நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன் எழுதறீங்க, சொல்லுங்கன்னு பதாகைக்காரர்கள் கேட்டு விட்டார்கள். இப்ப நாம் என்ன நிறைய எழுதிட்டோம்னு இப்படிக் கேக்கறாங்கன்னும் தோணாம இல்ல. ஆனா கேள்வின்னு வந்தாச்சு, பதில் என்னவா இருக்கும்ன்னு யோசித்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இந்தக் கேள்வி புனைவு எழுதுபவர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதுவது என்ற இடம் நேர்ப்பேச்சில் கருத்து கூறுவதிலிருந்து ஒரு எட்டு எடுத்து, தட்டச்ச ஆரம்பித்தால் வந்து விடுகிறது.. நம் முகத்திற்கு எதிரே இருக்கும் 4 அல்லது 5 பேரிடம் சொல்வதை எவ்வளவு பேருக்கு சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பதே எழுத்து என்ற அளவுதான் இரண்டுக்கும் வித்தியாசம்.. ஏன் சொல்கிறோம் என்பதற்கு என்ன காரணமோ அதேதான் ஏன் எழுதுகிறோம் என்பதற்கும் சொல்ல முடியும். ஆனால் புனைவு அப்படியல்ல என்று தோன்றுகிறது. மிகச் சிரமப்பட்டு ஒரு நிகர் உலகை உருவாக்கி, பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உணர்வுகளின் வண்ணம் சேர்த்து… .அப்பப்பா, நம்மால் ஆகப்பட்ட காரியம் அல்ல அது.
இன்னொரு கோணத்தில், சுற்றியிருக்கும் உலகின் நடவடிக்கைகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் எழுதாமல் இருப்பதுதான் கடினம் என்று தோன்றுகிறது. உலகின் போக்கு குறித்த எதிர்வினைகள் எப்போதும் கணத்துக்குக் கணம் மனதில் தோன்றிய வண்ணமே இருந்தாலும் அவற்றைத தொகுத்து, சீராக அடுக்கி, எழுத்தில் கொண்டு வருவது எல்லோர்க்கும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு தங்கள் பதின்ம வயதிலேயே இந்தக் கலை வசப்பட்டு விடுகிறது. என் போன்ற சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு அசோகமித்திரன் கதையில் ஒரு பாத்திரத்துக்கு சட்டென்று காரில் கிளட்ச் போடுவது பிடிபடுவது போல இது நிகழ்ந்து விடுகிறது. அதற்கப்புறம் எழுதாமலிருப்பதே உண்மையில் சிரமம்.
பல சமயங்களில் எழுதுவதற்கு பிறரின் தூண்டுதலும் வழிகாட்டலும் தேவையாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில்,இவை இரண்டுக்குமான பழி இருவருக்கு உரியது, ஒருவர், சக நண்பர். அவர் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டினார். இன்றும் ஒவ்வொரு முறை பேசும்போதும், இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, என்று கேட்கத் தவறுவதில்லை. மற்றவர் ஜெயமோகன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர் ஒரு விஷயத்தை எப்படி தொகுத்துச் சொல்கிறார் என்பதும், அந்தத் தொகுத்தலே அவரது எழுத்துக்கு அடிப்படையாக அமைவதையும் நேரில் பார்த்து என்னையறியாமல் உள்வாங்கியிருப்பது நான் எழுத உதவுகிறது என்று சொல்லவேண்டும்.
அப்புறம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நாம் எழுதினால் உலகம் என்ன நினைக்குமோ என்ற ஒரு லஜ்ஜை தடுக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது வயதில் அது உதிர்ந்து, நான் உலகைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமாகிவிடுகிறது. அங்கே எழுத்து தொடங்கிவிடுகிறது.
தமிழில் தீவிர இலக்கியம் வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம், நாம் படித்த புத்தகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பரை நம் உடனடி வட்டத்தில் கண்டுபிடிப்பது. இதனால் இரண்டு வகையில் பாதிப்பு உண்டாகிறது. பகிர்ந்து கொள்ளுதலும் இல்லை புதிதாகத் தெரிந்து கொள்ளுதலும் இல்லை., அங்குதான் நாம் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. நான் எழுதியவற்றில் பெரும்பான்மையும் புத்தகங்கள் பற்றியே. அவை மதிப்பீடா விமர்சனமா என்று வகைப்படுத்த நான் முயல்வதில்லை. .முன்னொரு சமயம், கணையாழியில், என்.எஸ். ,ஜெகன்னாதன் அவர்கள், உலகில் மனிதனின் சிந்தனைகள், பல துறைகளில் பெருகியபடியே உள்ளன, இவற்றையெல்லாம், தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று, கவலைப்பட்டார். உலக மொழிகளில் என்று இல்லை தமிழிலேயே வந்திருக்கும் ஏராளமான நல்ல புத்தகங்கள்கூட இன்னும் சரியான அறிமுகமோ, மதிப்புரையோ இல்லாமல் இருக்கின்றன. ஆகவே ஒரு குறைந்தபட்ச முயற்சியாக நான் படிக்க நேரும் நல்ல புத்தகங்கள் குறித்தாவது பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணமே எழுதுவதற்கு முக்கியமான காரணம். பிறகு கடந்த 6, 7 வருடங்களாக,, நாஞ்சில் நாடன், கோபாலக்ருஷ்ணன், சு. வேணுகோபால் இரா. முருகவேள் போன்ற எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும், கோவை த்யாகு நூல் நிலைய நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றமும், நான் எழுதுவதற்காண காரணங்களில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஒரு வட்டம் நிச்சயம் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது.
கடைசியாகச் சொன்னாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, இணையமும் இ-மெயிலும் தரும் வசதி. இப்போது இதைக்கூட, ‘ஒரு வெள்ளைத்தாள் எடுத்து, மார்ஜின் விட்டு, பக்க எண் அளித்து எழுதி, பிழை திருத்தி, உறையிலிட்டு, தபால் தலை ஒட்டி அனுப்பு’, என்றால்….சிரமம்தான், அதற்கெல்லாம் வேலை வைக்காமல், ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும், (இன்னமும் அதே வழியில் எழுதிக் கொண்டிருக்கும் சிலரையும்) நம் முன்னோடிகளையும் நினைத்தால், தலை தன்னால் வணங்குகிறது