இரா. கவியரசு

​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை

பெரிய பட்டை வைத்த உள்​​ளாடை
சிறிய கோடு வைத்த உள்ளாடைக்கான
சூரிய ஒளியை மறைத்தபடி
காய்ந்து கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நெருக்கப்பட்ட
பெரிய ஆடைகள்
இரண்டையும் தள்ளியபடி
சூரியனை எடுத்துக் கொண்டன.
கிளிப்பை விட்டுப்
பறக்க நினைத்தாலும் அவசரத்திற்குக்
காய்ந்தால் போதுமென நகருகின்றன.
ஈரத்துடன் மோதிக் கொள்வது
எரிச்சலாக இருந்தாலும்
நறுமணத் தண்ணீரில் மூழ்கி எடுத்ததால்
சகித்துக் கொள்வது பழகியிருந்தது.
காய்ந்த பெரிய ஆடைகளை
இரவில் மழைக்கு பயந்து
எடுத்துச் சென்றவர்கள்
உள்ளாடைகளை மறந்து விட்டனர்.
திடீரென கிட்டிய தனிமையில்
கிளிப்பை மறந்து குதித்து
தலையும் கால்களும் முளைத்து
நடனமாட ஆரம்பித்தன.

​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை

நகர்ந்து செல்லும் வீட்டிற்குள்
உள்பக்கமாகப் பூட்டியிருக்கும் கதவுக்கு
சுவற்றின் வண்ணத்தைப்​​ பூசியிருக்கிறார்கள்.
குட்டிக் கதவுகளை சுவர் முழுவதும் வரைந்து
கண்ணாம்பொத்தி ஆடும் குழந்தை
வெளியில் ஒளிந்திருக்கும்
குழந்தையின் தலையைக்
கால்களால் தொடும் ரகசியக் கணத்தில்
சுவரில் வரைந்த குட்டிக்கதவுகள்
பட்டாம்பூச்சிகளாக மாற
இருபுறமும் பறக்கின்றனர்.
வெளியிலிருக்கும் வீடு
இப்படித்தான்
உள்ளே இருக்கும் வீட்டை
நள்ளிரவில் கொஞ்ச ஆரம்பிக்கும்.
நச்சரிப்பு தாளாமல் தள்ளிப்படுக்கும் உள் வீடு
“காணாத சூரிய சந்திர மழைக் கதைகளை
எழுதி எழுதி ஒப்பிக்காதே !
அறைக்கதவுகள்
உடையும்படித் தளும்புகின்றன.
இனி ஒரு போதும்
கதவுகளை அடைக்காமல்
வீட்டை நகர்த்து”
என்கிறது.

​செங்கண்கள் – கவியரசு கவிதை

செங்கண்கள் நிரம்பி வழிய
அலகிலிருந்து பிடுங்கப்படுகிறது ​​
காற்றில் மிதக்கும் மெல்லிசை.

புகைப்படம் எடுப்பவர்
வெவ்வேறு கோணத்திற்காக
மரத்தில் ஏறும் போதும்
செங்கண்களை விட்டுவிட்டு
குரல்வளையின் நிர்வாணத்தை
ஃபோகஸ் செய்கிறார்.
முட்டிக்கொண்டிருக்கும் எலும்பு
தொடர்ந்து அதிர்வடைவது
இசைக்கு இடைஞ்சலென
செல்லோஃபேன் டேப் ஒட்டுகிறார்.

குரலை ஒலிப்பதிவு செய்பவர்
இன்னும் இன்னும் சத்தமாகக் கூவும் படி
கல்லால் அடிக்கிறார்.
அடிக்குத் தப்பி
ஓடும் குயில்
ஒளிந்து பாட ஆரம்பிக்கிறது

வாலில்
மிகச்சிறிய வெடியுடன் கூடிய
கேமிராவை மாட்டுகிறார்கள்
எடை கூடிய வால்
மண்டையைப் பிடித்து இழுக்கிறது.
பறந்து கொண்டே பாடினால்
புதிதாக இருக்கும் என்று
எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது வெடி கேமிரா.

ஒவ்வொரு முறை பாடிய பிறகும்
கீழே விழுந்து மண்டையில் அடிபட்டதால்
பாடுவதை மறந்த குயில்
வனத்துக்குள்
நடந்து செல்ல ஆரம்பிக்கிறது

கேமிராவின் கடைசிப்பதிவு
சோர்வுற்று நகரும் போது
விளம்பர இடைவேளைக்காக
தொலைக்காட்சியை மாற்றுகிறார்கள்
சத்தமற்று வெடிக்கிறது குயில்.

​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை

மீன்கள் நீந்தும் பாதைகளின் வரைபடத்துடன்
தனக்குப் பிடித்த மீ​​னைப் பிடிப்பதற்காக
கடலுக்குள் சென்று கொண்டிருந்தவனிடம்
பறவைகள் சொல்லிச் சென்றன
“மீன்களுக்காக மட்டும் கடல் அல்ல”

ஒவ்வொரு முறையும்
வலையில் அகப்படும் கணத்தில்
அவன் பிடித்த மீன்
பறவையாக மாறியது.
பறத்தலில்
விரித்த வலைகள் அவிழ்ந்திருந்தன.

பொறுமையிழந்து
கடலைத் தோண்ட ஆரம்பித்தான்
அந்த மீனைத் தவிர
எல்லாமும் வந்து கொண்டிருந்தன.

கடலைக் கடந்தவர்களிடம் கேட்டு
வரைபடங்களை
மீண்டும்
மாற்றி வரைந்த பின்பு
கடலுக்குள் குதித்தான்

அவன் வீட்டின் ஒவ்வோரு அறையும்
இன்னொரு பிரதியைப் போல
ஆழத்தில் மிதந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு பொருளாக
பார்த்துக் கொண்டே வந்தவன்
பறவையாக மாறும் மீன்
எங்குமே இல்லாமல்
இன்னும் இன்னும்
மூழ்க ஆரம்பித்தான்

கடலுக்கு அடியில்
இன்னொரு வழியில் வெளியேறி
மீனை மறந்து
பறந்து கொண்டிருந்தான்.

கவியரசு கவிதைகள் – காற்றை நோக்கி செல்லும் பூ , ​​உயரத்தின் உச்சியில்

காற்றை நோக்கி செல்லும் பூ

ஒவ்வொரு இதழிலும்
பொய்யை வரைவதற்காக
வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது
அந்தப் பூவுக்கு
கோபம் வருவதே இல்லை

வரைந்த பொய்களை
பிற பூக்களுக்குக்கிடையே
நடித்துக் காட்டும்போது
அது அழுவதும் இல்லை

ஒருமுறை
பொய்யை எழுதும் போது
“நீ எழுதுவது பொய்தானே “
என்று குதித்த பூ
அதற்குப்பிறகு
வண்ணங்களற்ற வெள்ளைப் பாடலை
முனுமுனுக்க ஆரம்பித்தது

மற்றுமொரு நாளில்
பூவுக்காக
நறுமணங்கள் வாங்கி வந்த காற்று
பொய்களின் பருவங்களைக் கடந்து விட்டோம்
இனி வசந்தம் மட்டும்தான்
என மீண்டும் பேச ஆரம்பித்தது

காற்றை இரண்டாகப் பிரித்து
கட்டிக்கொண்ட பூ
“ரெண்டு பேருக்கும் செல்லமாம் ”
என்று சிரித்த போது
காற்று
பூவின் வேர்களில்
துகள்களாக உடைந்தது.

இந்த முறை
காற்று வெறுமனே வந்து
பூவை ஏந்திக் கொண்டு பறக்கிறது
ஒவ்வொரு கைகளாக
பூ நகர்ந்து
காற்று பிறக்குமிடத்துச் ​செல்கிறது.

​​உயரத்தின் உச்சியில்

உயரத்தின் உச்சியில்
வெறுமனே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது
பெயர் தெரியாத ஆடு

மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கும்
கூரான கொடிக்கம்பத்தில்
எனக்கான இடத்தைத்
தேர்வு செய்கிறவன்
கொடியை ஏற்றுமாறு அழைக்கிறான்

என் பெயரை
எதிரொலிக்காத மலைகளை
வெட்டித்தள்ள வேண்டும்.
இல்லாத காற்றை
எப்படிக் கொல்வது ?

வருகின்ற வழியெல்லாம்
என் குருதித் தடங்கள் காய்ந்து விடாமல்
அடைகாக்க வேண்டுமென்றேன்

தேன்துளிகளை நோக்கி
​​விரைந்து செல்கின்றன
தடங்களை அழித்தபடி
நகரும் எறும்புகள்

கரையான் புற்றுகளை உதைத்தவன்
உள்ளிருந்த காகிதக்கூழின்
நறுமணத்துக்குத் தீவைத்துப்
பரவ விடுகிறான்

பயந்து
நான்
பின்னோக்கி இறங்குகிறேன்.
கடலுக்குள் மூழ்குகின்றன
ஏறிய மலைகள்.