இவான்கார்த்திக்

அழைப்பு

இவான் கார்த்திக்

ஏழு கழுதைகளின் வயதை அம்மா அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ள மனம் ஒப்பவில்லை. காரணங்கள் பல இருந்தாலும் அதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. இருக்கட்டும் இருக்கட்டும் என்று அம்மாவும் சொல்லி சொல்லி பிறகு மறந்து போனாள். நடக்காமல் இருந்தது என்னமோ நல்ல விசயம் என்றே இன்று வரை படுகிறது. அப்படி யோசிக்கும்போது என்னை மற்றவர் கல்யாணத்திற்கு அழைப்பது அநியாயம் என்பதை என் அம்மா கொஞ்சமாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

முன்பு நடந்த நினைவுகள் கண் முன் திரை கட்டி ஆடுகின்றன. இரவு முடிய இன்னும் நேரம் குறைவாகவே உள்ளது. காரணம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் தவிர்த்து விட வேண்டும். என் உடம்புக்கு எதுவும் வராதென்று அம்மாவுக்கு தெரியும். காரணம் வேண்டும். சித்திமார்களும் அத்தைமார்களும் வரிசை கட்டி வந்து விசாரிப்பார்கள் பதில் சொல்வது பேரும்பாடு இதில் நான் திரும்ப கேள்விகள் வேறு கேட்க வேண்டும். பேப்பரில் எழுதி வைத்து மனப்பாடம் செய்தும் கைவராத கலை.  ஆண்கள் கைகொடுத்து சிரிக்கும்போது ஏன் என் முகம் இறுகி கண்கள் திறந்து முறைப்பதைப்போல மாறிவிடுகிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கோர்த்து விட்டிருக்கலாம். அவர் செத்துப்போய் மாதா மாதம் நம்மை கொல்கிறார்.

தினமும் ஒர் அழைப்பாவது என் வீட்டிற்கு வந்து கழுத்தை பிடிக்கிறது. இதில் பண்டிகை ஆப்பர் போல சில நாட்கள் இரண்டும் அழைப்புகள். இன்னும் உச்சம் ஒரே நேரத்தில் இரு அழைப்புகள் வந்து மொய் எழுத வற்புறுத்தி “கண்டிப்பாக வந்துரணும்” என்பதை அழுத்தி சொல்லி பிரச்சனையை கிளப்பிவிட்டு செல்கின்றனர்.

முன்பெல்லாம் அம்மா அப்பா சேர்ந்து சென்றனர். அப்பா பரலோகம் போய் சேர்ந்த பின் என்னை தனியாக அனுப்புகிறாள். தனியாக மண்டபத்திற்கு சென்று அங்கிருக்கும் ஏதோவொரு பிளாஸ்டிக் சேரை கண்டுபிடித்து முற்றிலும் தெரியாத முகம் இரு பக்கமும் அமர நடுவில் இடம் பார்த்து அமர்வதற்குள் உடல் வியர்த்து கொதித்துவிடும். ஒரே நிம்மதி சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் சுழலும் மின்விசிறி மட்டுமே. வியர்வையை குளிர்வாக்கி கொஞ்சம் நிதானமடையச் செய்யும்.

நிற்பதை நடப்பதை ஓடுவதை தின்பதை தூக்கி எறிவதையெல்லாம் துரத்திப் பிடிக்க முயலும் புகைப்படக்கார்கள் கண்கள் என்மேல் விழாமல் இடுக்கினுள் சுவர் ஓட்டையினுள் பதுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல ஒளிந்து கொண்டிருக்க தலைமேல் தூக்கிய லைட் மூலம் வெளிச்சம் காட்டி குறைந்த பட்சம் என் சொட்டைத் தலையையாவது படம் பிடித்து சாதனை புரியும் அவர்களை என்னதான் செய்வது. சோற்றை என் வாய்க்குள் புகுந்து படம் பிடிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை.

குடும்பம் குடும்பமாய் வந்து நிற்பவர்கள் மெல்ல என்னருகில் அமர்ந்து வணக்கம் வைப்பர். வாய் திறந்து பேச ஆரம்பிக்கும் இவர்கள் என் அந்தரங்கத்தை குதறாமல் எழுந்து செல்வதில்லை. கஷ்டகாலத்திற்கு என்னாலும் எதும் செய்ய முடியாது குழைந்து சிரித்து பதில் சொல்லி முடிக்கும் முன் என் கண்கள் மடை திறந்துவிடும். பாவிகள் அதைக் கண்டும் குதறலை நிப்பாட்டுவதில்லை. குடும்பம் அமைத்து ஓர் நிலைக்கு வருவதென்பது அவர்களுக்கு அமைந்தால் ஊருக்கும் அமைந்தே தீர வேண்டும் கட்டயமில்லையே.

நிதானமாக பந்தி நேரத்திற்கு வரும் ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட இருவத்தினாலுவிட்ட அக்காக்கள் அண்ணன்கள் தம்பிகள் தங்களை அறிமுகப்படுத்தி “நான் யாருன்னு தெரியுதா?” எனும் போது குடல் பிதுங்கி வெளிவரும் அளவுக்கு யோசிக்க வேண்டியள்ளது. மற்றவர்கள் “ஆமா…அப்ப சொகமா இருக்கியா?” என்று தொடரும் கணம் நான் பேந்த பேந்த முழித்திருப்பேன். அவர்களும் “வாறேன் அண்ணெ, தம்பி” என்று சொல்லி ஓடிவிட்டால் பாக்கியம். இல்லையெனில் சர்வம் நாசந்தான். இதில் “அப்பா சொகமா,” என்று என்னிடம் கேட்பவரின் வாயில் நாலு குத்து விடாமல் வாய் பிளந்து பார்த்து அப்படியே விட்டுவிடுதலும் நல்லதே.

தூரத்தில் கைகழுவுமிடத்தில் இருக்கும் பெரிய மைனி வாயில் குதப்பிய வெற்றிலையை அங்கே எங்கோவோர் மூலையில் துப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக என்னிடம் வரும்போதே சுதாரித்து ஓடிவிட்டால் நல்லது.  இல்லையேல் கை வசம் இருக்கும் ஓடாத சரக்கை என் தலையில் கட்டிவிடும் திட்டத்தில் என் அருகில் “பிள்ளெ சொகமா…” என்று ஆரம்பித்து தோவாள, வள்ளியூர், ஒழுகினசேரி, தாழாக்குடி, வீரணமங்கலம் என்று ஊர்சுற்றி பெண்கள் பெயர் விலாசம் அவள் அப்பன் தாதன் முப்பாட்டன் நாஞ்சிலுக்கே வந்த கதை வரை அளந்து வைத்து கிளம்பும் முன் நாலாவது பந்தி முடிந்துவிடும்.

பந்திக்கு முந்த வேண்டுந்தான் ஆனால் அதற்காக உட்கார்ந்திருப்பவரின் இலைக்கு பின்னால் காத்திருப்பவர் பருப்பு பாயாசமும் மோரும் கேட்பது உச்சபட்சம். சிலர் நம் இலையில் கைவைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கன்னியாரி கடலில் சுனாமி வந்து ஊரை விழுங்கும் போது நம்மவர் ஒருத்தர் “அது செரி பிள்ளே, புரிசேரி வரல்லையே… வச்சிருக்கானா… இல்ல விளம்புத அணஞ்ச பெருமாளே மடக்கு மடக்குன்னு எடுத்து குடிச்சிட்டானா?”

என்று பினாத்தும் போதேகவளங்கள் தொண்டையை அடைத்து சுனாமிக்குள் முங்கியது போல மூச்சு முட்டியதும் அதை சரிசெய்ய தண்ணீர் தேடி அலைந்ததும் சுனாமியை விட சுவாரஸ்யமானது.

துவட்டலும், அவியலும், கிச்சடி,  எரிசேரி, பச்சடி, மாங்காய் என முன்பே விளம்பி வைக்கப்பட்ட பந்திக்கு, கதவு திறக்காமல் அடைத்து கிடக்கும்போது வரும் வாசனையை மனத்தில் ஏத்திக்கொண்டே கையில் ஜெம்பர் துணியுடன் பழிகிடையாய் வரிசையில் நிற்க வேண்டும். ஜிங்கு சாங் ஜிங்கு சாங் என்று வண்ணம் படமெடுக்கும் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும். முண்டித் தள்ளி நெரித்து மேடைக்கேறி மாப்பிள்ளையின் மூக்கில் உறுமா துணி கட்டி இறங்கி திறுநீரையும் அவன் கண்களில் போட்டு வாழ்த்திவிட்டு முதலில் இறங்கும் பெரிசுகள் “பஸ்ட் நம்மதான , நம்க்கில்லாத மரியாதையா?” என்று தற்பெருமை அடிக்கும்போது மேடையில் நான் மட்டும் கருப்பு துணியை கட்ட என்னை அடிக்கவே வந்து விட்டனர். “விடப்பா கிறுக்கன் தெரியாம செஞ்சுட்டான்” என்று பின் பாட்டுக்கள் வேறு. அப்போது  மயங்கி விழுந்த என்னைத் தூக்கி நிறுத்த முடியாமல் மேடையில் பின்னாலிருந்த மணமக்களின் சோபாவிலேயே படுக்க வைத்தனர். பெண்கள் சிரிப்பதும் தட்டி எழுப்ப முயன்றதும்  தண்ணீருக்குள் கத்துவது போல கேட்டும் எழும்ப முடியாமல் கிடந்தேன். வெட்கக்கேடு.

இந்த ஆபாசங்கள் நிறைந்து கிடந்தாலும் கல்யாணங்களுக்கு  நான் செல்வதிலும் ஓர் அந்தரஙக காரணமுண்டு. மணப்பெண்கள், மாப்பிள்ளைகள் அந்த சடங்கு நாடகங்கள் அனைத்தையும் நானும் அந்த கணங்களில் நடித்துவிடுகிறேன். நான் உடுத்தியிருக்கும் சட்டை வேட்டியை கழற்றி பட்டணிந்து, பொடி செய்ன் முதல் உருட்டு செய்ன் வரை கால் கொலுசு முதல் காது ஜிமிக்கி வரை வளைய வரும் ஒட்டியாணமென அனைத்தும் பொன்னாக ஜொலிக்க கழுத்தில் தாலி தொங்க நிற்க வேண்டும். பயப்பட்ட இத்தனை காரணங்கள் நிறைந்திருந்தாலும் போய்ப் பார்க்க இந்த ஒரு காரணம் இருக்கத்தான் செய்கறது.

விடிந்து விட்டது நாளை மறைந்து இன்றாகிவிட்டது. இன்று இரண்டு அழைப்புகள் காலை ஒன்றிற்கும் சாயங்காலம் ஒன்றிற்கும் செல்ல வேண்டும். சட்டை வேட்டியை நேற்றே தேய்த்து வைத்தாயிற்று.

சுப்புணி மாமா

இவான்கார்த்திக்

நான் ஊ…ஊ… என்று ஊளையிடுவது புதிதாய் வீட்டுக்கு வந்த மாமா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். பதறியடித்து வெளியே வந்தவர் என் கை கால் இடுப்பு என்று தடவி “எங்கடே வலிக்கி…”என்றதும் நான் மீண்டும் அவர் காதருகில் சென்று ஊ…ஊ… ஊளையிட்டேன். ஒரு அடி தள்ளிச்சென்றவர் சுவற்றில் மண்டையிடிக்க , முளைத்த அனைத்து பற்களும் தெரிய நான் சிரித்ததை அவர் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவர் ஓங்கிய கையிலும் சிவந்த கண்களிலும் நன்றாகவே தெரிந்தது. இப்படித்தான் ஆரம்பித்தது சுப்புணி மாமவுக்கும் எனக்குமான உறவு. சுப்புரமணி என்பதை இவ்வளவு கஷ்டப்பட்டு கூப்பிடுவதை ஏன் தான் இவர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் அவரை சுப்புணி மாமா என்றே அழைக்கிறேன்.

சுப்புணி மாமா சாப்பிடுவார் தூங்குவார் என்னுடன் விளைவிளையாடுவார் பிறகு தூங்குவார் சாப்பிடுவார். சூரியனும் அவரும் ஒன்றேயென அவரே சொல்லுவது எனக்கு அவர்மேல் மதிப்பை கூட்டியது. நானும் வாழ்வில் ஒரு நாள் சூரியனாவேன் என்று சபதம் செய்து திறுநாறு பூசிக்கொண்டேன்.  தலையில் முன்பொரு நாள் மேடையில் பேசிய  கருப்பு கண்ணாடி மாமாவின் தொப்பியைப்போல வெள்ளை வெள்ளை முடி. அவரை நான் சினிமா போஸ்டர்களில் பலப்பல வகை கருப்பு முடியிடன் பார்த்திருக்கிறென். அதனை நான் சுப்புணி மாமாவிடம் கேட்கவும் தலையில் விதை வைத்து முடி வளக்கலாம் என்றார் , பின்ன அல்லாமல் எப்படி இது சாத்தியம்!

சுப்புணி மாமா போன தடவை நான் பருப்பு பாயாசம் தின்ற பிறந்தநாள் முதல் இங்கயே இருக்கிறார். அன்று நாங்கள் கோவிலுக்கு சென்று என் பேருக்கும் சாமி பேருக்கும் அர்ச்சனை செய்தோம். சாமி நன்றி சொல்லி எனக்கு காலையிலேயே அரவணை பாயாசம் தந்தார். அவரை நான் மட்டுமே மாமா என்கிறென் பெரிய அண்ணன் சின்ன அண்ணன் எல்லாரும் தாத்தா என்கின்றனர். அவர் என்னிடம் மட்டுமே ஒட்டிப்பழகுதில் இருந்தெ தெரிகிறது அவர் மாமா என்பதில் தான் சந்தோசப்படுகிறார்.

மாமா இங்கிருப்பதில் ஒருவருக்கும் விருப்பமில்லை. அவரை எப்படியாவது விரட்டிவிடலாம் என்று முனைப்போடு இருக்கின்றனர். அவர் சென்று விட்டால் எனக்கு கதைகள் சொல்ல யாருமில்லை. வேறு யாராவது கதைகள் சொன்னால் கூட பரவாயில்லை அவரை அனுப்பிவிடலாம் என்றால் அதற்கும் ஆளில்லை இந்த வீட்டில்.

மாமா சொல்லும் கதைகளில் மனிதர்கள் எங்கள் விட்டு பாயாசத்தில் வரும் அண்டியிலும் குறைவு. காட்டு யானை முதல் குட்டி அணில் வரை எல்லாம் உண்டு. என்னை குட்டி அணில் என்பதை நான் முழுமுற்றாக மறுத்து விட்டேன். அதன் சிறுபிள்ளை போன்ற உருவரும் எதற்கும் பயந்து துள்ளி ஓடுவதும் நான் விரும்பாதது. அவரிடம் அதை சொல்லியதில்லை அவரும் அப்படியே கூப்பிடுவார்.

நேற்றும் அப்படி ஓர் கதையை நான் கேட்காமலேயே சொல்ல வந்தார். அழுது வீங்கிய கண்களுடன் அவர் சிரித்தது எனக்கு பரிதாபமாக இருந்தது. டொக்கு விழுந்த கன்னங்கள் அவருக்கு இருந்ததால், என் கன்னங்களை அடிக்கடி பிதுக்கி எடுப்பார். வாயைத்திறந்ததும் என் கண் முன் உருவானது ஓர் உலகம் “அடர்ந்த காட்டின் ஒவ்வொரு இருண்ட மூலையிலும் நெருப்பு விழிகளுடன் கடுவாக்களும் காட்டேரிகளும் கொம்பன்களும் அலைந்து திரிந்தன. தன் இருப்பிடம் நோக்கி விரைந்த பூனையொன்று காலிடறி விழுந்த இடத்தில் கிடந்தது ஓர் குழி. வீடிருப்பதோ கண்ணால் காதால் காண முடியாத தூரத்தில். குழிக்குள் தன்னை புகுத்திக்கொள்ள முடியுமா என்பதும் உள்ளிருக்கும் வழிதான் என்ன என்பதும் அறியாத பூனை விழி பிதுங்கி உடல் நடுங்கி நின்றது. இருட்டில் சிவந்த ஜொலிக்கும் விழிகள் துலங்கி வந்தன. துர்நாற்றம் சங்கைப்பிடித்து பூனையை மூன்று முறை அதன் மீசை அதிர தும்ம வைத்ததும் இருளில் சிவந்த வாய்கள் பிளந்து திறந்து ரத்த கோழை வழிந்து நிலத்தில் வடிந்தன. நொடிகளில் பாய்ந்து வந்த இருள் மிருகங்களின் பிடியிலிருந்து தப்ப ஒரே வழியாம் குழியில் தலை குப்புற விழுந்த பூனையை வயால்கவ்வ கூர் பற்கள் வேகமாக முன்வந்தும் பயனில்லாமல் பூனை குழிக்குள் விழுந்து தப்பித்தோமென விழும் நேரத்தில் பெருமூச்சு விட்டதுதான் கணமென நிலம் மேல் கீழாக மாறி மீண்டும் ஓர் நிலத்தில் தூக்கி எறிந்தது போல தரையில் போய் அப்பியது”இங்கு நிறுத்திய சுப்புணி மாமாவின் கண்கள் கலங்கி பூனை போலயே அழுதார். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. விழுந்து தொடையிலடித்து வாய்பொத்தி பல் காட்டி சிரிக்கலாம் ஆனால் அவர் கதையை தொடராவிட்டால் என்ன செய்வதென்று அமைதியாக இருந்தேன்.

கண்களை துடைக்காமல் மீண்டும் தொடர்ந்தார் “பூனைக்கு இடம் பொருள் காலம் தெரியவில்லை. ஆளரவமில்லை. நிற்கவும் நடக்கவும் திராணியில்லாத கிழடாக தன்னை நினைத்து அழத்தொடங்கியது”

மாமா மியாவ்வ்வ்…மியாவ்வ்வ் என்றதும் எதிரில் பூனை தெரியாமலிருக்க கண்களை கசக்கிக்கொண்டேன். பூனையில்லை.

“மெல்ல நடக்க ஆரம்பித்ததும் அதற்கு பசியெடுத்தது பசி பசியென்பதே உடல் முழுக்க நிற்க எதிரில் ஒற்றை ஓட்டிவிடு பேராலமரத்தின் அடியில் விழுதுகள் மூட நின்றது. என்னமாவது கிடைக்கலாம் என்று மெல்ல இருளில் தடம் பார்த்து நசுங்கும் சருகின் ஒலியறிந்து நடந்தது. அதுவோர் நாய்களின் வீடு அவை அங்கு சில காலமாகவே வசித்து வருவது அவைகளின் எதிர்பாரா பரபரப்பும் பொருட்களை கண்டுகொண்ட வியப்பும் காட்டிக்கொடுத்தது. அருகில் சென்ற பூனை பின்னங்கால்களால் நின்று முன்னங்கால்களால் ஜன்னலை பிடித்து எட்டிப்பார்த்தது. அந்த சமயம் அவை குப்பியிலிருந்த பாலை தட்டில் ஊற்றி அங்கிருந்த மற்ற பெண் நாய் மற்றும் ஒரு குட்டி ஆண் நாய்க்கு வைத்ததும் பங்குக்கு யாரும் வருகிறார்களா என்று நோட்டம் பார்த்து நக்க ஆரம்பித்தன. ஆண் நாய் குப்பியிலிருந்த பாலை வாய்க்குள் ஊற்றிக்கொண்டது. ஜன்னலில் அண்டி நின்ற பூனையை பார்த்தும் பார்க்காதது போல ஆண் நாய் குப்பியை வைத்து அதற்கு தெரியாமல் வாசற்கதவை திறந்ததும் பதறிய பூனை கால்களில் விழும் தொனியில் பேசி தன் பசியைச்சொல்லி ஒரு தட்டு பால் கேட்டது. ஒரு நாள் பாவப்பட்டு குடுத்த நாய் அது அங்கேயே தங்கிப்போவதை அப்போது அறிந்திருக்கவில்லை. உருவத்தில் ஒற்றுமை துளியுமில்லாத பூனை தன்னை அதன் மூதாதையென்று அடித்துச்சொன்னது. நம்பமுடியாத விசயத்தை கிறுக்கைப்போல சொல்லும் பூனையின் மேல் பரிதாபப்படவே நாய்க்கு வழியிருந்தது. பெண் நாய் அதனை அண்டாமல் விட்டுவிட குட்டி அதனுடன் விளையாடும்”

எதற்காவோ கதையை நிப்பாட்டி என்னை தழுவி முத்தமிட்டார். மாவின் எச்சில் முகம் முழுவதும் வாடையடித்ததால் மாறி மாறி துடைத்தேன் அவர் சிரித்தார். நான் அவரை வெறுத்தேன். நான் எப்படி உன்னை சிரிக்க வைக்கும் விளையாட்டுப்பொருள் , அது நீதான்  மாமா.

“விழுதில் கிடந்த பொந்தொன்றில் பூனை போய் தங்கி உறங்கிக்கொண்டது. எதாவது மிச்சம் கிடைத்த கடித்து சதை துணுக்கு மிச்சமிருந்த எலும்புகளை தின்று உயிர் வாழ்ந்தது. ஒரு நாள் பெண் நாயின் வாயில் கேட்ட கேள்விகள் பொறுக்காமல் விழுதிலிருந்து இறங்கா பூனைக்கு தின்ன கொடுக்க குட்டி நாயை சொல்லியும் கேட்காமல் படுத்து எனக்கென்ன போயிற்று என்று கிடந்தது. பசித்தால் வரட்டும் என்பது அதன் எண்ணம். அதே போல பசி முற்றி அது வந்ததும் குட்டி ‘நான் சொன்னனே…நான் சொன்னனே..’என்று வாலாட்டி குலைத்து சொன்னது. பெண் நாய் தூ…என்பதுப்போல தட்டை வீசியெறிந்ததும். பூனையின் பசி மொத்த பாலையும் நக்கி வழித்து குடித்தது. அழுதுகொண்டே அவமானத்துடன் குடித்தாலும் பூனை அன்றும் நன்றி சொல்ல மறக்கவில்லை”

கதையை நிப்பாட்டினார்.வயிற்றின் உறுமல் சத்தம் புலி போல கேட்கவே மாமா மெல்ல அசைந்து அமர்ந்தார். அவரே சொல்லட்டும் என்று அமைதியாக காத்திருந்தேன். அவர் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை. பசி என்னிடம் தனியாக கேட்டால் மட்டும் போதுமா.

“பசித்த பூனை ஒரு திட்டம் போட்டது. பசியை கொல்லலாம் அதனை நார் நாராக பிரித்து எடுத்து அதையே உண்டு முடித்தால் இனிமேல் பசியில்லை என்பது எப்படியோ அதற்கு தெரிந்திருந்தது. ஏற முடியாத கிளைகளை பற்றி விழுந்து எழுந்து ஏறி உச்சியில் தெரிந்தது பரந்த நிலம். தலைக்கு மேல் வானத்தில் இருந்த பழைய ஓட்டை வழி மேலிருக்கும் மிருக உருவங்கள் இப்பொழுதும் தெரிந்தன. அதற்கு நாக்கை வலிச்சம் காட்டிவிட்டு பறவை  போல சிறகு விரித்து பறந்தபோது அதன் கண்கள் ஒளி கொண்டன. ஒரு நொடியில் கிளைகளில் அடித்து இலையுதிர தரையில் சொத்தென்று விழுந்தவுடன் அதன் உருவம் நிலத்தில் ஓர் அங்கமாக ஆனது”என்று முடித்தார். இவர் இதே கதையை வேறு  இடத்தில் வேறு மிருகத்தை வைத்து சொல்கிறார் என்பது எனக்கும் தெரியாமலில்ல. ஆனால் தினமும் இரவில் நான் என் அறை ஜன்னல் வழி பார்ர்கும் போது எதிரிலிருக்கும் மரத்தின் உச்சியில் நிற்கிறார்.

இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் சொத்தென்ற சத்தம் என்றுமில்லாமல் இன்று கேட்டதும் எழுந்து பார்த்தால் உச்சி மரத்தில் மாமா இல்லை.

சில கனவுகளும் சிலைகளும் – இவான் கார்த்திக்

இவான்கார்த்திக்

கிணற்றின் நுனியில் நின்றுகொண்டு குதிக்க எத்தனிக்கும் சமயம் அதனுள் நான் ஏற்கனவே நீந்திக்கொண்டிருக்கிறேன் எனபது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்க்கும் கணத்தில் அவன் உருவம் கலைந்து இன்னொருவனாகியதும் கனவு கலைந்தது. கைகள் தற்செயலாக கார்த்திகாவின் புடைத்த வழுவழுப்பான வயிற்றை தடவிக்கொண்டிருந்தது. நகம் பட்டால் கிழிந்துவிடும் என்ற பயம் உறக்கத்திலும் இருந்தது. உறக்கத்தில் அவள் எழுந்து மறுபக்கம் சரிந்து படுத்தாள். முன்பென்றால் அப்படியே புறண்டு படுத்துவிடுவாள். எழுந்து திரும்பி படுக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது. இருந்தும் சிலசமயம் மறந்து வெடுக்கென்று திரும்பி காலையில் அதற்காக தன்னையே நொந்து கொள்வாள். விஜிலெண்ட் பூங்காவில் சிலைகள் சூழ்ந்த கிணற்றிலேயே அந்த கனவு சம்பவிக்கின்றது. கனவில் என் பின்புறமிருக்கும் சிலைகளை எவ்வளவுதான் முயற்சி செய்தும் ஞயாபகப்படுத்த முடியவில்லை.

கரு உண்டாக்க நாங்கள் கடும் முயற்சியில் இருந்த நாட்களில் ஓர் நாள் காலையில் ஸ்டாக்கோமிலிருந்து பஸ் பிடித்து இறங்கி வரும் பொழுது நான் எண்ணிக்கொண்டு வந்தது அந்த பூங்காவைப்பற்றியே. அவளிடம் அதனைப்பற்றி தினமும் ஒரு தடவையாவது சொல்லுதிர்க்காமல் இருந்ததில்லை. ஒற்றை மனிதால் அவன் வாழ்நாளில் வடித்து உருவாக்கப்பட்ட சிலைகள். அத்தனை சிலைகளுக்கான ஒரு திறந்த வெளி மியூசியமாகவே நார்வே நாடு உருவாக்கியிருந்தது. தலைநகர் அதற்குண்டான தனிமையுடன் இருந்தது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பாச்சா போல மக்கள் கூட்டம் இருக்கையில் புது வாசிகளுக்கு இது மட்டுமல்ல வடதுருவ நாடுகள் எல்லாவற்றிலும் தலைநகரத்திற்கான அங்க அடையாளங்களை காண்பது கடினமானதே. தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய ஹாய் மட்டுமே பரிமாற்றப்பட்டு அப்படியே கடந்து சென்று விடும் இந்த மக்கள் நிச்சயமாக சாதரணவர்கள் அல்ல. அந்த சிரிப்பு எழுந்து அடங்க ஒரு நொடியிலும் குறைவாகவே ஆகும். அதற்கு பதில் அளிக்கும் முன் அவர்கள் அடுத்த முகங்களுக்கு ஹாய் சொல்லி கிளம்பியிருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் காப்பி கோப்பை எப்பொழுதாவது முடியும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என்றும் தீராத அட்சய பாத்திரம் போல நிரம்பிக்கொண்டே வருகிறது. மூன்று வேளையும் சோற்றுக்கு பதில் காப்பு குடிப்பதாக ஒருவர் சொன்னதை நான் முழுதாக நம்பிய காலம் உண்டு.

நேற்றிரவு முழுவதும் பெய்த பனி பஸ்ஸின் கண்ணாடிகளில் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் உளசட்டை வெளிச்சடையென்று மொத்தம் நான்கு அணிந்து ஓர் தேர் ஊர்வலம் போல இறங்கியும் அவள் பற்கள் முன்போல இன்றும் கிட்டித்ததை பலமுறை அதிகப்படியான சிரிப்புடன் நகைச்சுவையாக முயற்சித்திருருந்தேன். மெலிந்த என் உடலை மேற்சட்டைகள் மூடி வலுவான தோற்றம்கொள்ள செய்திருந்தது. சாலைகளின் ஓரத்தில் பனி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது சாலை வழுக்காமலிருக்க சிறு சல்லிகள் போடப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சத்தியம் செய்து சொல்லுவேன் நீங்கள் வழுக்கி விழுவீர்கள் நாளுக்கு ஒரு தடவையாவது. இன்றைகான அந்த கணத்தை மனதில் வைத்து கால்களை உரசாமல் தூக்கி வைத்து நடந்தோம்.

என்னை கடந்து சென்ற குழந்தை அவளுக்கான தள்ளு வண்டியில் சாதரணமாக சாய்ந்து படுத்து வாயில் ஜொள் வடிய உலகை மக்களை கூடவே என்னையும் பச்சை விழி கொண்டு மலங்க மலங்க விழித்தது. நிமிடத்திற்கொருமுறை அம்மா குழந்தையை குனிந்து அது கூறிய செய்திகளை அதன் மொழியிலேயே விளக்கி ஜொள்ளை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள். இதனை இப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தது போல இங்குள்ள அனைத்து அம்மா குழந்தைகள் இப்படியே இருக்கின்றனர். கார்த்திகா இதற்கு முழுவதுமாய் தயாராக இருந்தாலும் எனக்கு இதில் விருப்பமில்லை. அவர்கள் வாங்கிய அதே வண்டியை வாங்கி தள்ளிச்செல்வதில் எந்த ஈடுபாடுமில்லை. இது ஒரு நடிப்பு. அன்பெனும் அரவணைப்பெனும் நடிப்பு. நான் ஆஸ்காருக்கு அடிபோடவில்லை.

வீடு , கடைகளின் கூரைகளில் பனி பாளம் கட்டி நின்றது. குச்சிகளை வைத்து தட்டி சரித்து விட்டுக்கொண்டிருந்தனர். வெயில் சரிந்து பனி பொன்னொளி கொண்டிருந்தது. அவை இரவில் வெண்ணிறம் கொள்ளும். விளக்குகள் இல்லாமல் கூட நடக்கலாம். மின் கம்பங்களில் நீர் வழிந்து உறைந்து வியர்த்திருந்தது. இரும்பு வாசல் கதவுகளுக்கு பின்னால் பனிதாங்கி நின்றன சிலைகள். நான் நடக்க பூங்கா என்னை நோக்கி அடிவைத்து வந்தது.

மூன்றடி அகலம் கொண்ட பாதையின் இருபுறமும் வரிசையாக வெளிர் பச்சை நிற வெண்கல சிலைகள் , கீழே வெண்பனி மூடிய கரை நடுவே கரும்பச்சை நிற நதி ஓடியது. இலைகளற்ற மரங்கள் பனிப்பூச்சூடீ தலை தாழ்த்து நின்றன. சிம்பொனி இசைக்கோப்பின் தொடக்கம் போல ஒவ்வொன்றாக கடந்து நடுவில் ஓர் நீருற்று வளைவு, அதனைச்சுற்றி சிலைகள் , அது ஓர் கோர்வை உச்சத்தில் முடிந்து மற்றது தொடங்கும் தருணம். அதன் பின்னால் படியேற மனித உடல்கள் முறுக்கி நிற்கும் ஸ்தூபி அதனை சுற்றி இரண்டாள் கனத்தின் கற்சிலைகள் அது கடைசி உச்சம். அதன் பின்னால் இறங்கிச்சென்றால் பன்னிரண்டு ராசிகள் பதித்த சிறிய வட்டமான வளைவு. அதன் மேல் சூரிய மணிக்காட்டி. இறுதியில் முனங்கலுடன் சிம்பொனி கச்சேரி முடிந்துவிடும்.

முதல் சிலை குழந்தையை அணைத்தபடி நின்ற அம்மா. அரவணைப்பு என்பதை தாண்டி உள்ளிருந்து வெளியியெடுத்துவிட்ட வருத்தம் அவள் முகத்தில் தோய்ந்து கிடந்தது. முதிரா முலைகள். ஒரு வேளை குந்தியாக இருக்கலாம். “பெத்த உடனே கடம ஆரம்பிச்சாச்சு. நல்லா பாத்தியா. அந்த அம்மா அழுகுறாங்க” என்றேன். கார்த்திகா அதனை விரும்பவில்லை என்பது தெரிந்தது. இல்லையேல் அதற்கு குறைந்தபட்சம் ஒரு சிணுங்கலாவது பதிலாக வந்திருக்கும். முதல் சிலையின் பக்கவாட்டிலும் எதிர்புற வரிசையிலும் தம்பி தங்கைகள் விளையாட்டு பாவனையுடன் நின்றனர். ஒருவன் அவன் தம்பியை தலையில் தூக்கி பிடித்து வைத்திருந்தான். இரு குழந்தைகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கைகளை விரித்து ஓடிக்கிண்டிருந்தனர். அவை கடந்த காலத்தில் தங்கிவிடாமல் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவை அசைந்து கொண்டிருந்ததில் பனி உதிர்த்து கலைசலான பேச்சுத்தங்கள் கேட்பது போன்ற பிரம்மை எழிப்பியது. மறுகணம் பனியில் உறைந்து நிறுத்தப்பட்ட உயிர்கள் போலிருந்தன. ஒவ்வொரு சிலையின் முன்னும் பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று ஊழ்கத்தில் நிறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர்களின் சிறு தொந்தி , பிரியாத பிரிந்த அதரங்கள் , கால்களின் நகங்கள் , விலா எலும்புகள் , துருத்தி நிற்கும் கருவிழிகள். மேற்கே நிழல் நீண்டு வீழ்ந்து கிடந்தது. எல்லா குழந்தைகளும் தங்கள் அம்மா அப்பாக்களுடன் இல்லாமல் தனியே நிற்கையில் அமைதியுடன் நிம்மதியுடன் முழுமையான சந்தோசத்துடன் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. பெற்றொர்களின் அருகில் நிற்பவர்கள் என்றும் விடுதலையற்ற சோகத்தில் ஆழ்ந்து தலை சாய்த்து நிற்கின்றனர்.

எதிரிலிருந்த குழந்தையை சந்தேகத்துடன் பார்ர்கும் வளர்ந்த ஆண் அல்லது தந்தையின் சிலை.
உனக்கு என்னிடம் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அறுதியுட்டு கூறுவது போலிருந்தது அந்த சிலையின் அமைப்பு. கண்களின் கண்டிப்பு குழந்தையின் தொங்கிய தலை. ஆம் அந்த ஆண் சொல்வது உண்மையே. எப்படி எந்த ஒரு உயிரியல் தொடர்பு இல்லாத ஒருவன் குழந்தையை அணைத்து இறுக்கிக்கொள்ள முடியும். தத்து எடுத்துக்கொள்கிறார்கள்தான் , ஆனால் அதன் ஆழத்தில் குழந்தைகள் அவர்களுக்கான துணையே. இல்லையேல் சமூக அக்கறை என்ற போலிபெயரில் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்கிறார்கள் தங்களுக்கோர் அடையாளாத்தை சமூகத்தினுள் ஏற்படுத்திக்கொள்ள. என்னால் நம்ப முடியவில்லை. என் அண்ணனோ தம்பியோ குழந்தைகள் பெற்று அவர்களை அன்பால் நிறப்பதாக கூறி கண்ணீர் விடும் பொழுது உள்ளூர சிரிப்புதான் வருகிறது.

கார்த்திகா என் கைகளை பிடித்துக்கொண்டு ஆட்டிக்கொண்டேயிருந்தாள். இவளை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். இவளுடனும் மனம் ஒட்டவில்லை. நான்காண்டுகளாகியும் அதே நிலை. காதலைச்சொன்ன அன்றும் அப்படியே பின்பு ஏன் சொல்லி கல்யாணம் வரை சொண்டு சென்றேன். எனக்கு தேவைகள் இருந்தன. அதனை பூர்த்தி செய்து கொண்டேன். அந்த அளவுக்கு நான் ஒன்றும் பயந்தவன் இல்லையே. நேரடியாக ஒரு விபச்சாரியிடம் சென்றிருக்கலாம். ஆனால் அவள் என்னை உதாசினம் செய்யும் பொழுது தெரியும் நான் அவளை கண்டிப்பாக காதலிக்கிறென் என்பது. விபச்சாரிகளிடம் அந்த நிலை வருவதில்லை. ஆனால் குழந்தை விசயத்தில் இது நடக்கக்கூடாது என்பதில் நான் தெளிவுடன் இருந்தேன். நடிப்பு பசப்பு அறவே இருக்ககூடாது. எனக்கே தோன்ற வேண்டும்….”ஆம் இப்போது பெற்றுக்கொள்ளாலம்”. அவளுக்கு புரியவைக்க முயற்சித்தேன். அவள்மேலுள்ள என் அபிப்பிராயத்தை மறைத்து.

எப்படி ஆண் குழந்தைகளை ஒன்றாக தனக்குள் அன்பில் நிறைந்ததாக கண்டுகொள்ள தொடங்கினான். வெறும் உயிரணு மட்டும் கொண்டு பிறக்கும் அவனோ அவளோ ஓர் தனித்த உயிர் மட்டுமே. நானும் கூட தனித்தவனே….குழந்தைகளை வளர்ப்பது கடமை சார்ந்த செயல் மட்டுமே. தந்தை என்பதே கடமைக்கு சமமானமான சொல். ஓர் ஆண் அன்பால் மட்டுமே நிறைந்து குழந்தையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியிருந்தால் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நடிப்பு….நான் வயதான காலத்தில் ஆண்கள் பிள்ளைகளை நினைத்து அவர்களின் வாழ்க்கையை சில தந்தைகள் நினைத்து நொந்து கொள்கின்றனர். இதனை அன்பு சார்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை அவன் பிரதிபலிக்கவில்லை தன் பெயர் காப்பாற்றப்படவில்லை என்பதால் கூட இருக்கலாம். இல்லை மற்றொன்றாகவும் இருக்கலாம். இதனை கார்த்திகாவிடம் பலமுறை சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது.

காலை நேரமாகியதால் மொத்தமாகவே பத்துபேர்க்குள்ளாகவே பூங்காவிற்குள் இருந்தோம். என் மனைவிக்கு சிலைகள் முக்கியமில்லை போல் தெரிந்தது. கைகளை குளிருக்காக நெஞ்சோடு கட்டிக்கொண்டிருந்தாள். வெண் தொப்பியும் முழங்கால் வரை நீண்ட மேல்கோட்டினுள் மறைந்து சிறுமி போலிருந்தாள். என்னவோ சொல்ல நினைத்து மறைக்கிறாள் சொல்லட்டும் பொறுத்திருப்போம் என்று நானும் அடுத்த சிலைக்கு சென்றேன். அவளும் ஒட்டிக்கொண்டாள். மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்தது மென்மையான பஞ்சு தூறல்கள் மரம் சிலிர்த்த சிறு வெண்பூச்சிகளென ஒன்றன் மீதொன்று விழுந்து தடையமற்ற மற்றொன்றானது. காதுகளை மூடுவது என் பழக்கமல்ல. குளிரில் விறைத்து அவை சிவந்து வலிக்கையில் தொப்பியணிந்து கொள்வேன். அது குளிரை முழுவதுமாய் உணர உதவும்.

அந்த வரிசையில் இருந்த சிலைகள் விடலைப்பருவ ஆண்களும் பெண்களும். அவர்கள் காமத்தை உணர்ந்து கொள்ள தயாராக காத்திருந்த தோற்றம். ஒருவரையொருவர் கைகோர்த்து மூக்குரசி நிற்கும் சிலைக்கருகில் நின்ற பொழுது என் மனைவி என்னைப்பார்த்து முறுவலித்தாள் வெட்கத்துடன். எனக்கோ அவர்கள் இருவரும் சோகத்துடன் இருப்பது போலிருந்தது…அந்த தருணம் முடிந்தும் வரும் ஏக்கம் தனிமை எதையோ இழந்து விட்ட வெறுமை. அவள் கரு தரித்திருப்பதைக்கூட சொல்லியிருக்கலாம். அடுத்தலில் வட்ட வளைவினுள் இருவர் கைகால் கோர்த்து சுழன்று நின்றனர். இருவரும் அடுத்தவர் கால்களை தொட்டிழுத்து ஒருவர் மற்றொருவரை துரத்தி பிடிக்க முயன்றிருந்தனர். ஒருவருக்கொருவர் அகப்பட்டுக்கொள்வர் என்று நினைக்கும் கணம் தப்புத்துக்கொண்டேயிருந்தனர்.

முடிகளை சிலுப்பி விட்டு இளமைக்கான கூர்முலைகள் குலுங்க ஒருகால் தூக்கி ஆடி நின்றாள் இன்னொருத்தி. மயிர் கற்றைகளில் பனி படர்ந்து வெள்ளை மல்லிச்சூடி அவள் அழகில் அவளே மெச்சி தரை நோக்காமல் விண் நோக்கி நின்றாள். கார்த்திகாவை முதல் முறை காணும் பொழுது அவள் தலைமுழுவதும் பிச்சிப்பூ வைத்திருந்தாள். பூ உதிர்வது போல அவள் மூச்சும் சிரிப்பும் சிதறி பறந்து வரும் இருவரும் கூடி முயங்கும் பொழுது. இருவரும் இருமுறை உச்சம் அடைந்தாலொழிய அன்றைக்கு முடியாது. அவளுக்கும் அப்பொழுது கூர் முலைகள். திமிருடனேயிருந்தாள். கடைக்கண்ணால் ஏளனத்துடன் காண்பதற்கு நான் தவம் கிடக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். அவளது தட்டையான வயிற்றை கார்த்திகா பிளந்த வாயுடன் பார்த்துக்கொண்டிருப்பதை நான் தற்செயலாக கவனித்து விட்டேன். “இப்புடி சிலுப்பி நிண்ணுதான் நீ கொழந்த பெத்துக்கிற , பின்னால சிலுப்ப முடியாது பாத்துக்க” என்றேன் நக்கலுடன். அவள் அதற்கு எரிச்சலான முகத்தை பதிலாக முன்பே தயாரித்து வைத்திருந்தது போல காட்டினாள்.

விடலை ஆணும் பெண்ணும் சண்டையிட அவன் அவளை தூக்கி வீசுகிறான். நரம்புகள் புடைத்த கைகளுக்கிடையில் பெண்ணின் தலையிருந்தது. அவள் அந்தரத்திலிருந்தாள். எதிரில் அதே பெண்ணை தோளில் தூங்கி விளையாட்டாக நின்று கொண்டிருக்கிறான். இரு வரிசைகளின் முடிவிலிருந்த தூணில் டிராகன் போன்றதொரு உருவம் அதன் செதில் வாலால் நின்றிருந்த அடைபட்ட நிலையிருந்த பெண்ணை சுற்றி வைத்திருந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த பேச்சுவார்தையில் கார்த்திகாவை அடித்திருக்கிறான்.

“என்ன எல்லாரும் மலடுனு சொல்ல நீங்க கேட்டுக்கிட்டு தான இருந்தீங்க. இனிமே யாராச்சும் கேட்டா நீங்க இம்பொட்டன்ட் அப்படீனு சொல்லிருவேன்…பாத்துக்கோங்க….என்னால இனி பேச்சு கேக்க முடியாது. எனக்கு வயிறு நிறம்பனும். உங்களால முடியலன வேற யாட்டையும்…..”

அதனை முடிக்கும்முன் நான் அவளை அடித்திருந்தேன். விழுந்தவள் எழும்பும் முன் என் உடம்பு நடுக்கத்தைக்குறைக்க கதவை சாத்திவிட்டு வசந்த கால பூக்களைக்காண சென்றுவிட்டேன். இளஞ்சிவப்பு வெள்ளை மஞ்சள் பூக்கள் இலைகளில்லா மரங்களில் நிறைந்திருந்தன. வசந்த காலம் இல்லையேல் இந்த மரங்கள் பூக்காமல் மலடாய் கிழட்டுக்கிழவிகளைப்போல் நின்றிருக்கும். அன்று முடிவெடுத்தேன் ஒன்றாவது பெற்றுக்கொள்ளலாம் அவளுக்காகவாவது. வேறுயாருடனும் போய் பெற்றுக்கொள்ளக்கூடாதே…

அவள் அந்த கோவக்கார பையன் சிலையின் முன் தங்கியது ஆச்சரியமளிகவில்லை. அம்மாக்களுக்கு அழும் குழந்தைகளை கைவிட மனமிருக்காது. அவை நிதம் அம்மாக்களை தேடிக்கொண்டேயிருக்கின்றன. குழந்தைகள் கோவத்தையும் அழுகையிலேயே காட்டுகின்றன. அதனால் அவள் அந்த சிலை முன் நின்றுவிட்டாள். குட்டி தொப்பையுடன் அந்த சிலை கோப அழுகையில் காலகாலமாக நின்று விட்டது. அவன் அழுதுகொண்டேயிருந்தான் கார்த்திகா போன்ற அம்மாக்களுக்காக. நான் அவள் அருகில் சென்றதும் “நேத்துலருந்து சொல்லணும்னு வச்சிட்டேயிருக்கேன். இந்த அழுவினி பையன பாத்ததும் சொல்லலாம்ணு தொணுது” என்று அந்த சிலைக்காட்டினாள். தலையிலிருந்த வெள்ளைப்பனி அவனிக்கு தொப்பி போட்டது போலிருந்தது. “இந்தாங்க..சர்ப்ரைஸ்….” என்று சிரித்தவாறு பயிலிருந்த ஒன்றை எடுத்துக்காட்டினாள். அந்த சிறிய குச்சி போன்ற நீளமான சாதனத்தின் கண்ணாடிக்கு பின் இரு சிவப்பு கோடுகள் இருந்தன. தலை தூக்கிப்பார்க்கவும் அவனுக்கு எதிரிலிருந்த சிலை ஒரு கைக்கு இரண்டாய் மொத்தம் நான்கும் மேல்புறமும் கால்களில் அதே போல நான்கு குழந்தைகளை கீழும் விசிறியடிக்கும் தந்தையின் கோபாவேச சிலை. கைகால்களில் தினவு புடைத்து நிற்க உதடுகள் இறுகி கண்கள் பிதுங்கி வெளியேறுவது போலிருந்தது. நிச்சயமாக அந்த குழந்தைகள் இறந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை சிரித்துக்கொண்டே பறந்திருந்தன. வெறுப்பை உமிழும் தந்தையின் முன் சிரிப்பு ஏளனத்துடன் குழந்தைகள்.

“வருத்தமில்ல. ஆனா சந்தோசமா இருக்கேனானு தெரியாது” என்றேன்.

“ஏன் சந்தோஷமான விசயம் தான?” என்றாள். அவள் முகம் மாறியிருந்தது. சிறுமிக்கான அடையாளங்களற்று பெண்ணானாள்

“ஆமா. ஆனா நாம கொண்டு வர்ர உயிருக்கு ஒரு மதிப்பிருக்கணும். கடமைக்கே பெத்து வளக்கக்கூடாது. இதெல்லாம் நாம முன்னாடியே பேசுனதுதான். திரும்பவும் சொல்றேன் நீ பெத்துக்க ஆனா எனக்கு இஷ்டமில்ல. எங்கிட்ட நீ எதிர்பாக்குற சப்போர்ட் கிடைக்காண்ணு பின்னாடி நீயோ இல்ல பொறக்கப்போற கொழந்தையோ கொற சொல்லக்கூடாது….நான் இப்பொவே அதுக்கு இடங்கொடுக்கலங்குறத நினப்புல வச்சிக்க ”

“உங்க தத்துவத்த நிறுத்துங்க. எவ்வளவோ கேட்டு பொறுத்தாச்சு. இந்த குழந்தைக்காக நிறைய கஷ்டப்பட்டுடேன். நீங்க தடுத்ததாலதான் இவ்வளோ நாள் பண்ணாம இப்போ பண்ணி வந்திருக்கு….அதுக்கும் ஆறு வருசம் காத்திருந்தாச்சு….நீங்க சம்மதிச்சனாலதான் இப்பொவும் பெத்துக்கலாம்னு நானும் மருந்து எதும் சாப்புடல. ரெண்டு மாசம் ஆக போகுது. இனிமே என்னோட வயிறு தாங்குமானு தெரியல. இதுதான் கடைசியா கூட இருக்கலாம். ” என்று கதறினாள்.

“நான் சம்மதிச்சதுதான். எனக்கு அதுக்குண்டான தருணம் வரணும். நீங்க நெனச்ச உடன் அம்மாவாகிறலாம். பால் சொரந்தா போதும். பத்தாததுக்கு உங்களுக்குள்ளயே வளத்து ரத்தமும் சதையுமா ஆக்குறீங்க. நான் வெளிய இருக்கேன் , எனக்கு டைம் வேணும். உண்மையாவே அது என்னோட உயிர்னு நினைப்பு வரணும்”

நான் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாற்போலிருந்தது “எவ்வளவு நாள்…” என்ற கேள்வியுடன் சீறினாள்.

“இன்னும் கொஞ்ச நாள்”

“என்னால முடியாது…” என்று கத்தினாள்.

“சத்தம் போடாத” என்று அவள் கைகளைப்பிடித்து அழுத்தினேன். கண்டிப்பாக வலித்திருக்க வேண்டும். அவள் அமைதியானாள். நான் தனித்து விடப்பட்டேன். தொடர்ந்து சிலைகளை பார்ப்பதாக முடிவெடுத்தேன். அவள் எனக்கு முன் தனியாக நடந்து நீரூற்றைத்தாண்டி சென்று விட்டாள். இது வாழ்நாளில் ஒருமுறை அமையும் தருணம் , திரும்ப வரப்போவதில்லை. சண்டையை பிறகு வைத்துக்கொள்ளலாம் வீட்டிலோ காட்டிலோ என்ற எண்ணமேயிருந்தது.

நீர்த்திவலைகள் தெறித்து நனைத்த சிலைகள் அதனை சுற்றி நின்றன. எல்லா சிலைகளும் ஒற்றை மரத்தின் கீழ் நின்றன. கனத்த மேல் சட்டையை நீரின் குளிருக்கு ஈதமாய் இறுக்கிக்கொண்டு அவற்றைத்தாண்டி படியேறிச்சென்றேன்.

கனத்த கற்படிகள் வெள்ளை நிறத்திலிருந்தன. ஒருபடியேறி நடந்து பின் அடுத்த படியேற வேண்டியிருந்தது. படிகளின் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கியிருந்த வட்டத்தின் விளிம்புகளிலிருந்தன வெண் கற்சிலைகள். நடுவில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் உடல்கள் பின்னி பிணைந்த வெண் கல் ஸ்தூபி. வெளிவர துடிக்கும் உள்புக ஏங்கும் உடல்கள் கொண்டு மண்ணிலிரிந்து விண்னோக்கி எழுந்த ஆண்குறி போலிருந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து கழுத்தைக்கட்டி அமர்ந்த ஆண் பெண் , முதுகு பார்த்து அமர்ந்த கிழவிகள். முதுகொட்டி அமர்ந்த கன்னிகள் , மனைவியை தூக்கி எறியும் ஆண் , மடியில் ஏசுவைப்போல படுத்திருந்த கிழவி மரியாவாகா தாடிக்கிழவன் , சண்ணையிடும் ஆண் பெண் குழந்தைகள்.

கார்த்திகா ஓர் சிலையின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்தச்சிலை அவளை ஆட்கொண்டிருந்தது. குனிந்து நின்ற அம்மையின் முலைகளை பிடிக்க பிதுங்கி நிற்கும் குழந்தைக்கூட்டம். அருகில் குழந்தைக்கூட்டம் ஏறி சூழ்ந்து அசையவிடாமல் செய்யப்பட்ட அம்மை. பருத்த முலைகள் தொங்கி அதிர்ந்த நிலையிலிருந்தன இரு அம்மைகளுக்கும். இரண்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பார்த்துக்கொண்டனர் ஒன்றும் பேசவில்லை. பூங்காவைச்சுற்றிவிட்டு இறங்கி வந்தனர்.

வெளியேறும் பாதையில் அவன் கண்ணில் தென்பட்டது அச்சிலை. இரு குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு புன் சிரிப்போடு நிற்கும் ஆண். கைகளில் இருக்கும் குழந்தைகள் அதனை மகிழ்ந்து கைகால் முறுக்கிக்கிடந்தன. அந்த ஆண் தந்தைக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்திய உடல் கொண்டு மகிழ்ச்சியே நிறைந்தவனாக குழந்தைகளை ஏந்திக்கொண்டிருந்தான். இருதயம் நின்று காலம் நின்று பிறந்து இறந்ததைப்போல உணர்ந்தேன்.

“இதான் என் கனவுல அடிக்கடி வர்ர சிலை. இப்பொதான் ஞாபகம் வருது. நம்ம குழந்த பெத்துக்கலாம். எத்தன வேணும்னாலும். எனக்கு நம்பிக்க இருக்கு. என்னால சந்தோசமா ஏத்துக்க முடியும்ணு இப்போ தோணுது. நான் தேடுனது என்ன தாண்டுன ஒரு விசயத்துல இருந்து வர்ர அழைப்பு இல்லானா ஒரு அக்னாலெஜ்மெண்ட்” எனக்கெ சொல்லிக்கொண்டது போலிருந்தது. அவள் நான் சொல்வதை உள்வாங்கிகொள்ளவில்லை. அதற்கு சரியென்பது போல பார்த்தாளா என்பது சந்தேகம். ஆனால் நான் சரியென்றே எடுத்துக்கொண்டேன். அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் ஸ்டாக்கோமிற்கு கிளம்பிவிட்டோம். ஏழு மாதத்தில் இரட்டையர்கள் நல்லபடியாக பிறந்தனர் மெல்ல வளர்ந்தனர்.

இணையற்ற அன்னையாக குழந்தைகளை வளர்த்தாள். இறக்கும் தருணம் அதைச்சொன்னாள் “எனக்கும் ஒரு கனவு வர்ரதுண்டு. மூக்கணாங்கயிறு கட்டுன அம்மா. அதுக்கு மேலயிருக்குற இரண்டு குழந்தைங்க அத புடிச்சி சவாரி போறாங்க. கொஞ்சநாளா டெய்லி வருது. நீங்க அந்த பார்க்ல இருக்கும் போது சொன்னது சரிதான்” அன்று பின்னரவில் சிறிது கஞ்சி குடித்து மடிந்து படுத்து காலையில் இறந்து போனாள். அவள் மூக்கு ரொம்ப நாளாக சிவந்திருந்ததை அன்றுதான் கண்டேன்.

நான் குழந்தைகளுடன் சந்தோசமாகவே இருந்தேன் கடைசிவரை, ஆனால் அவளும் நானும் எங்களுக்கு இரட்டையர் பிறந்ததற்கு பின்னும் காட்டிக்கொள்ளவில்லை நான் இம்பொட்டண்ட் என்பதை.

உண்மையான வாழ்க்கை.

மிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை

மலத்திலிருந்து எழுந்து வந்திவன் சொல்வதை கேட்க உங்கள் காதுகள் கூசலாம். ஆனால் உங்கள் உடம்பிலும் உள்ளுறைந்திருப்பதே அக்கூசும் மலம். “அதுவும் நம் பிரம்மம்” என்று எங்கள் பழைய குலக்குரு கூறுவார் , ஆம் அவரும் ஒரு இலையான். அந்த தெருவின் கடைசியிலிருக்கும் மதுக்கடையில் நான் உணவிற்காக வளமையாக செல்வது , நாங்கள் இன்னும் விளைவிக்க பழவில்லை , உணவு சேகரிக்காத நாடோடி நிலையிலிருக்கிறோம். அதுவே எங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை.

அது ஊரின் முழுக்குடிகாரகளின் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை. கால் வைத்தால் தட்டுப்படும் குப்பைகள் மட்டுமேயான அமுதவெளி எச்சில் கடல். நின்று நிதானமாக நான் தின்று இளைப்பாறி வரலாம் ஒருவரும் விரட்டும் நிதானத்தில் அங்கிருப்பதில்லை. காலகள் உளைகின்றன சற்று ஆசுவாசமாக கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு போகலாம். நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன.முதல் காரணம் எளிதான உடம்பு நோவாத உணவு. இரண்டு , வித விதமான் பொழுது போக்குக்கதைகள்.

மனிதர்களிடம் கேட்கும் கதைகள் எங்கள் குழுவில் ரொம்ப பிரசித்தம். முருகி ஒரு முறை “நான் செல்லும் வீட்டின் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கொல்ல தனிமையில் திட்டமிடுகின்றனர். திரும்பி என்னைப்பார்த்ததும் மொத்த குடும்பமும் கையில் ஆயுதங்களுடன் என்ன அடித்து விரட்டின. பார் என் இடது இறக்கைகளில் இருக்கும் கிளிசலை” என்று இறக்கையை விரித்து காட்டி தொடர்ந்தாள் “ஆனால் அவர்கள் சேர்ந்திருக்கையில் சிரிப்பும் கூத்தும் ஆகா களைகட்டுகிறது” என்றாள். விசித்திரமான புரிந்து கொள்ளமுடியா கதைகள்.

சூரியன் தொலைந்ததும் மனிதர்கள் கூட்டமாக வந்து எங்களைப்போல் குவிகின்றனர். தினமுன் நூற்றுக்குமேற்பட்ட கதைகள் சுழன்று அலைந்து பின் அடங்குகின்றன. நமக்கு மெத்த பிடித்தது மரணங்களின் துயரங்களின் கதைகள் தானே!. சந்தோசத்தின் கதைகள் நல்லதாகவேயுள்ளன, ஆனால் ஏனோ அதில் பிடித்தமில்லை , வெறும் அலங்கரிக்கப்ப்ட்ட குப்பைகள். அந்த மேசைகளின் விளிம்பில் கண்ணிமைக்காமல் மோவாயின் கைவித்து கவனித்திருப்பேன். அடிக்கடி தின்பதற்கும் குடிப்பதற்கும் அவர்களே எனக்கும் படியளப்பார்கள் , தர்மவாதிகள்.

தர்மவாதிகள் வரும் நேரமாகிவிட்டது. கடைக்குள் நுளைந்த எனக்கு துக்கம் மனிதர்களின் மூச்சுக்காற்றென சுழன்றடித்தது . குப்பைகள் துடைத்து எறியப்பட்ட சுத்தமான தரையில் மேசைகள் ஒய்யாரமாய் அமர்ந்து நக்கல் சிரிப்புச்சிரித்தன. கனத்த நெஞ்சுடன் இயல்பாக பறக்க முயன்றேன். சொர்க்கம் துடைத்தெறியப்பட்டு விம்மலுடன் நரகமாகியிருந்தது. ஒன்றும் செய்வதற்கில்லை , காத்திருப்போம் இன்றைய பட்சணத்திற்கு. ஒருவர் பின் ஒருவராய் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தத்தின் படி எனக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் அமர்ந்து வாசலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவர் பின் ஒருவராக வந்து என் மேசையைத்தாண்டி சென்று மற்றதில் அமர்ந்தனர். ஆத்திரத்தில் மற்ற மேசைகளுக்கு பறந்து நண்பர்களிடன் அனுதாபம் தேடினேன். அவர்கள் சாப்பாட்டில் மும்முரமாகி என்னை கவனிக்கத்தவறினர். அவர்களுக்கு சோறு கிடைத்து விட்டது. சோறு கண்டயிடம் சொர்க்கம் இல்லையா!

திரும்பி வந்து என் மேசையில் அமரும் பொழுது அங்கு என் மூன்று தர்மர்கள் நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். ஆகா , என்ன அற்புத காட்சி. சந்தோசப்பட நேரமில்லை அதற்குள் அடிக்க வருகிறார்கள். சீ…இவர்களா தர்மபிரபுக்கள். அவர்களுக்கு தெரியமாலே படியளப்பார்கள் , யோசித்து செய்வது தர்மமில்லையல்லவா! இருந்தாலும் என்ன , என்னை பிடிக்க இல்லை அடிக்க முடியுமா , ஹா…ஹா….மறைந்திருந்த என்னை அவர்கள் காண்பது எளிதல்ல. பொறுமை எருமையை விட பெரியது , ஆம் முக்குத்தெரு எருமை எவ்வளொ பெரியது. அதன் காதுகளில் ஒளிந்து விளையாட்டு காட்டினால் ஜோராக இருக்கும். இப்பொழுது பசி காதையடைக்கிறது.

ஆ…எச்சில் துப்பிவிட்டான். இவன் சீக்கிரம் செத்து விடுவான் போல ரத்தம் கலந்திருக்கிறது. இறந்தால் இவன் வாய்க்குள் நுளைந்து மூக்கின் வழி வரலாம். பின் அவனே என் முழு உணவு. செத்தும் கொடுக்கும் மனிதர்கள் ஆகா…புண்ணியம் ! புண்ணியம்!. அவன் குடிக்கும் குப்பி , டம்ளர்களைத்தவிர மற்றவற்றில் திரிந்தலையலாம். அது தலையை கிறக்கும். எனக்கிருக்கும் மினுங்கும் கண்கள் மேலும் மினிங்கித்தள்ளும். பச்சை நிற கோழி மாமிசம். இதில் நிற்க முடியவில்லை எண்ணை வழுக்கு. கைகளால் தடவி எடுத்து பறந்து மீண்டும் அமருவோம். பசியாறுகிறது. இனி செவிக்குணவு…

“இங்கேரு , எனக்குல்லாம் செத்தா சொர்க்கொந்தான். அப்பேர்ப்பட்ட வாழ்க்கையாகும். சீதை சீணிச்சி கெடந்து இண்ணையோட ஆறு வருசமாச்சி. ஒரு நாள் அவ பீ மூத்தரம் அள்ளாம இருந்துருப்பனா. பொன்னாட்டுலா பாத்துக்கிடுதேன்”

“மகேசு , நீ பாக்கது லேசுபட்ட காரியமில்ல மக்கா மனசிலாச்சா. பெத்த பிள்ளைய தொட்டில்ல போட்டு உறக்காட்டுக மாரிலா டெய்லி போட்டுட்டு வாற. நீ வெப்ராளப்படாம குடி”

“பரமசிவம் , இவன் பிரங்கத்த கேக்கவா வந்தோம் , மத்தத கைல எடுத்து வச்சாலே இவன் இந்த கதையத்தான் டெய்லி சொல்லிட்டு திரியான். சவத்தெழவு , கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சுல்லா , பொறவு தண்ணிக்குடிச்சி ஒண்ணுக்கடிச்ச கதையாக்கும். செத்தது நம்ம மாஸ்டராக்கும். அந்த கதைய பேசுக மாரினா இன்னிக்கி இங்க இருப்போம். இல்லண்ணா பேறண்டே. ”

“நீ ஏண்டே கெடந்து துடிக்க , அவன் ஒரு ட்ரிப்பு சொல்லிட்டுதா போட்டுமே. உனக்க பொண்டாட்டியா கெடைல கெடக்க. மாஸ்டரு பெரிய மயிரு மாஸ்டரு. குடும்பத்த விட்டுப்போடு பயந்து தொங்கிச்செத்தான். சீ…ரோட்டுல பிதுங்கிச்செத்த நாய் மாரி”

“லேய் ஜஸ்டினே , மாஸ்டர பத்தி தரக்கொறவா பேசுனா கொடல உருவிப்போடுவேனாக்கும் ஆமா”

“ஆமா புடுங்குன மாஸ்டரு , வீட்டுல நாலு பிள்ள இருக்கு , மனசுல ஒரு இது வேணும்ல… பின்ன என்னத்த யூனியன் லீடரு , சப்பு சவரெல்லாம். உனக்க மயிரு மாஸ்டரு செத்து அவனுக்க வீட்டுல கெடக்க எல்லாத்தையும் கொல்லப்போறானாக்கும்”

திரும்ப திரும்ப இவர்கள் ஏன் செத்துப்போவதை இவ்வளவு கொடூரமாக வர்ணிக்கிறார்கள். நாங்களேல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரிவதேயில்லை. செத்த உடலில் கோடிப்புளுக்கள் துளைத்து தெளிவது உயிர் பெருக்கமல்லாவா. ஹீம்…மடையர்கள்.

“ஜஸ்டினே , இண்ணைக்கி நீ பாக்குற சோலி , உடுத்துக உடுப்பு எல்லாம் நம்ம மாஸ்டரு உழைச்சு நிண்ணு கொடுத்ததாக்கும். ஊரார் குடும்பத்த பாத்து அவரு குடும்பத்த விட்டுப்போட்டாரு”

“செரிதாண்டே மக்கா , குடும்பம் தனிச்சொத்து அரசுண்ணு தானடே நம்ம சட்டம் சொல்லுகு , அப்படிப்பாத்தாக்ககூட குடும்பத்த மொதல்ல வச்சி காப்பத்திருக்கணும்லா”

“சீக்கிரம் போணும் , சவத்துக்கு வெள்ளி கெழமையாக்கும் பதுவா துணி மாத்துகது. மறந்தா அவ வாய்ல நீச வார்த்த கேக்க முடியாதாக்கும்”

“நீ பயராம கொஞ்சம் அமந்து இரி மகேசு. உனக்கு ஜஸ்டினே , ஒரு ஆஃப் எடுப்பமா. எல்லாம் மூத்தரமா போச்சி”

நீராகாரம் நிறைய எடுத்துக்கொள்கிறார்கள். தின்பது குறைவு இடையிடையே புகைத்தல். நேரம் கடந்த பின் முன்பு சொன்னது போல இவர்கள் வாய் வழி போய் மூக்கில் வரலாம் பிணச்சுரணை. இந்த மகேசு எதையும் கேட்டதாக தெரியவில்லை. சீதாப்புராணம் தான். இவன் மாற்றி மாற்றி பேசுவதைப் பார்த்தால் இவனே அவளை கொன்றுவிடுவான் போல.

“நானாக்கும் மொதல்ல பாத்தது , கண்ணு பிதுங்கி வெளிய கெடக்கு. மலம் ஜலம் ரெண்டும் வழிஞ்சி போயிருந்துச்சு. நல்ல கம்பீரமான மொகம் சாகதுக்கு முன்னால எதையோ பாத்து வெறச்சி நின்ன மாதிரி மேலையே பாத்துட்டு இருக்கு. ஒடஞ்ச கொடக்கம்பியாட்டும் கையும் காலும் நிக்கி”

“மாஸ்டரு இப்படி கடன் வாங்கப்பிடாது பரமசிவம். மத்தவனுக்கு இவரு கடன் வாங்கிக்கொடுத்து எவனும் திருப்புத்தரல்ல. கொடுத்தவனுக்கு பேச்சு கேக்க முடியாம பயந்து போயி செத்துப்போனாரு”

“கணக்கு வழக்கு பாக்கத்தெரியாது , கேட்ட குடுக்கதும் இல்லண்ணா வேற இடத்துல வாங்கி கொடுக்கதும் கூடிப்போச்சு. பின்ன இப்படி ஆகாம என்ன செய்யும்”

“நடு வீட்டுல துர்மரணம் நடந்தா அந்த வீட்டையே செதச்சிப்போடும் , கூடத்துல உறங்கி எந்திச்சா தொங்குன மேனிக்கி காலு கை விரலு தெரியும்”

“மூத்த பிள்ளைக்கி ரெண்டு மாசத்துல கல்யாணம் தேதி குறிச்சி வச்சிருக்கு. காசு தேராதுண்ணு மாப்பிள்ள வீடு அனக்கமில்லாம போயாச்சு”

“என்ன இருந்தாலும் இழப்பு இழப்பு தான். பொதச்சாக்கூட போய் தொழுக ஓரெடமிருக்கும். எரிச்சி தடையமில்லாம ஆக்கியாச்சு. இனி ஆடி அமாவாசைக்கி கா…கா…கரைய வேண்டியதான்”

“எனக்க பொன்னு மாஸ்டரே…..முன்ன நிண்ணு ஸ்ட்ரைக் நடத்த , கேட்டப்பம் காசு தர. கண்டனம் கடத்தாம பெச இனி யாரிருக்கா”

“எனக்க பொன்னு மாஸ்டரே”

என்ன இது , சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் தலை தொங்க அழ ஆரம்பித்து விட்டனர். மாஸ்டர் இறந்ததில் எனக்கும் வருத்தம்தான். நல்ல மனிதர். ஆனால் எரித்து விட்டனர் முட்டாள்கள்.

“மாஸ்டருக்கெல்லாம் சாவு வருகு , எனக்க சீதைக்கி ஒரு சாவு வர மாட்டங்கே….”

இவனும் அழுகிறான். ஆனால் யாருக்காக. ஆ….என்ன இது காது கிழியும் சத்தம்.

“லேய் மக்கா , நமக்க பாட்டு…நமக்க பாட்டு”

“அடியே மனம் நில்லுனா நிக்காதடி , அடியே எனக்கண்டு நீ சொக்காதடி”

“சீக்கிரம் செத்துருவா. இந்தா நீ ஆடு….”

மட்டில்லா சந்தோஷம். அழுகையில்லா ஆட்டம். கதை விளங்கவில்லை.

“செரி சகோ , நாளைக்கி காலைல மணி சகோக்கு கல்யாணம் மறந்துராதேயும். மாம்பழ புளிசேரி உண்டுண்ணு பேச்சு. பத்து மணிவாக்குல வந்துரும் கலுங்கு பக்கம். நா வண்டில வந்துருகேன்”

“அப்ப செரி”

“இந்த ஈச்ச….சீ….”

அடித்து விட்டனர். இறக்கைகள் பிரிந்து உதிர்கின்றன. நான் மிதக்கிறேன் ஒசிகிறேன். அலைகிறேன். மேசை என்னை தாங்கிப்பிடிக்க வீழ்கிறேன்.

மரணம் நெருங்குகிறது. இந்த கட்டெறும்பு ஒற்றையாக தொய்வில்லாமல் எனைத்தூக்கி நகர்கிறது. உயிருள்ள உண்ணும் உணவு. இருண்ட குகைக்குள் நுளைகிறேன். மாஸ்டர் இங்குதான் இருக்கிறார் போல தெரிகிறது.

கடுவா – இவான்கார்த்திக் சிறுகதை

ஒன்று :

“எவ்ளோ டோஸ் கொடுக்கலாம் இப்போதைக்கு” என்றான் சிபு

“வயசாச்சு , கொறச்சு குடுக்கதுதான் நல்லது , சைட் எஃபெக்ட்ஸ் நிறைய இருக்கும். ஆனா இது இல்லாம அவரால தூங்க முடியாது” என்றார் டாக்டர்

டாக்டர் முடிப்பதற்குள் சிபு “ராத்திரல எந்திரிச்சு கத்துராரு என்னல்லாமோ சத்தம் கேக்குது அந்த ரூமுக்குள்ள. நாலு வயசுல பொண்ணு இருக்கா. எங்கயையாவதுகொண்டு போய் விடவும் முடியல வச்சுக்கவும் முடியல”

“அவரோட உலகம் அது , அதுக்குள்ள உங்களுக்கு இடமில்ல” என்றவாறு தன் பெட்டியுள் இருந்த மருந்தை ஊசியினுள் ஏற்றிக்கொண்டிருந்தான்.

“அவரு வந்த அன்னிக்கு நைட் எம்பொண்ணு தாத்தா கத்துறாறுண்ணு பாக்க போயிருக்கா ,  நாங்க தூங்கிட்டோம் அவ கத்துற சத்தம் கேட்டுதா நாங்க ஓடிப்போய் பாத்தோம். கதவிடுக்குல அவரோட பின்பக்கம் மட்டும்தா தெரிஞ்சிது , அப்படியே நாலு கால்ல ஊந்து போறாரு. அப்பா நெஞ்சுல கைவச்சிட்டு நின்னுட்டிருந்தாரு. அவரோட மொகத்துல ஒரு பயம் இருந்துச்சு. அம்மா முட்ட வரும் போது பயந்துட்டே பால் குடிக்க போகுற கண்ணுக்குட்டி மாதிரி” என்று எங்கோ பார்த்து நினைவு படுத்திச்சொன்னான், நினைவு வந்தவனாய் “கதவுக்கு பக்கத்துல பொண்ணு மயங்கி கெடந்தா. கதவ மூடிட்டு அவள எழுப்புனா பீஸ்ட்..பீஸ்ட்னு கண்ண மூடிக்கிட்டா. அதுக்கப்பறம் அவ அந்தப்பக்கம் போறதேயில்ல” அவன் முகம் சிவந்து அதிகமாக பேசிவிட்டோமோ என்பது போன்றிருந்தது.

“காலைல எப்படி இருக்காரு. எதாவது அம்னாரமலிட்டி தெரியுதா” என்றார் டாக்டர்.

“அவர் எப்போவுமே நார்மலா இருந்தது கிடையாது. அவர அப்பா ஐயான்னு கூப்டுவாரு. சாகும் போது அப்பாக்கு தொண்ணூறு வயசு. எப்படியும் இவருக்கு ஒரு நூத்திபத்து வயசுக்கு மேல இருக்கும். இவர வந்து விட்டுட்டு அவரு போய் சேந்துட்டாரு” என்று சங்கடமாக சிரித்தான் “ஆனா பாத்தா வயசு தெரியாது பிசிக்கலி ஹீ ஸ் ஸ்ட்ராங்க். என்னால இப்போகூட தூக்கமுடியாத வெயிட்ட அவரால தூக்க முடியுங்குற மாதிரி இருக்கும். என்ன கேட்டிங்க….ஐயம் ஜஸ்ட் டைவர்ட்டிங் த டாப்பிக்”

“இல்ல பகல்ல எப்படி பிஹேவ் பண்றாரு”

“அது நார்மல்னு சொல்லலாம் , ரூம் விட்டு வெளிய வந்ததில்ல. எதவாது தேவண்ணா இருமுவாறு நம்ம கிட்ட போய் நிண்ணோம்னா தேவையானத கேப்பாரு. அவருக்கு கொஞ்சம் ஹார்மோன் பிராப்ளம் இருக்கும்னு நினைக்குறேன். அவரோட வாய்ஸ் கீச்சுக்கொரல்ல நல்ல ஜானிகி கொழந்தைங்க ஸ்டைல்ல பாடுற மாதிரி கேக்கும். ஒரு செயர் மேசை மாதிரிதா அவரொட இருப்பும் இருக்கும் இந்த விட்டுல. பட் நைட்ல உங்களால இமாஜின் பண்ணி பாக்கக்கூட முடியாது அவ்ளோ சத்தம். அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர் அதிகமா கேட்டது செயிண்ட் தாமஸ் மவுண்ட்கு போகாணும்னு திரும்ப திரும்ப “அங்க அங்க அங்க” அப்டின்னு சுட்டிக்காட்டுனதுதான். ரொம்ப கம்மியாதா சாபிட்டாரு. ஒரு குருவிக்கு அது பத்துமானு கேட்ட இல்லனுதா சொல்ல தோணும்” என்று சோபாவில் அமர்ந்தவாறே தலையை மட்டும் திருப்பி அந்த அறையை திரும்பிப்பார்த்தான்.

அந்த அறை சலனமற்றிருந்தது. அவர் அந்த நாற்காலியில் ஜன்னலின் வழியே தெரிந்த செயின்ட் தாமஸ் குன்றை பார்த்துக்கொண்டு மேல் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வெள்ளை வேட்டி காற்றில் ஆடியது. கைகள் எரிந்த பழுத்த மரத்தின் கட்டைகள் போலிருந்தன. அடித்தால் நாம் இரண்டாக பிளந்து விடுவது போலிருந்தது. நரைபிடித்த தலை. தாடியுடன் நெஞ்சும் பஞ்சடைந்திருந்தது. உணர்கொம்புகள் போல மீசை சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர் உடலே பொன்னிறத்திலிருந்தது. இவர்கள் இருவரும் பேசியதை அவர் கேட்டது போல தெரியவில்லை. அவர்கள் இருப்பதையே உணராததுபோல தோன்றியது.

விமானம் பறக்கும் சத்தம் மிக அருகாமையில் கேட்டது. சிபு சோபாவில் திரும்பி உட்காரவும் அதன் ஸ்பிரிங் கிரீச்சிட்டது.

டாக்டர் அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டார். “அடிக்கடி இப்படி போகும் பக்கத்துல தான் ஏர்ப்போர்ட்” என்றான் சிபு.

எதிரே இருந்த டாகடர் “உங்க அப்பா அவர பத்தி எதும் சொல்லலையா”

“தெளிவா அவரும் எதும் சொல்லல , உங்களுக்கு அவலாஞ்சி தெரியும்ல.. ஊட்டிக்கு பக்கத்துல..நிறைய படம் கூட எடுத்துருக்காங்க அங்க. அந்த டாம் ரொம்ப ஃபேமஸ். நாங்க கூட அப்பா சொன்னதுக்கு அப்புறம் அங்க போயிருக்கோம். எங்க விட்டேன்” என்று சிபு டாக்டரிடம் கேட்டான். அவர் பதில் சொல்வதற்கு முன்பே “ஆ…அது நம்ம காமராஜர் டைம்ல கட்டுனது அதுக்கு முன்னாடி அங்க ஒண்ணும் கிடையாது வெறும் காடுனு அப்பா சொல்லிருக்காரு நமக்கு அத பத்திலா ஐடியாயில்ல. அங்கதா இவரு இருந்ததா அப்பா சொன்னாரு. அங்க மனுசங்க யாரும் இல்லன்னுதா ஃபாரஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது ஆனா ஒரு நாள் அப்பா நைட்டு பவர் ஸ்டெசன்ல எதொ ஓவர் லோட்னு பாக்க போய்ட்டு திரும்ப வரும் போது இவரு ஜீப் போற பாதைல மயங்கி விழுந்துருக்காரு. ரிசர்வ் ஃபாரஸ்ட்ல இருக்கக்கூடாதுன்னு ஊட்டிக்கு அனுப்பிடாங்க எதோ மடத்துல இருந்தாருண்ணு நெனைக்குறேன்” டாக்டர் அமைதியாக கேட்டார்.

“அதுக்கப்பறம் அப்பா அவர ஊட்டிக்கு போய் அடிக்கடி போய் பாத்துட்டு வருவாறு. திடீர்னு ஒரு நாள் இவர கூட்டிடு வந்து இங்க வச்சிட்டாரு”

டாக்டர் எழுந்து அவர் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றார். அந்த சலனம் அவரை எதும் செய்யவில்லை. அவர் கண்கள் விலங்கின் கண்களைபோல கருவிழி ஒற்றைக்கோடென சுற்றி பழுப்பேறிக்கிடந்தது போல டாக்டருக்கு தோன்றியது. அவரின் கையில் பஞ்சைவைத்து தடவி ஊசியை நுழைத்தார். அவர் திரும்பிப்பார்க்கவில்லை எந்தவொரு அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. அறையின் மூலையில் சிலம்பம் போன்ற கம்பொன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் அதை கவனித்து பின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“பாத்தீங்களா நீங்க போனது கூட அவருக்கு தெரியல” என்று ரூமுக்குள் எட்டிப்பார்த்தான் சிபு.

“பகல் அவருக்கு ஒரு ஆழ்ந்த காத்திருப்பு மாதிரி தெரியுது எதையோ எதிர்பார்த்து. என்னோட தொடுகை கூட அவருக்குள்ள போன மாதிரி தெரியல.  நா முன்னாடியே சொன்ன மாதிரி அவரோட உலகுத்துல நாம இல்ல சொல்லப்போன நம்மள அவர் அனுமதிக்கல” என்று அவர் முன்பிருந்த அதேயிடத்தில் அமர்ந்தார்.

“சரிதான்…ஆனா அப்பாவ ராத்திரல கூட அவரு அனுமதிச்சாரு. அப்போவும் சத்தம் வரும். மொத்தமா எட்டு நாள்தா இவரு வீட்டுக்கு வந்ததும் அப்பா இங்க இருந்தாரு. திடீர்னு இறந்துட்டாரு. நாங்க யாருமே அப்பாடியாகும்னு நினைக்கல.”

“அப்போ அவரு இங்க வந்தே பத்து நாள்தா ஆகுது”

“ஆமா” என்றான் சிபு

“இன்னிக்கு நைட் நல்லா தூங்குவாரு , ஒரு டோஸ் எக்ஸ்ட்ராவாதா கொடுத்திருக்கேன். என்ன மாதிரி சத்தம் வரும் ?”

“அது தெளிவா சொல்ல முடியாது , ஒரு உறுமல்…வலில வர முனங்கல்…பூன அழுகுற மாதிரி அப்புறம் யாரோ ஓடுற மாதிரி சம்டைம்ஸ் செவத்துல ஓடுற மாதிரிகூட கேக்கும். அப்பா இருக்குறவர நாங்க அத கண்டுக்கல அவராச்சு அந்த ஆளாச்சுன்னு விட்டுட்டோம். அவரு மெண்டலி இல்னு ஃபீல் பண்றீங்களா ? என்று கேட்டு அவர் பதில் சொல்லும் முன்பு “எங்களுக்கு அப்படிதான் தோணுது. இவர் யாரு எங்கருந்து அப்பா கூட்டிடு வந்தாங்க எதும் தெரியாது. ஹோம்ல சேக்கனும்ணா யாரு என்னனு கேக்குறாங்க. ஒண்ணும் புரியல நீங்க என்ன நினைக்குறீங்க. அப்பா இருக்கும் போதே கேட்டோம் ஆனா அவரு அதுக்கு சம்மதிக்கல.” பேசுவதை நிறுத்தி , டாக்டரை உற்றுப்பார்த்து தன் அந்தரங்கத்தைக்கூறுவதை தவிர்க்கமுடியாமல் சோபாவில் மாறி அமர்ந்தான் அது மீண்டும் கிரீச்சிட்டத்து. “அப்பாக்கு அவர எங்கயும் கொண்டு போய் சேக்கிறது புடிக்கல அத நேரடியாவே சொல்லிட்டாரு” அவன் அதை பேச விரும்பாதது போலிருந்தது. சொல்லவந்ததை சொல்லமல் அப்படியே விட்டுவிட்டு தலைக்கும்மேல் சுத்திக்கொண்டிருந்த ஃபேனைப்பார்த்துக்கொண்டிருந்தார்

“அப்பா சாகும்போது அவர் எப்படி பிஹேவ் பண்ணாரு” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.

“அவர் அந்த ரூம விட்டு வரவேயில்ல” என்றுகூறி பதற்றத்துடன் “அப்பா மேல உள்ள மரியாதைக்காவாச்சும் வெளிய வந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சி இந்த ஆள இவ்ளொ நாள் அப்பாதான் நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்காரு. அந்த நன்றிக்காவது வந்திருக்கலாம். காசு பெரிய விசயம் இல்ல ஆனா பொணத்த கூட பாக்கலன்னா எப்படி” என்றவன் சட்டென உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டான். பின் அவரைப்பார்த்து சிரித்தான். அது அவன் தன்னை பற்றி வெளிக்காட்டியதற்கு வருத்தப்படுவதைப்போலிருந்தது.

“உங்க பொண்ணு என்ன சொன்னங்க. கொஞ்சம் டீட்டெய்லா சொல்றீங்களா. அவரோட ட்ரீட்மெண்ட் ப்ரொசிஜர் அத வச்சுதா நான் தொடங்கனும். நா அவரோட இன்னிக்கு தங்குனா உங்களுக்கு எதும் பிரச்சன இல்லைல” என்றார் டாக்டர்

“இல்ல நீங்க தங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. எம்பொண்ணு சொன்னத வச்சு பாத்தா டேஞ்சர்னு கூட தோணுது”

“இல்ல நீங்க மறைக்குறீங்க. முதல் விசயம் உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர நீங்க பழைய எடத்துக்கு கொண்டு போய்ருக்கலாம். இல்லனா எதாவது பண்ணிருக்கலாம் அது முடியாதுன்னு சும்மா எண்ட சமாளிக்குறீங்க. ஆனா ஏன் அவர சரி பண்ணனும் எதுக்கு அவர பாத்துக்கணும்னு நீங்க தெளிவா சொல்லல. இரண்டாவது உங்க பொண்ணு உள்ள என்ன பாத்தாங்க அத நீங்க தெளிவா சொல்லியே ஆகணும். இல்லனா என்னால ட்ரீட்மெண்ட் கண்டினுயூ பண்ண முடியாது மன்னிச்சிருங்க” என்றார் டாக்டர்

சிபு கைகளை பிணைந்துகொண்டே இருந்தான். நிர்வாணாமாய் நிற்பதைப்போல நெளிந்தான். கால்களை மாற்றி இடது கால் மேல் வலது கால் போடு அமர்ந்தான். பின்பு கைகளை விரித்து பெருமூச்சு விட்டான்.

“அவரு எங்க குல தெய்வம் , அவர நாங்க பத்தரமா பாத்துகணும். நேரம் வரப்போ அவரே போய்ருவாரு. எல்லா வெள்ளியும்  ஒரு கெடா வெட்டி பலி கொடுக்க சொன்னாரு” என்று அவரின் முகத்தைப்பார்ர்காமல் தன் கால் நகங்களில் இருந்த அழுக்கையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

“இத நீங்க நம்புறீங்களா?” என்றார் டாக்டர்

“நம்பல ஆனா அது எங்கப்பாவோட ஆச , அத என்னால முழுக்க மறுக்க முடியல. ஆனா ஒரு வேள அப்பா இவர நல்லா பாத்துக்கணும்னு எங்ககிட்ட பொய் சொல்லிருக்காரோனு சந்தேகம் இருக்கு.”

“கண்டிப்பா அது பொய்தா. அவ்ளோ பெரிய அந்த்ரொபாலஜிஸ்ட். கடவுள் சாமினு நம்பி உங்கள்ட சொன்னாருன்னு என்னால யோசிக்க முடியல” என்றார் டாக்டர்

“நா நம்பல” என்று முனங்கினான் சிபு. அவன் கண்கள் சிவந்திருந்தன.

“உங்க பொண்ணு பாத்தது”

“அவ எதும் பாக்கல , ஞாபகம் இல்லனு சொல்லிட்டா” என்றான் சிபு

“நீங்க சொல்லாம என்னால எதையும் ஆர்ம்பிக்க முடியாது”

சிபு அமைதியாக இருந்தான். ஐயா இருந்த அறையை எட்டிப்பார்த்தான்.
ஐயா அந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் நினைவில் உள்ளது. கனவுகளை நாமே தொகுத்துக்கொண்டு அது உண்மையா இல்லை பொய்யா  என்று தெரியாமல் கூறுவது போன்று  யோசித்துக்கொண்டிருந்தான். அது அவனுக்கு அந்த நேரத்தில் அந்த சம்பவத்தின் மொத்த உண்மையையும் உணர்த்தியது  போலிருந்தது.

“எங்க அப்பா மேல தேவயில்லாத எந்த ஒரு கருத்தும் மீடியால வரது எனக்கு புடிக்கல அவரோட மேதைமைய வச்சிதா இந்த உலகம் அவர பாக்காணும். முட்டாள்தனத்த வச்சியில்ல. நா இந்த விசயத்த சேர் பண்றதே அவரோட ரெபுடேஷன் சொசைட்டில கொறைய கூடாதுன்னுதா. உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன்” என்றான் சிபு

“நீங்க என்ன நம்பாலாம்” என்று டாக்டர் அவன் நட்பார்ந்த முறையில் சிரித்தார்

“நீங்க அவள கேட்குறதுதா நல்லாருக்கும். புவனா….” என்றான் சிபு

அந்த பெரிய வீட்டில் அவனது சத்தம் எதிரொலித்தது. மாடிப்படியிலிருந்து புவனா மெதுவாக இறங்கிவந்து சிபுவின் மடியில் அமர்ந்தாள். வெளியாட்கள் இருக்கும் போது அவளின் சுதந்திரங்கள் அனைத்தும் கட்டிவைக்கப்படும். தன்னை எல்லா சுவரின் மூலைகளும் கண்காணிப்பதைப்போல உணர்வாள். டாக்டரையும் சிபுவையும் திரும்ப திரும்ப பார்தவள் சிபுவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு டாக்டரைப்பார்ப்பதை தவிர்ப்பதைபோல  நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அது எப்பொழுதுமே வெம்மையுடன் பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும்.

“அன்னைக்கீ ஐயா ரூம்ல…பாப்பா என்னம்மா பாத்துச்சி….மாமாட்ட அத சொல்றியா…..” என்று அவளின் நாடியைப்பிடுத்து தூக்கியவாறு அவளின் கண்களைப்பார்த்து டாக்டரைகாட்டி கேட்டான். ஒவ்வொருவாக்கியத்திற்கும் இடைவெளிவிட்டு இழுத்து பேசினான்.

கதை சொல்வதென்பது அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரும் என்பதை சிபு அறிவான். அவள் சொல்ல ஆரம்ப்பித்தாள் “நா போகும்போ கதவு பூட்டிருந்தா…கதவுல்ல ஒரு கண்ணிருக்கும்ல அதுக்குள்ள பாத்தா நல்ல கோல்ட் கலர் டைகர்ப்பா ரெண்டுபேர் படுத்தா எப்டியிருக்கும் அந்தமாரி நீளம் வால ஆட்டி ஆட்டி நடக்குது….” என்று கண்கள் விரிய கைகளை ஆட்டி பின் அவன் மடியில் இருந்து இறங்கி நடித்து காட்டினாள் “மொதல்ல எனக்கு வாலுதா தெரிஞ்சிச்சி….உள்ள இருட்டு கதவுகண்ணுல என் கண்ண வச்சு பாத்தேனா….மொதல்ல வாலு ரெண்டாவது நல்லா நீள வயிறு அதுல பிலாக் கலர்ல கோடு கோடா இருந்துச்சி….தாத்தா கையில கம்ப வச்சிட்டு நின்னாரா…புலி போய் அவரு காலுக்கிட்ட போச்சா….தாத்தா கம்ப ஆட்டுனாரா….புலி ஓடிச்சா….தாத்தா கம்ப கீழ போட்டாரா….அப்புறம் அது வந்து என்ன பாத்து சிரிச்சிச்சா…நானும் சிரிச்சனா….அதுக்கு வாய்லாம் செவப்பா இருந்துச்சிப்பா….அது கிட்ட வந்துச்சா….எனக்கு அதுக்க பல்ல பாத்தத்தும் பயந்து பயந்து வந்துச்சா….அப்றம் பாப்பா துங்கிட்டா….” என்று மறுபடியும் சிபுவின் மடியில் போய் அமர்ந்துகொண்டாள்

“சோ , உங்க பொண்ணு உள்ள பாத்தது புலி வேசம் போட்ட அந்த ஐயா.” என்றார் டாக்டர்

“ஆமா , ஆனா மனுசனால புலி வேசம்தா போட முடியும் புலியாக முடியாது” என்றான் சிபு

“வேசமில்லப்பா….புலி….” என்று அவள் கைகளை குவித்து நகங்களை காண்பித்தாள். கூடவே உறுமினாள். பறவை கிரீச்சிடுவது போலிருந்தது.

“ஆமா , அவரு புலியாவே ஆகிற்றாரு. அதும் நம்ம கண்ணு முன்னாலயே. நம்ம அந்த வித்தியாசத்த பாக்கலாம். இப்போ சாதரணமா இருக்காரு ஆனா அந்த வேசத்த அவரே போட்டு முடிக்குற நிலைக்கு வந்ததும். அந்த புலி அவருக்குள்ள முழுசா வந்திருது. நீங்க சொன்னமாரி அந்த நேரத்துலதா அவரு சுவத்துல கூட ஓடுறாரு” என்றார் டாக்டர்.

சிபு அமைதியாக இருந்தான்.

டாக்டர் தொடர்ந்தார் “இது சிப்ம்பிள் , நீங்க சொல்றபடி பார்த்தா இவரு ஒரு ஆதிவாசி. மலைலைருந்துதா உங்க அப்பாவே கூட்டிட்டு வந்துருக்காரு. அவரு ஒரு  பழங்குடி மதத்த கண்டிப்பா ஃபாலோ பண்ணிருக்கணும். அந்த மதத்தோட தெய்வம் அல்லது அந்த இனத்தோட குலக்குறி புலியா இருந்திருக்கும். சாதரணமாவே அவங்க அந்த குலக்குறியோட சந்ததியாதா தங்கள நினச்சுக்குவாங்க. சொல்லப்போனா அவங்க புலிக்கு பொறந்தவங்கனு கூட நம்புறாங்க. அத ஒரு பலி நாள்ல வெளிக் கொண்டுவந்து அந்த தெய்வம் இருக்கிறதா அவங்களோட ஆழ்மனசு காட்டும். இத கார்ல் யுங் ரொம்ப விரிவாவே பேசிருக்காரு. ஒரு மாசம் நீங்க கன்சல்டிங்க்கு அனுப்புனீங்கன்னா அவர பூரணமா குணப்படுத்திரலாம்.”

“அவர குணப்படுத்தனும் வைஃப் பயப்படுறாங்க. ஆனா அப்பா அத விரும்பல. ஈவன் நானும் அத விரும்பல.” என்று பேச நினைத்தவன் நிறுத்தினான். “நீங்க இங்க இன்னிக்கு இருங்க நம்ம நாளைக்கு பேசுவோம். அவரோட் ரூம் கதவு உள்ள லாக்ல இருக்காது. நீங்க ராத்திரி போய்க்கோங்க நாங்க யாரும் வர்ல” என்று அவருக்கான அறையைக்காட்டி மாடிக்கு செல்வதற்கு முன் ஐயாவின் அறையை மூடிவிட்டிருந்தான்.

“அப்பா….புலிய கொண்டு போய்ருவாங்களா” என்றாள் புவனா.

ஐயா இருந்த அறையிலிருந்து முனங்கல் சத்தம் கேட்கவும் டாக்டர் அந்த அறைக்கு சென்றார். அறையின் கதவு சிபு சொன்னது போல தாழிடப்படவில்லை. அறைக்குள் வனமிருகத்தின் வாடை அடித்தது . அறையின் இருளில் ஒலியை மட்டும் உணர்ந்தவராய் உள்ளே நுழைந்தார். விழிக்கு ஒளி பழக பொன்னுருகி ஓடும் உடலில் கருநாகங்களேன வரிகளுடன் ஓர் புலி அவரின் முன் உறுமியபடியே முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது. அதனைச்சுற்றி ஈக்கள் மொய்த்திருந்தன , அவற்றின் ரீங்காரம் அறையில் நிறைந்திருந்தது. உடம்பிலிருந்த வண்ணப்பூச்சு வழிந்து தரையில் மஞ்சள் தடங்களாயிருந்தன. கைகளாலேயே பூசப்பட்டிருந்ததால் உடம்பில் ஆங்காங்கே திட்டுகளாயிருந்தது.

அதன் கால்கள் நீட்டி மடங்க , கண்கள் சிவந்திருந்தன. தலையை தரையில் தாழ்த்தி முகர்ந்தது. வயிறு ஒட்டி எலும்புகள் தெரிந்தன. உணர்கொம்புகளை சிலுப்பி விட்டு நாவால் அதன் கருத்த மூக்கை நக்கியது. நடப்பது போலல்லாமல் ஒரு புறமிருந்து மறுபுறம் தாவிக்கொண்டிருந்தது. பின்னங்கால்களை அழுத்தி திடீரென்று டாக்டரை நோக்கி பாய்ந்தது. அவர் அருகில் இருந்த் கம்பை எடுக்கவும் அது தன் எல்லைக்குள் போய் நின்று கொண்டது ஆனால் அது அடங்கவில்லை உறுமிக்கொண்டேயிருந்தது. அவர் கம்பை முன்னும் பின்னும் ஆட்ட அது கம்பை முன்னங்காலால் தட்டிவிட முயன்றது.

“யார் நீ” என்றார் டாக்டர்

“கடுவா…” என்றது பின் “ஊணு ஊணு” என்று உறுமியது

கையில் வைத்திருந்த ஆட்டின் தொடைக்கறியை அதன் பக்கமாக எறிந்தார்.

“இன்ணும் இன்ணும்” என்றது கடுவா

“காட்டுக்கு கொண்டு போய்விடுகேன் வறியா” என்றார் டாக்டர்

“காட்டுக்கு போணும் காட்டுக்கு போணும்”

“போகலாம்”

“அது யாரு” என்று பத்மநாபனின் போட்டோவை சுட்டிக்காட்டி கேட்டான்.

அதன் முகம் மலர்ந்தது. முகத்தில் பதிந்திருந்த ரத்தத்தை நாவால் நக்கியவாறு தும்மியது.

“கடுவா கொண்டாடி”

இரண்டு :

அப்பாவை நெருங்கி அறிந்துகொள்ள அவரது ஆய்வு புத்தகங்களே போதுமானவை என்று அவரது இறப்புச்சடங்குகளின் பொழுது அவரது சக ஆய்வாளர்கள் கூடி பேசுவதை சிபு கேட்டிருந்தான். ஆனால் அவை அவனுக்கு தேவையில்லாத பழைய அழுக்கடைந்த தலையணைகளை நினைவுறுத்தும். அவனால் வாசிக்க முடிந்தது அவரது நாட்குறிப்புகள் மட்டுமே. இரண்டு நாட்களாக அதனை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவை அப்பாவை ஆமை முதுகின் ஓடு போன்று அவர் பிறப்பிலிருந்து தன் கூடவே வைத்தும் அவன் அறியாத அவரின் வாழ்க்கையை காட்டியது. அந்த குறிப்பு புத்தகத்தின் முன்அட்டையில் தெளிவாக தெரியாத ஒரு புலியின் திறந்த சிவந்த வாயின் உருவம் அனைத்து பற்களும் தெரிய அப்பா வரைந்திருந்தார். முன் கோரைப்பற்கள் மட்டும் தெளிவாக தெரிய அதில் ரத்தம் அடர் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. வாயின் உள்ளே ஒருவன் நிர்வாணமாக வாயின் ஒரு புறம் தலை கைகளுடனும் மறுபுறம் கால்களும் தொங்க கிடந்தான்.

1.

வெளியே மழைபெய்துகொண்டிக்கிறது. மென் சாரல் நான் தங்கியிருக்கும் அறையின் இடது நோக்கி சரிவாக பெய்து கொண்டிருக்கிறது. அவை நிலத்தை அடைவதேயில்லை. ஒதுங்கி நிற்கும் வரை சாரல் மழையின் வீரியம் தெரியாது. நனைய ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்குள் முழுவுடலும் நனைந்துவிடும்.

மழைக்காலம் என்பது ஒரு முடிவில்லா என்ணங்களைப்போன்றது. சில நேரங்களில் மென்மையான சாரல் , சில நேரங்களில் அடித்து செவிடாக்கும் இடியுடன் நீள் துளி மழை. ஆனால் அவை ஓய்வதேயில்லை. நான் காடுகளை தேர்ந்தெடுத்தது என் உலகியல் பணிக்காக அல்ல , என் ஆத்மார்த்த  உள்ளொளிப்பணிக்காக. மனிதன் எப்படி தன் பண்பாடுகளை உருவாக்கிக்கொண்டான் , தெய்வங்கள் அவனை எப்படி ஆட்கொண்டன , அதன் சடங்குகள் எப்படி உருவாகின ,  அவை எப்படி அலைந்து திரிந்த அவனை ஒரு சமூகமாக உருமாற்றி ஒரு தங்கி வாழும் மனிதனாக்கியது , இதில் தெய்வங்கள் பெரும் பங்காற்றுகின்றன இதுவே என் கேள்விகள். நான் அதன் இப்போதைய கடைசி துளி. என் குருதியில் ஓடும் அந்த பழந்தெய்வங்கள் எவை அதன் ஊற்றேடுக்கும் இருதயம் எது. அது இங்கெங்கோ இந்த காட்டில் இலைகழுக்கடியில் கண்காணா சுனையில். ஆழ நதியில். மறைந்துள்ளது. அதை தரிசித்து அதன் வழி நான் தொடங்க நினைக்கிறேன்.

பத்மநாபன்.

2.

நேற்றிரவு நாங்கள் தங்கியிருக்கும் அறைகளின் பின் புறம் உள்ள சரிவில் புலி ஒன்று சாவகாசமாக அமர்ந்து மழைக்கு காத்திருக்கும் கரிய வானத்தை நோக்கி கொட்டாவி விட்டக்கொண்டிருந்த பொழுது ,  நான் என் பின் முற்ற அறையில் புகைத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அதனை சரியாக பார்க்க முடியும் ஆனால் அதன் பார்வையில் நானில்லை. அதன் வாய் சிவந்திருந்தது. சில பற்கள் உடைந்திருந்தன. அதன் கண்களுக்கு கீழிருந்த சதை தொங்கிக்கொண்டிருந்தது. வயிறு எலும்புகள் தெரிய ஒட்டியிருந்தது. ஒரு வயதான் புலி. அது கர்ஜிக்கவும் எதிர் பக்கமிருந்த சோலை மலைகளில் இருந்து எதிரொலித்தது. அந்த ஒலிக்கு , கையிலிருந்த சிகெரெட் கீழேவிழ நான் பதறி கதவில் போய் விழுந்து விட்டேன். ஆச்சரியம் புலி என்னைபார்த்து சிரித்தது. புன்னகையல்ல நல்ல வாய்விட்ட சிரிப்பு. அதன் சிரிப்பு சத்தத்தை கூட நான் கேட்ட உணர்வு. அதற்குள் நான் இருமுறை பாசி ஈரத்தில் வழுக்கி விழுந்து அறைக்குள் சென்றிருந்தேன். அதன் நீண்ட நெடிய வால் செல்வதை நான் கடைசியாக பார்த்தேன். பின் அந்த பொன்னிறம் மட்டுமே நினைவிலிருந்தது.

3.

நான் பார்த்த புலியை எங்களுடன் வேலை செய்யும் ஓடையன் அவர்களின் தெய்வம் என்றான். அவனது மொழி தமிழ் போலில்லை சில இடங்களில் குழைந்து பின் இறுகியது. அது அனைவருக்கும் இவ்வளவு அருகாமையில் கண்களில் படுவதில்லை , அது சிரிப்பதென்பது தன் பூசாரியைக்கண்டு கொள்ளும் தருணம் என்றான் ஓடையன். என்னை பார்த்து ஏன் அது சிரிக்க வேண்டும் நான் தான் பூசாரியா ? சுத்த கிறுக்குத்தனம். நாய்கள் கூட சிலசமயம் மூச்சு வாங்கும் பொழுது நமக்கு சிரிப்பது போல தோன்றும். இதுவும் அதே போலத்தான். ஆனால் அந்த சிரிப்பு அவ்வளவு மனிதத்தன்மையுடன் இருந்ததே. ஆம் அது சிரித்தது. அவ்வளவு அரவணைப்புடன்.

4.

அந்த புலியை பின் காடுகளில் தேடி நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடையன் சொல்லியது போல அது நமக்கு அருள் கொடுக்கும் சமயம் மட்டுமே கண்முன் வரும் போல. நேற்று அதனை நான் என் கனவில் கண்டதாலேயே இதனை எழுதுகிறேன். திசைகள் தெரியாத அடர்ந்த காட்டில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை யாரும் துரத்துவது போல தெரியவில்லை. அதனை உணர்ந்திருந்தும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பசுந்தழைகளில் உள்ள ஈரமானது என் உடல் முழுவதையும் நனைத்திருந்தது. உதிர்ந்த இலைகள் நீரில் விழுந்து அதன் அழுகும் மணம் புத்துணர்வைக்கொடுத்தது. எதிரே போவதிற்கில்லாத பெரிய காங்கிரீட் சுவர் , அதன் பின் எங்கும் செல்வதற்கில்லை என்ற பொழுது புலி மெதுவாக உடல் குலுங்க அடிவைத்து , உணர்கொம்புகள் சிலிர்க்க என்முன் வந்து நின்று கனத்த மூச்சுக்காற்றுகளை விட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அது  என் மேல் பாய்ந்து வந்த தருணத்தில் எங்கிருந்தோ கிடைத்த ஒரு கம்பைக்கொண்டு நான் அதனை அடிக்க முயன்றேன். பின் அது தன் எல்லைக்குள் மீண்டும் போய் நின்று மூச்சு விட்டது. என்னை சுற்றி சுற்றி வந்து வாலை சுழற்றி பின் கால் மாத்தி மாத்தி வைத்து தலையை சுழற்றியது , கோரப்பல்லைக்காட்டி , நாக்கை மடித்து சீறியது. நான் கம்பைக்கொண்டு அதனை கட்டுப்படுத்தினேன். பின்பு அது என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து சிரித்தது. அதே மனிதச்சிரிப்பு. நான் கம்பை வைத்துவிட்டு அதனை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன்.

5.

இப்பொழுது அந்தக்கடுவா என் அறைக்கு தினமும் வருகிறது. என்னுடன் அமர்ந்து கதைகள் பேசுகின்றது. நான் அதன் நண்பன் என்று கூற முடியவில்லை ஆனால் அது பேசுவது அன்பின் வெளிபாடாகவே இருக்கின்றது. அதனுடன்  என்னுறவை விளக்க முடியவில்லை. ஒரு தந்தையின் இடத்தில் நான் அதனை சில நொடிகள் உணர்கிறேன். இந்த இடத்திற்கு ஒவ்வாததொரு அந்நியனின் இருப்பாக சில நொடி. அதன் கண்களில் அத்தனை கருணை.

இருவரும் நடனமாடுவோம். சில சமயம் இருவரும் பச்சைகறியை உண்போம். என் சக அலுவலக நண்பர்களை என் அறைக்குள் நான் அனுமதிப்பதில்லை. நான் கண்டடைந்த , என்னை கண்டடைந்த அந்தக்கடுவா இந்த நிலத்தில் இருக்க தகுதியற்றதாக அவர்கள் கூறி அதனை விரட்ட வேண்டும் எங்கின்றனர். யார் தகுதியற்றவர் கடுவா நீயே சொல்…ஆனால் கடுவா என்னருகில் இருக்கையில் என்னிடம் எப்பொழும் கம்பிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அதனை என் நிலையில் வைக்க எனக்கு அந்த கம்பு அவசியமாகிறது. நான் அதனை இங்கிருந்து விரட்ட அதை வைத்துக்கொள்ளவில்லையே. அது என் பாதுகாப்புக்கானது மட்டுமே என்பதை நீயே அறிவாய்…

6.

நான் இருக்கும் விடுதியறை மக்கள் நடமாட்டமில்லாத தெருவின் ஓரத்தில் இருக்கின்றது. இங்கு என் தெய்வத்தை நான் சாந்தி படுத்தி வைக்க முயல்கிறேன். காட்டில் அதற்கு இடமில்லையாம். அது மனிதர்கள் நடமாடகூடாத காடாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. மூடர்களே அது தெய்வங்களின் நிலமென நீங்கள் அறியவில்லையா. மனிதர்களில்லா இடத்தில் தெய்வங்கள் சஞ்சரிக்கும் என்பது தெரியாதா உங்களுக்கு. தெய்வத்திற்கில்லாத இடத்தில் பூசாரிக்கென்ன வேலை. இங்கு என் படையலை ஏற்றுக்கொள் கடுவா. நான் படைக்கிறேன் கையில் கம்புடன்.

மூன்று :

சோலைக்காடுகளில் அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் குடிகள் இருக்கும் இடத்திலிருந்து இருபது கல் தூரம்  இருக்கலாம் என்பது அவனது கணக்கு. அவன் குடிகள் இருந்த இடத்திலிருந்து சோலைகாடுகளை பார்க்கும்பொழுது மொத்த நிலப்பகுதியும் புற்களால் நிரம்பியது போலிருக்கும். ஆனால் அருகில் சென்று பார்க்கையில்தான் இடைவெளிகளை அவனால் உணரமுடிந்தது. ஆளுயரத்திற்கும் அவை வளர்ந்திருந்தன.

செந்நிற மேகங்கள் நீல மலைகளின் மீது புரண்டிருந்தன. சூரியன் தன் இருப்பை மறைக்கும் கணம் நெருங்கும் நேரம் அதிகமில்லை என்பதை அவன் உணர்ந்தான். கால்கள் தளர அவன் அமரலாம் என்று நினைத்த கணத்தில் காற்று பலமாக வீசியது. தூக்கி பள்ளத்தாக்கில் வீசிவிடும் போலிருந்தது காற்றின் வேகம். புற்கள் நிலகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தன. மழை நின்று இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. மொத்த மலையும் சரிந்து இன்னொன்றாக ஆகியிருந்தது. அவன் குடிகள் இருக்கும் இடத்தை அடைவதென்பது தொலைக்காத பொருளை தெடுவது போன்றது. எங்கும் கருப்பும் செம்பழுப்பும் கலந்த மணல் நிறைந்த  புதியதொரு உலகம் அவன் குடிகள் இருந்த இடத்தில் உருவாகியிருந்தது. மரங்கள் அதன் வேர்களை சூரியனுக்குக்காட்டி கைவிரித்து நின்றன.

கால்களை முன்னும் பின்னும் மடக்கி நீட்டி கைகளை தரையில் ஊன்றி தலையை சுழற்றி பற்களை கடித்தான். கண்கள் விரிந்து விழிக்கோளங்கள் சாடி விழுந்து விடும் போலிருந்தன. கருவிழிகள் இறுகி ஒற்றைகோடென ஆனது. இறுகிய கயிறை மீண்டும் முறுக்குவதைபோல நெளிந்தான். கண்களில் நீர் வழிய வானத்தைப்பார்த்து உடல் நடுங்க விம்மினான்.

அப்பெருங்காற்றுடன் அவன் ஓலம் கலந்தது.

ஒண்ணுமில்லாம போரேனே எங்கடுவா
காத்து நிக்கீரோ எங்கடுவா
பண்டு காலந்தொட்டு வந்தோமே எங்கடுவா
இண்ணு குடியெல்லா கரஞ்சி போச்சே எங்கடுவா
காட்டுக்கு நாங்கல்லோ எங்கடுவா
இண்ணு காடிருக்கு நாங்கெங்கோ எங்கடுவா
கம்பூணி தடுத்தல்லோ எங்கடுவா
அதொண்டு மதமெழகி சோறே குடிக்கான் கெளம்பியோ எங்கடுவா

இருட்டிய பின் அவன் சென்ற பாதையில் நான்கு காலடித்தடங்கள் கிடந்தன.

நான்கு :

“நேத்து நடந்தது எனக்கே ஆச்சரியமாதா இருந்துச்சி , நா பாத்தத என்னாலயே நம்ப முடியல” என்றார் டாக்டர். இருவரும் நேற்றமர்ந்த அதே சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“நீங்க இன்னும் நம்பல அத” என்றான் சிபு.

” ஸீ , இது வெறும் உளச்சிக்கல் அத நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க , அதுக்கும்மேல நீங்க சொல்லிதா அவர நாங்க சேத்திருக்கோம். நா முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு வாரம் போதும்”

“ஆமா நீங்க அவர குணப்படுத்தலாம். நீங்க பண்றது என்னனு தெரியுமா , ஒரு தெய்வத்த அழிக்குறது” அவன் குரல் அமைதியாக ஆனால் உடைந்துவிடும் போலிருந்தது.

“முட்டாள் மாதிரி பேசாதிங்க. இந்த காலகட்டத்துல இவர மாதிரி ஒரு மனுசன நீங்க வீட்ல வச்சு பாத்துக்க முடியாது”

“எங்களொட தெய்வமா எங்கப்பா கும்பிட்ட சாமிய நீங்க கொண்ணுட்டீங்க”

“கொஞ்சம் அறிவியல் பூர்வமா யோசிங்க , தெய்வம் நம்ம உருவாக்குனது மனுசனோட அப்செசன்தான் அதுக்கு காரணம். அவன் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டான்.”

“இருக்கலாம் ஆனா நா அத கும்பிடனும் , பத்திரமா பாதுகாக்கணும்னு நினைச்சேன்”

“ஒரு புலிய நீங்க வீட்டுல வைக்க முடியாதுல்ல”

“வைக்கலாம் அது தெய்வமாகும் போது. அதுக்கு நா தயாரா இருந்தேன்.”

“நீங்க சொல்றது , வெயில கையில அடைச்சு வைப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“ஆனா வெளிச்சம் விளக்குல கூட இருக்கும்”

“இன்னிக்கு மதியம் செஸ்ஸன் முடிஞ்சதும் அவரோட உண்மையான பேர சொல்லிட்டாரு”

“இல்ல வேண்டாம் அவர டிஷ்சார்ஜ் பண்ணிருங்க , நாங்க வீட்டுல வச்சே பாத்துக்குறோம்”

“உங்க இஷ்டம்தா , ஆனா திரும்பவும் என்ன ட்ரீட்மெண்ட்க்கு கூப்பிடாதீங்க”

“கூப்புடல , நீங்க போகலாம்” என்றான் சிபு.

டாக்டர் சென்ற பிறகு கடுவா இருந்த அறையின்  மூலையிலிருந்த கம்பை  புவனா எடுத்து சிபுவின் கையில் கொடுத்து “புலி எங்கப்பா…காணல” என்றாள். அவன் பதில் கூறும் முன் “நாந்தா புலி…..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்றாள்

தரையில் கைகளை ஊன்றி நாங்கு கால்களில் நடந்தாள். பறவை கிரீச்சிடும் குரலில் உறுமினாள். அவள் பொன்னிறத்தில் கருப்புப்பட்டைகளுடன் கூடிய கவுண் அணிந்திருந்தாள். சிபு ஐயாவை திரும்ப அழைக்க வேண்டுமா என்று யோசித்தான். அவன் கையில் கம்பிருந்தது.