நாஞ்சில் நாடன்

நாஞ்சிலும் நானும்

 சுல்தான்

nanjil_nadan_spl_issueசுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.

அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..

இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?

அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.

அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..

நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..

”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”

””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..

நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.

ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.

எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..

ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து  பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது.  இருக்கிறது.

இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..

அவ்வளவுதாங்க மேட்டர்!!

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.

நாஞ்சிலின் நறும்புனல்

சுனில் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueமூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் அடிப்படை பயிற்சியற்றவன். எனவே, அவருடைய கம்ப ராமாயான உரையை முழுவதுமாக உள்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 

 
ஐம்பது அறுபது பேர் இணைந்திருக்கும் கூடுகையில் பிற அனைவரும் அவருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் உரையாட தகுதியற்றவனாக என்னை மட்டும் கற்பிதம் செய்துகொண்டேன் (என்னைத் தவிர பிற அனைவருமே அவரை வாசித்தவர்கள், அதனாலேயே இயல்பாக உரையாடுகிறார்கள் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கை). மேலும், நாஞ்சில் எளிதில் அறச்சீற்றம் கொள்பவர் எனும் மனப்பதிவு வேறு இருந்ததால், அவரை வாசிக்கவில்லை என்பது பாதுகாப்பான சமாதானமாகவும் இருந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போதாவது ஒழுங்காக வாசித்துவிட்டு உரையாட வேண்டும் என உறுதி பூண்டவனாய், சம்பிரதாய வணக்கங்களுக்கு அப்பால் எதுவுமே உரையாடாமல் புறப்பட்டுவிட்டேன்.  
 
அடுத்த கூட்டத்திற்குதான் இன்னும் காலமிருக்கிறதே என்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே காரைக்குடி புத்தககண்காட்சி சிறப்பு விருந்தினராக நாஞ்சில் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பில் அவர் பெயர் பார்த்தவுடன் மனம் பரபரக்க, நண்பர்களிடமிருந்து அவருடைய எண்ணைப் பெற்று அழைத்தேன். ஆச்சரியமாக, நான் எப்படியோ அவருடைய நினைவில் இருந்தேன். முன்அனுமதி பெற்று, அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். மிக இயல்பாக அரசியல், இலக்கியம், பயணம், அனுபவம் என உரையாடத் துவங்கினார். அந்த இரண்டாம் சந்திப்பிற்கு பின்னர் கம்பன் விழா, எனது திருமணம் என இந்த மூன்று நான்கு ஆண்டுகளில் குறைந்தது பத்து முறைகளாவது அவரைச் சந்தித்திருக்கிறேன்.
 
நாஞ்சிலுக்கு அபார உணவு ரசனை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். நாஞ்சில் நாட்டு உணவு வகைகளைப் பற்றி பேசும் அவருடைய கட்டுரைகள் மட்டுமின்றி அவருடைய புனைவுகளிலும் அவை வெளிப்படும். மும்பை சேரியில் கிடைக்கும் வடா பாவ் துவங்கி நாஞ்சில் நாட்டு தீயல்கள் வரை உணவின் வாசனையை நாம் அவரது எழுத்தில் உணர முடியும். ஒருமுறை, செட்டிநாடு பலகார கடைக்கு ஒரு நாள் மாலை சென்றோம். அதற்கடுத்த முறையிலிருந்து மதிய உணவை தவிர்த்து நேராக மாலை பலகாரம்தான். ஒவ்வொருமுறை இங்கு வந்துவிட்டு ஊர் திரும்பும்போதும் அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து சீப்பு சீடை, முறுக்கு போன்ற செட்டிநாட்டு தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு போவார். ‘செட்டிநாட்டு சாப்பாடக் காட்டிலும் நாஞ்சில் நாட்டு சாப்பாடு பிரமாதமா இருக்கும், ஆனா பாருங்க, எப்படியோ வியாபாரம் பாக்க போன இடத்துல பிரபலமாகிட்டாங்க… செட்டிநாடுன்னு போட்டு கேரளாகாரங்ககூட ஹோட்டல் நடத்துறாங்க’, என்பார். 
 
மறைந்த தமிழறிஞர் பா.நமசிவாயம் மீது நாஞ்சிலுக்கு பெருமதிப்பு உண்டு. அவர் காரைக்குடிக்கு வரும்போதெல்லாம் அங்கு சென்றுவருவோம். நாளுக்கொரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் எண்பது வயதிற்கு மேலான நமசிவாயம் அவர்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க,  நாஞ்சில் அவருடன் உரையாடக் கேட்பது அபாரமான அனுபவம். 
 
நாஞ்சில் காரைக்குடி கம்பன் கழகத்திற்காக கம்பனின் அம்பறாதூணி எனும் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவை விரித்து நூலாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மிக முக்கியமான சொல்லாய்வு நூல் அது. ஒவ்வொரு சொல்லாகப் பகுத்து நுணுக்கி அதன் அத்தனை சாத்தியங்களையும் ஆராயும்போது மொழியின் வீச்சை உணர்ந்துகொள்ள முடியும். பொதுவாக, குருடர்கள் துழாவிய வேழமாகத்தான் நாம் மொழியை உணர்ந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
 
தமிழ் மெல்லச் செத்துவிடுமோ எனும் அச்சம் அவருக்குண்டு. ‘மொழி சுருங்கிகிட்டு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு கிடக்கு’ என்பதே அவருடைய தலையாய கவலை. மேடைகளிலும், நேர்ப்பெச்சிலும் அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு நவீன எழுத்தாளனாக மரபிலக்கியங்களில் அவர் எதை தேடுகிறார் என்பதற்கான விடை இதிலுண்டு. வழக்கொழிந்த சில சொற்களை தன் வாழ்நாளில் மீண்டும் கவனப்படுத்தி நிலைநிறுத்துவதை தனது கடமை எனக் கருதுகிறாரோ என்றுகூட எண்ணுவதுண்டு. 
 
உணர்ச்சி மிகுந்த ஆளுமை என்றாலும் அவர் நேருக்கு நேராக எவரையும் நோகடித்து நான் கண்டதில்லை. ஆனால் மேடைகளில் அவரை இருக்கையில் இருத்திவிட்டு கும்பமுனி உரையாற்றும் தருணங்களும் உண்டு. ‘நானும் எத்தனையோ மேடைகள்ல பேசிட்டேன். ஆனா இன்னிக்கும் எனக்கு கொஞ்சம் கலக்கம் உண்டு’, என்று சொல்லியிருக்கிறார். ஆம், மேடைப் பேச்சுக்கு முன்பான அரைமணிநேரம் கொஞ்சம் நிலையிழந்து காணப்படுவார். ஆனால் அது தன்னம்பிக்கை குறைப்பாட்டால் விளைந்ததல்ல என்பதையும் நான் நன்கறிவேன். திட்டமிட்ட தலைப்புகளில் தயாரித்த உரைகளைத் தவிர்த்து பிறவற்றுக்கு அவர் சென்றுவிடும் தருணங்களுமுண்டு. மேடையில் அமரச்செய்து அவருடைய பொறுமையைச் சோதித்த காரைக்குடி புத்தக கண்காட்சியில் நாற்பது நிமிடங்களுக்கு மேல் எவ்வித தயாரிப்புமின்றி மிகக் கூர்மையாய்ச் சீண்டும் உரையை ஆற்றி முடித்தார். 
    
நாஞ்சில் அபாரமான உரையாடல்காரர். அவருடைய புனைவுகளை வாசித்திருந்தாலும், ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் அவரிடம் அவைகளைப் பற்றி பேசியதில்லை. தன் படைப்புகள் குறித்து நேரடியாகப் பேசுவதில் அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் உண்டு. உரையாடல் அது காட்டும் வாழ்க்கைக்கும், அது சார்ந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடம்பெயர்ந்து விடும். 
 
நாஞ்சில் தனது பணி நிமித்தமாக நாடெங்கும் பயணித்திருக்கிறார். கூடவே ஒவ்வொரு ஊரின் உணவு சிறப்புகளைப் பற்றியும் கச்சிதமாகச் சொல்வார். அவர் இங்கு வந்திருந்தபோது அவர் பணியாற்றிய பரதேசி திரைப்படத்தை ஒருநாள் இரவு சென்று பார்த்தோம். அப்போது தன் சினிமா அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வந்தார். ‘அந்த டான்ஸ் மாஸ்டர் பன்ன பாதிரியார் ரோல் நான் பண்ணியிருக்க வேண்டியது… பாலாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். இந்த டான்செல்லாம் நான் ஆடியிருந்தா?… நெனைச்சே பார்க்க முடியல”, எனச் சொல்லி சிரித்தார்.
 
ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமணம் நின்றுபோன கதையை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்கள் சிவந்து நீர்த்துளிகள் உருண்டோடின. ‘என்ன சார்?’ “பாவமுள்ள’ என்று சொல்லிவிட்டு வேறேதும் பேசவில்லை. சக மனிதர்களின் மீது அவருக்கு இருக்கும் பரிவு, அதுவே நாஞ்சிலின் உலகம். நெடுந்தூர பேருந்து பயணங்களில் மூத்திரத்தை அடக்கும் சர்க்கரை நோயாளிகளுக்காகவும், பெண்களுக்காகவும் அவரால் கவலைகொள்ள முடிகிறது. அசோகமித்திரனை எண்ணும்போதும் எனக்கு இதே உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வெளிப்பாட்டின் அளவில் இருவரும் வேறானவர்கள். 
 
ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி அவர் மீது ஒரு தந்தைக்குரிய நேசம் எனக்குண்டு. எனது திருமணம், சகோதரனின் திருமணம் ஆகியவற்றில் முழுமையாக பங்கெடுத்து ஆசியளித்தவர். இவ்வகையான உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் அவற்றுக்குரிய இடமுண்டு என்றுதான் நினைக்கிறேன். இது இலக்கிய மதிப்பீடோ விமர்சனமோ அல்ல, அந்தரங்கமான ஒரு நினைவோடை மட்டுமே. இத்தகைய ஆளுமையின் அண்மை வாழ்வின் கணங்களை ஏதோ ஒருவகையில் செறிவாக்குகிறது. அவ்வகையில் எழுத்திலும், அணுக்கத்திலும் அளித்த எல்லாவற்றிற்கும் பிரியத்துக்குரிய நாஞ்சிலுக்கு நன்றிகள்.     

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்

அம்பை


ambai_nanjil_spl_issue

என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் வந்திருக்கலாம். நாஞ்சில்நாடன் மும்பாய்க்கு 1972இல் வந்தார். நான் 1978இல்தான் வந்தேன். ஆனால் அதற்கு முன்பே அவரைப் படித்திருந்தேன். மும்பாய் வந்ததும் அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. ஊருக்குப்போய் வரும்போது தேங்காய்களும் கருப்பட்டியும் சகோதரிக்குச் சீர் கொண்டு வருவதுபோல் கொண்டுவருவார். தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானபோது என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, “அத்தை சீர் செய்ய வந்துவிடுங்கள்” என்று உரிமையுடன் உத்தரவிடும் வகையில் உள்ள நட்பு அது. இலக்கிய உலகில் எனக்கு உள்ள எல்லா நட்புகளும் போல இதுவும் இலக்கியமும், வாசிப்பும், விவாதங்ளும் விமர்சனமும் கூடிய நட்புதான். நான் வேற்று மாநிலத்தில் வளர்ந்து அங்கு தமிழ் கற்றவள். அதனால் நாஞ்சில்நாடனிடம் மொழி குறித்தும், தற்கால இலக்கியம் குறித்தும் நிறையப் பேசியிருக்கிறேன். மிதவையிலிருந்து எட்டுத் திக்கும் மதயானை வரை அவர் கையெழுத்திட்டு, கைப்பட எனக்குத் தந்தவைதாம். இப்போது அவரது எழுத்துகள் குறித்து எழுத அமரும்போது அந்த மும்பாய் நாட்களையும் பிறகு கோவை வந்தபோது சில சமயம் சந்தித்துப் பேசியதையும் நினைத்துக்கொள்கிறேன். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுத்து பற்றி நான் எழுதவேண்டிய சரியான காலகட்டம் இதுதான் என்று தோன்றுகிறது. அவர் கடந்து வந்த வாழ்க்கை மற்றும் எழுத்துப் பாதையும் அவர் தற்சமயம் நிற்கும் மைல்கல்லும் எனக்கு மிகத் தெளிவாகப் புலப்படும் கட்டம் இது.

 

nanjil_nadan_spl_issueஹிந்தியில் “மீட்டீ சூரி” (இனிப்பான கத்தி!) என்று சொல்வதுபோல் அவர் எழுத்தில் என்னைத் தொடர்ந்து ஈர்ப்பவை குறித்து ஆரம்பித்து, பிறகு மற்ற விஷயங்களுக்குப் போக விரும்புகிறேன். நாஞ்சில் நாட்டு மனிதர்களை அவரைப்போல வேறு யாரும் வெளியே கொண்டுவரவில்லை என்று ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் வண்ணதாசன் கூறியிருப்பார். வண்ணதாசன் இதுவரை யாரைக் குறித்தும் ஒரு கடுஞ்சொல் கூறாதவர், எல்லோரையும் ஆகாயத்தில் தூக்கி வைப்பவர் என்றாலும் நாஞ்சில்நாடனைப் பொறுத்தவரை அவர் கூறியிருப்பது உண்மைதான். 1975இல் எழுதிய ”விரதம்” கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளையிலிருந்து 2003இல் எழுதிய “வனம்” கதையில் வரும் ஓட்டுனர் வரை அவர் நம் முன் வைக்கும் பலதரப்பட்ட நாஞ்சில்நாட்டு மக்கள் ஒரு பிரதேசத்தின் வட்டத்தினுள் இருந்தாலும் அந்த வட்டத்திலிருந்து எழும்பி மனித வாழ்க்கையையும் அதில் இருந்த, இருக்கும் அழகுகளையும் அவலங்களையும் குறிக்கும் குறியீட்டுப் பிரதிநிதிகளாகிவிடுகிறார்கள். அவர்கள் அப்படி ஆவதற்குக் காரணம் அவர்கள் கதைகளின் பாத்திரங்களாவதனால் மட்டுமல்ல. அவர்களைத் தன் மொழியால் நாஞ்சில்நாடன் வரையும் விதத்தால்தான்.

விரதம்” கதையில் சின்னத்தம்பியா பிள்ளை குளித்துக்கொண்டிருக்கிறார். அதை இப்படிச் சொல்கிறார்:

“துவைத்துப் பிழியப்பட்டிருந்த பள்ளியாடி புளியிலைக் கரை வேட்டி, கல் மீது பாம்புப் புணைபோலப் படுத்துக் கிடந்தது. மாடு குளிப்பாட்டும் பையன்கள் தேய்த்துத் தேய்த்துப் பசுமையாகிவிட்டிருந்த வைக்கோல் கத்தையால் கை, கால், உடம்பு எங்கும் நன்றாகத் தேய்த்தார். ஐம்பது ஆண்டுகளாக இதே பழக்கம். பங்குனி, சித்திரை வெயிலிலும் ஆனி, ஆடிச்சாரலிலும் அடிபட்டு, உரம் பெற்று, காய்ந்து சுருக்கம் விழுந்துவிட்ட உடம்புக்கு, வைக்கோல் கத்தையானால் என்ன? தேங்காய்ச் சவுரியானால்தான் என்ன?

இடுப்பளவு ஆழத்தில் நின்று அரையில் கட்டியிருந்த ஈரிழைத் துவர்த்தை முறுக்கிப் பிழிந்து, முதுகின் பின் பக்கம் வடம் போலப் பிடித்துக்கொண்டு, அழுத்தமாக முதுகைத் தேய்த்தார். அதையே மீண்டும் அரையில் கட்டிக்கொண்டு ஆனந்தமாக நீராடலானார்.”

சின்னத்தம்பியாபிள்ளையின் மொத்த உருவமும் கண்முன் வருவது மட்டுமல்ல, அந்தக் காட்சியும் கண்முன் விரிகிறது. புளியிலைக் கரை வேட்டி, துவைத்துப் பிழியப்பட்டு பாம்புப் புணைபோல அது கிடக்கும் விதம், அவர் முதுகு தேய்த்துக்கொள்வது, அந்தக் குளியலின் ஆனந்தம் எல்லாவற்றையுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இதற்குப்பின் அந்த ஆற்றை விவரிப்பார். அது அகண்ட காவிரி இல்லை. ஆனால் அதற்கென்று சில குணங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கூறும்போது அந்தக் கிராமமும், அதன் வாழ்க்கை முறையும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. பிறகு கதையின் போக்கில் நாமும் ஆற்றின்போக்கில் போவதுபோல் இழுபட்டபடி போகிறோம். “சூடேறிவிடாத சலசலக்கும் தண்ணீரின் இதம்” கொண்ட அந்த ஆற்றைப்போலவே கதையும் நம்மைத் தொடுகிறது.

மென்மையும் எள்ளலும் எகத்தாளமும் நகைச்சுவையும் கூடிய மொழி நாஞ்சில்நாடனுடையது. மனித இயல்புகளைச் சற்றே எட்டி நின்று பார்த்து வியந்து சிரிக்கும், மனம் நெகிழ்ந்தும் உடைந்தும் நம்பிக்கை கொள்ளும், நம்பிக்கை இழக்கும் பார்வை. அதற்கேற்ற மொழி. “சில வைராக்கியங்கள்” கதையில் வரும் “ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று பட்டினத்தடிகளைப் பாடிவிட்டு சூட்டோடு பரமசிவம் பிள்ளை இட்லி சாப்பிடுவதை அவருக்கே உரிய எள்ளல் தொனியில் நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

“நுனி வாழை இலையில், ஆவி பறக்க ஐந்தாறு இட்லிகளையாவது வைத்து ஓரத்தில் இரண்டு மூன்று கரண்டி மிளகாய்ப் பொடியை வைத்து அவர் அதை விரலால் குழிக்க, நல்லெண்ணெயை அதன் மீது சரித்தாள் மனைவி.

பரமசிவம் பிள்ளை சாப்பிட ஆரம்பித்தார். உள்ளே போய்க்கொண்டிருந்த இட்லிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், “ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று சற்று முன் பாடியவர், இது ஒன்றைத்தான் சதம் என்று எண்ணுகிறாரோ என்று தோன்றும்.”

கதை பரமசிவம் பிள்ளை சாதியை விடாமல் பற்றியிருப்பது பற்றிய கதை. ஆனால் கதைக்கான பின்னணியை அமைத்தடி போகிறார் நாஞ்சில்நாடன். பொதுவெளியில் ஒரு நோக்கையும் தன் வாழ்க்கையில் ஒரு நோக்கையும் வைத்திருக்கும் நபர் அவர். பட்டினத்தடிகளின் பாடலுக்கும் அவர் சுவைத்துச் சாப்பிடும் விதத்துக்கும் சம்பந்தமில்லாதது போலவே அவர் அரசியலுக்கும் அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.

பல மாதங்களாக எண்ணெய் காணாத முடியும் உடம்பும் உள்ள ஒருவர் செய்யும் எண்ணெய்க்குளியலும் உண்டு “விலக்கும் விதியும்” கதையில்:

“மரத்து நிழலில் சுகமாக அமர்ந்த பரமக்கண்ணு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தான். கால்கள், கைகள், தொடை, முதுகு என்று தப்பளம் தட்டினான். காது, மூக்கு, நகங்கள், தொப்புள் எல்லாம் தொட்டுத் தொட்டு வைத்தான். உடலெல்லாம் நசநசவென்று பிசுக்கு. தலையில் இருந்து நெற்றிக்கு வடிந்து புருவப்பந்தியைத் தாண்டி கன்களில் கசிந்தது. வயிற்றில் கோடு போட்டால் வரிவரியாய்த் தடம் விழுந்தது. அழுக்கு கரைந்து மேலெல்லாம் ஒரு மொலுமொலுப்பு. யாரோ தொட்டுக் கூச்சங் காட்டுவதுபோல். அரைமணி நேரம் ஆயிற்று. இவ்வளவு ஊறியது போதும். அவன் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான்.”

பிறகு எண்ணெய்க்குளியலை அவர் அனுபவிப்பதைக் கூறுகிறார் அவருக்கே உரிய மொழியில்:

”கண்ணிலே ஆவி பறக்கு…கொதிக்க சோத்திலே இருந்து பறக்க மாரி குபுகுபுண்ணு… சவம் எத்தனை மாசச் சூடு? சீக்காப் பொடியைப் போட்டு அரங்கத் தேச்சாலும் பிசுக்கு போல்லே… மேலெல்லாம் பாம்புச் சட்டை போல உரிஞ்சு கெடந்தது இப்பம் பளபளண்ணுல்லா வெட்டுகு? ஈணப்போற எருமை மாரி ஒரு மினுக்கம். சும்மையா பாண்டிக்காரம்லாம் சனி தறுனாலும் எண்ணக்குளி தவறாம இருக்கான்…என்ன சொகமாக இருக்குங்கேன்? பரமசிவன் குளித்துக் கரையேறினான்.”

ஈணப் போகும் எருமைக்கு மினுமினுப்பு இருக்கும் என்பது ஒரு தகவல்தான். ஆனால் அது பரமசிவன் போன்ற விவசாய உழைப்பாளியின் எண்ண ஓட்டங்களிலிருந்து வருவதுதான் கதையில் அது சரியாகப் பொருத்தப்படும் இடம்.

பரமசிவனுக்கும் சுவை கூடிய உணவைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. அவை கடையில் கிடைப்பது அல்ல. ஒரு பெண்ணின் கையால் செய்யப்படும் உணவு:

“…மூதி கொளம்பு வச்சுண்ணா என்னா மணக்கும்! சாணிகெணக்க சளசளன்னு கையெல்லாம் அப்பும், அந்த மாரி வருமாங்கும்? பேசுகேரே நீரும்! உமிக்காந்தல்லே வெறும் அயிலைக் கருவாட்டைச் சுட்டு வச்சாப் போருமே… மணம் பிய்க்காது?…ஒரு கும்பா கஞ்சியை உப்புப் போடாம குடிக்கலாம்… மரச்சீனிக் கெளங்குக்கறி வச்சாண்ணா அது ஒரு மணம்… நெய்யும் தயிரும் அதுக்கு வால்லே கெட்டி அடிக்கணும்…”

சாணி மாதிரி சளசளவென்று கையை அப்பும் என்ற உவமையைக் குழம்புக்காக வேறு யாரால் சொல்ல முடியும் மாட்டுடனும் சாணியுடனும் நிதம் வாழ்க்கை நடத்துபவனைத் தவிர?

நல்ல வசதியாக இருப்பவர்கள் (அவர்கள் வசதியானவர்கள் என்பதைக் குறிக்க அவர்கள் வயல் குறித்த விவரங்களை அல்லது அகன்ற, பெரிய வீடுகளை, சாப்பிடும் சாப்பாட்டை விவரமாகக் கூறுவார் நாஞ்சில்நாடன்) செய்யும் ஏய்ப்புகளை, அதிகாரங்களை, கபடங்களை, அதற்குப் பணிந்துபோகும் கிராமத்தினரின் வாழ்க்கையை, அவர்கள் எதிர்ப்புகளை, மீறல்களை அதனால் விளையும் சங்கடங்களை, மன முறிவுகளை, சோகங்களைப் பல கதைகளில் கூறுகிறார் நாஞ்சில்நாடன். எல்லோருமே மண்ணில் உறுதியாகப் பாதங்களைப் பதித்தவர்கள். அதன் மொழியை உறுதியாகப் பற்றியிருப்பவர்கள். சிலர் பெருவயிற்றுக்காரர்கள்; சிலர் பசித்தவர்கள். சிலர் உழைப்பவர்கள்; சிலர் உழைப்பை அனுபவிப்பவர்கள். சவம், மூதி தாயோளி என்றுதான் கொஞ்சலும் வசவும். எண்ணையை அரக்கித் தலையில் தேய்த்து, ஆற்றங்கரையில் குளிப்பதுதான் இந்த வாழ்க்கையில் உள்ள டாம்பீகம். கிராமத்தில் திருமணம் நடந்தால் நல்ல சாப்பாடு சாப்பிட ஏங்கும் மக்கள். அதிலும் சுயமரியாதையை விட்டுவிட முடியாத நபர்கள் சிலர் பட்டினியாகவே விலகிவிடும் நிலைமை. மனவளர்ச்சியற்றவர்களையும், தாயற்ற பிள்ளைகளையும் அரவணைத்துப் போகும் உலகம். அதே சமயம் சாதியும் அதை ஒட்டிய திமிரும் மடமையும் வன்முறையும் உள்ள உலகம். சாதிக்கேற்ப வாகனத்தில் வரும் கடவுள்களும் குழந்தைகள் விளையாட்டில் வெறும் தாச்சியாக இருந்துவிடும் கடவுள்களும் உள்ள உலகம்.

இந்த உலகத்து விவரங்களை பட்டியலாக்கியபடி கதைகளை எழுதிவிடலாம்தான். அது மிகவும் எளிதானது. ஆனால் நாஞ்சில்நாடன் அதைச் செய்வதில்லை. இடையிடையே சில வரிகள் விழுந்து கதைக்குச் சுருதி கூட்டுகின்றன சில சமயம்; கோடை காலத்து மழைத் துளிகள்போல் தண்மையைப் பரப்புகின்றன சில சமயம். உதாரணங்களாகச் சில வரிகளைக் கூறலாம்:

“…ஆட்கள் நடந்து நடந்து வரப்பின் மத்தியில் பாம்பு அடித்துப் போட்டது போன்று நேரான வழித்தடம் உண்டாகி இருந்தது” (”உபாதை”)
“நொந்த வாழைப்பழமாய் மண் பிதுங்கியது…” (”உடைப்பு”)
“பூச்சி விழுந்த எருமைக் கன்றுக்குட்டியின் வயிறுபோல் இலுப்பை மரக்கரை இளைத்திருந்தது.” (”உடைப்பு”)
”(எருமையின்) நான்கு காம்புகளும் பலாப்பிஞ்சுகள் போல் தெறித்திருந்தன.” (”சுரப்பு”)

நகர்ப்புறத்துக் கதைகள், குறிப்பிட்டுச் சொன்னால் மும்பாய் வாழ்க்கை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். மும்பாய் நகரத்தில் உறவுகள் அமையும் விதம் குறித்து, மும்பாய் நகரத்தின் போக்கு குறித்து எனப் பலக் கதைகள். கீழே மண்ணில் கொட்டும் பாலைக் கையில் அள்ளி நடைபாதையில் வாழும் குழந்தைக்கு ஊட்டும் மும்பாய் நகரம். இங்கும் குடிசைகள் உண்டு. ஆனால் அவை எப்படிப்பட்ட குடிசைகள் என்று நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

…”குடிசைகள் என்றால் கிராமத்துக் குடிசைகள்போல், சுற்றி மண்சுவரும் ஒரு கதவு நிலையும் இரண்டு சன்னல்களும் மேலே தென்னையோலை, பனையோலை அல்லது புற்கட்டுக்களால் கூரை, சாணமிட்டு மெழுகிய பசுந்தரை, முன்னால் முற்றம், ஒரு வாழைக் குப்பம், இரண்டு கத்தரி, வெண்டை, ஒரு புடலை, ஒரு பாகல் அல்லது அவரைப் பந்தல், ஒரு ஆடு, பசு மாடு, கலப்பை, நுகம், உழவுமாடுகள், நெல்குத்தும் கல் உரல், தோசைக்கும் மாட்டுக்கு பருத்திக் கொட்டையும் அரைக்கும் ஆட்டுரல், அது பதிந்த திண்ணை, மாட்டுக்குத் தண்ணீர் காட்ட கல்தொட்டி, உரக்குண்டு, சுவர் மூலையில் கூரையில் இருந்து தொங்கும் துடைக்கயிற்றுச் சுருள், உமிக்கரிப் பட்டை, கோழிக்கூடு… இந்தக் குடிசைகள் அந்த வகைத்தன அல்ல.” (”ஒரு காலைக் காட்சி”)

மற்ற நகரங்களைப் பற்றிய கதைகளும் உண்டு. அவை உருவாக்கும் கூச்சல்கள், குமுறல்கள், அவைகளில் அமையும் பயணங்கள் பற்றிய கதைகள். பாதைகளைப் பிணைக்க முயன்று மனங்களைப் பிரித்துவிடும் பயணங்களை உருவாக்கும் நகரங்கள். செயற்கை முறையில் பசுவைக் கருத்தரிக்க வைக்கும் பசு வதை செய்யும் நகரங்கள். இவற்றில் “வனம்” என் மனத்துக்கு மிக நெருங்கிய ஒன்று. தரமற்ற சொற்களால் எல்லோரையும் கடிந்துகொண்டு வண்டியை ஓட்டும் ஓட்டுனர் ஒருவர் வேகமாக ஓட்டும் பேருந்தின் பாதையின் குறுக்கே “சுசீந்திரம் தாணுமாலையன் தேர் வடம் போல்” ஒரு பாம்பு. மிக மெதுவாக, பரபரப்பின்றிப் பாதையைக் கடக்கும் பாம்பை—அது கர்ப்பிணிப் பாம்பாக இருக்கலாம்; இரையெடுத்த நிறைவயிற்றுப் பாம்பாகவும் இருக்கலாம்—கடுப்பு மிகுந்த ஓட்டுனர் ஏற்றிக் கொன்றுவிடுவார் என்று மனம் பதைக்கும்போது, “போ மோளே பெட்டெந்து” என்கிறார் ஓட்டுனர் கியரில் கை வைத்தபடியே. குரலில் கனிவு கசிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சந்திக்கும் இடம் வனம். அங்கு அவைகளுக்குத்தான் முதல் மரியாதை.

தாயை அறியா தந்தை அற்ற, ஆச்சியும் பாட்டாவும் வளர்க்கும் கல்வி கற்ற இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் வறுமை, கல்வி கற்ற பின்பும் வேலைக்காக அலையும் படலத்தைக் கூறுவது என்பிலதனை வெயில் காயும். கிராம வாழ்க்கையிலும் தன் ஆச்சி பாட்டாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு பையன் படிப்பில் வல்லவனாக இருந்தாலும் வறுமையால் ஆளுமையற்றவனாக உணர்வது, தன்னை நினைத்துக் கழிவிரக்கம் கொள்வது இவற்றைக் கூறுவது. இதில் நாஞ்சில்நாடனின் வழக்கமான தெள்ளிய நடையும் துல்லியமான பார்வையும் இருப்பது பல இடங்களில் தெரிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் அதில் வரும் அனுபவங்களும் அவற்றைக் கூறும் மொழியும்:

“குளம் நீலமாகப் பூத்திருந்தது. கண்கண்ணான நீலம். எண்ணெய் தடவிய பச்சை இலைகள் போக்கு வெயிலில் பளபளத்தன. ஊடே ஊடே ஆம்பல் கொடிகள். ஆம்பலின் வட்டமான இலைகள். ஓரங்கள் பல்பல்லாக, மரமறுக்கும் வாள்போல, கூட்டம் கூட்டமாய் நுள்ளிக்காய் கொடிகள், நிமிர்ந்திருந்த இலைகளில் பச்சை. காற்றில் புரண்டிருந்த இலைகளில் தவிடு. குளத்தின் ஓரத்திலோங்கி உயர்ந்திருந்த கொங்காணிக் கோரைப்புற்கள். ஊடே உகளும் கெண்டைகள்….” (பக்கம்.36)

”…வேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறுகையில், மனம் காற்றில் அலையும். காய்ந்த சருகு போல ஏறும். இரங்கும். ஒல்கும். ஒசியும். அசையும். மிதக்கும்.” (பக்கம் 59)

உகளும், ஒல்கும், ஒசியும் இவை மிகவும் அபூர்வமாக உபயோகத்தில் வரும் வினைச்சொற்கள். அவற்றை மிகவும் சரியாகப் பயன்படுத்தும்போது மனத்தில் ஒருவித உவகை மூள்கிறது. படித்தபின் மிகுந்த நிறைவைத் தரும் நாவல்களில் ஒன்று என்பிலதனை வெயில் காயும். படைப்பாளி மும்பாய் வந்து ஏழாண்டுகள் ஆன பின்னும் கிராமத்து இளைஞன் ஒருவனின் நிலையை, அவன் உணர்வுகளுடன் ஒன்றிக் கூறும் நாவல்.

கிராமத்து ஆண் ஒருவன் வயிற்றுப் பிழைப்புக்காக நகரம் ஒன்றுக்குப் போகும்போது அவன் அடையும் உளைச்சல், பொருந்த முடியாமல் அவன் அந்நியப்பட்டு நிற்கும் நிலை, கிராமம் குறித்த அவன் ஏக்கங்கள் இவற்றை 135 பக்கங்களில் கூறும் நாவல் மிதவை. இதில் நாஞ்சில்நாடனின் நோக்கும் கதையை நிகழ்த்தும் விதமும் சற்றே வேறுவகையாக மாறிப்போகிறது. “பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியதுபோல” பெரியப்பாவை நம்புகிறான் சண்முகம், என்ற நாஞ்சில்நாடன் பாணி உவமைகளுடன் ஆரம்பிக்கும் நாவல் பிறகு வேறு திசையில் போகிறது. வாசகசாலையில் பல பத்திரிகைகள். அன்றைக்கான பேப்பர் பனிரெண்டரை மனிக்குத்தான் வரும். பதினோரு மணியளவில் போனால் அதிகம் ஆட்கள் இருக்க மாட்டார்கள். தினத்தந்தி ரொம்பக் கசங்கி கூழாக இருக்கும். ஒரு மாதிரி கசங்கலோடு தினமலர். தினமணி மாத்திரம் “புதுக்கருக்கு அழியாத பெண்போல.” படித்துக்கொண்டே போகும்போது கண்களை முட்டுகிறது உவமை. ”தினத்தந்தியை எடுத்து முன்னால் விரித்து வைத்துக்கொண்டு அதில் வெளியாகி இருக்கும் சினிமா நடிகையின் முலை தடவி கிளர்ச்சியுறலாம்.” என்று போகிறது இன்னொரு வரி. (பக்கம் 7) என்பிலதனை வெயில் காயும் நாவலில் தனக்குப் பாலுணர்வு ஏற்பட்ட விதத்தை அதை ஒட்டிய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறான் சுடலையாண்டி. அது அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன், வியப்பு உணர்வுடன் ஆனால் எந்த வகையிலும் நம்மை உறுத்தாத வகையில் சொல்லப்படுகிறது. ஓர் இளைஞன் படத்திலுள்ள சினிமா நடிகையின் மார்பைத் தொட்டுக் கிளர்ச்சியுறுவது ஒன்றும் நடக்காத விஷயமில்லை. அது ஆபாசமுமில்லை. அது யதார்த்தம்தான். முலை என்ற சொல்லும் தவறானது அல்ல. பெண் உடலின் ஒரு பாகத்தைக் குறிப்பதுதான். ஆனால் இங்கு அது வலிந்து புகுத்தப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முன்பொரு கதையில் பெண்ணின் மார்பை பால்மடு என்று கூறுவார். சினிமா நடிகைகளுக்கு இருப்பது பால்மடு இல்லை போலும்!

கிராமத்திலும் காமத்தைக் கிளறும், உடல் உறவைத் தரும், யாசிக்கும் பெண்கள் உண்டு. அவர்களின் கட்டான உடலைப் பற்றியும் இளம்பெண்கள் வயதுக்கு வரும்போது ஒளிரும் உடலைப் பற்றியும் கூட குறிப்புகள் உண்டு கதைகளில். ஆனால் கிராமத்தை விட்டு வெளியே வரும், பயணம் செய்யும் அல்லது படித்த நகர்ப்புறப் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிப்பதில்லை ஏனோ. மேலும் நகரத்துக்குப் போக முடிவு எடுத்த உடனேயே அந்தப் படித்த இளைஞனின் மொழி மாறிவிடுகிறது. ரயிலில் செல்லும்போது கீழே பார்க்கும் வறண்ட வைகை அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சாதாரண அதிர்ச்சி இல்லை:

”பெரிய அதிர்ச்சியாக இருந்தது வைகையைப் பார்க்க. கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பதுபோல். கால்களில் நீர், வெடிப்பு, முகத்தில் வீக்கம், காய்ந்து அடர்ந்த உதடுகள், பூழை திரண்ட கண்கள், சரும ரோகம், தோல் பாய்ந்த முலைகள், ஒருவித வீச்சமுடன் இருக்கும் இருக்கும் கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பது போல் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது வைகையைப் பார்க்க….” (பக்கம் 20)

அவன் மனத்தில் இருந்ததெல்லாம் சிலப்பதிகார வைகையும் சில வரலாற்று நாவல்களில் வரும் வைகையாக இருந்தாலும் சிதைந்தும் வரண்டும் போன ஆறு ஒன்று குலைக்கப்பட்ட பெண்ணின் உடலாய்த் தெரிவதில் உள்ள வன்முறை என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது ஒரு வயதான, அழகை எல்லாம் இழந்த, சுருக்கங்கள் உள்ள, கவனிக்கப்படாத முதிய பெண்ணுடலாக இருந்திருக்கலாம். அதில் அந்தப் பெண் உடலுக்குத் தரும் மரியாதை இருக்கிறது. ஆனால் தேவிடியாள் என்று கூறும் உவமையில் ஒரு சரித்திர இகழ்ச்சியும் மானபங்கமும் இருக்கிறது.

இதனுடன் நிற்பதில்லை இந்த வேலையில்லா இளைஞன். ரயிலில் கீழே படுத்திருக்கும் ஏழு வயதுப் பெண்ணின் தாயாரை அவன் பார்க்கிறான். அவள் மார்ச்சேலை விலகியிருக்கிறது. ”அந்த அம்மாளின் முழங்காலை யதேச்சையாய் படுவதுபோல், பெருவிரலால்” தொடுகிறான். பிறகு “முழங்காலின் குதிரை முகத்தை மெதுவாகத் தடவத்” தொடங்குகிறான். கால் விரலிடுக்கில் புடவையைப் பற்றி இன்னும் கொஞ்சம் தூக்கலாமா என்று தோன்றுகிறது அவனுக்கு. பயமாக இருக்கிறது. ஆனாலும் சிறிது நேரம் தொடர்கிறான். அதன்பின் ”முலை முகடுகளை” வெறித்துப் பார்த்துவிட்டு கழிவறையை நோக்கிப் போகிறான். அவனுக்கு இன்னும் வேறு எதுவோ தேவையாக இருக்கிறது. (பக்கம் 21-22)

ரயில் பல இடங்களை கடக்கிறது. பலவித பெண்களும் ஆண்களும் கண்ணில் படுகிறார்கள். தார்பாய்ச்சி கட்டிய புடவை உடுத்திய பெண்கள் வந்ததும் அவன் மனத்தில் உதிக்கும் முதல் கேள்வி இவர்கள் ஒன்றுக்கு எப்படிப் போவார்கள் என்பதுதான். (பக்கம் 40)

மும்பாய் வாழ்க்கை எளிதாக இல்லை அவனுக்கு. எதிர்நீச்சல் போட்டு, வேலையொன்றை அடைந்து, மனம் தளர்ந்து சில சமயம் மனம் உடைந்து, உடல் வேட்கையைத் தீர்த்துக்கொண்டு, கடனை வாங்கி மீண்டும் ஊர் செல்லும்போது எல்லாவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அவன் திரும்புவது அவன் வீட்டை நோக்கி, அவன் மண்ணை நோக்கி. இந்த மகிழ்ச்சியும் கவலையும் கலந்த தருணத்தை நோக்கி அவன் வரும்வரை உள்ள வாழ்க்கையின் சிக்கல்களை அலங்காரமில்லாத சொற்களில், மௌனங்களைப் பிணைத்துக் கூறுகிறார் நாஞ்சில்நாடன். இந்தப் பகுதியிலுள்ள லகானிட்ட மொழிதான் மிதவை நாவலின் வெற்றி.

நாஞ்சில்நாடனின் சதுரங்கக் குதிரை நாவல் அவரது நாவல் முயற்சிகளிலேயே மிகவும் கவனத்துடன் அமைக்கப்பட்ட, பிசிறுகள் இல்லாத ஒரு முயற்சி. சதுரங்கத்தில் குதிரைதான் மிகவும் வித்தியாசமாக நகர்த்தக்கூடிய காய். நகர்த்தப்படும்போது அது இரண்டு இடங்கள் கிடை நிலையிலும் ஓர் இடம் செங்குத்தாகவும் அல்லது இரு இடங்கள் செங்குத்தாகவும் ஓர் இடம் கிடை நிலையிலும் நகர்த்தப்படலாம். மற்ற காய்களைப்போல் அல்லாமல் குதிரை மற்ற காய்களைத் “தாண்டிக் குதித்து” தன் இலக்கை எட்ட முடியும். சதுரங்கப் பலகையின் நடுவில் இருந்தால்தான் குதிரை வெற்றிகரமாகச் செயல்படமுடியும். ஓரத்தில் இருந்தால் அதை வீழ்த்துவது எளிது. சதுரங்கக் குதிரை நாவலின் மையப் பாத்திரமும் சதுரங்கப் பலகையின் இயக்கம் அதிகம் உள்ள மையத்தில் வைக்கப்படாததால் விளிம்புகளில் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சதுரங்கக் காய்தான். பலவகைகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் எதுவுமே அதிகத் தாக்கத்தைத் தராத செயல்பாடுகள். மும்பாய் வந்து பல ஆண்டுகளாக இருந்து அங்கேயே நிலைத்துவிட்ட, கிராமத்தில் நெருங்கிய பாசமுள்ள உறவினர்கள் என்று கூறிக்கொள்ள ஒருவரும் இல்லாத, திருமணமாகாத, நாற்பத்தைந்து வயதான, எந்தக் குறிப்பிட்ட இலக்கும் இல்லாத, எதிலும் ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும், அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் முற்றிலும் அந்நியப்பட்டுப்போன ஒரு நபரின் கதை.

சுற்றிலும் உள்ள பல ஆண்களை அவரவர் தறுவாயில் வைத்து அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் புரிந்துகொள்ளும் இந்த மையப் பாத்திரத்துக்கு அடிமனத்தில் சில கசப்புகள் மட்டும் தீராமலே இருக்கின்றன. அதில் முக்கியமானது பெண்கள் குறித்த சில அபிப்பிராயங்களும் இன்னும் பொதுவான சில முற்சாய்வுகளும். ஒரு தெருவின் சதுக்கத்தில் இருபத்திரண்டு ஆண்டுகளாய் கையில் பூண்கட்டிய பிரம்பும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய், வயதாகிவிட்டதால் தற்போதுள்ள வழுக்கைத் தலையுடன், “ஓம் க்ரீம் ரீம்” என்று பிரார்த்தித்தபடி உலாத்திக்கொண்டு இருப்பவரை அடி வயிற்றுக்குக் கீழே குத்து விடத் தோன்றுகிறது நாராயணனுக்கு ஆரம்ப காலத்தில். மிடுக்குக் குலைந்து, குரல் க்ஷீணித்துவிட்ட அவரிடம் பிறகு அனுதாபம் பிறந்தாலும் மனத்தில் அவரைப் பற்றிய கேள்விகள்: அவர் யார், திருமணவானவரா தனியரா, மழை பொழிந்தால் எங்கு போய் இந்த ஓங்காரம் செய்வார் போன்ற சாதாரணக் கேள்விகள் மட்டுமல்ல; அவர் பூணூல் மாற்றிக்கொள்கிறாரா என்ற கேள்வியும் கூடத்தான். (பக்கம் 2) அந்த விவரம் நாராயணனுக்கு ஏன் அவசியமாகப் படுகிறது என்பதற்கு எந்த விளக்கமுமில்லை. அதேபோல் ஔரங்காபாதில் ஒரு மிகச் சாதாரண ஓட்டல் ஒன்றில் கழிப்பறைகளுக்கு அடுத்து இருந்த அறையில் இரவைக் கழிக்கும்போது, கழிப்பறையிலிருந்து நாற்றம் அறையை எட்டுகிறது. அதை “வீர மராத்தியரின் மூத்திர வாடை” (பக்கம் 178) என்று நாராயணன் நினைக்கிறான். வீரத் தமிழர்களின் மூத்திரத்தில் பன்னீர் மணமா வீசுகிறது? நாஞ்சில்நாடனின் வழக்கமான ரசிக்கக்கூடிய எள்ளல் தொனியை இங்கு ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.

வேலை செய்யும், வேறு மாதிரி உடை உடுக்கும் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிக்காது என்பது இந்த நாவலிலும் உறுதியாகிறது. நாராயணன் வேலை செய்யும் கம்பனியில் டெலிஃபோன் ஆபரேட்டராக இருப்பவள் ஜாய்ஸ். ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி. அலுவலகத்துகு வந்ததும் அவள் பாத்ரூம் நோக்கிப் போவாள். “ஒன்றுக்குப் போவாளாக இருக்கும்” என்று நினைப்பான் நாராயணன். (பக்கம் 7) ஒரு பெண் பாத்ரூமை நோக்கிப் போவது வேறு எதற்காக இருக்க முடியும்? மேலும் அது என்ன அப்படிப் பெரிய குற்றமா என்ன? அது எல்லாம் இல்லை. அவள் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. ஐம்பத்தேழு வயதிலும் ஃபிராக் போடுபவள். அது மட்டுமல்ல. இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப்போகும் பான்வாலாவுடன் உற்சாகமாகச் சினிமா பார்ப்பவள். நாராயணனால் எப்படி அவள் பாத்ரூம் நோக்கிப் போவதைக் குறித்துக் கீழ்த்தரமாக நினைக்காமல் இருக்க முடியும்? ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்ற முன்தீர்மானங்கள் உள்ள நபராயிற்றே அவன்?

எட்டுத் திக்கும் மதயானை வெகுவாகப் பாராட்டப்பட்ட நாவல். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல விருதுகளைப் பெற்ற நாவல். ஆனால் அது வியாபார சினிமாவின் சினிமாத்தனம் உள்ள ஒரு திரைக்கதையாகவே எனக்குப் பட்டது. மையப் பாத்திரமான பூலிங்கம் கல்லூரிப் படிப்பை முடிக்காத, எந்தவித அதிகச் சிறப்புகளும் இல்லாத ஓர் இளைஞன். எதிர்மறை கதாநாயகனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உள்ளவன். பலவித நாடகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் அவன் வாழ்க்கை ஓடுகிறது. மும்பாயின் கடத்தல் கும்பலுடன் வாழ்க்கை நிலைக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு நாயகன். பிறகு எந்தப் பெண்ணுக்காக அவன் காரணமின்றி அடிபட்டானோ அதே பெண் ஆண்மை இல்லாத கணவனுடன் அவனைச் சந்தித்துப் பின் அவன் அவளை மீட்டுத் தன்னுடன் வாழ அழைத்துப் போவதுடன் முடிகிறது. பூலிங்கம் ஓடும் எல்லா இடங்களிலும் அவனுக்குப் பெண் துணை கிடைக்கிறது. உணவிடுபவர்கள் கிடைக்கிறார்கள். ஒரு வயதான, தார்ப்பாய்ச்சி கட்டிய பெண்மணி அவனுக்கு உணவிடும்போது அவள் கிழட்டு எல்லம்மன் போலத் தெரிகிறாள். “உலகத்துக்கு அமுது படைத்துக் களைத்த கிராமத்துத் தேவதையின் மூப்புக் கனன்ற முகம்” அவளுக்கு. (பக்கம் 91) நல்ல வேளை அவள் ஃபிராக் போட்ட ஆங்கிலோ இந்தியப் பெண்மணி இல்லை.

பூலிங்கத்துக்கு இடையிடையே தமிழ் இலக்கிய மேற்கோள்கள் தோன்றியபடி இருக்கின்றன. அவனிடம் அன்பு காட்டும் கோமதி என்ற பெண் சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும்போது ”முந்தை இருந்து நட்டார் கொடுப்பின் நஞ்சும் உண்பார்” என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.(பக்கம் 116) பின்னொரு கட்டத்தில் அவள் கண்களில் நீர் மல்கும்போது, “புரந்தார் கண் நீர்மல்க” என்ற வரிகள் மனத்தில் வருகின்றன.(பக்கம் 122) இரண்டுமே நல்ல வரிகள்தாம். ஆனால் பூலிங்கத்துக்கு அத்தகைய வரிகள் நினைவுக்கு வருவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் கதையில் இல்லை.

பூலிங்கமே பட்டினியாக இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வருவான். இப்போது எந்த இலக்கிய வரிகளும் பூலிங்கத்துக்கு நினைவுக்கு வராது. ஆனால் ஒரு கொச்சையான பழமொழி அடிநாக்கில் உறுத்தும். “பெருமாள் முஷ்டியில் முயக்கம் செய்தாராம். பூசாரி பெண்குறி வரம் கேட்டாராம்.” (பக்கம் 138) இரண்டு நாட்கள் பட்டினியாக இருக்கும்போது கூட இத்தகைய பழமொழிகள்தாம் நினைவுக்கு வரும் போலும். அலைக்கழிக்கப்படும், விரட்டப்படும் ஒருவனுக்கு யோக்கியமாக இருப்பது குறித்து சிந்தனை எழும். கூடவே தோன்றும் இன்னொரு பழமொழி: “பத்தினிப் பெண்குறி பிரதேசம் போயிற்றாம். ஐம்பத்தாறு தேசத்து ஆண் குறிகளும் எதிர் நின்று அழைத்தனவாம்.” (பக்கம் 158)

கும்பமுனிக் கதைகளையும் மேற்கூறிய சில நோக்குப் பிறழ்வுகளையும் நான் ஏற்காது போனாலும் நாஞ்சில்நாடனின் எழுத்தை நான் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். அவர் கதை உலகம் பரந்த ஆணுலகம் ஒன்றை விரிப்பது. இதில் மனத்தைத் தொடும் பல பெண்களும் உண்டு. கிராமத்திலிருந்து நகரம் வரை இதில் வரும் பலதரப்பட்ட ஆண்கள் உருவச் சித்திரங்கள் போல் உருவாக்கப்படுகிறார்கள். தத்ரூபமான உருவச் சித்திரங்கள். கிராமத்துப் பெண்களின் உருவச் சித்திரங்களும் அவ்வாறே உள்ளன. ஆனால் நகர்ப்புறப் பெண்களை உருவாக்கும்போது இந்தச் சித்திரங்களின் கோடுகள் கோணலாகிவிடுகின்றன. நாஞ்சில்நாடனின் எழுத்து அற்புதமான கிராமம், அற்பமான நகரம் என்ற இருமைகளை உருவாக்காமல் இருப்பதுதான் இவர் எழுத்தின் ஈர்ப்பு. மிகவும் எளிமையாக்கப்பட்ட முறையில் வாழ்க்கையை எழுதாமல் சிக்கல்களாகவே முறுக்கப்பட்ட மனித வாழ்க்கையின் ஊடே புகுந்து அதில் உள்ள நயங்களையும் கொச்சைத்தன்மைகளையும் கூறக்கூடிய வெகு சில எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில்நாடன்.

தன் எழுத்துக்கு சரியான அங்கீகாரம் கிட்டவில்லை என்ற குறை நாஞ்சில் நாடனுக்கு இருந்தது. பொதுச்சொத்து என்பதால் படைப்பு மரியாதை இழந்துபோகிறது என்கிறார் எட்டுத் திக்கும் மதயானையின் முன்னுரையில். ”அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவளமணிப் பூண்கள், பரிவட்டம்…” என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்வுக்கு பல எழுத்தாளர்களுடன் நானும் போனபோது நாஞ்சில்நாடனும் வந்திருந்தார். அங்கு பேசியபோதும் தனக்கு சாகித்திய அகாடமி விருது தராதது குறித்து கோபமாகவும் எள்ளலாகவும் பேசினார். தற்சமயம் அவருக்கு அந்த விருதும் வந்துவிட்டது. வேறு பல அங்கீகாரங்களும் வந்துவிட்டன. தமிழ் சினிமா உலகில் அவர் எழுத்தும் உழைப்பும் இனி வெகுவாகப் பயன்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். அது இன்னும் ஓர் உற்சாகமான கட்டமாக அமையலாம் அவரைப் பொறுத்தவரை.

நாஞ்சில்நாடன் மும்பாயில் இருந்தபோது என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்தார். சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறினேன். அன்றைக்கு பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் மொளகூட்டல் என்று கூறும் கூட்டு மாத்திரம்தான் சமைத்திருந்தேன். தேங்காய் இல்லாததால் பொடி போட்டுச் செய்திருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் “நல்லா இருந்ததா?” என்று கேட்டேன். “இது என்ன சொன்னீங்க? கூட்டா? இது பிடிக்கலை” என்றார். “அப்புறம்?” என்றேன். கூட்டு மட்டும்தான் செய்திருந்ததால் என்ன சொல்வது என்று தெரியாமல், “தயிர் நல்லா இருந்தது” என்றார். மனத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் அந்த வெள்ளந்தியான நாஞ்சில்நாடனை, நான் வெகு பத்திரமாக என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன் அவர் எப்போதாவது தேடினால் திருப்பித் தர.

 

‘குரு’ முனி!

தமிழ்மகன்

nanjil_nadan_spl_issueதீதும் நன்றும், நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை, சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர்.

தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த ஆச்சர்யம் உண்டு. ஒவ்வொரு கதையிலும் தொனிக்கும் அறச் சீற்றம் அவற்றைப் படிக்கும் எனக்குள்ளும் அந்தச் சீற்றத்தை உருவாக்கும். ஒரு எழுத்தின் ஆகச் சிறந்த பாதிப்பு அதுவாகத்தானே இருக்க முடியும்?

அந்தக் கோபாவேசம்தான் அவர். அதனாலேயே சொல்ல வருகிற எதையும் உள்ளது உள்ளபடி தெள்ளத் தெளிவாகத் தன் படைப்புகளில் சொல்கிறார். கதையின் முடிவை… கதைக்கான  தீர்வை ஆசிரியன் சொல்ல வேண்டியது இல்லை என ஓர் இலக்கிய போக்கு உண்டு. தீர்வைச் சொல்லாமல் மழுப்புவது என்ன இலக்கியம் என்ற இன்னொரு போக்கும்கூட உண்டு. சோப்பு அழுக்கைப் போக்குவதற்கா, சோப்பு சோப்புக்காகவா என்றெல்லாம் பேசி ஓய்ந்தாகிவிட்டது. அந்த சோப்பு போடுகிற வேலை எல்லாம் நாஞ்சில் நாடனிடம் இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு வகை இவருடைய எழுத்து.

நாஞ்சில் நாடன் எழுத்துகளில் கிட்டத் தட்ட தீர்வு நெருங்கிவந்துவிடும். இன்னும் ஒரு வரி சொன்னால், ‘ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்றோ ‘ஆகவே நேர்மையாக இருக்க வேண்டும்’ என்றோ சொல்ல வேண்டிய வரி ஒன்று இருக்கும். அந்த இடம் வந்ததும் நாஞ்சில் நாடன் தன் படைப்பின் கடைசி வரியை மிச்சம் பிடிப்பார். ஒளிவு மறைவு இல்லாத இலக்கியம் என்று இவருடைய எழுத்துக்களைச் சொல்வேன். தலைகீழ் விகிதங்களாகட்டும், மிதவை ஆகட்டும் வாழ்வை அப்பட்டமாக எடுத்து நம் கண் முன் வைப்பவை. அதில் நாஞ்சிலாருக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.

அவருடைய கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் கரு ஒன்றுதான். உணவைப் பற்றி எழுதினாலும் ஒழுக்கத்தைப் பற்றி எழுதினாலும் ஏதோ ஒரு புள்ளியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ உருமாறும். இரண்டுக்குமே அவர் முதலில் பழந்தமிழ் இலக்கியத் தரவுகளை தயார் செய்கிறார். சமூக ஆய்வுகள் தரும் விளக்கங்களைத் தருகிறார். கதையோ, கட்டுரையோ இரண்டுக்குமே அவர் ஈடுபாடுகாட்டும் செய்நேர்த்தி அல்லது செய் பாணி எனக்கு ஒன்றுபோலவே இருக்கும்.

ஒரு படைப்பின் வகை எப்படி எந்த இடத்தில் திசை மாறுகிறது என்பது அசாத்தியமானது. அவர் ஓட்டுப் பொறுக்கிகளைப் பற்றி எழுதினால் கட்டுரை, ஓட்டுப் போட வேண்டிய ஒருவனின் பெயரில் ஏற்படும் குழப்பத்தை நுட்பமாக படம்பிடிக்கும்போது அது தரமான சிறுகதை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)ஆகிறது. அவர் நாஞ்சில் நாட்டு உணவு பற்றி எழுதினால் கட்டுரை. அதை (இடலாக்குடி ராசா) ஆக்குவது அவருடைய எழுத்தின் ஜாலம்.

ஒரு சில பால் பாயின்ட் பேனா இரண்டு நிறங்களில் எழுதும். அதன் தலையை ஒரு முறை அழுத்தினால் அது நீல நிறத்தில் எழுதும். இன்னொரு முறை அழுத்தினால் சிவப்பு நிறத்தில் எழுதும். அப்படி ஏதோ ஒரு ஜாலம்தான் எனக்கு நாஞ்சில் நாடன் எழுத்துகளில் தெரிகிறது.

அரசியல், இலக்கியம் சினிமா என பல துறைகளிலும் அவருடைய அறிவு தனித்துவப் பார்வையுடன் இருக்கும்.

எனக்கு அவரை அவருடைய ‘மிதவை’ முதல் பதிப்பு வந்த நாளில் இருந்து தெரியும். அவருக்கு என்னை நான் எழுதிய ‘வெட்டுப்புலி’யில் இருந்து தெரியும்.

என் நாவலை அவர் சென்னை புத்தகச் சந்தையில் வாங்கியதாகச் சொன்னார். அதைப் படித்துவிட்டு, உயிர்மை பதிப்பகத்தில் என்னுடைய எண்ணைப் பெற்று என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். உயிர்மையில் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். நானே அவரிடம் பேசினேன். மிகவும் மகிழ்ந்தார். சில நிமிடங்கள்தான் பேசினார் என்றாலும் எனக்கு கல்வெட்டு போல பதிந்தது. ‘இது பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய கதை என்பதால் அன்று புத்தகச் சந்தையில் நான் வாங்கிய நூல்களில் கடைசியாகத்தான் இதைப் படித்தேன். மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. நான் நூல்களை படித்தவுடன் யாருக்காவது படிக்கக் கொடுத்துவிடுவேன். சில நூல்களை மட்டும் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். வெட்டுப்புலி அத்தகைய நூல்களில் ஒன்று.’

அன்றுதான் நான் இலக்கிய ஏணியில் அடுத்தப்படியில் ஏறியதாக நினைத்தேன். நான் மிகவும் நேசிக்கும் ஓர் எழுத்தாளர் என்னை யார் என்றே அறிமுகம் இல்லாமல் என் நூலை வாங்கி வாசித்திருக்கிறார் என்ற பெருமை சூழ்ந்தது. உடனே இன்னொரு நாவலை எழுத வேண்டும் என்று ஆவேசம் ஏற்படுத்தும் பாராட்டு அது. இளம் எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்துப் பாராட்டும் அவருடைய குணம், பாராட்டுக்குரியது.

நான் எந்த எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்த்தவன் இல்லை. நான் பணியாற்றும் பத்திரிகைகளுக்காக ஏற்பட்ட பழக்கம்தான் பெரும்பாலும். ஏனோ… அப்படி ஒரு தயக்கம். தினமணியில் பணியாற்றும்போது சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா, ஜெயமோகன், கோபி கிருஷ்ணன் என பலர் வருவார்கள். ஒரு வணக்கம் சொல்வதோடு என் அறிமுகம் நின்றுவிடும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது எனத் தோன்றும். பேசுவதன் மூலம் நம்முடைய அறியாமையை வெளிப்படுத்திவிடுவோமோ என நினைப்பேன். பேசுவதன் மூலம் நமக்கு அவர்களைப் பிடிக்காமல் போய்விடுமோ எனவும்கூட நினைத்ததுண்டு. அது வாத்தியாரிடம் பையன் காட்டும் வினோதமான அச்ச உணர்வுதான்.

ஓர் இலக்கிய விழாவுக்காக நாகர்கோவில் சென்றிருந்தபோது ஜெயமோகனைச் சந்திக்கச் சென்றதுதான் என் சுய முயற்சியினால் நடந்தது. அந்தச் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் தமிழ் வளர்த்த பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னார். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆக, நாஞ்சில் நாடனுடன் நானும் அதற்கு மேல் பெரிதாக எதுவும் பேசியதில்லை. விகடன் மாணவர் பயிற்சி திட்டத்துக்காக, மாணவர்களிடம் பேசுவதற்கு அவரை அழைக்கச் சொன்னார்கள். அழைத்தேன். அந்தப் பொறுப்பை ஏற்று செய்யும்போது அவர் வர வேண்டிய தேதி, ரயில் டிக்கெட், தங்கும் அறை சம்பந்தமாகப் பேசினேன்.

ஏனோ அந்தக் குறுமுனி தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து பிடிசாபம் எனச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம் இருக்கிறது. எழுத்துலகில் எனக்கு யாரும் குரு இல்லை… அப்படி யாரையாவது அடையாளம் காட்ட வேண்டுமானால் இவரையும் சேர்த்து 100 பேரையாவது காட்ட வேண்டியிருக்கும்.

என்னுடைய அந்த 100 வாத்தியார்களுக்குமே நான் அவர்களின் சீடன் எனத் தெரியாது.