எழுத்துச் சித்தர்கள்

பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம்

அ முத்துலிங்கம்

அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் Gone with the Wind புத்தகம். அதை எழுதியவரின் பெயர் மார்கிரட் மிச்செல். இந்தப் புத்தகத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. இதைப் படமாக்கியபோது பல ஒஸ்கார் விருதுகளையும் அள்ளியது. கேள்வி என்ன வென்றால் அவருடைய கணவர் அன்று வெறுத்துப்போய் சொல்லியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எங்களுக்கு படிக்கக் கிடைத்திருக்குமா? அது அதற்கு ஒரு நேரம் இருக்கிறது.

நான் பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஏன் எழுதினேன் என்று இப்பொழுது நினைத்தால் தெளிவான பதில் கிடையாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்படி ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. கேள்வி இதுதான். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப் புத்தகங்கள். நான் எங்கள் வீட்டில் ஐந்தாவது பிள்ளை. நாலு பேர் படித்து முடித்த பின்னர் என் முறை வரும்போது பாடப்புத்தகம் எனக்கு வந்து சேரும். அநேகமாக முன் அட்டையோ கடைசி பக்கமோ இருக்காது. நான் படித்து முடிந்த பின்னர் அது என் தம்பியிடம் போகும். நான் படித்த பத்திரிகைகள், நாவல்கள் எல்லாமே இரவல் வாங்கியவைதான். 1964ம் ஆண்டு அருமை நண்பர் செ.கணேசலிங்கன் என் சிறுகதைகளை புத்தகமாகப் பதிப்பித்தார். அதன் தலைப்பு ’அக்கா’. அதுதான் நான் முதல் சொந்தம் கொண்டாடிய புத்தகம். மார்கிரெட் மிச்செல் போல நான் சொந்தமாக்குவதற்கு நானே ஒரு புத்தகம் எழுதவேண்டி நேர்ந்தது.

அந்தப் புத்தகத்துக்கு நான் வெளியீட்டு விழா வைக்கவில்லை. அதற்குப் பின்னர் எழுதிய 21 புத்தகங்களுக்கும் கூட ஒருவித விழாவும் நான் ஏற்பாடு செய்தது கிடையாது. சில நண்பர்கள் கேட்பார்கள் ’உன்னுடைய புத்தகம் ஒன்று வெளிவந்துவிட்டதாமே. எனக்கு ஒரு புத்தகமும் நீ தரவில்லையே’ என்று. அந்த நண்பர் நல்ல வசதியானவராகத்தான் இருப்பார். ஆனால் நான் இலவசமாக ஒரு புத்தகம் அவருக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பார்.

தமிழில் எழுதுபவர்களில் முழு நேர எழுத்தாளர்கள் வெகு குறைவு. அநேகமானோர் வசதி இல்லாதவர்கள். அப்படியிருந்தும் வருமானத்துக்காகத் தமிழில் எழுதுபவர்கள் கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. தமிழில் எழுதினால் காசு காணமுடியாது என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். அதுதான் சிறுவயதில் இருந்தே நான் என்ன படிக்கிறேன் என்பதை என் பெற்றோர் கண்காணித்தார்கள். எதிர்காலத்தில் நான் எழுத்தாளனாக வந்து சிரமப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவல் நாவல்களை ஒளித்து வைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரொறொன்ரோவில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை எனக்குத்தெரியும். பெற்றோரின் புத்திமதியை ஏற்காமல் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். அவர் சொல்லுவார் தன்னுடைய வருடாந்த வருமானம் 24,000 டொலர்கள் என்று. அதாவது கடைநிலையில் உள்ள தினக்கூலிக்கு கனடாவில் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இது குறைவுதான்.

எழுத்தாளரின் ஏழ்மை நிலையைச் சொல்ல ரொறொன்ரோவில் ஒரு கதை உண்டு. ஓர் எழுத்தாளரின் மகன் உதவாக்கரை. எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றார். ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார். ’நீ இப்படியே இருந்தால் நான் உனக்கு ஒரு சதமும் விட்டுப் போகமாட்டேன்.’ அப்போது மகன் கேட்டான், ’அப்பா, அந்த ஒரு சதத்தை நீங்கள் யாரிடம் கடன் வாங்குவீர்கள்?’

எழுத்தாளர் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. படைப்பின்பம். ஒரு படைப்பின் எல்லையை அடைந்து அது பூரணமாகும்போது கிடைக்கும் இன்பம் பற்றி படைப்பாளிகளுக்குத் தெரியும். அதற்கு ஈடு இணையில்லை. ஓர் ஓவியர் ஓவியம் வரைந்து முடிந்ததும் இந்த ஓவியம் எனக்குள் இருந்தா வெளியே வந்தது என்று வியப்படைகிறார். ஒரு சிற்பியின் மனநிலையும் அதுதான். சிற்பம் பூர்த்தியடையும்போது அவரடையும் பரவசம் சொல்லிமுடியாது. உலகத்தில் முன்பு இல்லாத ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சி அதியுன்னதமான ஒரு நிலையில் பிறக்கிறது.

ஒன்பதாவது இசைக்கோவையை படைத்தபோது பீதோவனுக்கு செவிப்புலன் போய்விட்டது. அவர் இசைக் குறிப்புகளை எழுதியபோது இசை அவருக்குள் கற்பனையில் உருவானது. இறுதியில் இசைக் கோவையை எழுதி முடித்ததும் வியன்னா இசையரங்கத்தில் வாத்தியக் குழுவினால் இசைக்கப்பட்டது. இசை முடிந்ததும் சபையோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். பீதோவனால் தன்னுடைய இசைய மட்டுமல்ல அதை அனுபவித்த மக்களின் கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் கூடக் கேட்கமுடியவில்லை. பீதோவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் இவர் தோளைத் தொட்டு சபையோரை சுட்டிக்காண்பித்தார். அப்போதுதான் பீதோவனால் மக்களின் வரவேற்பை உணரமுடிந்தது. அந்தக் கணம் அந்த இசையைச் சிருட்டித்த பெருந்தகையின் மனம் எத்தனைக் குதூகலத்தை அனுபவித்திருக்கும்.

400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ தானாகவே இரவு பகலாக தேய்த்துத் தேய்த்து உண்டாக்கிய தூரக் கண்ணாடியை வானை நோக்கித் திருப்பினார். வியாழன் கிரகத்தை முதன்முதலாக தூரக் கண்ணாடியால் நோக்கியபோது ஓர் அதிசயத்தைக் கண்டார். வியாழன் கிரகத்தைச் சுற்றி நாலு சந்திரன்கள் சுழன்றன. அவருக்கு கைகள் நடுங்கின. கண்களில் நீர் கோர்த்தது. இந்தப் பூமியில் இதற்கு முன்னர் ஒருவருமே காணாத காட்சி அது. அவர் முதன்முதலாக அந்த அதிசயத்தைக் காண்கிறார். அவரால் அந்தப் பரவசத்தை தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளர் ஒன்றைப் புதிதாக படைப்பதும், ஒரு விஞ்ஞானி புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பதும் ஒன்றுதான். பரவசம் ஒன்றேதான்.

பாராட்டுகள் எழுத்தாளருக்கு உந்து சக்தி. சேக்ஸ்பியரை விமர்சித்தவர்கள் பலர் ஆனால் அவர் கவலைப்படவே இல்லை. பாராட்டுகள் அவரை முன்னே செலுத்தின. அழியாத கவிதைகளையும் நாடகங்களையும் உலகுக்குத் தந்தார். விமர்சகர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ’எந்த ஊரிலாவது விமர்சகருக்குச் சிலை வைத்திருக்கிறார்களா?’ உலகம் கொண்டாடுவது எழுத்தாளரைத்தான். விமர்சகரை அல்ல.

சமீபத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பாராட்டுகள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதவை. எழுதும்போது ஓர் எழுத்தாளர் சந்திக்கும் இடர்களும் முட்டுக்கட்டைகளும் பாராட்டுக் கிடைக்கும்போது மறைந்துபோய் அடுத்த எழுத்துக்கு உற்சாகம் கூட்டுகிறது.

84 வயதைத் தாண்டிவிட்ட ஒரு முதிய எழுத்தாளரைச் சமீபத்தில் தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். அவருடன் எனக்கு முந்திபிந்தி எழுத்து தொடர்பு இருந்தது கிடையாது. நேரில் சந்தித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார். பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மதிப்புமிக்க விருதுகள் பல பெற்றவர். அவர் நான் என்ன விசயமாக அவரை அழைத்தேன் என்று கேட்கவே இல்லை. மூச்சு விடாமல் பேசினார். ’நீங்கள் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் எல்லாவற்றையும் அவற்றின் படங்களுடன் சேர்த்துக் கத்தரித்து வைத்திருக்கிறேன். பைண்ட் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இப்படி ஒரு பாராட்டா? அது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும்.

அடுத்த சம்பவம் ஓர் அதிகாலையில் நடந்தது. அதுவும் சமீபத்தில்தான். யாழ்ப்பாணத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். யார் என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனக்கு அவரிடம் ஒரு வித பழக்கமும் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டேன். ’ஐயா, நான் உங்கள் வாசகன். இப்பொழுதுதான் பூசா சிறையில் நாலு வருடம் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறேன். பூசா சிறையிலேதான் உங்கள் புத்தகத்தை முதலில் படித்தேன். படித்துவிட்டு என் நண்பனுடன் தினமும் கதைகளைப் பற்றி விவாதிப்பேன் என்றார். புத்தகத்தின் தலைப்பு தெரியுமா என்றபோது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் இருந்த அத்தனை சிறுகதைகளையும் வரிசையாகச் சொன்னார். சில வசனங்களை அப்படியே ஒப்பித்தார். ’சிறையிலே கிடைத்த இந்தப் புத்தகத்தை நான் திருடி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்து யாரோ களவாடிவிட்டார்கள். சிறைக்குள்ளே இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆனால் வெளியே ஒரு புத்தகக் கடையிலும் இல்லை. எங்கே வாங்கலாம்?” இதுதான் கேள்வி. இவர் சொன்னதைக் கேட்டு நான் மகிழ்வதா அல்லது துக்கப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவருடைய பாராட்டு என் மனதுக்குள் இன்றும் பொங்கியபடி இருக்கிறது.

பாராட்டுகள் முக்கியம்தான் ஆனால் அவை மட்டும் ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து எழுத வைக்கிறதா? நீ இனி எழுதத் தேவை இல்லை என்று சொன்னால் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிடுவாரா? அவர் எதற்காக முதலில் எழுதத் தொடங்கினாரோ அந்தக் காரணம் இறுதிவரை அவர் பின்னாலேயே இருக்கும். ஏதோ ஓர் உந்துதல் அவரை முதலில் எழுதத் தூண்டியது. அது இறுதிவரை மறைவதே இல்லை. அதுவே அவரை எழுதவைக்கிறது.

ஐஸாக் அசிமோவ் என்ற அறிவியல் எழுத்தாளர் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி, உலகப் புகழ்பெற்றவர். தன்னுடைய கடைசி கதையைத் தட்டச்சு மெசினில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போதே அதன் மீது தலை கவிழ்ந்து இறந்து போனார். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ’கிழவனும் கடலும்’ நாவலை எழுதியவர், ஒரு வசனத்துக்காகக் காத்திருந்தார். அது வரவே இல்லை. விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்துபோனார். எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸை யாரோ கேட்டார்கள் ’ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் இடக்காகப் பதில் சொன்னார். ‘அடுத்த 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’

நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அவர் பிரதம பேச்சாளர். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அவர் திடீரென்று ‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்தார். சபையோர் திகைத்துவிட்டனர். எதற்காக இந்த அறிவிப்பு. ஓர் எழுத்தாளரால் எழுதாமல் இருக்க முடியுமா? அதைச் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவருடைய புத்தகம் ஒன்று வெளிவந்தது. பின்னர் ஒருநாள் அவருடைய சிறுகதை நியூ யோர்க்கர் பத்திரிகையில் வந்து படித்தேன். இரண்டு வருடங்கள் கழிந்தன. அவருடைய இன்னொரு புத்தகம் வெளிவந்தது. அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது. ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால் , ‘எழுதுவதை நிறுத்த முடியாது, அதுதான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று பதில் சொல்லத் தோன்றுகிறது.

எழுத்தாளர் வேலை எழுதுவதுதான். தச்சு வேலைக்காரருக்குச் சம்பளம் கிடைக்கும். வர்ணம் பூசுகிறவருக்கு கூலி கிடைக்கும். ஆனால் எழுத்தாளர் எழுதுவார். சம்பளம் எதிர்பார்க்கமாட்டார். அவரால் எழுதுவதைச் செய்யாமல் இருக்கவும் முடியாது. எழுதும்பொழுதுதான் அவர் பிறந்ததன் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது.

அவர் தன் புத்தகங்களை வெளியிடத் தேவையில்லை. வீடு வீடாகப் போய் விற்க வேண்டியதில்லை. நாடு நாடாகப் புத்தங்களை அனுப்பத் தேவையில்லை. வண்ணத்துப்பூச்சி தேடித்தேடி பூக்களைக் கண்டு பிடிப்பதுபோல வாசகர் தேடித்தேடி எழுத்தாளரை எப்படியோ அடையாளம் கண்டுவிடுவார். பூக்கள் பறப்பதில்லை.

oOo

(இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.  அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.)

இருமொழிக் கவிதைகள் 1- ஒரு இடையன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்) –

goat-herd

ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று.

௦௦௦

One goatherd
Ten twelve goats
One goatherd
Ten twelve goats
But
Countless pails
Countless rainfalls
Countless turbans
Countless winds
Countless herding crooks
Countless days
One goatherd
Ten twelve goats
Beside a railway gate
Wondering when the hell it would open.

000

ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவம் கொண்ட கவிதை இது.  துவக்கத்தையும் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் முடிவையும் இடையில் உள்ள பகுதி இணைத்து சிறுகதைக்கு ஒருமையும் வடிவமும் தருகிறது. இணைப்பாக மட்டும் இயங்காமல் இடைப்பகுதிகள் துவக்கமும் முடிவும் கூடும் புள்ளியாகி சிறுகதைக்கு செறிவும் ஆழமும் சேர்கிறது, நல்ல ஒரு சிறுகதையில் சொற்திரள் கூடி இறுக்கமான ஒரு பொருள் தருவதுபோல் இந்தக் கவிதையும், தனக்கேயுரிய மொழியில், எதிரொலிப்புகளின் மூலம் இதைச் சாதிக்கிறது.

இங்கு “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்பது மும்முறையும், “எண்ணிலிறந்த” என்ற சொல் ஆறு முறையும் வருகின்றன. “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்று மீண்டும் மீண்டும் ஒலிப்பது இந்தக் கணம் தொடர்ந்து நிகழ்வதைச் சுட்டுகிறது.. அதை, “ரயில்வே கேட் அருகில்/ எப்படா திறக்குமென்று” என்ற சொற்கள் நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு இடையில்தான் எண்ணிலிறந்த விஷயங்கள் வருகின்றன- ஒலியளவில் அவை ஒற்றைக் காட்சிகளால் நிறைவு செய்யப்படுகின்றன- எண்ணிலிறந்த – தூக்குவாளிகள், மழைகள், தலைப்பாகைகள், காற்றுகள், தொரட்டிகள், பகல்கள். எண்ணிலறந்த எனிலும் மீண்டும் மீண்டும் அச்சொல் ஒலிப்பதில் அத்தனை தூக்குவாளிகளும் மழைகளும் தலைப்பாகைகளும் காற்றுகளும் தொரட்டிகளும் பகல்களும் ஒன்றேயாகி ரயில்வே கேட்டின் இக்கணத்தின் நிரந்தரமாய் நிற்கின்றன. இங்கு, சிறு கற்பனைத் தாவலில் நாம் ஒரு சிறுகதை போல் துவக்கமும் முடிவும் நெருங்கி இணைந்து விடுவதைப் பார்க்கிறோம்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரு எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தூக்கு வாளிகள், தலைப் பாகைகள்- இரு சொற்கள் என்றாலும், ஒரு பொருளைச் சுட்டுகின்றன. இந்தக் கவிதையில் உள்ள எண்ணிலிறந்தவை அனைத்தும் வெவ்வேறு வஸ்துக்கள், விவரணைகளுக்கு அவசியமில்லாத புறப்பொருட்கள். இங்கு ஆங்கிலத்தில் தலைப்பாகைகள் என்பதை turbans என்றும் தொரட்டி என்பதை herding crooks என்றும் மொழிபெயர்க்க வேண்டியதாகிறது. ஆனால் தமிழ் வாசகர்கள் countless turbans என்ற இடத்தில் சீக்கியர்களையும் countless crooks என்ற இடத்தில் அரசியல்வாதிகளையும் காணும் சாத்தியத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. countless turbans என்ற இடத்தில் தலைப்பாகைகளை நினைத்துப் பார்த்தாலும் countless crooks என்பதை தொரட்டியாய் புரிந்து கொள்ள இடமில்லை என்று தோன்றுகிறது- எனவேதான் herding crooks என்ற விளக்கம் தேவைப்படுகிறது. countless days என்பதற்கும் countless summer days என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. countless days என்பதில் எல்லா நாட்களும் தொகுக்கப்பட்டு விடுகின்றன, ஆனால் countless summer days பிற பருவங்களை நினைத்துப் பார்க்கவும் இடம் கொடுக்கிறது.

மொழிபெயர்ப்பில் சாத்தியப்படாத விஷயம் அது என்றால் pails, rains, winds, days என்று எண்ணிலிறந்தவற்றை ஏறத்தாழ ஒற்றை அசைகளில் மொழிபெயர்க்க முடிந்தது ஒரு நல்ல விஷயம். கவிதையில் சொல்லப்படுவது போலவே இங்கு எண்ணிலிறந்தவை ஒருமையைச் சேர்கின்றனவல்லவா? அது பொருத்தம். உருமாற்றம் மொழியின் இயல்பு. மொழியாக்கம், நகலெடுக்கும் பணியல்ல என்பதால் சில திரிபுகளைத் தவிர்க்க முடியாது. அவை இழப்பா செறிவா என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும்.

இருமொழிக் கவிதைகள் 3- துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

washing-cloth

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

௦௦௦

Washing clothes
Sparrows chirping
More Washing
Sparrowless Silence
More laundry
Silence chirping

000

சங்கக் கவிதைகளை மொழிபெயர்ப்பது குறித்து ஏ.கே. ராமானுஜன் நிறைய எழுதியிருக்கிறார். இந்த நான்கு மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு மட்டுமே ஏ கே ராமானுஜன் பாணியைக் கையாண்டுள்ளது. ஏகேஆர் மொழியாக்கங்கள் குறித்து பல விமரிசனங்கள் இருக்கின்றன, அவற்றின் நியாயத்தையும் மறுக்க முடியாது. ஆனால் கவித்துவம் என்று பார்த்தால் இந்தக் கவிதையில் எது கவித்துவமோ அதை எந்த பொழிப்புரை பதவுரைக்கும் அவசியமில்லாமல் ஆங்கில மொழிபெயர்ப்பு சாதித்து விடுகிறது என்பது ராமானுஜன் பாணி, தமிழ்க் கவிதை மொழியாக்கங்களுக்கு ஏற்றதுதானோ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. அவ்வளவு ஏன், இந்தக் கவிதையின் தமிழ் வடிவில் உள்ள நீர்மை, கதைத்தல் ஆங்கிலத்தில் இல்லை. ஒரு தேர்ந்த ஹைக்கூ போல் நம்மைச் சப்தங்களின் மத்தியில் இருத்துகிறது. இது மொழியாக்கம் என்பது ஒரு செறிவாக்கமாகவும் இருக்கலாம் என்பதை நிருபிக்கும் கவிதை.

இருமொழிக் கவிதைகள் 2- கடைசியாக எப்பொழுது

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

last-time

கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும்போழுதும்
தூக்கும்போழுதும்
செல்லமகளைப்போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வானவெளியென நீ நுழைகையில்
அது
குதித்துக் கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங்கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை.

௦௦௦

When was
the last time
You drank water
When you touched it
and lifted it
Did it come to you
like your darling daughter
When you entered as if
You were the wide sky gliding
into water
Did you hear
It
Jump with joyful glee
Sitting handcuffed
in a bus
between policemen
That young convict
His eyes
are Caressing
The pot that’s closed
The water that’s left open.

௦௦௦

இந்தக் கவிதையின் பிரச்சினையான பகுதி, துவக்கத்தில் வரும் கேள்விகள். அவை யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன?
கவிஞர் கைதியை நோக்கிக் கேட்கிறாரா, அல்லது கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறாரா, அல்லது, அவை நமக்காக எழுப்பப்படும் கேள்விகளா? இந்த மூன்று விடைகளும் சாத்தியம் என்பதன் ambiguity மூன்று வெவ்வேறு உணர்வுகளை ஏககணத்தில் சாத்தியப்படுத்துகிறது. கைதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் என்றால் தாபம் குறித்த புரிந்துணர்வைப் பார்க்கிறோம், கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறார் என்றால், அங்கு ஒரு சுயவிசாரணையும், நமக்காக எழுப்பப்படும் கேள்விகளானால் அறிவுறுத்தலும் உண்டு. இதன்பின் வரும் உரைநடைத்தன்மை கொண்ட புறவிவரணையின் அழுத்தத்தில் இந்தக் கேள்விகள் ஒன்றுகூடிய உணர்வுகளாகின்றன- இறுதியில் “மூடிய பானையை/ மூடாத தண்ணீரை.” இந்த இரு வரிகளும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாய் அமைகின்றன.

பொதுக் கேள்விகள் என்றாலும் கவிதையின் தண்ணீர் பானை, அல்லது அது போன்ற ஒரு கொள்கலனுக்குரியது பானைத் தண்ணீரைக் குடிக்கிறோம், பானைத் தண்ணீரைதான் செல்ல மகளைப் போல் தொட்டுத் தூக்க முடியும். ஏன், பானைத் தண்ணீரில்தான், “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்/ அது குதித்துக் கும்மாளமிட்டதை நீ கேட்டாயா” என்ற கேள்விக்கு பொருள் கிட்டுகிறது- பானையில் உள்ள தண்ணீரில் பிரதிபலித்து ஆடும் ஒளியாகிறோம் நாம்.. இந்த, உயர்ந்த கவித்துவம் கொண்ட, புதிர்த்தன்மை மிக்க கேள்வியில்தான் இறுதி வரிகளின் ஆச்சரிய தாக்கத்தை உணர்கிறோம்- மூடிய பானையும் மூடாத தண்ணீரும் தத்துவம் சார்ந்து பொருட்படுகின்றன. மூடிய பானை கலன் எனில், மூடாத தண்ணீர் கொள்பொருள்- கொள்பொருளைக் கொள்கலனின் வடிவம் சிறைப்படுத்துவதில்லை. பானைத் தண்ணீரில் தோன்றும் சூரியன்களை சாங்கிய தத்துவம் பேசுவது இங்கு நினைவுக்கு வரலாம்.

“பஸ்ஸில்/ போலீஸ்காரர் நடுவே. கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்/ இளங்கைதி” புனைவுக்குரியவன், ஆனால் அவன் ஒரு குமாஸ்தாவாகவோ கணினி நிபுணனாகவோ வேறு யாராகவும் இல்லாமல் சிறைப்பட்ட கைதியாக இங்கு மூடிய பானையையும் மூடாத தண்ணீரையும் கண்களால் வருடிக் கொண்டிருப்பதில்தான் கவிதைக்குரியவன் ஆகிறான்- அவனது வேட்கை தண்ணீருக்கல்ல, விடுதலைக்கு என்று உணரும்போது மேற்கண்ட சாங்கிய தத்துவத்தின் சாயல் நம்மை வேறொரு, இதனினும் உயர்ந்த, விடுதலை வேட்கைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இது தத்துவக் கவிதை அல்ல. “அதைத் தொடும்போழுதும்/ தூக்கும்போழுதும்/ செல்லமகளைப்போல்/ கூட வந்ததா/”- என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி சிறைக்கைதியை ஒரு தகப்பனாக, அவனது தாபத்தை வெறும் விடுதலை வேட்கையாக அல்லாமல், தீண்டல், தழுவுதல், நுகர்தல் என்ற மானுட உறவுகளை நோக்கும் வேட்கையாக நிறுவுகிறது. செல்ல மகளைத் தொட்டுத் தூக்கும் ஏக்கத்தை இன்னும் தீவிரமான உணர்வாக நாம் அறிகிறோம். ஆனால், சாங்கிய விடுதலையின் எதிரொலிப்புக்கு கவிதை இடம் கொடுத்திருக்கிறது என்பதுதான் நோக்கத்தக்கது.

மொழியாக்கம் குறித்து ஒரு விஷயம்- “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது முதலில் “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டது.கிறித்தவ தொல்மறையில், மண்ணின் நீரையும் ஆகாயத்தின் நீரையும் பிரிக்கும் கூரைதான் firmament, Firmament தண்ணீரில் இறங்கும்போது ஆகாய நீரும் மண்ணின் நீரும் சேர்கின்றன. எல்லையற்ற விடுதலை என்று இதைக் கொள்ளலாம். கவிமொழியில் firmament என்பது ஆகாயத்தின் குறியீடாகவும் கையாளப்படுகிறது. மேலும் நாம் தண்ணீரில் இறங்கும்போது பருப்பொருளாகவே இறங்குகிறோம், ஒரு firmamentக்கு உரிய திடத்தன்மை நமக்கு இருக்கிறது, என்பதால் இந்த மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. ஆனால், இங்கு சாங்கிய தளையறுதலை காணும் சாத்தியங்கள் குறைவு, மாறாக தமிழறியாத ஒருவர் கிறித்தவம் சார்ந்த தளையறுதலைக் காண இயலும். இது சரியான தேர்வா இல்லையா, கவிதையின் சுட்டலுக்கும் கவிஞரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்கின்றதா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் ஒன்று சொல்லலாம். இந்த இரு சாத்தியங்களையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

மொழியாக்கம் என்பது மொழிபால் உள்ள காதலால் செய்யப்படுவது. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் எடையையும் இடத்தையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. மொழியாக்கத்தைவிட நெருக்கமான வாசிப்பு வேறொன்றில்லை. “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் “When you entered as if/ You were the wide sky gliding/ into water” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதை உணர்த்தும். உண்மையில், எந்தத் திரிபும் இல்லாதபோதும்கூட வெவ்வேறு சுட்டல்களால் இருவேறு மொழிதல்களை ஏககாலத்தில் நிகழ்த்தும் தன்மை மொழியாக்கங்களுக்கு எப்போதும் உண்டு, இரு மொழிகளையும் அறிந்தவனால் அதைத் தவிர்க்கவும் முடியாது. மொழியாக்கத்தின் இன்பமும் வாதையும் இதுதான்.

இருமொழிக் கவிதைகள் 4- ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

jellyfish

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே:
என் கண்களை நழுவ விடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக் கொள்வேன்
நாசியைப் பெற்றுக் கொள்வேன்.
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்:
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

௦௦௦

O Jellyfish Jellyfish:

I let my eyes slip away
I shed my ears
I get my nose to vanish
Now
I stand with what’s leftover
All mouth and stomach
I pregnantly inch towards the bottom of the sea
I move towards the seashore
and wait patiently for
the kids to show up in the evening
Rest me on their palms and scream
O Jellyfish Jellyfish
I would then get from them
a gift of :
Fingers,
Eyes and
Nose.
And also, also
I would begin to play :
O Jellyfish Jellyfish.

௦௦௦

கவிதை இங்கே ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்- “கரையோரம் வந்து/ காத்துக் கிடக்கிறேன். மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என/ என்னை உள்ளங்கையில் ஏந்தி/ ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என/”.  மாலைச் சிறுவர்கள் என்பதை தினமும் மாலைப் பொழுதில் வரும் சிறுவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிறுவர்கள் ஜெல்லி மீன் பிடித்து கையில் வைத்து விளையாடுவது வழக்கம் என்றும் அதைக் காணும் கவிஞர், சிறுவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்றும் சொல்ல இடமிருக்கிறது

இங்கிருந்து துவங்கி,. கவிதையின் முதல் பகுதியை வாசித்தால், ஜெல்லி மீனாகும் நோக்கத்தில் அவர் தன் அவயங்களை இழந்து ஆழ்கடலுக்குச் சென்று தனக்குரிய பூதத்தலத்தைக் கண்டுகொண்டவராய், கரையோரம் வந்து காத்து நிற்கிறார் என்று வாசிக்கிறோம். அதன்பின் அவரை உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்தும் மாலைச் சிறுவர்களில் ஒருவராகி கவிஞரும் ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துகிறார்.

இது எப்படி சாத்தியம்? ஜெல்லி மீன் என்றால் அவர் ஜெல்லி மீனாகவே மாறுவதில்லை. தன்னிழப்பு ஏற்படுகிறது. எப்படி ஜெல்லிமீனாக மாறுகிறாரோ அதே போல் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாய் அந்த உருவத்தையும் இழந்து சிறுவர்களின் விரல்களாகவும் கண்களாகவும் நாசிகளாகவும் இருந்து மகிழ்கிறார்..தனிமை, அதையொட்டிய சுத்திகரிப்பும் – இவற்றில்தான் கலப்பின் சாத்தியங்களும் கூடலின் திளைப்பும் உருவாகின்றன என்பதில் பல சிந்தனைகளை அளைய இடமுண்டு.

ஆனால் பொழுது சாயும்போது ஜெல்லி மீனின் கதி என்ன? அவரவர் பாதை அவரவருக்கு, இந்தக் கூடல் நிலையானதல்ல. இது தெரிந்தும் உருமாற்றம் பெறும் விருப்பம் வெளிப்படுகிறது எனில் பிறருடன் தொடர்பு கொள்ளும் விழைவில் தன்னிழப்பையும் மரணத்தையும் தழுவ விரும்பும் மிக உக்கிரமான தனிமை மேலோங்கித் தெரிகிறது என்றுதான் கொள்ள முடியும். இதில் ஒரு atavistic impulse உள்ளது என்றும் சொல்லலாம். ஜெல்லி மீன்தான் உலகின் மூத்த பல்லுறுப்பு உயிரி என்பதால் தன் உறுப்புகள் அனைத்தையும் இழந்து துவக்கங்களுக்குச் செல்வதில் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிய பயணத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர். அதன்பின் தன்னுணர்வு பெற அவர் தேர்ந்தெடுப்பது சிறுவர்களின் உடலை, இதிலும் தனிமனித அனுபவத்தின் பின்னோக்கிய பயணமே மேற்கொள்கிறார். இது போதாதென்று ஒரு ஜெல்லி மீனாய் மாறியபின் அவர், கரையோரம் “வாயும் வயிறுமாய்” நிற்கிறார்- சூல் கொண்ட பெண்ணைப் போல், சூலின் நிறை சாத்தியங்களோடு.

தனிமையின் துயரைப் பேசும் இக்கவிதை அதை romanticise செய்வதில்லை- அகத்தின் வேலிகளற்ற ஒரு ஆனந்தம் எதிர்பார்க்கப்படுகிறது, தனிமையின் தடுமாற்றங்களை, அதன் ‘பிற்போக்கு’ உணர்வை, அதன் உளச்சிக்கல்களை மிக அழகாக, எதையும் எளிமைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதால்தான் இந்தக் கவிதையில் ஒரு சிறு உறுத்தல் தென்படுகிறது. ஒரு நண்பர் இது குரூரமான கவிதை என்றும் பதிவு செய்திருக்கிறார், அது ஏன் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குரூரமல்ல, தனிமையும் அதன் தீர்வாய் தனிமையற்ற கூடலின் வசீகர அழைப்பும்தான் இந்தக் கவிதையின் அடிநாதம். அதற்குரிய விலை தன்னிழப்பு எனில் அவ்வாறே ஆகட்டும்.

வாயும் வயிறும் என்பதை அதன் முழுப்பொருளில் ஆங்கிலப்படுத்த இயலாமல் போய் விட்டது, இந்த மொழியாக்காத்தின் மிகப் பெரிய இழப்பு. ஆனால், |I stand with what’s left over/ A mouth and a stomach” என்பதில் மிகப் பெரும் வறுமையையும் பசியையும் சுட்ட முடிகிறது என்பதே இதன் மிகச் சிறந்த பயன்.