ளிக்கு வந்திருந்தார்.

‘அரையாண்டு வந்தாச்சு, இப்படி மோசமா மார்க்க வாங்கியிருக்கா. ஜஸ்ட் பாஸ்தான். வர வர படிப்புல கவனமேயில்ல. ஒரு பேப்பர் போனாலும் போனதுதான. கண்டிச்சு வைங்க. ‘

அப்பா பதில் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினார். நீட்டிய விடைத்தாளை கையில் வாங்கி கொண்டார். உதட்டின் ஓரம் லேசான சிரிப்பு இருந்தது.

அப்பாவின் சிரிப்பில் இருந்த உண்மையின் அனல் தாங்க முடியாமல் டெய்ஸி டீச்சர் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

படிப்பில் எனது வேகம் அதிகரித்திருந்தது. எந்த சீண்டல்களாலும் என்னை அசைத்து பார்க்க முடியவில்லை

முழு பரீட்சை எழுத போகும் நாட்களில் டெய்ஸி டீச்சர் எதேச்சையாக எதிரில் வந்தால் முறைத்துக் கொண்டே கடந்து போனாள். நான் சாதாரணமாக கடந்து போனேன். நான் நினைத்தபடி நல்ல முறையில் பரீட்சைகளை எழுதி முடித்திருந்தேன்.

வகுப்பு ஆசிரியை என்கின்ற முறையில் டெய்ஸி டீச்சர் தான் எங்கள் வகுப்பின் மாணவிகளுக்கு மதிப்பீட்டு தாளை வழங்கி கொண்டிருந்தாள். மொத்த மதிப்பெண்ணில் நான் ஆர்த்தியை விட ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தேன். அந்த ஒரு மதிப்பெண்ணை கூட்டி தந்திருந்தது தாவரவியல்.ரேவதியின் மதிப்பெண் எங்கோ அதல பாதளத்தில் விழுந்திருந்தது.

டெய்ஸி டீச்சர் கண்களை வேறெங்கோ அலையவிட்டபடியே மதிப்பீட்டு தாளை என்னிடம் நீட்டினாள். முழு பரீட்சை விடைத்தாளை தன்னால் திருத்த முடியாது போயிருந்ததில் டெய்ஸி டீச்சருக்கு பெரும் வருத்தம் இருந்திருக்கக் கூடும்.

‘தேங்க்யூ மிஸ். ‘ புன்னகை மாறாமல் சொல்லிக்கொண்டே மதிப்பீட்டு தாளை கையில் வாங்கி கொண்டேன்.

பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தபொழுது அப்பா வண்டியை முறுக்கி தாயாராக வைத்திருந்தார்.

‘போலாமா?’

நான் தலையாட்டினேன்.

இன்று வரை ரஃப் நோட்டும் பேனாவும் என்னோடு பயணித்துக்  கொண்டிருக்கின்றன.

 

 

 

Advertisement

One comment

  1. அமர்ககளமான கதை. எனது பள்ளிக்கூட நாட்களை ஏனோ நினைவுகூர வைத்தன. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.