“இன்னா இப்பந்தான் போறான்” என்றார் அவர்.
ஆள் தெரியுமளவுக்கு இருட்டு கவ்வியிருந்தது. நான் அவர் கைக்காட்டிய திசையைப் பார்த்தேன். இரண்டு ஆள் செல்லும் அளவு அகலமான ஒரு சிறிய சந்து.அதன் இரண்டு பக்கமும் உயரமான கல்லாலான மதில் சுவர். கடைசியில் ஒரே ஒரு வீடு. வீட்டின் முகப்பில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அதன் வெளிச்சம் சற்றும் இந்த சந்திற்குள் தெரியவில்லை.நான் ஆவேசமாக சந்திற்குள் ஓடினேன்.இரண்டு எட்டு வைப்பதற்குள் அவனைப் பார்த்துவிட்டேன்.
“நின்னுல தாயோளி” என்று கத்தியவாறு சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினேன்.ஆனால் நான் கத்தியது தவறென்று உடனே உணர்ந்துவிட்டேன்.நான் கத்தியை அவன் வயிற்றைப் பார்த்து சொருகவும் அவன் சட்டென்று விலகிவிட்டான்.அவன் போட்டிருந்த பனியனைக் கிழித்தது கத்தி.அவன் சுதாரித்து தன் விரிந்த தோளால் என்னை முட்டித்தள்ளினான்.நான் தடுமாறி தலை தரையிலடிக்க கீழே விழுந்தேன். “லே” என கத்தியவாறு அவன் என் இரு கால்களையும் அதன் முட்டிகளில் பிடித்து என்னைத் தூக்கி மதில் சுவரில் அடித்தான்.என் கையிலிருந்த கத்தி தவறி விழுந்தது.நான் தரையில் உருண்டு கத்தியை எடுக்க முயன்றேன்.அவன் தன் கால்களால் என் கையை மிதித்து தரையில் வைத்து தேய்த்தான்.நான் எழும்ப முயற்சித்தப்பொழுது மீண்டும் என் நெஞ்சில் மிதித்ததை நான் கைகளால் தடுத்தேன்.மீண்டும் காலை ஓங்கியவன் “குடிகாரத் தாயோழி சவுட்டி கொன்னுபோடுவேன், பாத்து எழும்பி ஓடிரு” என்றபடி போனான்.நான் என் கால்களை இழுத்தவாறு அந்த முடுக்கைவிட்டு வெளியே வந்தேன்.
எல் எம் மருத்துவமனையில் நான் லேசாக கண்விழித்தப் பொழுது சிறீதரன் அருகில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன்.கைகள் அசைக்கமுடியாதபடி வலியிலிருந்தன.
“என்ன மயித்துக்குல அவன குத்த போனா நீ, உன்னால அவன குத்த முடியுமால, அவன் கபடி ப்ளேயர்லா இரண்டே அடிதான் நீ இங்க வந்து கெடக்கா”
நான் மீண்டும் சிரித்தேன்.
“சிரிக்காதல, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இப்பம் எனக்குதான கேவலம்”
“அப்பம் என்னாலதான் உனக்கு கேவலமா”.
“சரில விட்டுத்தள்ளு”
“அவன் செய்தது சரியால ஒனக்கு மெட்ராஸ்ல வெளயாடுயதுக்கு கெடச்ச வாய்ப்ப தட்டி பறிச்சாம்லா”
“மெட்ராஸ் எங்க நிலாவுலையா இருக்கு, இன்னா இங்கதான இருக்கு இந்த மேட்ச் இல்லணா வேற ஒரு மேட்ச், விட்டுத்தள்ளு”
அடுத்தவாரமே சென்னை அருகே இருந்த கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் அவனை விளையாடச் சொன்னார் கண்ணன் அண்ணன்.
நான் காலையில் வீட்டில் படுத்திருக்கும் பொழுது வெளியே செருப்பை கழற்றும் சத்தம் கேட்டது.சிறீதரன் தான். நான் நடுவில் பெரிய ஓட்டை விழுந்த நார் கட்டிலில் ஓட்டையை கோரைப் பாய் கொண்டு அடைத்து அதில் படுத்திருந்தேன். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு. அப்பாவும் நானும் தான். அம்மா இறந்து வெகுநாள் ஆகிவிட்டது. அருகிலிருக்கும் கழிக்கரை க்ளப்பில் காலை நேரப்பயிற்சியை முடித்துவிட்டு வருகிறான்.இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எனக்கு மிக விருப்பமான இரண்டு மணிநேரம் என்பது சிறீதரன் காலையிலும் மாலையிலும் பயிற்சி முடித்துவிட்டு என்னுடன் வந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரம்தான்.அவன் வெளியே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
“லே நரம்பா உள்ள வால”
அது நான் அவனைச் சிறு வயதுமுதலே கூப்பிடும் பட்டப்பெயர். அவன் சிறு வயதில் ஒரு நரம்பளவே உடல் தடிமன் இருப்பான். அவனை நான் நரம்பன் எனக் கூப்பிடுவதற்கு அவன் எப்பொழுதாவது எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.நான் உடனே அவனும் நானும் சிறுவயதில் என் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பிப்பேன்.அவன் சிரித்துவிடுவான்.நரம்பன் உள்ளே வந்து எண்ணை வழிந்துகொண்டிருக்கும் எங்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்தான். நான் மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்க்கும் அந்த மணம்.நரம்பனின் கால்களில் செம்மண்தரையில் விளையாடிய பொழுது ஏறிய மணலும் அவன் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் வடியும் ரத்தமும் சேர்ந்து வரும் மணம்.அவன் வந்து செல்லும் அந்த ஒரு மணிநேரமும் நான் அதை ரசித்துக்கிடப்பேன்.ஒரு மனித உடல் ஏற்படுத்த இயலும் உச்சக்கட்ட சாத்தியமுள்ள மணம் அது என நான் அறிவேன். ஏனெனில் மனித உடலின் மிக மோசமான நாற்றத்தை நான் மிக அணுக்கமாக அறிவேன். என் உடலிலே அது வீசும். சாயுங்காலம் பெரும்பாலும் நரம்பன் வீட்டிற்கு வந்துவிட்டு போனதும் நான் வேகமாக டாஸ்மாக்கிற்கு சென்று போட்டுவிட்டு வருவேன். வேறு யாரிடமும் பேசுவதில்லை. நேராகச் சென்று குடித்தவிட்டு வந்து முன் அறையில் படுத்துக்கொள்வேன். அப்பா சில நாட்கள் ஏதேனும் செய்து வைத்திருப்பார். அவர் சமைத்திருக்கிறார் என்பதை நான் வீட்டிற்குள் நுழையும் பொழுதே வரும் கரிந்த வாடையைக் கொண்டு அறிந்துகொள்வேன்.அப்படி இல்லையென்றால் பேசாமல் படுத்துவிடுவது வழக்கம். அவர் உள் அறையில் குடித்துவிட்டு படுத்துக்கொள்வார். நான் கட்டிலில் படுத்தவுடன் எனக்கு குமட்டும். நான் ஒவ்வொரு நொடியும் வெறுக்கும் அந்த வாடை, அது என் உடலில் இருந்து வீசும். நான் என் உடலை வெறுப்பேன்.குடித்து குடித்து நடுங்குவதை மட்டுமே செயலாகச் செய்யும் என் கைகள்.சன்னலின் வழியாக வந்து வீழும் நிலவொளியில் தெரியும் நரம்பனின் புகைப்படத்தைப் பார்ப்பேன்.அதில் நரம்பன் என் அம்மாவின் கைகளில் இருப்பான். மிக மிக ஒல்லியாக. நான் நல்ல தடிமனான கைகளுடன் நெஞ்சை திமிற்றியப்படி அந்த கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் தெரிவேன். என் கைகளை அந்த இளம் இருட்டில் பார்ப்பேன். அந்த திமிறிய சிறிய கைகளில் அவை வளர்ந்தவுடன் தேக்கிவைக்கப்போகும் ஆற்றல் உடைந்து தெறிக்க ஆயத்தமாக இருக்கும். என் மனம் உற்சாகம் கொள்ளும்.கட்டிலில் படுத்தபடி கைகால்களை உரசிக்கொள்வேன். பின் சட்டென குமட்டி வாந்தி எடுத்துவிடுவேன். அப்பா உள்ளிருந்து கத்துவார்.
“லேல வெளிய பேய் கக்கபுடாதா”
நான் பெரும்பாலும் அப்பாவிற்கு பதில் எதுவும் சொல்லவதில்லை. அப்படியே தலையை தொங்க விட்டவாறு உறக்கம். நரம்பன் காலையில் வந்து சிலநேரம் வீட்டைக் கழுவி விட்டுச் செல்வான்.அவன் அருவருப்பெல்லாம் பார்ப்பதில்லை.மிகச்சாதாரணமான ஒரு செயல்பாடாக அது இருக்கும்.
உள்ளே வந்த நரம்பன் “லே நான் அடுத்தவாரம் மெட்ராஸுக்கு போறன் கேட்டியா” என்றான்.
“பொய் சொல்லாதல”
“உண்மையாட்டுதான் சொல்லுகம்ல ,விஜயராஜா காலேஜ்ல மேட்ச்”
“அடிபொழில மக்கா, ஒனக்க ஒடம்பு கபடி வெளயாடுகதுக்கு உள்ள உடம்பாக்கும், கபடிக்கே உண்டான அசைவு உள்ள ஒடம்பு என்னாக்கும் கண்ணண் அண்ணன் சொல்லுவாரு,ஒன்னை ஒரு பயலும் தொட முடியாது கேட்டியா”
அவன் என் கைகளில் ஓங்கி குத்தினான்.
“லே என்னையா குத்துகா, ஒரு அடிக்கு பெலப்பியால, கைய மடக்கி அடிச்சம்ணா நேரா கோமா தான் பாத்துக்க”
“யாரு கோமாக்கு போவா நீயா நானா”
“லே விளையாட்டுக்கு நினைக்காத, அந்த பார்த்திபன ரோட்டுல போட்டு அடிச்சி அவன் நாலு நாளு ஆஸ்பத்திரியில கெடந்தது மறந்துற்றோ”.
“அதெல்லாம் மறக்கல, ஆனா அது எட்டு வருஸத்துக்கு முன்னுக்கு, இப்பம் அவனுட்ட போனா சவுட்டி கொடல பிதுக்கிபுடுவான்”.
“அது சரிதான், அப்பம் நமக்கு கொஞ்சம் கபடி வெளயாட்டு உண்டும்லா. இப்பமும் நான் கிரௌண்டுல எறங்குனா ஒரு பயலும் கிட்ட நின்னுகிட மாட்டான்”.
நரம்பன் சத்தமாக சிரித்துவிட்டான்.
“லே மயிராண்டி,வெளயாட்டுக்கு சொல்லல, நான் இந்த தீவாளிக்கு கழிக்கரை டீமுக்கு ஆப்போஸிற்றா ஒரு டீமு எறக்குயேன் பாரு”.
“செரி செரி, போ எழும்பி வேலைக்கு போற வழியப்பாரு” என்றவாறு எழும்பிப்போனான்.
நரம்பன் சென்னைக்கு சென்று விளையாடி வெற்றிப்பெற்று வந்தான்.ஏற்கனவே குமரிமாவட்ட அளவில் அவன் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவன் போனஸ் போடும் முறைக்கு உள்ளூரில் தவளைச் சாட்டம் என்ற பெயருண்டு. ஒரு காலைக் கொண்டு போனஸ் கோட்டைத் தாண்டிவிட்டு மறுகாலைத் தூக்கி பின் தப்பித்து நடுக்கோட்டை தொடுவது தான் வழக்கம்.ஆனால் நரம்பன் போனஸ் கோட்டைத் தாண்டியவுடன் இடதுகாலால் ஓங்கி தரையில் மிதித்து தவளை போன்று துள்ளி பறந்து நடுக்கோட்டை அடைந்துவிடுவான்.எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடும். அவன் பாடிச் சென்றால் போனஸ் போடுவதை தடுப்பதற்கே எதிர் அணிக்கு பெரும் பாடாக இருக்கும்.
அந்த தீபாவளிக்கு முதல் போட்டி நரம்பனின் அழிக்கரை அணிக்கும் நான் உள்ளூர் குடிகாரர்களைச் சேர்த்து அன்று காலை உருவாக்கியிருந்த அணிக்கும் அறிவிக்கப்பட்டது.என்னிடம் இருந்த ஒரு பழைய நிக்கர் ஒன்றை எடுத்துக்கொண்டு திடலுக்கு போனேன்.நரம்பன் துணிமாற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்துவிட்டான்.
“லே, நீ வெளயாட்டுக்குல்லா சொல்லுகாணி நினைச்சேன். எறங்குறியா” என்று சிரித்தான்.
“ஒரு நிக்கர் சட்டை தால”.
அவன் பையைக் குடைந்து ஒரு டீசர்ட்டும் நிக்கரும் தந்தான். நான் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினேன். அப்பா வீட்டில் இல்லை. அவர் ஏற்கனவே கபடி பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.நான் டீசர்ட்டை தடவிப் பார்த்தேன்.என் உடல் சிலிர்த்தது.நான் ஒவ்வொரு முறையும் கபடியைக் குறித்து பகற்கனவுக் காணும் பொழுதும் அணியும் டீசர்ட். மஞ்சள் நிறத்தில் முன் பக்கம் Kz என்று எழுதியிருக்கும்.பச்சை நிற நிக்கர்.நான் அதை மணத்திப்பார்த்துக்கொண்டேன்.அதை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டேன்.அப்பொழுது தான் கவனித்தேன். அது என் உடலுக்கு சற்றும் பொருந்தாததாக இருந்தது. மிகப்பெரியது. மெலிந்து சூம்பி நடுங்கிக்கொண்டிருந்த நான் அதை அணிந்தவுடன் ஒரு ஜோக்கர் போலத் தெரிந்தேன். அதை உடனே கழற்றினேன். வீட்டு வாசலில் கிடந்த ஒரு பழைய டீசர்ட்டை எடுத்து அணிந்துகொண்டேன். என் அணியில் விளையாட சம்மதித்திருந்த முத்து வந்தான். நானும் அவனும் சென்று ஏற்கனவே வாங்கி என் வீட்டின் எதிர்புறம் கொட்டி வைக்கப்பட்டிருந்த கல்கூட்டத்திற்குள் மறைத்து வைத்திருந்த மருந்தை போட்டுவிட்டு வந்தோம். என் நடையில் சற்று தள்ளாட்டம் கூடியது. அழிக்கரை அணி ஏற்கனவே ஆடுகளத்தில் இறங்கிவிட்டதால் எங்களுக்கான கடைசி அழைப்பை விடுத்தார்கள்.நானும் முத்துவும் சென்று ஆடுகளத்திற்கு மறுபுறமிருந்த பெரிய புளியமரத்தின் அடியில் குடித்துக்கொண்டிருந்த எங்கள் அணியை சேர்ந்தவர்களிடம் சென்று சேர்ந்தோம்.பின் அனைவரும் ஒரு வரிசை ஏற்படுத்தி ஓடிச்சென்று வழக்கமான கபடி வீரர்கள் செய்வதைப் போன்று களத்தைச் சுற்றி ஓடினோம். கூட்டம் முழுவதும் சிரிப்பலை.
“எல்லாம் பயங்கர ப்ளேயர்மாருல்லா”
“லே ஆளைத் தொடணும் இல்லணா பிடிக்கணும் அப்பந்தா பாயிண்ட், சும்மா க்ரௌண்ட சுத்தி ஓடுனா பாய்ண்ட் கெடயாது பாத்துக்க”.
“ஆமா இவனுவ அஞ்சாறு சுத்து சுத்திட்டு நாங்கதான் ஜெயிச்சோம்ணு சொன்னாலும் சொல்லுவானுவ”.
முத்து சொன்னான் “மக்கா லேசா போட்டது நல்லதா போச்சி கேட்டியா, இல்லணா இந்தத் தாயோழி மக்களுக்க நடுவுல எங்க வெளயாடுயது”.
நான் என் கைகளைப் பார்த்தேன். நடுக்கம் நின்றிருந்தது. நடுவர் விசில் ஊதினார். சற்றென்று என் மனம் கூர்மை கொண்டது.என் கண்கள் எதிர் அணியினரை துல்லியமாக நோட்டமிட்டது.மனம் உந்தியது. அவர்களை என்னால் தொட்டுவிட்டு தப்பிவிட முடியும். அவர்களை என்னால் பிடித்துவிட முடியும். ரைட் போன முத்துவை தடுத்து நிறுத்திவிட்டு நான் துள்ளி எதிர் புறம் சென்றேன்.
“அபோட் அபோட் அபோட்”
என் வாய் தன்னையறியாமல் முனங்கியது.நரம்பன் நடுவில் தான் நின்றான்.நான் துள்ளித் துள்ளிப் பாடினேன்.என்னை என்னால் நம்பமுடியவில்லை.நான் உள்ளே இறங்கி பாடினேன்.பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் சிறிதுமின்றி.ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு. என் மனம் மிக்கூர்மையாக அறிந்தது. அவர்களால் என்னை ஒரு பொழுதும் பிடிக்கமுடியாது. நான் மூன்று பேரைத் தூக்கிச் செல்வேன்.என்ன நடந்தது என்பது சரியாக என் மனதால் கணிக்கமுடியவில்லை. சற்று மறந்தது போலவும் இருந்தது. கூட்டம் சிரிப்பது மட்டும் என் காதுகளுக்கு கேட்டது.நான் கூட்டத்தின் மீது விழுந்து கிடந்தேன். மெல்ல கைகளை ஊன்றி எழும்பினேன். கால்களில் லேசான சிராய்ப்பு, அதில் ரத்தம். நான் மெல்ல நடந்து வந்து குத்தவைக்கும் பொழுது மொத்த அணியும் அவுட்டாகியிருந்தது.அடுத்தமுறை முத்து பாடிச் சென்றான். நான் இங்கிருந்தபடியே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பாடிச் செல்வதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.எங்கும் துள்ளாமல் ஓடாமல் மெல்ல மெல்ல நடந்தபடியே பாடினேன். சட்டென்று உள்ளே பகுந்து ஒரு உடல் தொடல். துள்ளி ஓடி நடு கோட்டைத் தொட்டுவிட்டேன்.எல்லாம் தெளிவாகிட்டது போல் ஒரு நொடி. முத்து பிடிகொடுத்துவிட்டான். அழிக்கரை அணியின் அடுத்த வீரன் பாடி வந்தான். நான் என் முறைக்காக காத்திருந்தேன்.திரும்பிச் சென்ற அழிக்கரை அணி வீரனை விரட்டி உள்ளே சென்றேன். கூட்டம் ஆர்பரித்தது.
“மக்கா உடாதல, அவ்வளவுவேரையும் அள்ளுல” என்ற சத்தம்.
நான் நிதானமாக பாடினேன்.
“அபோட் அபோட் அபோட்”.
இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மெதுவாக நடந்தேன். வலப்புறமிருந்து இடப்புறம் மீண்டும் நிதானமாக பாடியபடி வந்தேன்.
“லே குப்பிய தேடுதியா” என்றது ஒரு குரல்.
நான் எதிரே நின்ற வீரர்களின் கால்களைப் பார்த்தவாறு இடதுகைகளை மட்டும் அந்தக்குரல் வந்த திசை நோக்கி அமைதி என்பது போல செய்கை செய்தேன்.சட்டென் உடலில் ஓர் இடி. நான் நடு கோட்டை தொட என் கைகளைத் துளாவினேன்.ஒரு ஆறடி உயரமிருக்கலாம் என்று நினைக்கிறேன். என் கால்களைப் பிடித்து தூக்கியிருந்தார்கள்.என் கைகள் வானத்தில் அலைந்தன. நான் நிதானமாக என்னைத் தூக்கியிருந்த கூட்டத்திலிருந்து இறங்கினேன்.பின் வெளியே சென்றபொழுதுதான் கவனித்தேன் என் பனியன் கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பதை.
நாங்கள் 42-0 என்ற புள்ளிக் கணக்கில் அழிக்கரை அணியிடம் தோற்றோம்.
நரம்பனுக்கு அடுத்த ஆட்டமிருந்ததால் நான் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.உள்ளே சென்று கிழிந்துவிட்டிருந்த என் டீசர்ட்டை அடுக்களையில் போட்டுவிட்டு முன் அறைக்கு வந்தேன்.அப்பா குளித்துவிட்டு படுக்கச் சொன்னார்.வழக்கம் போல் அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வந்து கட்டிலில் படுத்தேன். ஆளரவம் ஏதுமின்றி ஊரே வெறித்திருந்தது.தொலைவில் கபடி விவரணை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.கூட்டமிடும் கூக்குரல்.நான் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன்.அது வெளியே இருந்த தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக பட்டு மின்னியதில் அம்மாவும் நரம்பனும் மறைந்துவிட்டிருந்தனர்.அந்த உடல் திமிறிக்கொண்டிருக்கும் சிறுவன் மட்டும் தெரிந்தான். முட்டியில் லேசான ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. உடலெங்கும் ஒட்டியிருந்த மணல்.நான் அந்த மணத்தை ரசித்தேன். அதில் திளைத்தபடியே உறங்கிப்போனேன்.
அப்பா விளக்கைப் போட்டவுடன் திடுக்கிட்டு கண் விழித்துக்கொண்டேன்.நான் அப்பொழுது கனவு கண்டுகொண்டிருந்தேன்.அம்மாவுடன் புகைப்படத்திலிருக்கும் உடல் திமுறும் அந்தச் சிறுவனாக நான் கபடி ஆடுகளத்தில் நிற்கிறேன்.அந்தப் படத்தில் போட்டிருக்கும் அதே குதிரை ஒன்றின் படம் போட்ட சிறுவன்.ஒரு மலையைத் எம்பித்தாண்டும் குதிரைப் படம். மலை அதன் கால்களுக்குள் சிறிதாக. மிக மிகச் சிறிதாக.எதிரே திருநைனார்குறிச்சி அணி வீரர்கள்.முழு அணியும் ஆவேசம் கொண்டு நிற்கிறது.என் பக்கமாக நான் மட்டுமே நிற்கிறேன்.நடுவர் தன் கைகளை நீட்டி காற்றில் வீசி என்னைப் போகச் சொன்னார்.நான் பாடிச் செல்கிறேன்.கூட்டம் ஆராவாரமிடுகிறது.
“லே என்னல ஒரு பொடியன் பாடி வாறான், பெலப்பானால” என்கிறான் ஒரு வீரன்.
“பாத்துல அவனுக்கு அடி பட்டுராம்ல, மெதுவா பிடிங்க”
“அபோட் அபோட் அபோட்”
நான் இரண்டுமுறை இடப்பக்கமும் வலப்பக்கமுமாக நடந்தேன்.பின் வேகமெடுத்து ஒருபக்கம் ஒரு ஓட்டம்.போனஸ் கோட்டைத்தாண்டி உள்ளே சென்று ஒரு வீரனைத் தொட்டேன்.அந்த பொடியன தூக்குல என்ற ஒலி.என்னை ஏழு வீரர்களும் சுற்றி வளைத்திருந்தனர்.நான் என் தோள்களால் அவர்களை இடித்தேன். மொத்தமாக ஏழுபேரையும் இழுத்துச்சென்று நடுக்கோட்டைத் தொட்டேன்.கூட்டம் எழுந்து வெறியாட்டம் போட்டது.பெரும் கூச்சல்.பெண்கள் குரவையிட்டனர். அழிக்கரை அணி வீரர்கள் எதிரில் இருந்தனர்.நான் பாடினேன்.
“அபோட் அபோட் அபோட்”
அம்மாவின் புகைப்படத்தில் இருக்கும் தோளின் முறுக்குகள்.என் தோள்களை தட்டிக்கொண்டேன்..ஒரு பொழுதும் ஒருவராலும் தோற்கடிக்கமுடியாத தோள்கள். பனை நார் போன்ற கைகள்.பத்து பேரை ஒரே நேரத்தில் இழுத்துப்போடும் கைகள்.கைகளை சுழற்றிக்கொண்டேன்.நான் நரம்பனை நோக்கிப்பாடினேன்.அவன் இடுப்பைவிட தாழ்வாக இருந்தேன் நான்.
“அபோட் அபோட் அபோட்”
நான் நடுக்கோட்டைப் பார்த்து திரும்பி என் கைகளை தரையில் ஊன்றி என் கால்களை மேலே தூக்கி நரம்பனை பாதத்தால் மிதித்தேன்.அவன் தடுமாறி எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியில் சென்று விழுந்தான்.என் கால்களை அடுத்த வீரன் கவ்விப்பிடித்துக்கொண்டான்.சட்டென என்னைப் பிடித்து தூக்கிவிட்டனர். நான் ஒரே உன்னில் அவர்களின் கைகளில் இருந்து நழுவிப் பறந்து நடுக்கோட்டைத் தொட்டேன்.பஞ்சு போன்ற கைகள் என்னை தாங்கிக்கொண்டன.நான் நிமிர்ந்து பார்த்தேன். புகைப்படத்திலிருக்கும் அம்மா.கூட்டத்தின் பேரிரைச்சல். அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்.நான் அவள் கைகளை அழுத்திப்பிடித்தேன்.
“லே வலிக்குல, எனக்க மொவனுக்கு என்னா பெலம்” என்றாள்.என் தோள்களை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தாள்.வானவேடிக்கைகள் என் கண்ணைக் கூசின.
அப்பா என்னைப் பிடித்து தூக்கினார். வாயிலிருந்து லேசாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
“வயறு என்னல ஆச்சி, சாப்பிட்டுட்டு படுலணி சொன்னம்லா”.
என் வயிறு லேசாக உப்பி ஒரு வித மினுமினுப்பை அடைந்திருந்தது.கண்கள் மங்கின. அப்பா வெளியே ஓடினார்.கபடி நடந்துகொண்டிருந்த இடத்தின் அருகில்
உடைமாற்றிக்கொண்டிருந்த நரம்பனிடம் சென்று கீழே விழுந்தார்.நொடியில் நரம்பன் உள்ளே ஓடி வந்தான்.
“சொன்னா கேக்கான இவன்” என்றவாறு என்னை அவன் மடியில் கிடத்திக்கொண்டான்.வியர்வையும் இரத்தமும் கலந்த அவன் உடலின் மணத்தில் என் மனம் திளைத்தது.முறுக்கேறி தடித்திருந்த அவன் தொடைகளில் நான் என் தலையைச் செம்மையாக வைத்துக்கொண்டேன்.நரம்புகள் புடைத்து திரண்டிருந்த அவன் தோள்களைப் பார்த்தவாறு என் கண்கள் முற்றிலும் மங்கி மூடிக்கொண்டன.