உஷாதீபன்

அதிகாரம்

உஷாதீபன் 

     நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே? – கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே அதற்கு சாட்சி. அவனுக்கு விருப்பமில்லாததை செய்ய வைக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அதைச் சொல்லிப் புண்ணியமில்லை என்கிற பக்குவம்தான் அவளுக்கு இன்னும் வரவில்லை.

ஒண்ணு நினைச்சா பட்டுன்னு உடனே கேட்ருவியா? யோசிக்க மாட்டியா? – சரவணனின் இந்தக் கேள்வியை அவள் எத்தனையோ முறை எதிர்நோக்கியிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை. பிடிக்காத கேள்வியைக் கேட்பது எப்படி அவனுக்குப் பிடிக்காதோ அது போல் தோன்றியதைக் கேட்காமல் இருப்பது இவளுக்குப் பிடிக்காது. எத்தனை முறை திட்டினாலும் உறைக்காது.

போய்ட்டு வந்தா என்ன குறைஞ்சா போவீங்க, ஒரு உதவிதானே?

இதை அந்தம்மாள் போன பிறகு  கேட்கிறாள். அந்த மட்டும் பாராட்டத்தான் வேண்டும். அது ஒன்றுதான் சொல்லிச் சொல்லி அவளுக்கு வந்திருக்கும் நிதானம்.

எனக்குத் தெரியும்எதுக்குப் போகணும் எதுக்குப் போகக் கூடாதுன்னு நீ எனக்குச் சொல்லித் தர்றியா? -திரும்பி நின்று அவளைப் பார்த்துச் சொன்ன போதும் அவள் பார்வை சமையலறையை நோக்கித்தான் இருந்தது. ஒரு சின்ன அலட்சிய பாவம் எப்போதும் தொனிக்கும்.

அப்புறம் அவங்க வந்து சொல்லிட்டுப் போனதுக்கு என்னதான் அர்த்தம்? நீங்க வரணும், வருவீங்கங்கிற நம்பிக்கைலதானே வலிய வந்து புலம்பிட்டுப்  போறாங்க? ஒரு முடிவும் சொல்லாத உங்க மூஞ்சியப் பார்த்திட்டே போனா? பரிதாபமா இருக்குல்ல! வீட்டுக்கு வந்தவங்கள இப்டியா அலட்சியப்படுத்தறது?

இதென்னடா இது வம்பாப் போச்சு. மனுஷன் அமைதியா இருந்தாலும் அதுக்குப் பேரு அலட்சியமா? அதுக்கு  என்னை என்ன பண்ணச் சொல்ற? நானா என்ன விபரம்னு கேட்டேன்?  அவங்களா வந்தாங்க சொன்னாங்க அதுக்காகவே போயாகணுமா? வர்றத்துக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும் போய்ச் சொல்லலாமா வேண்டாமான்னு. மத்தவங்களுக்கும் வேறே வேலை இருக்காதா?  அதை ஒதுக்கிட்டுப் போக முடியுமா? பொம்பளைங்க பூராவும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க போல்ருக்கு! கொக்குக்கு ஒண்ணே மதின்னு….

என்ன பெரிய்ய்ய வேலை? பாங்குக்குப் போறதுதானே இன்னைக்கு இல்லாட்டி நாளைக்குப் போயிக்கிறதுகெட்டா போகுது? இது அர்ஜன்ட் இல்லையா?

நம்ம சொந்த வேலையை விட அடுத்தவங்க வேலை உனக்கு அர்ஜென்டாப் போச்சா?- விடாமல் கேட்கிறாள். என்னைச் சம்மதிக்க வைப்பதுதான் அவள் நோக்கமாய் இருக்கும் போலிருக்கிறது. தினமும் நின்று மணிக்கணக்காய் கதை பேசும் சிநேகிதம். அதுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது. நான் சொன்னா அவர் கேட்பாரு என்று காட்டிக் கொள்ள வேண்டும். நான்தான் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வச்சேன் என்று பெருமையடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நான் உடன்பட வேண்டும்.

குக்கரில் முதல் சத்தம் வந்தது. வழக்கத்துக்கும் மாறாக சத்தமும் நீளமும் அதிகமாய்த் தெரிந்தது.

என்னா இது? ரயில் இன்ஜின் கணக்கா காலங்கார்த்தால? தல வேதனையா இருக்கு

காலைல சமைக்காம வேறே எப்பச் சமைக்கிறதாம்? சாதம் வச்சிருக்கேன் மூணு சத்தம் வரணும். உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திக்குங்க. அவள் சொன்னதை நான் கேட்கப் போவதில்லை என்று உறுதி செய்து விட்டது புரிந்தது.

றைக்குள் வந்து அமர்ந்தேன். ஜன்னல் வழி எதிர் வீடு தெரிந்தது. அந்த மாடியை நோக்கினேன். எந்தச் சலனமும் இல்லை. அந்தாள் இருக்கிறானா, இல்லையா? அவன் மனைவி, குழந்தைகள் இருக்கிறதா? சத்தமேயில்லையே? இப்டியா குகைக்குள்ள இருக்கிற மாதிரி இருப்பானுங்க…?

குடியிருப்பு ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே! சரியான அமுக்குளி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். எமப்பய.

வசமா மாட்டினார்யா – வாய் என்னையறியாமல் முனகியது. பார்வை கீழ் வீட்டில் இருந்தது.

போலீஸ் ஸ்டேஷன் போகணுமாமுல்ல போலீஸ் ஸ்டேஷன்? அவங்க காரியத்துக்காக நான் ஏன் போய் அந்த நரகத்த மிதிக்கணும்? எனக்கென்ன தலவிதியா? வேணும்னா சொந்தக்காரங்க எவனையாச்சும் வரச்சொல்லி, கூட்டிட்டுப் போக வேண்டிதானே? இதுக்கெல்லாமா எதுத்த வீட்டு ஆளக் கூப்பிடுறது? எதோ கல்யாணம் காட்சின்னு கூப்டாலும் பரவால்ல, அதான் ஊர் பூராவும் உறவுக்காரவுங்க இருக்காங்கல்ல, வந்து போன மணியமாத்தான இருக்காங்க. அதுல ஒருத்தன் கூடவா வரமாட்டான்? தன் காரியத்தத் தான்தானே பார்த்துக்கணும். வம்பு தும்புன்னா மட்டும் அடுத்தவன் வேணுமா?

எதிர் வீ்ட்டு மாடிப்படியில் யாரோ இறங்கி வரும் சத்தம். மறைத்திருந்த ஜன்னல் திரை, ஃபேன் காற்றில் லேசு லேசாக விலகி விலகி அந்தக் காட்சியைப் பிரதிபலிக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருப்பது அங்கிருந்து நிச்சயம் தெரியாது. மாசிலாமணி சத்தம் கேட்டு வாசலுக்கு வருவது தெரிந்தது. அவர் வராண்டாவிற்கு வந்து நிற்க, அந்தாள் மாடிப்படியிலிருந்து இறங்கி வெளியேற சரியாயிருந்தது. இவரும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிர்ந்தால்தானே

பார்த்துக் கொண்டே நின்றார். அவன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.

ம்ம் துணிஞ்சவனுக்குத் துக்கமில்ல

வீட்டுக்குள்ளிருந்து அந்தம்மாள் வந்ததும் எதாச்சும் சொன்னாரா என்று கேட்க அவர் உதட்டைப் பிதுக்குவது தெரிந்தது. பேசுவது துல்லியமாய்க் கேட்டது. எங்கள் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட வீதியின் அகலம் வெறும் பதினைந்தடிதான்

நீ என்ன திரும்பத் திரும்ப இப்டிக் கேட்டுக்கிட்டிருக்கே அந்தாள்டெல்லாம் இனி பேசுறாப்ல இல்ல அவன எப்டி வெளியேத்தணும்ன்னு எனக்குத் தெரியும். பொறுத்திருந்து பாரு

என்னத்தத் தெரியும்? சொல்லிட்டேதான் இருக்கீங்க. எதுவும் செய்றாப்ல இல்ல ஒரு .வருஷம் முடிஞ்சி போச்சு அட்வான்சும் கழிச்சிட்டா  ஏழு  மாச வாடகை பாக்கி தர்றேன் தர்றேன்ங்கிறாரேயொழிய, எதுவும் வந்து சேர மாட்டேங்குது தலையத் தொங்கவிட்டமேனிக்குப் போகவும், வரவும்னு இருந்தா சரியாப் போச்சா? இத்தன மாசம் நழுவ விட்டதே தப்பாப் போச்சு. தும்ப விட்டிட்டு வாலப் பிடிச்ச கதையா இப்போ புலம்பி என்ன பண்ண? ஏன் போலீசுக்குப் போகத் தயங்குறீங்க ? போய் எழுதிக் கொடுத்தா, வந்து சாமான் செட்டத் தூக்கி வெளில வீசிட்டுப் போறான் நமக்கென்ன வந்தது? அந்தாளென்ன உறவா? உறவுகளையே நெருங்க விடாத காலம் இது இதுக்குப் போயி பயந்திட்டிருந்தீங்கன்னா?

யாருடி பயப்பட்டா? நீ பாட்டுக்கு எதையாச்சும் பேசாத அவுங்க காதுல விழப் போகுது

மாடிக்கெல்லாம் நாம பேசறது கேட்காது சும்மாச் சொல்லுங்க

எங்கூட வேல பார்த்தவங்க ரெண்டு பேர வரச் சொல்லியிருக்கேன். சேர்ந்து போயி புகார் கொடுக்கலாம்னு கொஞ்சம் பொறு.

ஆம்மா ரிடையர்ட் ஆகி பத்து வருஷம் ஆச்சு. கூப்டவுடனே வந்திடுவாங்களாக்கும் அதெல்லாம் சர்வீஸ்ல இருக்கிற போதுதான் இப்பல்லாம் யாரும் தல காட்ட மாட்டாங்க

என்ன சொல்றே நீ? அவுங்களுக்கு எத்தனையோ காரியம் செய்து கொடுத்திருக்கேன் நான். எனக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்க மாட்டாங்க, வர்றாங்களா இல்லையா பாரு.

அதெல்லாம் சங்கத்  தலைவர்ங்கிற முறைல அப்போ நீங்க செய்திருக்கலாம். அது சர்வீஸ்ல இருந்தபோத, இது சொந்த விஷயம். சிவனேன்னு இருக்காம, நாம ஏன் தலையக் கொடுத்துக்கிட்டுன்னுதான் நினைப்பாங்க எதுத்த வீட்டுக்காரரே வரத் தயங்குறாரு.

இந்த வார்த்தைகள் துல்லியமாய் என் காதில் விழுந்தன. புரிஞ்சிதான் போயிருக்கு.

எதுக்கு அதுக்குள்ளேயும் அவர்ட்டப் போயிச் சொன்னே? நாந்தான் ஆளுகள வரச் சொல்லியிருக்கனே ! அப்புறம் என்ன அவசரம் உனக்கு?

அப்டியே வந்தாலும் அடுத்தடுத்து ஒண்ணொண்ணுக்கும் அவுங்களக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியுமா? எதுத்தாப்ல இருக்கிறவருக்குத்தானே முழு விபரமும் தெரியும் போலீஸ் கேட்டா சொல்றதுக்கும் ஏதுவா இருக்குமுல்ல?

சரி சாரு என்ன சொன்னாரு? வர்றேன்னாரா?- ஆர்வத்தோடு கேட்டார் மாசிலாமணி.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னா சொன்னேன் உங்க காதுல விழலியா? தயங்குறாருன்னேன்ல?

சரி பார்ப்போம். – சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டார் மாசில். அந்தம்மாதான் நான் எங்கேனும் தென்படுகிறேனா என்று என் வீட்டைப் பார்வையால் துளைத்தது.. நான் நன்றாக அறைக்குள் என்னை உள்ளே அமுத்திக் கொண்டேன்.

மனசு கேட்கவில்லைதான். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கு ஏனோ ஒரு தயக்கம். வெறுமே ஒரு புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வருவதுதான். அங்கே போனால் ஆயிரம் கேள்வியைக் கேட்பானோ, பதில் சொல்ல வேண்டியிருக்குமோ, சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்வானோ என்றெல்லாம் நினைத்து மனம் சஞ்சலப்பட்டது. .நம்மால் முடிந்ததை வேறு என்ன செய்யலாம் என்றுதான் யோசனை போய்க் கொண்டிருந்தது எனக்கு. கூடப் போய் நிற்பதற்கே எனக்கு பயம்.

மாலை வெளியே கிளம்பி வழக்கம்போல் நடைப் பயிற்சியில் கலந்திருந்தேன். இரண்டு தெருக்களைக் கடந்து கடைசியில் பூங்காவுள்ள அந்த நீண்ட வீதிக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட பழைய வாட்ச்மேன் வீரணனைச் சட்டென்று நிறுத்தினேன். விஷயத்தைச் சொன்னேன்.

இதெல்லாம் நம்ம ஏரியாவுல சர்வ சாதாரணம் சார் அதனாலதான் யாருமே வீட்டை வாடகைக்கு விடத் தயங்குறாங்க வெறுமே பூட்டிக் கிடந்தாலும் கிடக்கட்டும்னு போட்டுர்றாங்க ஒண்ணுமில்ல சார் விஷயம் இவ்வளவுதான் நானும் இன்னொருத்தரும் வருவோம் விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய் சாமாஞ்செட்டெல்லாம் எடுத்து வெளியே வீசுவோம் ஆளுகள வெரட்டி தடாலடியா வெளியேத்தி, வீட்டைப் பூட்டிச் சாவியக் கொண்டாந்து ஒப்படைச்சிடுவோம் எல்லாம் அரை மணி ஒரு மணில முடிஞ்சி போயிரும் அதுக்கு நாங்க பொறுப்பு ஆனா ஒண்ணு போலீசு அது இதுன்னு அவுக போயிரக் கூடாது அதுக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கிறதுன்னா சொல்லுங்க இப்பவே வர்றோம் என்ன சொல்றீங்க? என்றான்.

கேட்கும்போதே பயங்கரமாய் இருக்கிறதே, சினிமாக் காட்சி போ. .இதற்கு அவர் எப்படி ஒத்துக் கொள்வார்? அதெல்லாம் நமக்குப் பொருந்தாதுங்க என்றுதான் கண்டிப்பாகச் சொல்வார். சரி யோசிச்சுச் சொல்றேன்  என்றேன் அவனிடம். எதிர்பார்த்த பதில்தான் போல, புன்னகையோடு நின்றான்.

எந்த வீட்டச் சொல்றீங்க நம்ம வூட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற மாடியா? அந்தாளு ஒரு பேமானிப் பயலாச்சே! ஏற்கனவே நாலஞ்சு எடத்துல இப்டி இருந்திட்டுத்தான இங்க வந்திருக்கான் எப்டி? சரியா விசாரிக்கலயா? அவனக் கௌப்புறது கஷ்டமாச்சேங்க! படு பேத்து மாத்துப் பண்றவனாச்சே? – ஆள் ரொம்பப் பிரபலம் என்று புரிந்தது.

மேலும் அவன் இப்படிச் சொன்னது எனக்குள் வயிற்றைக் கலக்கியது. ஐயோ பாவம் மாசிலாமணி இதிலிருந்து எப்படி மீளப் போகிறார்? உள்ளுக்குள் பதட்டமாய்க் கேள்வி எழுந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி

பையன் காது குத்து ஃபங்ஷன்போது ஒரு நாளைக்கு அந்த மாடியக் கொடுங்க விருந்தாளிங்கல்லாம் நிறைய வந்திட்டாங்க ஒரு நைட்டு படுத்திருந்திட்டுப் போயிடுவாங்கன்னு கேட்டேன். அந்தாளு காது கொடுத்தாரா?  ஏகப்பட்ட சாமான் கெடக்கு ஃபேன் சுத்தாது பாத்ரூம் கொழா சரியில்ல, சுத்தம் பண்ணனும்  அது இதுன்னு என்னெல்லாம் சாக்குச் சொன்னாரு? வேணும் நல்லா வேணும் – மனம் ஓலமிட்டது.

இரவு படுக்கையைப் போட்டபோதும் இதே சிந்தனை. தேவையில்லாமல் நான் ஏன் இதை அலட்டிக் கொள்ள வேண்டும். அது அவர் பாடு. நிம்மதியாய்த் தூங்க மாட்டாமல்? என்று எண்ணியவாறே புரண்டு கொண்டிருந்தேன்.

கண்ணயரும் முன் ஒரு யோசனை பளிச்சென்று தோன்றியது. அதே சமயம் அது சாத்தியமா என்றும் ஒரு எண்ணம் வந்தது.

காலையில் எழுந்ததும் முதலில் அந்த யோசனையை கிரிஜாவிடம் சொன்னேன். கேட்டவுடன் அதிர்ந்தாள். இதென்ன அநியாயமாயிருக்கு? வாடகை தராட்டாலும் காலி பண்ணுன்னு சொன்னாக் கூடப் பரவால்லகொஞ்சம் பணத்தையும் கொடுத்து அவன வெளியேத்தணும்ங்கிறது எப்படிச் சரியா இருக்க முடியும்? அவனுக்குப் பயந்து இதைச் செய்றாப்ல ஆயிடுமே? பத்தாதுன்னு தலைல ஏறி உட்கார்ந்தான்னா?

சரி, தவறெல்லாம் இந்தக் காலத்துல பார்க்கக் கூடாது ஆளக் கௌப்பணும்னா இதுதான் வழி. அவனாக் காலி பண்ணினாலும் இனிமே மீதமிருக்கிற மாசத்துக்கு அவன் வாடகை எதுவும் தரப் போறதில்ல அதத் தெரிஞ்சிக்கோ கையை விரிச்சிட்டுத்தான் போவான் ஆனா அது எப்போங்கிறது யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் விட்டு வைக்கவும் முடியாது. அதனால உடனடியா இது நடக்கணும்னா நான் சொன்னதுதான் வழி ஆறு மாச வாடகையை அல்லது ஒரு இருபதாயிரமோ இருபத்தஞ்சாயிரமோ அந்தாள் கைல திணிச்சி, அப்பா சாமி, போயிட்டு வான்னா ஒரு வேளை நகரலாம். அதை சரியான ஒரு ஆளை வச்சு உட்கார்ந்து  பேசி, முடிவு பண்ணிச் செய்ய வேண்டியது அவுங்க பொறுப்பு. யோசனையா இதைச் சொல்லலாம். இது ஒருவகையான பகடி இப்போ.

நல்லாயிருக்கே இதப் போயி நான் சொல்லணுமாக்கும் அவங்ககிட்ட? ஏன் நீங்க போய்ச் சொல்றது?

என்கிட்டதான் அவுங்க பேசவேயில்லயே எல்லாத்தையும் உன்கிட்டதானே புலம்பிட்டுப் போனாங்க அன்னைக்கு. என்னையும் மதிச்சுப்  பேசியிருந்தா நான் ஏதாச்சும் சொல்லியிருப்பேன்

நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்காக்கும்? நம்ப வீட்டுக்கு வந்ததே நம்பளை மதிச்சிதானே?  உங்கள மதிச்சதுனாலதான் நேரடியா உங்ககிட்டே சொல்லலை அத முதல்ல புரிஞ்சிக்குங்க இதுல என்னங்க இருக்கு ஒரு உதவின்னு கேட்டு வர்றாங்க இப்டியா எனக்கென்னன்னு இருக்கிறது? போய் உட்கார்ந்து பொறுப்பா ஏதாச்சும் நாலு வார்த்தை பேசிட்டு வாங்க அவங்களுக்கு ஒரு சமாதானமாகவாவது இருக்கும் ஒரு வேளை ஒத்துக்கிட்டாங்கன்னா?

நீ நினைக்கிற மாதிரியே நான் புரிஞ்சிக்கணும்னு விதியா? நேரடியா என் முகத்தைப் பார்த்துச் சொன்னாத்தான் எங்கிட்ட சொன்னதா, என்னை மதிச்சு சொன்னதா நான் எடுத்துக்க முடியும் உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் கற்பனை பண்ணிப்பே நான் அதுக்குத் தலையாட்டணுமா ? – விடாமல் கேட்டேன்..

ஆனாலும் எதுத்த வீட்டுல இருக்கிறவரோட இவ்வளவு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றது நல்லா இல்லேங்க அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன் நமக்கும் நாலு பேர் வேணும் நாளைக்கு நமக்கும் ஒரு ஆத்திரம் அவசரம்னு வரும் அப்போ தெரியும் அந்தக் கஷ்டம்

உனக்கு என்ன தெரியும் அவரப்பத்தி, சும்மா என்னத்தையாவது சொல்லாதே நாம இங்க வீடு கட்டுறபோதுதான் எதுத்தாப்ல அவுங்களும் கட்டிட்டிருந்தாங்க ஒரு நாளைக்கு மட்டும் கட்டடத்துக்கு தண்ணியடிக்கறதுக்கு  மோட்டார் போட்டு உதவுங்கன்னு கேட்டேன் அப்போ நமக்கு ஜெட்டு மோட்டார் மாட்டியாகலை. நூத்தம்பதடி ரப்பர் பைப் வச்சிருந்தான் ஊருக்கே இழுக்கலாம் அதை மாட்டேன்னுட்டாரு கரன்ட் சார்ஜ் தர்றேன்னு கூடச் சொல்லிப் பார்த்தேன் மறுத்திட்டாரு அதெல்லாம் மறந்திடுமா என்ன? கிரஹப் பிரவேசத்தும்போது நுழைஞ்சவ நீ அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் என்ன தெரியும் உனக்கு? தெனம் வந்து கெதியாக் கிடந்தவன் நானுல்ல?  பட்ட பாடெல்லாம் எனக்குத் தானே  நீபாட்டுக்குப் பேசுறியே  சும்மாக் கெட

அதெல்லாம் என்னைக்கோ நடந்ததுங்க இன்னுமா நினைச்சிட்டிருக்கிறது? அப்டி அப்டியே விடணும்ங்கவன்மமாவா வச்சிக்கிறது மனசுல?

தத்திப் பித்தி எப்டி வருதுன்னுதான் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்டீ அதுக்குள்ளயும் என் உசிர ஏன் நீ வாங்குற? என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் நிக்க முடியாது அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை கேவலம் அவ்வளவுதான்.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே கார் சத்தம் கேட்டது. யார் வந்திருக்கிறது என்கிற கேள்வியோடே சட்டையை மாட்டிக் கொண்டு அவசரமாய்  வாசலுக்குப் போய் நின்றேன். மாசிலாமணியும் அவர் மனைவியும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

விடுவிடுவென்று  வீதிக்கு இறங்கிய கிரிஜாவை என்னால் தடுக்க முடியவில்லை.

எங்கே? கேட்டபடியே நெருங்கிய அவளிடம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம்னு என்றார்கள் மாசிலாமணியின் மனைவி.

சாரும் வர்றாரா? வரச் சொல்லுங்க- என்றார் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்.

ஆமாம் ஒரு நிமிஷம் இருங்க என்ற கிரிஜா பின்பக்கம் திரும்பியவாறே என்னங்க கௌம்புங்க கூடப்போயிட்டு வாங்க என்றாள். அந்தக் குரலில் இருந்த அதிகாரம் என்னை நிலை குலையச் செய்தது. எதுக்கு இத்தனை சத்தமாய்ச் சொல்கிறாள்?

மறுக்க முடியாமல் செருப்பை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி, காரை நோக்கி நடந்தேன். கேட் அருகே வந்து விட்ட கிரிஜாவுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்- வந்து வச்சிக்கிறேன்.

 

 

 

 

 

 

என் மக்கள்

உஷாதீபன் 

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது. இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார். சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா. என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும். .சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்.  நியாயம் தலை தூக்கி நிற்கும்.

நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும். தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும். அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி. எம்புட்டு வேல கெடக்கு.  நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக. ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா. ? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும். நமக்கென்ன.  எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால். அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி. அமர்க்களமாகிப் போனது.

அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது. நமக்குன்னு அமையுதே. என்று ஒரே வேதனை அவருக்கு.

சாமீ. .என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே. கேன் வாணாமா? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி.

ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா. என்னா ரொம்ப நாளாக் காணலை. என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா. வாங்க. தோட்டத்துக் காயி. காலைல பறிச்சதாக்கும். வாங்கிட்டுப் போங்க. ..என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி. மன நிறைவு.

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன் சார் தண்ணி கொடுங்க என்று உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம். வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி. அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய். உப்பு. உப்போய். .என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன். தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா. இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார். என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி. வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி. இன்னும் எத்தனையெத்தனை பேர். யாரை நினைப்பது. யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல். எதனாலோ ஒரு பிடிப்பு. இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே.  பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர  நலம் விசாரிப்புகளும்

ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்.  யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க. ? எல்லாம் வெறும் வேஷம் மாயை.  அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே.  அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே.  ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங். கீங். கீங். .என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி. ..அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி. .மாற்றி மாற்றி. .கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம். .என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க. .போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே.  என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?.  நல்ல கதையப்பா. நல்ல கதை.  வெறுத்தே போனார் ஈஸ்வரன். ..

சொர்க்கமே என்றாலும். ..அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

ஆள விடு..சாமி.  என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா. .என்று பையன் சொல்ல. .என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு. ..அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும். என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன. என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார். .என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள் பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல் பார்ப்போம் அந்த நாடகத்தையும்

நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட. .அவ்வளவுதான். . நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

இதோ. .அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.     அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.  அவர்களின் அந்த வெள்ளை மனசு. அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை. .கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள். அவைதான் எத்தனை ரசனைக்குரியவை. எவ்வளவு மதிப்பிற்குரியவை.

அடடே. வாங்க சாமீ. .என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை. ..- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு. வந்தாச்சு. இங்கயே வந்தாச்சாக்கும். ”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.

கொண்டாங்க கேனை. முதல்ல நிரப்பிடுவோம். என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

மகளே. . என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே. நீங்கல்லாம் பிடிங்க .என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு  அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியது.

—————————-

 

புனலும் கனலும்

உஷாதீபன் 

 

முகத்தில் பெருத்த கலவரத்தோடு தன் ஆட்டோவில் ஏறி அமர்ந்த அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்து விட்டு வண்டியை சட்டென்று உயிர்ப்பித்தான் சரவணன். நல்ல வேளை அவனும் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்ப இருந்தான். அந்த ஆட்டோ ஸ்டாண்டில் மற்ற எல்லோரும் அன்று என்னவோ சற்று சீக்கிரமாகவே வீட்டிற்குப் போய் விட்டார்கள். அன்று சரியான முகூர்த்த நாள். காலையிலிருந்து எல்லோருக்குமே நல்ல சவாரி. ஆட்டோ ஸ்டாண்ட் முழுக்கக் காலியாக இருந்தது அன்றுதான்.

ஒருவர் பின் ஒருவராகத்தான் பேசி வைத்துக் கொண்டு வண்டியை எடுப்பார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை வேறு எங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. குறைந்தது பத்து வண்டிகள் நிற்கலாம் அங்கே. ஆனால் தற்போது நின்று கொண்டிருப்பது எட்டுதான். சரவணன்தான் அங்கே ஸ்டாண்டை உண்டாக்கினான். முதன் முதலில் குப்பை மேடாகக் கிடந்த  அந்த இடத்தில் மரம் ஒன்று கிளை விட்டுப் படர்ந்து நல்ல நிழல் தந்து கொண்டிருப்பதைக் கவனித்தவன் அவன்தான். ஆனால் அந்த மரம் வேலிக்கு அந்தப்புறம் இருந்து வந்தது. வேலிக்கு வெளியே குப்பை மேடு. வேலிக்கு உட்புறமாக இருந்த பெரிய கட்டிடம் வெகு நாளாக மூடியே கிடப்பதைக் கண்டு விசாரித்தான். அது ஒரு மில் என்றும் சரியான கவனிப்பு இன்றி உற்பத்தி குறைந்து மில்லையே மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே கூலி வேலைக்குப் போய் விட்டார்கள் என்றும் தொழிலாளர்களுக்கு எந்த விதப் பணப்பலன்களும் கொடுக்கப்படாமலேயே கழிந்து விட்டது என்றும் விபரங்கள் அறிந்தான். அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம் அங்கு அந்த மில் ஓடிக் கொண்டிருந்தால் அந்த இடம் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்து கொள்வான். மில் ஓடும் சத்தமும் வெளித் தார்ச்சாலையில் பேருந்துகள் போக வர இருக்கும் இரைச்சலும்தான் அந்த இடத்தில் ஸ்டாண்ட் போட ஏற்ற இடமாக அமைந்திருக்குமா என்று யோசிப்பான். ஆனாலும் பலநூறு தொழிலாளர்கள் வேலையில்லாமல் போனது அவன் மனதைப் பெரிதும் இடர்ப்படுத்தும்.

ஆரம்பத்தில் வண்டியை நிறுத்திய காலங்களில் அங்கு சில தொழிலாளர்கள் தினமும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்வது என்ன வேலைக்குப் போவது யார் யார் என்னென்ன வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள் எந்த வேலையானாலும் சரி போனவர்கள் எவரெவர் என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொள்வதும் சித்தாள் வேலை, மூட்டை தூக்கும் வேலை, நெல் மண்டி வேலை, இ.பி. தினக் கூலி வேலை என்று போனவர்கள் பற்றியெல்லாம் அவர்கள் சங்கடத்தோடு பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பதான தோற்றத்தை இவன் மனதில் ஏற்படுத்தும்.

நல்லவேளை. அப்பா செய்து கொண்டிருந்த வேலையான இந்த ஆட்டோ ஓட்டும் பணி தனக்கும் வந்து விட்டது. ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல ஏரியாவாகத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்பதாக அவன் சிந்தனை பல சமயங்களில் தள்ளாடுவது உண்டு. ஆனால் பழகின இந்த இடத்தை விட்டு எப்படிப் போவது? இங்கேயே காலூன்றி எத்தனையோ வாடிக்கையாளர்களைக் கையில் வைத்திருக்கையில் புதிய இடத்திற்குப் போவோம் என்ற சிந்தனை சரி வருமா? இப்படி யோசித்து யோசித்தே விட்டு விட்டான் சரவணன். ஏதோ பாதகமில்லாமல் அவன் பாடு கழிந்து கொண்டிருந்தது. அவன் தந்தை மட்டும் அந்த விபத்தில் இறக்காமல்  இருந்திருந்தால் குடும்பம் எவ்வளவு செழித்திருக்கும்?

“ஏன் இவ்வளவு மெதுவாப் போறீங்க? சீக்கிரம் போறீங்களா?”

தன் ஆட்டோவில் பயணி ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து போனதுமாதிரித் தான் இருந்து விட்டது சட்டென்று உறுத்த ‘சரிம்மா’ என்று விட்டு போக வேண்டிய இடத்தை ஒரு முறை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டான் சரவணன்.

சே. எவ்வளவு அவசரமாக ஏறி உட்கார்ந்தார்கள். அதை மறந்து விட்டு நான்பாட்டுக்கு அதற்குள் வேறு  ;சிந்தனைக்குள் புகுந்து விட்டேனே? மனதிற்குள் வெட்கப்பட்டவாறே போய்க் கொண்டிருந்தான.

அந்த ஆஸ்பத்திரி முன்னால் வண்டியை நிறுத்தியபோது இறங்கி கிடுகிடுவென்று ஓடியது அந்தப் பெண் தனக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இன்றி இந்த ஓட்டம் ஓடுகிறதே என்று வாயடைத்துப் போய் எதுவும் கேட்கவோ சத்தமிடவோ திறனின்றி அப்படியே நின்று கொண்டிருந்தான் சரவணன்.

( 2 )

சுற்றி நின்ற காவலர்களின் கட்டுப்பாட்டினை மீறி தம்பியின் மார்பின் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள் சாந்தா. அவளால் தன் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. எந்தத் தம்பிக்காகவும் தங்கைக்காகவும் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அவனுக்கே இந்தக் கேடு ஏற்படுமானால் அவளால் எப்படிப் பொறுக்க முடியும்?

தன் நினைவின்றிக் கிடந்தான் முத்து. இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்தவன் அவன். கடலில் முத்தெடுத்தாற்போல் கிடைத்த அவனை அத்தனை செல்லமாக வளர்த்தார்கள் அந்தக் குடும்பத்தில். இனி குழந்தை பாக்கியமே இல்லை என்று நினைத்திருந்த காலத்தில் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பிறந்ததனால் அவனுக்கு அத்தனை செல்லம் அந்த வீட்டில். அப்பாவே வெட்கப்பட்டுத்தான் போனார். அழித்து விடுவோம் என்று கூடக் கூறினார்.

“உங்களுக்கு ஆண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை. மனசுல இத்தனை ஆசையை வச்சுக்கிட்டு கடவுளாப் பார்த்துக் கொடுத்திருக்கிறப்போ அதப் போய் அழிக்க நினைப்பாங்களா யாராச்சும்?” – சாந்தாதான் சொன்னாள் அப்பாவிடம். தன் பெண்ணே தனக்கு இது பற்றிக் கூறுவதில் கூசிப்போனார் அவர். அம்மா கூட அழிக்கத்தான் பார்த்தாள். இவர்களுக்குத் தெரியாமல் என்னென்னவோ சாப்பிட்டு அது இல்லாமல் போகட்டும் என்று முனைந்தாள். பிறந்து இந்த உலகத்தில் வலம் வந்துதான் ஆகவேண்டும் என்று இருக்கையில் யார்தான் அதைத் தடுத்து விட முடியும்?

முத்து பிறந்து கைக்குழந்தையாய் இருக்கையில் அவனை வாழை இலையில்தான் போட்டு வைத்திருந்தார்கள். உடம்பு அத்தனைக்கும் அவ்வளவு கொப்புளங்கள். வேனல் தணலாய் வெடித்திருந்தன எல்லாம்.

“எல்லாம் நீ பண்ணின கூத்துதான். கருவை அழிக்கணும்னு எதை எதையோ சாப்பிடப் போக அதெல்லாம் சேர்ந்து இப்போ குழந்தையைப் பாதிச்சிருக்கு.பாரு செக்கச் செவேல்னு பிறந்திருக்கிற குழந்தைக்கு சிவப்பு சிவப்பா உடம்பு அத்தனையும் எப்படிக் கிடக்கு? இது உனக்கே நல்லாயிருக்கா? எங்களுக்கு ஒரு தம்பி இல்லையேன்னு நாங்களே வருத்தப் பட்டுக்கிட்டு இருந்தோம்.;. பத்து வருஷ இடைவெளில இந்தச் சொத்துக் கிடைச்சிருக்கு. இடை இடைல வயித்து வலி, வயித்து வலின்னு எவ்வளவு கஷ்டப் பட்டே? எவ்வளவு மருந்து சாப்பிட்டே? அத்தனைக்குப் பிறகும் இந்த பாக்கியம் கிடைச்சிருக்குன்னா நீயும் அப்பாவும் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும்? உன்னோட அதிர்ஷ்டம்னு சொல்றதை விட அப்பாவோட மனசுன்னுதான் சொல்லணும் இதை. அவர் நல்ல மனசுக்கு, விகல்பமில்லாத கல்மிஷமில்லாத அந்த மனுஷனுக்குக் கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் இது.”

அந்தச் செல்லத் தம்பி முத்துதான் கிடக்கிறான் இப்படி. வகுப்பில் முதல் இல்லாவிட்டாலும் முன்னோடி அவன். முதலை நோக்கியே அவனது பயணம் இருக்கும். பள்ளியில் நடக்கும் எல்லா விழாக்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறுவான். பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி, விளையாட்டுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடிப்புப் போட்டி, என்று எதுவும் வேண்டாம் என்று அவன் ஒதுக்கியதே இல்லை. இத்தனை திறமைகள் படைத்தவனாய் இருக்கிறானே, இவனின் ஆர்வத்திற்கு ஏற்ற வளர்ச்சியைக் கொடுக்கும் தந்தையாக நான் இருக்கிறேனா என்று பிரமித்திருக்கிறார் ராமலிங்கம்.

“நீங்க ஏன்ப்பா பயப்படுறீங்க.அவன் விருப்பப்படி எல்லாத்துலயும் அவன் முன்னேறுவதற்கு நான் துணையிருக்கேம்ப்பா.கவலைப்படாதீங்க.” சாந்தா எத்தனை முறை தன் தந்தையை சமாதானப்படுத்தியிருக்கிறாள்? அந்தத் தம்பி, தங்கக் கம்பி, இதோ இங்கே இப்படிக் கிடக்கிறான். எந்த வினையின் விளையாட்டு அவனை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறது? காலம் அவர்கள் இருவரையும் தன் கையில் ஒப்படைத்து விட்டு பெற்றோரை வாங்கிக் கொண்டது.

“அப்டி வாசல்ல இருங்கம்மா .” – குரலில் இருந்த கண்டிப்பு இவளை அங்கிருந்து எழ வைத்தது.

மனதில் கலவரத்தோடு தயங்கித் தயங்கி வெளியேறிய சாந்தா தம்பியின் முகத்தில் நினைவு வருவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லாதது கண்டு மனம் பதைத்தவாறே போய் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து கீழே நோக்கிய போது தான் வந்த ஆட்டோவும், அந்த டிரைவரும் அங்கேயே நின்று கொண்டிருப்பது கண்டு அவனுக்கு வாடகை கூடக் கொடுக்காமல் வந்து விட்டது அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்து அவள் மனதை சட்டென்று உறுத்த ஆரம்பித்தது. எழுந்து வேகமாகக் கீழ் நோக்கி நடந்தவள் தரை தளத்தை எட்டியபோது அந்த ஆட்டோ அந்த ஆஸ்பத்திரியின் காம்பவுண்டை விட்டு வெளியேறுவது கண்டு “ஏய்.ஆட்டோ.ஆட்டோ.” என்று குரலெடுக்க அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் நகரின் பேரிரைச்சலில் அது கலந்து மறைந்தது.

( 3 )

“ஏண்டா இவ்வளவு நேரம்?” – உள்ளே நுழையும்போதே அண்ணன் இப்படிக் கேட்பார் என்று சரவணன் எதிர்பார்த்ததுதான். ஆட்டோ நுழையும்போதே அவர் பார்வையைக் கவனித்து விட்டான் இவன். பக்க வழியாகக் கொல்லைப் புறம் சென்று நிறுத்துவதுதான் அவனின் வழக்கமான வழக்கம். அங்குதான் உயர்ந்த காம்பவுன்ட் சுவர். கிணற்றடிக்கு ஒட்டி பெரிய சிமின்ட் தளம். கொண்டு நிறுத்தி உள்ளே நிம்மதியாய்த் தூங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பு.  நண்பர்கள், வாசலில் நிறுத்தி வண்டி காணாமல் போன கதை எத்தனையோ உண்டு. இவனுக்கு அமைந்த அவனின் அண்ணன் வீடு அத்தனை பாதுகாப்பு. அண்ணனும் பாதுகாப்பு. அவர் இடமும் பாதுகாப்பு. அப்படியிருக்கையில் கேட்காமல் இருப்பாரா? அல்லது கேட்கக் கூடாது என்றுதான் சொல்ல முடியுமா? அவரின் பாதுகாப்பில் இருக்கும் இவன் அவரின் எல்லாச் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன்தான். அவரின் பாசத்தின் முன், அவரின் அரவணைப்பின் முன் இவனின் எந்தக் கேள்விகளும் பதிலற்றுத்தான் போய்விடும்.

“கடைசியா ஒரு சவாரிண்ணே.அதான் லேட்டாயிடுச்சி.”

“ராத்திரி பத்து மணிக்கு மேலே என்னடா சவாரி.ஊரே கெட்டுக் கிடக்கு.டயத்துக்கு வந்துடணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது?”- கதிர்வேலுவின் குரல் சற்று உயரத்தான் செய்தது.

“கிளம்பத்தாண்ணே இருந்தேன்.கடைசியா ஒரு சவாரி பரிதாபமா வந்து மாட்டிக்கிடுச்சி.பார்க்கவே பாவமா இருந்திச்சி..அதான்.”

“அதுக்கில்லடா.பக்கத்து ஏரியாவுல ஒரு சம்பவம் நடந்திருக்கு.தெரியும்ல.”

“என்னண்ணே.தெரியாதே.?”

“என்ன ஆட்டோக்காரன் நீ.? எட்டரை ஒன்பது போல ஒரு ஆளை வெட்டிப்புட்டாங்கன்னுல்ல சொல்றாங்க.அந்தப் பக்கமே எந்த வண்டியுமே போகலையாமே?”

“எங்கண்ணே.ராம் நகர் பகுதியிலயா?”

“ஆமடா.அங்கதான்.எத்தனை நெருக்கமான ஏரியா அது.ஓரமா மார்ச்சுவரி கூட இருக்கில்லடா.ஒரே இருட்டாக் கிடக்குமே.ஆஸ்பத்திரியோட பின் பக்கமா வருமே.அங்கதானாம்.”

அதை ஒட்டிய மெயின்ரோடில்தானே, தான் அந்தப் பெண்ணோடு பயணித்தது? எந்தப் பரபரப்புமே இல்லையே? ஒரு வேளை அம்மாதிரிச் சம்பவம் நடந்ததனால்தானோ அந்த இடம் அப்படி இருந்தது? வழக்கத்திற்கு மாறான அமைதி காணப்பட்டதை அப்போதுதான் மனம் உணர்ந்தது சரவணனுக்கு. நிலவின் வெளிச்சத்தில் ஒன்றுமே தெரியவில்லையே? மயானம் மாதிரித்தானே கிடந்தது?

“மனுஷன மனுஷன் ஏன்தான் இப்படிப் பகைச்சிக்கிட்டு அலையுறாங்களோ? சமாதானமாப் பேசித் தீர்த்துக்கிறதுங்கிற முறைக்கே எடமில்லை போலிருக்கு.பிடிக்கலையா.ஆளக் காலி பண்ணுன்னு கிளம்பினா அப்புறம் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் என்னதான் வித்தியாசம்? வித்தியாசமில்லாமத்தான் போச்சு இப்பல்லாம். அந்தப் பயத்துலதான் கேட்டேன்.எங்க அந்த ஏரியாவுல போயி மாட்டிக்கிட்டியோன்னு.போலீஸ் வந்து என்கொயரி, அது இதுன்னு கிளம்பினா முதல்ல ஆட்டோக்காரங்களைத்தானே விசாரிக்கிறாங்க.உன்ன மாதிரி அப்பாவிப் பசங்களைத்தானே கடுமையா பயமுறுத்தி விசாரிப்பாங்க.அம்மா கேட்டுக்கிட்டே இருந்திச்சு.போ.அம்மாவ முதல்ல பாரு.”

“சரவணா.வந்திட்டியா? நேரமாச்சே காணலியேன்னு பயந்திட்டேயிருந்தேன்.காலா காலத்துல வீட்டுக்கு வந்து சேரக் கூடாதா? மனசு ஏனோ பயந்திட்டேயிருக்குப்பா.எல்லாரும் நேரத்துக்குக் கூட்டுக்குள்ள வந்து அடைஞ்சிட்டீங்கன்னா நா நிம்மதியாத் தூங்குவேன்.போ.போய்ச் சாப்பிடு.உங்க அண்ணியப் பாரு உனக்காக சோத்தச் சுட வச்சிட்டுக் காத்திட்டிருக்கா.”

அண்ணனின் குடும்ப அரவணைப்பில் அப்படியே நெக்குருகித்தான் கிடக்கிறான் சரவணன். வயிறாற உண்டுவிட்டு வந்து படுக்கையில் அவன் சாய்ந்தபோது அன்று கடைசியான தன் சவாரியைப் பற்றிய நினைவு வந்தது அவனுக்கு. அவ்வளவு தூரம் கொண்டு விட்ட நான் வாடகைக்காகக் காத்திருந்தேன் என்றுதான் அவள் நினைத்திருப்பாளோ? அவள் இருந்த கலவரத்தில் உடனே திரும்பினால் மீண்டும் அவளின் இடத்திற்கே கொண்டு விட்டு விடலாம் என்றுதானே காத்திருந்தது. பொழுது கடந்து விட்ட நேரத்தில் அவள் மீண்டும் எப்படித் தன் வீடு போய்ச் சேர்ந்திருப்பாள்? அத்தனை நேரம் காத்திருந்தோமே ஒரு முறை மேலே சென்று என்ன ஏது என்று பார்த்திருக்கலாம் அல்லவா? அது ஏன் தனக்குத் தோன்றாமல் போனது?

சிந்தித்தவாறே படுத்திருந்த சரவணனின் நாசியில் மண் வாசனை வருட ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மெலிதான தூரல் கிளம்பியிருப்பது தெரிந்தது. இந்த மழைக்காகத்தான் அங்கிருந்து புறப்பட்டது. சமீப நாட்களாக இரவு ஒன்பதானால் சொல்லி வைத்தாற்போல் மழை வந்து விடுகிறது. இன்று சற்றுத் தாமதம். அப்போதிருந்த இடியும் மின்னலும் தன்னைத் துரத்தி விட்டன. வீட்டிற்கு நேரத்தோடு வந்து அடைய வேண்டும் என்கிற பழக்கம். ஆனால் அந்தப் பெண் தனியளாக ஓடிக் கொண்டிருந்தாளே அந்த நேரத்தில்? வீடு; சேர்ந்திருப்பாளா? அல்லது அங்கேயே தங்கியிருப்பாளா?  இருந்து அவளை மீண்டும் அவள் வீட்டில் கொண்டு சேர்த்திருக்கலாமோ? –மனச் சங்கடத்தோடேயே உறங்கிப் போனான் சரவணன்.

( 4 )

“இந்தப் பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது யாரு?”

“நாங்கதான் சார்.” – வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த நால்வர் ஒருமித்து இப்படிக் குரல் கொடுத்த போது ஆச்சரியத்தோடே திரும்பிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.

“நீங்களெல்லாம் யாரு?” – அவரின் கேள்வி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சொல்வதற்கு நாங்களும் தயார் என்பதுபோல் அந்த நால்வரின் பார்வையும் இருந்தது.

“நாங்க அந்த ஏரியாவுல கடைகள் வச்சிருக்கோம் சார்.இவர் பெட்டிக்கடை இவர் டீக்கடை. இவர் ஒரு ஸ்டேஷனரி ஷாப் வச்சிருக்காரு.இவர் ஒரு புரோட்டாக்கடை நடத்துறாரு.”

“ஏட்டையா.இப்டி வாங்க.இவுங்க சொல்றத அப்டியே குறிச்சிக்குங்க.” – ஒரு வயதான தொந்தியும் தொப்பையுமாக சீருடையில் இருந்த ஒருவர் அவர்கள் அருகில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து எழுதுவதற்குத் தயாரானார்.

“நீங்கள்லாம் ஏன் கூடுறீங்க.? இங்க என்ன வேடிக்கையா காண்பிக்கிறாங்க.போங்க.போங்க.” சுற்றி நின்று  கவனித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டினார்  இன்ஸ்பெக்டர்.  இப்போது அங்கே அவரும் அந்த ஏட்டையா என்று சொல்லப்பட்டவரும் அந்த நான்கு கடைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். தனது குரலைச் சற்றுத் தணித்துக் கொண்டு ஆரம்பித்தார் அவர்.

“இந்தப் பையனை யார் அடிச்சது?  ஏதாச்சும் விபரம் தெரியுமா?”

“எங்களுக்கு எதுவும் தெரியாது சார்.நாங்கதான் கடைய அடைச்சிட்டமே? இந்தப் பய ரத்தத்தோட கிடந்தான். மனசு கேட்கல.தூக்கிட்டு ஓடியாந்துட்டோம்.இவனையும் வெட்டிப் போடாம விட்டாங்ஞளேங்கிறதுதான் ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாடி அதே எடத்துல நடந்த இன்னொரு கொலைய அங்க பூ வித்திக்கிட்டிருந்த அம்மா பார்த்திடுச்சின்னு ரெண்டு நா கழிச்சி அந்தப் பொம்பளையையும் போட்டுட்டாங்ஞல்ல.?;.”

“ஒரு மணி கழிச்சி இவனைத் தூக்கியாந்ததா சொல்றீங்க.அப்போ அந்த பாடி கிடந்திச்சா அங்கே?”

“எந்த பாடி சார் சொல்றீங்க?”

“அதான்யா.கொலை செய்யப்பட்ட பாடியத்தான் கேட்கிறேன். வேறெதக் கேப்பாக.”

“அத நாங்க கவனிக்கலையே சார்.கண்ணுக்குப் பட்டமாதிரித் தெரிலயே.அது ஒரு இருட்டுப் பகுதி சார்.நாலு ரோடு; சந்திக்கிற முக்கு சார்.அங்க எத்தன லைட்டை கார்ப்பரேஷன்காரன் போட்டாலும் உடைச்சிப்புடுவாங்க..இந்த மாதிரிக் காரியத்துக்குன்னே அந்த எடத்தை ஒதுக்கிப்புட்டாங்ஞ.கஞ்சா வியாபாரமெல்லாம் கன ஜோரா நடக்கும் சார் அங்க.ஒங்க கிட்டப் போய்ச் சொல்றோம் பாருங்க.ஒங்களுக்குத் தெரியாததா? ஆனா ஒண்ணு சார்.நிலா வெளிச்சம் இருந்திச்சு சார்.அதத்தான் மரங்கள்லாம் மறைச்சுப்புடுதே! அப்புறம் என்னா தெரியும்? ஆளுக யார் போறா வர்றான்னு கூடத் தெரியாது சார்.”

ஜார்ஜ் பலத்த யோசனையில் ஆழ்ந்தார். கொலை செய்யப்பட்டவர் ஒரு பேராசிரியர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று சிவனே என்று இருப்பவர். அந்த அப்பாவியைப் போய் காலி பண்ணியிருக்கிறார்கள். ஏன்? யார் சொல்லி இது நடந்தது? எதற்காக அவரைக் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடிய அளவுக்கு அவர் செய்த தப்பு  என்ன? யாருடைய முன்னேற்றத்தைத் தடுத்தார் அவர்? யாருக்கு யாருடைய செயல்களுக்குத் தடையாக இருந்தார்?; உறவுகளிலேயே ஏதேனும் பொறாமையால் இது நடந்திருக்குமா? சொத்துத் தகராறா? பெண் பிரச்னையா? இறந்த பேராசிரியரின் காரெக்டர் எப்படி? எந்த விஷயத்தில் அவரின் முனைப்பு இருந்தது. எந்த முனைப்பு எதிராளியின் கவனத்தை சந்தோஷத்தைக் கெடுத்தது? அவரின் எந்த முன்னேற்றம் எதிராளிக்குப் பொறாமையாய் அமைந்தது? – கேள்வி மேல் கேள்வி விழுந்து கொண்டேயிருந்தது அவருக்கு.

“ஏட்டையா.அவுங்க சொன்னதையெல்லாம் எழுதிட்டீங்கல்ல.எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிக்குங்க.நான் விசாரணைக்குக் கூப்பிடறபோது வரணும்.யாரும் எங்கயும் போயிடக் கூடாது.”

“எங்க பொழப்பே இங்கதானங்க சார்.நாங்க எங்க வெளியூருக்குப் போகப் போறோம்.? இம்புட்டுத் தைரியமா அவனக் கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.அப்புறம் பயப்படுவோமா சார்.அந்த ஏரியாவுல ஒரு ஸ்பெஷல் பீட் போடணும் சார்.பரபரப்பான ஏரியாவா இருக்குது பிரச்னையான ஏரியாவாவும் இருக்கு.இது மூணாவது கொலை சார் அந்த எடத்துல.பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணு நடந்திச்சி சார்.அப்போ ஒரு பொம்பளையவே வெட்டிப்புட்டாங்ஞ சார்.நியாயம் கேட்ட ஒருத்திய நீ எப்டி அதக் கேட்கப் போச்சின்னு போட்டுத் தள்ளிட்டாங்ஞ சார்.அந்தக் குடும்பம் அதுக்கப்புறம் ஒண்ணுமில்லாமப் போச்சு சார்.ஆனா அவுங்ஞ மட்டும் இன்னும் நல்லாயிருந்துக்கிட்டிருக்காங்க சார்.அதே கும்பல்தான் சார் இப்பவும் கைவரிசையைக் காண்பிச்சிருக்கணும்.”

“ரொம்பப் பேச வேணாம்.புரியுதா.அப்புறம் உங்களயும் பிடிச்சி உள்ள போட வேண்டியிருக்கும்.பேசாமப் போயிடுங்க.கூப்பிட்டு விட்டா ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போங்க.”

வாயைப் பொத்திக் கொண்டு இத்தோடு விட்டார்களே என்று கிளம்பியது அந்த நால்வர் கோஷ்டி. அதில் ஒருவன் சொன்னான்.

“பார்த்தீங்களாண்ணே.பரிதாபப்பட்டு உதவினா என்ன பேச்சு வருது பார்த்தீங்களா? மனசுல தைரியத்தோட ஒரு உயிரக் காப்பாத்துவோம்னு கடைமையா செஞ்சதுக்கு என்ன பலன் பார்த்தீங்களா? சொன்னாச் சொல்லிட்டுப் போகட்டும்.கூப்பிட்டு விட்டாக் கூடப் போயிட்டு வருவோம்.ஒரு பையனோட உசிரக் காப்பாத்தியிருக்கோமே.அத விட என்ன வேணும்? இவுங்க எப்பவும் இப்டித்தான்.இதுனாலதான் போலீஸ்னாலே ஒதுங்குறாங்க எல்லாரும். இழுக்குற இழுப்புக்கு அன்றாடப் பொழப்புப் பார்க்கிறவன் பாடு நாறிப் போகும்னு நமக்கெதுக்குடா வம்புன்னு கண்டுக்காமப் போறானுங்க.ஆனா சமுதாயத்துல மக்கள் விழிப்புன்னு ஒண்ணு இருக்கு.அது  வந்துட்டா அப்புறம் இந்தக் கூலிப்படையெல்லாம் சின்னா பின்னமாப் போகும்.சட்டம் ஒழுங்கு அப்போ தானாத் தலை நிமிரும்.காவல் துறை உங்கள் நண்பன்னு விளம்பரப் படுத்துறாங்களே.அது நூறு சதவிகிதம் உண்மையாகணும்.மக்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவுங்க பொறுப்பு..அப்போ மக்கள் தைரியம் அடைவாங்க.தவறு செய்றவங்க பயப்படவும் செய்வாங்க.”

பேசிக் கொண்டே அவர்கள் போய்க் கொண்டிருந்தனர். அது நேரம் வரை அவர்கள் பேசுவதை அந்தக் காவல்துறை ஆய்வாளருடன் அவர்கள் பேசியதை சற்றுத் தள்ளியிருந்தாலும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த சாந்தா தன் தம்பி அங்கு வந்ததற்கான காரணத்தை முழுமையாக அறிந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்துக் கிடந்தாள். .டியூஷன் முடித்து விட்டு அவ்வழியே வர வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். சுருக்கு வழி சுருக்கு வழி என்பான் முத்து. இளங்கன்று பயமறியாது.நல்ல வேளை புத்தகம் என்று எதுவுமில்லை. ஒரே ஒரு நோட்டு. அதுவும் எழுதித் திருத்தக் கொடுத்து விட்டு வந்து விடுவான்.  . காலையில்தான் அவனைப் பார்க்க முடியும் என்று காவல் கண்டிஷன் போட்ட போது வேறு வழியில்லாமல் அவள் கிளம்ப வேண்டியதாயிற்று. இந்நேரம் அம்மா அப்பா இருந்திருந்தால் தன்னால் சமாளித்திருக்க முடியுமா? என்று அவள் சிந்தித்த போது மனசு பெரிதும் தடுமாறியது அவளுக்கு. இப்பொழுது வீட்டிற்குச் சென்று தங்கை கௌசல்யாவை மட்டும் சமாளித்தால் போதும். அவளைக் கூட இவ்வளவு நேரம் தனியாக விட்டு வந்திருப்பது என்பது அபாயம்தான். ஆனால் கூடப் படிக்கும் சிநேகிதிகள் கூட இருந்து கொள்வாள். இந்த நினைப்பினூடே வீட்டை அடைந்தாள் சாந்தா.

( 5 )

மாரிக்கு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் உறுத்தத்தான் செய்கிறது. வெறும் உறுத்தல் என்றாலும் பரவாயில்லை. துடைத்து எறிந்து விட்டுப் போய்விடலாம். அப்படி எத்தனையோ முன்னர் செய்ததுதான்.”சேய்ய்.இதென்னடா எழவு.” என்று ஒரு உறாஃப் வாங்கி ஊற்றினால் ஆச்சு.அடுத்த சில கணங்களில் எல்லாமும் மறந்து மண்ணடித்துப் போகும். அப்படிப் போய்க் கொண்டிருந்ததுதான் இது நாள்வரை. ஆனால் இப்போதென்ன புதுசாய்? இது புதுசாஅல்லது ஏற்கனவே நடத்திய பாதகங்களின் படிமங்களா? அப்பொழுதே அவையெல்லாம் தன்னை இடறிக் கொண்டுதான் இருந்தனவா? கொஞ்சங்கொஞ்சமாய்ப் படிந்து வந்த கறைகள் இப்பொழுதுதான் கண்ணுக்குத் தெரிகின்றனவா? இனிமேல் கால் வைத்தாயானால் வழுக்கி உள்ளே இழுத்துக் குழிக்குள் தள்ளி விடுவேனென்று எச்சரிக்கிறதாக்கும்? அப்படியானால் இத்தனையையும் நிகழ்த்தித்தான் இது உணரப்பட வேண்டுமா? என்னவோ செய்கிறதே? எதுவோ தடுக்கிறதே? என்று தோன்றிய காலங்களிலேயே இது ஏன் உணரப்படாமல் போனது? எடுத்துச் சொல்லித் தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போனதா? அப்படித் தடுத்திருந்தால் தடம் புரண்டிருக்காதா? தடம் புரண்டதுதானே என்று அழுத்தமாக இப்பொழுதுதானே தோன்றுகிறது? முன்னரே இது இத்தனை ஆழமாய் இறங்கியிருந்தால் தடைப்பட்டிருக்குமா?

“உனக்கு மாரின்னு ஏன் ஆசையாப் பேர் வச்சேன் தெரியுமா? மழயா வந்து என் வயிறக் குளிர வச்சவண்டா நீ! கல்யாணங்கட்டி எட்டு வருஷங்கழிச்சு உங்கப்பன் கூத்தியாளத் தேடிப் போக இருந்தப்போ என் வயித்துல ஜனிச்சு அதத்தடுத்தவண்டா நீ! முற தவறிப் போகவிருந்த அப்பனுக்குத் தட போட்ட தகப்பன் சாமிடா நீ.இன்னைக்கு இப்படி ஆயிட்டியே!உன்னை இதுக்காகவா என் வயித்துல சுமந்தேன்? கொதிச்சுப் போயிக் கெடந்த என் வயித்துலயும் ரணமாக் கெடந்த என் நெஞ்சுலயும் பால வார்த்த நீயா இன்னைக்கு இந்தக் காரியஞ் செய்யிறே? இப்டி ஒரு பொழப்பாடா? இந்த மாதிரி ஒரு பொழப்புப் பொழக்கிறதுக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாமுடா.தூத்தேறி.எம்மூஞ்சிலயே முழிக்காதடா.இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்காதே.சொல்லிப்புட்டேன்.”

“வாசப்படி மிதிக்காதவா? உறாஉறாஉறா.எங்கயிருக்கு வாசப்படி? என்னவோ கட்டி வச்சிருக்கிற மாதிரிச் சொல்ற? இந்த ஓட்டக் குடிசைக்கு வாசப்படி ஒரு கேடாக்கும்? கூரையப் பிச்சிக்கிட்டுக் குதிக்க வேண்டிதான்.நீ சொல்றபடியே கேக்குறேன்.ஆத்தா.உன் வாக்கத் தட்டவே மாட்டேன்.சர்தானா? இனிமே ராத்திரி வீட்டுக்கு வாரேல மேல் வழியாவே வாரேன்.பொளந்துக்கிட்டுத்தான் குதிப்பேன்.தள்ளிப் படுத்துக்க ஆம்மா.அப்புறம் உம்மேல விழுந்தேன்னு சொல்லாத.உன் வார்த்தயத் தட்டுனவங்கிற கெட்ட பேர் எனக்கு வாணாம்.”

என்ன எகத்தாளமான பேச்சு? அத்தனையையும் கேட்டுக் கொண்டு அழுது தீர்த்ததே ஆத்தா? அந்த அழுகை அப்போதெல்லாம் ஏன் தன் மனசைக் கரைக்கவில்லை?

“டே மாரி.சோமாரி.நீதாண்டா இந்தத் தடவை சரியான ஆளு.நா தீர்மானிச்;சிட்டேன்.எனக்கு நம்பிக்கையானவனும் நீதாண்டா.உன்னத்தான் என் மனசுல ஒக்கார வச்சிருக்கேன்.வேற எவனுக்கும் எடமில்ல.நீதாண்டா இந்தத் தடவ டார்கெட்ட முடிக்கணும்.ஆந்திராவுலேர்ந்து நாலு பேரு துணைக்கு.முகந்தெரியாத ஆளுக.கூட வச்சிக்க.புரிஞ்சிதா? தைரியமாப் போ.முடிச்சிரு.”

“எதுக்குண்ணே நா மட்டும்? அவிங்ஞள வச்சே முடிச்சிற வேண்டிதான? “

“அவிஞ்ஞள வச்சு முடிக்கணும்னா இன்னும் நாலு மாசம் போவணும்டா.நம்ம பொழப்பு என்னாவுறது? எடமெல்லாம் பழகணும்.ஆளுக பழகணும்.பேச்சு பழகணும்.எவ்வளவோ இருக்கு.எவனுக்குமே சந்தேகம் வராம இருக்கணும்.அது ரொம்ப முக்கியம்.அதுவரைக்கும் அவிங்ஞள வச்சி சோறு போடணும்.எவன்ட்ட இருக்கு ஐவேசு.அதெல்லாம் நடவாது.வந்தாங்ஞளா முடிச்சாங்ஞளா.போயிட்டேயிருக்கணும்.எங்க போனோம்.எங்க வந்தோம்னே எவனுக்கும் தெரியாது.தெரியக் கூடாது.ஒடனே பேக் பண்ணி அனுப்பிடணும்.ஆனா ஒண்ணு நீ மொட்டை அடிச்சிக்கி-டணும்.இந்த மொறை.முகத்துல துளி மசிரு இருக்கக்கூடாது.எல்லாத்தையும் மழிச்சிரு.எந்த மாதிரி மூஞ்சிய நாம பார்த்தோம்னு எவனுக்கு மண்டைல ஏறக் கூடாது.ஆளவந்தான்ல கமலப் பார்த்திருக்கேல்ல.அந்த மாதிரி கெட் அப்ப மாத்திக்கோ.உடம்பு மட்டுந்தான் ஒனக்குப் பொருந்தாது.வேசம் பச்சுன்னு ஒக்காந்துக்கும்.எவன்டா இருக்கான் ஒன்னை அடிச்சிக்க.”

கிறங்கித்தானே கிடந்தோம் போதையில். எல்லாமும் நடந்துதான் போனது. ஆனா ஒண்ணு.தங்கச்சியும் போயிருச்சே.அந்த நஷ்டத்தத்தானே தாங்கிக்க முடில.

“சீ. நீயும் ஒரு மனுஷனா? உன்ன என் அண்ணன்னு சொல்லிக்கவே கூசுது.நல்லவேள எங்கம்மா என்னோட நிறுத்திக்கிட்டாக.இன்னொன்ணைப் பெத்திருந்தா அதுவும் ஆம்புளயாப் பொறந்து என்னென்ன பாடு படுத்தியிருக்குமோ.நெனக்கவே பயமாயிருக்கு.நா சொல்றதச் சொல்லிப்புட்டேன்.இனிமே இந்தக் கேடு கெட்ட காரியத்துக்குப் போனே பெறவு நா இந்த வீட்டுலயே இருக்க மாட்டேன் ஆம்மா.இத்தன நாளா உன்னை வெளிய விட்டு வச்சிருக்கிறதே தப்பு.எதுக்காகவோ.சும்மா ஒண்ணும் செய்ய மாட்டாக.அதத் தெரிஞ்சிக்க.நீ பாத்து வச்சயே மாப்ள அதான் என் வீட்டுக்காரரு.டிரெயினிங் முடிச்சு வந்திட்டாரு நா போயிடுவேன் அவரோட.இந்த நாட்டுக்காக ஒழைக்கிறேன்னு அவுரு போறாரு.நீ என்னடான்னா கேடு கெட்ட பொழப்புப் பொழக்கிற.கல்யாணத்துக்கு முன்னாடி இப்டி நடந்திருந்தா அவரு என்ன வேண்டாம்னிருப்பாரு.அதான் நீ எனக்குச் செய்த பெரிய ஒதவி.தூ இதுவும் ஒரு பொழப்பா?”

“சொன்னது போல் அதுவும் கௌம்பிப் போயிருச்சே? தான் உண்டு தன் புருஷன் உண்டுன்னு வடக்க எங்கயோல்ல சொல்லிச்சு.அதயாவது கேட்டு வச்சிக்கிட்டனா? எதயும் கேக்குற மாதிரி நிதானத்துலயா நா இருந்தேன்.எவனோ எதையோ சொல்லட்டும் செய்யட்டும்

நாம இருக்கிறபடி இருப்போம்னுட்டு எம்பொழப்பு இப்டி நாறிக் கிடக்குதே.எவன்ட்டயாவது வாய்விட்டுச் சொல்ல முடியுமா? எதுக்குச் சொல்லணும்? அதான் ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயமாச்சே? பாக்குறவனெல்லாம் ஒதுங்கி ஒதுங்கிப் போகுறதப் பார்த்தாலே தெரியுதில்ல.ஆனாலும் அதுலயும் ஒரு கிக்கு இருக்கத்தாஞ் செய்யுது.எந்த எந்தப் பய வாய் கிழியப் பேசினானோ அவனெல்லாம் இருக்கிற எடம் தெரியாம ஒக்காந்திருக்கான் இன்னைக்கு.நேர்ல வரப் பயப்படவுல்ல செய்றானுக.ஒதுங்கி ஒதுங்கியில்ல போகுறானுவ.எல்லாரும் கூடிப் பேசி முடிவெடுத்திருப்பானுவளோ? ஆனா ஒண்ணு அன்னைக்கொருத்தன் சொன்னாம்பாரு.சாவடி கிட்ட .தங்கச்சிக்கு அழகா மாப்பிள்ளை பார்க்கத் தெரிஞ்சவனுக்கு தன்னைப் பார்த்துக்கத் தெரிலன்னு.அதுலதான் உறுத்திச்சு வெசயம்.அதுவும் ஆசத் தங்கச்சி வீட்ட விட்டுப் பிரிஞ்சி போனப் பெறவுதா அதிகமாச்சு.”

மாரி குழப்பத்தின் உச்சியில் தலைக் கிறுகிறுப்பில் நடு ரோட்டில் நிலை கொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான்.

( 6 )

“டே.சாவுக்கிராக்கி.உறாரன் அடிக்கிறேன்.காதுல விழலியா? டமாரச் செவுடா ஒனக்கு.காலங்கார்த்தால என் வண்டிதானா கெடச்சது ஓரமாப் போடா எழவெடுத்தவனே.” யாரென்று பார்க்குமுன்னே கடந்து விட்டது லாரி. பழைய மாரி என்றால் இந்நேரம் கல் பறந்திருக்கும். இப்பொழுது எதெதற்கோ யோசிக்க ஆரம்பித்துவிட்ட மாரி. ஆனாலும் கூட குனிந்து பறந்து தேடத்தான் செய்கிறது மனசு. பழைய புத்தி அதுக்குள்ள விடுமா? சுற்றிலும் பெரிது பெரிதாகக் கற்கள் கிடக்கத்தான் செய்கின்றன. அதற்கென்ன பஞ்சம்? ஆனா கை தான் வரமாட்டேங்குது.ஏன்? எடுக்கத் தெம்பில்லையா அல்லது மனசில்லையா? அந்த அளவுக்கா மனது திருந்தி விட்டது? திருந்தி விட்டதா அல்லது திருந்த ஆரம்பித்திருக்கிறதா? நான் கூடவா திருந்த ஆரம்பித்திருக்கிறேன்? நம்ப முடியவில்லையே? இதுவரை பண்ணியுள்ள காரியங்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தாங்காதே? அத்தனையும் பாவங்களல்லவா?

“பட்டினியாக் கெடந்து உசிர விட்டாலும் விடுவனே தவிர நீ கொண்டார துட்டுல இந்த வயித்த நெப்பமாட்டேன்டா.ஞாபகம் வச்சிக்க.” சொன்னபடி போயே விட்டாளே பாவி.கோடித்தெரு தவசிதான் சொன்னான்..

“உங்க ஆத்தா நெடுவூர் வயக்காட்டுல கள பிடுங்கிட்டிருக்குடியோவ்.என்னயக் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன்னுடிச்சி.எங்க ஒங்கிட்ட வந்து சொல்லிப் புடுவனோன்னுட்டு பயம் அதுக்கு.ஏண்டா பெத்த தாயே பயப்படுறமாதிரியாவா ஒரு பொழப்புப் பொழக்கிறது? இதுக்காடா ஒன்னய இந்த பூமில விட்டாக.உன்னைப் பார்த்துப் பார்த்து உங்கப்பன் நஞ்சு நாராப் போயி உசிர விட்ட மாதிரி உங்க ஆத்தாளும் உன்னப் பார்க்காமயே உன் நினைப்புல அப்புடி  ஆகப் போகுது.உங்க ஆத்தாள இப்புடிக் கஞ்சிக்குக் காத்தாப் பறக்க விட்டுட்டியேடா? நீயெல்லாம் உசிரோட இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன?”

பாக்கெட்டுக்குள் இருக்கும் பணம் பாம்பாய் உறுத்தியது மாரிக்கு. பயன்? யாருக்குமே பயன்படாத பணம் இருந்தென்ன போயென்ன?

“ஏண்ணே தெனம் இப்டி அலைய விடுறீக.காலைல காலைல எனக்கு இது ஒரு தண்டனையா? அஞ்சுக்கு பஸ் பிடிச்சாத்தான் ஆறுக்குள்ள வர முடியும்.லேட்டா வந்தா அதுக்கு வேற கத்துவீக? எறங்கி நடந்து.வர்றதுக்குள்ள.”

“பெரிய புடுங்கி இவுரு.காலு வலிக்குதாக்கும் அய்யாவுக்கு.பொடணில ரெண்டு போட்டன்னா.? கோர்ட் தீர்ப்புப்படி மாப்ள ஒழுங்கா வர்லன்னா பெறவு பார்த்துக்க.ஆளே இருக்க மாட்ட.இங்கயே கெடக்குறியா? எங்களுக்கும் சம்மதம்.போன வாரம் நடந்த கொலைல உன் பேர்லதாண்டீ அதிக சந்தேகம்.ஏற்கனவே இம்புட்டு கேசுகள வச்சிக்கிட்டு இங்க தெனம் வந்து கையெழுத்தும் போட்டுக்கிட்டு எங்களயே ஏமாத்துறியா? இதுல நீ என்னமோ வெளியூர்ல இருக்கிற மாதிரி வேறே படம் காட்டுற.? இங்கயே கெடக்குறியா? பேசாம ரெண்டு மூணு கஞ்சாக் கேசப் போட்டு நல்லா இறுக்கி உள்ளயே உக்காத்தி வச்சிடுவோம்.இப்போதைக்கு ஒதவும்ல.என்னா சொல்ற?”

பேசாமல் ஸ்டேஷனிலேயே கிடந்துவிடலாம்தான். வீடு என்று ஒன்று எங்கு இருக்கிறது தனக்கு? ஆசைத் தங்கச்சியும் இல்லை.அருமைத் தாயும் இல்லை.தன் மீது உள்ள குற்றங்களோ அதிகமாகிக் கொண்டே போகிறது.எந்த போதையில் அல்லது என்ன மன உளைச்சலில் இது நடக்கிறது?

“ஒன் கேடு கெட்ட நடத்தையால ஒங்கப்பன முழுங்கின.இப்போ உன்னோட ஆத்தாளயும் முழுங்கப் போற.”

“டாய்.” என்று பாய்ந்து குதறியிருப்பான்தான். அப்படிச் செய்து செய்துதானே இந்த நிலைக்கு வந்திருக்கிறது?

ஒரு வார காலத்திற்குள் ஏன் இந்த மாற்றம்? எங்கே தன்னையும் போட்டுத் தள்ளி விடுவார்களோ என்கிற பயம் வந்து விட்டதோ?

கூடத் திரிந்த சக்திவேல் கூட மாறித்தான் போய்விட்டான். எங்கோ கொல்லன் பட்டறையில் இரும்படிக்கிறானாம். கேட்டால் சிரிப்பாய்த்தான் இருக்கிறது. அவன் தகுதிக்கு அந்த இடமா? எப்படி மெத்தனமாய்த் திரிந்தவன். எவனும் வேண்டாம்.நான் ஒருத்தனே போகிறேன் என்பானே? அடுத்தவன் கதையை முடிப்பதில் எவ்வளவு துடிப்பு அவனுக்கு?

யாரோதான் சொன்னார்கள். “ஆனாலும் அது ஒழைச்சு வர்ற காசுடா.அதுல திங்கிற சோறே வேறடா.அதுதாண்டா ஒழுங்கா செமிக்கும்.இதெல்லாம் என்னைக்காச்சும் வயித்தப் பிடுங்கி ஆளத் தூக்கிடும்டா.இந்த ஈனப் பொழப்பு ஒரு பொழைப்பாடா?

“சே.என்ன இன்றைக்கு மனசைப் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது? எல்லாம் அண்ணன் பார்த்துக்குவாருன்னுல்ல இருந்தோம்.” – இந்த நினைப்பு திடீரென்று மனசில் வந்தபோது கூடவே பயமும் பெருக்கெடுத்தது மாரிக்கு.

( 7 )

“என்னங்க.அன்றைக்கு ஆஸ்பத்திரிக்குள்ள போனீங்களே.என்னாச்சு? அதுக்கப்புறம் உங்களைப் பார்க்கவே முடியலீங்களே.?- தற்செயலாய் சாந்தாவை அந்தக் கோயில் வாசலில் சந்தித்துவிட்ட சரவணன் பட்டென்று கேட்டு விட்டான். ஒரு கணம் அவன் யார் என்பதை ஊகிக்க முடியாமல் நின்றிருந்த சாந்தா “நாந்தாங்க.அன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மேலே உங்களை ஆஸ்பத்திரில கொண்டு விட்டேனே.ஞாபகமில்லியா.” என்றவுடன் புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

“ஒண்ணுமில்லீங்க.என் தம்பி உடம்பு சரியில்லாம இருக்கான்.அதான்.” – அவள் தன்னிடம் மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் சரவணன். ‘

“ஓண்ணு தெரிஞ்சிக்குங்க.ஆட்டோக்காரனுக்குத் தெரியாத தகவல் கிடையாதுங்க.ஊர்ல எங்கெங்க என்னென்ன நடக்குதுன்னு எப்டியும் எங்க காதுக்கு வந்துடும்.அன்னைக்கு ராம் நகர்ல நடந்த கொலைல உங்க தம்பியை அடிச்சுப் போட்டுட்டாங்க.அதானே..இதெல்லாம் எங்களுக்குப் பழைய நியூசுங்க.அவன் உங்க தம்பிங்கிறதுதான் எனக்குப் புதுசு.அதுவும் இன்னைக்குக் காலைலதான் தெரிஞ்சிது.அந்த உறாஸ்பிடல் வாசல்ல இருக்கிற ஆட்டோக்காரங்க எல்லாரும் எனக்கும் நண்பர்கள்தாங்க.நீங்க தெனமும் வந்துட்டுப் போறதை அவுங்களும் கவனிச்சிட்டுத்தான் இருக்காங்க.அது கிடக்கட்டும்.இப்போ உங்க தம்பி எப்படி இருக்காரு.அதச் சொல்லுங்க.”

“பரவால்லீங்க.ஆனா பயம்தான் நீங்கினபாடில்ல.எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.மனசுலேர்ந்து அந்தப் பதட்டம் வெலகின மாதிரித் தெரில.”

“சின்னப் பையன்தானேன்னு விட்டிருக்கலாம்.அந்தப் பசங்க எதுக்கும் அஞ்ச மாட்டானுங்க.இதுவே பெரிய ஆளாயிருந்திருந்தா இன்னொரு கொலைன்னு கூடப் பார்க்காம முடிச்சிட்டுப் போயிருப்பாங்க.பொடிப் பயதானேன்னு விட்டுட்டாங்க.நா சொன்னதா இத யார்ட்டயும் சொல்லிப் புடாதீங்க.ஏற்கனவே எங்கள விடாம வந்து மேய்ஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க.போலீசுக்கு பயந்தா எங்க பொழப்பே நடக்காதுங்க.”

அவன் சொல்வதை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சாந்தா “சரி வர்றேங்க.”என்று விட்டுக் கிளம்பினாள்.

“ஏங்க.வண்டில வாங்களேன்.கொண்டு விட்டுட்டுப் போறேன்.”

“பார்த்தீங்களா.அன்னைக்கு உங்க வண்டில வந்ததுக்கே இன்னும் நான் காசு தர்லே.இந்தாங்க பிடிங்க.”

“இப்போ வர்றேன்னு சொல்லுங்க.வாங்கிக்கிறேன்.”

“இல்லீங்க.நான் பஸ்லயே போய்க்கிறேன்.”

“இந்த ஏரியாவுலே அடிக்கடி பஸ் வராதுங்க.ஏறுங்க.கொடுக்குறதக் கொடுங்க.”

அவனின் வற்புறுத்தலில் தளர்ந்து போன சாந்தா ஏறி உட்கார்ந்தாள். கடுமையான வாகன நெரிசலில் அநாயாசமாக அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனின் ஓட்டுதலில் தெளிந்த நிதானத்தை உணர்ந்தாள் அவள். எதிர் வரும் வாகனங்களை சங்கடமின்றி விலக்கிக் கொண்டு தனக்கென்று உள்ள பாதையில் முன்னும் பின்னும் நகரும் வாகனங்களின் அருகாமையை அளவாக உணர்ந்து எந்தக் குலுங்கலும் பதட்டமும் இல்லாமல் அவன் முன்னேறியது அவளை திருப்திப் படுத்தியது. எந்தவொரு இடத்திலும் உறாரன் சத்தம் எழுப்பாமல் அவன் முன்னேறியதுதான் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“உறாரனே அடிக்க மாட்டேங்கறீங்க.?” கேட்டே விட்டாள் அவனிடம்.

“எதுக்குங்க தேவையில்லாம.? அதுதான் வரிசையா எல்லா வெஉறிக்கிளும் போய்க்கிட்டே இருக்குல்ல.ஒருத்தன் பின்னால ஒருத்தன் போயிட்டேதான இருக்காங்க.உறாரன் அடிச்சு தேவையில்லாம எதுக்குச் சத்தம் எழுப்பணும்.? நிறையப் பேரு அநிச்சையா அதைச் செய்திட்டிருக்காங்க.என்னவோ இவுங்க உறாரன் பண்றதுனாலதான் அவுங்க விலகுறாங்கங்கிற மாதிரி.அது அப்டியில்லீங்க.முன்னாடி போகுற வாகனத்தை மனசுல வச்சு அவனவன் ஸ்டெடியாப் போயிட்டிருந்தாலே எல்லா வண்டியும் தன்னால நகர்ந்திடும்ங்க.நம்ம வாழ்க்கை கூட அப்டித்தாங்க..”

“என்ன சொல்றீங்க.?” – புரியாமல் கேட்டாள் சாந்தா.

“ஆமாங்க.நமக்கு முன்னாடி வாழ்ந்து முடிச்சவங்க எப்டி எப்டி வாழ்ந்திட்டுப் போயிருக்காங்கங்கிறதைக் கூர்ந்து கவனிச்சாலே போதும்.நம்ம வாழ்க்கை தானாச் சீராயிடும்.நம்மள மீறி எந்தத் தப்பும் நடந்திடாது.”

“ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசறீங்க.?”

“அன்றாட வாழ்க்கையே ஒரு அனுபவம்தாங்க.எத்தனை விதமான மனுஷாளை இந்த வண்டியில ஏத்திட்டுப் போயிருக்கோம்.நல்லவன் கெட்டவன்ங்கிற வித்தியாசமில்லாம.எல்லாவிதமான ஆளுகளையும் பார்த்தாச்சுங்க.கைப்பையை மறந்து வச்சவங்களும் இருக்காங்க.வேணும்னே விட்டுட்டுப் போனவங்களும் இருக்காங்க.திரும்பக் கொடுத்த போது நன்றி சொன்னவங்களும் இருக்காங்க.இது என்னுதுல்லையேன்னு வம்புல மாட்டி விட்டவங்களும் இருக்காங்க.”

“உங்களோட பேசினதுல நேரம் போனதே தெரிலீங்க.”

“அது சரிங்க.உங்க தம்பிக்கு யார் துணையிருக்காங்க.?”

“என் தங்கச்சிய உட்கார்த்தி வச்சிருக்கேங்க.நா இப்போ போயிடுவேன்.ராத்திரி அங்கதான் தங்கல்.”

“அப்போ ஒண்ணு செய்யுங்க.இந்த நம்பருக்கு ஒரு போன் பண்ணுங்க.நா கொண்டு விடறேன் உங்களை.”

வண்டியை நிறுத்தி சரவணன் தன் ஃபோன் நம்பரை ஒரு சிறு தாளில் எழுதிக் கொடுத்த போது வேண்டாம் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை சாந்தாவுக்கு. அவனின் மேல் ஏன் இந்த ஈர்ப்பு அவளுக்கு? தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ஒரு முறை. ரொம்பவும் அபூர்வமாகத்தான் அவள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கம். அப்படிப்பட்ட தான் எப்படி இதற்குச் சம்மதித்தோம்? பஸ்ஸில் போய்த்தானே பழக்கம்? இப்போது திடீரென்று எடுத்ததெற்கெல்லாம் ஆட்டோ என்றால் காசுக்கு எங்கே போவது?

“யோசிக்காதீங்க.ஒரு அவசரத்துக்குத்தானே..அதுக்கு உதவாட்டா அப்புறம் இந்தத் தொழில் செய்துதான் என்ன புண்ணியம்? நாங்க பிரசவத்துக்கு மட்டும் இலவசம் இல்லை.அவசரத்துக்கும்தான் இலவசம்ங்க.என்ன கொஞ்சம் சாவகாசமாப் பணம் வாங்கிக்கிடுவோம்.உங்கள மாதிரித் தெரிஞ்சவங்களுக்குத்தான் அந்தச் சலுகையும்.”

சரவணன் இதைச் சொன்ன போது இருவரும் தங்களை மறந்து சிரித்து விட்டனர். அந்த சந்தோஷத்தில் பணம் கொடுத்த அவள் கைகள் புதியதாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அந்தக் கணத்தில் வெகு மென்மையாக ஆதரவாக உணர்ந்தன.

“உங்க தம்பியப் பத்திக் கவலைப் படாதீங்க.அங்க வெளிய எங்க ஆட்கள்ட்ட சொல்லி வைக்கிறேன்.குணமாக்கி சேப்டியா வீட்டுக்குக் கூட்டி வந்திடலாம்.நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..அந்தக் கேசு வேறே திசைல போயிட்டிருக்கு. உங்க தம்பிக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோன்னுல்லாம் நினைக்க வேண்டாம்.பயப்பட எதுவுமேயில்லை.அதெல்லாம் பெரிய எடத்து விஷயம்.கதையே வேறே.”

சொல்லிவிட்டு அவன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு பறந்த போது அது செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. இரைச்சலும் போக்குவரத்தும் ஓய்ந்திருந்த அந்த நேரத்தில் ஒரு வாகனம் எந்த விகிதத்தில் செல்ல வேண்டுமோ அந்த சரி விகிதத்தில் சரவணனின் வாகனம் நகர்ந்ததாய்த் தோன்றியது அவளுக்கு. ரொம்பவும் நிதானமான பொறுப்பான பொருத்தமான ஒரு இளைஞனைத் தான் சந்தித்து விட்டதாய் அவள் மனம் சொல்லியது அப்போது.

( 8 )

மாரியின் மனசு கொதித்துக் கொண்டிருந்தது. அண்ணன்ட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லையே.காரியம்னாத்தான் மட்டும் பேசுவாரோ.என்னடா தெனம் ஸ்டேஷன் போயிட்டிருக்கியா.சும்மா தைரியமாப் போயிட்டு வா.எல்லாம் நா பார்த்துக்கிடுறேன்.ஒரு வார்த்த சொல்லலியே.இத்தன நா இப்டி இருந்ததில்லையே.தங்கச்சி பிரிஞ்சி போயிடுச்சின்னு புலம்பினனே.அதுல கோபமாயிட்டாரோ.அதுகிட்ட ஒரு முறை வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டாரே.அந்தக் கோபமோ.ஆத்தாளக் காணலன்னு அழுதேனே.அது பிடிக்கலையோ.அவருக்கென்ன எல்லாத்தையும் உதிர்த்தவரு.நம்பள மாதிரி அப்பா அம்மா தங்கச்சின்னு இருந்தாத்தான தெரியும்.அவுருக்குத்தான் எதுவுமே கெடையாதே.கூத்தியாளக் கட்டிட்டு அழுதிட்டிருக்குறவரு.சீ அதுவும் ஒரு பொழப்பா.அவளும் அவ மூஞ்சியும்.ஆனாலும் அவ ஒடம்பு ஆத்தாடீ.அன்னைக்கு என்ன மறந்து ஒரு பார்வை பார்த்தனே அந்தாளு மூஞ்சி எம்புட்டுச் சிறுத்துப் போச்சு.அவளும் என்னைப் பார்த்தாளே.அதான் பிடிக்கலையோ? சே.அப்பவே தங்கச்சி சொல்லிச்சு.மச்சானோட தங்கச்சி ஒண்ணு இருக்கு கட்டிக்கன்னு.இந்த முட்டாப்பய மண்டைல ஏறிச்சா? எல்லாரும் எனக்கு நல்லதுதான் சொன்னாக.நாந்தான் இப்டிச் சீரழிஞ்சு போயிட்டேன்.சும்மாத் திரிஞ்சிக்கிட்டு இருந்தவன கரெக்டா வலை போட்டுப் பிடிச்சிட்டானுக.அதுக்காக? எனக்கெங்க புத்தி போச்சு? எல்லாம் என் கேடு காலம்.இப்டித்தான் சீரழியணும்னு தலையெழுத்தோ என்னவோ? இல்லன்னா இப்போ இப்டியெல்லாம் நெனக்கத் தோணுமா? கெட்டுச் சீரழிஞ்சாத்தானே இப்டியெல்லாம் புத்தி வரும்? இதெல்லாமும் அன்னைக்கு ரத்தம் பார்த்த போது உண்டான தடுமாத்தமோ?

அதுக்கு முன்னாடி அந்த ஆந்திராக்காரப் பயலுக செய்துட்டுப் போயிட்டானுங்க.கையைக் காண்பிச்சதோட சரி.இப்போ நாமளேல்ல செய்ய வேண்டி வந்திடுச்சி.பாவம்யா அந்தாளு.எப்டிக் கால்ல விழுந்து கெஞ்சினான்.கெஞ்சக் கெஞ்ச வெட்டினானுங்களே.வெட்டினானுங்க என்ன.நானுந்தான வெட்டினேன்.சே! அன்னைக்கு ஊத்தாமப் போனதுதான் பெரிய தப்பாப் போச்சு.பொடியவாவது கசக்கி இழுத்திருக்கணும்.எப்டி ரெண்டையும் செய்யாமப் போனேன்.ஒரு வாரத்துக்கும் மேல ஆவப் போகுது.நம்ப கோஷ்டிக்காரனுவ எவனும் கண்ணுலயே படல.எல்லாத்தையும் புடிச்சி உள்ள தள்ளிட்டானுகளா?ஒரு வேள சரண்டர் ஆயிட்டானுவளோ? என்னைய மட்டும் விட்டுட்டானுக.தெனமும் டேஷனுக்கு வர்றேன்னு நோட்டம் பார்க்குறாகளோ? என்னப் பொறியா வச்சி மத்தவுகள வலை போடுறாங்ஞளோ? இந்தப் போலீசு வேலயே மர்மமால்ல போச்சு? எப்போ எதுக்கு உள்ள போடுவானுங்க.எதுக்கு வெளில விடுவானுங்கன்னே கணிக்க முடில்லயே? அண்ணன்கிட்ட அதெல்லாம் நமக்கு வேண்டாம்ணேன்னு பீத்தப் பேச்சுப் பேசினேன்.அது ஏன்? அந்தாளு கிரீடத்தத் தலைல வக்கப் போறான்னா?”

“அடுத்தவங்க சிந்துற ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் நீ பதில் சொல்லிதாண்டா ஆகணும்.உசிர எடுக்கிறதுக்கா உங்க ஆத்தா உனக்கு உசிரக் கொடுத்தா? நீ எடுக்கிற உசிரோட உசிரா இருக்காளே இன்னொரு ஆத்தா.அவளோட வயித்தெறிச்சல் வீண் போகாதுடா வீண் போகாது.அது உன்னை அழிச்சே தீரும்.அவ கும்பி கொதிச்சா நீ வெளங்குவியா? என் கும்பி கொதிக்குதுடா.இதுக்கே நீ அழிஞ்சு போவே.நீ சீப்பட்டுத்தான் சாகப் போறே பாரு.எவனோ ஒருத்தன் சொன்னானாம்.இவன் செய்தானாம்.ஒம்புத்தி எங்கடா போச்சு? அவன் பீயத் தின்னுன்னு சொன்னா தின்னுவியா? அறிவு கெட்ட முண்டம்.உன்னப் பெத்த ஆத்தாள விட அவன் எந்த வகைலடா பெரிசு? எதுல உசத்தி? அவ பேச்சக் கேட்காம அவன் பின்னாடி ஓடினியாக்கும்.? நீ அவனுக்குப் பயன்படுறவரைக்கும் தாண்டா வேணும் அவனுக்கு.பெறவு உன்னையும் போட்டுத்தள்ளத் தயங்க மாட்டாம் பாரு.உன் உசிரக் கொடுத்து அவனக் காப்பாத்துனேங்கிறியே.இன்னொரு உசிரை எடுக்கச் சொல்றவன் உன் உசிர எடுக்க  இன்னொருத்தன ஏவ மாட்டாங்கிறது என்ன நிச்சயம்? எத்தன நாளைக்கு விட்டு வைப்பான்னு நினைக்கிறே? அதுக்கும் குறி வச்சிட்டுத்தான் இருப்பாங்கிறதை மறந்திடாத.வேள வர்றபோது உந்தலையும் தப்பாதாக்கும்.இப்டியாச்சும் பொழச்சு உயிர் வாழணுமாடா?”

“அன்னைக்கு சக்திவேல் எம்புட்டுச் சொன்னான். எதயுமே காதுல வாங்கலியே நா.இதுக்கு ஆடு மாடா பன்னியாப் பொறந்து ஓரத்துல மேய்ஞ்சிட்டு சாக்கடைல பொறண்டுட்டுப் போயிடலாம்னானே? கடவுளே எம்புட்டு நடந்து போச்சு? சும்மாத் திரிஞ்ச காலத்துல இருந்த நிம்மதி கூட இப்ப இல்லையே? மனசு போட்டு இந்த அழுத்து அழுத்துதே! இதுதா நா சம்பாதிச்சதா? கை நிறையப் பை நிறையக் காசு வச்சிருக்கனே? அது நிம்மதியைத் தராதா? அது பாபக் காசா? யாருமே வேண்டாம்னுட்டாகளே.அதத் தொடக் கூட இல்லையே ஆத்தா? அவ ரத்தத்துலதான பொறந்தேன் நான்.ஏன் எனக்கு புத்தி இப்டிப் பொறண்டு போச்சு.? மாரிக்குத் தலை சுற்றியது.

( 9 )

கண்கள் இருண்டு லேசான தடுமாற்றம் மாரியை ஆட்கொண்ட போது சரேலென்று அவனை இடிப்பது போல் சென்று பறந்த அந்தக் காரைப் பார்த்து திடுக்கிட்டான் அவன். யாரோ உள்ளே கெக்கலியிட்டுச் சிரித்தது போலிருந்தது. பெரிய இடிச் சிரிப்பு. நான்கைந்து பேர் சேர்ந்து போட்ட கும்மாளச் சிரிப்பு அது! கேட்ட குரல்தானா? வெறும் சிரிப்பில் எதைக் கண்டு பிடிக்க முடியும்? எவர்களாயிருக்கும்? அண்ணனோ? சே.சே.அவருன்னா வண்டிய நிறுத்தாமப் போவாரா? நான்னு தெரியாமப் போயிருப்பாகளோ? தெரிஞ்சிருந்தா வண்டி நின்னிருக்குமே? என்ன விட்டிட்டு அவுக எந்தக் காரியத்தைப் பார்க்க? அது சரி அவுரு ஏன் இங்க வரணும்? ஒரு வேள ஸ்டேஷனுக்கு வந்திருப்பாரோ.அங்க என்ன அவருக்குச் சம்பந்தம்? எனக்குத் தெரியாமயா? எனக்கு மட்டுந்தான இங்க கொடுத்திருக்காக.அவருக்கு டவுனாச்சே.அதுவும் பழைய கேஸாச்சே.இதுக்குக் கெடயாதே.பின்ன இங்க ஏன் திரியராரு.எத்தன எடத்தத்தான் பழகி வச்சிருப்பாரு? போறது யாரு.உண்மையிலேயே அவுருதானா? இல்ல வேற பார்ட்டியா? வேற பார்ட்டி இந்த வேளைல ஏன் இங்க அலையணும்? அவுரு வண்டிதானா அது? இல்ல வேற யாருதுமா? அடடே.நம்பரப் பார்க்க விட்டிட்டமே.எதுக்காக எம்பக்கத்துல வந்து கட்டிங் போடுறானுங்க.?

மாரி நிதானிக்கும் முன் அந்த இரண்டு புல்லட்களும் அவனை இடித்துத் தள்ளுவது போல் அருகருகே ஒட்டி உரசியவாறே கடந்து பறந்த அந்தக் கணத்தில் சரேலென்று ஏதோ ஆபத்தை உணர்ந்தவனாய் தன்னை மறந்த ஒரு உத்வேகத்தில் சட்டென்று வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் அவன். எங்கிருந்துதான் கால்களுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ.தறி கெட்டுப் பறந்த அந்தக் கால்கள் சந்தித்த மேடு பள்ளங்கள் அவனைப் புறட்டிப் போட யத்தனித்துத் தோற்றுப் போயின. தோண்டிப் போட்டிருந்த பள்ளங்களையும். சிமென்ட் குழாய்களையும் தடுப்புப் பலகைகளையும் தாண்டித் தாண்டிப் பாய்ந்து கொண்டிருந்த அவன் அந்தக் காவல் நிலையத்;துக்குள் நுழைய முற்பட்டபோது சரேலென்று எங்கிருந்தோ மின்னலெனப் பாய்ந்த அந்த நீண்ட வீச்சரிவாள் அவன் உயிரை அரைக் கணத்தில்  பறித்துக் கொண்டு அருகேயிருந்த குப்பை மேட்டில் போய் விழுந்தது. என்ன நடக்கிறது என்பதைக் கணிக்கும் முன் மேலும் நாலைந்து தடித்த உருவங்கள் அவன் உயிர் காவு கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு  கண்ணிமைக்கும் நேரத்தில்; அந்த இடத்தை விட்டு அந்தப் பெரிய வாகனத்தில் பறந்த போது வாசலில் காவலில் நின்ற காவலர்கள் பயத்தில் வெளிறிப் போய் பிணமாய் நின்று கொண்டிருந்தனர்.

( 10 )

நடந்த கொலைக்கு கண்ணால் கண்ட சாட்சிகளே இல்லையென்று வழக்கு தள்ளுபடியெனத்  தீர்ப்பான அந்த நாளில் சரவணன் மூலமாக அந்தச் செய்தியை அறிய நேர்ந்த சாந்தாவின் மனதில் என்னவோ ஒரு துக்கம் நெருடத்தான் செய்தது. அறியாப் பருவத்தில் பயத்திலிருந்து மீண்டு தன் கல்வியை செவ்வனே கவனித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை அவள் நினைத்துக் கொண்டாள். எத்தனையோ ஆயிரம் வழக்குகளில் ஒன்றாகிப் போன அந்தச் சம்பவம் காலத்தோடு காலமாகக் காணாமல் கரைந்து போனது.

“இது கலி காலமுங்க.இப்போ இப்டித்தான் நடக்கும்.மனுஷன மனுஷன்; வெட்டிக்குவான்.குத்திக்குவான்.எல்லாவிதமான முரணான விஷயங்களும் இந்த யுகத்துலதான் நடக்குமாம்.அநியாயமும்; அக்கிரமமும்தான் கொடி கட்டிப் பறக்குமாம். இந்த யுகத்துக்குப் பிறகுதான் கல்கி தோன்றுவாராம்.அப்போதான் எல்லாக் கெட்டவைகளும் அழியுமாம். அந்தக் காலம் வரைக்கும் இந்த உலகம் பொறுக்க வேண்டிதான்.நம்மள மாதிரி நடுத்தர வர்க்க சமுதாயம் இதுகளையெல்லாம் பார்த்து மனசுக்குள்ளயே கொதிக்க வேண்டிதான்.இல்லன்னா கண்ண மூடிக்கிட்டுக் கிடக்க வேண்டிதான்.ரொம்பச் சரியா யோசிச்சா அதத்தான் செய்ய முடியும்.தீமையை அழிக்கிறதும் நியாயத்தை நிலை நாட்டுறதும் கதைகள்லயும் சினிமாவுலயும் வேணும்னா பார்க்கலாம். பார்த்து ஆறுதல் பட்டுக்கலாம். நிஜத்துல நடக்கணும்னா அதுக்கு யுகாந்திர காலமாகும்.உங்களப் பொறுத்த வரைக்கும் உங்க தம்பி முழுசாக் கிடைச்சுட்டான்ல.அத்தோட விடுங்க.அவ்வளவுதான்.இந்த உலகத்துல எவ்வளவோ நடக்குது.நமக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்.அந்த ரொம்பக் கொஞ்சமே நம்மளை இவ்வளவு கஷ்டப்படுத்தினா இன்னும் பலதையும் தெரிஞ்சிக்கிட்டோம்னு வையுங்க.போதும்டா சாமின்னு ஆயிடும்.நா பேசுறது பொட்டத்தனமாக்கூட உங்களுக்குத் தெரியலாம்.ஆனா அதுதான் யதார்த்தம்.” – சரவணன் சொல்லிக் கொண்டே வண்டியைத் திருப்பினான். சாந்தாவின் வீடு வந்தது.

“உள்ளே வாங்க அங்கிள்.வந்து சாப்டுட்டுப் போங்க.” – சாந்தாவின் தம்பியும் தங்கையும் அவனை ஆளுக்கொரு பக்கமாய்க் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது சாந்தா அதை ஏனோ தடுக்கவில்லை.

—————————————-

 

தேவைகள் – உஷாதீபன் சிறுகதை

நா வரலை – என்றாள் மல்லிகா. அருகே படுத்திருக்கும் மாமியாருக்கும், இரண்டு மைத்துனிகளுக்கும் கேட்டு விடக் கூடாது என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள். அடுத்த அறையில் அவன் அப்பாவும், தம்பியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மனோகரன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். வளையல் சத்தம் கேட்டுவிடக் கூடாதே என்று பயமாயிருந்தது அவளுக்கு. அம்மா லேசாக அசைந்தது போலிருந்தது. என்ன முரட்டுத்தனம்…!

விடுங்க…இப்டியா இழுக்கிறது? அசிங்கமாயில்ல…?…-கையை உதறினாள். அவளுக்குத் துவண்டு வந்தது. இருட்டிலும் அவன் கண்களின் கோபம் தெரிந்தது. அந்த இன்னொன்று….அதையும் பார்த்தாள் அவள். ! எதுவும் அந்தக் கணம் பொருட்டில்லை அவனுக்கு.

       கடுமையாகச் சிணுங்கினாள். அது அவனுக்குப் புரிந்திருக்குமா தெரியவில்லை. மாடி வீடு. தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் மாடிப் பகுதியில் விழாது. சாம்பல் படர்ந்திருப்பது போல் ஒரு மெல்லிய நிழல் கலந்த ஒளி மேலே பரவி வந்திருந்தது. வானத்தின் வெளிச்சமாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. ஆட்கள் படுத்திருப்பதை அந்த ஒளியிலேயே உணர முடியும். அம்மா புரண்டு மறுபுறமாய்த் திரும்பிக் கொண்டாள். தெரிந்துதான் செய்கிறாளோ? அடுத்த அறையில் உடம்பு வலி தாளாமல் தூக்கத்தில் அப்பா அரற்றினார். அவனுக்குள் பதற்றம் பற்றிக் கொண்டது.

       உள் பக்கமா எதுக்குப் படுக்கிறே? நாலு பேரைத்தாண்டி உன்னை நான் கூப்பிடமாடேன்னு நினைச்சிட்டியா? எத்தனைவாட்டி சொல்றது? அறிவில்ல…?-அவன் கேட்டிருக்கிறான். .ஏற்கனவே சொன்னதுதான். இருக்கும் இட வசதி பொறுத்துதானே படுக்க முடியும்? தனியே இருக்கையில் நிச்சயம் எரிந்து விழுவான். எத்தனைவாட்டி சொன்னாலும் தெரியாதா? பொட்டக் கழுத…!

       கொஞ்சம் பெரிய சமையலறை அது. அங்குதான் பெண்கள் படுத்துக் கொள்வார்கள். அடுத்தாற்போல் ஒரு சின்ன அறை. அதற்கு அடுத்து ஒரு சிறு பால்கனி. அதில் ஒராள் நடக்கலாம்.ஒரடி அகலம்தான். பேருக்கு அது.  இவ்வளவுதான் வீடு. சமையலறையை ஒட்டி மாடிப்படி. கழிப்பறையெல்லாம் கீழேதான். மொத்தம் ஏழு வீடுகளுக்கான கழிப்பறைகள் மூன்று மட்டுமே. அதிலும் பெண்களுக்கென்று ஒன்றுதான். அதில்தான் நுழையணும். இன்னொன்றில் மாறி நுழைந்து விடக் கூடாது. எழுதாத சட்டமாய் இருந்தது. அவசரமாய்ப் போகும்போது காலியாயிருக்கணும்…அது வேறு…!

 வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கீழேயுள்ள வீட்டு சொந்தக்காரர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் ஐந்து வீடுகளையும் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படிச் செல்லும்போது சிலரின் பார்வை திரும்பிப் கொண்டேயிருக்கும். எல்லாம் இரண்டிரண்டு அறைகள் கொண்ட வீடுகள்தான் என்பதால் பெரும்பாலும் வெளி வராண்டாவில்தான் ஆட்கள் அமர்ந்திருப்பார்கள். இரவில் படுத்து உருளுவார்கள். ஒரு முறைக்கு இருமுறை கக்கூஸ் போனால் கூச்சமாக இருக்கும். அதுவே பெரிய தண்டனை.. அவர்கள் கால்களில் தடுக்கிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். ஆள் வருவதைப் பார்த்துக் கூட மடக்கிக் கொள்ள மாட்டார்கள். திடீரென்று புரண்டால் போச்சு…!

எல்லோரும் அந்தப் பகுதியில் இருந்த வெள்ளைக்காரன் காலத்து  மில்லில் வேலை பார்ப்பவர்கள். பெரும்பாலான வீடுகள் அந்தத் தொழிலாளர்களை உள்ளடக்கியதுதான். பல ஆண்டுகளாய்க் குடியிருப்பவர்கள். ஷிப்ட் முறையில் பணிக்குச் சென்று திரும்புபவர்கள். அதனால் அந்தப் பகுதியே உறங்கா வீடுகளாய்த் தென்படும். ஆள் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். எங்காவது  பேச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

இரவு இரண்டு மணிக்குக் கூட எழுந்து மில் வெளிக்கு சென்று சூடாய் சூப் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். பெரும்பாலும் பச்சைப்பழம்தான் இருக்கும். வாய் வழியாயும், மூக்கு வழியாயும் உள் செல்லும் பஞ்சுத் துகள்கள் காலையில் வெளிக்கிருக்கையில் சிக்கலின்றி வெளியேற வேண்டும். ஒரு மில்லுக்கு ஐம்பது தள்ளுவண்டிகள் நிற்கும். அத்தனையும் விற்றுப் போகும்தான். அதை நம்பியிருக்கும் சிறு வியாபாரிகள்.

       யாரும் எதுவும் இன்றுவரை சொன்னதில்லைதான். இவளுக்குத்தான் ஒருமாதிரியாய் இருந்தது. ஒருவேளை ஆள் நகர்ந்த பின்னால் முனகிக் கொள்வார்களோ என்னவோ? சதா வாளியைத் தூக்கிக்கிட்டு வந்திருதுகளே…? சாப்பிடுறதத்தனையும் வெளிக்கிருந்தே கழிச்சிடுவாக போல்ருக்கு….- என்று சொல்லிச் சிரித்துக் கொண்டது ஒரு நாள் மாடியேறி வந்தபோது லேசாகக் காதில் விழுந்தது. ஒவ்வொரு வீட்டுக்குமான வாசல் பகுதி மழை மறைப்பு ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடியேறுகையில் அவர்களைக் காண்பிக்காது. பேச்சு மட்டும் காதில் விழும். தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் லேசாக அங்கு பரவியிருக்கும். அவரவர் வீட்டு வாசல் லைட்டை எட்டரைக்கே அணைத்து விடுவார்கள். ஒரு பூரான், தேள் என்று நகர்ந்தாலும் தெரியாது. அதில்தான் பயமின்றிப் படுத்து உருளுகிறார்கள். காற்றோட்டம் அந்த உழைப்பாளிகளை அடித்துப் போட்டதுபோல் தூங்க வைத்து விடும்.

       கூசிக் குறுகினாள் மல்லிகா. பொழுது விடிந்தால் அதுவே அவளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. காலையில் மட்டும் இரண்டு மூன்று தரம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஒரே தடவையில் வயிற்றை சுத்தம் செய்தோம் என்று இல்லை. உடல் வாகு அப்படி. நினைத்து நினைத்து வருகிறது.  தூக்கத்திலிருந்து எழும்போதே கலக்கி விடுகிறதுதான். அந்த நேரம் பார்த்து வாளியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு விடுவிடுவென்று அடக்க முடியாமல் ஓடும்போது அங்கே கக்கூசில் யாரேனும் போய் கதவை அடைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியே காத்து நிற்கப் படு கூச்சமாயும், பயமாயும் இருக்கும். பொம்பிளை அப்படி நிற்பது கேலிக்குரியதாகும். வாளியை அடையாளத்திற்கு வைத்து விட்டும் வர முடியாது. சமயங்களில் கால் தட்டி தண்ணீர் கவிழ்ந்து வலி தாள முடியாமல் கீழ் வீட்டுப் பெரியம்மா…திட்டிக் கொண்டே போனது இவளுக்கு இன்னும் மறக்கவில்லைதான். எழுந்தவுடன் ஒரு முறை என்றால், பிறகு காபி குடித்து விட்டு இன்னொரு முறை. காபி குடிக்கிறமட்டும் பொறுக்க மாட்டியா? அதுக்குள்ளயும் வாளியத் தூக்கிட்டு ஓடணுமா? மனோகரனின் அம்மாவே கேட்டிருக்கிறாள். மனசு வெட்கப்பட்டு மறுகும்.  அடக்க முடியாமல் ஓடுவாள். பிறகு வேலைக்குப் புறப்படும் முன் ஒரு முறை. அது சந்தேகத்துக்கு.

 அவள் வேலை பார்க்கும் இடத்தில் கழிப்பறையில் கால் வைக்க முடியாது. தண்ணீர் பஞ்சத்தில் நாறித் தொலையும். தவிர்க்க முடியாமல் போய் வந்தால் கால் கழுவத் தண்ணீர் இருக்காது. பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரில் ஒரு வாய் கொப்பளித்து விட்டு, அப்படியே போய் உட்கார்ந்து கொள்வாள். என்ன வியாதி தொத்தப் போகுதோ? என்று மனசு பதறும். கூட வேலை பார்க்கும் பெண்கள் சர்வ சகஜமாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றுக்கு நெருக்காதா? என்று நினைப்பாள் இவள். அருகிலுள்ள செப்டிக் டாங்க் மாசத்துக்கு ஒரு முறை என்று நிரம்பிப் போகும். இதுக்கு எம்புட்டுத்தான் தண்டம் அழுகிறது? என்று லாரிக்குச் சொல்லி முதலாளி கத்துவார். எல்லார் வீடும் ரெண்டு கி.மீ.க்கு உட்பட்டுத்தான் இருக்கும். ஆனால் வீட்டுக்குச் சென்று இருந்துவிட்டு வர அனுமதிக்க மாட்டார். வாசலில் செக்யூரிட்டி முறுக்கிய மீசையோடு கர்ண கடூரமாக நிற்பான். அவன் கவனத்தை எவ்விதத்திலும் சிதைக்க முடியாது. ஆள் நகர்ந்தால் சொல்லி விடுவான். கொத்தடிமை நிலைதான்.

பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள் அவள். சிறிய நிறுவனம்தான். ரொம்பவும் இடுக்குப் பிடித்த இடத்தில் முப்பது நாற்பது பேர் உட்கார்ந்து இடைவிடாது துணி தைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனையும் பெண்கள். அவர்களை நிர்வகிப்பதுவும் இரண்டு வயதான பெண்மணிகள். அருகில் வந்து விரட்டிக் கொண்டேயிருப்பார்கள். எத்தனை முடிச்சிருக்கே? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். கத்திரி ஓடும் லாவகம் வித்தியாகமாய் இருந்தால் காதுக்கு எட்டிவிடும். சட்டென்று போய் நின்று எச்சரிப்பார்கள். ஏதோ நினைப்பில் துணியை வெட்டி கோணல் மாணலாகிவிட்டால் அந்தத் துணிக்காசு பிடித்தமாகிப் போகும்.  நகரிலுள்ள எந்தெந்தக் கடைகளுக்கு சரக்கு சென்றாக வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொரு கடைக்குமான எண்ணிக்கையை இவர்கள் தலையில் வம்படியாகக் கட்டி சக்கையாய்ப் பிழிந்துதான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.. பணியாட்களுக்குப் போதிய அவகாசம் அளித்து வேலை வாங்குதல் என்பது கிடையாது. தலையை அப்படி இப்படித் திருப்ப இயலாது. ரெண்டு வார்த்தை பொழுது போக்காய்ப் பேசி விட முடியாது. தலையில் குட்டு விழும். அத்தனையும் பொறுத்துக் கொண்டு தையல் வேலைக்கு வர பெண்கள் இருந்துகொண்டேதான் இருந்தார்கள். இரண்டு பக்கமும் தேவை இருந்தது.

தையல் பயிற்சி தர என்று ஒரு வீடு அமர்ந்தியிருந்தார் முதலாளி. அதைக் கற்றுக் கொள்ள ஆட்கள் வரிசையில் நின்றார்கள். அப்ரென்டிஸ் என்று மிகக் குறைந்த தொகையே கொடுக்கப்பட்டது. அங்கு ஒரு நாளுக்கு இத்தனை துணி என்று தைத்துக் காண்பித்தால்தான் நிறுவனத்திற்கே அனுப்புவார்கள். அந்தக் கஷ்டமெல்லாம் முடித்துதான் வேலையை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. மற்றவர்கள் செய்து முடிப்பதைவிட சற்று எண்ணிக்கை கூடவே இருக்கும் இவள் கணக்கில். அதனால் நிலைத்தாள். ஆள விடுங்கடா சாமிகளா…என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடினவர்கள்தான் அதிகம்.  வீட்டுக்கு வந்து நிம்மதியாய்ச் சாப்பிடக் கூடப் பொறுமை இருக்காது. உடம்பு அப்படியொரு தவிப்பில் உருகும். என்னைப் படுக்கையில் கிடத்து என்று மனசு கெஞ்சும்.

மனோகரனின் தாய் நல்லவள். நீ கண்டிப்பா வேலைக்குப் போகத்தான் வேணுமா? என்றுதான் கேட்டாள். ஏம்மா…அந்தக் காசு வந்தா வீட்டுக்கு ஆகும்ல…போகட்டும்மா….வீட்டுல உட்கார்ந்து என்ன செய்யப் போறா? என்று விட்டான் மனோகரன். தையல் மிஷினை விட்டு இப்படி அப்படி அசையாத அந்த வேலை அவள் உடம்பைச் சிதிலமாக்கிக் கொண்டிருந்தது. இளம் வயசிற்கான எந்த உற்சாகமோ, துடிப்போ அவளிடம் காணப்படவில்லை. கசங்கிய துணியாய் வந்து விழுந்து அடுத்த கணம் கண் செருகி விடும். அவள் ஸ்திதி அறியாதவன் மனோகரன். அவனுக்கு அவன் எண்ணம்தான்…நோக்கம்தான். அதில் அவளுக்கு மிகுந்த ஆதங்கம். தன் சங்கடங்களை அறியாதவனாய், ஆறுதலாய்க் கேட்கக் கூடத் தெரியாதவனாய் இருக்கிறானே என்று மனதுக்குள் புழுங்குவாள்.

எப்பப் பார்த்தாலும் கக்கூஸ்தானா? எதுக்கு இப்டி அடிக்கடி போயிட்டிருக்கே? இந்தத் தீனிக்கே இப்டிப் போனீன்னா…இன்னும் வசதி வாய்ப்போட இருந்திட்டாலும்…? – வீட்டில் எல்லோர் முன்னிலையிலும்தான் மனோகரன் சத்தம் போட்டான் அவளை. தனியாகச் சொல்ல வேண்டியவைகளைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்…இப்படித் தம்பி தங்கைகள் முன் கேலி செய்வது போல் கண்டிப்பது போல் சொன்னால் அவர்களுக்கு அண்ணியின் மேல் மதிப்பு மரியாதை எப்படி வரும் என்கிற சூட்சுமமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரியாதா அல்லது அவனது அதிகாரத்தை எல்லோர் முன்னிலும் காண்பிக்க வேண்டுமென்று தன்னைத் திட்டித் தீர்க்கிறானா என்று  சந்தேகமாகத்தான் இருந்தது மல்லிகாவிற்கு. செய்யும் அதிகாரத்தை, அவனோடு தனியே இருக்கும்போது காட்டினால் போதாதா? என்று நினைத்தாள் அவள்.

வீட்டிலிருப்பவர்கள் முன் எப்போதும் அவன் அவளிடம் சுமுகமாகப் பேசியதேயில்லை. ஏன் அப்படி என்று நினைத்தாள். பெண்டாட்டிதாசன் என்று நினைத்து விடுவார்களோ என்று கூச்சம் கொள்கிறானோ? என்று தோன்றியது. பல முறை கவனித்து விட்டாள்தான். அவன் அம்மாவிடமோ அல்லது தம்பி, தங்கைகளிடமோ சகஜமாகப் பேசுவதுபோல் அவளிடம் என்றுமே பேசியதில்லை. தனியாக இருக்கும்போதாவது அப்படிப் பேசி நடந்து கொண்டிருக்கிறானா என்று யோசித்தும், இல்லை என்கிற பதில்தான் கிடைத்தது. தன்னைப் பிடிக்கவில்லையோ என்றும் அடிக்கடி சந்தேகம் வந்தது.

இரவில் அவன் நடந்து கொள்ளுகிற முறை? அதுவும் கொடூரம்தான். இரையைக் கவ்விக் குதற நினைக்கும் கொடிய மிருகம் எப்படி இயங்குமோ அப்படி ஆக்ரோஷமாக இருந்தது அவனது அணுகுமுறை. ஒரு பூவைப் போல் ரசித்து, முகர்ந்து மென்மையாய் ருசிக்க வேண்டும்…அதில் அவள்பாலான தன் பேரன்பை அவளுக்கு உணர்த்த வேண்டும், நானே உனக்கு என்றுமான காவலன் என்று அந்த நெருக்கத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதான மென்மைப் போக்கெல்லாம் அவனிடம் இல்லை. அதை எதிர்பார்த்தாள் அவள். விநோதமாய்ச் சில சமயம் பேசுவான். அவளோடு சேர்ந்திருக்கும்போது ஏதேனும் ஒரு நடிகையைச் சொல்லுவான். அவளை மாதிரி ஒருவாட்டி சிரியேன் என்பான். என்னானாலும் அவ தொடை மாதிரி வராதுடீ….!  என்று சொல்லிக்கொண்டே அவள் காலைத் தூக்கித் தன் மேல் போட்டு இறுக்குவான். தனியாய்த் தூங்குகையில் நடிகைகளைக் கனவு கண்டு கொண்டிருப்பானோ என்று தோன்றும். அவன் குப்புறக் கிடக்கும் கிடப்பு அந்த மாதிரி எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

கூட மில்லில் வேலை பார்க்கும் செவ்வந்தியை அடிக்கடி சொல்லுவான். அவ ஸ்டெரச்சரப் பார்த்திட்டே இருக்கலாம்…என்று மயக்கமாய் ஏங்குவான். அந்த வார்த்தையைக் எங்கிருந்து கண்டு பிடித்தான் தெரியாது. தன்னை அணுகும்போது வேறு எவளையாவதுபற்றி அவன் என்றும் பேசாமல் இருந்ததில்லை என்பதே அவளுக்குப் பெரிய ஆதங்கமாய் இருந்தது. போதுமான கவர்ச்சி தன்னிடம் இல்லையோ என்று மறுகினாள். அவன் அணைப்பிற்கும், புரட்டலுக்கும், இறுக்கலுக்கும் திருப்தியான பெண்ணாய்த் தான் இல்லையே என்று வருந்தினாள். உடம்பத் தொடைச்சிட்டு வந்து படு…நாறித் தொலையுது…என்று கறுவுவான். துணி மாற்றிக் கொண்டுதான் அவனோடு போய்ப் படுப்பாள்.

 மனோ அப்பாதான் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சுத் துகள்களுக்கு நடுவே வேலை செய்வது அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மூச்சிழுப்பு வந்தது. சரியாக வேலைக்குப் போகாமல் இருத்தல், சுருட்டி மடக்கிப் படுத்துக் கொள்ளல், சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது வெளியூர் போய், நண்பர்களோடு சுற்றிவிட்டு சாவகாசமாய் வருதல் என்று அடம் பிடித்தவன்தான். ஒரு வட்டத்துக்குள் அவனைச் சிக்க வைக்க அவன் தந்தை பெரும்பாடு பட்டார்.  ஒரு கட்டத்தில் தாயார் சொல்லுக்குத்தான் அடங்கினான். குடும்பத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லிப் பணிய வைத்தது அவன் அம்மாதான்.

அவன் சொல்லித்தான் அவளை அவன் அப்பா போய்ப் பார்த்து முடிவு செய்தார். கல்யாணத்தின்போதெல்லாம் கொஞ்சம் பூசினாற்போலத்தான் இருந்தாள் மல்லிகா. அடியே…உன் சிரிப்புலதாண்டி விழுந்தேன்… என்று சொன்னான் மனோகரன்.  என்ன காரணம் என்றே தெரியவில்லை அவள் உடம்பு அதற்குப்பின் ஏறவேயில்லை. சரியாவே சாப்பிடமாட்டா…வேல…வேலன்னு ஓடிடுவா…கொஞ்சம் பார்த்துக்குங்க…என்று மல்லிகாவின் தாய் கண் கலங்கியபோது….மனோகரனின் அம்மா…நானும் ரெண்டு பெண்டுகள வச்சிருக்கிறவதான்…ஒண்ணும் கவலைப்படாதீங்க…என் மக மாதிரிப் பார்த்துக்கிடுறேன்….என்று சமாதானம் சொன்னாள். வாயால்தான் வழிய விட முடிந்தது. வீட்டில் வசதி வாய்ப்பா பெருகிக் கிடக்கிறது? இருக்கும் குச்சிலுக்குள் ஏழு பேர் கும்மியடிக்க வேண்டியிருந்தது. கால் வீசி நடந்தோம் என்பதில்லை. எதிலாவது இடித்துக் கொண்டேயிருந்தது. ஒதுக்கி வைக்க இடமில்லை என்று பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள் நடைபாதை ஓரமாய் வரிசை கட்டியிருந்தன. கவனிக்காமல் நுழைந்தால் இடிதான். அப்படி எத்தனையோ முறை தடுக்கிக் கொண்டிருக்கிறாள் மல்லிகா. அந்த வீட்டில் பாதகமின்றி நடப்பதற்கே தனிப் பயிற்சி தேவையாயிருந்தது.

உங்க ரெண்டுபேர் சம்பளத்துலதாம்மா இந்தக் குடும்பத்துல உள்ள ஏழுபேரும் சாப்பிடணும்…என்று சொன்னாள் மல்லிகாவிடம். மனோகரனின் அப்பா ஓய்வு பெற்றபோது வந்த சேமநலநிதிப் பணம், சம்பள சேமிப்புப்  பணிக்கொடைப் பணம் என்று ஏதோ கொஞ்சத்தை வங்கியில் டெபாசிட் பண்ணியிருந்தார்கள். அதிலிருந்து வட்டி வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கடி நெஞ்சு வலி, முழங்கால் மூட்டு வலி என்று ஆஸ்பத்திரிக்குக் கொடுக்கவும் சரியாய் இருந்தது. நான் கருத்தா சேர்த்த பணமெல்லாம் இப்டிக் கரியாப் போகுதே என்று புலம்பினார். இதுக்குத்தான் வீட்டுல முடங்கமாட்டேன்னு சொன்னேன்…நெல்பேட்ட கோடவுனுக்கு வேலைக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டீங்க….இப்ப தண்டமா உட்கார்ந்து செறிக்கமாட்டாமத் தின்னுட்டு வெட்டிக்கு உட்கார்ந்திட்டிருக்கேன்…..என்று கண்ணீர் விட்டார்..

பலவற்றையும் போட்டு மனதில் புழுங்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. வெளியில் சொல்ல முடியாததும், ஆதரவற்ற நிலையும், அப்படிச் சொல்லப் புகுந்தால் என்ன நடக்குமோ என்கிற பயமும், அவளுக்கு பலவிதமான உடல் உபாதைகளை விடாது ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எண்ணமும் மனசும் நடுங்கிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் சுதந்திரமாய் இயங்குவது? நம்பிக் கை பிடித்த நாயகனே நழுவி நழுவி நிற்கும்போது எந்த ஆதரவை எதிர்நோக்கி அவள் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாள்?

       வீட்டுக்கு வீடு அம்மிக்கல் போட்டு டங்கு டங்கென்று இடித்து அரைக்கக் கூடாது என்று பொதுவாக இரண்டே இரண்டு அம்மிகள் மட்டும் கிடந்தன அங்கே.  ஓரமாய் நீளவாக்கில் வாய்க்கால் போல் கோடிழுத்து இருபக்க சரிவாகக் கட்டிவிடப்பட்டுள்ள  இடத்தில் பாலம் போல் சுவற்றோடு சுவராக அந்த அம்மிக்கல்கள் பதிக்கப்பட்டுக் குந்தியிருக்கும். அழுக்குத் தண்ணீரும் எச்சிலும் துப்பலும் வாய்க்கால் வழி ஓடிக் கொண்டிருக்கையில்தான் குழம்புக்கோ, சட்டினிக்கோ அரைக்க வேண்டியிருக்கும். அந்த அசிங்கமெல்லாம் பார்க்க முடியாது அங்கே. அதுபாட்டுக்கு அது…இதுபாட்டுக்கு இது…! கீழ் வீட்டிலிருப்போர் அனைவரும் பல் விளக்குவது,  கார் கார் என்று உமிழ்வது, முகம் கைகால் கழுவுவது, ஏன் அவசரத்துக்கு வெட்ட வெளியில் குளிப்பது என்று கூட அனைத்தும் அங்கேதான் நடந்தது. ஆண்கள் குளிக்கையில் வாளித் தண்ணீரோடு கடப்பது இவளைக் கூனிக் குறுக்கி விடும். வந்து தொலைக்கிறதே..சனியன்…!

மூன்று கழிவறைகளையொட்டி இரண்டே இரண்டு குளியலறைகள்..! அதில் பெண்கள்தான் போய்க் குளிப்பார்கள். கீழ் வீட்டு ஆண்கள் பூராவும் வெட்ட வெளிதான். பொந்தாம் பொசுக்கென்று துண்டைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி இப்படித் திரும்பும்போது ஈரத் துண்டோடு தெரியத்தான் செய்யும். பொருட்படுத்தமாட்டார்கள். அன்ட்ராயர், ஜட்டியோடு ஆனந்தமாய்ப் போடும் குளியல் வெயில் சூட்டோடு இதமாய்ப் பரிமளிக்கும். அந்தப் பகுதியிலேயே இதெல்லாம் சகஜம். வீட்டிற்குள் துளியும் இடம் இல்லாதவர்கள், வாசலில் ஒரு கல்லைப் போட்டு, அதன் மீது அமர்ந்து எனக்கென்ன என்று ஜலக்கரீடை செய்வார்கள். பொம்பிளைகள் வெட்ட வெளியில் தங்கள் புருஷனுக்கு  முதுகு தேய்த்து விடும் காட்சி அன்றாடம் அந்தப் பகுதியில் சர்வ சகஜம்.

 புழக்கம் யார் கண்ணிலும் படாத மாடி வீடு என்பது ஒன்றுதான் அங்கு உள்ள  ஒரே வசதி. அத்தோடு இட நெருக்கடி ஏற்படுகையில் சட்டென்று மொட்டை மாடிக்குச் சென்று உட்கார்ந்து கொள்ளலாம். சுள்ளென்று வெயில் தகிக்கும் காலங்களில் அதுவும் நடவாது. இரவில்தான் வசதி. அந்த மொட்டை மாடிக்கு யாரும் வரமாட்டார்கள். காரணம் மாடிவீட்டின் அடுப்படி வழியாக அந்தப் படிக்கட்டு செல்வதுதான். அதன்படி பார்த்தால் மாடியில் குடியிருப்பவர்களுக்குத்தான் மொட்டை மாடியும் என்றாகிவிடுகிறதே…! படியை வெளியே விட்டிருந்தால் அடுப்படி சுருங்கிப் போயிருக்கும். அதனாலேயே நூறு ரூபாய் வாடகை அதிகம். ஆனால் எப்போதேனும் மாடிக்கு வரும் கீழ் வீட்டுக்காரர்களிடம் அதைச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லி, சண்டை வந்து, அதனாலேயே வீட்டைக் காலி செய்து கொண்டு போனவர்கள்தான் இதற்கு முன்பு இருந்தவர்கள். கீழ் வீட்டுக்காரர்களுக்கும் மாடியில் உரிமையுண்டு என்ற விபரம் முன்பு காலி செய்து கொண்டு போனவர்கள் வழி தெரிய வந்தது.

       அங்க ஏன் போறீங்க…? அந்தம்மா பெரிய அடாவடியாச்சே…! என்றுதான் முதல் தகவல் அறிக்கை. ஆனாலும் கட்டுபடியாகும் வாடகை என்று தேடும்போது சில பிரச்னைகள் பெரிதாய்த் தோன்றுவதில்லை! அதென்னவோ இவர்கள் குடி வந்ததிலிருந்து யாரும் மாடிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.

       நா போறேன்….வந்திரணும்….. –குரலில் ஒரு கடூரம். சத்தமின்றி அவன் மாடி ஏறுவது அந்த இருட்டுக்குள் தெரிந்தது. இவள் எழுந்திரிக்க மனமின்றிப் படுத்திருந்தாள். அந்த இடத்தில் அவர்களோடு படுத்திருக்கும் கதகதப்பு மேலே போனால் அவளுக்குக் கிடைக்காது. கோடைகாலம்தான் என்றாலும், பாதி இரவுக்கு மேல் ஒரு குளிர் காற்று வீச ஆரம்பிக்கும். அந்தக் காற்று இவளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. மூக்குக்குள் நெரு நெருவென்று நிமிண்டிக் கொண்டேயிருக்கும். மறுநாள் அது தும்மலாக மாறும் அபாயமுண்டு. தடுமம் வந்து விடக் கூடாதே என்று பயந்து சாவாள் மல்லிகா. காட்டுக் கத்துக் கத்துவான்..

நச்சு நச்சென்று தும்மல் போட்டால் அவனுக்குப் பிடிக்காது. ஒரு கர்சீப்பை வச்சிக்கிட்டுத் தும்மித் தொலைய வேண்டிதானே? இப்டியா வீடு பூராவும் சாரலடிக்கிற மாதிரிப் பொழிவே? வாய் நாத்தம் பரவலா அடிக்குது…என்று ஒரு நாள் அவன் சொல்லி வைக்க தங்கைகள் இருவரும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். அதற்குப் பிறகாவது அவனின் அம்மாதிரியான பேச்சுக்களை நிறுத்திக் கொண்டிருக்கலாம். வீட்டிலிருப்பவர்கள் முன் தன் மனைவியைக் கண்டிப்பதோ, கேலி செய்வதோ கூடாது, அப்படியிருந்தால் அவர்களுக்கு அவள் மீது மதிப்பு மரியாதை இருக்காது என்பதை அவன் உணர வேண்டும். ஆனால் அவனுக்கு அது தெரிவதில்லை. அவன் எதிர்பார்க்கும்போதெல்லாம் அலங்காரப் பதுமையாய் அவன் முன் நின்றாக வேண்டும். உடலுறவுக்கு என்று தவிர வேறு எவ்வகையிலும் அவன் அவளை அணுகியதில்லை. பெண்டாட்டி அதற்கு மட்டும்தான் என்பதில் தீர்மானமாய் இருந்தான். மற்றப்படி அவளது தேவைகளை அவளே உணர்ந்து சொல்லி, அதற்கு நாலு முறை சலித்து, கோவித்து ஒதுங்கி, பிறகுதான் சரி வா…போவோம் என்பான்.அப்படியாவது செய்கிறானே என்றுதான் இருந்தது இவளுக்கு.

த்தமின்றி எழுந்தாள். யார் மீதும் கால் பட்டு விடாமல் புடவையை இழுத்துக் கொண்டு தாண்டினாள். மேலே போவதற்கு முன் ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து விடுவோம் என்று தயாராயிருந்த வாளித் தண்ணீரை எடுத்துக் கொண்டு இறங்கினாள். சிறுநீர் கழிக்க என்றாலும் தண்ணீரை அடித்து ஊற்றாமல் வர முடியாதே…! நாற்றம் வாசல் வரை அடிக்குமே…! வழியெல்லாம் படுத்திருக்கிறார்களே?  அந்த நடு இரவு நெருங்கும் நேரத்தில் அப்படி கக்கூஸ் நோக்கிப் போவது ரொம்பவும் சங்கடமாயிருந்தது. அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்தம் வந்தால் கோபப்படுவார்கள். தூக்கத்தில் உளறுவதுபோல் என்னவாவது கெட்ட வார்த்தையைப் பேசித் திட்டுவார்கள். பதிலுக்குக் கோபித்துக் கொள்ள முடியாது. வழியில் கால்மாடு, தலைமாடாக ஆட்கள் படுத்திருந்தார்கள். எப்போது தூக்கத்தில் புரளுவார்கள் என்று சொல்ல முடியாது என்கிற ஜாக்கிரதையில், யார் மீதும் கால் பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் தாண்டித் தாண்டிப் போய் கழிவறையை அடைந்தபோது, அவளுக்கு திடீரென்று வயிற்றைக் கலக்கியது. ஒன்றுக்கு வந்த இடத்தில் ரெண்டுக்குப் போகணும் போல உறுத்தியது. கதவைச் சாத்தியபோது அந்தத் தகரக் கதவு கரகரவென்று சத்தமிட்டது. அழுத்தி உள் கொக்கியைப் போட்டாள். அதற்குக் கூட சக்தியில்லை அவளிடம். கையும் காலும் வெலெ வெலவென்று வந்தது.

சனியம்பிடிச்ச வயிறு….வெறுமே பட்டினி போட்டாத்தான் சரிப்படும் போல்ருக்கு…- என்னவோ சுருட்டிக் கொண்டதுபோல் வயிற்றைப் பிசைந்தது. சூடு பிடித்துக் கொண்டதுபோல் ஒன்றுக்கு வர மறுத்தது. மாத ஒதுக்கலுக்கு நாளாகி விட்டதோ என்று அப்போதுதான் நினைப்பு வந்தது அவளுக்கு. வந்த நேரம் உடம்பில் இருந்த பதட்டத்தில் அது நடந்தே விட்டது. அதற்கென்ன நேரம் காலமா குறித்து வைத்திருக்கிறது?

ப்பச் சொன்னேன்…எப்ப வர்ற நீ…? என்றான் அவன். உனக்காக முழிச்சிக்கிட்டு தவங்கிடக்கணுமா நான்..? .என்று தொடர்ந்து. சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்துச் சடாரென்று இழுத்துக் கீழே சாய்த்தான். மாத விலக்குப் பெற்று,  மாடி வந்து இருட்டோடு இருட்டாக அதற்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு அவள் மொட்டை மாடியை அடைய, உடலும் மனசும் தளர்ந்து கிடந்த அந்தக் கணத்தில் அதை அறியாத அவனின் செய்கை அவளுக்கு அசாத்திய எரிச்சலையும், கோபத்தையும் கிளர்த்தியது. அவளை இழுத்து இறுக்கி அவன் அணைத்த அந்தக் கணத்தில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று முடிவுசெய்து அவள் சொன்னாள்..

”ஏங்க….நாம ஒரு தனி வீடு பார்த்திட்டுப் போயிடலாமே….இங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது தெனமும்….”

அவள் சொன்னதைக் காதில் வாங்கியதாகவே தெரியாமல், கலவி மயக்கத்தில் கண்கள் செருக… அவன் அவளை மேலும் இறுக்கி நெருக்கினான்…! …அதையும் பொறுத்துக் கொண்டு, அவன் மூச்சுக் காற்று அவள் மேல் படர அனிச்சமாய் அவள் குழைந்து தழையும் முன் மேலும் உண்டான தன்னுணர்வில் மீண்டும் அவன் காதுக்கு நெருங்கி அதைத் துல்லியமாய்ச் சொன்னாள். “இன்னைக்கு எதுவும் வேண்டாங்க….!”

சக மனிதன்

உஷாதீபன் 

டது தோளை அவர் அசைக்கவேயில்லை. இருக்கையின் பிடியில் இடது கையைப் பதித்திருந்தார். அத்தனை ஆசுவாசமாகவும், அழுத்தமாகவும் தலை சாய்ந்திருந்தான் அந்த ஆள். மெலிந்த சரீரம். அவனது மொத்த எடையையும் அவரே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். சட்டை பட்டன்கள் அவிழ்ந்து அந்த மங்கிய இருட்டிலும் வியர்வை சொரிவது தெரிந்தது. இடது தோளிலிருந்து முழங்கை வரை சற்று மரத்துப் போனது போல்தான் இருந்தது. மணிக்கட்டோடு கையை மட்டும் அசைக்க முடிந்தது. அவன் லேசாக எழும்பினால் இடது சுவர்ப்பக்கமா சாய்ஞ்சுக்குங்க என்று சொல்லலாம் என எண்ணினார். அதற்காக விரல்களைத் தாளம் போடுவது போல் கைப்பிடியில் மெல்ல சத்தமெழுப்பினார். எந்தச் சலனமுமில்லை.

படம் ஓடும் சப்தத்தில் இது எங்கே காதில் விழப் போகிறது அவனுக்கு. வந்தது முதலே தூங்க ஆரம்பித்துவிட்டான். தூங்கிக் கொண்டேதான் வந்தான் என்றும் சொல்லலாம். நியூஸ் ரீலுக்கு முன்பு போட்ட விளம்பரம் கூட அவன் பார்க்கவில்லை. தூங்குவதற்காகவே தியேட்டருக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. காசு கொடுத்துத் தூங்குகிறான்.  வரிசைக் கடைசி, சுவர் ஓர இருக்கையில் அமர்ந்தால் ஏ.சி. சரியாக வராதோ என்ற சந்தேகத்தில் அதற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார் பூவராகன். ஏ.சி. ஓடுகிறதா என்று சந்தேகமாய் இருந்தது. குளிர்ச்சியே இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்துத் தெரியலாம். தோளை லேசாகக் குலுக்கினார். அவன் உறக்கம் கலைந்து அதற்கு வேறு சண்டைக்கு வந்தால்? என்று தோன்றியது. இன்னொரு முறை குலுக்கிப் பார்த்தார். பலனில்லை. இருக்கும் இருப்பைப் பார்த்தால் படம் முடியும் வரை அவன் விழிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றியது.

தேடி வந்ததுபோல், அல்லது குறி வைத்து நுழைந்ததுபோல், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கை என்பதாய் எண்ணி வருவதுபோல் அவன் அந்த வரிசையில் நுழைந்தான். பத்துப் பேரைக் கடந்து வந்து அமர வேண்டும். தனி ஆட்களாகவும், மனைவி மக்களோடும் அமர்ந்திருந்தார்கள். அத்தனை இருக்கைகளிலும் ஆட்கள் இருக்க, இடித்தும், பிடித்தும், தடுமாறியும் ஏதோவோர் வேகத்தை உணர்ந்தவனாய்   நுழைந்தான் அவன். யார் காலையோ மிதித்து விட்டான் போல அவன் கடந்ததும், அவர் அவனை நோக்கி கையை நீட்டியும் நீட்டாமலும்  என்னவோ சொல்லித் திட்டினார். தடுமாறி ஒருவர் தொடையில் கையை வைத்துத் தாங்கிக் கொண்டான்.  காதில் விழக் கூடாது, சண்டை வேண்டாம் என்பது போல் திட்டியவர்,  முனகினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் எதையும் பொருட்படுத்தியவனாய் இல்லை. வந்து சேர்ந்த விதமும், பொத்தென்று இருக்கையில் விழுந்த விதமும் ஒரே இணைப்பாக இருந்த அந்த மொத்த வரிசையையும் ஒரு குலுக்குக் குலுக்கிற்று. பலரது தலையும் முன்னெழும்பி அவனை அந்த அரையிருட்டில் பார்த்தது. சுத்தக் காட்டானா இருப்பான் போல்ருக்கு!- ஒருவர் சத்தமாகவே சொன்னார். அதுவும் அவன் காதில் விழவில்லை. முழு நினைவில் இருந்தால்தானே! இப்போது அவன் உலகம் வேறு!

லேசாக சுவற்றைப் பார்த்து எச்சில் உமிழ்ந்து கொண்டதுபோல் இருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டார் இவர். முட்டக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.. புளிச்ச வாடை அவனிடமிருந்து வீசியது. படம் முடிந்து போகும் வரை இந்த அவஸ்தை உண்டு என்று அந்தக் கணமே தோன்றியது இவருக்கு. கர்சீப்பை எடுத்து வாயையும் மூக்கையும் அழுந்தப் பொத்திக் கொண்டார். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல!-நினைத்துக் கொண்டார். கண்கள் சொக்கிக் கிறங்கியது அவனுக்கு. விளம்பரம் முடிந்து நியூஸ் ரீல் ஓட ஆரம்பித்திருந்தது. எதுவும் பார்க்கவில்லை அவன். நமக்குன்னு இடம் அமையுதே என்று நினைத்துக் கொண்டார். வேறு எங்கும் இடம் இல்லாதது கண்டே அந்த இடத்தைப் பிடித்தார். எண்ணிட்ட இருக்கைகள் இல்லை. இஷ்டம்போல் அமர்ந்து கொள்வதுதான். முதலில் வருபவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தாமதமாய் வந்தால் அப்படித்தான்! அதுக்காக இப்படியா அமையணும்? காசு கொடுத்து சங்கடத்தை விலைக்கு வாங்குவது இதுதான்!

எப்போதுமே வரிசை நுனியில்தான் அமர்வார். அப்போதுதான் சட்டென்று எழுந்து விருட்டென்று எல்லோருக்கும் முன்பு வெளியேற முடியும். அவரது தேர்வு வரிசை நுனி இருக்கைகள்தான். பாத்ரூம் போய் வருவதற்கும் அதுதான் வசதி அவரைப் பொறுத்தவரை. இன்று அப்படி அமையவில்லை. அத்தோடு கிளம்பும்போதே மிகவும் தாமதமாகி விட்டது. போவமா இருந்திருவமா என்று நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்து விட்டார். டூ வீலரில் வருகையிலேயே மனதுக்குள் ஏகத் தடுமாற்றம். பாதியில் வண்டியை வளைத்து வீடு திரும்பி, மீண்டும் தியேட்டருக்கு விட்டு ஏகக் குழப்பம்.

இத்தனைக்கும் மிருணாளினியிடம் சொல்லவில்லை. வெளில போய்ட்டு வர்றேன் என்றுதான் கிளம்பினார். அவளும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை. எப்பொழுதுமே கேட்கமாட்டாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அருகே சம்மந்தபுரம் பார்க்குக்குப் போகப்போகிறார். போய் நண்பர்களிடம் அளவளாவிவிட்டு வருவார். வெளியே வரும்போது வழக்கம்போல்  ஒரு தேங்காய் போளி, ஒரு பருப்பு போளி சாப்பிடுவார். அத்தனை நேரம் வயதொத்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, பிறகு தான் மட்டும் வந்து அந்த போளியைப் பதம் பார்ப்பது என்பதில் அவருக்கு ஒன்றும் சங்கடம் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ருசியில் இருந்தார்கள். சிலர் சுண்டல் வாங்கி உண்டார்கள். இன்னும் சிலர் சூடாக வேப்பெண்ணெய் மணக்க வறுத்த  கடலைப் பருப்பை  வாங்கிக் கொரித்தார்கள். அவரவர் டேஸ்ட் அவரவருக்கு. கூடி உட்கார்ந்து மணிக்கணக்காய்ப் பேசுபவர்கள், தின்பதில் பிரிந்து போவார்கள். இவருக்கு சின்ன வயது முதலே போளி என்றால் பிரியம். அம்மா கையால் செய்த போளியின் ருசி மறக்காது இன்னும் அவர் நாக்கில் தவழ்கிறது. ஏங்கித் திரிந்த காலம். அது பணக்காரர்கள் பண்டம் என்ற நினைப்பிருந்தது மனதில்

அவர்களுக்காக அவள் செய்ததில்லை. அதற்கான வசதியும் இருந்ததில்லை. ஏதாவது விசேடம் நடக்கும் வீட்டில் அழைத்திருப்பார்கள். முறுக்கு சுற்ற, பலகாரம் செய்ய என்று. அம்மா போய் வரும்போது நாலு கட்டித் தருவார்கள். மூன்று  சகோதரர்கள், சகோதரிகள் மத்தியில் அதற்கு அடிபிடி. ஆளுக்கொன்றாவது வேண்டாமா, இன்னும் ரெண்டு சேர்த்துத் தாருங்கள் என்று அம்மா கேட்க மாட்டாள். கொடுத்ததை வாங்கி வருவாள். கொடுக்காவிட்டாலும் வந்து விடுவாள். கேட்கமாட்டாள். முறுக்கு சுத்தப் போனியேம்மா ஒண்ணும் கொண்டு வரல்லியா? என்று கேட்டு அழுதால், அடிதான் விழும். அவா கொடுத்தாத்தான் இல்லன்னா இல்ல. புரியுதா? அப்டியெல்லாம் எதிர்பார்த்து நாக்கைத் தீட்டிண்டு இருக்கக் கூடாது புரிஞ்சிதா? இது அம்மாவின் கண்டிப்பு.

திட்டமாய் வளர்ந்தவர் அவர். எந்த செயலுக்கும் சில முன் தீர்மானங்கள், முடிவுகள் என்பது உண்டு. ஒரு சினிமா போவதென்றால் கூட இந்த நேரத்திற்குள் கிளம்ப வேண்டும், இந்த நேரத்திற்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்று வரித்துக் கொள்வார். இஷ்டம்போல் கிளம்பி, இஷ்டம்போல் வந்து சேருவது என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற செயல். ஆனால் இன்று உண்மையிலேயே கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுதான். தடுமாற்றம்தான் காரணம். புறப்படுகையில் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. பாத்ரூம் போய்விட்டுக் கிளம்பினார். முதல் தடங்கல். போவோமா அல்லது அப்படியே இருந்து விடுவோமா என்றும் தோன்றியது. கொஞ்சம் தண்ணி கொண்டா என்றார் மனைவியிடம். பெரிய டம்ளர் நிரம்பக் கொண்டு வந்தாள் அவள். நல்லவேளை சொம்புல எடுத்திட்டு வரல என்றார். ஒரு வாய் தொண்டைய நனைக்கன்னு கேட்டா இவ்வளவா? என்று விட்டு எழுந்து நடந்து விட்டார். அவர் கண் முன்னால் அந்த மீதித் தண்ணீரை வாசல் செடிக்கு அவள் வீசியது அவளது கோபத்தைக் காட்டியது. தூக்கித்தானே குடிச்சேன் எச்சிலா பண்ணினேன் தூரக் கொட்டுற? என்றவாறே கிளம்பி விட்டார்.

அன்று மிருணாளினியிடம் சிறு மனத்தாங்கல். அதை வெளிப்படையாய் அவளிடம் கேட்கவில்லை. அவளாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். செய்து முடித்துவிட்டுச் சொன்னாள் அவள். முன்பே சொன்னால், தான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம் என்கிற நம்பிக்கை அவளுக்கு ஏன் இந்த வயதிலும் வரவில்லை என்பதை நினைத்தார். பெண்கள் சம்பாதிக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு சுதந்திரம் தானாகவே வந்து விடுகிறது. Financial freedom. அது தன்னெழுச்சியானது. மற்றவரை லட்சியம் செய்யாதது. அலுவலகத் தோழிகளோடு எதிர் வங்கிக்குப் போய் அவள் அக்காவிற்குப் பணம் அனுப்பியிருக்கிறாள். இதற்கு முன்பு ஒரு தரம் அப்படிச் செய்தபோது இவனிடம் சொல்லி வங்கிக்குக் கூட்டிப் போனாள். RTGSல் பணம் எப்படி அனுப்புவது என்பதை அன்று தெரிந்து கொண்டாள். இந்த முறை அவளாகவே செய்திருக்கிறாள். முன்னதாகவே சொல்வதானாலும் “எங்க அக்காவுக்குப் பணம் அனுப்பப் போறேன்..“ என்றுதான் சொல்வாள் முடிவு பண்ணிவிட்டதைத் தெரிவிப்பதுபோல் தகவல் வரும். அனுப்பட்டுமா? என்ற முறைக் கேள்வியெல்லாம் இல்லை. தடுப்பேன் என்று அவளாகவே நினைத்துக் கொள்வாளோ என்னவோ? அல்லது அப்படிச் செய்வதில் அவளுக்கே ஒரு உறுத்தல் அல்லது தயக்கம் இருந்ததோ என்னவோ? அவள் என்ன வாங்குகிறாள் என்று கூட இன்றுவரை இவர் கேட்டதில்லை. பணம் என்பது ஒரு காரணி. அதுவே வாழ்க்கையில்லை.

இப்போது அவன் மிக நன்றாய்ச் சாய்ந்திருந்தான் இவர் தோளில். அவனை எழுப்ப ஏனோ இவருக்கு மனசாகவில்லை. தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று அவன் அயர்ந்திருந்தான்.  இப்படி ஒருவன் தூங்கக் கொடுத்து வைக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டார். அவன் முகம் வற்றியிருந்தது. பாவமாய்த்தான் தெரிந்தது. ஒரு வேளை தன்னைப்போலவே பெண்டாட்டியிடம் சண்டை போட்டு விட்டு, ஏற்றிக் கொண்டு வந்திருப்பானோ? நல்ல உறக்கம் என்பது ஒருவனுக்குக் கிடைக்கும் கிஃப்ட். ஓய்வு பெற்ற பிறகு சமீபத்தில்தான் இந்த உறக்கம் அவரிடம் குறைந்திருக்கிறது. இரவு பத்து மணிக்குக் கண்ணசந்தார் என்றால் படக்கென்று தூங்கி விடுகிறார்தான். அடுத்தாற்போல் ரெண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்து விடுகிறது அவருக்கு. சிறுநீர் கட்டி நிற்கிறது. அது எழுப்பி விடுகிறது. மீண்டும் வந்து படுக்கையில் தூக்கம் பிடிக்கத் தாமதமாகி விடுகிறது. ஆக நாலு மணி நேர உறக்கம் என்பதுதான் உத்தரவாதம்.

பிறகு படுத்துப் புரண்டால், என்னென்னவோ நினைப்புகள் வந்து விடுகின்றன. குடும்பத்தில் சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை, திருமணம் செய்வதற்கு முன் தங்கைமார்கள் படுத்திய பாடு, அலுவலகத்தில் திடீர் திடீர் என்று அவருக்குக் கிடைத்த மாறுதல்கள், தர்மபுரி, பாலக்கோடு,  கிருஷ்ணகிரி என்று தூக்கியடித்தது.. உள்ளூர் வரப் படாத பாடு பட்டது. தன் விண்ணப்பம் சீனியாரிட்டியில் வைக்கப்படாமல், அதற்குரிய பதிவேட்டில் பதியப்படாமல், வேண்டுமென்றே காணாமற் போக்கியது, கடைசியில் சி.எம். செல்லுக்கு மனுப்போட்டு நியாயம் கிடைத்தது அடேயப்பா எத்தனை துன்பங்கள், அலைக்கழிப்புகள்?.

எல்லாக் காலத்திலும் மிருணாளினி தனியாய்த்தான் இருந்து கழித்திருக்கிறாள். ராத்திரிதான் பயமாயிருக்கும் மத்தப்படி ஒண்ணுமில்ல என்பாள் சாதாரணமாய். ஒருவேளை தான் இல்லாமல் இருந்ததே அவளுக்குப் பெருத்த நிம்மதியாய் இருந்துவிட்டது போலும்! என்று நினைத்துக் கொள்வார். டிபார்ட்மென்ட் சர்வீஸில் அவர் பட்ட கஷ்டங்கள் யாருமே பட்டிருக்க மாட்டார்கள். எந்த மாறுதலுக்கும் சிபாரிசு என்று போனதில்லை. பைசா செலவழித்து வாங்கியதில்லை. அப்படி அவசியமில்லை என்று விடுவார். ஒரு வேளை ஒரு குழந்தை பிறந்திருந்தால் எண்ணங்கள் மாறியிருக்குமோ என்னவோ? அந்த பாக்கியம் இல்லை.  அப்பாவிகள் இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துன்பத்திற்குள்ளாகிறார்கள். அதுதான் யதார்த்தம். கஜகர்ண வித்தை தெரிந்தவன்தான் இங்கு பிழைக்க முடியும்.

. படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனைக்  கை தொட்டு அசைத்தால் மேற்கொண்டு ஏதேனும் விபரீதம் ஆகி விடலாம். அப்படியே மெதுவாய்த் தள்ளி சுவற்றுப் பக்கம் சாய்த்து விடலாம் என்றாலோ அது பெரும் பிரயத்தனம். முழு போதையானாலும், நிச்சயம் எழுந்து விடுவான். அப்படியே தலை கவிழ்ந்து கீழே சாய்ந்து விட்டால்? பிறகு எவன் இடுக்கில் தூக்குவது? ஆகவே எதுவும் சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் உறக்கத்தைக் கலைக்க மனமில்லை. தான் பிரயத்தனப்பட்டாலும் கலையாது. மீறிக் கலைந்தால் பிரச்னைதான்.

கவனம் அவன் மீதுதான் இருந்ததே தவிர படத்தின் மீது சுத்தமாய் இல்லை. வில்லனின் கார் பின்னால் சர்ரு சர்ரு. என்று பத்திருபது கார்கள் புயலாய்ப்  பின் தொடர. வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்னவோ ஏதோவென்று புரியாமல் பார்க்கிறார்கள். ஒரு கணம் தோன்றி மறையும் இந்தக் காட்சியில் எழும் சப்தம் தியேட்டரையே அதிர வைத்தது. இதெல்லாம் எனக்கு ச்ச்சும்மா.! என்பதுபோல் அவன் இவர் தோளில் கிடந்தான். அவன் வீட்டில் கூட இத்தனை சுகமாய்த் தூங்கியிருக்க மாட்டான். நிச்சயம்.  அவனை ஒதுக்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இவர் வரிசை ஆட்களே உதவியில்லை.  இது அவர் தலைவிதி என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. திரும்பித் திரும்பிப் பார்க்க மட்டும் செய்தார்கள். பிறகு படத்தில் லயித்து விட்டார்கள். அவனுக்கும் சேர்த்து படம் பார்த்துக் கொண்டிருந்தார் இவர். எழுந்து கதை கேட்டால்? என்று தோன்ற சிரிப்புதான் வந்தது.

மிருணாளினியைக் கூட்டி வந்திருந்தால் இந்தத் தொந்தரவு வந்திருக்குமா?- திடீரென்று இப்படித் தோன்றியது இவருக்கு. ஆபத்துக் காலங்களில் என்றும் அவள் இவர் கூட இருந்ததேயில்லை.. இதுதான் நிதர்சனம். அவளுக்கு சினிமா பிடிக்காது. கோயில் குளம் என்றால் கிளம்பி விடுவாள். அவளுக்கும் ஒரு ரிலாக்சேஷன் வேண்டுமே என்று கூட்டிப் போவார்.. சாமி தரிசனம் செய்ய பத்து ரூபாய் க்யூ நீண்டு நிற்கும். ஆனால் ஐம்பது ரூபாய்க் க்யூவில் போக வேண்டுமென்பாள். அதுதான் எனக்குப் பிடிக்காது. ரெண்டு வரிசையும் சந்நிதிக்குள்ள நுழையும்போது ஒண்ணாயிடப் போகுது இதுக்கு எதுக்கு அம்பது வெட்டிச் செலவு? அவ்வளவு பெரிய கூட்டமில்லையே?  அந்தக் காசை அர்ச்சகர் தட்டுல போடு அவருக்காச்சும் உதவும். குறைஞ்ச சம்பளம் உள்ளவங்க அவங்கதான் என்பார் இவர். அதுவும் போடறேன் இல்லேங்கல. ஆனா இதுல போனா சீக்கிரம் முடிஞ்சிடுமே.? என்று சொல்லி இவரின் பதிலை எதிர்பாராமல் போய் நின்று விடுவாள்.

இவரோ வெளியே துவஜஸ்தம்பத்திற்கு அடுத்தாற்போல் நின்று நேரே சந்நிதியைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு வந்து அமர்ந்து விடுவார். ஸ்டாலில் அன்று என்ன புதிய நைவேத்யம் என்று பார்ப்பார். புளியோதரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பொட்டணம் வாங்கி வந்து ஒன்றைப் பிரித்து, சுவைத்து உண்ண ஆரம்பிப்பார். விழுந்து விழுந்து கும்பிடுபவர்களையும், சுற்றிச் சுற்றி வருபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கும். இப்படி எத்தனாயிரம் பேரின் வேண்டுதல்களை எப்பொழுது இந்தச் சாமி விடுபடல் இல்லாமல் நிறைவேற்றி வைப்பார்? என்று தோன்றும். மிருணாளினி எனக்கு வாங்கலையா? என்று கேட்டுக் கொண்டேதான் வருவாள். அகத்திக் கீரை வாங்கி மாட்டுக்குக் கொடுத்தேண்ணா. எவ்வளவு அழகா வாங்கிக்கிறது தெரியுமா? அது திங்கிற அழகே தனி ஒரு இலை விடாம ஒரு முடி முழுக்கத் தின்னுடுத்து. இன்னொண்ணு வாங்கப் போனேன். காப்பாளன் போதும் மாமின்னுட்டான். பிடிச்சிக்கோன்னு அவன்ட்டச் சொல்லி, முன் பக்கமும், பின் பக்கமும் நன்னாத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு வந்தேன்.. கோயிலுக்குன்னு நிக்கிற பசு மாடுகளுக்கே தனி அழகு..! கண்ணுக்குள்ளயே நிக்கறது.!

இன்று அவள் இவருடன் வந்திருந்தால் இந்தக் கடைசி இரண்டு இருக்கைகள்தான் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் தான் வந்த பிறகு சற்று நேரம் கழித்துத்தானே இந்தாள் வந்தான். ஆனால் அவளுக்கு இதுபோல் சண்டைப் படங்களெல்லாம் பிடிக்காது. ஏதாவது சாமி படம் என்றால் ஒருவேளை வரலாம். அல்லது சரித்திரப் படம். அவள் கடைசியாக மனதோடு தியேட்டர்  வந்து  பார்த்தது பாகுபலி. ரெண்டாம் பாகம் எப்ப வருதாம் என்று உற்சாகமாய்க் கேட்டாள். பிறகு அது வந்தபோதும் கூட்டிப் போனார் இவர். பிரம்மாண்டமா இங்கிலீஷ் படம் போல எடுத்திருக்கான் என்றாள். அந்தக் காலத்துல பென்ஹர்னு ஒரு படம் வந்தது. நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இதைத்தான் பார்க்கிறேன் இத்தனை பிரம்மாண்டமாய் என்று வியந்தாள்.

அப்போது இவர் லீவில் இருந்தார். தனது சி.எம். செல் மனு நடவடிக்கையில் இருந்த நேரம் அது. உடனடியாக இவருக்கு உள்ளூர் மாறுதல் வழங்கவும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்தாப்ல டிரான்ஸ்பர் ஆர்டரோடதான் இந்த ஆபீஸ்ல காலடி வைப்பேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார். அதுபோலவே போய் நின்றார். அந்த நிகழ்வுக்குப் பின்தான் அவர் மீது கை வைப்பதை விட்டது  உள்ளூர் நிர்வாகம். கடைசி ஒரு வருடம் இருக்கும்போது திரும்பவும் களேபரம்  ஆரம்பமானது. பணி ஓய்வு பெற ஓராண்டிருக்கையில் யாரையும் சொந்த ஊரிலிருந்து மாற்றக் கூடாது என்ற உத்தரவினைக் காட்டி அங்கேயே ஓய்வு பெற்று கம்பீரமாய் வீடு வந்து சேர்ந்தார். அது அவரின் வாழ்நாள் சாதனையானது.

படம் முடிந்திருந்தது. என்ன பார்த்தோம் என்றே நினைவில்லை. அவன் பாரமே பெரிய மனபாரமாய்ப் போனது. அதுபோக ஏதேதோ நினைவுகள்.  இனி வேறு வழியில்லை என்று எழ முயன்றார் பூவராகன். தள்ளிவிட்டிட்டு நீங்க பாட்டுக்கு எந்திரிங்க சார் கிடக்கான் அந்த ஆளு நமக்கென்ன? என்றனர் சிலர். படம் ஓடுகையில் இது நேரம் வரை வாயைத் திறக்காதிருந்தவர்கள் அவர்கள். வெளியேறும் நேரம் வீரமாய் வந்தது வார்த்தைகள். கீழ தடுமாறி அடி கிடி பட்டுச்சின்னா? என்று நினைத்தார். ஆனது ஆச்சு அவன்பாட்டுக்குத் தூங்கத்தானே செய்றான் போகட்டும் பாவம்! என்ன வேதனைல இங்க தஞ்சம் புகுந்தானோ? அவர் மனசு இரக்கப்பட்டது.

தன்னுடன் வைத்திருந்த ஜோல்னாப் பையை எடுத்து வலது தோளில் மாட்டிக் கொண்டு மெல்ல அவனைத் தம் பிடித்துத் தூக்கி  தடுமாறாமல் எழுந்தார் பூவராகன். இருக்கையின் பின்னால் அவனை மெல்லச்  சாய்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார். முதலிலேயே செய்திருக்கலாமோ என்று தோன்றியது. இப்போது எப்படி சாத்தியமானது என்றும் வியப்பாயிருந்தது. ஒரு வேளை அவனாகவே அட்ஜஸ்ட் ஆகி சாய்ந்து கொண்டானோ? அவன் தலை தொங்கித்தான் கிடந்தது.  தியேட்டர் ஏறக்குறையக் காலி. திரைக்கு அருகே பக்கவாட்டில் நிறையப் பேர் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவரை நோக்கியிருந்தது. இருக்கை வரிசையை விட்டு வெளியேறி வாயிலை நோக்கிய பிரதான நடுப்பகுதி அகண்ட வழிப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு படியிலும் வெளிச்சம். ஒராள் உள்ளே மயங்கிக் கிடக்கிறான் என்று தியேட்டர் ஆள் யாரிடமாவது சொல்வோம் என்று நினைத்துக் கொண்டார்.

அரங்கு இப்போது முழுக்கக் காலியாகிவிட்டது. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த கொஞ்சப் பேரோடு இவரும் வேகமாகப் போய்ச் சேர்ந்து கொண்டபோது அந்தச் சத்தம் கேட்டது.

ஓவ்வ்வாவ்வ்வ்வ்வ்!  – அந்த ஆள் மிகப்  பெரிதாகக் கத்திக் கொண்டு சுற்றிலும் உள்ள இருக்கைகள் அதிரும் வண்ணம். ஆவாவ்வ்வ்வ்.வே..வென்று சத்தமாய் எதுக்களித்து.. அந்த ஏரியாவே அசிங்கப்படும்படிக்கு பொளேரென்று  வாந்தியெடுத்தான். திரும்பத் திரும்ப பொளக் பொளக்கென்று தாங்க மாட்டாமல், அடக்கத் திராணியின்றி அவன் கொட்டித் தீர்த்தபோது. கடைசிப் படியில் நின்று ஒரு முறை கலக்கத்தோடு நோக்கிய பூவராகன் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனார். படம் பார்க்கையில் அவனை நகர்த்தியிருந்தால் இது நடந்திருக்குமோ?  எண்ணம் தந்த பயத்தில் வியர்த்தது அவருக்கு. மீதிப் படிகளை இறங்கிக் கடக்கலானார்.  அப்டி ஆகியிருந்தா என்ன பண்ணப் போறோம்? குழாய்ல  போய் முழுக்கக்  கழுவிட்டு வீடு போக வேண்டியதுதான்.. வேறே வழி? அவராகவே சமாதானப்படுத்திக் கொண்டார். அப்டி ஆகாததுனாலதான் இப்டி நினைக்கத் தோணுதோ? என்றும் ஒரு குறுக்குச் சிந்தனை இடையே பாய்ந்தது. இவ்வளவு நேரம் அவனைப் பொறுத்திட்டிருந்தவன் அதையும் செய்ய மாட்டனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வண்டி ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

உள்ளே என்ன சத்தம் என்று புரியாமல் எமர்ஜென்ஸி  வாயிலிலிருந்து  நாலைந்து ஆட்கள் திடு திடுவென்று தியேட்டருக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள்.