அறிவிப்பு

‘வேதாளத்தின் மோதிரம் – காலத்துகள் சிறுகதை தொகுப்பு’ வெளியீட்டு அறிவிப்பு

காலத்துகளின் சிறுகதைகள் சில, 12, ‘வேதாளத்தின் மோதிரம்’ என்று தொகுப்பாய் இன்று மாலை வெளிவர இருக்கின்றன. பதாகை நூல்கள் அனைத்தும் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டவை. இதுவும் அப்படியே.

காலத்துகளின் மொழிநடை தனித்தன்மை கொண்டது. அவரது வாக்கிய அமைப்பு உற்று நோக்கத்தக்கது, சிறுகதைகள் பரிசோதனைத்தன்மை கொண்டவை. அவர் எழுதியுள்ள பல சிறுகதைகளுள் முழுமையடைந்த சில மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை கதைகளையும் அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு கதைகள் விருப்பமானவையாக இருக்கும். எந்த ஒரு கதையும் இதில் உள்ள மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் குறைபட்டதில்லை, இன்று தமிழில் எழுதப்படும் சிறுகதைகளுடன் ஒப்பு நோக்குகையிலும் இதைச் சொல்லலாம்.

“நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை தமிழின் மிக சிறந்த வயதடைதல் வகை நாவல் எனச் சொல்வேன்‌. அறுபது எழுபதுகளில் பள்ளியும் கல்லூரியும் படித்த முதல் தலைமுறை கிராமத்து பட்டதாரிகளின் கதை. உலகமயமாக்கலை பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட தலைமுறையின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கதை என இத்தொகுதியை சொல்லலாம். நாஞ்சில் நாடனுடன் ஒப்பிடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று, கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற நாவல் தன்மை கொண்ட வாழ்க்கைச் சித்திர கதைகள் என ‘கிளி ஜோசியம்’, ‘யாருமற்ற மனை’, ‘மரிசா’, மற்றும் ‘வேதாளத்தின் மோதிரம்’ போன்ற கதைகளை சொல்லலாம். கதை வழியாக இந்த மனிதர்களை எந்த அளவிற்கு அறிகிறோமோ அதேயளவு கதைசொல்லியைப் பற்றியும் அறிகிறோம்.”

பதாகை – யாவரும் வெளியீடாக இன்று வெளிவரும் ‘வேதாளத்தின் மோதிரம்’ சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அளித்துள்ள முன்னுரை, அகழ் 

பதிப்பாசிரியர் குறிப்பு

பதாகை 26.01.2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜனவரி 2019 இல் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. பதாகை பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுவதோடு பல புதிய வகை சோதனை முயற்சிகளுக்கும் களம் அமைத்துத் தந்திருக்கிறது. இதை சந்தோஷத்தோடு நினைக்கும் நேரத்தில் எங்கள் பயணத்தின் செல்திசையிலும் உத்வேகத்திலும் கலைத்தரத்திலும் நிறைவடைந்திருக்கிறோமா எனும் சுய ஆய்வையும் செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். கண்டிப்பாக வாசிக்கும் சிலருக்கேனும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யும்.

ஐந்தாண்டுகளாகக் கவிதைகளும், கதைகளும் வெளியிட்டு வருவதினால் எங்கள் தேர்வு அளவுகோள்களிலும், எழுதுபவர்களின் எழுத்துத் தரத்திலும், உங்கள் வாசிக்கும் பாங்கிலும் எவ்விதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன? எங்களைப் பொருத்தவரை எது கவிதை எனும் அழகியல் கேள்வியில் நாங்கள் குழப்பமான இடத்திலேயே இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. போலவே, ஒரு சில அபாரமான படைப்புகளைத் தவிர்த்தால், புனைவு எழுத்திலும் பதாகைக்கு வருபவற்றின் தரம் பெரிய அளவில் மாறியதாகத் தெரியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும் நாங்கள் யோசித்தவரை இங்கு ஒரு விமரிசனச் சூழல் இல்லாதது ஒரு முக்கியமான காரணம் எனத் தோன்றியது.

விமரிசனம் என்பது எழுதுபவரின் எழுத்துத் தரத்தை மட்டும் பேசுவதாக இல்லாமல், வாசகரின் ரசனை அளவுகோலையும், ஆசிரியர்களின் தேர்வுத்தரத்தையும் மெருகேற்றும் விதமாக இருப்பது. இதைச் செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு படைப்பின் அருகிலும் அப்படைப்பு பற்றிய விமர்சனக் கருத்தை பதாகை மின்புத்தகத்தில் பதிய நினைக்கிறோம். ஆசிரியர் குழுவினர் மட்டும் இதை எழுதுவார்கள் என்பதில்லை, நண்பர்கள் நீங்களும் எழுதலாம். நிறைகுறைகளைத் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டலாம். “இவரெல்லாம் ஏன் எழுத வேண்டும்?”, “இதெல்லாம் ஒரு கதையா?” என்றெல்லாம் எழுதுபவரையோ, எழுத்தின் கருத்து நிலையையோ தனிப்பட்ட முறையில் வசையாடாமல் இருக்கும்வரை எல்லா வாசிப்பும் இலக்கியத்தை மேம்படுத்தக்கூடியதே என்பது எங்கள் அபிப்ராயம். அதனால் அவையெல்லாம் அவசியமும்கூட. பெரும்பாலும் நண்பர்களின் படைப்புகளே விமரிசிக்கப்படும் என்பதால் அனைத்தும் பெயரில்லாமல் வெளியிடப்படும், எழுதியவர் பெயர் விபரம் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது.

பதாகையில் தேர்வாகும் படைப்புகள் இனி ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கி அடுத்த மாதத்தின் 10ம் தேதி வரை அவ்வப்போது இடுகையிடப்படும். பின்னர் பத்து நாட்கள் சென்றபின் விமரிசனக் குறிப்புடன் 20ம் தேதி மின்புத்தக வடிவில் தொகுக்கப்படும்.

பதாகை டிசம்பர் 2018 மின்னூல் தரவிறக்கம் செய்ய:

மொபைல் மற்றும் கணினியில் வாசிக்க epub

கிண்டிலில் வாசிக்க mobi

‘பதாகை பதிப்பகம்’ – அறிவிப்பு

‘பதாகை’ இணையதளம் புனைவிலக்கியத்துக்கான தளமாக ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கதைகள், விமர்சன கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள் என புனைதலை மையமிட்டே இயங்கி வருகிறது. ‘பதாகை’யின் நோக்கம் பல்வகைப்பட்ட வாழ்வுப் புலங்களில் உருவாகும் தனிப்பார்வை, தனிக்குரல், தனியனுபவம் வெளிப்பட மைய இலக்கியப் போக்குக்கு வெளியே ஒரு தளம் அமைத்து கொடுத்தல் என்பதே. அவ்வகையில் கதைகளை வெறுமே வெளியிடாமல் அதன் உருவாக்கத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகிறது. வாராவாரம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என வெவ்வேறு மாதிரி இயங்கி வந்தாலும் எப்படியோ தொடர்ந்து இயங்கி வருகிறது. வெ.கணேஷ், மு.வெங்கடேஷ், விஷால் ராஜா, சுனில் கிருஷ்ணன், அரிசங்கர் என பலரும் தங்கள் சிறுகதை தொகுப்புகள் பதிப்பிக்கப்படுவதற்கு முன் பதாகையில் எழுதியவர்கள்.

இந்நிலையில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே பதிப்பகம் துவங்கலாம் என்றொரு பேச்சு நிகழ்ந்தது. ஆனால் இதை யார் பொறுப்புடன் எடுத்து செய்வது என்பதில் குழப்பமும் தயக்கமும் இருந்ததால் இது தள்ளிச் சென்றது. மலேசிய இதழான வல்லினம் ‘யாவரும்’ பதிப்பகத்துடன் இணைந்து செயல்பட்ட விதம் ஒரு முன்மாதிரி. மேலும் நூல் தயாரிப்பில் நல்ல கவனம் அளித்து வளர்ந்து வரும் பதிப்பகமான ‘யாவரும்’ உடன் இணைந்து செயல்படுவதாக முடிவுக்கு வந்தோம். அவ்வகையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக மூன்று நூல்களை வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியிடவுள்ளோம்- எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’ (சிறுகதைகள்), சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘வெளிச்சமும் வெயிலும்’ (சிறுகதைகள்), சுனில் கிருஷ்ணனின் ‘வளரொளி’ (பதாகை இணையதளத்தில் ‘புதிய குரல்கள்’ பகுதியில் வெளிவந்த நேர்காணல்கள் மற்றும் மதிப்புரைகள்). ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று புத்தகங்களாவது கொண்டு வருவதே திட்டம். எழுத்தாளர் சிறப்பிதழ்களை இன்னும் சற்று விரிவாக்கி செம்மை செய்து கொண்டு வருவதும் ஒரு திட்டம்தான்.

‘பதாகை’க்கு தங்கள் படைப்புகளை தொடர்ந்து அளித்து இதை நடத்திய ஒவ்வொரு படைப்பாளிக்கும் இத்தருணத்தில் நன்றிகள். ‘பதாகை’ எழுத்தாளர்களின் படைப்புகள் நூல் வடிவிலும் கவனம் பெறும் என நம்புகிறோம். இந்த பயணத்தில் உடனிருக்கும் படைப்பாளிகள் மற்றும் வாசக நண்பர்களுக்கு நன்றிகள்.

“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே,

வணக்கம்.

தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சக மனிதர் மீதான நேயத்தை, அக்கறையைத் தன் வாழ்க்கை மற்றும் இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். நவீன தமிழ் இலக்கியத்துக்கு பாவண்ணனின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக வாசகர்கள் ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” என்ற பொருளில் ஒருநாள் முழுக்க விழா எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அவ்விழாவில், பாவண்ணன் எழுத்துகள் குறித்த பல்வேறு நிகழ்வுகளும் சிறப்புரைகளும் காலை முதல் மாலைவரை நிகழ இருக்கின்றன. வெளிச்சத்தை விட்டு எப்போதும் விரும்பியே ஒதுங்கி நிற்கிற படைப்பாளியான பாவண்ணனுக்கும் அவர் படைப்புகளுக்கும் மரியாதையும் கவனமும் தர நடத்தப்படும் இந்த விழாவில், தாங்களும், தங்கள் குடும்பமும், நண்பர்களும் கலந்துகொண்டு பாவண்ணனைச் சிறப்பிக்க உதவவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறோம். பாவண்ணனைப் பாராட்ட வாருங்கள்! வாருங்கள்!

விழாவின் அழைப்பிதழ் விவரங்கள் கீழே கொடுத்திருக்கிறோம். வண்ணக் கோப்பாகவும் (jpeg file) அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

விழா தொடர்பான மேலதிக விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
அ. வெற்றிவேல் – +91 96006 51902
பெங்களூர் மகாலிங்கம் – +91 94490 12672

oOo

இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும்

“ பாவண்ணனைப் பாராட்டுவோம் “

நாள்: 26.05.2018 சனிக்கிழமை

இடம்: கவிக்கோ அரங்கம்
6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை
மைலாப்பூர்
சென்னை -600 004

நேரம்: 09.45 -10.45
வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன்
வரவேற்புரை: அ.வெற்றிவேல்
தொடக்கவுரை: பவா. செல்லத்துரை

அமர்வு:1 நேரம்: 10.45 – 11.45
சிறுகதை
எம்.கோபாலகிருஷ்ணன்
கடற்கரய்
ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்பிரமணியன்

அமர்வு: நேரம் : 12.00 – 01.30
நாவல்
சித்ரா
திருஞானசம்பந்தம்
சாம்ராஜ்
ஒருங்கிணைப்பாளர் : தி.சிவக்குமார்

உணவு இடைவேளை

அமர்வு: 3 02.30 – 04.00
கட்டுரை:
நரேந்திரகுமார்
மதுமிதா
எஸ்.ஜெயஸ்ரீ
ஒருங்கிணைப்பாளர்: திருஞானசம்பந்தம்

அமர்வு : 4 04.15- 05.45
மொழிபெயர்ப்பு
மா.அண்ணாதுரை
வெளி.ரங்கராஜன்
தி.சிவக்குமார்
ஒருங்கிணைப்பாளர்: க.நாகராசன்

சிறப்புரைகள் : 06.15 – 08.00
தொடக்கவுரை & நிகழ்ச்சித்தொகுப்பு: ”சந்தியா” நடராஜன்
பாராட்டுபவர்கள்
காவ்யா.சண்முகசுந்தரம்
சா.கந்தசாமி
விட்டல்ராவ்

ஏற்புரை: பாவண்ணன்

நன்றியுரை: பவுத்த அய்யனார்