மகேந்திரன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

இரவின் கதை

கரீமின் குடும்பத்திற்கு பக்கீர் கனவில் வந்து யாமம் தயாரிக்கும் கலையை கற்றுத் தருகிறார். கனவு கூட ஒருவகையில் இருளோடு தொடர்புகொள்ளும் ஒரு கருவி. அதன் வழியே சில சமயம் முன்னோர்கள் நம்மோடு பேசுவார்கள். இருளென்பதைக் கடந்த காலம் என்று சுருக்கிவிட முடியாது. எல்லோர் மனதிலும் அது நிறைந்திருக்கிறது. யாமம் என்னும் அத்தர் பகலிலேயே அந்த இரவினைத் தோற்றுவிக்க வல்லது. அந்தச் சுகந்தம், இரவின் தூதுவன். “கங்குள் வெள்ளம் கடலினும் பெரிதே” குறுந்தொகை பாடல். எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அந்த வெள்ளம் விளையாடுகிறது என்பதைப் பற்றிய கதை, அதனால் இது இரவின் கதை.

யாமம் என்னும் அத்தர் தயாரிக்கும் கரீமின் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஆங்கிலேயர்கள் வாசனைக்காக ஏங்கும் போது கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பித்து, குறுமிளகிற்காக இந்தியா வருகிறார்கள். மதரா பட்டிணத்தையும் தோற்றுவிக்கிறார்கள்.  ஒருவகையில் பார்த்தால் வாசனைக்காக வந்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நகரமது. ஒரு காலகட்டத்தில் நாறும் அந்த நகரை வாசனையானதாய் மாற்ற, பக்கீர் கனவில்  வந்து கரீமின் குடும்பத்திடம் பட்டிணத்திற்குப் போகச்சொல்கிறார். அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

இரவு ஆழமானது, அறியமுடியாதது மேலும் மர்மமானது. பகலில் ஒருவன் தன் மனதிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். பல்லேறு விஷயங்கள் நம்மை தற்க்காத்துவிடும். ஆனால் இரவு மிக உக்கிரமானது. தலைவிரித்தாடும் மரங்களை இரவில் நேருக்கு நேர் பார்ப்பது போல. ஓடியொழிய முடியாது. அதன் கரங்கள் நம்மை அள்ளி தன் வாயினில் திணித்துவிடும். பிறகு இருள் மெல்ல தன் ஆட்சியைச் செலுத்த ஆரம்பிக்கும். சில நேரங்களில் சந்தேகம் வருவதுண்டு. உண்மையில் இருளென்பது, பகலின் எதிரிடா? வெளிச்சம் இல்லாததா? இருள் வெளியே இருப்பதா?  இல்லை மனதின் உள்ளே பதுங்கி கிடந்து சமயம் வாய்த்ததும் பீரிட்டுக்கொண்டு வெளியே வருவதா? இரவிற்கு பல்வேறு உவமைகள் தருகிறார், சிலசமயம் காலில்லாத பூனை, அடையாளம் அழிந்து போன நதி என.

மேல் மனமென்பது பகலுக்கு ஒப்பானது. ஒப்பனைத் தரித்தது, ஆழமற்றது. உண்மையில் பகலில் இருப்பவன் அல்ல அவன். மற்றோருவன் உள்ளே கிடக்கிறான், அதனை அவனவன் “வாசனா” தட்டி எழுப்புகிறது. ஒருவனின் விருப்பு மற்றும் வெறுப்புக்கு அவனின் “வாசனா” காரணமென வேதாந்தம் கூறுகிறது. அதுதான் அவனை ஆசைகள் மூலம் வழிநடத்துகிறது. அந்த “வாசனா” தான் அடி மனதின் முகம். அடி மனமென்பது ஒருவகையில் இருளுக்கு ஒப்பானது. எப்படி இருளை அளவிடமுடியாதோ அதைப் போலவேதான் அடிமனதையும் கண்டுகொள்ள இயலாது. சிலசமயம் தனக்கே தன் அகத்தைக் கண்டு அச்சப்பட வேண்டியிருக்கும்.

பண்டாரத்தை எப்படி நாய் வழி நடத்துகிறதோ அதே போல வாசனா மனிதனை ஆசைகள் மூலம் இழுத்துக்கொண்டு போகிறது. பத்ரகிரி இளம் வயதில் தாயை இழந்து, சித்தி வீட்டில் தன் தம்பியுடன் வாழ்ந்தான். தனது தம்பி மீது பெரும் அன்பு வைத்து, தானே முன் நின்று கல்யாணம் பண்ணி, கடன் வாங்கி லண்டன் படிக்க அனுப்புகிறான். தன் மனைவியை அண்ணனின் வீட்டில் விட்டுவிட்டு அவன் லண்டன் கிளம்புகிறான்.

எப்படியோ தம்பி மனைவி தையல் மீது அவனுக்குக் காமம் வந்துவிடுகிறது. இந்த “எப்படியோ” கிட்டத்தட்டக் கதையில் இருப்பவர்கள் எல்லோர் வாழ்விலும் வந்துவிடுகிறது. பண்டாரம் சம்சாரியாகிவிடுகிறது, கிருஷ்ணப்ப கரையாளர் தன் சொத்துக்காக போராடி திடுமென அனைத்தையும் தன் தம்பி பெயருக்கும், எலிசபெத்தின் பெயருக்கும் மாற்றிவிட்டு, கிட்டத்தட்டப் பண்டாரமாய் மாறிவிடுகிறார். சூதாட்டத்தில் பணத்தை இழந்து காணாமல் போகும் கரீம். பிரபு வாழ்க்கை வாழ லண்டன் வந்த சற்குணம், சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடுபவனாக மாறுகிறான்.

அப்படியானால் இருளேன்பது வெறும் வெளிச்சமின்மை மட்டுமில்லை, அகத்தின் ஆழமது. அகத்தினுள் கோடான கோடி ஆண்டு நினைவுகள் கொட்டிக்கிடக்கிறது. ஆழம் செல்லச் செல்ல அவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த அகமன இருள் ஒரு புதையல். சில சமயம் பாம்பும் வரும், மறுசமயம் பொன்னும் வரும். ஆனால் இந்தப் புதையல் எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் வாசனாவுக்கெற்ப்ப பாம்பும், பொன்னையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

காட்டை வைத்து பத்து தலைமுறைக்குக் காலாட்டிக்கிட்டு வாழ்ந்துவிட்டுப் போகலாம் எனப் பூதி கிருஷ்ணப்பாவிடம் சொல்லும் போது, எதற்காக லண்டன் வரை சென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்? மலையை மட்டும் தன் வசமாகிக் கொண்டால் போதுமென்று அவருக்குத் தோன்றிற்று. இதுவரை காட்டின் இயல்பை அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டார்.  தன்னுடைய அகத்தை அவர் கண்டுகொள்ளும் தருணமிது. தையல் கர்ப்பமான பின் பத்ரகிரியும், மீண்டும் கிடைத்துவிட்ட நாயைப் பார்த்த பண்டாரமும், நடுவீதியில் தூக்கிட்ட ஒரு பெண்ணைப் பார்த்த சற்குணமும் தன் அகத்தினுளுள்ள யாமத்தைக் கண்டு திகைக்கிறார்கள். தானா இப்படி இருந்தேனேன நினைக்கிறார்கள். ஏதோ வகையில் இருளோடு தனக்குமுள்ள உறவை அறிந்து கொள்ளும் தருணமிது. முழுமையாகத் தன்னை கண்டு கொண்ட தருணம்.

கதையில் வருவோர் அனைவரும் காணாமல் போய், கரைந்துவிடுகிறார்கள். கனவில் வந்த பக்கீர் திரும்பவும் வரவில்லையே என ஏங்குகிறான் கரீம். வலி தாளாமல் எங்கோ தொலைந்து போகிறான். அதைப் போலவே பண்டாரமும் கரைந்து சுகந்தமாக மாறிவிடுகிறார். மற்றவர்கள் எல்லோரும் தன்னைத் தொலைத்த இன்னோருவார்களாய் மாறிவிடுகிறார்கள். இருளின் அலைகழிப்பை கண்டவர்களாக அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள். தொலைந்து போன அவர்கள் யாமமாக மாறிவிடுகிறார்கள். அந்த யாமம் அகத்திற்குள் புதைந்து அடுத்த அடுக்கை உருவாக்குகிறது. அடுத்த தலைமுறைக்கான புதையல்.

ஐந்து கதைகளுக்கும் இடையேயான சரடு இந்த யாமம்தான். அதை எப்படி தங்கள் போக்கில் கோர்த்துக்கொள்கிறார்கள் என்பது வாசகனுக்கு விடப்பட்ட இடைவெளி. அதனை நான் இப்படி நிரப்பிக்கொண்டேன். அதேபோல் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கிரதேன்றே தோன்றுகிறது.

White டவுன், black டவுன் என நகரம்கூட இரண்டாகப் பிரிந்திருக்கிறது. Black டவுனிலிருக்கும் கஷ்டப்படும் மக்கள்தான், white டவுனை புதுப்பிக்கிறார்கள். நீங்கள் போய் அங்கு வேலை செய்யவில்லையென்றால் நாறிப்போய்விடும், அதனால் போகாதீர்கள் என்று சற்குணம் வலியுறுத்துகிறான். இருள் எல்லாவற்றையும் புதுப்பிக்கிறது. மீண்டும் பக்கீர் கனவில் வந்து புதுப்பிப்பார். யாவரின் சுக துக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப் போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் சுகந்தம் எப்போதும் போல உலகமெங்கும் நிரம்பியிருக்கும்.

ராமகிருஷ்ணனின் கதை கூறுமுறை நாவலுக்கு வலு சேர்க்கிறது. நுண்ணிய தகவல்கள் கொண்டு வாழ்வை முன் நிறுத்த முயலுகிறது. இரவை எழுதி அதைப் படிமமாக மாற்றிவிட்டிருக்கிறார்.