எழுத்துச் சித்தர்கள்

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை

க. நா. சுப்ரமண்யம்

ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனபோதுஅங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்தபோது ஒரு உண்மை தெளிவாயிற்று. அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம் செய்யாதது மட்டுமில்லை, உற்றார் உறவினர் நண்பர்களை நசுக்கியே பணம் சேர்த்தார்கள். ஆகவேதான் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்களை எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். “ஆட்கொல்லி” என்று பணத்தைச் சொல்வதற்கு ஒரு புது அர்த்தம் அங்கு காணக் கிடைப்பது போலப் பட்டது எனக்கு. சாதாரணமாக பணத்திடம் ஈடுபாடுள்ளவனை, அவனுடைய நல்ல தனங்களைக் கொன்றுவிடும் பணம் என்றுதான் இதற்கு வியாக்கியாயனம் செய்வார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் பணம் சுற்றத்தைக் கொன்றுவிட்டது என்பதனாலேயும் அதற்கு ஆட்கொல்லி என்கிற பெயர் பொருந்தும் என்று தோன்றிற்று எனக்கு.

என் மனத்தில் பல வருஷங்களாக ஊறிக் கிடந்த இந்த விஷயத்தை வெளிக்கொணர சென்னை அகில இந்திய ரேடியோவில் பணியாற்றும் என் நண்பர் டி. என். விசுவநாதன் எனக்கு உதவினார். ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் கேட்டபோது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலை சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலமும் கனமான கருத்துள்ள, ஆழ்ந்து கவனிக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும்- சமூக சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன். அதற்கு வாய்ப்பளித்த என் நண்பருக்கு நன்றி.

தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி, தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம். நாவல் என்பது தனி ரகம்.

நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாததுதான் உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண்ணிக் கொண்டு கேலி செய்யலாம். சந்தர்ப்ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதைகூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.

இந்த நாவலில் உருவாகிற வேங்கடாசலத்தையோ , ஜானகியையோ, மருமானையோ, ஏன், கண்ணப்பனையோகூட நான் அனுதாபத்துக்கோ, கோபத்துக்கோ, வெறுப்புக்கோ உரிய பாத்திரமாக நினைத்து சிருஷ்டித்துத் தரவில்லை. உங்களுக்கோ எனக்கோ பிடிக்கிறது என்பதற்காக இது இப்படி இல்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டி தத்துவத்தைக் கடைபிடித்துத்தான் நான் இந்த நாவலை எழுதினேன். சில சமயங்களில் மனிதனின் பலஹீனம் கலைஞனின் திடத்தை அசைத்து விடுகிறது. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், “இப்படி நேர்ந்துவிட்டதா? அடடா! இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என்று எண்ணிக்கொண்டு மேலே முயற்சி செய்ய வேண்டியது கலைஞனின் கடமை. இந்த மாதிரி பலஹீனம் இந்த நாவலைப் பற்றிய வரையில் கடைசிக் கட்டத்தில் ஒரு இடத்தில் வந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இன்னொரு மருமான் சமையல்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என்று ஏற்பட்ட மெலோட்ராமா (Melodrama). அதிகப்படுத்திக் கூறல், கோயின்ஸிடென்ஸ் (Coincidence)என்கிற வகையைச் சேர்ந்து விட்டது. அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது, போகட்டும், என்று விட்டுவிட்டேன்.

இந்த ஒதுங்கி நிற்கிற தத்துவ விஷயத்தில் உலகத்தில் பெரிய கலைஞர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள் எல்லோரும் ஒன்றுதான். அதை விவாதிக்க, விவாதித்து முடிவு கட்ட, இது இடமல்ல; ஓரிரண்டு கோடிகள் மட்டும் காட்டுகிறேன். ஹாம்லெட்டைப் பற்றி கவிஞன் நம்மை அழச் சொல்கிறானா? அனுதாபப்படச் சொல்கிறானா? கோவலன்- கண்ணகி முடிவைப் பற்றி எண்ணி நம்மைச் சிலப்பதிகார ஆசிரியன் கண்ணீர் உகுக்க எங்காவது சொல்லி இருக்கிறானா? பின்னர் எழுந்த நாடகங்களையும், நடுக்கால ஐயோ அந்தோ பரிதாப வியாக்கியானங்களையும் வைத்துக்கொண்டு சொல்லாதீர்கள். “கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன்,” என்பது முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியம். “கண்ணீர்த்துளி வர உள்ளுருக்குதல்,” கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. இதுவரையில் இலக்கிய உலகில் மிகப் பெரியவர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நாலைந்து பெர்வழிகளுக்கே கைவந்த கலை அது.

இந்த ஆட்கொல்லிச் சிந்தனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்த்து இன்னும் ஒதுங்கி நின்று, சிந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. இன்னும் பத்து வருஷங்களில் கைகூடலாம் அது. அவசரம் ஒன்றுமில்லையே?

திருவனந்தபுரம், 25.3.57.

க. நா. சுப்ரமண்யம்

 

(நன்றி: சிறுவாணி வாசகர் மையத்துக்காக, பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர் (P.O), கோவை – 641038. siruvanivasagar@gmail.com., 94881 85920/ 99409 85920)

கதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்

ரா கிரிதரன்

(Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை என்றால் என்ன என வரும் விளக்கஙகள் நன்றாக இருப்பதால் இதைச் செய்திருக்கிறேன். வாசக நண்பர்கள் ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.)

யுத்த காலத்தில் என் உளவுத்துறை அனுபவத்தைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதியிருந்தாலும் புனைவுக்காக சில நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக மாற்றி உள்ளேன். தகவல்கள் பலகீனமான கதைசொல்லி. அது கதையைத் தொடக்கத்துக்கு மிக முன்னாலிருந்து தொடங்கி, எங்கெங்கோ அலைந்து திரிந்தபின், தீர்க்க முடியாத சில சிக்கல்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்டு ஒற்றை வரித்தடமாக நீர்த்துபோய் முடிந்துவிடும். மிக சுவாரஸ்யமான நிகழ்வுக்கான பீடிகையோடு தொடங்கிவிட்டு சம்பந்தமற்ற ஏதோ ஒரு புள்ளிக்குத் தாவிவிடும். முடிவுக்குத் தேவையான உச்சகட்டங்களை அது உதாசீனப்படுத்துவிடுகிறது. இதுவே புனைவுக்கான சிறந்த மாதிரி எனச்சொல்லும் புதினாசிரியர்களின் பள்ளியும் உண்டு. நமது வாழ்க்கை எவ்விதமான திட்டங்களுக்குள்ளும் அடங்காமால் காட்டாறு போல நம்மை கொண்டு செல்கிறது எனும்போது புனைவு மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது; வாழ்வை பிரதி செய்வதல்லவா அது? வாழ்வில் காரணக் காரிய தொடர்பற்று நடக்கும் சம்பவங்கள் போலப் புனைவும் இருக்கலாம். முடிவை நோக்கி செல்லும் எந்த பயணத்துக்கான சாத்தியக்கூறையும் அது மீறியபடி செல்லலாம். முடிவில் வரும் எதிர்பாரா திருப்பம் அல்லது திடுக்கிடலால் எழுத்தாளர்கள் சில சமயம் வாசகர்களை ஆச்சர்யப்படுத்துவது போல் வேற எதுவும் இவர்களை புண்படுத்தாது. அப்படி ஒரு சந்தர்பம் அவர்கள் எழுதும் கதையில் வந்தாலும் அதை சாமர்த்தியமாக விலக்கப்பார்ப்பார்கள். உங்களுக்கு ஒரு கதையை அவர்கள் தருவதில்லை. மாறாக நீங்களே ஒரு கதையை உற்பத்தி செய்துகொள்வதற்குத் தேவையான பொருட்களைத் தருகிறார்கள். சிலசமயம் குழப்படியான நிகழ்வு என நினைக்கும்படியான சம்பவத்தை நமக்குத் தந்துவிட்டு அதிலுள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள அழைப்பு விடுப்பார்கள். சில சமயங்களில் கதாபாத்திரத்தை மட்டும் தந்துவிட்டு விலகிவிடுவார்கள். சமையல் சாமான்களைத் தந்துவிட்டு சமைக்க எதிர்பார்ப்பார்கள். இது கதை எழுதுவதற்கான ஒரு வழிமுறை என்பதோடு பல நல்ல கதைகளும் இவ்வகையில் எழுதப்பட்டுள்ளன. செகாவ் இதில் கைதேர்ந்தவர். பெரிய கதையைவிட மிகச் சிறிய கதைக்கு இது இன்னும் சிறப்பாகப் பொருந்தும். உணர்வுநிலை பற்றிய விவரணை, சூழ்நிலை அல்லது சூழல் போன்றவை ஆறு பக்கங்களுக்கு நம் கவனத்தை ஈர்த்துவைக்கலாம். ஆனால் ஐம்பது பக்கக் கதை என்றால் இந்த விவரணைகளைத் தாங்குவதற்கு ஒரு முதுகெலும்பு அவசியம். அப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பு தான் கதை. கதைக்கென இருக்கும் சில பிரத்யேக குணாதிசயங்களிலிருந்து நாம் தப்ப முடியாது. கதைக்கென ஒரு தொடக்கம், மத்திமப்பகுதி மற்றும் முடிவு இருக்கும். தனக்குள் முழுமையாக அமைந்திருக்கும். தொடக்கத்தில் வரும் நிகழ்வுகளுக்கான காரணங்களை கணக்கில் கொள்ளாது அவற்றின் விளைவுகளால் நிகழும் பிற சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டு முடிவு வரை செல்லும்போது வாசகர்களுக்கு ஒரு புள்ளிக்கு பின்னே மேலதிக சந்தர்ப்பங்கள் தேவைப்படாது போகும்படி திருப்தி உண்டாகும். அதாவது ஒரு கதை ஒரு புள்ளியில் தொடங்கியபின்னே ஒரு புள்ளியில் முடிவடைய வேண்டும். தேவையற்ற திசைகளில் விரிந்து செல்லாது, முடிவை நோக்கிய ஒரு திட்டவட்டமான பாதையில் வளைந்து செல்லவேண்டும். படம் வரைந்து காட்டவேண்டுமென்றால் ஒரு அரைவட்டப்பாதையை நீங்கள் காட்டாலாம். முடிவில் ஒரு திருப்பத்தையோ ஆச்சர்யமான திடுக்கிடும் சம்பவத்தையோ செய்வதில் தவறில்லை; அதைச் சரியாகச் செய்யும்போது. செகாவை போலி செய்யும்படி மோசமாக எழுதப்படும் திருப்பங்கள் மோசமானவையாக முடிந்துவிடும். கதையின் முழுமைக்குப் பங்குபெறும்படியான முடிவுகள் மிகச் சிறப்பான தர்க்க ஒழுங்குடன் இணைந்துகொள்ளும். உச்சகட்ட முடிவுகளில் தவறொன்றும் இல்லை. சொல்லப்போனால் அது வாசகர்களைத் திருப்தி செய்யும்படியான கோரிக்கையும் கூட. இயல்பான சம்பவத்தொடர்ச்சி மூலம் ஒழுங்காக இணையாத முடிவுளே தவறானவையாக மாறிவிடுகின்றன. உச்சகட்ட முடிவுகளைச் சேர்ப்பதென்பது நடைமுறை இயல்புக்கு மீறிய செயல்தான் என்றாலும் வாசகர்களை ஈர்த்து வசியப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்று.

வாழ்க்கையை புனைவு நகல் செய்கிறது என்பது கேள்விக்குட்படுத்தத் தேவைப்படாத வாதமல்ல. மற்றொன்றைப் போல இதுவும் ஒரு இலக்கியக் கோட்பாடாகும். சொல்லப்போனால், வாழ்க்கையை கச்சாப்பொருளாகப் பயன்படுத்தி புனைவு புது வடிவங்களை உருவாக்குகிறது எனும் இன்னொரு கோட்பாடும் சாத்தியமே. ஓவியம் தீட்டுவதிலிருந்து ஒரு ஒப்புமையை நாம் அடையமுடியும். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலவெளி ஓவியர்களுக்கு இயற்கையை உள்ளது உள்ளபடி வரைவதில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. அதை ஒரு அலங்கார ஆடம்பரம் என்றே அவர்கள் நினைத்தனர். ஒரு காட்சியை பார்வைக் கட்டமைப்பின் கண்ணோட்டத்தோடு அமைத்தனர். அதாவது, மரம் இருக்கும் எதிரில் சமன்செய்வதற்காக மேகத்தை வரைவார்கள். இருளும் வெளிச்சமும் சீராக உருவாக்கி கண்ணுக்கு ஒரு சமன்பாட்டை ஏற்படுத்துவார்கள். ஒரு நிலக்காட்சியை வரைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணமல்ல மாறாக கலைப்படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணுவது. வேண்டுமென்றே ஒரு வெளியை அங்கு நிகழ்த்திக்காட்டுகிறார்கள். பார்வையாளர்களின் யதார்த்தத்தேடலை மீறிவிடாமல் இயற்கைக்காட்சிகளை இடமாற்றித் தருகிறார்கள். உள்ளது உள்ளபடியே படம்பிடிப்பதை இம்பிரஷனிஸ்டுகளுக்காக விட்டு வைத்திருந்தனர். சூரியஒளியின் தீர்க்கம், நிழலின் வண்ணங்கள், காற்றின் ஒளியமைப்பு என இயற்கையின் உன்னத அழகை மட்டும் உருவாக்கிக்காட்டுவதற்கு அவர்கள் முயன்றனர். உண்மையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டனர். கையும் கண்ணும் மட்டும் கொண்டவர்களாக மாற ஓவியர்கள் விரும்பினர். புத்திகூர்மையை அவர்கள் வெறுத்தனர். அவர்களது ஓவியங்களை இன்று கிளாட்டின் ஓவியத்தோடு நிரையில் வைக்கும்போது எத்தனை கற்பனையற்ற சித்திரங்களாக அவை இருக்கின்றன என ஆச்சர்யமாக உள்ளது. கிளாடின் வழிமுறையும் சிறுகதை ஆசிரியர்களில் உச்சகட்டமானவராக கய் தெ மாப்பஸானின் வழிமுறையும் ஒன்றுதான். அது அற்புதமான ஒன்று என்பதால் பிறவற்றை விட மேலும் அதிக காலம் நீடிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. மத்தியவர்க்க ருஷ்யர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இருந்தனர் என்பது பற்றிய அக்கறை குறைந்து வரும்போதும் மற்றும் செகாவின் கூற்றை விட அதில் வரும் மனிதர்களே அதிகம் கவர்கிறவர்களாக இருக்கும்போதும் இந்த வழிமுறை மேலும் உபயோகமாக இருக்கும். நான் சொல்லும் வழிமுறையில் வாழ்க்கையை நகல் செய்யும் முயற்சி இல்லை மாறாக வாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கும் சுவாரஸ்யமாவை, நாடகத்தனமானவை இருக்கும். அப்படித் தேர்ந்தெடுத்தவற்றை வாழ்வுக்கு நெருக்கமாக வாசகர்களை அந்நியப்படுத்திவிடாத மனதுக்கு நெருக்கமான காட்சிப்படுத்துதல் இருக்கும். தகவல்களிலிருந்து ஒரு நேரடியான அழகமைப்பு உருவாகி இருக்கும். முடிவில் வரும் படைப்பு என்பது எழுத்தாளரின் உணர்ச்சி மனநிலையின் பிரதிபலிப்பாகவும் இருக்கும். ஏனென்றால் ஒரு எல்லை வரை அது அவனே தான். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஈர்த்து வைத்திருக்கும். அதில் வெற்றிபெற்றால் வாசகன் அதை உண்மை என ஏற்றுக்கொள்வான். அவனுடையதாகக்கொள்வான்.

இந்த புத்தகம் ஒரு புனைவு என என் வாசகர்களுக்கு நிறுவுவதற்காகவே நான் இதையெல்லாம் சொல்கிறேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக புனைவு எனும் பெயரில் வந்த பல கதைகளை நான் அப்படி தைரியமாகச் சொல்ல மாட்டேன். அவை உண்மைக்கு நெருக்கமான நினைவுகள். உளவாளியின் வேலை மிகவும் சலிப்பூட்டக்கூடியது. மிக அன்றாடத்தனம் கொண்ட தேவையில்லாத வேலைகள். கச்சாப்பொருட்களாக அவை அளிப்பது பெரும்பாலும் தேவையில்லாத தகவல்கள்தான். தன்னால் முடிந்தளவு எழுத்தாளர் அவற்றை தங்குதடையின்றி, புனைவுச்சங்களுடன் இயல்பாகச் சொல்ல வேண்டும்.

1917 ஆம் ஆண்டு நான் ரஷ்யா சென்றேன். போல்ஷுவிக் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் ரஷ்யாவை உலக யுத்தத்திலேயே தொடர்ந்து ஈடுபட வைக்கவும் என்னை அனுப்பினார்கள். என் முயற்சிகள் பயன்தரவில்லை என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். பெறோகிராடிலிருந்து லாடிவோஸ்டாக் சென்றேன். ஒரு நாள், சைபீரியா வழி சென்றபோது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. வழக்கம்போல சிலர் இறங்கினர், சிலர் தேநீர் போட்டுக்கொள்ள நீரைத் தேடி சென்றனர், சிலர் சாப்பாடு வாங்கி வரவும், காலை நீட்டிக்கொள்ள சிலரும் இறங்கினர். கண் தெரியாத ஒரு வீரர் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்தனர் சில வீரர்கள். சிலர் பின்னே நின்றனர். இருபது முப்பது வீரர்கள் இருக்கலாம். அவர்களது உருப்புகள் கரைபடிந்து கிழிந்திருந்தன. பெரிய உருவம் கொண்டவனான கண் தெரியாத வீரன் மிகவும் சிறியவன். மெல்லிய தாடி அவன் இதுவரை மழித்திறாத தாடையில் மென்மையாகத் தெரிந்தது. பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்காது என நினைக்கிறேன். அகலமான சப்பை முகம். நீளமான மூக்கு மற்றும் நெற்றியில் அவனைக் குருடாக்கிய குண்டு விட்டுச்சென்ற பெரிய காயத்தடம். மூடிய கண்கள் சலனமற்ற பாவத்தைத் தந்திருந்தன. அவன் பாடத்தொடங்கினான். இனிமையான தடித்த குரல். அக்கார்டியன் வாசித்தபடி பாடினான். ரயில் காந்திருந்தபடியால் அவன் ஒவ்வொரு பாடலாகப் பாடிக்கொண்டிருந்தான். அவனது பாடல் வரிகள் எனக்குப் புரியாவிட்டாலும் அவனது பாடலில் தெரிந்த தனிமையும் பதனப்படாத தன்மையும் எனக்கு கைவிடப்பட்டவர்களின் ஓலமாகக் கேட்டது. தனிமையான பள்ளத்தாக்குகள், முடிவடையாத காடுகள், ரஷ்யாவின் அகலமான நதிகள், கிராமப்புரத்தின் கரடுமேடுகள், உழப்படும் நிலங்கள், சோளத்தின் பதியக்காலம், பெர்ச் மரக்கிளைகளில் புகுந்து வரும் காற்றோசை, பனிக்காலத்தின் நீள இரவுகள், கிராமங்களில் நடனமாடும் பெண்கள், அந்தியில் கலங்கிய ஓடைகளில் குளிக்கும் இளைஞர்கள் என உணர்ந்தேன். யுத்தத்தின் கொடூரம், யுத்த களங்களின் தனித்த இரவுகள், புழுதி படிந்த சாலையில் நெடிய நடை, யுத்தகளத்தின் அச்சுறுத்தல்களும், வெறுமையும், இறப்பும் என் நினைவில் உறைந்துவிட்டன. அது கொடுமையான அனுபவம். என்னை அசைத்துப்பார்த்த தருணம். பாடகனின் காலருகே இருந்த குல்லாவில் வீரர்கள் பணம் நிரப்பினர். அவர்கள் அனைவரையும் அதே உணர்வு தொற்றியிருக்கும். தாளயியலாத பரிவும், புரிபடாத பயமும் சேர்ந்த ஒரு உணர்ச்சி. ஏனென்றால் கண் தெரியாத வீரனின் முகத்தில் ஏதோ ஒன்று எங்களை அச்சுறுத்தியது. அவனது முகபாவத்தில் தெரிந்த உணர்ச்சியிலிருந்து அவன் தனிமைப்பட்டவனாக, சுகமான உலக வாழ்விலிருந்து அறுபட்ட ஆன்மா என்பதை உணர்வீர்கள். அவன் மனிதனைப் போலவே இல்லை. வீரர்கள் மெளனமாக தங்களை ஒப்புகொடுத்து நின்றிருந்தனர். கண் தெரியாத பயணியின் உரிமைக்காக ஒன்றாக நிற்பவர்கள் போலிருந்தது அவர்களது உடல்மொழி. அவர்களது முகங்களில் எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிடும் கோபமும், எங்கள் முகங்களில் அளவிடமுடியாத இரக்கமும் தெரிந்தாலும், அவை எதுவும் நிர்கதியற்ற அந்த குருடனின் வலியைப் போக்கவியலாது எனும் நிலையை உணர்ந்திருந்தோம்.

Image Credit : Existential Ennui

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

ஈரம் நிரந்தரம் – வண்ணதாசன் முன்னுரை

தேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி

(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)

oOo

ஈரம் நிரந்தரம்
(நன்றி அகரம் பதிப்பகம்)

தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.

இன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.

சரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.

பிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.

எல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இரவுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.

இப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய விலை.

என் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று? சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன?

நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.

வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?

நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.

நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது.

நான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.

அப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா?’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.

ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.

ஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.

ஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.

யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.

இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
எஸ்.கல்யாணசுந்தரம்
15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.

(நடுகை, 1996, முன்னுரை)

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.