அஜய். ஆர்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’
‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.
‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’
‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’
‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம தூங்கிட்டு காத்தால ஏழு மணிக்கு தான் எழுந்துக்கறேன்..’
‘இது நிறைய பேருக்கு வர கனவு தான், நத்திங் ந்யு ஆர் ஸ்பெஷல்’
‘நான் முடிக்கல ஸார். கனவுன்னு நான் சொன்னேன்ல, அது தப்பு. ஆக்‌ஷுவலா அது கனவுக்குள்ள கனவு, அதாவது என் கனவுல நான் ட்வல்த் ஸ்டூடன்ட்டா   இருக்கேன்ல , அந்த பையன் தான் பரீட்சைக்கு எதுவும் படிக்கமா தூங்கிடற மாதிரி கனவு காணறான், நான் இல்ல.. அவன் பயந்து போய் முழிச்சுகிட்டு எல்லாம் கனவுன்னு புரிஞ்சுக்கிறான், அதே நேரம் எனக்கும் தூக்கம் கலஞ்சிருச்சு’
‘சரி இதுக்கும் நீ மொதல்ல சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்’
‘இனிமே தான் விஷயமே இருக்கு. நான் ஒரு குறுநாவல் எழுதிட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்லையா’
‘அதான் ரெண்டு வருஷமா நீ முக்கி முக்கி எழுதிட்டிருக்கறத என்கிட்டே அப்பப்ப படிக்க குடுக்கறியே’
‘அதுல பத்து நாளா திருத்தங்கள் செஞ்சிட்டிருக்கேன் ஸார்’
‘அப்ப அதையும் என் கிட்ட படிக்க தரப் போற, எத்தனை தடவையா உன் செங்கல்பட்டு புராணத்தை படிக்கறது’
‘அத விடுங்க. கதைல அந்த பண்ணண்டாவது படிக்கற பையன் இருக்கான்ல..’
‘நீதான அவன், மூணாவது மனுஷனை பத்தி சொல்ற மாதிரி பேசற’
‘கதைப்படி அவன் பாத்திரம் தானே ஸார். அந்த பையன் இதே மாதிரி, அதாவது, எக்ஸாமுக்கு ப்ரேபர் பண்ணாத மாதிரி கனவு கண்டு பயந்து எழுந்துக்கற மாதிரி ஒரு பகுதி எழுதியிருக்கேன் ஸார். அதுக்கு அடுத்த நாள் நைட் எனக்கு இந்த மாதிரி கனவு வருது, லைப் இமிடேட்ஸ் ஆர்ட். நீங்க ரைட்டர்/புக் பேர்லாம் தான சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க, ஸோ ‘க்வோட்ஸ்’ யூஸ் பண்றது தப்பில்லை.’
‘நீ திருந்த மாட்ட’
‘வாழ்கையே ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டோட புனைவு மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னது கரெக்ட் தானே ஸார்’
‘ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டா, என்னய்யா ஹாரி பாட்டர கதைக்குள்ள கொண்டாற’
‘நீங்க தானே நேம் ட்ராப்பிங் கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க நீங்களே புக் பெயரை சொல்றீங்க. எல்லாரும் கவனிங்க முற்றுப்புள்ளி ஸார் தான் அவர் சொன்னதை தானே மீறியிருக்கார், நான் இல்ல’
‘ஏன்யா திடீர்னு அந்தப் பக்கம் பார்த்து பேசற’
‘வாசகாஸ் கிட்ட பேசறேன் ஸார், போர்த் வால்ல ப்ரேக் பண்லாம்னு தான்’
‘வாசகாஸா, கஷ்டம். போர்த் வால்ன்னா என்னனு தெரியுமாய்யா, விட்டா சுவத்த பார்த்து பேசுவ போல’
‘வுட்டி அல்லன்லாம் அதை உடைச்சிருக்கார்ன்னு கேள்விப் பட்டிருக்கேன் சார்’
‘அதுக்காக நீயும் கடப்பாறைய எடுத்துக்கிட்டு வந்து வீட்டு சவுத்த உடைச்சிறாத. நீ பண்ணக் கூடிய ஆளு தான். இலக்கியம்னு இல்ல பொதுவாவே ஆர்ட்ட பொறுத்த வரைக்கும் படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் கேஸ்யா நீ’
‘அதெல்லாம் மாட்டேன் ஸார்.’
‘பார் எ சேஞ் நீ சொல்ற கனவு விஷயம் ஓரளவுக்கு சுவாரஸ்யமா இருக்கு, இதை கதையாக்க ட்ரை பண்ணு’
‘இன்னொரு ஐடியாவும் இருக்கு ஸார்’
‘இதான் ஒன்கிட்ட பிரச்சனை, நிறைய ஐடியா இருக்கு, எதையும் உருப்படியா எக்ஸிக்யூட் பண்றதில்ல’
‘கேளுங்க. காலத்துகள் குறுநாவல் எழுதிட்டிருக்கார், அதுல வர கனவு மாதிரியே நிஜத்துலயும் அவருக்கு ஒரு கனவு வருது, இப்ப நான் சொன்ன அதே விஷயம் தான். இதை வெச்சு அவருக்கு ஒரு ஐடியா கிடைக்குது, போர்ஹெஸ பாத்திரமா வெச்சு குறுங்கதை எழுதிட்டு தூங்கப் போறார். அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் அந்தக் கதையை ப்ரைஸ் பண்றாங்க. தூங்கி எழுந்த காலத்துகள், அந்தக் கனவை தன கதைல சேர்க்கிறார். அன்னிக்கு நைட்டும் அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் வராங்க. கதைல வர காலத்துகளுக்கு கனவு வருதா இல்லை கதையை எழுதற காலத்துகளுக்கா, எது நிஜ கனவு எது கனவுல வர கனவுன்னு புரியாத அளவுக்கு கதை ரிகர்ஸிவ் லூப்ல சுத்திட்டே இருக்குது’
‘ஹாரிபிள். இப்படி கன்றாவியா கனவு கண்டே உன் லிடிரரி லைப் முடியப்போகுது’
‘லைப், வாட் இஸ் இட் பட் எ ட்ரீம்’
‘உனக்கு ட்ரீம்யா,  எனக்கும் போர்ஹெஸுக்கும் நீ பண்றதெல்லாம் நைட்மேர்’

வேனிற்காலம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

விடைத்தாள்களை வாங்கி மேஜையின் மீது அடுக்கி வைத்த ஸார், அறையின் வாசலுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். முதல் மணிச் சத்தத்துடன் அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் எழுந்த கூச்சலினூடே வெளியே வந்தோம். கடைசி பரீட்சை முடிந்தபின் நடக்கும் சட்டையின்மீது இங்க் அடிக்கும் சடங்கில் என் நண்பர்கள் அடைந்துள்ள நிபுணத்துவம் என்னிடம் இல்லாததால், ‘டேய் டேய் போதும்டா’ என்று எப்போதும் போல் கூச்சலிட்டேன். வழக்கம் போல் என் வான் நீல பள்ளிச் சீருடை சட்டையின் மீது பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் இங்க் துளிகள் பதிந்தன. இந்த விளையாட்டையும் அதனூடே நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஊளைச் சத்தத்தையும் கண்டு கொள்ளாமல் விடைத்தாள் கட்டை ஆபிஸ் ரூமில் சேர்ப்பித்து கிளம்பும் அவசரத்தில் ஆசிரியர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். ஆரம்ப அதீத உற்சாகம் சற்று அடங்கிய பின் ‘பாக்கலாம்டா’, ‘ஹாப்பி ஹாலிடேஸ்டா’களை பகிர்ந்து கொண்டவர்களில் விடுமுறைக்கு வேறு ஊருக்குப் போகாத நானும் சந்துருவைப் போன்றவர்களும் இருந்தோம்.

சைக்கிள் எடுப்பதற்காக சென்றிருந்த சந்துருவிற்காக காத்துக் கொண்டிருந்தபோது பெண்கள் ஸ்டேண்டினில் இருந்து வெளியே வந்த உமா சைக்கிள் மீதேற, ஒரு கணம் மேலெழும்பி அடங்கிய ஸ்கர்டினுள் அவள் முழங்கால் தெரிந்தது. இன்னும் இரு மாதத்திற்கு அவளை எங்கேனும் தெருவில் செல்லும்போது பார்த்தால்தான் உண்டு. என்னைத் கடந்து செல்பவளின், சாக்ஸினால் பாதி வரை மூடப்பட்ட ஆடுசதையின் திரட்சியில், மென் மயிர்கள் துல்லியமாக தெரிகின்றன. ஆறாவதில் இருந்து சைக்கிளில்தான் வருகிறாள், வீட்டில் கார்கூட உள்ளது. பார்வையை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டேன். சந்துரு வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு செட்டித் தெருவை தாண்டியவுடன் ஓட ஆரம்பித்து மிச்சமிருந்த ஐந்து நிமிட நடையை ஒரு நிமிடத்திற்குள் கடந்து வீடு வந்தேன். உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பாமல் உடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டவுடன், என்னுடைய மூன்று நூலக அட்டைகளை எடுத்து பார்த்தேன். மார்ச் மாதம் முழுதும் லைப்பரரிக்குச் செல்லவில்லை. நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

ஹிந்துவில் நான் மிகவும் விரும்பும் விளையாட்டுப் பக்கத்தை சில நிமிடங்களுக்கு மேல் படிக்க இயலவில்லை. அடுத்து விளையாட்டு செய்திகளைத் தவிர, நான் தினமும் படிக்கும் ஒரே பகுதியான ‘திஸ் டே தட் இயரில்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் ஹிட்லரின் வெற்றிகள் தொடர்ந்து கொண்டிருந்தன என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் முதலிலிருந்து இறுதி பக்கம் வரை புரட்டியவன் தினசரியை மடித்து வைத்தபின் வானொலியை இயக்கி ‘ஆப் கி பார்ச்மயிஷ்ஷில்’ இரண்டு பாடல்கள் கேட்டு முடிப்பதற்குள் அணைத்தேன். ஐந்து வயது வரை மெட்ராஸில் குடியிருந்தபோது அருகிலிருந்த தனியார் நூலகத்திலிருந்து எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத மூன்று ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ்களின் பக்கங்களைப் புரட்டியபின், மீண்டும் வானொலியை இயக்கி அணைக்கும்போது மணி இரண்டாகி விட்டிருந்தது. என்ன பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன என்பதை நினைவுகூர முயன்று அது முடியாமல், வெளியே கிளம்பி தரையில் கிடந்த கல்லை மரடோனாவைப் போல் எட்டி உதைத்து நடக்க ஆரம்பித்தேன்.

ஐந்தாறு பேர் கொண்ட குழுவாக என்னைச் சூழ ஆரம்பித்த இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை, அவர்களின் கணுக்கால் சுளுக்கும்படி இடமும் வலமும் சுழன்று தாண்டிச் சென்று எண்ணற்ற கோல்களை அடித்து உலக கோப்பையை வென்றபின், மைக் டைசனாக உருவெடுத்து முதல் சுற்றில் முப்பது நொடிகளுக்குள்ளேயே எதிராளியை நாக்கவுட் செய்து முடிக்கும்போது நாடார் கடையருகே வந்திருந்தேன். ‘என்ன மேன் எக்ஸாம் முடிஞ்சாச்சா’ என்று நாடார் வரவேற்றார். ‘எல்லாம் ஓவர் நாடார், சோடா குடுங்க, பன்னீர்’ என்று ஐம்பது பைசாவை அவரிடம் தந்து, அவரிடமிருந்து சோடா பாட்டிலை வாங்கியவன் அதை உலகப் கோப்பை போல முகத்தின் நேரே தூக்கி பார்த்து குடிக்க ஆரம்பித்தேன். ‘என்னடா இன்னிக்கே வெளில சுத்திட்டு வரியா, வேர்த்து ஊத்துது பாரு’ என்று கேட்ட அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காவிடம் ‘சும்மாதான்கா’ என்று சொல்லிக் கொண்டே என் போர்ஷனுள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் செங்கல்பட்டு வீதிகளில் கால்பந்தாட்ட சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறேன்.

வேலை முடித்து வரும்போது, மூன்று மற்றும் இரு பாகங்கள் கொண்ட இரண்டு சரித்திர நாவல்களை தன் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்தார் அம்மா. அவற்றை புரட்டிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த சந்துருவுடன் வெளியே சென்று எந்த தெருக்களில் என்ன பேசிக்கொண்டே நடந்தோம் என்ற பிரக்ஞையில்லாமல் வீடு திரும்பியவன் அன்றிரவு மிகக் குறைவாகவே உண்டபின், மீண்டும் அன்றையை தினசரியை படிக்க முயன்று தோற்று, அம்மா எடுத்து வந்திருந்த புத்தகங்களை புரட்டி மூடினேன்.

oOo

அடுத்த நாள் காலையில் எட்டேகாலுக்கு நூலகத்தினுள் நுழைந்தேன். எட்டு மணிக்கு திறக்கும் செங்கல்பட்டு அரசு நூலகத்திற்கு தினமும் இதே நேரத்திற்கு வந்துவிடுவேன். பெரும்பாலான நாட்களைப் போல அன்றும் நூலக வருகைப் பதிவில் கையெழுத்திட்ட முதல் ஆள் நான் என்பது பெருமிதமாக இருந்தது. நேற்று எடுத்துச் சென்றிருந்த மூன்று புத்தகங்களை தந்துவிட்டு, அன்றைய புத்தகங்களை தேர்வு செய்தவன், அடுத்த நாள் எடுத்துச் செல்ல முடிவு செய்த ஒரு நூலை அறையில் இறுதியில் இருந்த அடுக்கில் வைத்தபின் புத்தக வரிசைகளை இன்னும் சில முறை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டிருக்கும் என்பதை, நூலக விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளையும் இரண்டாம் சனிக்கிழமையையும் தவிர தினசரி காலை யாத்திரையாக அங்கு சென்று வந்து கொண்டிருந்ததால், நூலகத்தில் உள்ள கடிகாரத்தை பார்க்காமலேயே நான் அறிவேன்.

என் அப்பன் வேலைக்குச் செல்வதை நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவனும் வீட்டில்தான் இருந்தான். உள்ளறையில் அவன் அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருக்க நான் ஹாலில் அமர்ந்து எடுத்து வந்திருந்த நூல்களை படிக்க ஆரம்பித்தேன். மாலைக்குள் இரண்டு புத்தகங்களையாவது படித்து முடித்தால்தான் மறுநாள் காலை வழக்கம் போல் நூலகத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். பன்னிரண்டு மணியளவில் வரி விடாமல் பேப்பரை படித்து முடித்த அப்பா ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க நான் உள்ளறைக்குச் சென்றேன். உண்டு முடித்தவன் ‘சாப்டுடா’ என்றபடி அறைக்குள் வர நான் வெளியேறினேன். அடுத்து ‘டீ போட்டு வெச்சிருக்கேன்’ என்று நான்கு மணி வாக்கில் அவன் என்னிடம் சொல்வதுடன் எங்களுக்கிடையே அன்றைய நாளுக்கான உரையாடல் முடிவடையும், அவன் தரப்பில் அந்த நான்கு வார்த்தைகளும் என் தரப்பில் தலையாட்டுதலும்.

மதியம் அவன் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்க, எங்கள் போர்ஷனின் பின்புறம் இருந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்து வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு ஒலிபரப்பு நிறைவடைய மரத்தையொட்டி இருந்த சுவற்றில் அமர்ந்து மறுபுறம் இருக்கும் காலி மனையை பார்த்தபடி, அந்த வெற்றிடத்தில் போர்க்களங்களை, மர்ம குகைகளை, நாசகாரர்களின் ரகசிய இடத்தைக் கட்டெழுப்பி, பல சாகசங்களை என் மனதினுள் நிகழ்த்த ஆரம்பித்தேன். உமாவையும், மீராவையும் ஏன் உலகையேகூட இத்தனையாவது தடவை என்று சொல்ல முடியாதபடி, மீண்டுமொருமுறை கொடியவர்களிடமிருந்து காப்பாற்றி முடிக்கும்போது வெய்யில் என்னுள் முழுமையாக இறங்கி வியர்வை கண்களில் வழிந்து எரிச்சலுறச் செய்ய ஆரம்பித்திருந்தது. உதடுகளில் சிந்தியிருக்கும் உப்புப் கரிப்பை நாவால் வருடியபடியே விழிகளை கசக்கிக் கொண்டு எழுந்து உள்ளே சென்றேன்.

நாலரை மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சந்துருவுடன் கிளம்பினேன். டப்பா ஸ்கூலின் அருகே சரவணன், பிரபு, ஜர்தா பீடா போட்டுக் கொண்டிருந்தபோது தகப்பனிடம் மாட்டி அடிவாங்கிய நாள் முதல் கஞ்சாவென்று அழைக்கப்படும் ரகுராமன், காத்துக்கொண்டிருந்தார்கள்.

‘முரளி வியாழக்கிழமை பெட்ரோல் பங்க் அனுமார் கோவிலுக்கு போறான்டா’ என்ற பரபரப்புச் செய்தியை சரவணன் தெரிவிக்க, அனுமார் கோவிலுக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் குறிப்பாக வியாழனன்று, என்பது போன்ற விசாரங்களுளோடு நீண்ட உரையாடலை, ‘போதும்டா டேய்’ என்று முடிவுக்கு கொண்டு வந்த கஞ்சா, ‘ஒத்தா கபில்லாம் ரிடயர் ஆகணும்டா, ஸ்ரீநாத் நல்லா போடறான்’ என்று அடுத்ததையும் ஆரம்பித்து வைத்தான்.

‘என்னத்த போடறான்’

‘ஒத்தா நீ மூடு, கபில் என்னத்த போட்டான் லாஸ்ட் ரெண்டு வருஷமா’

‘ஸ்ரீநாத் போடறத நீ வெளக்கு புடிச்சு பாத்தியா’

‘அப்ப கபில் போடும் போது நீ வெளக்கு புடிச்சியா’

‘ஸ்ரீநாத்துக்கு கல்யாணம் ஆகலைல’

‘ஒத்தா கல்யாணத்துக்கும், போடறதுக்கும் என்னடா சம்பந்தம்’

இந்திய கிரிக்கெட் அணியையும், கலவி விதிமுறைகளையும் சீரமைத்து முடிக்கும்போது ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ஒரு காட்சியில் சில நொடிகள் தலைகாட்டிய கலெக்டர் ஆபிஸ் பிள்ளையார் கோவிலை அடைந்திருந்தவர்கள், அதன் மறுபுறம் இருந்த சாலை வழியாக, தீயணைப்பு படை குவார்டர்ஸ், அரசுப் பள்ளி எல்லாம் கடந்து, செங்கல்பட்டில் புதுப் படங்கள் உடனே வெளியாகாமல் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருவது குறித்து அங்கலாய்த்த படி ராமர் கோவிலை நெருங்கும்போது ‘இப்படி போய்டலாம்டா’ என்று ராமகிருஷ்ணா ஸ்கூல் மேட்டில் இறங்கினேன். அங்கு திரும்பாமல் நேரே கொஞ்ச தூரம் சென்றால் கோவில் குளத்தினருகே உமாவின் வீடு. அவள் மீது எனக்குள்ள ஈர்ப்பு இந்தப் பயல்களுக்கு தெரிந்து விடக் கூடாது.

oOo

என் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவன், தான் ரமேஷ் என்றும், செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிப்பதாகவும் கூறியதற்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. சமையலறையில் இருந்து காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்துவிட்டு என்னிடம் மீண்டும் அதே அறிமுகத்தை என் அப்பன் கூறியதற்கும் நான் மௌனமாகவே இருந்தேன். அம்மாவிடம் சொல்லிக் கொண்டபின் கிளம்பிய ரமேஷுடன் என் அப்பனும் சென்றான். ‘இவன் எங்கேந்து புதுசா வந்திருக்கான்’ என்று நான் கேட்டதற்கு ‘நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் கிறுக்கு பிடிக்கும் போலிருக்கு. எங்கேந்து தான் ஆப்படறாங்களோ’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்த அம்மா என் அப்பன் திரும்பி வந்தவுடன் எதுவும் சொல்லவில்லை.

ஒரு வாரமாக ரமேஷ் வீட்டில்தான் காலைப் பொழுதைக் கழிக்கிறான். வழக்கமான அசௌகர்ய மௌனத்தினூடே அவர்களிருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள். கிளம்புவதாகச் சொல்பவனிடம் ‘சாப்டுட்டு போ’ என்கிறான் என் அப்பன். தட்டுக்கள், பாத்திரங்கள் தரையில் வைக்கப்படும் ஒலி. பெரும்பாலும் நான் நூலகம் சென்றிருக்கும்போது தான் வீட்டிற்கு வருபவன், நான் திரும்பிய பத்து பதினைந்து நிமிடங்களில் சென்று விடுவான். தண்ணீர் குடிக்க நான் ஹாலுக்கு வந்த போது ரமேஷ் கிளம்பி க்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு முறை என்னிடம் பேச முயன்று அதன் பின் நிறுத்தியிருந்தான் ரமேஷ்.

‘சொல்லிட்டே இருக்கேன் பதில் பேசாம இருக்க, ஒனக்கு எதுலையும் இன்ட்ரஸ்ட் இல்ல’, ‘மூஞ்சியக் காட்டாத, பேசறது புடிக்கலைனா நேரடியா சொல்லு’, ‘என்ன பெரிய மயிறு சமையல்’. சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டு என் அப்பன் மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் சந்துருவுடன் வெளியே சென்று விட்டு திரும்பியிருந்தேன்.அன்று காலை ரமேஷ் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. மதியம் இரண்டு மணி அளவில் வெளியே சென்ற என் அப்பன் எப்போது திரும்பினானோ. சமைத்து முடித்தபின் சாப்பிடுமாறு அவனிடம் கெஞ்ச ஆரம்பித்த அம்மாவிடம், ‘எனக்கு எந்த மயிறு சாப்பாடும் வேண்டாம், நீயே தின்னு’ என்று அவன் கத்திக் கொண்டிருக்க, ரமேஷ் வந்தான். ‘எங்கடா போயிருந்த, அவ்ளோ திமிர் புடிச்சிடுச்சா, ராஸ்கல்’ என்று அவனிடம் அவனை நோக்கி கத்த ஆரம்பித்தான். ‘வெளில கேக்கப் போகுது’ என்று அவனிடமும் ‘உள்ள வாப்பா’ என்று போர்ஷன் வாசலில் தயங்கியபடி நின்றுகொண்டிருந்த ரமேஷிடமும் அம்மா சொன்னாள். உள்ளே வந்தவன் யாரையும் பார்க்காமல் தரையையும், கூரையையும் பார்த்தபடி இருக்க, நானும் அம்மாவும் உள்ளறைக்குச் சென்றோம். சில நிமிடங்களில் சத்தம் அடங்கி மென் குரலில் பேச்சுக்கள். ‘ரமேஷுக்கு சாப்பாடு இங்கதான்’ என்று என் அப்பன் வந்து சொல்ல, அம்மா சமையலறைக்குச் சென்றாள். உள்ளறையிலிருந்து நான் பார்த்தபோது என் அப்பன் தொடர்ந்து பேசியபடியே இருக்க, தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ், அருகே அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு சாப்பிடாமல் பேப்பர் திருத்திக் கொண்டிருந்த அம்மாவுடன் ‘இவனுக்கு என்ன பிரண்ட்ஷிப் இந்த பொறுக்கி ரமேஷோட’ என்று கேட்டேன்.

‘மொதல்ல மோரே இருந்தான், அப்பறம் வசந்தி, ராணி, இப்ப ரமேஷ், ஒங்கப்பன் பொறுக்கிதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று அம்மா சொன்னதை அப்போதே புரிந்து கொண்டேன் என்பதை நான் என்னிடம் ஒப்புக்கொள்ள இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது.

oOo

அன்றைக்கு வீட்டிற்கு வந்தவனிடம் “ஆபரேஷன் பண்ணனும் சொல்லிட்டாரு” என்றாள் அம்மா. மார்ச் மாதத்திலிருந்தே அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ‘கைனக்’ ராஜராஜனிடம் சென்று கொண்டிருந்தாள். அது குறித்து நான் மேலே கேட்பதற்குள், “திமிரு புடிச்சவன்” என்றபடி ஹாலிலிருந்து உள்ளறைக்குச் சென்றான் என் அப்பன். “என்னாச்சு?” என்று அம்மாவிடம் கேட்டேன்.

“ப்ரைவேட் க்ளினிக்ல வெச்சுக்கலாம்னு சொன்னா, டாக்டர் மாட்டேனுட்டார், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் நல்லாத்தான் இருக்குன்னு அவர் சொல்லிட்டார். திருப்பித் திருப்பி ப்ரைவேட்ல வெச்சுக்கலாம்னு அப்பா சொல்லவும் அவருக்கு கோவம் வந்துடுச்சு, அப்ப நீங்க வேற டாக்டர பாத்துக்குங்கனுட்டார், அதான்’ என்று அம்மா சொல்லும்போது அவள் சிரிப்பை அடக்கி கொள்வது தெரிந்தது. “டாக்டர் ஒத்துண்டா மட்டும் நம்மால ப்ரைவேட்ல முடியுமான்ன.”

“டேஞ்சரஸ்ஸாமா ஆப்பரேஷன்?”

“அதெல்லாம் இல்ல, நாலஞ்சு மணி நேரம் ஆகலாம், வலிக்கும். ஸ்டிச்சஸ் போடுவாங்க. ரெண்டு வாரமாவது ஆஸ்பிடல்லயே இருக்கணும்’ என்றாள்.

“என்னிக்கு ஆப்பரேஷன்?”.

“ஏப்ரல் எண்ட்லன்னு சொன்னார்”

“உங்க வீட்லேந்தோ என் வீட்லேந்தோ யாரும் வர வேண்டாம், ஒத்தனோட ஹெல்ப்புமில்லாம நாமளே பாத்துக்கலாம்” என்று சொல்லிய என் அப்பன், தேவைப்படும்போது அம்மாவை மெட்ராஸில் வசிக்கும் அவள் அத்தை வீட்டிற்கு அனுப்பத் தவறியதில்லை. மிலிட்டரி ரேஷனில் சில மளிகைப் பொருட்கள் மலிவாக கிடைக்கும் என்பதால் அவனே சில மாதங்களுக்கு ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்று தன் அம்மாவிடம் பேசி பொருட்கள் வாங்கிக் கொண்டும் வருவான். ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த சண்டையொன்றில் அவன் தள்ளி விட்டதில் தாத்தியின் கை உடைய, என் வீட்டிற்கு வரும் ஒரே உறவினரான அவளும் வருவதை நிறுத்தியிருந்தாள். ‘வேணாம் சுந்தரி, பெரிய ஆப்பரேஷன் இல்ல, அவர் இருக்காரு, இவனும் இருக்கான் போதும்’ என்று சுந்தரி அக்கா ஆஸ்பத்திரியில் ஒன்றிரண்டு நாள் இருப்பதாக கூறியதையும் தடுத்து விட்டாள்.

ஆபரேஷன் நடந்த காலையன்று நாங்களிருவர் மட்டும் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஏழெட்டு மணி நேரத்திற்குப் பிறகு விசாலமான பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு முழுதாக நினைவு திரும்ப மாலையாகி விட்டது. பக்கத்து போர்ஷன் சுந்தரி அக்கா அன்றே அம்மாவைப் பார்த்துச் சென்றார். “நீ நைட் இங்கயே இருந்து அம்மாவ பாத்துக்கோ, காத்தால வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு திரும்ப ஹாஸ்பிடல் வந்துடு” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் என் அப்பனும் வீட்டிற்கு கிளம்பினான்.

செங்கல்பட்டின் ஒரு முனையில் இருந்த மருத்துவனையிலிருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பி இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடைக்குப்பின் வீட்டிற்கு வந்து சேருவேன். குளித்தபின், ஊரின் மறு முனையில் இருக்கும், அதே இருபது நிமிடத்திற்கு மேலாகும் நடை தூரத்தில் உள்ள, நூலகத்திற்குச் சென்று திரும்பி தண்ணீர் குடித்த பின் அம்மாவிற்கான மாற்று துணிகளுடன் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புவேன். தனியாக வீட்டில் என் அப்பன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதையே நானும் விரும்பினேன். அன்றைய தினம் எடுத்து வந்திருந்த நூல்களை படித்து முடிந்த பின் வெவ்வேறு வார்டுகள், புற நோயாளிகள் வருமிடம் என மாலை நேரத்தில் அலைந்து கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு இரவில் தான், அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் நைட் ஷிப்டில் இருந்த சுருட்டை முடியுடன், கண்ணாடி அணிந்த இளம் பெண் மருத்துவர் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ‘ஒனக்கு எதுல இன்டிரெஸ்ட்?’ என்ற என்ற வழக்கமான கேள்வி எழ, ‘போயம்ஸ் படிக்கணும், எழுதணும்’ என்று நான் சொன்னதும் ‘இன்ட்ரஸ்ட்டிங், வித்தியாசமா இருக்கு’ என்று கூறியவர் முகத்திலிருந்த வியப்பை – கவிதைகளை விட புனைவையே நான் அதிகம் விரும்பினாலும் கவிதை தான் இந்த கேள்வியை கேட்பவர்களில் பெரும்பாலோனரை கூடுதலாக ஆச்சரியமடைய செய்யும் என்பதை கவனித்திருந்தேன் – பார்க்கும் போதுதான் அவர் அணிந்திருந்த மெல்லிய மூக்குத்தி முதல் முறையாக கண்ணில் பட அன்றிரவு வெகு நேரம் அந்த உரையாடலை என்னுள் நிகழ்த்தி, மீண்டும் மீண்டும் மூக்குத்தி ஒளிரும் அந்த வியப்பை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அன்றை இரவுப் பேச்சில் ‘கவிதை’ -நல்ல வேளையாக- ஆரம்பப் புள்ளியாக முடிந்து விட அதன் பின் அவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருப்பது தினசரி பழக்கமாகிப் போனது. உரையாடல் நடந்து கொண்டிருக்க நான் சில வருடங்கள் முன் சென்று அதே வார்டில் மூக்குத்தியுடன் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மருத்துவம் படிப்பேன் என்பதில் எனக்கு அப்போது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து காலை வழக்கத்தைவிட முன்பாக வீட்டிற்குச் சென்றேன். மடித்து வைக்கப்படாமல் இருந்த படுக்கைக்கு அருகே சில விஸ்கி பாட்டில்கள். விசிஆர் டெக் இருந்தது, வாடகைக்கு எடுத்திருப்பான். மேலுடம்பில் எதுவுமில்லாமல் பெர்முடா மட்டும் அணிந்திருந்த ரமேஷ் இரண்டு வீடியோ கேசட்களை ஷெல்பில் வைத்துக் கொண்டிருந்தான். தரையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டி, ‘இரண்டு முயல் குட்டிகள் திமிறின’, ‘அவளைப் போட்டேன்’ போன்ற வார்த்தைகள் இருந்த பத்திகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது ‘என்னடா சீக்கிரம் வந்துட்ட’ என்று என் அப்பனின் குரல் கேட்டது. ‘என்ன படிக்கற, அது சும்மா’ என்று என் கையிலிருந்து என் அப்பன் பிடுங்கிய புத்தகத்தின் அட்டையில் ‘லைப் ஜுஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. கிளம்பும் போது அம்மா பற்றி விசாரித்த சுந்தரி அக்கா “அந்த பையன் இப்பலாம் இங்கதான் படுத்துக்கறான்” என்றார்.

“வீட்டுலயே தூங்கறான் போலிருக்குமா அந்த ரமேஷு” என்று நான் சொன்னதற்கு ‘எப்படியோ ஒழிஞ்சு போட்டும் போ’ என்றாள் அம்மா. ‘மோரே’, ‘வசந்தி’ அனைவர் பற்றியும் அன்றிரவு அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். யாரையும் நான் பார்த்ததில்லை என்றாலும் வசந்தி குறித்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். பாலியல் ஈர்ப்புகள் குறித்து படித்து தெரிந்து கொண்டிருந்ததை வைத்து, மோரே குறித்தும் நான் சந்தேகித்திருந்தாலும், அன்றிரவு ‘மோரே பின்னாடியே சுத்தினான் ஒன் அப்பன்’ என்று அம்மா அவ்வப்போது புலம்புவதும், என் அப்பனுக்கு ரமேஷுடன் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்கு முன்பே புரிந்து விட்டன என்பதை ஒப்புக் கொண்டேன். என் அப்பன் ஏன் திருமணம் செய்து கொண்டான் என்பது குறித்து மட்டும் எனக்கு அப்போது பிடிபடவில்லை.

மே இரண்டாம் வாரம் அம்மா டிஸ்சார்ஜ் ஆனாள். எங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் அனைவரும், வார்டில் அதிகாரபூர்வமற்ற வழக்கமாக, அவர்கள் கிளம்பும் அன்று நர்ஸ்களுக்கு கூல் ட்ரிங்க் வாங்கித் வந்திருந்தார்கள். “ப்ளீஸ்மா, ரொம்ப கேவலமா நெனப்பாங்கமா” என்று அம்மா வார்டிலேயே கெஞ்சியதற்கு, “அதெல்லாம் காசு இல்ல, அவங்க ட்யூட்டிய செய்யறதுக்கு நாம எதுக்கு எக்ஸ்ட்ரா தரணும், டீன் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்” என்று என் அப்பன் கத்தியதை வார்டிலுள்ளவர்கள் கவனித்தார்கள். கூட வந்திருந்த ரமேஷ் ஏதோ சொல்ல முயன்றதற்கு அவனுக்கும் வசவு விழுந்தது, விலகி நின்றவன் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தான். ‘ லூசுக் கூ’ என்று முணுமுணுத்துக் கொண்டேன். நான் என் பெற்றோருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் போல் இருக்க முயன்று கொண்டிருந்தேன். அன்று ட்யூட்டியில் இருந்த மூக்குத்தி டாக்டர் என்னையே கவனிக்கிறார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதன் பின் கிளம்பும் வரை எந்த நர்ஸும் எங்களிடம் எப்போதும் போல் சகஜமாகப் பேசவில்லை. மூக்குத்தி டாக்டரை தவிர்க்க எண்ணி, அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது விரைவாக கடக்க முயல, நிமிர்ந்தவர் “கிளம்பியாச்சா. குட் லக் ந்யூராலஜிஸ்ட்” என்று சிரித்தபடி சொன்னார். “தேங்கஸ் டாக்டர்” என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை குனிந்தபடி நகர்ந்தேன்.

oOo

“டெக் போட்டு பாத்திருக்கீங்க, கூல் ட்ரிங்க் வாங்கித் தர காசு இல்ல”

வீட்டிற்கு வந்தவுடன் சண்டை ஆரம்பித்தது. ‘மோரே, வசந்தி’, ‘ஒங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லையா’, ‘இவ்ளோ வருஷம் ஒங்களுக்காக ஒழச்சு கொட்டிருக்கேனே’ என்று அம்மாவிடமிருந்தும் ‘நான் அப்படித்தான்’, ‘எனக்கு யாரும் தேவையில்ல’, ‘எவங்கூட வேணா போவேன், என்னிஷ்டம்’ என்று என் அப்பன் தரப்பிலிருந்தும் நான் முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்த வார்த்தைகள் வந்து கொண்டிருக்க, நான் என் அப்பனை கவனித்தபடியே இருந்தேன். சண்டையின்போது, அவன் அம்மாவை அடிப்பது சில வருடங்களுக்கு முன்பு வரைகூட சாதாரணமான நிகழ்வுதான், இந்த முறை கொஞ்சம் எல்லை மீறிப் போய் விட்டது. நான் வளர்ந்து விட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். “வேலைக்குப் போறதுனாலதான பேசற” என்றபடி அம்மாவின் பி.எட் சான்றிதழை கிழிக்க முயன்றது அவன் தப்பு. அவனிடமிருந்து அதை பிடுங்கும் போது அவன் தோளை நான் உந்தினேன். “என்னடா சப்போர்ட்டா, நீ என்னத்த படிச்சு புடுங்கறன்னு பாக்கறேன்”, என்று என அப்பன் சொல்ல, “என்னத்த வேணா பண்ணு, ” என்றேன். “நீ வெளில போடா”, என்று என்னை பிரித்துத் தள்ளிய அம்மா, ‘நீங்க செர்டிபிகேட் கிழிப்பேன்னு சொன்னதுனாலதான் அவன் அப்படி செஞ்சான். ஒண்ணும் பண்ணிடாதீங்க, ஒங்க மேலையும் அவனுக்கு அப்பெக்க்ஷன் இல்லையான்ன’ என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். “எப்படியோ ஒழி” என்றபடி சான்றிதழை அவள் மீது நான் வீச “நீ எதுக்குடா வீட்லயே இருக்கணும், ப்ரண்ட்ஸோட பேசிட்டு வா போ ” என்றாள். போர்ஷனின் வாசலில் நின்றிருந்த ரமேஷைப் பார்த்து ‘ஒத்தா லவடாக் கூ, ஒன்னால தாண்டா இவ்ளோ பிரச்சனை’ என்று கூறிவிட்டு சென்றேன். சந்துரு ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தான், யாரையும் பார்க்கபிடிக்காமல், எந்த இலக்குமின்றி செங்கல்பட்டின்வீதிகளில் அலைந்து கொண்டிருந்தேன். ரமேஷை அறைந்திருக்க வேண்டும், இவ்வளவு கடுமையாக பேசியிருக்க வேண்டாம், அப்பனிடம் சொல்லக்கூடும், சொன்னாலும் ஒன்றுமில்லை அந்தப் பொறுக்கி ஏதாவது கேட்டால் மண்டையைப் பிளந்து விடலாம், அம்மா தடுத்திரா விட்டால் இன்றே அதை செய்திருப்பேன். சண்டைகளின் போது அவள் தான் என்னை தடுத்து விடுகிறாள் என்பதில் உள்ள இயலாமையையும், கோழைத்தனத்தையும் நான் உணர்ந்தாலும் அந்தச் சமாதானம் எனக்குத் தேவைப்பட்டது. வீடு திரும்பியபோது என் அப்பன் படுத்துக் கொண்டிருந்தான். சாப்பிடும் போது ‘என்னாச்சு’ என்று அம்மாவிடம் கேட்டேன். தலையசைத்தாள். ‘ரமேஷ் போயிட்டானா’

‘அவன் நீ வெளில கெளம்பினவுடனே போயிட்டான்’

‘இவன்ட்ட ஏதாவது சொன்னானா’

‘இல்லையே’

அடுத்த நாள் என் அப்பன் என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் அவன் எதையும் கேட்காதது ஏமாற்றமாகவும் அதே நேரம் நிம்மதியளிப்பதாகவும் இருந்தது.

ரமேஷ் வராமல் ஒன்றிரண்டு நாட்கள் கழிந்த பின் காலையில் வீட்டை விட்டுச் சென்ற என் அப்பன் மாலையில் வந்த அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றான். ரமேஷைத் தேடி அவன் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறான், அவன் வர முடியாதென்று கூறியிருப்பான் என்று நான் யூகித்தது அதன் பின்பும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் உறுதியானது. என் அப்பன் அடுத்துச் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். நான் நினைத்ததைப் போலவே, நேரடியாகச் சண்டையிடுவது, அடிப்பதை தவிர என் அப்பனிடமிருந்த மற்றுமொரு யுத்தியையும் இப்போதும் செயல்படுத்தினான். காலையில் பதினொன்று மணிக்கு மேல் எழுந்திருப்பவன், பல் தேய்க்காமல், குளிக்காமல் சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து, மூன்று நான்கு மணிக்கு எழுந்து காப்பி குடித்து விட்டு தூங்குவான். ஏழு மணிக்கு மீண்டும் துயில் நீக்கம், இரவுணவு, தூக்கம். உண்மையில் அவன் தூங்குகிறானா அல்லது வெறுமனே படுத்துக் கொண்டிருக்கிறானா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ‘அவன் என்ன வேணா பண்ணுவான், மெடிசன் படிப்ப ஒரு வருஷத்துல விட்டவன்தான, ஸ்கூல் படிக்கும்போதே லீவ் போட்டுட்டு ரெயில்வே ஸ்டேஷன்ல படுத்து தூங்க வேண்டியது, அங்கேயே அக்கவுண்ட்ல சாப்பிட்டு, மேகசின் வாங்க வேண்டியது,’ என்று முன்பொரு சண்டையின்போது இதே போல் நடந்து கொண்டது குறித்து நான் கேட்டதற்கு அம்மா சொன்னாள். உள்ளறையில்தான் அவன் படுத்துக் கொண்டிருப்பான் என்பதால் மற்றவர்கள் அவனை பார்க்க இயலாது என்பதில் எனக்கு நிம்மதி. ‘ஒங்கப்பனுக்கு ரமேஷ பாக்கணும், அப்பறம் எல்லாம் சரியாயிடுவான்,’ என்று அம்மா சொன்னாள். ‘அவன் வீடு எங்க இருக்குனே தெரியல’ என்றவனிடம், ‘பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ்ல, அவங்கப்பாக்கு அங்கதான் வேலை,’ என்றாள். தூங்கிக்கொண்டிருந்த அப்பனைச் சுட்டி ‘அவன்கிட்ட கேட்டியா’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் வரவில்லை. ‘பின்ன எப்படி அவன் வீடு உனக்குத் தெரியும்’

‘…’

‘அவன போய் கூட்டிட்டு வான்னு ஒன்கிட்ட சொல்றானா’ என்று நான் கேட்டதற்கு ‘ரமேஷுக்கே இங்க வரதுக்கு இஷ்டம் இல்ல. இவன் தான் போய் அலையறான்’ என்றாள்

‘அதெப்படி சொல்ற’

‘இந்த ரமேஷ் ஒங்கப்பன் ஏதோ நல்லா பேசறான்னு அவங்ககூட இருந்திருப்பான், அவன பத்தி தெரிஞ்சவுடன கட் பண்ணிட்டான்..’

எதுவும் பேசாமல் இருந்தேன். அம்மாவே தொடர்ந்து ‘மோரே மட்டும் என்ன பிடிச்சா இருந்தான், நல்லா சுருட்டினான். நல்ல காலம் இவன் சீக்கிரத்திலேயே போயிட்டான். நீ வேணா பாரு, ஒங்கப்பன் என்னிக்காவது எவன் கிட்டயாவது அடி வாங்கி சாகப் போறான்’

‘சீக்கிரம் கழட்டிக்கிட்டா ரமேஷ் பொறுக்கி இல்லையான்ன’

‘இல்லடா’

‘ஒனக்கெப்படி தெரியும்’

‘எனக்கு தெரியும்டா ஒங்கப்பன’

எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றேன். அன்று ரமேஷிடம் நான் சொன்னதை அவன் என் அப்பனிடம் கூறியிருக்கலாம். அல்லது அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீட்டிற்கு வந்திருக்கலாம். நான் அவனை அடித்து விரட்டியிருக்க முடியாது. அவனிடம் பேச வேண்டும், ஏன் என் அப்பனிடம் நட்பு கொண்டான், அவன் வயதையொத்த நண்பர்கள் யாரும் அவனுக்கு இல்லையா, அவன் வீட்டில் யாரும் எதையும் கண்டு கொள்வதில்லையா?

oOo

அம்மா வீட்டிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் கழித்து காலை ஆறரை மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றபோது இன்னும் திறக்கப்படாத கடை முன் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். ‘நாடாரு லேட்டா தெறக்க மாட்டாரே, நான் நேத்து சாங்காலம் பாத்தபோது கூட நல்லாத்தானே இருந்தாரு’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண், பெரிய மணிக்காரத் தெருவைச் செட்டித் தெருவுடன் இணைக்கும் சாலையின் திசையில் கைகாட்டி கத்த, அந்தப் பக்கம் திரும்பினோம். சேஷன் திருமண மண்டபத்தின் வாயிலுக்கு முன் குழுமியிருந்த கும்பல் அதை உடைக்க ஆரம்பித்திருந்தது. நாடார் கடைக்கு அடுத்திருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ‘கட இன்னிக்கு தொறக்கறது கஷ்டம், ஸ்ரீபெரம்பத்தூர்ல பாம்ப் வெடிச்சு ராஜீவ் இறந்துட்டாரு,’ என்று சொன்னார். வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிற்கும் வானொலி வழியே செய்தி தெரிந்து, ‘இத பாருங்கமா, என்ன ஆயிருக்கு பாருங்க,’ என்று அப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எழுந்தபின் தலையிலடித்துக் கொண்டும், ‘ப்ளட், ப்ளட்’ என்று குழறிப் பேசிக் கொண்டும் என் அப்பன். வியப்பளிக்கும் வகையில் அம்மா ரமேஷ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததால் மனப் பிழற்வு ஏற்பட்டவன் போல் சில நாட்களாக என் அப்பன் நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரமேஷை அழைத்து வர சென்று விடப் போகிறாள் என்று ‘சும்மா நடிக்கறான்மா’ என்று அம்மாவிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவனுக்கு மனச் சிதைவு ஏற்பட்டால் ஏதேனும் மருத்துவனையில் சேர்த்து தொலைத்துக் கட்டி விடலாம் என்று நான் ஆசைப்பட்டாலும் அது நடக்கக் கூடியது அல்ல என்பதை அறிந்திருந்தேன். ‘நம்ம எல்லாரையும் பைத்தியமாக்கிட்டு அவன் நல்லா இருப்பான்மா’. சிறிது நேரம் புலம்பியவன் ஏழெட்டு நாட்கள் கழித்து அன்று தான் குளித்தவன், வெளியே கிளம்ப ‘வெளில பிரச்சனையா இருக்கும்மா, அப்பறம் போங்க’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனான். ‘ரமேஷ் வீட்டுக்குத்தான போறான். ரோட்ல எந்த கும்பல் கிட்டயாவது நல்லா அடி வாங்கி சாகட்டும்’ என்று நான் சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் என்னுள் தோன்றிய எண்ணத்தைத் தொடர்ந்தபடி நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். பயர் சர்விஸ்மென் குவார்டர்ஸ் செல்லும் வழி எனக்குத் தெரிந்ததுதான். ராமகிருஷ்ணா ஸ்கூலையொட்டி உள்ள மேட்டின் மீது நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பன். நானும் மேடேறினேன். அரசு பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலது புறத்தில் சென்றுகொண்டிருந்தான். இந்த வழி சாதாரண நாட்களிலேயே ஆளரவமற்றதாக இருக்கும், இன்று கேட்கவே வேண்டாம். அந்த இடத்தில் அப்பனை அடித்துக் கொன்று விட்டால், கலவரத்தில் அடிபட்டு செத்தான் என்றுதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் அவன் பின்னால் வந்திருந்தேன். என் கையில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டை. அதைக் கொண்டு அவனை பின்னந்தலையில் அடித்து தரையில் சாய்த்து, சாலையில் உருண்டவனின் உடலெங்கும் கட்டையால் அடித்தேன். உயிருடன் விட்டு விடுமாறு என்னிடம் கெஞ்சுபவனின் முகத்தில் என் செருப்பை வைத்து தேய்த்து கூழாக்கி விட்டு நிமிரும் போது அவன் தொலைவில் சென்று கொண்டிருந்தான். இறுக மூடியிருந்த முஷ்டி எதையும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தேன், கத்தியோ, உருட்டுக் கட்டையோ எங்கு கிடைக்கும்? பெட்ரோல் இருந்தால் கொளுத்தி விடலாம். பாதையில் பெரிய கல்கூட எதுவும் இல்லை. நிற்க முடியவில்லை, சாலையில் குத்திட்டு அமர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு திரும்பும்போது, கஞ்சாவைப் பார்க்கப் போனேன். ‘என்னடா திடீர்னு’ என்றவனிடம் ‘ந்யூஸ் பாத்தேல’ என்றேன். ‘யாருடா பண்ணிருப்பாங்க?’ கஞ்சா தனக்கு அடுத்த போர்ஷனில் இருப்பவர்கள் அடிதடியில் ஈடுபடுபவர்கள் என்று முன்பொருமுறை என்னிடம் சொல்லியிருந்தான். அவர்களிடம் உதவி கேட்கலாம் என்ற புது எண்ணம். என் அப்பனைப் பொறுத்தவரை கை, கால்களை உடைப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை, துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் எனக்கு அது உவப்பானதே. ஆனால் அது குறித்து கஞ்சாவிடம் எதுவும் சொல்லாமல் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன். இன்னும் சில அடிகள் எடுத்து அடுத்த போர்ஷனுக்கு சென்றிருந்தால்கூட பெரிதாக எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. என்னை விட தைரியசாலிகள் என்றாலும், சிறுவனான நான் சொல்வதற்காக அவர்கள் அதை செய்திருக்கப் போவதில்லை, அப்படியே அவர்கள் தயாராக இருந்திருந்தாலும், அவர்களுக்குத் தர என என்னிடம் கூலியென்று எதுவும் அப்போது இல்லை.

என் அப்பன் திரும்பியபோது, வறுத்த கடலை பொட்டலம் விஸ்கி பாட்டிலுடன் வந்தான். அன்றிருந்த சூழ்நிலையில் எங்கிருந்து வாங்கினானோ. கடலையை தட்டில் பரப்பி குடிக்க ஆரம்பித்தான். யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளறையில் அவன் குடிக்கும் வாசம் ஹாலுக்கும் வர நான் பின்புறச் சுவற்றில் சென்றமர்ந்தேன், காலி மனையில் அன்று எண்ணற்ற முறை கோரமாக, துடிதுடித்து இறந்தான் என் அப்பன். சிரிஞ்ச் இருந்தால், விஷத்தை அதில் ஏற்றி என் அப்பன் தூங்கும் போது ஊசிபோட்டு, பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று சொல்லிவிடலாம். சிரிஞ்ச் வீட்டில் இல்லாததோடு, ‘பாய்ஸன்’ என்று ஆங்கிலத்தில் எழுதி ஒட்டியிருக்கும் பாட்டிலோ, எலி மருந்தோகூட வீட்டில் இல்லை. பினாயில் நெடி காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதை உபயோகிக்க முடியாது.

oOo

மே மாத இறுதி வந்திருந்தது. நூலகம் சென்று திரும்பியவனிடம் ‘ஒங்கம்மா பயந்து போய் பாத்ரூம்ல இருக்காங்க, யார் கூப்டாலும் வர மாட்டேங்கறாங்க,’ என்று சுந்தரி அக்கா சொன்னார். குளியறையின் சுவற்றில் சாய்ந்து, காலை நீட்டியபடி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் நைட்டி காற்பகுதி சற்று மேலேறி இருக்க, பாதங்கள் வீங்கியிருந்தன, அழுத்தினால் சதையில் குழி உருவாகி மறையும். ‘உள்ள போ மாட்டேன், போ மாட்டேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி என் போர்ஷனின் வாசலருகே நடத்திக் கூட்டிக் கொண்டு வர, ‘இப்பத் தான் ஆப்பரேஷன் ஆகியிருக்கு, இப்படி ஓடலாமா, தையல் பிரிஞ்சிருமேக்கா’ என்றார் சுந்தரி அக்கா.

ஹாலில் என் அப்பன் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் முழங்கையை பிடித்து உள்ளே செல்ல முயன்றவனிடம், ‘என்ன கொன்னுடுவான், கொன்னுடுவான்’ என்று முனகினாள். பேப்பரை மடித்து வைத்து விட்டு கூரையைப் பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்த அப்பனின் மீது, என் செருப்பை எறிந்தேன். ‘ராஸ்கல்’ என்று கத்திக் கொண்டு அவன் வெளியே வர, கிணற்றடியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை அவன் மீது வீசி, ‘தேவிடியாப் பையா, பாஸ்டர்ட்’ என்று நானும் கத்தினேன். ‘இந்த அசிங்கம்லாம் வெளில தெரியக் கூடாதுன்னுதான இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நியே இப்படி பண்ணறியேடா, எல்லாரும் பாக்கறாங்கடா’என்று கத்திக் கொண்டே பின்னாலிருந்து தடுத்த அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் இடையில் புகுந்து, ‘சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான், எனக்காக விட்டுடுங்க, விட்டுடுங்க ப்ளீஸ்’ என்றபடி அப்பாவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள். ‘ஒத்தா, லவட புண்ட, மயிராண்டி, கூதி நாயே’ என்று கத்திக் கொண்டிருந்தவனின் கைகளைப் பற்றி மடக்கி ‘அழாதடா, அழாதடா’ என்றபடி சுந்தரி அக்கா, என்னை தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த கோடையில் எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால், ஏற்கனவே மிக மெல்லிதாக இருந்த, என் அப்பனுக்கும்எனக்குமான உறவு அன்று மரணித்தது.

தனிமை

காலத்துகள்

‘பை நாளைக்கு சாயங்காலம் பாக்கலாம்’ எப்போது போல், வானில் தோன்றியவுடன் அவனுடன் சில வினாடிகள்பேசிய வீனஸ் உலாக் கிளம்ப, அவளுடைய மாலை வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சில நட்சத்திரங்கள் அவள் பின்னால் அதீத சிமிட்டலுடன் செல்வதைப் பார்த்தபடி இருந்த துருவன் மீண்டும் தனிமைப்பட்டான். சற்று தொலைவில் மினுங்கியபடி தோன்ற ஆரம்பித்திருந்த விண்மீன்களைஅவன் அழைக்க, அவை வெறுமனே கையசைத்து விட்டு நாலைந்து பேராகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தன. ‘நானும் வரேன்’ என்று அவன் சொல்ல, ‘ஐயோ நீ ரொம்ப பெரிய ஆளு, உன் லெவலுக்கு நாங்க வர முடியாது’ என்று விலகிச் சென்றார்கள். சேர்த்துக்கொண்டாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை, ஒருபோதும் தோற்க விடுவதில்லை, அதற்கு இப்படியே இருந்து விடலாம்.

எல்லாம் ‘அவரின்’ உபயம். தந்தைமடியில் உட்காரும் பிரச்சனையில் ஆரம்பித்து, அந்த ஆசை நிறைவேற ‘அவரை’ நோக்கி தவம் செய்து, பின் ‘அவரின்’ அருளால் விண்ணில் இந்த இடத்திற்குவந்து சேர்ந்தது’அவருக்கு’ அணுக்கமானவனாகமற்றவர் அவனை குறித்து எண்ண வைத்துள்ளது. முன்பெல்லாம் அவருக்கு பிரியமானவனாக இருப்பது பற்றி பெருமிதம் கொள்வான், அவரும் பாற்கடலிலிருந்து கிளம்பி விண்ணுலா செல்லும்போதெல்லாம்இவனருகில் வந்து சில அன்பு வார்த்தைகள் பேசி விட்டுதான் செல்வார். பின் அவரைக் காண்பது அரிதாகியது, இப்போது எந்த அவதாரத்திற்கான முஸ்தீபுக்களில் இருக்கிறாரோ. அல்லது இனி எந்த அவதாரத்தினாலும் பயனில்லை என அவருக்கு பிடித்தமான ஆழ்நித்திரையில் இருக்கலாம், சிக்கிக் கொண்டது நான்தான்.

நடந்தவையெல்லாம்இப்போது மங்கலாகத் தான் நினைவில் உள்ளது, ஆசைப்பட்டது போல் தந்தை மடியில் உட்கார்ந்தேனா, என்னை மீண்டும் பெற்றோருடன் சேர்க்காமல் ஏன் இங்கு தனியாக அமர வைத்தார். இப்படி முடிவற்ற தனிமையில் உழல்வதற்கு பூமிலேயே வாழ்ந்து முடிந்திருக்கலாம். இப்போதெல்லாம் மினுங்கக் கூட மனமிருப்பதில்லை.

oOo

துருவனுக்கு எதிரே இருந்த, சமீபத்தில்தான் கட்டி முடித்து குடும்பங்கள் குடியேற ஆரம்பித்திருந்த அபார்ட்மென்ட்டின் மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டின் உள்ளறைக்குள் நுழைந்த ஐந்தாறு வயதிருக்கக் கூடிய சிறுவன்,ஜன்னலையொட்டி இருந்த நாற்காலியின் மீதேறி ஜன்னல் கம்பிகளை பிடித்து வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தவன், ‘இன்னிக்கு பத்து ஸ்டார்ஸ் புதுசா இருக்குமா’ என்று,தட்டில் சாதத்துடன் ‘சாப்டுடா’ என்றபடி வந்த அம்மாவிடம் சொன்னான். ‘அதோ போல் ஸ்டார்’ என்றான் சிறுவன்.

‘அது இருக்கட்டும், சாப்புடு’.

‘அந்த ஸ்டார் மட்டும் ஏம்மா எப்பவுமே தனியா இருக்கு, அதுக்கு ப்ரண்ட்ஸ் இல்லையா’

‘சொல்றேன் ஒரு வாய் சாப்பிடு’

‘மூன் இன்னும் வரலையே, இன்னிக்கு ப்ளூ மூன்தான, ஸ்நேக்மூன கடிக்கறதால அது ப்ளூ ஆயிடுதா’

‘ஆமா சாப்பிடு’

‘பாம்பு மூன ஒரே அடியா முழுங்கிடுமா, இல்ல கடிக்க மட்டும் செய்யுமா’

‘மூன் சரியா சாப்பிடாட்டி பாம்பு முழுங்கிடும், உன்னையும்தான்’

‘பாம்போட ஸ்டமக் இருட்டா இருக்குமா’

‘நாளைக்கு கேட்டு சொல்றேன், இந்தாகடைசி வாய்’ஊட்டி விட்டு அம்மா, ‘அந்த பாம்பு கிங் கோப்ராவா, அனகோண்டாவா’ என்ற சிறுவனின் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினாள்.அவள் வேலை முடிந்தது. மீண்டும் வெளியே பார்த்தபடி’பாவம் மூன்’ என்று முணுமுணுத்தபடி இருந்தவன் பின் சித்திரக் கதையொன்றைபடிக்க ஆரம்பித்தான்.

oOo

‘என்ன அங்கேயே பாத்துட்டிருக்க’ என்ற குரல் கேட்டு துருவன் திரும்பினான். நிலா.

‘சாங்காலம் அந்த அபார்ட்மென்ட் பையன் ஒன்ன பாம்பு வெறுமனே கடிக்குமா, இல்ல முழுசாமுழுங்கிடுமான்னுகவலைப்பட்டுக்கிட்டுக்கிருந்தான் ‘ என்று துருவன் சொன்னதற்கு நிலா உரக்க சிரிக்க அந்த இடத்தில் ஒளி இன்னும் வலுவானது.

‘பாவம் தனியா இருக்கான், அபார்ட்மென்ட்ல அவன் வயசுல வேறகுழந்தைங்க இல்லல’ என்று நிலா கேட்க, ‘ஆமா, சாயந்திர நேரம் பூரா ஜன்னலேந்து வெளியே எட்டிப் பாத்துக்கிட்டுருப்பான்’

‘தனியா இருக்கறது எவ்ளோ கொடுமைனு எனக்குத் தெரியும்’ என்று நிலா சொல்ல, ‘என்ன விட நீங்க ரெண்டு பேரும் எவ்வளவோ மேல். இன்னிக்கு அந்த பையனோட அம்மா அவனுக்கு பருப்பு சாதம் தந்தாங்க, நெய்வாசனை இங்க அடிச்சுது. எங்கம்மாவும் எனக்கு அத ஊட்டி விட்டிருக்கா, இப்ப யாரு… உனக்கு மட்டும் என்ன, எல்லாரும் ஒன்னத்தான் பாக்கறாங்க, கவித எழுதறாங்க. ஒனக்கு நல்ல அதிர்ஷ்டம், நா தான்எப்பவுமே தனியா இருக்கேன், என்ன யாரும் கண்டுக்கறது இல்ல’

‘என்ன கவித எழுதி என்ன, காதல்ல ஜெயிச்சவுடனேஅம்போன்னுவிட்டுட்டு போயிடறாங்க. ஒனக்காவது நெறய நட்சத்திர சொந்தம் இருக்கு, மத்த ப்ளானட்ஸ் மாதிரி இல்லாம எர்த்க்கு நான் மட்டும்தான். ஐ ஆம் மோர் அலோன்.’

‘அப்படிலாம் சொல்லாத,…’

‘ஒங்க ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா இருந்தாங்க, இருக்காங்க, எனக்கு? அப்படி யாராவது இருக்காங்களா, இல்லையானே தெரியாது’

‘..’

‘அவ்ளோ ஏன் என்னோட ஒளியே எனக்கு சொந்தம் இல்ல, சூரியன் கிட்டேந்து கடன் வாங்கறேன்’

‘..’

எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருக்கும் பின்ஜாம நேரத்தில் மினுங்குவதை கிட்டத்தட்ட நிறுத்தி துருவன் மீண்டும் மிளிர ஆரம்பித்து சிறுவனின் அபார்ட்மென்ட்டைசில கணங்கள் கவனித்த பின், மேகத்தின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலாவை ‘எழுந்திரு’ என்று தட்டினான். ‘ட்யுடி டைம் முடிஞ்சிருச்சா’என்றபடி துயில் கலைந்தநிலாவிடம் ‘அதெல்லாம் இல்ல, வா போலாம்’ என்றான் துருவன்.

‘எங்க கூப்பிடற’

‘அந்தக் குட்டிப் பையன் கனவுக்குள்ள’

oOo

உடல் நீலம் பாரித்திருந்த நிலவை பாதி விழுங்கியிருந்த, தலையில் நட்சத்திரமொன்று பூத்திருந்த கருநாகத்தின் வாலைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்தான் சிறுவன். ‘நானா அது’ என்று நிலாவும் துருவனும் ஒரே நேரத்தில் கூறியதை’கஜேந்திரா, கஜேந்திரா’ என்று கத்திக் கொண்டிருந்தான் சிறுவனின் ஒலி அமிழ்த்தியது. ‘தப்பு தப்பா கூப்படறான், காப்பாத்த ஒருத்தரும் வர மாட்டாங்க ‘ என்று நிலா சொல்ல,’சரியா கூப்பிட்டா மட்டும் என்ன ஆகப் போகுது, அவர் வந்து இவனையும் தனியா வானத்துல ஒக்கார வெச்சுடுவாரு’ என்றபடிதுருவன் சிறுவனின் அருகே சென்றான். அவர்களை நோக்கிய சிறுவன் ‘இன்னொரு மூன்’ என்று உரத்த குரலெழுப்பியபின் திரும்பிப் பார்த்து ‘எங்க பாம்பு, ப்ளூ மூன்’ என்று அரற்ற ஆரம்பிக்கவும், ‘சத்தம் போடக் கூடாது’ என்றபடி துருவன் அவனுடைய வலது கையையும்,நிலா அவனுடையை இடது கையையும்பற்றிக்கொள்ள மேலெழும்பி வான்வெளிக்கு வந்தார்கள்.

‘மூன் நீ எப்படி பாம்பு கிட்டேந்து தப்பிச்ச, கலர் திருப்பி வெள்ளையாயிட்டியே’

‘பாம்புலாம் ஒன்னும் இல்லப்பா.’

‘இல்ல, இருக்கு, அதனாலத்தான் நீ இன்னிக்கு ப்ளூ ஆயிட்ட, அந்த ராகுதான ஒன்ன கொத்த வரான் அவனுக்கு பயந்துதான் நீ அப்பப்ப காணாமப் போயிடற’

‘அவன் ஏன்பா என்னை கடிக்கணும். நான் சும்மா எர்த்க்கு பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன்’ என்று நிலா சொல்லிக்கொண்டிருக்கும்போதே’பாவம் அந்தாளே தலை வேற உடம்பு வேறையா ரொம்பா காலமா சுத்திட்டிருக்காரு’ என்ற துருவனைப் பார்த்து ‘சும்மாரு’ என்றாள்.

‘எதுக்கு நீ ஒளிஞ்சுக்கற’

‘ஒன்ன மாதிரி சின்னப் பசங்க என்ன கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கறதுக்காக தான்’

‘என்னையும் சேத்துக்க அதுல’

‘அடுத்த வாட்டி கண்டிப்பா நீயும் உண்டு’

‘என்னையும் சேத்துக்கோ’ என்ற துருவனை முறைத்தாள் நிலா.

‘போல் ஸ்டாரையும் சேத்துக்கலாம், பாவம்’

‘அவனுக்கு நெறய வயசாச்சு, ஒன்ன மாதிரி கொழந்தை இல்ல அவன்’

‘ப்ளீஸ்’ என்று சிறுவன் கெஞ்ச ‘சரி, ஒனக்காக’ என்ற நிலாவைக் கட்டிக்கொண்டவன் ‘ரொம்ப ஜில்லாப்பா இருக்கு’ என்றான். பின் துருவன் பக்கம் திரும்பி ‘நீ மட்டும் எங்கேயும் போகாம செம் ப்ளேஸ்ல இருக்கியே, ஏன்’ என்று சிறுவன் துருவனிடம்கேட்டதற்குஅவன்பதில் தேடிக்கொண்டிருக்க நிலா ‘லேட்டாயிடுச்சு வீட்டுக்கு போலாம் வா’ என்றாள்.

‘எனக்கு ஸ்கை மொத்தத்தையும் சுத்திக் காட்டுங்க, அதோட என்ட் வரைக்கும் போயிட்டு வரணும், அப்பறம் ராகுவ பாக்கணும்’

‘இன்னிக்கு வேண்டாம், நாளைக்கு நைட் ஒன்ன கூட்டிக்கிட்டு போறேன்’ என்றபடி அவனைமீண்டும் தூக்கத்தினுள் அழைத்துச் சென்று திரும்பினாள் நிலா.

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்தபடி ‘பாம்பு ஒன்ன முழுங்க ஆரம்பிச்சது மட்டும் தான் கனவா, இல்ல இப்ப நடந்ததும் கனவு தானா’ என்று துருவன் கேட்க’கனவுன்னா யாரோடது? பையனோட கனவா, அதுல நாம நுழைஞ்சோமா, இல்ல கனவு கண்டதே நானோ நீயாகவோ இருக்கலாமில்லையா. இப்ப நாம பேசறது கூட கனவில்லைன்னு சொல்ல முடியுமான்ன’ என்றாள்நிலா.

‘குழப்பாத, அப்ப எது தான் நிஜம்’

‘வாட் ஈஸ் லைப், இப் நாட் பட் அ ட்ரீம்’

oOo

அடுத்த நாள் மாலை ‘ஹாய்’ என்றபடி பிரகாசமாக வந்தாள் வீனஸ். ‘ஹாய்’ ‘என்ன ரொம்ப பரபரப்பா இருக்க’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’

‘…’

‘என்ன அந்த அபார்ட்மெண்ட்டையே பாத்துக்கிட்டிருக்க,’

‘ஒண்ணுமில்ல’

‘…’

‘இன்னிக்கு கண்டுக்கவே மாட்டேங்கற’

‘அப்டிலாம் இல்ல’

சில வினாடிகள் கழித்து ‘ஒனக்கு நெறைய எடத்துக்கு போணும்ல’ என்று துருவன் கேட்க ‘போனாப் போறதுன்னு உன்கிட்ட தினோம் ரெண்டு நிமிஷம் பேசினதுக்கு எனக்கு தேவை தான். எனக்கென்ன ஆளா இல்லை’ என்று கிளம்பிய வீனஸின் பின்னால் எப்போதும் போல் விண்மீன் குழுவொன்று தொடர்ந்து சென்றது.

‘அந்தபையன் வருவானான்னு பாத்துக்கிட்டிருக்கியா’ என்றபடி நிலா வந்தாள்

‘வருவான், ஆனா அவனுக்கு நேத்து நடந்தது ஞாபகம் இருக்குமான்னு தான் தெரியல’

‘அது யாரோட கனவுங்கறத பொறுத்துதான் இருக்கு’

‘அம்மா தாயே, நீ திருப்பி ஆரம்பிக்காத’ என்று துருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அபார்ட்மெண்ட் ஜன்னலில் சிறுவன்.கையசைத்த அவனை நோக்கி துருவன் மினுங்க, குட்டிப் பயல் கைதட்டினான். ‘என்னத்த பாத்துடா கைதட்டற’ என்று உள்ளே வந்த அம்மா கேட்க ‘என் ப்ரண்ட்ஸ்மா’ என்றான். ஜன்னல் பக்கம் திரும்பாமல் ‘பாத்து நில்லு சேர் வழுக்கிடப் போகுது’ என்று கூறிவிட்டு அம்மா அறையை விட்டு வெளியே சென்றாள்.

கைதட்டியபடியே ‘இன்னிக்கு நைட் என்ன கூட்டிகிட்டு போணும்’ என்ற சிறுவனின் கூக்குரலைக் கேட்டு நிலா கன்னக் குழி விழ முகம் மலர, அவளுள்ளிலிருந்து முதல் முறையாக ஊற்றெடுத்த, சூரியனிடமிருந்து வருவதை விட அடர்த்தியான மஞ்சள் நிற ஒளியைக் கண்டு துருவன் சிரித்தான். அந்த மஞ்சள் சிரிப்பொலியை கேட்டு மற்ற கோள்களும், நட்சத்திரங்களும்தங்கள் இயக்கத்தை நிறுத்தி அவர்களிருவரையும்விழி இமைக்காமல் பார்த்தபடி இருந்தன. சீம்பாலின் நிறத்திற்கு மாறிய பாற்கடலின் அலைக்காற்று அங்கு துயில் கொண்டிருந்த ‘அவர்’ மீது பரவ கண் திறக்காமல் புன்னகைத்தார். பாதாள உலகில், மூன்று தலையுடைய தன் காவல் நாய்மஞ்சள் ஒலிகற்றையை சுவாசித்துமயங்கிதன் சர்ப்ப வாலை தரையில் தட்டியபடி படுத்து விட்டதை கண்ட ஹேட்ஸ், தன் சக பேரரசரான மகாபலியிடம் அந்த இனிய ஓசை குறித்து வினவ அவர் தமிழும், மலையாளமும் கலந்த மொழியில் விளக்கினார். அந்தி மாலையின் வண்ணங்களினால் நனைந்திருந்த பூலோகத்தை சிறுவனின் கைதட்டல் மென் ஊதா நிறமாக நிரப்ப மானிடர் ஒரு கணம் மயங்கி நின்றனர்.

பேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்டர் ஆசாமி அதை வாங்கிப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் திருப்பித் தந்தவுடன் நடக்க ஆரம்பித்தவர், தன் பின்னால் எழுந்த மெல்லிய சிரிப்பொலியை கவனித்ததைப் போல் காட்டிக்கொள்ளவில்லை. படிக்கட்டில் இறங்கியவுடன் உடை மாற்றும் அறைகள். அருகே நடப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பந்தலுக்கு கீழே இருந்த இருபது முப்பது நாற்காலிகளில் சிலர் அமர்ந்து, எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தங்கள் நண்பர்களை, உறவினர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிதுங்கும் தொந்திக்கு கீழே மிகச் சிறிய உள்ளாடையுடன் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் மூன்று குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களுக்கு அருகே வர, அனைவரும் நீச்சல் குளத்தில் இறங்கினார்கள்.

‘குட் மார்னிங் ஸார்’ என்று குரல் கேட்டு திரும்பி ‘குட் மார்னிங் வய்’ என்றார் குள்ளமான மனிதர்.

‘என்ன ஸார் பேர் இது?’

‘இந்தக் கதைக்கு மட்டும்தான்யா நான் எக்ஸ், நீ வய். இப்போதைக்கு இதுக்கு மேலலாம் யோசிக்க முடியாது, அடுத்த கதைல பேர் வெச்சிடறேன்னு சொல்லிட்டாரு ஆத்தர், என்ன செய்யறது. இது பரவாயில்லை, மொதல்ல ட்ரிப்பிள் எக்ஸ், ட்ரிப்பிள் வய்னு பேர் வெச்சார், நல்ல காலம் எடிட்டர் அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்’

‘கதையே வேணாம்னு சொல்லியிருக்கலாம்’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார், ஏதோ பேருன்னு ஒண்ணு வெச்சாரே, போன கேஸ்ல பெயரிலியா இருந்ததுக்கு பரவாயில்லை. ஆனா பெர்மனென்ட் பேர் வைக்கும்போது நம்ம ஊர் பேரா வெக்கச் சொல்லுங்க, மேக் இன் தமிழ் நாடு. அவர் பாட்டுக்கு ஏதேதோ நாட்டு குற்றப் புனைவ படிச்சுட்டு உச்சரிக்கவே முடியாத பெயரா வெச்சிடப் போறார், அதுவும் ஐஸ்லேண்ட் நாட்டு க்ரைம் பிக்க்ஷன் ரைட்டர்ஸ் பெயரெல்லாம் சொல்றதுக்குள்ள வாய் சுளுக்கிடும் ஸார்’

‘மேக் இன் இந்தியாலாம் வடக்கத்திய கருத்தாக்க திணிப்புய்யா, நமக்கெல்லாம் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும், யாதும் ஊரே யாவரும் கேளிரதானே, அதனால எந்த பேர் வெச்சாலும் நம்ம கடமைய நாம சரியா செய்யணும். ஆனா கரடுமுரடா பெயர் வெச்சா அவருக்கு அத தமிழ்ல டைப் பண்றது கஷ்டமா இருக்குமே, அதனால ஈஸியாவே வைப்பார், கவலைப்படாத.’

‘சரி ஸார், எந்தப் பெயரா வேணா இருக்கட்டும், உலகத்திலேயே ஸ்காட்லாண்ட் போலீஸுக்கு அடுத்தது தமிழ் நாட்டு போலிஸ்னு ப்ரூவ் பண்ணுவோம்’

‘நாம அவங்களுக்கு அடுத்ததுன்னுலாம் யாருய்யா சொன்னது’

‘ஸி.ஐ.டி சங்கர், ரகசிய போலிஸ் 115, விருத்தகிரி, சங்கர்லால், விவேக்ன்னு ஒரு கூட்டமே பல காலமா இதைத்தான் சொல்லிட்டிருக்காங்க ஸார்’

‘அந்த ரகசிய போலிஸ்தான ஒரு குட்டைல குதிச்சு நீந்தி பாகிஸ்தான்லேந்து இந்தியாவுக்கு வருவாரு, ‘இந்தியான்னு’ தமிழ்ல வேற எழுதிருக்குமே.’

‘ரகசிய போலீஸ் பத்தி எதுவும் தப்பா பேசாதீங்க ஸார், அவர் வாத்தியார்’

‘அதுவும் சரிதான் நம்ம புலனாய்வை ஆரம்பிப்போம். எப்படி போகணும்?’ என்று கேட்டார் எக்ஸ்.

‘இந்தப் பக்கம் ஸார்’

ஐம்பதடி சென்றவுடன் இன்னும் ஆழமாக நீர் நிரப்பட்டிருந்த மற்றொரு நீச்சல் குளம். ‘அங்க பார்யா’ என்றார் எக்ஸ். முக்காடிட்டிருந்த பெண்கள் குளத்தின் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘மார்வாடீஸ் ஸார், இந்த முக்காடுல எந்தளவுக்கு மூஞ்சி தெரியும்’

‘அத விடு, எப்படி ஸ்விம் பண்ணுவாங்க?’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முக்காடுப் பெண்களில் ஒருவர் புடவையுடனேயே நீரினுள் குதிப்பதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள். ‘காத்தால சாப்பிடக்கூட இல்ல ஸார்’ என்று மூடப்பட்டிருந்த புட் கவுண்ட்டரை கடக்கும்போது வய் சொல்ல, ‘மத்தியானம் நல்லா சாப்பிட்டுடலாம்யா, அதுக்குள்ள கேஸ் சால்வ் பண்ணிடுவோம்’.

‘முடியுமா ஸார்?’

‘கண்டிப்பா, இது ஷார்ட் ஸ்டோரிதானே. ஆரம்பிச்சு ஒரு பக்கம் முடிஞ்சிருக்கும், இது வரைக்கும் ஆத்தர் கதைக்கே வரல, வெட்டிப் பேச்சு பேச வைக்கிறார். இனிமே கதைய ஆரம்பிச்சு சட்டு புட்டுன்னு முடிச்சுடுவார். ஆனா இங்க எதுவும் ப்ராப்ளம் இல்ல போலிருக்கே, எல்லாரும் ஜாலியாத்தானே இருக்காங்க’

‘பேய் ஸார், இங்க ஏதோ பேய் நடமாட்டம் இருக்கறதா கம்ப்ளைண்ட் வந்திருக்கு, தீம் பார்க் ஓனர் செல்வாக்கானவர் ஸார், அதனால இத பெரிசா எடுத்துக்கிட்டு நம்மள கவனிக்க சொல்லிருக்காங்க.’

‘பேய்லாம் எதுவும் இருக்காது, மனுஷங்க வேலைதான்’

‘எப்படி ஸார் சொல்றீங்க’

‘இது குற்றப் புனைவுயா, இதுல ஆரம்பத்துல பேய், பிசாசு, குட்டிச் சாத்தான்னுலாம் வந்தாலும், கடசில யாரோ ஒரு மனுஷன்தான் எல்லாத்தையும் செய்யறான்னு முடியணும்,’ என்ற எக்ஸ் தொலைவில் இருந்த குதிரை ராட்டினத்தைச் சுட்டி, ‘யாருமே இல்ல, குட்டிப் பசங்க வந்திருக்காங்களே’

‘அது யூஸ்ல இல்ல ஸார், ஆனா அங்கயும் பேய பாத்திருக்காங்க, பெருசா எடுத்துக்கல போல. ஆனா நேத்து ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல பிரச்சனையாயிடுச்சு’

‘அது எங்க?’

‘தோ எதுத்தாப்ல அந்த கார்னர்ல ஸார்’

‘என்னய்யா, இங்கயும் யாரையும் காணும்’

‘இதெல்லாம் ஈவினிங்லதான் ஓபன் ஆகும், அதுக்குப் பக்கத்துல இருக்கறது கார், ஹெலிகாப்டர் ஓட்டற எடம். அதையும் ரொம்ப யூஸ் பண்றதில்லயாம்’

‘அப்ப தீம் பார்க்குன்னு சொன்னாலும் இது கிட்டத்தட்ட ஸ்விம்மிங் பூல்தான் இல்லையா’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிரே வந்தவரை, மேனேஜர் என்று அறிமுகப்படுத்தினார் வய்.

‘என்ன ஏதோ பேய் இருக்குன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கீங்க போல’

‘ஆமா ஸார், ஏதோ ஒரு ப்ரிசென்ஸ வேலை செய்யறவங்க நோட்டிஸ் பண்ணிருக்காங்க’

‘ஆம்பள பேயா, பொம்பள பேயா? ஆம்பளனா ஒரு சேஞ்சா இருக்கும்’

‘பையன் ஸார்’

‘இன்டிரெஸ்ட்டிங், என்ன செய்யுது அந்தப் பேய், அதாவது பையன்?’

‘இங்க நிறைய இடங்கள் ஈவினிங்தான் ஸார் ஓபன் பண்ணுவோம், சிலது யூஸ் பண்றதே இல்லை. இந்த இடங்கள்லதான் அந்தப் பையன பாத்திருக்காங்க. நீங்க வரும்போது என்ட்ரன்ஸ் பக்கத்துல பாத்திருப்பீங்கல அந்த குதிரை ராட்டினத்துல அந்த பையன் ஆப்டர்நூன் டைம்ல ஒக்காந்திருக்கானாம். அப்பறம் இங்க கார் ஓட்டற எடத்துல சில சமயம்.’

‘நீங்க நேரா பாத்திருக்கீங்களா?’

‘ஆமா ஸார். நாலஞ்சு நாள் முன்னாடி நான் இந்த வழியா வந்திட்டிருக்கேன், அப்போ இங்க ஹெலிகாப்டர்ல ஒரு பையன் ஒக்கந்திட்டிருந்தான்’

‘கிட்டக்கக் போனீங்களா, என்னாச்சு?’

‘இந்த இடத்துக்கு வந்தப்போ யாரும் இல்ல’

‘இதுவரைக்கும் ஏன் ரிபோர்ட் பண்ணல?’

‘நா ஒரு வாட்டிதான் ஸார் பாத்தேன், இந்த எடத்த கவனிச்சுக்கற பெரியவர் கிட்ட கேட்டதுக்கு யாரும் இங்க வரலைன்னு சொன்னாரு. நானும் மத்தவங்க சொல்றத கேட்டுக் கேட்டு ஏதோ கற்பனை பண்ணிட்டேன் போலிருக்குன்னு விட்டுட்டேன். நேத்து பாருங்க, ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல ஒரு பேமிலி போயிருக்காங்க. திடீர்னு எக்ஸ்ட்ராவா ஒரு பையன் அங்க இருந்திருக்கான். யாரு நீன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லலையாம், அங்க இருட்டா, திடீர்னு லைட்ஸ், சவுண்ட்ஸ் வந்து போகுமா, ரொம்ப பயந்துட்டாங்க. வெளில வந்துட்டு அடுத்து உள்ள போறதுக்கு காத்துக்கிட்டிருந்தவங்க கிட்டயும் இத அவங்க சொல்ல எல்லாரும் உள்ள வராம கிளம்பிட்டாங்க. அப்பறம்தான் விஷயம் ஓனருக்கு போச்சு’

‘ஏதாவது வயலன்ட்டா பிஹேவ் பண்றானா அந்தப் பையன்?’

‘அப்டிலாம் இல்லை, விளையாடறான் அவ்ளோதான். க்ளோசிங் ஹவர்ஸ்ஸுக்கு அப்பறம்தான் அவன் அடிக்கடி கண்ல படறாங்கறதுனால வேலை செய்யறவங்க பயப்படறாங்க. கிட்டக்க போய் பார்த்தா காணாம போயிடறான்’

‘இவ்ளோ பெரிய எடத்துல மறஞ்சுக்கறது ஈஸி. எல்லா இடத்துலையும் அவன பாத்திருக்காங்களா?’

‘எஸ் ஸார்’

‘இந்த இடத்துக்கு யார் இன்சார்ஜ்?’

காது கேட்கும் மெஷினைப் பொருத்திக் கொண்டிருந்த முதியவரை மேனேஜர் அழைக்க அவர் அருகே வந்தார். ‘நீங்கதான் இந்த இடத்தோட இன்சார்ஜா?’

‘ஆமா ஸார்’ என்றவரிடம், ‘இங்க ஏதோ பையன் பேயா உலாத்தறான்னு சொல்லிக்கறாங்களே, நீங்களும் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டார் வய்.

‘என் கண்ல அப்படி யாரும் பட்டதில்லை ஸார், மத்தவங்க சொல்றாங்க’

‘இந்த இடத்துலயே பாத்திருக்காங்க இல்லை, ஹாரர் ஹவுஸ்லகூட.’ என்றார் வய்.

‘நேத்து சொன்னாங்க, நான் பாக்கல ஸார்’

‘ஒரு குடும்பமே பாத்திருக்காங்களே, உங்க மேனேஜர்கூட பாத்தேன்னு சொல்றார்’

‘நேத்து இருட்டுல அவங்க பசங்களையே தப்பா பேய்னு நினைச்சிருக்கலாம் ஸார்’

‘நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ ஹெலிகாப்டர் அருகே நின்றுகொண்டிருந்த எக்ஸ் கேட்க, ‘தெரியல ஸார், நெறைய சின்னப் பசங்க இங்க தினோம் வராங்க, அதுல யாரையாவது பாத்து தப்பா புரிஞ்சுக்கிறாங்க போல’

‘ஆனா அந்த குதிரை ராட்டினம் பக்கம் யார் போ…’ என்று ஆரம்பித்த வய்யை இடைமறித்த எக்ஸ் ஹெலிகாப்டரைச் சுட்டி, ‘இது எலெக்ட்ரிசிடிலதான ஓடுது, ஸ்விட்ச் எங்க இருக்கு’ என்று கேட்க, எழுந்து வந்த முதியவர் ஸ்விட்ச் போர்ட்டை காட்டினார்.

‘நீங்க பாக்கும்போது ஹெலிகாப்டர் சுத்திட்டிருந்துதா?’

‘ஆமா ஸார், கொஞ்சம் உயரமா பறந்து திருப்பி இறங்கிடும், அன்னிக்கும் அப்படித்தான்,’ என்றார் மேனேஜர்.

‘மெயின் போர்ட் எங்க இருக்கு ஒங்க ட்யு டைம் என்ன?’ என்று முதியவரிடம் கேட்டார்.

‘டென் டு பை ஸார்’

‘ஒங்க வீடு எங்க இருக்கு?’

‘இங்கதான் ஸார் இருக்கேன், ஆபிஸ் ரூம் பக்கத்துலையே இன்னொரு ரூம் இருக்கு ஸார் அங்கதான் தங்கறேன்’

‘கார் ரைடுக்கு எவ்ளோ பணம்?’

‘நாலு நிமிஷத்துக்கு முப்பது ரூபாய்’

இடத்தை ஒருமுறை சுற்றி வந்த எக்ஸ், ‘மத்த இடத்தையும் பாத்துடலாம் ஹாரர் ஹவுஸ் சாவி இருக்கா, தொறந்து காட்ட முடியுமா?’

‘இப்பவே பாக்கலாம் ஸார், பன்னிரண்டுதான் ஸார் ஆகுது, பத்து நிமிஷத்துல நீங்க பாத்திடலாம்’.

ஹாரர் ஹவுஸை விட்டு வெளியே வந்தவுடன், ‘குதிரை ராட்டினம் பக்கம் போகலாம் வாங்க, அந்த இடத்துல பையன யாரோ பாத்தாங்கன்னு சொன்னீங்கல, அவர கூப்பிடுங்க’

‘நீங்க பாக்கும் போது பையன் என்ன செஞ்சிட்டிருந்தான்?’

‘குதிரை மேல ஒக்கந்திட்டிருந்தான் ஸார்’

‘சுத்திட்டிருந்துதா, இல்ல?’

‘இல்ல ஸார், ஜஸ்ட் அவன் சும்மா ஒக்கந்திருந்தான் அவ்ளோதான்.’

‘இங்கயும் குதிரைங்க சுத்தற மாதிரி ஆப்பரேட் பண்ண முடியும் இல்லையா, யார் இன்சார்ஜ்?’

‘முடியும் ஸார், நான்தான் இன்சார்ஜ். நாலு மணிக்குதான் ஆன் பண்ணுவேன், அதுக்கு முன்னாடி மதியம் செக் பண்ண வருவேன் அப்பதான் அந்தப் பேய்ப் பையன பார்த்தேன்.’

மீண்டும் ஒரு முறை தீம் பார்க்கை சுற்றி வந்தார்கள். ‘ஸ்விம்மிங் பூல்ல அந்த பையன யாரும் பாத்ததில்லையா’ என்று மேனேஜரிடம் கேட்டார் வய்.

‘இல்ல ஸார், இங்க வேலை செய்யறவங்க மட்டும் தான் நேத்து வரைக்கும் பாத்திருக்காங்க’

முதியவரிடம் இரு பொட்டலங்களை தந்து கொண்டிருந்தவரைச் சுட்டி ‘அங்க என்ன தராங்க?’ என்று எக்ஸ் கேட்க, ‘லஞ்ச் ஸார், இங்க வேலை செய்யறவங்களுக்கு நாங்களே லஞ்ச் தந்துடுவோம்’

அதன் பின் மேனேஜர் அறைக்கு வரும் வரை எக்ஸ் எதுவும் சொல்லவில்லை.

‘இப்ப என்ன ஸார் பண்றது’ என்று மேனேஜர் கேட்க, ‘இனி இன்னிக்கு இங்க நாம செய்யறதுக்கு ஒண்ணுமில்ல, கெளம்பறோம். நாளைக்கு வந்து அப்சர்வ் பண்றோம், அதுக்கு முன்னாடி எதாவது நடந்தா கால் பண்ணுங்க’ என்று சொன்ன எக்ஸ் ‘ஒங்க நம்பர் அவர் கிட்ட இருக்குல?’என்று வய்யிடம் கேட்க ‘இருக்கு ஸார்’. ‘ஓகே நாளைக்கு பாப்போம்’ என்று கைகுலுக்கி விட்டு கிளம்பினார்கள்.

நுழைவாயில் படிக்கட்டருகே வந்தவுடன் ‘வாங்க அப்படி போலாம்’ என்று வய்யிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேறொரு திசையில் உள்ளே சென்ற எக்ஸ், சிறிது தூரம் நடந்த பின் இரு புதர்களுக்கு பின்னாலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து, ‘இங்க வெயிட் பண்ணலாம்’ என்று சொன்னார். அந்த இடத்திற்கு எதிரே இருந்த அரங்கைச் சுட்டி, ‘அப்ப இவர்தான்..’ என்று கேட்ட வய்யிடம், ‘பாப்போம்’ என்றார் எக்ஸ். சிறிது நேரம் கழித்து ‘என்ன ஸார் யாரும்…’

‘டைம் ட்வெல் தர்ட்டி ஆகப்போது வய், எனி டைம் நவ், அங்க கவனிங்க’

‘தலைக்கு மேல ஹூட் போட்டிருக்கற பையனா ஸார்’

‘யெஸ்’

அந்த சிறுவன் அரங்கினுள் நுழைய, ‘ போலாம் ஸார்’ என்ற வய்யிடம் ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணலாம்யா,’ என்றார் எக்ஸ்.

‘சாப்பாடு நல்லா இருந்ததா?’ என்று எக்ஸின் குரல் கேட்டவுடன் தடுமாறி எழுந்த முதியவர் ‘ஸார் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ஸார் ‘ என்று கைகூப்பியபடி அவர்கள் அருகே வரவும் ‘பதட்டப்படாதீங்க’ என்று எக்ஸ் நாற்காலியில் அமரச் செய்தார். ஓட ஆரம்பித்தச் சிறுவனை பிடித்து நிறுத்தினார்.

‘பயப்படாதீங்கய்யா, தண்ணி குடிக்கறீங்களா’

இரு மிடறுகள் விழுங்கி விட்டு தொடைகளில் கைகளை தேய்த்துக் கொண்ட முதியவரிடம் ‘ஏன் இப்படி பண்றீங்க’ என்று எக்ஸ் கேட்க ‘பயமுறுத்தனும்னு பண்ணலைய்யா, மாட்டி விட்டுடாதீங்க’ என்று முணுமுணுத்தார்.

‘ஸார்கிட்ட விஷயத்தச் சொல்லுங்க, எதுவும் நடக்காது,’ என்றார் வய்.

துள்ளுவதை நிறுத்தியிருந்த சிறுவனைச் சுட்டி, ‘இவன் ஒங்க பேரன்னு நினைக்கறேன், சரியா?’ என்று எக்ஸ் கேட்க, ‘ஆமாம் ஸார், பையனோட பையன். என் மகன் மருமகள விட்டுட்டு ரெண்டு வருஷம் முன்னாடி எங்கயோ ஓடிட்டான், அவதான் வளத்துட்டிருந்தா. போன மாசம் அவளும்…’ அழ ஆரம்பித்த முதியவரைப் பார்த்து சிறுவனும் அழ, வய் அவனைத் தேற்றினார்.

‘இவனப் பாத்துக்க வேற யாரும் இல்ல ஸார், எனக்கும் இந்த இடத்த விட்டா தங்கறதுக்கு வேற எங்கயும் போக முடியாது. அதனாலதான் இப்போதைக்கு இவன யாருக்கும் தெரியாம இங்கயே தங்க வெச்சிருக்கேன். என்னத் தவிர வேற யாரும் தங்க ஒத்துக்க மாட்டாங்க. வேற வேலை பாத்திட்டிருக்கேன் ஸார், கடச்ச உடன கெளம்பிடுவேன்.’

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

‘ரூம்லேயே எவ்ளோ நேரம் அடச்சு வைக்கிறது ஸார், அதனால கும்பலோட சேர்ந்திட்டா ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்கன்னு…’ என்று முதியவர் ஆரம்பிக்க அந்தப் பையன் பக்கம் எக்ஸ் திரும்பினார்.

‘நெறய பேர் இருப்பாங்க ஸார், யாருக்கும் என்னத் தெரியாது. தனியா எல்லாரோடையும் சுத்திட்டிருப்பேன். அப்பறம்தான் நானே விளையாட ஆரம்பிச்சேன்’ என்றான் அவன்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘சமூக நலத்துறைகிட்ட சொன்னா அவங்க ஒங்க பேரன ஹாஸ்டல்ல சேப்பாங்க. நீங்க சனி ஞாயிறு அவன போய் பாக்கலாம். நான் அவங்க கிட்ட பேசறேன்’ என்றார் எக்ஸ்.

‘வேணாம் ஸார், நானே இவன பாத்துக்கறேன்’ என்று முதியவர் சொல்லவும், பேரனும் ‘தாத்தாவோடத்தான் இருப்பேன்’ என்றான்.

‘இங்க ஒங்ககூட இருந்தா அவன் படிப்புலாம் எப்படி? ஓனர் கிட்ட பேசி இப்போதைக்கு இங்க தங்க வைக்க சொல்றேன், அப்பறம் ஒன்னு ஹாஸ்டல்ல சேக்கணும், இல்ல நீங்க வேற வேலை பாத்துக்கணும்’

‘ஸார் ஓனர்..’

‘எதுவும் சொல்ல மாட்டாரு, நான் பாத்துக்கறேன். இப்பதான் அவன் இங்க தங்க வர மாதிரி சொல்லிக்கலாம். பேய், பிசாசு புரளிலாம் இனி திரும்பி வரக் கூடாது சரியா’

முதியவர் தலையாட்டினார்.

தீம் பார்க் உரிமையாளரிடம் பேசி அவரிடம் முதியவரின் பேரன் அவருடன் சில நாட்கள் தங்க அனுமதி பெற்றார்கள். ‘இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வேற ஏற்பாடு பண்ணிடலாம், நாங்களே வந்து சொல்றோம்’ என்று முதியவரிடம் தெரிவித்து விட்டு கிளம்பினார்கள். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்ற எக்ஸ், மீண்டும் உள்ளே சென்று முதியவரிடம், ‘இத வெச்சுக்குங்க’ என்று பணம் கொடுக்க, அதை வாங்கத் தயங்கிவரைப் பார்த்து, ‘பேரனுக்குதான் தர்றேன், வாங்கிக்குங்க’ என்றவுடன் வாங்கிக் கொண்டார்.

‘வாங்க வய்’

‘என்ன ஸார் திரும்பி உள்ள போனீங்க?’

‘ஒண்ணுமில்ல’ என்று எக்ஸ் சொல்ல, ஏதோ கேட்க வந்ததை நிறுத்தினார் வய்.

‘முந்தைய கேஸ்போது கொஞ்சம் நெர்வஸா இருந்த மாதிரி தோணிச்சு வய், இந்த தடவை அப்படி தெரியல, குட் ஜாப்’

‘புனைவுலகம்கூட ஒரு நாடக மேடைதானே ஸார். போன தடவை நம்ம அரங்கேற்றம், வாசக பார்வை நம்ம மேலேயே இருக்குங்கற உணர்வு என்னை இயல்பா இருக்க விடல. இப்ப கொஞ்சம் பழகிடுச்சு’

‘தனியாவே கேஸ் ஹேண்டில் பண்ணலாம் நீங்க’

‘கண்டிப்பா ஸார், அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா…’ என்று ஆரம்பித்தவர் எக்ஸின் முக மாற்றத்தை கண்டதும் தொடரவில்லை. எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்த எக்ஸிடம் ‘ஆத்தர் தன் வசதிக்கு கதைய எங்கேயோ கொண்டு போய் திடீர்னு முடிச்சிட்டார்னு சொல்லப் போறாங்களோன்னு தோணுது ஸார். ஜாய்லேண்ட் நாவல்லேந்து…’

‘அது வாசகர் பாடு, எழுத்தாளர் பாடு நமக்கென்ன வந்தது. பாஸ்டீஷ், ஸெல்ப்-பாரடி வகை கதை இப்படி ஏதாவது சொல்லி நியாயப்படுத்துவார்.’

‘நெஜமாவே அவர் இந்த பாஸ்டீஷ் வகைமைலாம் மனசுல வெச்சுகிட்டு தான் எழுதறாரா ஸார், அப்ப நாம என்ன கோமாளிகளா. நான் ஸ்காட்லாண்ட் யார்ட்..’

‘யோவ் நிறுத்துய்யா ஸ்காட்லாண்ட் யார்ட் புராணத்த. எழுத்தாளர் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறார். அவருக்கு ஒத்துழைப்பு குடுக்கணும்யா. என்னைக்  கூடத் தான் குள்ளமான மனிதர்னு இந்தக் கதைல சொல்லி இருக்கார் , கடுப்பா இருக்கு. இப்ப அதைப் பத்தி கேட்க  முடியாது, அதனால புகழ் பெற்ற நம் சமகாலத்து பிரஞ்சு  குற்றப்புனைவு காவல்துறை அதிகாரி கேமெலிய வெஹவென் கூட குள்ளம் தானேன்னு என்னை தேத்திக்கறேன். இன்னும் ஒண்ணு ரெண்டு கேஸ் சால்வ் ஆகட்டும், ஹைட்ட இன்க்ரீஸ் பண்ணிடறேன் பாரு. இப்போதைக்கு அவர் செய்யறதை பொறுத்துத்தான் ஆகணும், அப்பறம் நாம நினைத்ததை செய்யலாம். பாத்திரங்கள் உயிர் பெற்று எழுத்தாளனை மீறிச் செல்வது புனைவுலகில் ஒன்றும் புதுசில்லையே, வி ஹேவ் டைம் பார் தட். இலக்கிய அமரத்துவம் காத்திக்கிட்டிருக்குங்கறத மறந்துடாத’

‘ஓகே ஸார், ஆனா குற்றப் புனைவுன்னா, அது பகடியாவே இருந்தாலும் வாசகர்களுக்கு எப்படி மர்மத்தை கண்டு பிடிச்சோம்னு சொல்லி ஆகணும் இல்லையா.எப்படி பெரியவர சஸ்பெக்ட் பண்ணீங்கன்னு அவங்களுக்கு நாம தெரிவிக்கணும்’

‘ரெண்டு மூணு விஷயம் இருக்குயா. பர்ஸ்ட் அந்த பையன் குதிரை ராட்டினத்துல குதிரை மேல ஒக்காந்திருந்திருக்கான் அவ்ளோதான், அதை அவன் ஓட்டலை, ஆனா ஹெலிகாப்டர ஓட்டிருக்கான். அப்ப இன்னொருவர் யாராவது அதை ஆப்பரேட் பண்ணிருக்கணும் இல்லையா, ஏன்னா பையன் ஒரே ஆளா ரெண்டையும் செய்ய முடியாது. ரெண்டாவது விஷயம் இது, ரொம்ப முக்கியம். வேலை செய்யறவங்க பல பேர் பையன பாத்திருக்காங்க, ஆனா தான் யாரையும் பாத்ததில்லைன்னு பெரியவர் அடிச்சு சொன்னார். அதுவும் இவர் வேலை செய்யற இடத்துலேயே, மேனேஜர் பார்த்ததா சொல்லியும் ஒத்துக்க மாட்டேங்கறார்னா அது சந்தேகத்தை கிளப்பியது. நேத்து ஹாரர் ஹவுஸ்ல வெளியாள் ஏழெட்டு பேர் பார்த்திருக்காங்க, இவர் அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இருந்தும் அப்பவும் யாரையும் பாக்கலைன்னுதான் சொன்னார். உளவியல் ரீதியான க்ளூன்னு இதை வெச்சுக்கலாம்னு ஆத்தர் சொல்றார்’

முதல் நீச்சல் குளத்தை வந்தடைந்திருந்தார்கள்.

‘இன்னொரு க்ளு இருக்குல ஸார்’

‘…’

‘ரெண்டு சாப்பாட்டு பொட்டலம் வந்ததே. ஒரே ஆளுக்கு ரெண்டு எதுக்கு, அதுவும் வயசானவர் புல் கட்டு கட்ட வாய்ப்பில்லையே. அது தான் உங்களுக்கு முக்கியமமான க்ளூஇல்லையா ஸார்’

‘யோவ், எப்படியா அத கண்டு பிடிச்ச’

‘நானும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படிச்சிருக்கேன் ஸார்’

‘சரி, அந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைய பத்தி வேற எதுவும் பேச வேண்டாம். அது நுட்பமான க்ளூன்னு ஆத்தர் நெனச்சாருய்யா..’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதீத ஒலியில் பாடலொன்று ஒலிக்க ஆரம்பிக்க, நீச்சல் குளங்களில் இருந்தவர்கள் வெளியேறி, திறந்த வெளி ஷவரை நோக்கி ஓடினார்கள். தொந்தி மனிதர் தொப்பை, தொடை, மேலுடம்பு என பாகங்களை தனித் தனியாக அசைத்துக் கொண்டு செயற்கை மழையில் நனைந்தபடி நடனமாட ஆரம்பித்தார்

‘எங்கய்யா சாப்பிடலாம், ராம் இன்டர்நேஷனலா இல்ல சற்குருவா?’

‘ஸார் எவ்ளோ சீக்கிரமா பிரச்சனைய தீர்த்திருக்கோம், அத இப்படியா     கொண்டாடுறது. நம்ம கதைதான் ரொம்ப சாத்வீகமா இருக்கு, சாப்பாடாவது…’

‘சரி காரை ரெஸ்டாரண்டுக்குப் போவோம், இல்ல பஞ்சாபி தாபா’

ஷவரை கடக்கும்போது ‘காட்ஸ் இன் ஹிஸ் ஹெவன் எவ்ரிதிங் இஸ் ரைட் வித் த வர்ல்ட்’ என்றார் வய்.

‘என்னய்யா திடீர்னு சம்பந்தம் இல்லாம, அதுவும் தப்பா வேற சொல்ற, அது ஆல்ஸ் ரைட் வித் த வர்ல்ட்’

‘ஒரு வார்த்தைதான ஸார் மாறியிருக்கு, ஆனாலும் இப்ப நமக்கு பொருந்துதே. இன்னொரு கேஸ ரொம்ப சீக்கிரம் சால்வ் பண்ணிட்டோம், தாத்தாவோட பிரச்சனை தீர்ந்திடுச்சு, இனி தீம் பார்க்ல பேய் இருக்காது, இங்க வர ஜனங்க ஜாலியா இருக்கலாம், அங்க பாருங்க ஷவர் டான்ஸ்ல என்னமா கூத்தடிக்கறாங்க, நாமளும் நல்லா மூக்கு முட்ட வெட்டப் போறோம், பஞ்சாபி தாபால பட்டர் சிக்கனும் லஸ்ஸியும் செம காம்பினேஷன். எல்லாம் சுபம் இல்லையா’

எக்ஸ் எதுவும் சொல்லாமல் வர, சில கணங்கள் கழித்து வய், ‘தன்னோட புனைவுகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கணும்னு ஆத்தர் ரொம்ப ஏங்கறார். இலக்கிய மேதைகளின் வரிகளை கதைல பொருத்தமா சேர்த்தா அப்படியொரு அதிசயம் நடக்கும்னு ஒரு எண்ணம் அவருக்கு. அதனால குடுக்கற டயலாக்க சொல்லிட்டுப் போவோம் ஸார், நம்மால முடிஞ்ச உதவி. மனுஷன் என்னலாமோ ட்ரை பண்றார் பாவம்.’

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

‘மண்டே மார்னிங்கே என்னய்யா ப்ரச்சன,’ வண்டியிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு கேட்டருகில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், ‘சடன் டெத் ஸார்,’ என்று பதிலளித்தார்.

வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினார் இன்ஸ்பெக்டர். ‘என்னாச்சு?’

‘அறுபத்தஞ்சு வயசு மேல் ஸார், வைப் நோ மோர். பையன் பிரான்ஸ்ல இருக்கார். ரெண்டு வீடு தள்ளி சொந்தக்கார பையன்தான் வேணுங்கறத கவனிச்சுக்குறான், வீட்டு வேலை செய்யறதுக்கு ஒருத்தங்க வராங்க. அந்தம்மா எப்பவும் போல இன்னிக்கு ஆறரை மணிக்கு வேலைக்கு வந்திருக்காங்க. பெல் அடிச்சும் கதவை தொறக்கலைன்னவுடனே ரிலேடிவ்கிட்ட சொல்லிருக்காங்க. அவர் தன்கிட்ட இருந்த சாவிய வெச்சு தொறந்து பாத்தா, ஓனர் பெட்ல டெட். ஒடனே இன்பார்ம் பண்ணிடாங்க’

‘நம்ம டாக்டர் வந்து பாத்தாச்சா?’
‘இன்னும் இல்ல ஸார். அவங்கதான் ரிலேடிவ் அண்ட் வேலை செய்யறவங்க’ என்ற சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் அருகில் அழைத்தார். வேலைக்காரம்மா புதிதாக எதுவும் சொல்லவில்லை. சொந்தக்காரர், ‘நா நேத்து நைட் மெடிசன் வாங்கித் தந்துட்டு கெளம்பறதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தாரு. ரொம்ப லோன்லியா இருக்குப்பா, பேரன பாக்கணும்னு ரொம்ப வருத்தப்பட்டார், அதுக்காக சூசைட் பண்ணிப்பார்னு நெனக்கவே இல்லை ஸார்’ என்று அழுதார்.

‘நீங்க இங்கயே இருங்க, பாடி எங்க இருக்கு?’

பெரிய படுக்கையறை. உடலின் அருகில் சென்று பார்த்தார் இன்ஸ்பெக்டர். எந்த துன்புறுத்தலுக்கும் ஆளானது போல் தெரியவில்லை.

‘சந்தேகப்படும்படியா எதுவும் இல்லை ஸார், ஒரு பார்மாலிட்டிக்கு ஒங்களுக்கு இன்பார்ம் பண்ணினோம்’

‘அப்டி ஈஸியா எடுத்துக்காதய்யா , இதுதான் வாசகர்கள் படிக்கற பர்ஸ்ட் கேஸ், நெறைய பேர் பார்வை நம்ம மேல இருக்கு’

‘நெறைய பேர் படிக்காறாங்களா…’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார்’

‘பர்ஸ்ட் இம்ப்ரெஸ்சன்தான் முக்கியம், எதாவது சொதப்பிட்டோம்னு வெச்சுக்க, லிடிரரி சூசைட்தான்’

சப்-இன்ஸ்பெக்டர் பதிலெதுவும் சொல்லவில்லை. அறையைச் சுற்றி வந்தார் இன்ஸ்பெக்டர். கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் நேற்றைய தினசரி, வாட்டர் பாட்டில். குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தார். ‘ஸ்ட்ரேஞ்’ என்றபடி எழுந்தவரிடம், சப்-இன்ஸ்பெக்டர், ‘என்ன ஸார் தேடறீங்க’ என்று கேட்டார் .

‘இந்த ரூம்ல இருக்க வேண்டிய ஒண்ணு இல்லைன்னு கவனிச்சீங்களா?’.

இல்லையென்று தலையாட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

‘ரொம்ப கேர்புலா அப்சர்வ் பண்ணுங்க. டாக்டர் இன்னும் வரலைன்னு சொன்னீங்கல்ல’

‘ஆமாம் ஸார்’

‘குட். அந்த ரெண்டு பேரையும் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க’

‘நீங்க ரூம்ல வந்தவுடனே என்ன பண்ணீங்க. கரெக்ட்டா, ஒண்ணு விடாம சொல்லுங்க’

வேலைக்காரம்மா சொந்தக்காரரைச் சுட்,டி ‘இவரு வீட்டு கதவ தொறந்துட்டு, ஸார கூப்ட்டுக்கிட்டே போனார், நான் பின்னால வந்தேன். இங்க ஸார் பெட்ல இருந்தாரு. இவர் கிட்டக்க போய் பாத்துட்டு ஐயோன்னு கத்தினாரு,’ என்று சொல்ல சொந்தக்காரர் பக்கம் இன்ஸ்பெக்டர் திரும்பினார்.

‘உடம்ப தொட்டுப் பாத்தேன் ஸார், ஜில்லாப்பா இருந்தது, உடனே வெளில வந்துட்டோம்’

‘வேறே எதையாவது பெட் பக்கத்துல பாத்தீங்களா, தேடினீங்களா?’

‘இல்ல ஸார்’

‘அப்ப எவ்ளோ நேரம் இந்த ரூம்ல இருந்தீங்க?’

‘ரெண்டு மூணு நிமிஷம்தான் இருக்கும் ஸார்’

‘ஓகே, ஒடம்ப தொட்டு பார்த்து இறந்துட்டார்னு தெரிஞ்சுக்கிட்டீங்க, ஆனா சூசைட் பண்ணினாருன்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க, அதுவும் பதட்டமா இருந்திருப்பீங்க, ரூம்ல வேற ரெண்டு மூணு நிமிஷம்தான் இருந்தேன்னு சொல்றீங்க,’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
‘நேத்து அவரு…’

‘சூசைட் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாரா ‘

‘இல்ல ஸார், தனியா இருக்கறதபத்தி தான்…’

‘அத வெச்சே சூசைட்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?’

‘..’

‘உங்ககிட்டயும் இந்த வீட்டுச் சாவி இருக்குல்ல’

சொந்தக்காரர் தலையசைத்தார்.

‘நேத்து நைட்டு இங்க வந்தபோதுதான் அவர கடசியா நீங்க பாத்தது, இல்லையா?’

‘ஆமாம் ஸார்’

‘எப்ப வந்தீங்க, எப்ப கிளம்புனீங்க?’

‘எட்டு, எட்டே கால் இருக்கும் ஸார் நான் வந்தப்போ, பேசிட்டு ஒன்பது மணி வாக்குல கிளம்பினேன், அப்படி பேசும்போதுதான் அவரு..’

இடைமறித்த இன்ஸ்பெக்டர், ‘அதுக்கப்பறம் நீங்க இங்க வரவேல்ல இல்லையா?’ என்று கேட்டார்.

‘ஆமா ஸார்’

‘நேத்து நீங்க மெடிசன் வாங்கிட்டு வந்ததா சொன்னீங்கல்ல?’

‘ஆமா ஸார்’

‘என்ன மெடிசன்?’

‘வழக்கமா சாப்பிடறதுதான் ஸார்’

‘எந்த பார்மஸில வாங்கினீங்க?’

பெயரைச் சொன்னார்.

‘அதே க்வான்ட்டிடி தான வாங்கினீங்க’

‘ஆமா ஸார்’

‘எப்பவும் வாங்கற கடையாத்தான் இருக்கும்லையா, நேத்து வாங்கினதுக்கான பில் வெச்சிருப்பீங்க’

‘…ஸார்கிட்ட தந்துட்டேன் ஸார்… இந்த ரூம்ல தான் ஸார் இருக்கணும்’

‘தேடுவோம், எங்க போகப் போகுது. ஒரு சின்ன விஷயம், நீங்க எப்படி அவர் சூசைட் தான் பண்ணிக்கிட்டார்னு முடிவுக்கு வந்தீங்கன்னுதான் எனக்கு புரிய மாட்டேங்குது. டாக்டரே இன்னும் வந்து பாக்கலையே’

‘..’

‘சொல்லுங்க. இந்த ரூம்ல எந்த மெடிசனும் இல்லையே, எங்க போச்சு’

‘..’

‘பிடிங்க அவன!’

அறையை விட்டு ஓடிய சொந்தக்காரரை வெளியே இருந்த காவலர்கள் பிடித்தார்கள்.

‘இந்த மாதிரி கேஸ்ல சஸ்பெக்ட்ஸ் எல்லாரையும் இந்த மாதிரி ரூம்ல கூட்டி வெச்சு க்ரைம் எப்படி நடந்திருக்கும்னு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு, அத இந்த ரூம்ல இருக்கற யாரோதான் பண்ணியிருக்காங்கன்னு சொல்லி, கடசியா நீதான் குற்றவாளின்னு அடையாளம் சொல்லணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை,’ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் இறந்தவரின் உறவினரைப் பார்த்தபடி சொன்னார் இன்ஸ்பெக்டர்.

‘ரெண்டு பேர்தான் இருந்தாங்க ஸார்,இன்னும் கொஞ்சம்…’

‘அடுத்த வாட்டி பாத்துக்கலாம்யா, க்ரைம் பிக்க்ஷன்ல குற்றங்களுக்கு பஞ்சமே கிடையாதுயா, நெறைய சஸ்பெக்ட்ஸ் கிடைப்பாங்க’

‘இவ்ளோ சீக்கிரத்துல சால்வ் பண்ணிட்டீங்க ஸார். ஒங்களத் தவிர யாரும் இது ஒரு மர்டர்னு சந்தேகமே பட்டிருக்க மாட்டாங்க, க்ரேட்’

‘அப்படி சொல்ல முடியாதுயா, இதுல நான் எக்ஸ்ப்ளைன் பண்ணாத ஒரு விஷயம் இருக்கு, நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல. வாசகர்கள் அப்சர்வ் பண்ணிட்டாங்கன்னா அவ்ளோதான், நம்ம லிடரரி லைப் ஓவர். அப் கோர்ஸ் அதுக்கும் என்கிட்டே ஒரு விளக்கம் இருக்கு பட் ஸ்டில்..’

‘என்ன ஸார் அது’

‘நீயே கண்டுபிடி. மிசஸ். ப்ராட்லிகிட்ட(https://www.gladysmitchell.com/on-mrs-bradley) பேசணும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணி மெயில்லாம் அனுப்பி நேத்துதான், இன்னிக்கு மார்னிங் அவங்ககிட்ட பேச கால் பிக்ஸ் பண்ணியிருந்தேன். அவங்க குற்றங்கள இன்வெஸ்டிகேட் பண்ற விதத்துலேந்து நாம கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. எல்லாம் சொதப்பலா போச்சு. அவங்ககிட்ட எக்ஸ்க்யுஸ் கேக்கணும்’

‘நூறு வயசுக்கு மேல இருக்கும்ல ஸார் அவங்களுக்கு?’

‘அதுக்கு மேலயே இருக்கும், ஒன் ட்வென்டி பைவ் இருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அவங்களோட முதல் இன்வெஸ்டிகேஷன்போதே வயசானவங்கதான். அதான் லிடரரி லைப், க்ளிக் ஆயிடுச்சுன்னா நித்தியத்துவம்தான்’

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது சப்-இன்ஸ்பெக்டர், ‘ஸார் ஒண்ணு கேக்கணும்னு,.. நம்ம ரெண்டு பேரையும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்ன்னு தான் குறிப்பிட்டிருக்க தவிர, நேம் இல்லையே. அதுலயும் நாம யுனிபார்ம்ட் கேடரா இல்ல ஸ்பெஷல் ப்ராஞ்ச், சிபி-ஸிஐடி, ஹோமிசைட் மாதிரி வேற ஏதாவதான்னுகூட தெரியலையே.’

‘இத பத்தி எழுத்தாளர் கிட்ட கேட்டேன். மொதல்ல இந்த இன்வெஸ்டிகேஷன் பத்தி வாசகர்கள் பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணட்டும், அப்பறம் பெயர் வெக்கறத பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். அதுக்கு முன்னாடியே போலிஸ் டிபார்ட்மென்ட்ஸ் பத்திலாம் ரிசர்ச் செய்யறதுல என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாதுங்கறார். இந்த க்ரைம நாம கண்டுபிடிச்ச விதம் நம்பற மாதிரியே இல்லைனோ, போர் அடிக்குதுன்னோ சொல்லிட்டாங்கன்னா நம்ம கதை முடிஞ்சுது ..’

‘இன்னொரு விஷயம் ஸார், அதாவது நான்.. என்னோட ரோல்..’

‘அதைப்பத்தியும் ஆத்தரே சொன்னார். பொதுவா இந்த மாதிரி ரெண்டு பேர் இன்வெஸ்டிகேட் பண்ணும்போது ஒருத்தர் சும்மா டம்மியாத்தான் இருப்பார், ஆனா அத நான் மாத்தப் போறேன்னாரு. இந்த ழானர்ல புதுசா நிறைய விஷயங்கள் பண்ணப் போறாராம். அதனால ஒனக்கும் நிறைய சான்ஸ் கிடைக்கும், அத பத்தி கவலைப்படாத. நெறைய ரீடர்ஸ் இத படிக்கணும், படிச்சிட்டு நல்லபடியா ரெஸ்பான்ட் பண்ணனும், அதுதான் முக்கியம்.’’

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘என்னய்யா யோசிச்சிட்டிருக்க’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘பாவம் ஸார் ரீடர்ஸ், இப்ப அவங்கள நெனச்சாத்தான் கவலையா இருக்கு’