எரி

நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்

அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.

என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?

கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.

சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.

நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.

அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.

அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.

எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.

பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.

நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்

1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

சிறுவயதிலே வாசிப்பதற்கான ஊக்கம் கொண்டிருந்தேன். சூழ்நிலையும் அமைந்தது.
அம்மா கதைகள் சொல்லித் தீரும்போது புதியவை வாசித்ததும் சொல்கிறேன், அதுவரைக்கும் காத்திரு என்பாள். அப்போது ஏன் காத்திருப்பது நாமே படித்து அம்மாவுக்கும் கதை சொல்வோம் என்று தோன்றும். அப்படி எழுத்துக்கூட்டி சிறுவர் இதழ்கள் வாசிக்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு இரண்டு அரசு நூலகங்கள் எனக்கு தங்களது புத்தகங்களால் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி உதவியிருக்கின்றன. வீட்டில் வாசிக்கிற பழக்கம் இருந்தமையால் என் வாசிப்புக்கு ஆதரவு இருந்தது.

எழுதவேண்டும் என்கிற ஆசை கழுகைப்போல பறக்க வேண்டும் ஆசைப்படக்கூடிய வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு கவிதைகளையே எழுதித் தொடங்கினேன்.

இணையம் குறிப்பாக முகநூல் எனக்கு இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அறிமுகம் செய்து கொள்வதற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கும் உதவியது. மனிதர்களின் மேன்மை கீழ்மைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் களமாக அதற்கும் மேலாக என்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொள்வதற்கு அதுவே உதவுகிறது.

அப்படியே சாத்தியப்பட்ட போது இலக்கியக் கூட்டங்களுக்கு போகத் தொடங்கினேன்.

2. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள்? அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

எனக்கு எதையேனும் ஒரு படைப்பிலிருந்து கற்றுக் கொண்டேனா என்கிற கேள்வி இதுவரை வந்ததில்லை. எனக்கு ஒவ்வொரு நூலும் ஒரு அனுபவமாகவே அமைகிறது. அதன் அனுபவத்தில் திளைத்திருக்கிறேன். அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆவேசம் வந்தது போலப் பக்கங்களைப் புரட்டி வாசித்துத் தள்ளுகிறவன் அல்ல நான். எனக்கு ஒவ்வொரு பக்கமும் அதன் வார்த்தைகளும் முக்கியம். அதற்கான நேரம் எடுத்தே நான் வாசிக்கிறேன்.

பெரும்பாலும் வாசிக்கும்போது எந்த சிந்தனையும் வருவதில்லை. தேவையானால் முடித்ததும் ஒரு பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து சிந்திப்பதும் குறிப்பு எழுதிக் கொள்வதும் உண்டு.  ஆனால், அவை பிறருக்காக எழுதப்படுவதில்லை. எனவே கூறுமுறையைப் பற்றிய கவலை வேண்டாம். ஒருங்கிணைப்புக்கான அவசியம் இல்லை.

ஒரு கட்டுரை எழுதவேண்டும் அல்லது ஒரு எழுத்தாளனாக நான் பிறரிடம் கூறுவதற்காக சிந்திக்கிறேன் எனும் கட்டம் வரும்போது இது சிக்கல். எனவே அதற்காக மீண்டும் புறவயமாக கூற்றுகளையும் சிந்தனைகளையும் தொகுக்கும் பணியைச் செய்கிறேன். அது என் இயல்புக்கு மிகப்பெரிய பளு. ஆனால் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் புனைவு எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன். என்னையறியாமல் அதில் ஒருங்கிணைவு உருவாவதும் உணர்வுகள் முயங்கி வெறொன்றாக மாறுவதும் நடக்க வேண்டும். அதற்காக நான் ஒரு கதையை எழுதும் முன்னர் தயாராகி இருக்கவேண்டும். கதை தயாராக வேண்டும். அதற்காக என்ன செய்கிறேன் என்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. அப்படியே எழுதி முடிக்கிறேனா என்பது முழுமையாக என்னிடத்தில் இல்லை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது. அது மட்டுமே என்னால் ஆகும்.

3. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதுவரை இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டதில்லை. அந்தந்த தருணங்களில் எனக்கு எதை எழுதுவதற்கான உந்துதல் பிறக்கிறதோ, அதையே எழுதினேன். அப்படியே கதைகளை முழுமையாக உருவாக்கிக் கொண்டும் எழுதியதில்லை.

ஆனால் தொகுப்புக்காக எல்லாவற்றையும் மீண்டும் படித்தபோது, கண்டு கொள்ளப்படாதவர்களை அல்லது பொதுவான மனநிலைகளிலிருந்து விலகிய குழந்தைமையையே எழுதியிருக்கிறேன் என்று புரிகிறது.

என் வாழ்கையின் அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி எழுதக்கூடாது என்கிற தெளிவு எனக்கு சில வருடங்களாகவே உண்டு. சில கதைகளில் என் போன்ற சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்காக அது என்னுடைய அனுபவம் ஆகிவிடாது.  மேலும் என் எழுத்து அவசர வாசிப்புக்கானது அல்ல.

பொருள் மயக்கம் அழகியலாக மட்டும் இல்லாது குறைபாடாக ஆகிற இடத்தில் வாசிப்பில் இடறும். அப்படி இடறாமல் வாசிக்கப் பழகினால் எல்லாமே நல்லவையே. மொழிச் சீர்மையும் கருத்துரைத்தலும் அணிகளும் மட்டுமே இலக்கியம் என்று கருதியது எப்படி மொழிக்கு தீமையாக அமைந்ததோ, அப்படியே மொழியைக் கண்டு கொள்ளாமல் இலக்கியம் படைப்பதும். அதை மனதில் வைத்துதான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

4. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் என்ன எழுதுவீர்கள்?
தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. இப்போதைக்கு புனைவு எழுத்தாளனாக என்னை மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனம் எல்லாம்.

5. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரன். என்னுடைய குறைந்த வாசிப்பில் இதில் பஷீரையும் சேர்க்க முடியும். புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை அவர் எழுதிய வகைமைகள் மட்டுமல்லாது நேரடித் தன்மையும் கூர்மையான மொழியும் அங்கதமும் எவருக்கும் ஆதர்சமாக அமையும். அசோகமித்திரன் முற்றிலும் வேறுபட்டவர். அங்கதம் அமைதியுடன் வெளிப்படும் எழுத்து அசோகமித்திரனுடையது. எத்தனை தீவிரமான விஷயத்தையும் எளிய விஷயமாக எழுதிச் சென்றுவிடுவார்.

ஏன் பஷீரைக் குறிப்பிடுகிறேன் எனில்,  இவர்கள் இருவரின் இயல்புகளும் இடத்திற்கேற்ப செயல்பட்டு எதற்கும் பொறுப்பேற்காத ஒருவரின் மனநிலையும் சேர்ந்தால் அதுவே பஷீரின் இயல்பு என்று தோன்றுகிறது. இந்த மொத்த வாழ்கையின் பொருளின்மையை இருண்மையை சொல்லிக் கொண்டே செல்வது. அதே நேரம் அவ்வப்போது ஒளி இதுதான் என்று காட்டிவிடுவது. அந்த ஒளிக்காகவே பஷீரை எனக்குப் பிடித்திருக்கிறது.

இவர்கள் என்னை அதிகமாக பாதிக்கிறார்கள்.

6. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

அவ்வப்போது பயணம் செய்கிறேன். எண்ணூறு ரூபாய் சீனக் கைபேசி ஒன்றை வைத்திருந்த காலம் முதல் இன்று வரை செல்கிற இடங்களையும் நிகழ்வுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறேன். அவற்றில் நல்ல புகைப்படங்களாக அமைந்துவிடுபவை நிறையவே உண்டு.

பெரும்பாலும் போகும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தவிர்த்து பொதுவெளியில் பகிர்வதில்லை. என்னிடம் புகைப்படங்களை அப்படியே சேமிப்பதற்கான வாய்ப்பு இல்லாதிருந்ததால் நல்ல கைபேசியில் எடுத்தாலுமே அளவில் குறைத்து மேகச் சேமிப்பக சேவைகளில் சேமித்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நிராகரித்து அழித்தவை போக ஏறக்குறைய மூவாயிரம் புகைப்படங்கள் உண்டு.

எனக்கு தற்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. புகைப்படங்களுக்கு சிரிக்கவும் வராது. அதே என் நல்ல புகைப்படங்கள் இதுவரை சிலவே என்னிடம் உள்ளது. அவைகூட தேறாது என்று புத்தகத்தின் பின்னட்டைக்காக ஜீவ கரிகாலன் சில நாட்கள் தேடியும் காத்திருந்தும் இறுதியில் புகைப்படம் இல்லாமலேயே கொண்டு வந்தார். மற்றபடி, நாற்பதோ ஐம்பதோ ஆயிரங்கள் செலவு செய்து காமிரா வாங்கி எடுத்துக் கொண்டு அலைவதல் ஆர்வமில்லை.

7. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

எழுதுவது தொடர்பான எண்ணங்கள் இல்லாமல் என்னால்  எவரை வாசிக்க முடிகிறது என்று யோசிக்கிறேன். வெகு சிலரின் சில படைப்புகளை மட்டுமே அப்படி ஒரு தடங்கலுடன், அதிலிருக்கிற தவறுகளை உணர்ந்தபடி வாசிக்கிறேன். அதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அப்போது மட்டுமே சிந்திக்கிறேன்.

அது தவிர, வாசிக்கையில் நான் ஒரு சராசரி வாசகன் மட்டுமே.

8. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

அப்படி பயணம் கோரும்படி இன்னும் எதுவும் எழுதவில்லை.

ஆனால், நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக வருடம் ஒருமுறையாவது ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஹைதராபாத்தும், இந்த முறை கொல்கத்தாவும் சென்று ஒன்றரை இரண்டு மாதம் தங்கி வேலை செய்தபடியே வார இறுதியில் சுற்றிப் பார்த்தேன். அலுவலகத்தில் அதற்கான சுதந்திரம் தருகிறார்கள். இப்போது டெல்லி போயிருக்க வேண்டியது, கொரோனா காரணமாக எல்லா முன்பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.

என் மனதை வெளியுலகம் நோக்கித் திருப்புவதும் புரிதல்களை உண்டாக்கிக் கொள்வதும் பயணம் மூலமாக மட்டுமே.

Vagabond என்கிற சொல் பயணிக்கிறவரை குறிப்பது. ஒன்றும் இல்லாமல் நீங்கள் எங்கும் பயணிக்கலாம். உண்பதும் உறங்குவதும் என உங்களின் தேவை எத்தனை சிறியது, அதை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது எங்கு போனாலும் சாத்தியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களின் கதைகள் என்னை ஏங்க வைத்திருக்கின்றன.

முழு vagabond ஆக இல்லாவிட்டாலும் நினைத்தபோது கிளம்பிப் போகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள், என்ன நம்மால் முடியாது. எனக்கு ஒரு தினம் முன்னதாகவாவது அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், அந்த நேரம் கையிருப்பில் ஏதாவது இருக்கவும் வேண்டும். எனவே தனியாகச செல்வதே எனக்கு நல்லது, முடிந்தவரை பயணிக்கிறேன்.

9. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

வெகு நாளைய கனவு. இப்போது வந்ததற்கும் நான் மட்டுமே காரணம் அல்ல.

எழுதிய வரிசையிலேயே தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். எந்த வகையில் மாற்றத்துக்கு என் எழுத்து உட்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான பதிவாகவும் அது இருக்கட்டும் என்கிற எண்ணம்.

அதன் வடிவமைப்பிலிருந்து அச்சு வரை எனக்கு நிறைவளிக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஜீவ கரிகாலன் வெளியிடிருக்கிறார்.

அடுத்து என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்காக உழன்று கொண்டிருக்கிறேன்.

10. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

அப்படி நிறைய இருக்கலாம். நினைவில் எப்போதும் வைத்திருப்பதில்லை.

வெகு சில நிகழ்வுகளை மட்டும் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

11. உங்கள் படைப்பினை நீங்கள் எப்படி உருவாக்குகின்றீர்கள், ஒரே அமர்வில் அது முடியுமா, நீங்கள் அதை எப்படியெல்லாம் செழுமையாக்குகின்றீர்கள்?

சில கதைகள் ஏதாவது நிகழ்வோ செய்தியோ என்னை பாதிப்பதால், ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. சில கதைகள் கனவில் வந்தவை. ஆனால், எழுதியது கனவில் வந்ததிலிருந்து முற்றிலும வெறொன்றாக இருப்பதும் உண்டு.

முன்னர் கையால் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் போது மேம்படுத்திக் கொண்டிருந்தேன். அதை சிறிது காலத்துக்குப் பிறகு வாசித்து, இடறலாக ஏதாவது தோன்றினால் திருத்திப் பகிர்வது. இப்போது அதே முறையில் கணினியில் நேரடியாக எழுதுகிறேன்.

ஒரே அமர்வில் இதுவரை எழுதியதில்லை. குறைந்தது மூன்று நான்கு அமர்வுகள். உட்கார்ந்தால் குறைந்தது இருபத்தைந்து நிமிடம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒலிப்பான் வைத்துக் கொள்வேன். அப்படி சில தினங்கள் தொடர்ந்து எழுதியே ஒரு கதையை முடிக்க முடியும். அப்படி நேரம் குறித்துக் கொள்ளாது அமர்ந்தால் பல காரணங்களால் பயமும் கவனச் சிதறலும் ஏற்படுகிறது.

ஒரு நாள் எழுதிவிட்டு மறுநாள் தொடரும்போது ஏற்கெனவே எழுதியவற்றை வாசித்து எழுதிய போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று யோசிப்பேன். அதன் பிறகு தொடர்ந்து சிந்தித்தபடியே நேரம் வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதி அழிப்பேன். எப்படியோ ஒரு தொடர்ச்சி உருவாகிவிடும்.

12. இலக்கியத்தின் அடிப்படையாக இருப்பது எது?

நல்ல கேள்வி. ஆனால் பதில் சொல்லும் அளவு நான் முதிரவில்லை.

13. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான் உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

எந்த முறையான விமர்சனத்தையும் ஆக்கப்பூர்வமான மனநிலையிலேயே எதிர்கொள்கிறேன்.

சிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தெரியாது என்பதையும், என் தகுதி என்ன என்பதையும் எனக்குள்ளாக வகுத்துக் கொள்வது என் வழக்கம். எனவே  எங்கும் எதற்கும் சமீப காலம் வரை சுருங்கிப் போனதில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். ஒவ்வொரு தினமும் சற்றேனும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அதற்காக திறந்த மனதுடனேயே வாழ்கிறேன்.

அதே நேரம் தூக்கிப் பிடிக்கப் படுவதாலேயே எவரையும் கிழித்துத் தொங்கவிடமுடிகிற தன்னம்பிக்கை விமர்சகர்களின் அருட்கரங்களை அஞ்சாமை பேதைமை.

15. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

என்னை. என் நிறைவை.

15. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா? அதை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

என் மூத்தவர்கள் சொன்னது – தொடக்க காலத்தில் எழுதிக் கடப்பதன் வழியே இன்னும் படைப்பூக்கம் கொள்ள முடியும் என்று. அதற்கு முயல்கிறேன். ஆனால் ஒன்று புரிகிறது, கட்டுரை எழுதுவது வேறு ஏதாவது – something to be presented – என்கிற வகையில் எழுதும் போது கொஞ்சமே எழுத முடிகிறது. இந்த பதிலை நான் தட்டச்சு செய்யும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக் கொள்கிறேன்.

எனவே எழுத்துப் பயிற்சி என்று வரும்போது எதையாவது எழுதித் தள்ளியபடி இருக்கலாம். அதை பிறர் நலன் கருதியாவது என்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது கதையாகவே கனிந்திருப்பதாக தோன்றினால், ஒருவேளை திருத்தம் செய்த பிறகு பிரசுரிக்கலாம். இப்படியே நான் உணர்கிறேன்.

இலக்கிய வாசிப்பு எழுத்து என்று இருக்கும்போது மொழியறிவுக்கு என்று நேரம் ஒதுக்குதல் சிரமம் என்றே உணர்கிறேன். எழுத்தாளனாக இருந்தாலும் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடிய வேறு ஆர்வங்களும் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் மொழியாளுமை அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மரபாக நாம் மொழியை கற்றிருக்காத போது. அதற்கான அவதானிப்புகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கிறேன்.

16. சங்க இலக்கியம் பக்தி இலக்கியத்தின் மீதான உங்கள் ஆர்வம் எவ்விதமானது? அது உங்களை படைப்புகளை பாதித்திருக்கிறதா?

இந்த மொழியின் சொத்து என்கிற வகையில் அதை தூர இருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்கிறேன். சங்க இலக்கியத்தைக் காட்டிலும் பக்தி இலக்கியத்தை இன்னும் நெருங்கிப் போகிறேன். ஆனால் அவற்றில் ஊறித் திளைப்பவனில்லை. அத்தனை புலமை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் வாசிக்கிறவன்.

கவிதைகள் எழுதிய காலத்தில் சில காதல் கவிதைகளை பக்தி இலக்கிய தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், பிறகு கீதாஞ்சலி படித்ததும் நவீன பக்திக் கவிதைகளின் வயது நூறு என்று புரிந்தது. அதன் தென்னிந்திய வேர்களை அப்போதே என்னால் உணர முடியாவிட்டாலும் பின்னர் அந்த புரிதலை வந்தடைந்தேன்.

அப்படிப் பார்த்தால், என் மனநிலைக்கே இவற்றின் தாக்கம் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கலாம்.

17. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

எழுதியவற்றை விடவும் எழுதி முழுமையடையாதவற்றிலேயே என்னைக் கவர்ந்த கருக்கள் நிறைய ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் அதனினும் சிறந்தவற்றையும் எழுத வேண்டும் என்கிற விழைவிலேயே இன்னும் எழுத முனைகிறேன்.

எழுதி வெளியானவற்றில் அட்டை, கூப்பன், சுவருக்கு அப்பால் எனக்கு மிகவும் நிறைவளித்தவை.

18. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

இதுவரை இப்படி நினைத்ததில்லை.

19.உங்கள் படைப்புலகத்தின் ஆதார மனநிலை என்ன?

ஒவ்வொன்றிலும் எனக்கு ஏதேனும் கண்டடையவோ, வேறு விளக்கம் சொல்லவோ, கேள்வியோ இருக்கிறதா?

20. உங்கள் பெரும்பாலான கதைகளில் பால்யம் மாறாத சிறுவனோ (அ) இளைஞனோ பணியிடத்திலோ, பிற இடத்திலோ சதா பயந்தலைவது போல சித்தரிக்கப்பட்டிருப்பது ஏதேச்சையானதா ?

அப்படி பயப்படாதவர்களும் என் கதைகளில் உண்டு. ஏனோ, அப்படியானவர்களை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய இயல்பு காரணமாக இருக்கலாம். அல்லது, இப்படியானவர்களை இலக்கியத்தில் நான் அதிகம் வாசித்திருக்காதது காரணமாக இருக்கலாம்.

ஒரு கதாபாத்திரத்தின் எல்லா இயல்புகளையும் இலக்கியம் ஆராயப் புகுகிறது. குறிப்பாக, தீமைகளையும் அழுக்குகளையும். அதன் மூலமே எல்லாவற்றையும் ஆராய முடிகிறது. உண்மைக்கு நெருக்கமாக அது மட்டுமே நிற்குமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.

அவன் என்ன அவ்வளவு யோக்கியனா என்று ஒருவரின் நல்லியல்பை அனுபவப்படும்போது நம் மனதின் ஏதோ ஒரு ஓரம் நினைக்கிறது, குறிப்பாக நம் ஆணவம் சீண்டப்படும்போது. உடனே சுவர் மறைவில் அவன் என்ன செய்யக்கூடும் என்று ஊகிக்கிறோம். அவன் சிந்தனை எப்படி இருக்கும் என்று அதற்கு ஒரு வக்கிரத்தை கோணலை கற்பிக்கிறோம். அதுவே இயல்பாக நம்மை உணர வைக்கிறது.

அப்படி இல்லாதவன் ஒருவன் என்றால் நாம் நம்ப மறுக்கிறோம். அவன் கோணல்கள் இல்லாதவன் இல்லை, அதை மீறி வெறொன்றே அவன் இயல்பாக வெளிப்படுகிறது. அதை என்ன என்று புரிந்து கொள்ள முயல்கிறேன். அதை குழந்தைமை என்று சுருக்கலாம். அதன் நுண்ணிய வேறுபாடுகளை என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

21. உங்களது ஒன்று மேற்பட்ட கதையில் ரயில் நிலையத்தில் கழிக்கும் இரவின் பதிவுகள் வருகின்றன. அது வீட்டு விட்டு வெளியேறி குடும்பத்தின் பொருட்டோ(என் வீடு) அல்லது வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் குடும்ப தலைவன் பொருட்டோ(பவித்ரா) இரவை கழிக்க உங்கள் கதாபாத்திரங்கள் ரயில் நிலையங்களை தேர்தெடுக்க ஏதேனும் பிரத்தியோக காரணம் உண்டா?

இந்த கேள்வியை மின்னஞ்சல் வந்ததும் படித்தபோது கயா ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன்.
சுவரோரம் திண்ணை போன்ற அமைப்பை தவிர, அது பெரிய அறை மட்டுமே. சுமார் நூறு குடும்பங்கள் சேலையோ போர்வையோ போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வசதியான குடும்பங்களும் உண்டு. ஒரு புத்த பிக்குக் குழு. அவர்களுடன் வந்த ஒருவர், சைக்கிளில் தூரம் பயணித்துப் போகிறவர் போலிருக்கிறது. கேரியரில் கட்டப்பட்ட மூட்டையுடன் சைக்கிளையும் கொண்டுவந்து ஒரு மூலையில் நிறுத்திவிட்டு அருகிலேயே கொசுவலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார்.

இவர்களை என் சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனாக காதாபாத்திரம் அமையும் போது என்னால் என்ன செய்ய முடியும்? பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? விடியும்வரை எங்காவது சென்று அமர வேண்டும். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்தவர் அங்கேயே திரும்பிப் போகிறார்.  மேலும் அவர் அதிகம் பயணிக்கிறவர்.

22. கூப்பன் சிறுகதையில் கதையில் கார்த்தியும், ரகுவும் மிக இயல்பான சிறுவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே வீட்டுக்கு சம்பாதித்து தர வேண்டிய கட்டாயமிருக்கின்றன. அது அவர்களுக்கு வேறு விதமான ஆவேசத்தையோ, திமிரையோ, சலிப்பையோ அல்லது எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையுமோ தருவதில்லையா அந்த உணர்வுகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர் எட்டாம் வகுப்போடு வேலைக்குப் போகத் தொடங்கினார். அவர் நின்றதால், அவருடைய நண்பரும் பள்ளிக்கு போக விரும்பவில்லை. அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் நின்றார்கள். வேலைக்குச் சேர்ந்தார்கள். மேலும் சிலரின் பெற்றோர் அவர்களைக் காட்டி ‘பார் எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகிறார்கள், பார்’ என்றார்கள்.  இங்கே பள்ளிக்குப் போவது இயல்பானதா இல்லை வேலைக்குப் போவதா? அந்த வட்டாரத்தில் எது இயல்போ, பெரும்பான்மையோ அதை நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அது அந்த சூழலில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது.

அப்படி இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் கார்த்தியும் ரகுவுமே முற்றிலும் எதிரெதிரானவர்கள். உதாரணமாக அப்படி ஆவேசம், திமிர், சலிப்பு சற்றேனும் அதே கதையில் வெளிப்படுகிறது. அதை விவரித்துச் சென்றுவிடுகிறேன், வளர்க்கவில்லை அவ்வளவே.

23. சுவருக்கு அப்பால் சிறுகதை நீங்கள் எழுதிய கதைகளில் மிக அடர்த்தியான கதை. இந்த கதைக்கான களம் எப்படி உருவானது. அதில் மிருதங்கம் வாசிக்கும் நுட்பங்களை பற்றிய குறிப்புகளை அனுபவித்து எழுதியிருப்பீகள் உங்கள் இசையின் மீதான ஆர்வம் சார்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.

குருகுலக் கல்வி என்ற பெயரில் எப்படி குழந்தைகள் வதைக்கப் படுகிறார்கள் என்று செய்திகளில் வாசித்ததே அக்கதைக்கான ஊக்கம். எனக்கும் அப்படியான கல்வி மேல் ஆர்வம் இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் குருவின் மாணவனாக இருந்து கற்க வேண்டும் என்பது இப்போது வரைக்கும் இருக்கும் என் கனவு. ஆனால், அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

அது தொடர்பான என் புரிதலையே அந்தக் கதையை எழுதி அடைந்தேன்.

எனக்கு மிருதங்கம் கற்றுக் கொள்ள சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இசையறிவு ஒன்றும் கிடையாது. அவ்வப்போது செவ்வியல் இசையும் பிற பொழுதெல்லாம் வேறு எந்த நல்ல இசைத் தொகுப்பையும் கேட்பேன், அவ்வளவே. இளையராஜாவை எல்லாவற்றுக்கும் மேலாக ரசிப்பவன், குறிப்பாக அவரது ஆல்பங்கள்.

24. சுவருக்கு அப்பால் சிறுகதையில் கதைசொல்லியும் மற்றொரு கதாபாத்திரம் கிருஷ்ணதாஸ் இருவருமே தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமில்லாத நபர்களுடனேயே நட்புடன் இருப்பது போல ஒரு பதிவு இருக்கிறது உதாரணத்துக்கு கிட்டத்தட்ட பதின்வயதை கடந்த கதைசொல்லிக்கும், கிருஷ்ணதாஸ், பிரபு, ஹரி இவர்களுடன் உருவாகும் உலகம் விஷயம் விசித்திரமான, இதன் பின்னால் இயங்கும் உளவியல் என்னவென்று நினைத்து நீங்கள் இப்படியொரு அமைத்தீர்கள்?

அதில் கதைசொல்லி தேடலும் கேள்விகளும் கொண்ட ஒருவன். அவனுக்கு குழந்தைகளோடு இருப்பதில் ஏதோ நிறைவு கிடைக்கிறது. வேறு எவருடனும் ஒட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணதாஸ் தானே ஒரு குழந்தை போன்றவர், சிந்திக்கும் திறனற்றவர் என்பதாக கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பவர். அவரிடம் நெருங்கிப் போவது ஒரு சிறுவனே தவிர, அவர் கிடையாது. அவரை தவிர்ப்பவர்களிலும் சிறுவர்கள் உண்டு. இதையெல்லாம் ஏன் எதற்கு என, கதைசொல்லி கவனிக்கிறான்.

இவர்களின் நட்பு, நிகழ்வுகள் மற்றும் ஏற்படும் புரிதல்களால் கதைசொல்லி என்ன கண்டடைகிறான் என்பதே கதை.

25. நோக்கு கதையில் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள். கதையின் கரு வலுவானது ஆனால் சொல்முறையை நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கலாக்கினீர்கள்? உங்களுடைய பெரும்பாலான கதையின் வாசகர் அதிகம் கவனம் செலுத்தி வாசிக்கும்படி அமைத்திருப்பது ஒரு உத்தியா?

தொடக்க காலக் கதை அது. அந்தக் கதைக்குள் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல முயன்றதால் அப்படி இருக்கலாம்.

என்னுடைய எழுத்து ஏன் அப்படி கவனமான வாசிப்பு கோருகிறது என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. பொழுது போக்காகவும் கவனக்குறைவாகவும் வாசிப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய புரிதல். வேண்டுமென்றோ மொழியைச் சிக்கலாக்கவோ, திருகவோ நான் செய்வதில்லை. அதே போல பெரிய குறைபாடுகள் என் மொழிப் பயன்பாட்டில் இல்லை என்று நம்புகிறேன், அறியாது இருப்பவற்றையும் மேம்படுத்திக் கொள்ள பார்த்தபடியே இருக்கிறேன்.

மேலும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டியவை அல்லவா?

26. அட்டை என்ற கதையின் மையம் அடையாள அட்டை ஒரு அந்தஸ்து என்பது போன்ற உளவியலா, அது மட்டுமில்லை என்ற பதிவுகளும் இருக்கின்றன. இந்த கதை சார்ந்த அதன் உள்ளடக்குகளை பேச முடியுமா?

அந்த வாழ்கையில் ஒரு தருணத்தை அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். மையப் பாத்திரத்தின் ஏங்கங்களையும் நினைவுகளையும். அது தவிர பிற வாசகனுக்கான தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கட்டும்.

27. கோதை மங்கலம் கதை சொல்லி தற்கால உடல் அடையாளம், பள்ளி பருவத்து விபரங்கள் இரண்டிலுமே கதைசொல்லி தான் மிக சாதாரணமானவன் தன்னை யாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை என்றொரு உளவியல் இயங்கிக் கொண்டிருக்க என்ன காரணம்?

அவன் அப்படியானவன் என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.

28. உங்கள் கதைகளில் கதைமாந்தர்கள் கிளைகதை சொல்பவர்களாக அமைகின்றார்கள். உதாரணத்துக்கு சகடம் கதையில் வரும் சிறுவன் தனது யோகா பயிற்சிகள் சார்ந்த விபரணைகள், எரியில் வரும் சிறுவன் வண்டி வேடிக்கையின் வரும் கடவுளர் சார்ந்த வர்ணனைகள். இவை கதைக்குள் உள்ளடுக்குகளை ஏற்படுத்த உத்தி போல நீங்கள் பயன்படுத்தியிருகின்றீர்களா?

அது கதையின் ஒரு பகுதி, தேவை என்ற புரிதலால் தனக்கான இடம் கொண்டிருக்கிறது.

29. பவித்ரா  கதையில் பெண் குழந்தைக்கு தனது தாயிடம் உண்டாகும் மனசிக்கலை பேசியிருக்கின்றீர்கள். அதை தொடராமல் அதனை உறவு சிக்கலாக மாற்றியமைத்தற்கு காரணமெதுவும் உண்டா?

அப்படியான ஒரு சம்பவம் உடனே ஆழ்மனதில் சிக்கலாக மாறாது. அது ஒரு தொடக்கம். எனவே இருவருக்கும் பொதுவான ஒரு அதிர்ச்சியாக, என்ன செய்வது என்று சிந்திக்க வைப்பதாக அது இருக்கிறது. இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலப்போக்கிலேயே அது சிக்கலான ஒன்றாக மாறும். அந்த தருணத்தையே கதை விவரிக்கிறது.