அரிசங்கர்
என்னிடம் பேச வேண்டும் என்று அவன் காலையிலேயே சொல்லிவிட்டான். சரி, மாலை என்னுடன் வீட்டுக்கு வா பேசலாம் என்று அவனிடம் சொல்லி அவனை அமைதிப்படுத்தினேன். அவன் மிகவும் ஆவேசமாக இருந்தான். எதாவது செய்தே ஆக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான். அதை என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும். இருந்தாலும் அவன் என்னிடம் பேச நினைத்ததை நினைத்து நான் கொஞ்சம் திருப்தி அடைந்தேன். அவனைச் சமாதானப்படுத்தலாம். அவன் ஆவேசத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தலாம். இந்த வேலையை விட்டுவிட்டால் அடுத்தது என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் புரியவைக்கலாம். அதற்காகவே அவனை மாலை வீட்டுக்கு அழைத்தேன். நான் வீட்டுக்கு அழைத்ததும் அவன் கொஞ்சம் சமாதானம் அடைந்தான். தன் மீதி வேலையில் கவனத்தை செலுத்தினான். அப்போதிலிருந்து இருவரும் மாலைக்காகக் காத்திருந்தோம்.
கடினமான ஒரு வேலை நாளில், மனம் மிகவும் சோர்ந்து, குழப்பத்துடன் இருக்கும் போது, அதுவும் பிடிக்காத இடத்தில் அமர்ந்துகொண்டிருக்கும் போது பிற்பகலில் இருந்து மாலை வரைக் காத்திருப்பது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கிறது. மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரை. வெறும் மூன்று மணி நேரமாக இருக்கலாம். ஆனால் அது வெறும் மூன்று மணி நேரமல்ல, நூற்று என்பது நிமிடங்கள். அப்படிக்கூட அல்ல அது மிக நீண்ட பத்தாயிரத்து எந்நூறு நொடிகள். ஒவ்வொன்றாக என்ன வேண்டும். பத்தாயிரத்து எந்நூறு வரை எண்ணி முடித்துப்பார்த்தால் அரை மணி நேரம் தான் கடந்திருக்கும். இது பிடிக்காத சினிமாவில் அமர்ந்திருப்பது போல் அல்ல. வேலைக்காகக் காத்திருப்பது போல் அல்ல. பிரசவத்திற்குக் காத்திருப்பது போல் அல்ல. இது மூச்சு விடுவதற்காகக் காத்திருப்பது. நிம்மதியான ஒரு நீண்ட பெருமூச்சுக்காக. அப்போது கிடைக்கும் ஒரு விடுதலைக்காக. ஏதோ ஒன்று நம்மிலிருந்து விடைபெற்றுப் போகும் அந்தத் தருணத்திற்காக காத்திருப்பது. அதெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்துவிடக் கூடியது தான். ஆனால் அதற்காகத் தான் இந்தப் பத்தாயிரத்து எந்நூறு நொடிகள்.
அலுவலகம் விட்டு வெளியே வந்ததும் ஏற்படும் விடுதலை உணர்வை எப்போதும் நான் ரசிப்பேன். அதிகப்படியாகத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சீராக துடிக்கத் துவங்கும். அதன் பின் எனக்கு எந்த பரபரப்பும் இருக்காது. விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வெல்லாம் கிடையாது. வெளியே வந்துவிட்டோம், அவ்வளவு தான். இனி மெதுவாக நடந்து சென்று பேருந்து பிடித்து வீட்டுக்குச் செல்லலாம். இன்று அவனும் என்னுடன் இணைந்துகொண்டான். இருவரும் எதுவும் பேசவில்லை. பொதுவாக நாங்கள் எப்போதும் தனியாக தான் பேசுவோம். அவன் என்னுடன் அமைதியாக நடந்துவந்தான். இருவரும் பேருந்துக்காக காத்திருந்தோம். தெரிந்த ஒன்றிரண்டு அலுவலக நண்பர்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் லேசாக ஒரு வாடிய புன்னகையை வீசினார்கள். என்னிடமும் வாடியதே இருந்தது. கவலை, சோர்வு, எரிச்சலில் புன்னகைப்பதே ஒரு அதிசயம் தான். நான் அவனைப் பார்த்தேன் அவன் யாரையும் பார்த்த மாதிரியே தெரியவில்லை. அவர்களும் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
பேருந்து ஒரு பக்கம் சாய்ந்தவாறே வந்து நின்றது. இன்னும் ஐம்பது பேருக்கு அதில் இடமிருந்தது. நாங்களும் அதில் தொற்றிக்கொண்டோம். அடுத்த பேருந்துக்காக சிலர் நின்றுவிட்டனர். நான் சிரித்துக்கொண்டேன். அடுத்ததும் இப்படித்தான் வரும். அதற்கடுத்ததும், அதற்கடுத்ததும். என்னைப் பெருத்த வரை இது ஒரு கூட்டமே அல்ல. பையில் இருந்த சில்லறையை எடுத்து இரண்டு டிக்கெட் வாங்கினேன். பலமுறை நான் இரண்டு டிக்கெட் வாங்கியிருக்கிறேன். இதுவரை ஒரு முறை கூட எந்த நடத்துனரும் மற்றொருவர் யார் எனக் கேட்டதேயில்லை. வேலை நாட்களின் மாலை நேரத்தில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாபேட்டை என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. தேனாம்பேட்டையில் பேருந்து ஏறும் போது வானத்தில் இருந்த சிறு வெளிச்சம் சைதாபேட்டையில் காணாமல் போயிருந்தது. மெட்ரோவால் அகலமாகியிருந்த சாலையைக் கடக்க வழக்கத்துக்கு மாறான நேரத்தை எடுத்துக்கொண்டாலும் முன்பு இருந்த வாகனங்களின் நெரிசல் இப்போது இல்லை. மணி அதற்குள் ஏழாகிவிட்டிருந்தது. இருவரும் கலைஞர் ஆர்ச் பக்கத்துத் தெருவில் வழியாகச் சென்று அம்மா மெஸை அடைந்து இரவு உணவை முடித்துக்கொண்டோம். வயிற்றில் பாரம் ஏறியதும், மனதிலிருந்த பாரம் சிறிது குறைந்தது போல் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவன் முகம் முன்பு போல் இல்லை. கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தது.
மெதுவாக நடந்து வீட்டை அடைந்தோம். இரண்டாவது மாடியில் இருந்தது வீடு. இருவரும் உள்ளே நுழைந்தோம். அவன் செருப்பை கழட்டிவிட்டு அப்படியே முன்பக்கதில் சென்று வேடிக்கை பார்க்க துவங்கினான். நான் மட்டும் உள்ளே சென்றேன்.
“அவனை ஏன் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றாள் அவள். நான் திரும்பிப்பார்க்காமல் பதில் சொன்னேன்.
“அவன் கொஞ்சம் பிரச்சனையில் இருக்கான், அவன சமாதானப்படுத்தத் தான்.” என்றேன்.
“இங்க யாரையுமே கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லிருக்கன்ல” என்றது குரல்.
நான் அமைதியாக இருந்தேன்.
“கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்”
“சரி நாங்க வெளிய படுத்துக்கறோம்.” என்று சொல்லிவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு, படுக்கையைத் தூக்கிக்கொண்டு வந்து படுத்தேன். சிறிது நேரம் கழித்து அவன் என் அருகில் வந்து படுத்தான். இருவரும் வானத்தையே வெறித்துகப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தான் முதலில் துவங்கினேன்,
“இப்ப என்ன பண்றதா உத்தேசம்”
“வேற வேலை தான் பாக்கணும், இனிமே இங்க குப்பக்கொட்ட முடியாது.”
“சரி, இப்ப உனக்கு யார் வேலைத் தர தயாரா இருக்கா”
“ஏன், எனக்கென்ன? பதனஞ்சி வருஷ அனுபவம் இருக்கு, எங்க போனாலும் கிடைக்கும்”
“ஆப்படினு யார் சொன்னா? போய் நெட்ல தேடிப்பாரு, ஆயிரம் வேலை இருக்கு, ஆனா எவனும் பத்து வருஷ அனுபவம் வேணும்னு கேக்கல. இரண்டு மூனு வருஷம் இருந்தா போதும் தான் சொல்றான். அவனால அவனுக்குத் தான் சம்பளம் தர முடியும்.”
“ஏன் இப்ப இங்க நான் வாங்கலையா”
“வாங்கற அதனால தான் உன்ன தொறத்த இதெல்லாம் செய்யறானுங்க. உனக்குப் பதில் மூனு இல்லானா நாலு பேருக்கு உன் சம்பளத்த தரலாம்.”
“அப்படினா, என்ன மாதிரி இருக்கறவன்லாம் எப்படி வாழறது. தீடிர்னு போவ சென்னா, வேற எவனும் எடுக்க மாட்டன்னு சொன்ன, இந்த வேலைய நம்பி கடன் வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி, பசங்கள நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்து அப்பாடானு நிமிர்ந்து பார்க்கும் போது வெளியப்போடானு சொன்ன, என்ன பண்றது”
“அது எனக்கும் தெரில, ஆனா ஒண்ணு, இப்போ இந்த வேலைய விட்டுட்டா, அவ்ளோ தான். வேற வேலை தேட ஆரம்பிச்சாதான் உனக்கு நான் சொல்லவரது புரியும்.”
“என்ன இந்த வேலைய விட்ட வாழவே முடியாதுனு சொல்றீயா”
“நான் அப்படி சொல்லல, இந்த மாதிரி வாழ முடியாது.”
அவன் பலமாக சிரித்தான், “இப்ப என்ன ராஜ வாழ்க்கையா வாழறோம்”
“மாசக்கடைசிலயும் பட்டினி கெடக்காம இருக்கல, எதனா அவசரம்னா கிரிடிட் கார்ட் வெச்சிருக்கல. அதெல்லாம் இங்க இருக்கறதுனால.”
“ஆனா நீ நிம்மதியா வாழறியா, நிம்மதியா தூங்கறியா, நீ படுத்து இரண்டு மணி நேரம் ஆவுது ஏன் இன்னும் உனக்குத் தூக்கம் வரல”
நான் அமைதியாக இருந்தேன். மீண்டும் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தேன். போலியான ஒரு பிரகாசத்தை நம்பி இன்னும் எத்தனைப் பேர் இப்படி அகப்படப் போகிறார்கள். இதை விட்டுப் போக நினைத்தால் முட்டாள் என்கிறார்கள். மீண்டும் பறக்க முடியாத ஒரு வலையில் போய் சிக்கிக்கொண்ட பறவையை போல் ஆகிவிட்டது. ஏதேதோ கற்பனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போதாவது எட்டிப்பார்க்கும் தைரியத்தியும் வாங்கிய கடன்களும், இருக்கும் கடமைகளும் பயமுறுத்தியது. நான் மீண்டும் அவனிடம் பேசவில்லை. அவன் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. விழிப்பு வந்த போது விடிந்திருந்தது.
எழுந்து அமர்ந்து சுற்றிப்பார்த்தேன். என் அருகில் அவன் இல்லை. எழுந்து உள்ளே சென்றேன். உள்ளே அவளும் இல்லை. எனக்குத் தெரியும் இருவரும் இருக்க மாட்டார்கள் என்று. படுக்கையை ஓரமாக வைத்துவிட்டு என் அறையை ஒரு முறை சுற்றிப்பார்த்தேன். ஒரே அறை. சில ஆடைகள், சில பொருட்கள், சில புத்தகங்கள். அதை இப்போதெல்லாம் படிப்பதில்லை. படிப்பதினால் தான் உன்னால் வேலை செய்ய முடியவில்லை என சில அறிவுஜீவிகள் அலுவலகத்தில் சொல்ல அதையும் விட்டு எறிந்தாகிவிட்டது. மொத்தமாகக் கட்டினால் ஒரு மூட்டைக்குள் அடைத்துவிடலாம். யோசனைகளை விட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றேன். இரண்டு முறை தண்ணீரை வாரி ஊற்றிவிட்டு மீண்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தேன். செய்யும் செயலைவிட யோசனைகள் வர வர அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒரு வழியாகக் குளித்துவிட்டு அறைக்கு வந்தேன். அறைக்குள் வீட்டுக்காரப் பாட்டி அமர்ந்திருந்தாள். நான் ஒரே ஒரு துண்டு தான் அணிந்திருந்தேன். உள்ளே அவளைப் பார்த்ததும் வெளியே கொடியில் இருந்த ஒரு கைலியை எடுத்து அணிந்துகொண்டு துண்டை மார்பில் போர்த்திக்கொண்டு உள்ளே சென்றேன்.
என்னைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்து வைத்தேன்.
“உன் கூட கொஞ்சம் பேசனும்ன்னு வந்தேன். வேலைக்கு கிளம்பிட்டியா”
“இல்லை இன்னும் நேரம் இருக்கு”
“உடம்பு எதனா சரியில்லையாபா”
“இல்லையே, நல்லாதான இருக்கன்”
“இல்ல முந்தா நேத்து உன்ன அந்த முக்கு கிட்ட பாத்தேன். தனியா பேசிக்கிட்டே போன, சரிப் போன் பேசறனு நினைச்சி விட்டுட்டன். நேத்து ராத்திரி மாடிப்பக்கம் வந்தா நீ வெளிய படுத்துகிட்டு தனியா பேசிகிட்டு இருந்த, அதான் கேட்டன்”
நான் அமைதியாக இருந்தேன்.
“தப்பா எடுத்துக்காத, நாப்பது வயசாக போது ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ல”
நான் லேசான சிரித்து வைத்தேன். அதில் இருந்த விரக்தியை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
“அதுக்கில்லபா துணை இருந்தாதான் ஒரு பிடிப்பு இருக்கும் அதான் சொன்னேன்.”
நான் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சரி, ஏன் தனியா இருக்க, கூட யாருனா பசங்கள சேத்துக்கலாம்ல”
நான் அதற்கும் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு அவள் என்ன சொன்னால் என எதுவுமே என் காதில் விழவில்லை. நான் வழக்கம் போல் என் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சட்டென திரும்பிப் பார்த்த போது அவள் அங்கு இல்லை. எப்போது போனார் எனத் தெரியவில்லை. வேகமாக உடைகளை மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு படிகளில் இறங்கும் போது வீட்டுக்காரர் நின்றிருந்தார். அவரைக் கடக்கும் போது வழி மறித்தார்,
“சார் ஒரு நிமிஷம்”
“சொல்லுங்க”
“அடுத்த மாசம் ரூம காலி பண்ணிருங்க”
நான் அமைதியாக நின்றிருந்தேன். அவர் ஏதோ விளக்கம் சொல்ல துவங்க, நான் ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவர் தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தது.
“பைத்தியக்காரன், எதனா பண்ணிக்கினா யார் அலையறது”.
நான் மெதுவாக நடந்துகொண்டிருந்தேன். இல்லை தொலைந்துப் போய்க்கொண்டிந்தேன்.
Like this:
Like Loading...