அர்ஜூன் ராச்

எனும் புத்தர் எனும் மைத்ரேயர்

அர்ஜூன் ராச்

மிக வேட்கையிலுள்ள
என் ஆன்மாவுக்கான சுனை
தொடுவான் வழி ஓதவானக்கோட்டின்
நிலைகொண்டிருப்பதாக கேள்வி

பாதம் பதைக்க, பாதை பற்றிய
எந்த உணர்தலுமற்று நா வறண்டு
நாள்தோறும் அவ்வே தொடர்ந்தேன்

ஒருநாள் சிறு முள்ளேற்றிக் கொண்டதில்
வழிந்த குருதித்துளி கொண்டு
தாகமாற்றிக் கொண்டேன்

பிரிதொரு நாள் பள்ளமொன்றில்
விழுந்தேறிய
மயிர்கூச்செரிதலின் வழிந்த வியர்வையைக் கொண்டு
விடாய் போக்கிக் கொண்டேன்

மற்றொரு நாள் வாகனமொன்று
தாக்குவது போல் உரசிப் போன பயத்தில்
கழிந்த மூத்திரத்தின் ஈரநீர்மை முகர்ந்துகொண்டு
தொடர்ந்து இலக்கின் வழி முன்னேறினேன்

நாள்களில் ஒருநாள் புறப்படும்போது
என் பார்வையில்
எலியொன்றை துரத்தியபடி
பூனையொன்று குறுக்கிட்டுப் பாய்ந்தது
நிச்சயமாக அது அவசகுனமில்லையென
நித்யமாக அவதானித்துக் கொண்டிருந்தேன்
அவை ஒன்றையொன்று
பிடிபடாமலும் பிடிக்க முடியாமலும்
ஓடி களைத்துக் காணாமல் போனதுகள்

கவனம் கலைந்து தொடுவானம் தொடர
முற்படும்போது
பாட்டமாக கார்மேகம் சூல் முனைந்து
இடி இடிக்கத்தொடங்கியது
நாளையென வீட்டுக்கு திரும்பி,

‘வீதி நிறைப் பெய்யும் மழை ‘
ஓய்ந்து ஓய்ந்து வானம் தெளிவதில்
களித்துக் கொண்டிருக்க ‘அ’சாளரத்தின்
கீழ்ச்சட்டக்கோட்டில்
என்னால் அநாதியாக மனமறதியாக்கப்பட்டிருந்த
மீச்சிறு ஆசைகள் முத்து முத்தாக சிரித்துக் கொண்டிருந்தன

அதிலொன்றை மெல்ல விரல்கொடுத்து
தொட்டுப் பார்த்தேன் என் வேட்கைக்கு
அவை குளிர்ப்பாக
நாபிக்கமலம் வரை நனைத்து பாவிடத் தொடங்கின
நானதில் முழுவதுமாய்
மூழ்கி முக்தித்துக் கொண்டிருந்தேன் யாரோ என்னை கூப்பிடுவது போலிருந்தது
நான் செவிமடுக்கவே இல்லை

மேலும் குறியீடாக
சொல்லக் காத்திருந்தது இதுதான்
என் பெயர் ‘மைத்ரேயன் ‘ என்று,
என்னையும் சேர்த்தே நம்பவைக்கப்பட்டு
அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஊடலின் 4th கீர்

அர்ஜூன் ராச்

வெய்யில்
சமாதானமாகிக் கொண்டிருந்த வேளை
ஒரு துனிப்பின் பயணத்தில்
என் தோள்வனையாமல்
பின்னிருக்கையில் அமர்ந்தபடி
நம் பிரேமையின் உருகுநிலையில்
உறைந்து கொண்டிருந்தாய்

சட்டென இமைகீறி எதிர்ப்பட்ட வண்ணத்துப்பூச்சியொன்றின் நக உராய்வில்
குடை சாய்வது போன்ற என் திகைப்பில்
குற்றுயிர் சுவாசமுடன்
‘பாத்துங்க…’ என்று
இருக்கியணைந்தாய்
இமைகளோடு என்னை

‘பேசிட்ட பாத்தியா’ என்றதும்

நிலவுக்கு முகமடுத்து
மீண்டும் ஊடினாய்
அந்தியோடு அந்தியாய் வண்ணங் குழைந்த
உன் மந்தகாச ஒளிப்பினை
பிம்பமித்து,
பிரகாசம் கூட்டி எனக்கு
காட்டிக் கொடுத்துவிட்டது
நம் காதல் வாகனத்தின்
ரியர்வியூ கண்ணாடி.

கூடலின் 4th கீரில் வேகமுறுக்க
உனக்கும் எனக்குமிடையில்
அடிக்கடி தலைபட்டு,
வழக்கம் போல
வந்ததும் வராததுமாய் சில்லறுந்து
பின்வாங்கினாள்
தழுதழுத்த அருவமாய்
நம் ஊடல் பெரிய மனுஷி