அழகுநிலா

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

ஒரு நல்ல நூல் அதற்கான வாசகர்களைக் கண்டடையும் என்பதைக் கேட்க நேர்ந்தால் முன்பெல்லாம் நான் கிண்டலாகச் சிரிப்பதுண்டு. ஆனால் எனது வாசிப்பு மெல்ல விரிவடையத் தொடங்கியவுடன் சிரித்திருக்கக் கூடாதோ என எண்ணினேன். தொழில் நுட்பத்தோடு கடும் போட்டியைச் சந்திக்க வேண்டிய தற்காலச் சூழலிலும் அச்சு நூல்கள் வெளிவருவது குறைந்தபாடில்லை. நம் முன் வந்து குவியும் பல்லாயிரம் நூல்களில் எவற்றை வாசிப்பது, எவற்றைத் தவிர்ப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இருக்கும் குறைந்த வாழ்நாளில் தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்துவிட வேண்டும் என்று தீவிர வாசகன் தேடத் தொடங்குகையில் சிறந்த நூல்கள் அவனைக் கண்டடைந்து காதலி போல் அணைத்துக்கொள்கின்றன.

இன்றைய தமிழ்ச் சூழலில் அப்படியான சிறந்த நூல்களை எழுத்தாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் இப்பட்டியல்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப கட்ட வாசகர்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன என்றுதான் கூறவேண்டும். அந்த வகையில் இந்நூலும் நண்பர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டு எனக்கு அறிமுகமானாலும் நான் இதை வாசித்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அது இந்த நாவலின் தலைப்பு.

‘மெனிஞ்சியோமா’ என்ற இச்சொல் நான் கேள்விப்படாத சொல். சில தலைப்புகள் தங்களது வித்தியாசத்தன்மையாலேயே வாசகர்களைக் கவர்ந்துவிடும். நானும் அந்தத் தலைப்பின் வசீகரத்தால் கவரப்பட்டுத்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்க, வாசிக்க வசீகரம் மெல்ல கலைந்து வலியும் வேதனையும் என்னைச் சூழ்ந்துகொண்டன. தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தைப் பாதிக்கும் ‘BRAIN TUMOR’ என்ற நோயை இயல்பாக கடக்க முடிந்த என்னால் மூளையைப் பாதிக்கும் உயிர் கொல்லியான மெனிஞ்சியோமாவை வைத்து எழுதப்பட்டுள்ள இந்நாவலை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை. நோய்மையைக் கருவாகக் கொண்ட இப்புனைவு இதுவரை நான் வாசித்திராத களமாகவும் தமிழ் நாவல் சூழலுக்குப் புதிதாகவும் இருந்தது.

அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு இணையாக நோய்களும் புதிது, புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தனது அசாத்திய அறிவினால் மரணத்தை வென்று விடுவானோ என்ற அச்சத்தில் இயற்கை இந்த நோய்களின் வழியாக உலக இயக்கத்தை  சமன்படுத்துகிறதோ என நான் எண்ணுவதுண்டு. ஒருகாலத்தில் மூப்பினால் மட்டுமே நிகழ்ந்த மரணம் இன்று வயது வித்தியாசமின்றி கிடைத்தவர்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுகிறது. நவீன வாழ்க்கை முறையால் நீர், நிலம், காற்று, உணவு, சுற்றுச்சூழல் என எல்லாவற்றிலும் கலந்துள்ள நச்சு ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பாம்பாய் படமெடுத்து அவனைக் கொத்துவதற்கான நேரம் பார்த்துக் காத்திருக்கிறது.

பெரும்பாலும் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் ‘மெனிஞ்சியோமா’ இந்த நாவலில் இருபத்தைந்து வயது இளைஞனது வாழ்வைப் புரட்டி போடுகிறது. மூன்று வயது குழந்தைக்குச் சர்க்கரை வியாதி,  ஐந்து வயது குழந்தைக்குப் புற்றுநோய், பத்து வயது சிறுவனுக்கு இதயக் கோளாறு போன்றவை தினசரி செய்திகளாகிவிட்டதால் நாவலின் நாயகனுக்கு ‘இத்தனை சிறுவயதில் இவ்வளவு கொடிய நோயா? அவனுக்கு இந்நோய் வருவற்கான காரணக்கூறுகள் என்ன?’ போன்ற தர்க்கபூர்வமான கேள்விகளை எழுப்ப அவசியமில்லாமல் போகிறது.

பிறந்த ஏழாவது மாதத்திலேயே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் சந்துருவைப் பீடிக்கும் மெனிஞ்சியோமாவும், அதற்காக அவனுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையும், அதன் பக்க விளைவாக தொடர்ந்து நான்கு வருடங்கள் வலிப்பு நோயால் அவன் படும் அவஸ்தைகளும், அவனது நோய்மையையும் நோய்மையால் ஏற்படும் நொய்மையையும் ஒரு பார்வையாளனாக மட்டுமிருந்து பார்த்துக் கலங்கித் துடிக்கும் அவனது தந்தையின் துயரமும் இந்த எழுபது பக்க நாவலில் விரவிக் கிடக்கின்றன. FRISIUM 10 mg என்ற மாத்திரை வழியாக வலிப்பிலிருந்து சந்துருவுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தாலும் அறுவை சிகிச்சையின் காரணமாக உடலின் இடதுபாகம் தனது பழைய பலத்தை இழந்து விடுகிறது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எழுதப்பட்டுள்ள அலுவலகத் தோழி கவிதாவின் கடிதம் ஒரு கையிலும் மாத்திரை மற்றொரு கையிலுமாக சந்துரு நிற்கும் நாவலின் முடிவில் அவனது எதிர்கால வாழ்வைப் பற்றிய பயமும் நிச்சயமின்மையும் அவனோடு சேர்ந்து வாசிக்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

இது போன்ற கொடிய வியாதிகள் வரும்போது நம் உடல் நமக்கானதாக இருப்பதில்லை. மருத்துவர்களைக் கடவுளாகக் கருதி அவர்களிடம் உடலை ஒப்படைத்து சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழி எதுவும் நமக்குப் புலப்படுவதில்லை. நோயாளிகளின் இந்தப் பலவீனத்தையும் நோயைப் பற்றிய அறியாமையையும் மருத்துவர்கள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வது அதிகரித்து வருகிறது. பரிசோதனை எலிகளைப் போல மனிதர்களைப் பயன்படுத்தி புதிய சிகிச்சை முறைகளையும் புதிய மருந்துகளையும் சோதித்துப் பார்ப்பதை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி மருத்துவ உலகம் செய்து வருகிறது. நாவலில் மருத்துவர்களான ரோஜருக்கும் மைக்கேலுக்குமிடையே நிகழும் உரையாடல் இதை உறுதி செய்கிறது. சந்துருவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடிக்கும் மருத்துவர் நரேன் ஏன் தன் நோயாளிகளின் வலிப்பு நோயை குணமாக்காமல் இழுத்தடிக்கிறார்? என்று யோசிக்கையில் அறம் சார்ந்த விழுமியங்கள் பற்றிய சந்தேகம் எழுதவதைத் தவிர்க்க முடியவில்லை.

மருத்துவமனைகளும் சிகிச்சைகளும் ஒரு சாதாரண மனிதனுக்கு எத்தனை அச்சம் தரக்கூடியவை என்பதை சுய அனுபவம் வழியாக அறிந்திருக்கிறேன். மருத்துவமனையில் கழிக்ககூடிய ஒருநாள் இரவென்பது மரணத்தை விட கொடுமையானது. ‘நிசப்தத்தினைப் போல் ஒரு கொடூர அலறல் இந்த உலகத்தில் இல்லை’ என்ற நாவல் வரி அறுவை சிகிச்சை முடிந்து வரும் இரவை மருத்துவமனையில் கழிக்கும் சந்துருவின் ஒட்டுமொத்த துயரத்தை வாசகருக்குக் கடத்துகிறது.

மருத்துவமனை ஊழியர், தாதி, தந்தை இவர்களின் முன்னால் தன் நிர்வாணம் வெளிப்பட்டவுடன் சந்துரு உணரும் அவமானமும் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற அவனது கையறு நிலையும் இப்படி ஒரு நோய் வந்தால் நம் நிலையும் இதுதானே என்ற பதற்றத்தைத் தருகிறது. தினமும் பல மெனிஞ்சியோமா நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவருக்கும் தாதியர்களுக்கும் பத்தோடு பதினொன்று என்ற வகையில் சந்துரு முக்கியமற்றவனாக இருக்கலாம். ஆனால் அவனே உலகம் என்று வாழும் அவனது தந்தையின் நிலையோ பரிதாபகரமானதாக இருக்கிறது. துக்கத்தையும் வலியையும் ஒருபோதும் மனிதர்களால் பகிர்ந்துவிட முடியாது. தனது உயிரைவிட மேலான மகன் தன் கண் முன்னால் செத்து, செத்து பிழைப்பதைப் பார்க்க மட்டுமே முடிந்த அந்த தந்தையின் வலி சந்துருவின் வலியை விட ஆயிரம் மடங்கு  கொடுமையானது. சந்துருவுக்கு முன்னால் தான் உடைந்து போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் தனக்குள்ளேயே அவர் அழுது தீர்க்கிறார். ஒரு கட்டத்தில் சந்துரு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும்போது தந்தையும் மகனும் உரையாடுமிடம் சற்று நாடகத்தனமாக இருந்தாலும் வாழ்க்கை இதுபோன்ற நாடகத் தருணங்களை மனிதர்களுக்குத் தொடர்ந்து தந்துகொண்டேதான் இருக்கிறது.

“கடவுள் இருக்காரான்னு தெரிலப்பா” என சந்துருவின் தந்தை புலம்புகையில் “இவ்ளோ பெரிய ஆபரேஷன் நடந்தும் பையன் பொழச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் சார். கடவுள் இருக்காரு சார். நமக்கு நம்பிக்கை வேணும். அவ்ளோதான்” என்று மருத்துவரின் அட்டெண்டர் சொல்வது நாவலின் முக்கியமான இடம். ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் “எதுக்கு இதெல்லாம்? என்ன மாதிரி டிசைன் இது? என்ன மாதிரி கடவுள் இது? இந்த மாதிரி சமயத்தில்தான் கடவுள் இருக்காரா இல்லையான்னு நம்பிக்கையே போய்விடுகிறது” என்று மாதவன் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்வின் மீதான, கடவுளின் மீதான, மனிதர்களின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் குலையும் தருணம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துவிட்டுத்தான் செல்கிறது. ஆனாலும் மனிதர்கள் சாக விரும்புவதில்லை. இந்த உலகில் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற உயிரின் வேட்கையும் எத்தனை மோசமான இருட்டையும் கடக்க சிறு வெளிச்சமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும்தான் மனிதர்களைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது.

ஏன் குறுநாவல் வடிவத்தை நாவலாசிரியர் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி ஒரு வாசகராக எனக்குள் எழுகிறது. விரித்து எழுதுவதற்கான தேவை இருக்கும்போது சுருக்கி எழுதப்பட்டது போலுள்ள இந்த வடிவம் சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஒரு சராசரி மனிதன் இந்த நோயை எதிர்கொள்ளும் போது நிகழும் நடைமுறைச் சிக்கல்களை இன்னும் விரிவாக பேசியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இது போன்ற அறுவை சிகிச்சை கட்டாயம் செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற சூழலில் அதற்கான பணத்தேவை, அந்த பணத்தை ஏற்பாடு செய்வதில் சராசரி மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மருத்துவர்களின் பயமுறுத்தல்கள், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் நெருக்கடிகள், மருந்துகளின் விலைகள் இப்படி பல தகவல்களைச் சொல்லக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றைத் தவிர்த்ததற்கான காரணம் புரியவில்லை.

இப்புனைவை வாசிக்கையில் சந்துருவின் தாய் இருந்திருந்தால் என்ற சிந்தனை மனதின் ஒருபுறத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இல்லாத கதாபாத்திரத்தை மனதில் கொண்டு வாசிப்பது சரியில்லை என்றாலும் கூட என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பது பொதுப்புத்தியாக உள்ள சமூகத்தில் இரண்டு ஆண்கள் அதுவும் தந்தையும் மகனுமாக ஒரு கொடிய நோயை எதிர்கொள்கையில் கொந்தளிக்கும் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் ஓர் இறுக்கமான சட்டகத்திற்குள் நாவல் நகர்வது போன்று இருந்தது. சந்துருவின் தாய் இருந்திருந்தால் இந்த நாவல் மகனும் தந்தையும் சொல்ல விரும்பிய ஆனால் சொல்லாமல் மறைத்த பலவற்றை ஆழமாக வெளிப்படுத்தி வாசகர்களை நெகிழச் செய்திருக்க வாய்ப்ப்புண்டு என்று தோன்றுகிறது.

“சந்துருவிடம் இப்போது எந்தவித பாரமுமில்லை. என்னிடமும். உங்கள் தோள்களில் இறக்கி வைத்துவிட்ட பாம்புச்சிலுவையது. நெளிந்து நெளிந்து உங்கள் தலைக்கு ஏறும் முன் அப்பாம்பினை முறித்துப் போடுங்கள்”, என்று நாவலாசிரியர் கணேச குமாரன் நாவலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். தூக்கி சுமக்க முடியாத பாரங்களைக் கூட சொற்களின் வழியாக இறக்கி வைத்துவிடலாம் அல்லது மற்றவர்களுக்குக் கடத்திவிடலாம். அப்படியாக அவர் என் மீது இறக்கி வைத்த பாம்பினைத் தலைக்கு ஏறும் முன், எனக்கான சொற்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதுவது அல்லாது வேறு எப்படி முறித்துப் போடுவது?

மெனிஞ்சியோமா

கணேச குமாரன்

யாவரும் பப்ளிஷர்ஸ்

டிசம்பர் 2014 (முதல் பதிப்பு)