அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி, இந்த ஆண்டு நான் வாசித்த முதல் கவிதை தொகுப்பு, பரிந்துரைத்த பாவாவிற்கு மிக்க நன்றி. பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடியத் தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி, ஆக அம்புயாதனம் என்றால், அம்புத்துளைக்கும் வேதனையைத் தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தைக் கடந்து, காமத்தால் முக்தித் தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசகத் தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்புச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையொ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா? என்று புகழ்பெற்ற படிம எழுத்தாளர் ரமேஷ்பிரேதனிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில்,

மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களேஇந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?” என்று விவரித்தார். இவர் அளித்த பதிலின் உண்மை நிலையை உணர நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை நூல் அம்புயாதனத்துக்காளி. தமிழில் வெளிவந்து இருக்கும் முதல் தாந்த்ரீக பாலியல் கவிதைத்தொகுப்பு அம்புயாதனத்துக்காளி ஆகும்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும், காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்உடலின்பத்தைக் கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமகளியாட்டங்களை கடந்து உள்செல்கிறாய், எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல் சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமப்படுத்தியுள்ளனர். அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே, அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னை கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே ப்றறிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்தப் பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினை பெற வள்ளுவரின் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார். கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு. ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

நமது கவிதை மரபில் கவிஞர்கள் முதல் தலைமுறையில் இருந்து தங்களது அக தேடலை படிமத்தின் துனணக்கொண்டு படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் ஆன்மிக உள்அகத்தேடலின் ஆதர்ச நாயகனாக பாரதியார், பிரமிள், நம்மாழ்வார், தேவதேவன் முதலிய கவிஞர்களை குறிப்பிடலாம். அவ்வரிசையில் பிரபுகங்காதரனை பின்பற்றி சமீப காலத்தில் அம்புயாதனத்துக் காளி போன்ற படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மற்றொரு படைப்பு ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தகைய கவிதைகளின் அடிப்படை அலகாக இருப்பது கற்பனாவாதக் காமம் ஆகும். காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகத்தில் கற்பனாவாதக் காமம் பற்றிய நிறை குறைகளை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது இத்தகைய கவிதைகளை அணுகுவதற்கு மிகவும் உதவிபுரிபவன,

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இக்கவிதைத் தொகுப்பில் இருந்து ஓரிரு கவிதைகள் இங்கு தரப்படுகின்றன. இவ்விரண்டு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒற்றுமைகள் இக்கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

உதாணத்திற்கு,

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு”

எனும் கவிதை பிரபு கங்காதரனின் நீண்ட முத்தத்திற்கு என வரும் கவிதையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

அடர்வனம் நாணும். காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்.

மரவட்டை போல் ஊருமென் மீசை காளி, வியர்வையாய் வழிந்தோடுகிறேன்,

அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம், போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர். அரைஞான் கயிற்றை வெள்ளிநதிக்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர

எடுத்துக்காட்டாக,

ஒரு மலைச்சரிவின்

கருத்த பாறையின் மேல்

படர்ந்திருக்கிறாள் காளி

நீ..ண்……ண்..ண்……

முத்தத்தின் முடிவில்

மலைப்பாம்பாய்

எனை விழுங்குகிறாள்

கதகதப்பான

அவள் கருப்பைத்

தேடியமர்ந்து கொள்கிறேன்

 

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயண்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக

                                                                                                           

                                                                                                                       

ங்

                                                                                                                                   

கி

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

 

நீர் கொண்டு போகும் நத்தைப் போலலெனை முதுகில் சுமத்தியிருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒருக்கவிதைப் போதும்,

 

முன்னும் பின்னும்.

பின்னும் முன்னும்.

யென நாவால் தவழ்ந்துன்

திருமேனியளந்து பிறவாப்

பேறடைவேன் மாகாளி

 

எனும் கவிதையை சுட்டலாம்பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும். பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பலக் கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளைப் படித்து இன்பம் நுகர இத்தொடு நிறுத்துகிறேன்.

 

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை, அன்பின், காமத்தின், காதலின் குறியீடாக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

 

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவனம் அம்புயாதனத்துக் காளி.

ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை

எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை”

நீட்சே

சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே தெரியாது’ என்றோ தொடங்கும் வரிகள் ஊருக்கு வழி சொல்லும் அடையாளங்கள் போல கதைக்கான திறவை முன்வைப்பன.

காட்சிகளாக விரியும் சொற்கள் திடமான வரைவுக்குள் கதையை நகர்த்துகிறது. அந்த வரைவு புகுத்தப்பட்டதாக இல்லாமல் அதன் போக்கிலேயே தீர்மானிக்கப்பட்டதாக அமைவது நம்பகத்தன்மை உடையதாக்குகிறது.

முதல் கதை குள்ளன் பினு, பினுவின் அறிமுகத்திற்கு அவன் காலை ஊன்ற வாகாக, வண்டியை நிறுத்த இடம் தேடுவது நீரோட்டம் பார்க்கிறவர்களை ஒத்து இருக்கும் என்ற ஒப்பீடு தெளிவான அறிமுகத்தை ஏற்படுத்தும். அவனுடைய உயரமான தாத்தா, உயரமான பேபி கொச்சம்மாளை கல்யாணம் செய்து உயரமான மகன்களை மகள்களை ஈன்றெடுக்கிறார். அந்த குடும்பத்திலேயே குள்ளனான பினு தாத்தாவிடமிருந்து தந்தையிடமிருந்து உறவினர்களிடமிருந்தும் எவ்வித அன்பையும் பெறவில்லை. தனியனாகவே திரியும் அவலம் அவனுக்கு.

தந்தைக்கு பிறகு அவர் நடத்திய மெஸ் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கு வருகிறான். அவனது அக்காவின் மகளைக் கேலி செய்யும் இளைஞர்களை எதிர்க்க துணியும் போது தன்னுடைய உயரமே சண்டையில் சாதகமாகிறது. உயரத்தால் அல்லாது மனதில் தான் உயர்ந்துவிட்டதாக நம்புகிறான். அதுவரை அவனை கூட்டிச் செல்ல வரும் உமரின் ஆட்டோவில், அதன் பிறகு வராமல் நடந்தே செல்ல தொடங்குகிறான். இறுதியில் கதை இவ்வரியோடு முடிகிறது, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு ’. உயரத்தைக் கண்டு பயம் கொள்ளுகிற புனைவு கதையை இறுதி செய்கிறது.

காட்சிகளாக விரியும் கதைகளில் காலம் இரண்டொரு வரிகளில் கடந்துவிடுகின்றன. அவையும் காற்புள்ளிக்கு பிறகு இன்னொரு பரிணாமத்தை காட்டிவிடுகின்றன.

இந்த கட்டுரை ஆரம்பித்ததில் இருந்து ஒரு சின்ன நெருடல் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப சீரியஸாக கட்டுரை பயணப்படுகிறதோ என்று. இதற்கு நேர் எதிரான கட்டுடைக்கப்பட்ட எளிய மொழியில் தான் இக்கதைகள். மனிதர்களின் இயல்பான குறும்பை, கேலியை, பகடியை தன்னுடைய தூண்களாக கொண்ட தொகுப்பை விமர்சிக்கும் போது மட்டும் இறுக்கமான மொழியாக இருந்தா எப்படி?

வடிவேலுவை ஏன் கொண்டாடுகிறோம் என யோசித்து பார்த்தால் அவருடைய மறுக்க முடியாத அடையாளமாக மதுரக்காரன் என்கிற தொனி இருப்பதை சொல்ல முடியும். சாம்ராஜ்க்கும் அது பொருந்தும். ஏறத்தாழ மதுரையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட யாரும் சொல்லிவிட முடியும், மதுரை எவ்வளவு கொண்டாட்டமான நகரம் என்று. அதே நேரத்தில் பிடிவாதம் கொண்ட இடமும் கூட.

சாம்ராஜின் கதைகள் ஒரு எளிய கதைசொல்லியை அறிமுகப்படுத்துகிறது. கதைசொல்லி கதைகளைச் சொல்லி சிரிக்கிறான், கூடவே அழுகிறான், கடக்க முடியாத இடத்தை ‘ச்சைஇதெல்லாம் பெருசா’ என உதாசீனப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவன் மொழிக்கு பழகிய நாம் அவனோடு சென்ற விட்ட நம்மை, வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறோம்.

சாமின் கதைகள் மனிதர்களைச் சுற்றியது. அவர்களின் உணர்வுகளை சுற்றியது. குள்ளனான பினுவிற்கு உயரமே அவனுடைய சிக்கல். முத்திருளாண்டிக்கு வாக்கப்பட்டு வரும் செவ்வாக்கியத்திற்கு கணவனுடன் எதிர்பார்த்த தாம்பத்திய உறவு இல்லாது போவது சிக்கல். பரமேஸ்வரிக்கு மாமனார், அச்சுதன் நாயருக்கு தன்னுடைய கேப்டன் கனவு, லக்ஷ்மியக்காவிற்கு விரக்தி, மல்லிகாவிற்கு ஒரே சந்தோசமான சினிமா இல்லாது போனது, மரியபுஷ்பத்தின் கணவனான சகாயத்திற்கு மனைவியின் மீதான சந்தேகம் – என உழலும் மனிதர்களை நாம் இயல்பான உலகில் எல்லா மூலைகளிலும் சந்திக்க நேரிடும். இவர்கள் தங்களுக்கான வாழ்வின் மீதான பிடித்தத்தை பழிவாங்கும், நிறைவேற்றும், முற்றிலுமாக துறந்து விடும் முடிவுகள் வழியாக உறுதி செய்கின்றனர்.

இன்னொரு பார்வையில் தோழர்கள், கலகம், புரட்சி, அரசியல் குறித்த பகடிகளைக் குறிப்பிடலாம். அதிலும் மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கை உறுதிப்பாட்டிற்கே அரசியலை அணுகுகின்றனர்.

பகடியின் உச்சபட்சத்தை தரிசிக்க ‘தொழில் புரட்சி’ ‘மருள்’ ‘ஜார் ஒழிக’ கதைகளைக் குறிப்பிடலாம்.

மிக எளிமையானது தான் படைப்பு உருவாக்கத்தில் சிக்கலானதும் கூட. பகடியை அவ்வகையில் சேர்க்கலாம்.

மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட திட்டமிடும் தோழர்கள் சின்ன வட்டம் தான் ஆறு பேர். அதிலும் ஒருவர் தன் தங்கைக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை பார்க்க போவதை மறைத்து விட்டு துக்க நிகழ்விற்கு போவதாக கூறிச் செல்பவர். மூன்று குழு. கண்காணிப்பு, செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு நாய் இருந்ததை கவனிக்க மறந்ததால் அத்திட்டமே முடங்குகிறது. வந்தவய்ங்க கொளுத்தி விட்டுட்டு போயிருந்தவாச்சும் புது ஜீப் கிடைச்சுருக்கும் என புலம்பும் ஆபிசர், அவரிடம் சாப்பாடு பாக்கி வாங்க காத்து நிற்கும் தள்ளு வண்டி கடைக்காரர் என கதை கையாண்டிருக்கும் பாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவை. தாங்கள் நம்பும் அரசியல் பாதையை கொண்டிருப்பவர்களின் செயல்களைப் பகடி செய்யும் கதைகளில் வெகுளித்தனமும் ஏமாற்றமும் சேர்ந்தே தொனிக்கிறது. புரட்சி வந்துக் கொண்டிருக்கிறது என கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள் அவை பொய்த்து போவதை அறியும் போது விரக்தி அடைகின்றனர். அதன் மீதான விமர்சனத்தை பகடிகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில் ஆற்றாமை இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

எழுதப்படாத தியாகங்கள் எத்தனையோ இடதுசாரிய அரசியலில் அடையாளப்படுத்தபடாது கரைந்திருக்கின்றன. செயல்பாடுகளின் நோக்கங்கள் மறைந்து நடைமுறைகள் இறுகும் போது சடங்குகள் போலவே அலுப்பு வெளிப்பட்டு விடுகிறது.

பிராச்சாரத்திற்கு பயன்படாத படைப்புகள் வெகு அரிதாகவே காணக் கிடைக்கும் இடதுசாரிய பரப்பில் சாம்ராஜ் முதல் அடிகளை முன்வைக்கிறார். பகடி என்பதுவும் விமர்சனம் தான். எதிர் கருத்தியல்களில் இருந்து வரும் விமர்சனங்களை விட இவை ஆற்றல் நிரம்பியவை.

மருள் என்கிற கதை ஒட்டுமொத்த கட்டுக்கோப்பான நிறுவனத்தை ஒரே நாளில் குலைத்து போடும் குறும்புக்கார அருளைப் பற்றி சொல்வது. கலகம் அப்படியானது தான் என நிறுவ முயல்கிற கதை. கொஞ்சம் கூட சிரிக்காது இந்த கதையைக் கடப்பவர்கள் சொற்பம். அதே போல ஜார் ஒழிக கதையும். பெயிண்டர் கணேசனுக்கு ங்கொம்மலாக்க என்ற வார்த்தை இல்லது ஒரு வரியைப் பேச தெரியாது. தோழர்களோடு இணைந்து பயணிக்கிற போது அவனை அறியாமலேயே உருவாகும் மூர்த்தியுடனான தோழமை அந்த வார்த்தையை மறக்க செய்கிறது. விநாயகர் சிலையோடு இஸ்லாமிய தெருக்களில் நுழையும் கூட்டத்தினரை எதிர்கொள்ளும் போது மூர்த்தி அதே வார்த்தையே உச்சரிக்க நேருகிறது. மூர்த்தி கணேசனிடம் நீங்க என்னை மன்னிச்சு தான் ஆகணும் என உரக்க சொல்லுவதோடு கதை நிறைவு பெறும்.

சாம்ராஜின் கதைகளில் வரும் தோழர்கள் மிக சிறு குழுக்களாக இயங்கும் எம்.எல். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெரிய பொருளாதார பலமோ அல்லது ஆள் பலமோ இருப்பதில்லை. இடதுசாரிய தோழர்களுக்கே இல்லாத போது, அதை விட குறைவு இவர்கள் பலம். ஆனாலும் சமூகத்தில் மாற்றங்களுக்காகவும் புரட்சி வந்துவிடும் என இன்றும் நம்புகிற தோழர்களின் வட்டத்தை நான் அறிவேன். அவற்றோடு சாம்ராஜ் முன்வைக்கும் பகடி நுண்மையான விமர்சனமே ஒழிய குற்றச்சாட்டாக இருப்பதில்லை.

அவருடைய மொழி ஆளுகை பல இடங்களில் ஒளிருவதைக் காண முடியும். செவ்வாக்கியம் தன் கணவன் தொடுப்பு வைத்திருப்பதை அறிந்தும் பொறுந்திருந்தவள், பத்து வயது சிறுமியை சீண்டும் கணவனைக் கண்ட பிறகு அவனுக்கு தான் நம்பும் தண்டனையை அளிக்க துணிகிறாள். தன் தோழி சொர்ணத்தோடு மலையாள மாந்தீரிக பெண் ஒருத்தியிடம் செல்கிறாள். அந்த காட்சி இப்படியாக விரிகிறது, நடுக்கூடத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். தலைமுடி ஆலமரம் விழு போலிருந்தது. படங்களும் தாமிரத் தகடுகளும் மின்ன, முன்னே ஒரு ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது.” என்ன செய்யணும் என அந்த பெண் கேட்கிறாள், சுடர் பதறியது’ தனக்கு பயன்படாதது யாருக்கும் பயன்படக் கூடாது என செவ்வாக்கியம் சொல்கிறாள். அதன் பிறகு கணவன் நடுங்கத் தொடங்கி விடுகிறான்.

கரண்ட் முழுநாளும் இருந்தால் சகட சகட சகட’ என நூற்பாலை இயந்திர ஒலியையும் , ‘கோரிப்பாளையம் கண்மாயில் தண்ணி கெத்து கெத்தென கிடந்தது’, என நில வர்ணிப்பையும் காட்டும் மொழி அவ்விடங்களிற்கு உயிர் கொடுக்கிறது.

மிக குறிப்பாக அவருடைய கதைகளின் பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கிற இடங்கள் உண்டு. அதில் மிக உறுதியாக நிற்கிற மனப்பான்மை உறுதியுடைவர்களாக காட்டுகிறது. மூவிலேண்ட் கதையில் மல்லிகாவிற்கு சினிமா என்றால் உயிர். சினிமா ஆப்ரேட்டர் உடன் காதல் வயப்படுகிறாள். அண்ணநும் அம்மாவும் எதிர்க்க வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவன் மல்லிகாவை ஒரு குடியில் வைக்கிறான்.பகலெல்லாம் தனியாக இருக்கிறாள். சூரியன் கோழிக் குஞ்சுகள் மீதேறி அவள் மீதேறி வீட்டின் மீதேறி மாலையில் தூரத்து மலையில் போய் மறையும்’ அவளை குடும்பத்தினர் வந்து மீட்டு சென்று கல்யாணம் செய்து வைக்கின்றனர். கணவன் சினிமாவிற்கு போகக் கூடாது என்கிறான். மகள் பிறக்கிறாள். கானவன் பார்க்க வர மறுக்கிறான். பஞ்சாயத்தில் இவள் படத்திற்கு போகவே கூடாது என சத்தியம் வாங்குகிறான். அதன் பிறகு வருடக்கணக்காக சினிமாவைப் பார்க்க போகவே இல்லை அவள். இந்த பிடிவாதம் பெண்களுக்கே சாத்தியம். வைராக்கியம். தன்னை தானே அதிலிருந்து விலக்கிக் கொள்வது என்றென்றைக்குமாக.

மீஎதார்த்த முடிவுகளில் சாம்ராஜின் சில கதைகள் முடிக்கப்படுகிறது. குள்ளன் பினுவின் மேலே சொன்ன வரி. கப்பல் என்கிற கதையில் கேப்டன்களால் எப்போதும் கீழேயே பார்க்கப்பட்ட பொறியாளர் அச்சுதன் நாயர் கப்பல் போன்ற பிரம்மாண்டமான வீட்டை கடற்கரையில் நிர்மாணிக்கிறார். அந்த இடத்தில் இருந்த குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். அங்கு வாழ்ந்த நாயொன்று மட்டும் முன்னர் குடிசைகள் இருந்ததற்கு சாட்சியாக இருந்தது. அதன் பார்வையில், நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென ஆவேசமாய் குலைத்தது. பிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது’. தன்னை மதிக்காத கேப்டன் போலவே தன்னால் மதிக்கப்படாத மக்கள் இருந்தால் தான் தானும் கேப்டன் என்பது அதிகாரத்தின் படிமட்டங்களைக் காட்டுகிறது. தாழ்வு இருந்தால் தான் உயரம் தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி போல் லக்ஷ்மியாக்கவோடு போன தன்ராஜ் படுக்கையில் இறந்து போகிறான். அதோடு லக்ஷ்மி மொட்டையடித்து அதுவரையில் இருந்த எல்லாவற்றையும் துறந்து விட்டு குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்க தொடங்குகிறாள். காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது.

சாம்ராஜின் கதைகளில் போலி கிடையாது எங்குமே. எதார்த்த உலகின் கோடிக்கணக்கான கதைகளில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இழையோடும் மெல்லிய பகடியும், எளிமையும் கதைகளை வலிமை உடையனவாக்குகிறது. கதை மாந்தர்கள் வெகு அரிதாகவே உரையாடுகின்றனர். கதைசொல்லியே பேசிவிடுகிறான். தொழில் புரட்சி போன்ற கதைகள் நாவலாக மாறினால் தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

கதைகளின் அடித்தளமே அவை காலந்தோறும் புதுபுது பரிணாமங்களைக் காட்சிப்படுத்துவதே. ஒவ்வொரு நேரத்திலும் எழுகிற படைப்புகள் அதற்கு முன்பு திகழ்ந்தவற்றை விமர்சித்தே தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது. சாம்ராஜின் கதைகள் எது போலவும் இல்லாதது அதன் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது. மற்றும் முந்தைய படைப்புகளில் இருந்து தன்னை செம்மை செய்துக் கொள்கிறது.

வடிவேலு பிரதி செய்ய முடியாதவர். சாம்ராஜும் அது போலத் தான்.

திகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை

ஆன்மாவை சுமந்து திரியும் வெற்று உடலே நாம். ஆன்மாவின் விழிப்புநிலை என்பது அரிதாகவே நடக்கும்; அது அவரவர் தேடலின் பொருட்டு நடப்பவை. நடந்த சம்பவத்தை வெறும் சம்பவமாக எழுதாமல் அதை புனைவுகள் மூலம் கதையாக நம் கண் முன் காட்சிப்படுத்துகையில் ஒரு மின்னல் தாக்கியது போல் இந்த வெற்று உடலில் இருக்கும் ஆன்மா விழிக்கும். அது வெறும் விழிப்புநிலை மட்டும் அல்ல அது தொடர்ந்து நமக்குள் கேள்வியாகவும், அழுகையாகவும், நேசக் குரலாகவும், நாம் நமக்கென்ன என்று கடந்து வந்த சில சம்பவங்களின் தீராத குற்றணர்வின் குரலாகவும் என பல ஒலிகளாக நம் அகமனக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி விழிப்புநிலை தரும் எழுத்துக்களே ஒரு எழுதாளனின் வெற்றி.

 

போகன் சங்கரின் ‘திகிரி’ நான் வாசிக்கும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க சமூகத்தாலும், ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பெண்களின் குரல்களாக எதிரோலிக்கிறது. ரத்தமும் சதையும் உணர்ச்சியும் அற்ற வெற்று உடலாகவே பார்க்கப்படுகிறார்கள் “சிறுத்தை நடை” தவிர மற்ற ஏழு கதைகளும் சமவெளியில் நடப்பவை

 

“தீட்டு” கதையில் ஒரு பெண்ணின் உடல் பண்டப்பொருட்களாக சமூகத்தில், தனிமனித வாழ்கையில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கிறது. வேலைக் கேட்டு போகும் இடத்தில் அவளின் மெலிந்த, போஷாக்கு குன்றிய, அழகுகுன்றிய உடலால் கொண்டமையால் நிராகரிக்கப்படுகிறாள். தன் ஆச்சி இறக்கும் தருவாயில் பணத்துக்காக உதவி கேட்டு போகும் இடத்திலும் பணத்தை கொடுத்து அவள் உடலை உடல் துஷ்பிரயோகம் செய்ய முயற்ச்சிக்கிறான் அவளது முதலாளி. அந்த தருணத்தில் அவள் “தீட்டாயிருச்சண்ணே” என்று சொல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் வலியைக் உணர்விதுச் செல்கிறார் போகன். கொன்று புசிக்காமல் உயிருடன் பிய்த்து திண்ணும் ஓநாய் கூட்டத்தின் நடுவில் தவிக்கும் உயிர் போலவே கோமதி தவிக்கிறாள். கோமதியின் அக்கா பற்றிய சிறிய குறிப்புக்குகூட அவளது உடல் ஈர்ப்பு சார்ந்த சமூகத்தின் பார்வையை தனிக்கதையாக உணர்விக்கக் கூடியது.

 

 

“சிறுத்தை நடை” கதையில் சமவெளியில் வசிப்பவர்களின் மனநிலையும் மலை பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனநிலையும் ஒன்று போல் இல்லை என்பதை பூடகமாக சித்தரிக்கிறது. சமவெளியில் இயல்பான கொண்டாட்ட சூழலில் வசித்த பெண் மலை பிரதேசத்துக்கு வருகிறாள். தன் ரசனைக்கு நேர் எதிராக உள்ள கணவன் அங்கு வாழும் மக்கள் அச்சூழல் அவளுக்கு மர்மமாக இருக்கிறது ஒரு நாட்டு ரோஜா செடியை அவள் அங்கு நடுகிறாள் அது மர்மமான பூஞ்சையால் தாக்கப்பட்டு காய்ந்து விடுகிறது. நாட்டு ரோஜா மலைகாட்டு பகுதியில் தாக்குப் பிடிப்பதில்லை என்று சாக்கோ சொல்லுமிடம் அக்கதையில் வரும் பெண்ணை ரோஜா செடியாகக்கூட படிமப்படுத்தி வாசிக்கும் சாத்தியத்தை தந்துவிடுகிறது. அவளையும் அறியாமல் அவள் வீட்டு வேலைகாரன் அவளை புணர்ந்து கொள்கிறான். ஒரு பெண்ணாய் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுகிறாள். சாக்கோ ஒருவன் மட்டும் தான் மனிதனாக தெரிகிறான். ஸ்காட்லெட்டுடன் நட்பு கொண்டதினால் அவன் அதிகார வர்கத்தினரால் கொல்லப்படுகிறான். இறப்புகளும், துரோகங்களும் பெண்ணை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது.

 

“முகம்” கதையில் ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் என்பவள் எப்படி என்று சொல்லப்படுகிறது கதையின் ஆரம்பத்தில் இறந்த பெண்ணின் ஆவி வருகிறது. அவள் இறந்து நூறு வருடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவளின் இறப்பிற்கு அவளுடைய தந்தையோ, உடன் பிறந்தானோ, பர்த்தாவோ, காமுகனோ,அரசனோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் அந்த பெண்ணின் ஆவியை ஒரு பாலத்தில் பார்க்கிறான். மிரண்டு போய் ஒரு வீட்டின் முன் அமர்கிறான். அப்போது தமிழ்ச்செல்வியை சந்திக்கிறான்; அவள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறாள். அவள் போலீஸ் அதிகாரியை ஒருவனை கொன்று விட்டு தலைமறைவாக வாழ்கிறாள் பின்பு அவளும் சுட்டு கொல்லப்படுகிறாள். வீட்டுக்கு வரும் கதை நாயகன் தொட்டிலில் உறங்கும் தன் பெண் குழந்தையை கையில் ஏந்தி பார்க்கிறான் இறந்த பெண்ணின் கண்களும்,தமிழ்ச்செல்வியின் கண்களும் தன் குழந்தையின் கண்களும் ஒன்றும் போல் இருப்பதாக பார்க்கிறான். வழிவழியாக பெண்களின் வலிகளும் துயரங்களும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எல்லா முகமும் ஒருபுள்ளியில் இணைவது போன்ற பொதுச் சித்திரத்தை தந்துவிடுகிறது.

 

 

“திகிரி” சாவை கை தொடும் தூரத்தில் பார்க்கும் ஒரு மனிதனின் மனநிலை பற்றின கதை. ஒருவர் சாவின் பயத்தில் உள்ளார். மருந்துகள் எடுக்கிறார். அதன் பக்க விளைவாக குடும்பம் மேல் விலகல் வருகிறது. மகள் மேல் இருந்த பிரியமும் போய் விட்டது. இப்பொழுது சமணர்களைக் காண மலைக்கு போகிறார். ஒரு பெண்ணை காண்கிறார். அவள் ஒரு தொல் கதையின் எச்சம். அவள் தன் கதையை சொல்கிறாள் இவரிடம்.அதில் வரும் படைவீரன் தான் நீ என்று. அதன் தொடர்ச்சியாத்தான் நீ இருக்கிறாய் என்று.அந்த நேரத்தில் சமணர் கோயிலில் அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கிறது.
“அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.
”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”
மழைத்துளிக”

 

 

“நாகப் படம்” இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளை விடவும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.ஒரு கலைஞன் தன் கலைக்காக தன்னை மட்டும் அல்ல தன்னை சார்ந்தவற்றையும் இழந்து ஒரு படைப்பை தருகிறான்.நிர்வாணம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது.மனித உடலை தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது. மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார். அப்படி படைக்கப்பட்ட உடலை ஒரு கலையாக பார்த்து தன்னை அதில் முழுமையாக அற்பனிப்பவர்கள் ஓவியர்களும் , சிற்பிகளும் மட்டுமே.கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்திலும் கலைஞனின் ஆத்மார்த்த அற்பனிப்பும் உழைப்பும் வெளிப்படும். கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் பெண் உருவச்சிலையே காணப்படுகிறது.ஆனால் கிரேக்க வீதிகளில் காணப்படும் சிலைகளின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது.இக்கதையில் குழந்தை பருவத்தில் ஒருவன் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவாள் ஓவியர் ஒருவரிடம் விட்டு செல்லப்படுகிறான்.பிறகு திருமண பருவத்தை எட்டியதும் அவன் அம்மாவாள் பெண் பார்க்கப்பட்டு குருவிடம் போராடி சம்மதம் வாங்குகிறாள் பெண் பார்க்க குரு தானும் வருவதாக கூறுகிறார் அங்கு பெண்ணை பார்த்ததும் ஆசான் திகைத்து நின்றுவிட்டார்,”மகனே இவளே உனது பெண் என்கிறார்.பிறகு திருமணம் நடக்கிறது.அவன் தன் சொந்த ஊருக்கு வந்த பின் குருவின் வாழ்வு தடம் மாறுகிறது அவர் இறக்கும் தருவாயில் தன் சிஷ்யன் வீட்டின் முன்பு வந்து இருக்கிறார்.தோற்றத்தில் முற்றிலும் வேறொருவராக அவர் தன் சிஷ்யனிடம் கடைசியாக நான் ஒரே ஒருமுறை உன் மனைவியைப் படம் வரைந்து கொள்கிறேன் என்றும் அது தன்னை குணப்படுத்தும் என்றும் கூறுகிறார் அவன் முதலில் அதிர்ந்து பேச்சிழந்து போனாலும் சம்மதிக்கிறான் அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகவும் நிறைய வரைந்தார் எனவும் கதை முடிகிறது

 

“ஆடை” கதையில் இடதுசாரிதுவ மரபில் இருந்து வந்த ஒரு கேரளத்து பெண் புரட்சி பேசும் சித்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.இருவருக்கும் குழந்தை பிறக்கிறது வேலை நிமித்தமாக இஸ்லாமிய நாட்டுக்கு செல்கிறான் அங்கு போனதும் சித்திக் கலாவை படுதா போடுமாறு கட்டாயப்படுத்துகிறான் அவன் சொல்வதை இவள் கேட்க மறுக்கவே அவள் நடத்தை கெட்டவள் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்று அவளை பழிச்சொல்கிறான்.அதன் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.பிறகு ஒரு பயணத்தில் கலா கிருஷ்ணனை சந்திக்கிறாள் கிருஷ்ணன் புத்தக வாசிப்பாளனாக இருக்கிறான் இருவரும் புத்தகங்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் பிறகு ஒருநாள் கலாவின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது கிருஷ்ணன் உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறான். மருத்துவமனையில் கலாவின் அப்பா அவளை பற்றி தவறுதலாக சொல்லவும் கிருஷ்ணன் என்ன செய்வது என்று பதட்டத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு புகை பிடிக்கிறான். கள்ளுக்குடிக்கலாம் என்றும் நினைக்கிறான்.உடலை அதிகம் தாண்டாத உறவாக மட்டுமே இருக்கும் என்றும் புத்தகங்களை பற்றி மட்டுமே பேசிக் பிரிந்துவிடும் ஒரு உறவாக இருக்கும் என்று கிருஷணன் நினைக்கிறான்.கலா தன் குழந்தையை பற்றி சொல்லும் போது பண உதவி கேட்டுவிடுவாள் என்ற அச்சத்தில் கிருஷ்ணன் அதை நீயும் உன் குடும்பமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு கலா பண உதவி உங்களிடம் கேட்கவில்லை அறிவுரை தான் கேட்டேன் என்று சொன்னதும் கிருஷ்ணனுக்கு குற்றணர்வு ஏற்படுகிறது. அவன் பேருந்தில் வரும்போது ஒரு கனவு காண்கிறான் அதில் கிருஷ்ணனின் ஆடையை அணிந்து கொள்ளுமாறு கலா தருகிறாள். இங்கு “ஆடை” என்பது எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகத்துக்கு எது தேவையோ அதை பொருட்படுத்தாமல் உதவ வந்த கிருஷ்ணன் இப்போது அதையெல்லாம் அணிந்து கொண்டு போங்கள் என்று கலா சொல்வதாக பொருள்படுகிறது.ஒரு பெண் தன் சுயத்தை இழந்து பழிச்சுமத்தப்பட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் வேசியாக, துரோகியாக,நக்சல்லாக,
பார்க்கப்படுகிறாள் அவள் உணர்வு நசுக்கப்படுகிறது.

 

“ஜெயமோகனின் கள்ளக்காதலி” தலைப்பே பகடையாக ஆரம்பிக்கின்றதே என்று எனக்கு தோன்றியது. மணி ஒரு கதைச்சொல்லி ஞாபக மறதி அவர் வீட்டின் முன் ஒருநாள் ஒரு பெண் வந்து நிற்கிறாள் யார் என்று மணி கேட்க ஜெயமோகன் என்று அந்த பெண் கூறுகிறாள் யாரு எழுத்தாளர் ஜெயமோகனா என்று கேட்கிறார் இல்லை உங்கள் நண்பர் ஜெயமோகன் என்று சொன்னதும் இருபது வருடங்கள் முன்பு தன் நண்பர் ஜெயமோகனை மணிக்கு நினைவு வருகிறது.அவர் ஒரு போதகராய் உள்ளார் மணி ஜெயமோகனுக்கு புத்தகங்கள் கொடுப்பது உண்டு அதனால் அவருக்கு புத்தகங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ஜெயமோகனுக்கு ஒரு பெண் துணை ஏற்படுகிறது அவருக்கு இவள் தான் அனைத்தும் செய்கிறாள் இவள் தான் அவரை புரிந்து கொண்டதாகவும் நினைக்கிறார் இது ஜெயமோகன் மனைவிக்கு தெரியவரவே கள்ள உறவு என்று அடித்து விரட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் அங்கு அவருக்கு துணையாக இருக்கும் பெண் அழுவதை பார்த்து முகம் சுழிக்கிறார் ஏனெனில் அவரை பொறுத்தமட்டில் பெண்களின் கண்ணீர் பொய்யானவை “ஏவாளின் கண்ணீர்!” என்று திரும்பிக்கொள்கிறார்.பிறகு மணி கதை ஒன்றை வாசித்து காண்பிக்கிறார் அதில் ஒரு ஆண் தன் பெண்ணை ஒவ்வொரு அங்கமாக கை வைத்து அவள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை கூட நேசிக்கிறேன் அவற்றை புலர்மழையைப் போல பரிசுத்தமானது என்று கூறுகிறான்.இவற்றை கேட்டதும் போதகருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் அனைத்து தீமைகளையும் எல்லா பிரச்சனைகளுடனும் அவளை ஏற்றுக்கொள்கிறார்.பிறகு ஜெயமோகன் தன் கள்ளகாதலியுடன் வடமாநிலம் சென்று ஊழியம் செய்கிறார்.அங்கு சென்றதும் மணிக்கு கடிதம் எழுதுகிறார் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக

 

 

திகிரி போகன் சங்கரின் மூன்றாவது கதைத்தொகுப்பு ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், சொல்லப்பட்டிருக்கிறது.

இவருக்குள் இருக்கும் கவிஞன் கதைகளின் இடை இடையே வெளிப்படும் சில வரிகளில் தெரிகிறது. அவை வர்ணித்து காட்சிபடுத்தும் விதம் அழகு. தன் மீது சுமத்தப்படும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலுந்தும் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் இருந்து பெண்கள் விலகிவிடாமல் போராடுகின்றனர் போகனின் கதைகளில் வரும் பெண்கள்.

ஒரு சிறுகதை தொகுப்பு என்பது ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்கரு கொண்டு ஒரு கதையில் இருந்து அடுத்த கதைக்கு செல்லும் போது அது முற்றிலும் வேறொரு உலகம் வேறொரு அனுபவத்தையும், மனநிலையும் தந்தால், அது பன்முக வாசிப்பு சாதியத்தைக் கூட்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கருக்கள் ஒரே வகையில் இருப்பதால் என் எதிர்பார்ப்பை இத்தொகுப்பு பூரணப்படுத்தவும் இல்லை. ஆடை,முகம்,தீட்டு, சிறுத்தை நடை போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்கள் கதை சொல்லப்படும் விதம் வேறாக இருந்தாலும் பெண்களின் வலி ஒரே விதமாக சொல்லப்படுகின்றது. பெண் வலியை அனுபவிக்கிறாள் அதற்கு காரணம். ஆண் என்பதே மையக் கருத்து. இத்தொகுப்பின் தலைப்பு கதையான திகிரி கதையும் , நாகப்படம் கதையும் மட்டுமே வேறொரு உலகத்தையும் கதை கருவையும் கொண்டுள்ளது.

சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை

வெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் நடைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.

ஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.

கிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவரும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.

மற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன்? யார் ஹீரோ? என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வங்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.

மேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.

நாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.

மனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.

மொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு என்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருடுகிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.