உஷாதீபன்

ஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை

மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச் சார்ந்தவனாகவும் நான் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றில் என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று முயன்றார்கள். நான் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டே வந்தேன். அது ஏதோ தப்பு செய்வதுபோலான உணர்வையே எனக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சங்கத்திற்கு சந்தா கொடுங்கள் என்று மாறி மாறி வந்து நிற்பார்கள். எதற்கு இத்தனை சங்கங்கள், மொத்தம் எத்தனை சங்கங்கள்தான் இருக்கின்றன என்பதே அப்போது எனது கேள்வியாக இருந்தது. முதலில் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வரன்முறைக்கு ஒரு வருடம் முடிய வேண்டும். பிறகு தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய வேண்டும். அந்த இரண்டு ஆண்டுகளில் என் மேல் எந்தக் குற்றச் சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். எல்லாரும் அப்படித்தானே இருந்தாக வேண்டும்? பத்து மணிக்கான அலுவலகத்தில் ஒன்பதரைக்கே போனேன். மாலை ஐந்தே முக்காலுக்கு முடிந்த பின்பும் அரை மணி, ஒரு மணி கூட இருந்து வேலை செய்துவிட்டுத்தான் கிளம்பினேன். அலுவலக நேரத்தில் டீ குடிக்க என்று வளாகத்தை விட்டு வெளியே செல்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆபீஸ் பியூன் பாட்சா ஃபிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்ததை என் இருக்கையில் இருந்தமேனிக்கே குடித்துக் கொண்டேன். இன்னொரு பியூன் ரங்கசாமியும் போவது உண்டு. அவன் எட்டு டீக்கு ஆறுதான் வாங்குவான்…நிரவி எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்து, தானும் குடித்து, அடுத்த ஒரு வேளைக்கும் அவனுக்கு டீ மிச்சம் வைத்துக் கொள்வான் என்று சொன்னார்கள். பாட்சாவிடம் அந்த வேலை இல்லை என்பது அவர் கொண்டு வந்து நீட்டிய டீயைப் பருகிய போதே தெரிந்தது. சமயத்தில் தண்ணீர் கலப்பதுண்டாம் ரங்கசாமி…பலே ஆள்தான் போலிருக்கிறது.!

இப்படி சின்னச் சின்னத் தப்புகளாய் பரவலாய், என் சிந்தைக்குப் பலவும் பட்டுக் கொண்டேயிருந்தன. எல்லோரும் ஆபீசுக்குத் தாமதமாகவே வந்தார்கள். பத்து மணி டயத்துக்கு பத்து நிமிஷம் கிரேஸ் டைம் இருந்தும் அதையும் தாண்டித்தான் நுழைந்தார்கள். பயங்கர டிராஃபிக் என்றும், ஒன்பதே காலுக்கே கிளம்பிட்டேன்…இப்பத்தான் வர முடிஞ்சிது என்றும், பஸ்ஸே கிடைக்கல என்றும், வழில டயர் பஞ்சராயிடுச்சி என்றும், ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்திச்சு என்றும் தாமதத்திற்கு என்னென்னவோ காரணத்தைச் சொன்னார்கள். இவர் மட்டும் எப்டி வர்றாரு…என்று மேலாளர் என்னைக் காட்டி ஏன் கேட்கவில்லை என்று தோன்றியது. பலரும் அடிக்கடி பர்மிஷன் போட்டார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக பதினோரு மணிக்கு வருவதற்குப் பதிலாக பன்னிரெண்டுக்கும், ஒன்றுக்கும், ஏன் மதியச் சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துக் கொண்டு கையை வீசியவாறே ஃப்ரீயாக ரெண்டு மணிக்கு மேலும் கூட வந்தார்கள். மேலாளர் சில நாட்கள் அவர்களிடம் பர்மிஷன் எழுதிக் கொடுங்க என்று கேட்டு வாங்கிக் கொண்டார். சில நாட்கள் முடிவு செய்யாது வைத்திருந்த வருகைப் பதிவேட்டை எடுத்து நீட்டி, போடுங்க….என்று கருணை செய்தார். அலுவலர் தலைமையகத்தில் இருக்கும் நாட்களில் ஒழுங்காய் பத்தடித்துப் பத்து நிமிஷத்திற்கு அவர் பார்வைக்குப் போனது வருகைப் பதிவேடு. மற்ற நாட்களில் திறந்த வாய் மூடாமல் கிடந்தது. மாதத்திற்கு மூன்று அனுமதி தாண்டினால் அரை நாள் விடுப்பு கட் என்பது வெறும் விதியாக மட்டுமே இருந்தது. இதுதான் இப்படி என்றால் கருவூலத்திற்குப் பட்டியல் சமர்ப்பிக்கப் போய்விட்டு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன பியூன் மதியம் ரெண்டு மணிக்கு சாப்பாட்டு நேரத்திற்கு வருவதை யாரும் கேட்பதாய் இல்லை. பில் பிரசன்ட் பண்ணி, டோக்கன் வாங்குறதுக்கு எப்டியும் மணி ஒண்ணு, ஒன்றரை ஆயிடுது சார்…ரிஜிஸ்டர எடுத்துக் கொடுத்து நீயே பதிஞ்சிட்டு, டோக்கன் போட்டுக்கோங்கிறார் சார் அந்த அசிஸ்டென்ட்…பில் பாஸ் பண்ணத் தேடி வர்ற ஆளுகளப் பார்க்கிறதுக்கே அவருக்கு நேரம் சரியாயிருக்கு என்று மறுக்க முடியாத ஒரு வரவு உண்மையைச் சொல்லி, எல்லோர் வாயையும் அடைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. அது கிடக்கட்டும், காலையில் அலுவலகம் வந்துதானே பட்டியலைக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏன் முதல் நாளே கொண்டு போய் வீட்டில் வைத்துக்கொள்கிறார்? பட்டியலும் பதிவேடும் ஏதேனும் டேமேஜ் ஆனால் அல்லது தொலைந்தால்…யார் பொறுப்பாவது? இந்தக் கேள்விக்கும் அங்கு பதில் இல்லாமல்தான் இருந்தது. பியூன் மேலாளருக்குப் பயப்படுகிறாரா என்பதே சந்தேகமாயிருந்தது. யாருக்கு யார் பயப்பட வேண்டும் அவரவர் வேலைகளை ஒழுங்காய், முறைப்படி செய்தால்? ஒருவேளை மேலாளர் இந்த பியூனுக்குப் பயப்படுகிறாரோ? அப்படியும் இருப்பதற்கான காரணங்கள் அங்கே கொட்டிக் கிடப்பதாய்த் தோன்றியது. அவருக்கும் அலுவலருக்குமான ரகசியங்கள் அங்கே நிறைய இருந்தன. அதற்காக அவர் எல்லாவற்றையும் சற்று அடக்கி வாசிப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஸ் ஸ்டேட் லெவல் மீட்டிங் போறாருல்ல சார்…அதுக்கு டிக்கெட் போடப் போனேன் சார்…என்று சாவகாசமாய் வந்தவரை என்ன சொல்லிக் கண்டிப்பது? டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று சகஜமாய்த்தான் அவரால் கேட்க முடிந்தது. இம்மாதிரிப் பல வேடிக்கைகள் அங்கு உண்டு.

பொதுவாய்ச் சொன்னால் கடமை என்பது ரெண்டாம்பட்சமாய்த்தான். அந்த ரீதியில் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அமைதி காக்க வேண்டியிருந்தது. ஆனால் மன ஒப்புதல் இல்லாமலேயே நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டேயிருக்கிறதே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.

அலுவலக மேலாளரின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகத்தான் நான் என் கடமையைச் செய்தேன். காரணம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நான்கு முறை தற்காலிகமாய் ஆறு மாதம், ஒரு வருடம் என்று நான் பணியில் அனுபவமடைந்திருந்தேன். என்னை விடக் கூடாது என்று அலுவலகத்தில் ஒவ்வொருவராய் லீவு போடச் சொல்லி அந்த இடத்தில் என்னைப் போட்டு என் பணியை நீட்டித்துக் கொண்டேயிருந்தார் அந்த போர்டின் சேர்மன். காரணம் எழுத்தர் பணியோடு, சுருக்கெழுத்தும் தெரிந்தவனாக நான் இருந்ததே அதற்குக் காரணம். அந்தத் தற்காலிகப் பணியிலேயே பலரின் பொறாமைக்கும், கோபத்திற்கும் ஆளானவன் நான். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? வீட்டுக்குப் போகச் சொன்னா போறேன்…என்று சொல்லியே அங்கு ஓட்டிக் கொண்டிருந்தேன். என் அதீதமான கடமையுணர்ச்சி என்னைக் காலத்துக்கும் காப்பாற்றியது என்றுதான் சொல்லியாக வேண்டும். அது என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்டது. கக்கூஸ் கழுவுறதானாலும் கூட அதுக்கு முன்னாடிவரைக்கும் செய்தவங்கள விட நான் நல்லாச் செய்வேன்னு செய்து காட்டணும்…என்பார் என் தந்தை. அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னிடமும் அப்படியே படிந்திருந்தது. எந்தவேலையையும் நான் கேவலமாக, கௌரவக் குறைவாக நினைத்ததில்லை. என் வேலையை மட்டும் சரியாய்ச் செய்தால் போதும் என்றும் இருந்ததில்லை. அலுவலகத்தில் எனக்குத் தெரியாத வேலை என்று எதுவும் இருக்கக் கூடாது என்றே இயங்கினேன். என்னைப் பொறுத்தவரை வேலைதான் எனக்கு முதல். மற்றவை பிறகுதான் என்பதில் நான் பிடிவாதமாய் இருந்தேன். ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருப்போம்…என்பதுபோல் விடாமல் என்னிடம் வந்து சந்தாவுக்கு நின்று கொண்டேயிருந்தார்கள் சங்கத்தார். கொஞ்சம் கோபமாகவும், சத்தமாகவும் ஊதினார்கள் என்னிடம். முதல்ல சந்தா கொடுத்து, மெம்பர் ஆகுங்க தோழர்…பிறகு கூட்டத்துக்கெல்லாம் வரலாம் என்றார்கள். அந்தத் தோழர் என்ற வார்த்தை என்னவோ செய்தது என்னை. அவர்கள் என்னதான் பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருந்தேன். அது மனதுக்கு ஒப்புதலாய் இருந்தால்தான் சந்தா கொடுப்பது என்பது என் எண்ணமாய் இருந்தது. சந்தாவக் கட்டி மெம்பர் ஆகிக்குங்க…அப்புறம் உங்களத் தொந்தரவு செய்ய மாட்டோம்…மாதாந்திரக் கூட்டங்களுக்கு நீங்க இஷ்டப்பட்டா வந்தாப் போதும் – இப்படி ஒரு சங்க நண்பர்கள் வந்து சொன்னார்கள். அவர்களுக்குத் தேவை போதுமான எண்ணிக்கையும், பணமும். நிர்வாகத்துக்கு எதிராகவே இரண்டு மூன்று சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. ஆதரவாய் ஒன்று கூடக் கிடையாதா? என்கிற கேள்வியும் தோன்றியது. ஏன் இல்ல என்று ஒரு சங்கம் இயங்குவதையும் (அப்படித்தான் சொன்னார்கள்) தெரிவித்தார்கள். அரசாங்கம் தன் வழக்கமாய்ப் போட்ட உத்தரவுகளையெல்லாம் இவர்கள் சாதித்தது போல் சொல்லிக் கொண்டார்கள். ஏதோ இங்கிருந்தே விரலசைத்தால் அங்கு நடந்துவிடும் என்று காட்டிக் கொண்டார்கள். பொய்மைக்கு அஞ்சாத சமூகமாய் இருந்தது. இவர்களுக்குச் சரி என்று தோன்றும் சில அவர்களுக்கு ஏன் தப்பாய்த் தோன்றியது. அவர்களுக்குத் தப்பாய்த் தோன்றும் சில இவர்களுக்கு ஏன் சரி என்று தோன்றுகிறது? பணியாளர் நலன் என்று பொதுவாய் எதிர் கொண்டால் எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன? தேவையைக் கேட்டு, தொடர்ந்து வற்புறுத்தி படிப்படியாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? எதற்காக நிர்வாகத்தை எதிர்க்க வேண்டும்? பணியாளராய் இருந்து கொண்டு, அது தரும் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, அதையே எதிர்ப்பது என்பது சரியா? நிர்வாகம் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவர்களெல்லாம் தங்கள் கடமையைச் செவ்வனே விடாது செய்து கொண்டிருப்பதுதானே நன்று? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? வெகு காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? அரசு ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருப்பதுபோல், இவையும் தொடர்ந்து இவ்வழியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? வேலை செய்ய வந்தோமா, போராட வந்தோமா? – எத்தனையோ கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டேதான் இருந்தன. சிலவற்றிற்கு நேரடியாகவும், சிலவற்றிற்கு மழுப்பியும் சிலர் பதிலளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனக்குத்தான் சமாதானம் ஆகவில்லை. நோக்கம் ஒன்றாய் இருக்குமானால் எதற்கு இத்தனை பிரிவு? ஒன்றுமில்லாத ஓட்டைப் பதவிகளுக்கு எதற்கு இத்தனை போட்டி? வேலைக்கு வருவதற்கு முன் வேலை…வேலை என்று நாயாய் அலைகிறோம். கிடைத்த பின்னால் மெத்தனமா? பொத்திக் கொண்டு வேலை பார்க்க வேண்டாமா? இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைக்கவேயில்லை. தெரியவே தெரியாதே…? தற்காலிகப் பணியில் இருந்தபோது இதிலெல்லாம் கவனம் செலுத்தியதேயில்லை…யாரும் தொந்தரவும் செய்ததில்லை. வேலை…வேலை…வேலை….! அப்படியாகவே இப்போதும் ஏன் இருக்க முடியவில்லை? நிரந்தர வேலை கிடைத்திருக்கையில், குடியும் குடித்தனமுமாய் இருப்பதுபோல் பொறுப்பாய், நல்ல பிள்ளையாய் இயங்க வேண்டாமா? என்னெல்லாம் தொல்லை? எனக்குச் சள்ளையாய்த்தான் இருந்தது. சிவனே என்று வேலையைப் பார்த்தமா,போனமா என்று இல்லையே? அறுபது வயதுவரை இருக்கப் போகிறோம். இன்னும் என்னெல்லாம் விதிமுறைகளையும், வேலைகளையும் கற்க வேண்டும்…எந்தெந்தத் தேர்வு பாஸ் பண்ண வேண்டும்…அடுத்தடுத்து என்னென்ன பணி உயர்வு கிடைக்கும்…இவைகளில்தானே கவனமாய் இருத்தல் வேண்டும். இவர்கள் ஏன் இப்படி எதையெதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டு அலைகிறார்கள்? அதெல்லாம் தானே கிடைத்து விடும்…இவையெல்லாம்தான் போராடிப் பெற வேண்டியவை…கேட்கத் தவறினால் கை நழுவிப் போகக் கூடியவை என்று நினைக்கிறார்களோ? அதற்கும் போதிய முயற்சி இல்லையென்றால் இருக்குமிடத்தில் பசை ஒட்டியதுபோல் இருந்தாக வேண்டுமே…! எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் தொலைகிறது என்று எல்லாச் சங்கத்துக்கும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துத் தொலைத்தேன் நான். நீங்க அதுல மெம்பரா இருக்கீங்களா? என்று கேட்டபோது ஆமாம் என்று தலையாட்ட அப்ப நன்கொடைன்னு போட்டுக்கிறோம் என்று சொன்னார்கள் ஒவ்வொருவரும். கடைசியில் பார்த்தால் அத்தனை ரசீதுகளிலும் நன்கொடை என்றே குறிப்பிட்டிருந்ததுதான் தமாஷ். பரவாயில்லை…ரசீதாவது கொடுக்கிறார்களே என்றிருந்தது. அடுத்தாற்போல் வந்து நின்றால்…இப்பத்தானே கொடுத்தேன் என்று சொல்லி எடுத்து நீட்டலாமே…! அது மெம்பர்ஷிப்புங்க…இது நடக்கப்போற மாநாட்டுக்கான நன்கொடைங்க…என்றார்கள். அதுலயும் நன்கொடைன்னுதானே டிக் பண்ணினீங்க…என்றேன். ஒரு கோடு போட்டு சந்தான்னு இருக்கும் பாருங்க…என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள். இவர்கள் காரியம் இவர்களுக்குத்தான் புரியும் என்றிருந்தது எனக்கு. ஆபீஸ் நேரத்தில் இப்படி வந்து நிற்பதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது?. அவரவர் இருக்கை வேலைகளைச் செய்யாமல், சங்கம், வசூல் என்று கிளம்பி நகரத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள். என்னங்க…இப்ப வந்திருக்கீங்க…இன்னிக்கு ஒர்க்கிங் டேல்ல…? எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டுங்க தம்பி…அதெல்லாம் எதுக்குக் கேட்குறீங்க? சந்தாவ எடுங்க….என்றார்கள். அந்த பதிலே அது தப்பு என்று உணர்த்தியது எனக்கு. ஒன்றுமில்லாத, இவர்களாகவே அமைத்துக் கொண்ட, சங்கம் என்கிற அமைப்பிலுள்ள இவர்களுக்கே இவ்வளவு எடுத்தெறிந்த பேச்சு இருக்குமேயானால், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அலுவலர்களுக்கு எவ்வளவு இருக்கும்? ஆனால் அவர்கள் இவர்களை எதுவுமே கண்டு கொள்வதில்லையே, ஏன்? அங்கேதானே இருக்கிறது கோளாறு? அவர்களும் ஏதோவொரு விதத்தில் இவர்களுக்குப் பயப்படுகிறார்கள், அப்படித்தானே? சங்க வேலை பார்க்கன்னா லீவு போட்டுட்டுப் போங்க…பர்மிஷன்லாம் தர முடியாது… – ஒரு அதிகாரியும் சொல்லவில்லையே…! கோரிக்கைகளையும், போராட்டத்தையும் உங்களுக்கும் சேர்த்துத்தானே சார் செய்றோம்…பணபலன் கிடைச்சா எங்களுக்கு மட்டுமா? எங்களவிட டபுள் ட்ரிபுளா உங்களுக்குத்தானே உயருது…. சரி…சரி…காலா காலத்துல முடிச்சிட்டு வந்து சீட் வேலையைப் பாருங்க… என்னவோ இவர் சொன்னபடி அவர்கள் சீக்கிரம் வந்து ஆபீஸ் வேலையைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவிடுவதைப் போல…அது அவருக்கும் தெரியாதா என்ன? அந்த அளவுக்குச் சொல்லி, தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அவர் வேலை. அட…போய்யா… என்று இவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஊர் சுற்றிவிட்டு மறுநாளைக்கு ஆபீஸ் வருவது இவர்கள் வேலை…இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தபோது வயிற்றெரிச்சலாய் இருந்தது எனக்கு. இவங்களையெல்லாம் யார்தான் கேட்பது? உனக்கேன்யா வயிற்றெரிச்சல்…நீதான் எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்தப் போறியா?-இந்தக் குரல் ஏதோவோர் மூலையிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் எல்லோரும் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்த நேரம் போக இதையெல்லாம் பார்க்கலாமே…! என்றும் தோன்றிக் கொண்டேதானே இருக்கிறது? மதியம் இடைவேளை நேரத்தில் ஊழியர்களை அழைத்து, காம்பவுன்ட் வாசலுக்குக் கூட்டிச் சென்று கூடி நின்று கோஷம் போட்டார்கள். சாப்பாட்டுக்கான நேரம் அது. அவர்களை வலிய அப்படி அழைப்பது பலருக்கும் பிடிக்கவில்லைதான் எனினும், மறுக்க முடியாமல், வேறு வழியில்லையே என்று கடனுக்கு வந்து நின்றார்கள். பெண் பணியாளர்கள் எவருக்குமே இந்த நடவடிக்கை பிடிக்கவில்லைதான். ஆண் பணியாளர்கள் சிலரும் எதுக்கு வம்பு? என்று முனகிக் கொண்டேதான் வந்தார்கள். நகருக்கே பத்துப் பேர் இருந்து கொண்டு அத்தனை அலுவலகங்களையும் ஆட்டுவித்தார்கள். இப்படியாக ஒரு வாயில் கோஷத்தை நிறைவேற்றித்தான் ஆக வேண்டுமா? உங்களுக்காகத்தானே செய்றோம்…வாங்க…வாங்க…என்ற அதிகாரம் வேறு. விருப்பமில்லாமல் இப்படிப் பலரையும் வம்புக்கு அழைத்து நிறுத்தி, மனசில்லாமல் கோஷம் போட வைத்து, ஏதோ அவர்களுக்குப் பாடம் நடத்துவது போலவும், தங்கள் தியாகங்களைப் பறைசாற்றுவதுபோலவும், பணியாளர்களின் பசியறியாமல், மனசறியாமல், சுய விருப்பத்திற்கு மாறாக ஒருவகை மறைமுகமான வன்முறையைப் பிரயோகித்து அப்படி அழைத்து வந்து வேளை கெட்ட வேளையில் நிற்க வைப்பது கொஞ்சங்கூட நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. என் மாறுதல் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதும், முதுநிலை வரிசைப்படி அடுத்தடுத்து வருவதற்காக, உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் போனதிலேயும் மனசு உறுத்திக் கொண்டேயிருந்தது எனக்கு. இங்குள்ளோருக்கும் சென்னைத் தலைமையக அலுவலகத்தில் உள்ளோருக்கும் மிகவும் நெருக்கமான நடைமுறைகள் இருப்பதும், இவர்கள் சொல்வதை அவர்கள் அப்படியே நம்பி விடுவதும், அலுவலக நடைமுறைகளில் அதன் பாதிப்பு நிகழ்வதும்…தொடர்ந்து நடந்து கொண்டே வந்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளவே எனக்கு நான்கு வருடம் பிடித்தது. எனக்கு வேகம் பிறந்ததே ஐந்தாவது ஆண்டில்தான் என்பதை இங்கு நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதும் நான் எந்த சங்கத்தையும் சேராதவனாகவே இருந்தேன். அதுவே ஒரு பெரிய சாதனை என்றும் கொள்ளலாம். ஆனால் இதிலும் ஒரு தப்பு இருக்கத்தானே செய்கிறது என்பதை இங்கே நீங்கள் உணரக் கூடும். இருக்கும் சங்கமெல்லாம் வந்து வந்து காசு கேட்கும்போது, உறுப்பினர் என்ற பெயரிலல்லாமல், நன்கொடை என்கிற பெயரில் நானும் பணம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தேன். அவர்கள் யாரிடமிருந்தும் எந்த வம்பும் எனக்கு வேண்டாம் என்கிற சுயநலம்தானே அதுவும்? என் மனநிலைக்கும், நடவடிக்கைகளுக்கும்…நான் யாருக்கும் எந்தப் பைசாவும் தரணும்ங்கிற அவசியமில்லை…இந்த சங்கம் கிங்கம் என்பதெல்லாம் வெறும் அசிங்கம்…..என்றுதானே நான் கூறியிருக்க வேண்டும்? என்னால் முடியவில்லையே…! அப்படியிருந்தும் இந்த மாறுதல் விஷயத்தில் இவ்வளவு விளையாடியிருக்கிறார்களே…! பணிப்பொறுப்பு ஏற்று இரண்டாண்டுகளுக்குப் பின் மாறுதல் விண்ணப்பம் கொடுக்கலாம் என்று விதிமுறை இருக்கையில் (இதையும் மீறி வந்த ஆறு மாதத்திலேயே விண்ணப்பம் அளித்து, தங்கள் அரசியல் செல்வாக்கால் சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன பிரகிருதிகள் அநேகம்) அதை முறைப்படி செய்திருந்த என் கேட்பு விண்ணப்பம் தக்க பதிவேட்டில் வரிசைக்கிரம முதுநிலை கருதிப் பதியப்படாமல், காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறதே…! இந்த உள்குத்து வேலைகள் ஒரு வேளை தலைமைக்குத் தெரியாமலே போயிருந்தால்? மாநிலம் தழுவிய அவருக்கிருக்கும் தலைபோகும் பொறுப்பில் இப்படி சின்னச் சின்ன விஷயங்களையெல்லாமுமா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? பின் எதற்காக இத்தனை அதிகாரிகள், பணியாளர்கள்? அரசின் திட்டப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதில் அவர் கவனமாய் இருப்பாரா…அல்லது இந்தச் சாதாரண விஷயத்திற்குப் போய் அலைக்கழிவாரா? ஆனாலும் இது சரியில்லை….நேரில் புறப்பட்டுப் போய் அவரைப் பார்த்து என் நிலையை எடுத்துச் சொன்னபிறகுதானே இது நடந்திருக்கிறது? என் அடுத்தடுத்த விண்ணப்பங்கள் வந்திருப்பதும், அலுவலக முத்திரை அதில் பதிக்கப்பட்டிருப்பதும், எண்ணிடப்பட்டிருப்பதும் எல்லாவற்றிற்கும் மீறி எந்த நடவடிக்கையும் இல்லாமல் முறையே பதிவேட்டில் பதியப்படாமல் விடுபட்டிருப்பதும், அவர் ஆய்வில் விரியும் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லைதான். மறைக்கத் தெரிந்த அவர்களுக்கு, அதிகாரம் கேட்டவுடன் டக்கென்று எடுத்துக் கொடுக்கவும் தெரிந்திருக்கிறதே…! கில்லாடிகள்தான்…!!! அப்பாடி…! அந்த ஒருவருக்காவது மனசாட்சி இருந்திருக்கிறதே…? நீ போங்க…இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு டிரான்ஸ்பர் வந்திடும்…. – இதுதான் அவர் என்னிடம் கடைசியாகச் சொன்னது. நிர்வாக நடைமுறைகள் எல்லாம் துல்லியமாகத்தான் வகுக்கப் பட்டிருக்கின்றன. இடையில் உள்ள எலிகளும், பெருச்சாளிகளும்தான் அதைக் கடித்துக் குதறி விடுகின்றன என்று புரிந்து கொண்டேன். இதோ..சொந்த ஊர் வந்துவிட்டேன்…ஆனால் இது என்ன? புதுத் தகவல்…!? வியப்பும் கேள்வியும் என்னைச் சுற்றி…! உங்களுக்கு முன்னாடி இருந்த நாகரத்தினம்ங்கிறவருக்குக் கொடுக்கப் போனபோதுதான், உங்க அப்ளிகேஷன் சென்னைலருந்து ரெக்கமன்ட் ஆகி வந்திச்சு…சீஃப் இன்ஜினியரே தன் கைப்பட எழுதிப் பரிந்துரை பண்ணியிருந்தாரு….அலாட்மென்ட் வந்த பெறவு என்ன செய்றது? அதுவும் பெரிசு கையெழுத்துப் போட்டிருக்கு? சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் அவர். அதனால எங்க சங்கத்தச் சேர்ந்த அவரை சமாதானம் பண்ணி நிறுத்தி வச்சிட்டு உங்களுக்குப் போட்டிருக்கோம். இந்த தடவை…! ..நாங்க நினைச்சிருந்தா அடுத்த லிஸ்ட்லதான் உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கும். எங்க தோழர் பொறுத்துக்கிட்டாரு…உங்களுக்காக இப்பவும் அவர் தினமும் பஸ்ல இருநூறு கிலோமீட்டர் வெளியூர் போயிட்டு வந்திட்டிருக்காரு….அத மனசுல நினைங்க….அது போதும்…. ஆபீஸ் வேறு…சங்கம் வேறில்லையா? இவர், சங்கம்தான் ஆபீஸ் என்பதுபோல் பேசுகிறாரே…! தலைமைப் பொறியாளரின் உத்தரவையும் மீறி, உங்கள் டிரான்ஸ்பரை எங்களால் நிறுத்தியிருக்க முடியும் என்று மறைமுகமாய் மிரட்டுகிறாரோ? அவரின் பேச்சு அப்படித்தானே நினைக்க வைக்கும்? ஆழ வேரோடிப் போயிருக்கிறதே இந்த ஊடுருவல்? மூன்று வருடமாய்க் காணாமல் போயிருந்த என் விண்ணப்பத்தைப் பற்றிச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? அதிலும் ஒரு நியாயம் உண்டுதானே? இவரென்ன ஏற்றுக் கொள்வது, துறைத் தலைமையே ஒத்துக் கொண்டுதானே இது நடந்தேறியிருக்கிறது? பிறகென்ன அதை மீறிய நியாயம்? நினைத்துக் கொண்டே உள்ளூரில் என் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒரு வித்தியாசம் மட்டும் அங்கு என்னால் சமீபமாக கண்டுபிடிக்க முடிந்தது. அதுதான் அங்கு எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த அலுவலகம் எண்ணிக்கையில் அதிகமான பணியாளர்களுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு நாள்தோறும் இயங்கியது. அமைதியாக இயங்கும் நூலகம் போல் இருந்தது. குனிந்த தலை நிமிராமல் வேலையில் கண்ணாய் இருந்தார்கள் எல்லோரும். அருகிருக்கையுடன் கூடப் பேச்சுக் கிடையாது. ராணுவக் கன்ட்ரோல் போல் உணர்ந்தேன். இத்தனை கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் நான் முன்பிருந்த வெளியூர் அலுவலகத்தில் கண்டதில்லை. என்னிடம் பேசிய அந்த சங்கத் தலைவர்தான் அந்த அத்தனை பெரிய அலுவலகத்திற்கும் மேலாளராக இயங்கினார். இருக்கையை விட்டு எழாமல் ஆணியடித்தாற்போல் எல்லோரும் இயங்கினார்கள். பத்து மணிக்கு முன்பாக அலுவலகமே நிரம்பி வழிந்தது. இரவிலும் கூடப் பலர் கணி விழித்து வேலை செய்தார்கள். கன்னியாகுமரி வரை ஜூரிக்ஸ்டிக் ஷன் அதற்கு இருந்தது. ஒரு நாள் கூட அலுவலக நேரத்தில் அங்கு யாரும் சங்கப் பணியை மேற்கொள்ளவில்லை. பணி என்ன, அந்தப் பேச்சே எழவில்லை. மாலை அலுவலக நேரத்திற்குப் பின்பே அருகிலுள்ள பூங்கா ஒன்றில் அந்தப் பணியாளர்கள் கூடினார்கள். பேசினார்கள். அலுவலக நிர்வாகம் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் துறைத் தலைமையின் நற்சான்றிதழ் அந்த அலுவலகத்திற்கு வருடந் தவறாமல் வழங்கப்பட்டிருந்ததும், மாநிலத்திற்கே எடுத்துக்காட்டாய் அந்த அலுவலகம் திறம்பட இயங்கி வந்தது என்பதையும் கேள்விப்பட்டபோது, அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. சர்வீசுக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தும், முதன் முதலாக முழுக்க முழுக்கக் கடமையும், கட்டுப்பாடும் உள்ள ஒரு அலுவலகத்தில் மன நிறைவோடு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்ற உணர்வினை இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருந்தேன் நான்.

நிறைவு – உஷாதீபன் சிறுகதை

முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்குகோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்? சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான் ரமணன். ஆனாலும் இவன் பேசியது அங்கு நிற்பவர்களின் காதில் விழுந்திருக்கும் போலும்? வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்களின் கவனம் மூலஸ்தானத்தில் இருந்த சாமியிடமிருந்து இங்கே இடம் பெயர்ந்தது.

பின்னால் நிற்பவர்கள் ம்ம்….நகருங்கநகருங்கஎன்று நெருக்கியடிக்க, வரிசையிலிருந்து விலகினான் இவன். முன்னால் நின்று கொண்டிருந்த சாரதாவும், இவனோடு சேர்ந்து நகர்ந்தாள். ஸ்பெஷல் என்ட்ரன்ஸ பத்து ரூபாபத்து ரூபாஎன்று ஆங்கிலத்தில் கூவி, சந்நிதிக்கு வெளியே ஒரு மேஜை நாற்காலி போட்டு அமர்ந்து, வரும் பக்தர்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். ஒரு போர்டைத் தொங்கவிட்டுக்கொண்டு அமர வேண்டியதுதானே? ஏனிப்படிக் கூவி விற்க வேண்டும் என்று தோன்றியது. .

இலவச தரிசனத்திற்கும், சிறப்பு வழிபாடு இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிகக் குறைவாக இருந்தது. நாலைந்து அடி முன்னால் சென்று கும்பிட வேண்டுமானால் அதற்குப் பத்து ரூபாயா? இதுவே போதுமே என்று பலரும் நினைக்கக் கூடும் என்று தோன்றியது.

அர்ச்சகர் ஒவ்வொருவராக அருகில் வந்து பக்தர்களால் கொடுக்கப்படும் சூடம், பூப்பந்து, பூமாலை, அர்ச்சனைத்தட்டு என்று சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பயபக்தியோடு பெயர், நட்சத்திரம், என்று கேட்பதை உடனடியாகவும், யோசித்து யோசித்தும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவற்றை அங்கேயே சேர்த்து, மந்திரங்களோடு கோர்த்து, முணுமுணுத்தவாறே நகர்ந்தார் அர்ச்சகர். சுவாமி சந்நிதியில் அர்ச்சனையை முடித்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் நுழைந்திருந்தோம் நாங்கள். அங்கே அம்பாளின் திருக்கோலத்தைப் பார்த்தவுடன் மனதுக்குள் கிளர்ந்த பக்தியிலும், அந்தக் காட்சி சொரூபத்தில் தன்னை இழந்த நிலையிலும் சாரதா படபடப்பாய்ச் சொன்னாள்.

ஓடிப்போயி ஒரு அர்ச்சனைச் சீட்டு வாங்கிட்டு வாங்க.. – வெளியே கையைக் காண்பித்தாள். வெறும் அர்ச்சனைச் சீட்டா? – புரியாமல் கேட்டான் இவன். போதும்….மந்திரம் சொல்லிப் பண்ணுவார்ரெண்டு ரூபாதான்வாங்கிட்டு வாங்க.. –பரபரத்தாள் சாரதா.

என்ன சாரதா நீ? வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்கிட்டு வரச்சொல்றே? அப்படியே ஒரு அர்ச்சனைத் தட்டும் வாங்கிட்டு வர்றேனே?

வேண்டாம்அதுக்கு வேறே பதினைஞ்சு ரூபா தனியாக் கொடுக்கணும். ஏற்கனவே சுவாமி சந்நிதியிலேதான் அர்ச்சனை பண்ணியாச்சேஅது போதும்.. அதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன்;… இங்கேதான் எல்லாரும் அர்ச்சனை பண்ணுவாங்கன்னுநீதான் அங்கே பண்ணுவோம்னே. எங்கே பண்ணினா என்ன? எல்லாம் சாமிக்குத்தானே? பரவால்லே, போய் அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டு வாங்கஅவள் விரைசல் படுத்தியதில் மேலும் அங்கே நிற்க மனமின்றி, வாசலை நோக்கி விரைந்தான் ரமணன்.

சாரதா ஏனிப்படிச் செய்கிறாள்? என்னவோ போலிருந்தது அவள் செய்கை. யாருமே வெறும் அர்ச்சனை டிக்கெட் மட்டும் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னதாகத் தெரியவில்லை. இல்லாத வழக்கத்தை அவள் உண்டு பண்ணுவது போலிருந்தது. ஏற்றுக் கொள்வார்களா? முடியாது என்றால் இன்னும் கேவலமாயிற்றே? போக,வர பஸ்ஸ_க்கே நூற்றைம்பது நெருக்கி ஆகிறது. அவ்வளவு செலவழித்து ஒரு கோயிலுக்குச் சாமி கும்பிட வரலாம்., அங்கே ஐம்பதோ, நூறோ செலவழித்து நிறைவாகக் கும்பிட்டுச் செல்லக்கூடாதா? அதற்கு ஏன் மனசு சுணங்குகிறது? இதிலென்ன சிக்கனம்? இது சிக்கனமா அல்லது கஞ்சத்தனமா? சுவாமி சந்நிதியில் அர்ச்சனை பண்ணிவிட்டால், அம்பாள் சந்நிதியிலும் அர்ச்சனை பண்ணக் கூடாது என்று உள்ளதா என்ன? ஏதேனும் ஐதீகம் உண்டோ? அதற்கு ஒரு இருபது முப்பது செலவழித்தால் என்ன? குடியா முழுகிவிடும்? மனது நினைக்கிறது. அது நல்ல காரியம் என்று தோன்றுகிறது. பிறகென்ன தயக்கம்? எதைச் செய்தால் மனது நிம்மதிப்படுமோ அதைச் செய்துவிட வேண்டியதுதானே? பக்தியையும் சிக்கனமாகத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதி போல் அல்லவா இருக்கிறது இவள் செய்வது? பிறகு ஊருக்குத்திரும்பி சே! தப்புப் பண்ணிட்டோம்அம்பாளுக்கும் ஒரு அர்ச்சனை நிறைவாப் பண்ணியிருக்கலாம்? என்று எண்ணி துக்கப்படவா? இந்த நேரத்தில் சாரதா இப்படிச் சுங்கம் பிடிப்பது சரியில்லை என்றே தோன்றியது இவனுக்கு.

நுழைவாயிலில் இருந்த கடைக்குப்போய் ஒரு அர்ச்சனைத் தட்டு வாங்கினான். அதில் எல்லாம் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டான். தேங்காயைச் சுண்டிப் பார்த்து டிக்டிக். என்று சத்தம் வருகிறதா என்று சோதனை செய்தான். சரியாக நடுவில் உடைய வேண்டும். இல்லையென்றால் அதுவேறு மனதுக்கு சந்துஷ்டி. காதுக்கு அருகே வைத்து குலுக்கிப் பார்த்தான். உள்ளே தண்ணீர் கலகலத்தது. இந்த மனது சங்கடப் படாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார்கள்? ஆனால் அடிப்படையாக எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருப்பது புலப்பட்டது. ஒரு மாலையையும் வாங்கித் தட்டில் வைத்துக் கொண்டு, கௌன்ட்டருக்கு வந்து அர்ச்சனை டிக்கெட்டை வாங்கி, தட்டில் தேங்காய் அடியில் பாதுகாப்பாய் செருகிக் கொண்டு வேகமாய் உள்ளே நுழைந்தான்.

வாங்கவாங்க..சீக்கிரம்ஏன் இவ்வளவு நேரம்? இவனைப் பார்த்ததும் பரபரத்தாள் சாரதா. அர்ச்சனைத் தட்டை அவளிடம் நீட்டியதும், அவள் முகம் சுருங்கியது போலிருந்தது. வரிசையாய் வாங்கி வந்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் பயபக்தியோடு நீட்டினாள். அவள் பெயர், என் பெயர், ரெண்டு குழந்தைகளின் பெயர் என்று சொல்ல ஆரம்பித்தாள். :டுத்துஅடுத்துஎன்று எல்லாவற்றையும் கேட்டு, அங்கேயே முணுமுணுத்தவாறே மேலும் சிலரின் தட்டை வாங்கி கழுத்துவரை அடுக்கிக்கொண்டு கர்ப்பக் கிரஹம் நோக்கி விரைந்தார் அர்ச்சகர். கூட்டம் அதிகமாய்த்தான் இருந்தது. இன்னும் பலர் அர்ச்சனை பண்ணக் காத்துக் கொண்டிருந்தார்கள். சாரதாவின் முழுக் கவனமும் நேர் உள்ளே சந்நிதானத்தில் இருந்தது. இந்நேரம் பார்த்து கழுத்துச் சங்கிலியில் எவனும் கட்டிங் போட்டால்கூட அவள் உணரப் போவதில்லை.. கன்னத்தில் மாறி, மாறி டப்பு, டப்பு என்று போட்டுக்கொண்டு, பயபக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தாள் சாரதா.

அவளையும் அவளின் தீவிரமான முரட்டு பக்தியையும் பார்த்து, ரசித்துக்கொண்டே சந்நிதியை நோக்கிக் கை கூப்பினான் இவன். தீபாராதனை…..தீபாராதனைகும்பிடுங்கஎன்றாள் திடீரென்று இவனைப் பார்த்து. கவனிச்சிட்டுத்தானே இருக்கேன்.. என்றான்.; கூட்டத்தில் பலரும் கவனிக்க அவள் அப்படிக் கூறியதில் சிரிப்புத்தான் வந்தது. கண்மூடிக் கும்பிடலுக்கு இடையே பக்கவாட்டில் நின்ற சாரதாவின் நெற்றியில் கவனம் போனது. அங்கும் இங்குமாக ஒரு சீரின்றி இமைக்கு நடுவிலிருந்து தலை வகிடு ஆரம்பிக்கும் இடம்வரை பல இடங்களில் குங்குமம், சந்தனம், விபூதி என்று அப்பியிருந்தாள் அவள். போதாக்குறைக்கு கையில் வேறு குவித்து மூடிக் கொண்டிருந்தாள். செல்லாத்தாசெல்ல மாரியாத்தா.. என்ற பாட்டு ஞாபகத்துக்கு வந்தது இவனுக்கு. அங்கே தூண்லே மாட்டியிருக்கேகிண்ணம்அதுலே போடுஇப்படிக் குவிச்சு வச்சிட்டு எப்படிக் கும்பிடுவே… – இருக்கட்டும்இருக்கட்டும்இவ்வளவு பக்தியிருக்குநிறையக் கோயில்களுக்குப் போகணும்கும்பிடணும்ங்கிற ஆசையிருக்குஒரு வேளை அதனாலதான் இந்தச் சிக்கனப் புத்தி வருதோ? –மீண்டும் நினைத்துக் கொண்டான். ஆனாலும் வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்குங்கள் என்று அவள் சொன்னது ஏனோ பொருத்தமாகத் தெரியவில்லை சூடத் தட்டை ஏந்தியவாறே அர்ச்சகர் வர பல கைகள் தீபத்தை நோக்கி முன்னேறின. நீளும் கரங்களின் வேகத்தைப் பார்த்தால் எங்கே சூடம் அணைந்து போகுமோ என்றிருந்தது. சில்லரைக் காசுகள் தட்டில் விழுந்தன. பின்னாலேயே ஒருவர் தீர்த்தம் கொடுத்துக் கொண்டு வந்தார். அவர் பின்னால் இன்னொருவர் குங்குமமும் பூவும். சட்டென்று இவன் கழுத்தில் ஒரு பூமாலை விழுந்தது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டே கைகூப்பி ஏற்றுக்கொண்டு மாலை போட்டவரின் கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்தான் அவர் முகம் மலர்ந்தது. குங்குமம் கொடுத்தவருக்குப் பின்னால் வந்த ஒருவர் அர்ச்சனைக்குக் கொடுத்தவா தட்டை வாங்கிக்குங்கோ.. என்றவாறே டக்கு டக்கென்று உயர்த்தி நீட்டினார். இங்கேஇங்கே.. என்றவாறே தட்டை வாங்கிக்கொண்டனர் பலரும். கூட்டத்தில் உண்மையிலேயே அர்ச்சனைக்குக் கொடுத்தவர்கள் மட்டும்தான் தட்டு வாங்குகிறார்களா என்று தேவையில்லாமல் சந்தேகம் வந்தது இவனுக்கு. சாரதாவும் கைகளை நீட்டினாள். யார் தட்டு யாருக்கு வந்தது என்று ஒரு சந்தேகமும் எழுந்தது. எல்லாமும் ஒன்றுபோல் இருந்தன. எது வந்தால் என்ன?. தனக்கு சரி, அவளுக்கு? அவளைப்போன்றேதானே மற்ற பெண்களும் என்று தோன்றியது. வாங்க போவோம்.. என்றவாறே கண்களில் ஒற்றிக்கொண்டு இவனிடமும் நீட்டினாள் சாரதா. தொட்டுக் கும்பிட்டுக்கொண்டே வெளியே வந்தான்.

அடுத்த கூட்டம் முன்னேறியது இப்போது. கோயிலில் சில இடங்களில் கட்டிட மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. விதானக் கற்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்பதாகச் செய்தி படித்திருந்தான். . புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள மண்ணை நீக்கிவிட்டு சிமிண்ட் கான்கிரீட் போட்டதால் கோயில் கட்டடத்தின் அஸ்திவாரம்; ஈரப்பதம் அற்று பாதிக்கப்பட்டது என்பதாகவும் ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது. அருகேயிருந்த சின்னச் சின்ன சந்நிதிகளைக் கும்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தாள் சாரதா. சாவகாசமாய் வரட்டும் என்று அவள் திருப்தி கருதி ஆசவாசமாய் ஓரிடத்தில் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சாரதா அங்கங்கே தன்னைச் சுற்றியவாறே வந்து சேரப் புறப்பட்டான்.

அங்கங்கே கோயிலின் பல பகுதிகளில் தூண்களுக்குக் கீழே அமர்ந்துகொண்டு, தேங்காய்களை உடைத்து, சில்லுப்போட்டும், பழத்தை உரித்தும், தொன்னையில் வாங்கிய பிரசாதங்களை ருசித்துக்கொண்டும் பலர் தின்று கொண்டிருந்தார்கள். வாசலுக்கு முன் பாட்டையில் யானை ஒன்று உரித்துப்; போட்ட தென்னை மட்டைகளுக்கு நடுவே நின்று கொண்டு ஆடிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் தொங்க விட்டிருந்த வஸ்திரமும், மணியும், அது ஆடுவதனால் எழுந்த மணிச் சப்தமும், கேட்க இனிமையாயிருந்தது. ஒரு குழந்தையைக் கட்டாயமாகத் தூக்கி, அது பயத்தில் கதறக் கதற, அதன் தந்தை, மேலே அமர்ந்திருந்த பாகனிடம் அதைக் கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தை மேலும் குரலெடுத்து அழ, அதைப் பார்த்துப் பலரும் சிரித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு சீர் தட்டவே தட்டாதாக்கும்.. –என்று யானை மேல் ஏற்றுவதைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தது ஒரு பெண். ஒவ்வொன்றாகப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள். கோயிலுக்கு வந்தா உட்காராமப் போகக் கூடாதுஒரு நல்ல இடமாப் பாருங்கசாரதா சொன்னதுபோல் நல்ல இடம் எது என்று தேடத் துவங்கினான் இவன். அதோ, அங்கே போய் உட்காருவோம். என்றவாறே ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான.;

அப்பாடா.. என்றவாறே ஆசுவாசப்பட்டுக்கொண்டு அமர்ந்தாள் சாரதா. இவன்; அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது எதற்கு என்பது போல், மேலே விதானத்தில் இருந்த ஓவியங்களையும், சிற்பங்களையும் ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று கத்தினாள் சாரதா. என்னவோ, ஏதோவென்று பதறிப் போனான் இவன். என்ன? என்ன? என்னாச்சு? என்றான் பதிலுக்குப் பதட்டத்துடன்.உடம்புக்குஏதேனும் உபாதையோ? என்று தோன்றியது. ஐயையோஎன்னங்க இது? என்றாள் அர்ச்சனைத் தட்டைக் காண்பித்து. இவன் ஒன்றும் புரியாமல் பொறுமையின்றி, விஷயத்தைச் சொல்லு என்றான் எரிச்சலுடன். இந்தக் குடுமித் தேங்காயையும், ஒரு பழத்தையும் அர்ச்சகருக்குக் கொடுக்க விட்டுப் போச்சேங்க…? என்றாள் சாரதா. அவள் முகம் துக்கத்தில் சுருங்கியது அட…! இதுக்குத்தான் இப்படிக் கத்தினியா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்என்றவாறே தூணில் சாய்ந்தான். சாயாதீங்கஎண்ணைப் பிசுக்கு….ஒட்டிக்கிடும்.. பதறினாள் சாரதா. இவனுக்கு ரொம்பவும் ஆசுவாசமாய் இருந்தது. ஏங்க, ஒண்ணு செய்றீங்களா? சிரமம் பார்க்காம இதைக் கொண்டுபோய் அர்ச்சகர்ட்டக் கொடுத்துட்டு வந்திடறீங்களா? புண்ணியமுண்டுங்கஒரு பழமும், ஒரு மூடித் தேங்காயும் அவருக்குக் கொடுக்கணும். சாஸ்திரமுண்டாக்கும இவனுக்கானால் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. என்ன நினைச்சிட்டிருக்கே நீ? வெளையாடுறியா? நானென்ன சின்னப்பிள்ளைன்னு நினைச்சியா? சும்மா ஓடிட்டிருக்கிறதுக்கு? அவருக்கு தட்சணை பத்து ரூபாய் கொடுத்தாச்சுல்ல, அத்தோட விடுஇதுக்குன்னு ஒரு தரம் என்னால போக முடியாது. அங்கென்ன எடம் காத்தாடவா கிடக்கு? ஒரே இடிபிடி. கூட்டப் புழுக்கத்துல அரை மணி நேரம் நின்னதுல, வேர்த்து விறுவிறுத்து எனக்கு மயக்கமே வந்திடுச்சு. கால் கடுத்துப்போய் அப்பாடான்னு இப்பதான் உட்கார்ந்திருக்கேன். திரும்பவும் போங்கிறியே? இங்கே யாராவது கேட்பாங்க..அவுங்களுக்குக் கொடுஅதுவும் புண்ணியந்தான்… – நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனான் ரமணன். அப்போது சாரதாவின் குரல் மீண்டும் இவனைத் துணுக்குறச் செய்தது. அய்யய்யஇங்க பாருங்களேன்…! என்றவாறே அர்ச்சனைத்தட்டை முன்னே நீட்டினாள் என்ன? என்றவாறே கூர்ந்து பார்த்தான் ரமணன். ஒன்றும் புரிந்தபாடில்லை. இவளுக்கென்று ஏதாவது தோன்றிக்கொண்டே இருக்குமோ? இவள் சென்டிமென்டுக்கு ஒரு அளவேயில்லையா?

நல்லாப் பாருங்க.. என்றாள் மீண்டும். ..எல்லாந்தானே இருக்கு?; பதிலிறுத்தபோது சட்டென்று என்னவோ தோன்றியது. அட, ஆம்மா…!! – என்றான் உடனே. இப்போது எல்லாமும் தெளிவாகத் தெரிந்தன. . நூலில் கட்டிய பத்தியும் சுருட்டிக்கட்டிய வெற்றிலையும், பொதிந்த சூடமும், பொட்டணமிட்ட கற்கண்டும், பழமும், மாலையும், கசங்கிய அர்ச்சனைச் சீட்டோடு வைத்தது வைத்தமேனிக்கு அப்படியே அமிழ்ந்திருந்தன கூடையில். என்னங்க இது? சாரதாவின் குரலில் மெல்லிய சோகம். அப்டியே வந்திருக்கு!…இல்ல? – அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது இவனுக்கு. சரி, விடுகூட்டம் அதிகமானாலே எல்லாமும் நெகிழ்ந்து போறதும், நீர்த்துப் போறதும் சகஜந்தான். சந்நிதிக்குள்ள போயிட்டுத்தானே திரும்பியிருக்குகண்ல ஒத்திக்கோஅவ்வளவுதான். அழுத்தமாய்ச் சொன்னான் ரமணன். இவன் பதிலில் அவளுக்குத் திருப்தி வந்ததா தெரியவில்லை. பக்தியும், அனுஷ்டானங்களும், நியமங்களும் அதைக் கடைப்பிடிப்பவர்களின் மனம் சார்ந்த, அறிவு சார்ந்த படிமங்களாயிற்றே

எச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை

“நான்தான் ஆரம்பத்துலயே சொன்னனே…நீங்கதான் கேட்கல….“ என்றான் இவன். தான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது என்பதில் ஒரு சமாதானம். முன் கூட்டிக் கணிப்பது என்பது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? அதற்கு ஒரு தனி அனுபவம் தேவைப்படுகிறதே…!

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னார்.

அன்னைக்கு நீங்க சொன்ன போது அது தப்பாத் தெரிஞ்சது சார்…என்ன இப்டி அபசகுனமாப் பேசுறாரேன்னு தோணிச்சு…..இப்பத்தான் அதோட உண்மை புரியுது….

உண்மையில்ல சார்…மகத்துவம்….அதாவது உண்மையோட மகத்துவம்….எல்லாராலேயும் சொல்லிட முடியுமா என்ன? – கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அந்தக் கணத்தில் தேவைப்பட்டது.

சரி…பரவால்ல…இனிமேலாவது கவனமா இருங்க….முடிஞ்சா ஒராளை வேலைக்கு வச்சிக்கப் பாருங்க….-படிப்பு வாசனை இல்லாதவனா…அவன்தான் காவல் காக்க லாயக்கு….. – அவர் மறுக்கலாம் என்கிற எண்ணத்தோடேயே இந்த யோசனையைச் சொன்னான். அது அவருக்குக் கட்டுபடியாகாது என்றும் அவனுக்குத் தெரியும்தான்.

நல்ல கதையாப் போச்சு போங்க….வேலைக்கு வேறே ஆள வச்சு இன்னும் நஷ்டப்படுறதுக்கா…? அவனுக்குச் சம்பளம் யாரு கொடுக்கிறது. நமக்கே தாளம்….

சரி…வேண்டாம்…நீங்களே இருந்து கருத்தாப் பாருங்க….வெளி ஆளுகள உட்கார்த்திட்டு பக்கத்துல பாங்குக்குப் போறது, காய்கறி வாங்கப் போறது, கடை கண்ணிக்குப் போறதுன்னு வேண்டாம். டவுனுக்குள்ள இருக்கிற மார்க்கெட்ல புகுந்து காய்களை அள்ளி அப்படி என்ன லாபம் சம்பாதிச்சிடப் போறீங்க.? எதுக்குச் சொல்றேன்னா அந்த நேரம் பார்த்துத்தான் தவறு நடக்கும்… அதனால…

சரிதான்…ஆனா ப்ராக்டிகலா வர்ற போது சில சமயம் அப்டி நடந்து போகுதே…தவிர்க்க முடிலயே…! பக்கத்து டிராவல்ஸ் சுகுமாரத்தான் உட்கார்த்திட்டுப் போறேன்…அவரு நம்ம ஆளுதானே….

உங்க ஆளுதான்….யார் இல்லைன்னு சொன்னது? அவுரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருப்பாரு….நாலஞ்சு பேர் திடீர்னு புகுந்தா…என்னத்தக் கவனிக்க முடியும்…? அப்படியும் வர்றாங்கல்ல? சேர்ந்து நின்னாலே உள் புறமா என்ன நடக்குதுன்னு தெரியாது…யாராவது ஒராள் பை வச்சிருந்தாலும் போதுமே…எடுத்து செருகிக்கலாமே…! முதல்ல அவன் மட்டும் நழுவுவான்…மத்த ஆளுகதான் இருக்கேன்னு நாம விட்டுடுவோம்…ஆனா சாமான் மொத ஆளோட போயிடும்…என்னா டெக்னிக்ங்குறீங்க….? நம்ப கவனத்த பல வழிலயும் திசை திருப்பி விட்ருவாங்க…இந்த சாமர்த்தியத்த நல்ல வழிக்குப் பயன்படுத்தலாமேன்னு எவன் யோசிக்கிறான்?

அதான் அப்படி எதுவும் போயிருக்குமோன்னு நினைச்சு முழிச்சிக்கிட்டிருக்கேன்…போன வாரம்தான் ஸ்டாக் வந்திச்சு….எடுத்து எண்ணி, ரிஜிஸ்டர்ல வரவு வச்சிட்டுத்தானே ரேக்குல அடுக்கினேன். எனக்குத் தெரியாதா எது போகுது, வருதுன்னு…? கண்ணை மூடிட்டுச் சொல்லுவேன்.. இந்த முதல் ரேக்குலேர்ந்து, அந்தக் கடைசி ரேக்கு வரைக்கும் என்னென்ன புத்தகங்கள், எத்தனையெத்தனை இருக்குன்னு….இவ்வளவு ஏன் பத்திரிகைகள்ல எத்தனை வித்திருக்கு…எத்தனை மீதமிருக்கும்னு இப்ப சொல்லட்டா……..?

அவருக்கான பெருமை என்னவோ சரி. ஆனாலும் அதையும் மீறித்தானே இது நடந்திருக்கிறது.. பொறுப்பாய் இருக்கக் கூடிய ஆள்தான். சில வருஷங்கள் முன் வேறொரு புத்தக அங்காடியில் வேலை பார்க்கும்போதே அவரைத் தெரியும். அதில்தான் பழக்கமானது. அங்கு சில ஆண்டுகள் பெற்ற அனுபவத்தை வைத்துத்தான் இந்தப் புத்தகக் கடையையே துவக்கினார். பக்குவம் அங்கு பெற்றது.

நான் கூட, போயும் போயும் புத்தகக் கடையையா துவக்க வேண்டும்….. வேலைக்குப் போகக் கூடாதா? திரும்பவும் இந்தச் சகதியில்தான் விழ வேண்டுமா? என்றுதான் பரிதாபப்பட்டேன். அதானே பார்த்தேன்…என்னடா அங்க ஆளக் காணமேன்னு…இங்க தனியாக் கடை வச்சாச்சு போல்ருக்கு…? என்றேன் அந்த முதல் நாளன்று. சந்தோஷமாய் அழைத்து உட்கார வைத்து, குளிர்பானத்தை நீட்டினார். முதல் விசிட் என்று வெறுங் கையோடு திரும்பக் கூடாது என சில புத்தகங்களும் வாங்கினேன்.

அழைப்பு விடுத்து நான் வரவில்லை. பஸ்ஸூக்காக அந்த வளாகத்திற்குள் வரப்போக, பேருந்து நிலையத்துக்குள் இவர் கடை திறந்திருப்பது கண்ணில் பட்டது. அட…நம்மாளு….!

இந்த எடத்தை எப்டி ச்சூஸ் பண்ணினீங்க…? யாரு சொன்னா இந்த யோசனையை…? என்றேன்.

பாராட்டுகிறேனா அல்லது மறுக்கிறேனா என்பது தெரியாமல் குழப்பத்தோடு பார்த்தார்.

பயங்கரமான பிஸ்ஸி ஏரியாவாச்சே இது…? என்று மறுபடி வியந்தேன். மனதுக்குள் மெல்லிய கவலை. ரொம்பவும் பரபரப்பும், ஜன நெரிசலும் புத்தகக் கடைகளுக்குப் பொருந்துமா? அமைதியாய் ஒத்தர், ரெண்டு பேர் என்று வந்து போகும் இடமாயிற்றே…? புத்தகங்களுக்கே பிடிக்காதே கூட்டமாய் வந்து மொய்ப்பது…!

அப்ப இடம் கிடைக்கிறது கஷ்டந்தானே….! பிடிச்சனா இல்லையா…? என்றார் பெருமிதத்தோடு. முதல் முறையாக, தனியாக வியாபாரம் துவக்கியிருக்கும் உற்சாகத்தில் இருந்தார். அந்த முதல் நாளில் அவரை சோர்வடையச் செய்யக் கூடாது. கூப்பிட்டு உட்கார வைத்து, உள்ளத்தையும் உடம்பையும் குளிர வைத்து விட்டார். வாழ்த்தத்தான் வேண்டும். வாய் சும்மாயிருந்தால்தானே? பழக்க தோஷம் விடுமா? நாக்கு நுனிவரை வந்ததை அடக்க முடியவில்லை.

பஸ் ஸ்டான்டுக்குள்ளேன்னாலே பிரச்னையாச்சேங்க….? தண்டல் வசூலெல்லாம் இருக்குமே?… தண்ணியடிக்கணும்னா வந்து கையை நீட்டுவானே…! கொடுத்து முடியாதே…?

புஸ்தகக் கடைக்கெல்லாமா வந்து நிக்கிறாங்க…? இது கற்பூர வாசனையாச்சே…!

எந்த வாசனையடிச்சா என்ன? அவனுக்குத் தேவை காசு வாசனை…கிடைச்சவரைக்கும் லாபம்தானே…?

அதெல்லாம் சமாளிச்சிக்கிடலாம் சார்….புத்தகம் வித்தாப் போதும் எனக்கு…அதுதான் இப்போ பெரிய கவலை….!

அப்போ கவலையோடவே கடை திறந்திருக்கீன்னு சொல்லுங்க? – வாய் சும்மா இருக்கிறதா!

சிரித்துக் கொண்டார். நெடுநாளைய வாடிக்கையாளன்…என்னிடம் கோபிக்க முடியுமா? இனிமேல் இவர் கடைக்குதான் வரணும்….அந்தக் கணமே நினைத்துக் கொண்டேன்.

வந்து கொண்டுமிருக்கிறேன். தினமும் எப்படியும் ஒரு விசிட் உண்டு. ஒன்று ஆபீஸ் போகும் போது…அல்லது திரும்பும்போது… மாலையில் ரொம்பவும் கச கசவென்று இருக்கும் அந்தப் பகுதி. பஸ்கள் வந்தமணியமாகத்தான். படு டஞ்ஜன். வெளியேறத் துடிக்கும் பேருந்துகளின் இரைச்சல்…டீக்கடைகளின் ஓயாத பாட்டுச் சத்தம். போதாக் குறைக்கு ஏகப்பட்ட டிராவல்ஸ் வேறு. சொல்லி மாளாது. டூ வீலரை எங்கு நிறுத்துவது என்கிற பிரச்னை பெரிய்ய்ய தலைவலி.. என்ன ஆயிடப் போகுது என்று கிடைக்கும் இடத்தில் போட்டால் வண்டி நம்மளது இல்லை. கண்ணுக்குப் படுவது போல் நிறுத்தணும். இல்லையெனில் கண்டிப்பாக லபக்…

இது என் கடையாக்கும்….என்று உணர்த்துவது போல் சரவணன் கடை முன்னால்தான் கொண்டு நிறுத்துவேன். தள்ளி நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருக்கும் போலீஸ் கூட தினசரி என்னைப் பார்ப்பதால் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிருவானா? எங்கிட்டதானே வந்து நின்னாகணும்!

சார்…ஜி.பி.எஃப் அட்வான்ஸ் போட்டிருக்கேன்…கொஞ்சம் சீக்கிரம் தள்ளி விடுங்க….அர்ஜென்டா பணம் வேண்டிர்க்கு…..

நீங்கதான் எப்பவும் கனமாத்தான இருப்பீங்க…! அர்ஜென்ட் எங்கருந்து வந்திச்சு…?

…அப்டியெல்லாம் இல்ல சார்…நீங்களா என்னமாச்சும் நினைச்சிக்கிடுறீங்க…! எப்பயும் காச்சப்பாடுதான் சார்…

வேறே யாராச்சும் கிறுக்கன்ட்டப் போய்ச் சொல்லுங்க… –

ஆள் மசியாது எனில் பயங்கரக் கடுப்பாகி விடுவார்கள். என்னைக்குடா மாட்டுவான்……! என்கிற கடுப்பு.

நானா மாட்டுற ஆளு…அவிங்ஞதான் என்கிட்ட மாட்டியிருக்கானுங்க…அதான் வச்சுத் தீட்டிக்கிட்டிருக்கேன்….ஏதாச்சும் ஒண்ணு தொங்கல்ல இருந்தாத்தான பிடிப்பு? ஆபீசர்களுக்குச் சொல்லிக் குடுக்கிறதே நாமதானே…? வாடீ…வ்வா…என்னைக்காச்சும் வராமயா போவ….என்ற காத்திருப்பு.

நான்தான் மெமோவுக்கு பதில் கொடுத்திட்டேன்ல சார்…அப்புறம் ஃபைல மூடிற வேண்டிதான…? ஏன் சார் இன்னும் பென்டிங் வச்சிட்டு இழுத்திட்டிருக்கீங்க…? மனசுக்கு நி்ம்மதியே இல்ல சார்….

இந்தப் புத்தி காசக் கைநீட்டி வாங்கறப்ப இருந்திருக்கணும்..பச்சையா மாட்டுனா…? .பதில்ல திருப்தி இல்லீங்க…சார்ஜஸ் போடச் சொல்லி உத்தரவு…செவன்டீன் ஏ…..தயாராயிருங்க….

சார்…சார்…அதெல்லாம் வாணாம் சார்…பெறவு இன்க்ரிமென்ட் கட்டு…அது இதுன்னு போகும்….பார்த்து முடிச்சு விடுங்க….இனிமே எந்தத் தப்பும் நடக்காது…..

அப்போ அப்டில்ல நீங்க எழுதிக் கொடுத்திருக்கணும்…இதெல்லாம் எங்கிட்டச் சொல்லி என்ன புண்ணியம்…? எழுத்துல இருந்தா நானாப் பார்த்து என்னமாச்சும் செய்யலாம்…இதையே சீஃப்கிட்டப் போய்ச் சொல்லுவீங்களா? மாட்டீங்க…இங்கதான் வந்து தொங்கு தொங்குன்னு தொங்குவீங்க…! நானா உத்தரவு போடுற ஆளு? எங்கழுத்த அறுக்கிறீங்க…?

நீங்க நினைச்சா மூடிறலாம் சார்….எல்லாம் உங்க கைலதான் இருக்கு…பார்த்து செய்ய்ய்ங்க….-அந்த இழுவை எதற்கு அடி போடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆன மட்டும் என்னையும் பழக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அது ஒண்ணு மட்டும் எங்கிட்ட இல்லாததுதான் எனக்கு ப்ளஸ்…!

போங்க…போங்க…பார்ப்போம்…. – தொலைஞ்சு போறானுங்க…என்று இரக்கம் மேலிடத்தான் செய்கிறது. லஞ்சத்த எங்க ஒழிக்கிறது? நாமளே ஒழிஞ்சாத்தான் நிம்மதி…!

அதோ அங்கே நிற்கும் போலீஸ்காரருக்கும் அப்படி ஒன்று என்னிடம் பென்டிங்…அதனால்தான் அங்கிருந்தே என் முகத்தை நோக்கி பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

இங்க கொண்டாந்து புஸ்தகக் கடையை வச்சிருக்காங்ஞ பாரு…கிறுக்கங்ஞ…என்று கறுவிக் கொண்டேயிருக்கறார் மனதுக்குள்.

சரவணனும் என் தினசரி வருகைக்கு ஒன்றும் சொல்வதில்லை. ஆள் வேண்டியிருந்தது. பாதுகாப்பாய் என்னைப் போல் ஒருவர் அவருக்குக் கிடைப்பது கடினம். போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளாச்சே…! குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கும் மேலே இருப்பேனே…! அந்த அடையாளம் போதாதா? மாலை ஆபீஸ் முடித்து வண்டியை எடுத்தேனானால் நேரே இங்கேதான் வந்து இறங்குவேன். கடைக்குள் நுழைந்து ஒரு விசிட். புதிதாய் எதுவும் வந்திருக்கிறதா என்று ஒரு பார்வை. பிறகு வந்து உட்கார்ந்தால் நான்தான் காவல் தெய்வம்…தோன்றி மறையும் இஷ்ட தெய்வம்…!!!

எதையும் ஓசியில் எடுத்துப் படிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எல்லாவற்றையும் பணம் கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறேன். நல்லது கெட்டது என்று அறியாமல், தரமானது, தரமற்றது என்று புரியாமல், கட்டாயம் படிக்க வேண்டியது என்பதை அறுதியிட்டு உணராமல் கண்டமேனிக்கு வாங்கிப் போட்டிருக்கிறேன் வீட்டில். நானே ஒரு கடை போடலாம்தான். அவ்வளவு புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நினைத்த போது நினைத்த புத்தகத்தை எடுத்துப் படிக்கும் ஆர்வம். ஆகையால் யாருக்கும் இரவல் தருவதில்லை. தயவுசெய்து புத்தகம் கேட்காதீர்கள் என்று எழுதியே தொங்க விட்டிருக்கிறேன். அதனாலேயே எனக்கு நண்பர்கள் குறைவு. ஒருத்தனால எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னா எவன் நெருங்கப் போறான்? படிக்கிற பயபுள்ளைகளும் ஓசி இல்லைன்னா தலை காட்ட மாட்டான்ல….!

எல்லோரும் காசு கொடுத்து வாங்கித்தான் படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

எல்லாராலேயும் அது முடியுமா சார்…. என்பார் சரவணன்.

நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? அப்போ உங்க கடையை லெண்டிங் லைப்ரரியா மாத்த வேண்டிதான்…? என்று சொல்லியிருக்கிறேன்.

லெண்டிங் லைப்ரரின்னா அதுல பழைய புத்தகங்கள்தான சார் ரொட்டேஷனுக்குக் கிடைக்கும். இந்த மாதிரி லேட்டஸ்ட்டெல்லாமா கொடுக்கிறாங்க….லம்ப்பாக் கொடுத்து வாங்கிப்புட்டு யாராச்சும் சில்லரைக்கு விடுவாங்களா…? இல்ல மாத வாடகை வாங்கித்தான் கட்டுபடி ஆகுமா…?

நீங்க அந்த புதுமையைச் செய்ய வேண்டிதான்…புத்தம் புதுப் புத்தகங்களை வாங்கி வைத்து லெண்டிங் லைப்ரரி நடத்தும் வாசகர்…ன்னு ஒரு நாளைக்கு உங்களையும் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவாங்களே?…நீங்க ஒரு நல்ல வாசகரா இருக்கக் கண்டுதானே இந்த மாதிரி நல்ல நல்ல புத்தகங்களா வாங்கி விக்கிறீங்க….சமீபத்துல வந்ததுன்னு சொல்லிட்டு உங்ககிட்டதானே வந்து நிக்கிறாங்க….அதிகமா காலேஜ் பசங்கள உங்க கடைலதான பார்க்க முடியுது….படிப்படியா இழுத்திட்டிருக்கீங்களே எல்லாரையும்…அதுவே பெரிய சாதனைதான்….வேறே எந்தக் கடைலயும் இந்த சிட்டில இவ்வளவு சீக்கிரம் புதுப் புஸ்தகம் கிடைக்கிறதில்ல….அது தெரியுமா உங்களுக்கு? எல்லாக் கடைக்கும் நாயா, பேயா அலைஞ்சதுனால சொல்றேன்…தரமான வாசகர்களின் முகவரி நீங்க..நீங்கதாங்க சூப்பர் ஸ்டார்….

சரவணனுக்குப் பெருமை தாளவில்லை. அப்புறம் ஏன் சார் லெண்டிங் லைப்ரரி அது இதுன்னு சொல்றீங்க…? நல்லதையே பேசுங்க சார்…இப்பக் கடைசியாப் பேசின மாதிரி….பட்டுப் பட்டுன்னு எதிர்பாராம எதையாச்சும் சொல்லிப்புடறீங்க…மத்தவங்க மனசு சங்கடப்படும்னு யோசிக்கவே மாட்டீங்களா…?

என்னாச்சு…திடீர்னு சீரியஸ் ஆயிட்டீங்க…? ஓ.கே…ஓ.கே….ரிலாக்ஸ்…..நல்லா பழகினவர்ங்கிற உரிமைல பேசுறது இதெல்லாம்…கொஞ்சம் கூடக் குறையத்தான் வரும்….தப்பா தோணிச்சின்னா நிறுத்திக்கிடுவோம்…

இதற்கு சரவணன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. உண்மையிலேயே மனசு சங்கடப்பட்டிருக்கிறார் என்றுதான் தெரிந்தது. இப்பத்தான் கடையத் தொறந்திருக்கிறான் மனுஷன்…அவன்ட்டப் போயி லென்டிங் லைப்ரரியா நடத்துன்னா? கடுப்பாக மாட்டானா? – மனசாட்சி உறுத்தி விட்டதுதான்.

சரி…அத விடுங்க…இப்ப விஷயத்துக்கு வருவோம். எதுக்கு வெட்டிப் பேச்சு…? எத்தன புத்தகம் காணாமப் போச்சு…என்னென்ன போச்சு? எவ்வளவு பைசா? அதப் பார்ப்போம்….ஸ்டாக் ரிஜிஸ்டர எடுங்க…ஒரு அலசு அலசிடுவோம்….- சொல்லிவிட்டு என்னைத் தயார் படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.

எவ்வளவு பைசாங்கிறதப் பிறகுதான் பார்க்கணும்…முதல்ல லிஸ்ட்டை எடுத்திட்டேன்….என்னென்ன புஸ்தகம்னு…ஒவ்வொண்ணுலயும் எத்தனை இருக்குங்கிறதை அலசினாத்தான் எத்தனை போயிருக்குன்னு தெரிய வரும்…..

சேல்சும் ஆகியிருக்குமுல்ல…அது போகத்தானே மீதியப் பார்க்கணும்…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னீங்க…மனப்பாடமாச் சொல்வேன்னு….

பில் புக்குப்படி சேல்சு, அப்புறம் இருப்பு, ரெண்டையும் கூட்டி வரவுலர்ந்து கழிக்கணும்….அப்பத்தான் தொலைஞ்சது தெரியும்….! பரவலா பல தலைப்புல போயிருக்கு சார்….புதுசுகள உடனே இறக்கறதும் ஆபத்துதான் போல்ருக்கு…

என்னங்க நீங்க…அத்தனை புத்தகமா போயிருக்கு? அப்டித் திருடுற அளவுக்கு எவன் வந்தான்? நீங்க கடைல இருக்கப்பவேவா இத்தனையும் நடந்திச்சு…இல்ல இல்லாதப்பவா….? நம்பிக்கையா உட்கார்த்தி வச்ச ஆளு.. வித்த .காசை ஆட்டையப் போட்டுட்டானா? புஸ்தகத்தைத் திருடறதுக்குக் கூடவா ஆள் இருக்கான் இந்த நாட்டுல…? எழுத்தத்தான் திருடுறாங்க…எழுதி அச்சடிச்ச புஸ்தகத்தையுமா திருட ஆரம்பிச்சிட்டாங்க?

இது ஒரு நாள்லயோ, ஒரு வாரத்துலயோ நடந்ததில்ல சார்…கடந்த ஒரு மாசத்துக்கும் மேலே அடுத்தடுத்துப் போயிட்டிருக்கு…இப்பத்தான் நானே சுதாரிச்சிருக்கேன்….ராத்திரி கடையை அடைச்சிட்டுப் போனப்புறம் எவனாவது திருடறானோன்ங்கிற அளவுக்கு சந்தேகம் வந்திடுச்சு….! புஸ்தகக் கடையையும் விட்டு வைக்க மாட்டாங்க போல்ருக்கு….திருடிட்டுப் போயி படிச்சாலும் பரவாயில்ல…..ரெண்டு ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் வித்துப்புட்டு தண்ணியடிச்சிட்டுப் போயிடுவானுங்க சார்…அப்டி ஆளெல்லாம் இருக்கு இந்த ஏரியாவுல……கழுதப் பயலுங்க….

பார்த்தீங்களா…கடைசில நான் சொன்னதுலதான் வந்து நிக்கிறீங்க….ஆரம்பத்துலயே அபசகுனமாப் பேசுறனேன்னு அன்னைக்கு நினைச்சீங்க… இப்போ அதுதான் யதார்த்தமாயிருக்கு….ஒரு சிசிடிவி காமிராவ வாங்கி மாட்டிருவமா…?

ஏன் சார்…இருக்கிறதே ஒரு ரூமு…இதுக்கு காமிரா ஒரு கேடா….? நம்ம கண்ணே காமிராதான சார்….? நிமிர்ந்து பார்த்தா ஆச்சு…! நீங்க வேறே….ஏற்கனவே பணத்தை எறக்கிட்டுத் தவிச்சிட்டிருக்கேன்….

சரி வேண்டாம்….நுழையற இடத்துல ஒரு சின்ன டி.வி. வச்சிடுவோம்…கடையோட நாலு கோணத்தையும் ஆங்கிளாக்கிப் பிரிச்சிட்டம்னா….சி்ன்னச் சின்ன மூவ்மென்ட் கூடத் துல்லியமாத் தெரிஞ்சி போயிடும்…..ஏற்பாடு பண்ணுவமா?

சார்….சார்….விடுங்க சார்….பெரிய எடுப்பால்ல எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கீங்க…எனக்குத் தாங்காது சார்….

ஓ.கே…யோசிப்போம்…….புலம்பி என்ன பண்ண…ஆக வேண்டியதைப் பார்ப்போம்…..எடுங்க…எடுங்க…..

எத எடுக்க சார்? இனிமே என்னத்தப் பார்க்க?…அதான் டயமாயிடுச்சே….கடையை அடைக்கணும் சார்….நான் கிளம்பி வீடு போய்ச் சேர்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்…நீங்க டுர்ர்ன்னு கால் மணில போயிடுவீங்க…நா பஸ் பிடிச்சி இறங்கி நடந்தில்ல ஆகணும்…நாளைக்குக் கட்டாயம் வெரிஃபை பண்ணிடுவோம் சார்…..

டவுனிலிருந்து இருபது கி.மீ.-ல் சரவணனின் ஊர். ஒரு வேளை போக, வர வசதியாயிருக்கட்டும் என்றுதான் பஸ்-ஸ்டான்டிலேயே கடை பார்த்தாரோ என்னவோ…எட்டினாற்போல போய் பஸ் ஏறிக் கொள்ளலாம். அவர் போக வேண்டிய பஸ் நிலையத்திற்குள் வந்து நிற்பதைப் பார்க்கலாம். அந்த நிமிடம் கடையை அடைத்தால் போதும். கடைசி பஸ் வரை திறந்திருக்கலாம், காத்திருக்கலாம். அந்த நேரம் வரை எவன் வந்து புத்தகங்களை வாங்குகிறான் என்பதுதான் கேள்வி. பெரும்பாலும் புத்தகக் கடைகள் ராத்திரி எட்டு, எட்டரைக்கெல்லாம் அடைத்து விடுவதுதான். இவர் வசதிக்கு வேண்டுமானால் திறந்து வைக்கலாம். அதான் கண்ணுக்கெதிர்க்க பஸ் வந்து நிற்கிறதே…! நினைத்துக் கொண்டே சரி…அப்போ கௌம்புங்க….நானும் புறப்படுறேன்….என்றவாறே எழுந்தேன்.

…கொஞ்சம் உட்காருங்க….ஒண்ணுக்கிருந்திட்டு வந்துடறேன்….என்றவாறே ஓடினார் சரவணன். அது கொஞ்சம் தள்ளிப் போக வேண்டும். பஸ் ஸ்டான்டில் இருக்கும் கழிவறைக்குள் கால் வைக்க முடியாது. நுழைந்து வெளியேறினால் நேரே ஆஸ்பத்திரிதான். இவர் சற்றுத் தூரம் போய் எங்கோ ஒதுங்கிவிட்டு வருவார். சரி…நம்மாலான உதவி…என்று அமர்ந்தேன்.

பில் புக்கின் நடுவே ஒரு தாள். அதுதான் சரவணன் எடுத்த மிஸ்டு புக்ஸ் லிஸ்டோ…?. மனதுள் பரபரப்பு. எடுத்து ஒரு நோட்டம் விட்டேன். அதிகமொன்றுமில்லை. ஒரு பதினைந்து புத்தகத்திற்குள்தான். ஆனாலும் அது அவருக்கு நஷ்டம்தானே! பணம் போட்டவனுக்குத்தானே தெரியும் அருமை…!

பட்டியலை திரும்பவும். வரிசையாய் நோக்கினேன்… கவனமாய்ப் படித்துக் கொண்டே வந்தேன்.. . அவருக்குத் தெரியாமல் நான் எடுத்துச் சென்ற அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயர் அதில் இல்லவே இல்லை…..!!! எப்படி? ஒன்றே ஒன்றுதானே இருந்தது அது. அதனால் மறந்திருப்பாரோ?

தெரிந்தே, போனால் போகட்டும் என்று எனக்காக விட்டிருப்பாரோ.?. ஏனோ இப்படியொரு சந்தேகம் வந்தது…!!! ஒரு வேளை இந்தப் பட்டியலே எனக்காக, என்னுடைய திருட்டை மறைமுகமாய் எனக்கு உணர்த்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியோ…! நோட்டம் பார்க்கிறாரோ? புத்தகங்கள் திருடு போறது ஒண்ணும் எனக்குத் தெரியாமலில்லை…நா ஒண்ணும் அந்தளவுக்கு மடையனில்லை…! சொல்லாமல் சொல்கிறாரோ?

முன்பு வேலை பார்த்த புத்தகக் கடையில் அவர் சம்பாதித்திருந்த முன் அனுபவம் அத்தனை வீண் போகுமா என்ன? இல்லையென்றால் இந்தச் சின்ன வயதில் தனியே கடை வைத்து நடத்தும் தைரியம் வந்திருக்குமா? – இந்த எண்ணங்களூடே குழப்பமாய் வண்டியில் பறந்து கொண்டிருந்தேன் நான். என்னையறியாத ஒரு படபடப்பில் அல்லது பரபரப்பில் வண்டி வேகமெடுத்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.