உஷா வை

நான் ஏன் எழுதுகிறேன் – வை. உஷா

வை. உஷா

இந்தத் தலைப்பில் கட்டுரை எழுத ஆரம்பிக்கையில் முதலில் சிரிப்பு வந்தது.  எழுத்து எனச் சொல்லிக் கொள்ளவே தயக்கமாக இருக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் என் போன்றோர் இதைப் பற்றி என்ன எழுதுவது, இது முதிர்ந்த படைப்பாளிகளிடம் கேட்டு அறிய வேண்டியதல்லவா என்று தோன்றியது. ஆனால் சில பத்திகளை அடித்துத் திருத்தி எழுதிய பின்பே ஞானோதயம் வந்தது. சிறந்த எழுத்தாளர்களுக்கு எழுத்து ஒரு கலை. அவர்கள் ஏன் எழுதுகிறார்கள் எனக் கேட்கத் தேவையில்லை. அவர்களுக்கு எழுத்து என்பது பேச்சைப் போல இயல்பாக வருவது. அவர்களால் தம் எழுத்தின் மூலம் நம்மை சந்தோஷப்படுத்த அழவைக்க, நம் ஆன்மாவை உலுக்க முடியும். ஆனால் எழுதுவதற்கான முனைப்பும் மொழி ஆர்வமும் மட்டுமே உள்ள மற்றவர்கள் எழுதும்பொழுது கட்டாயம் தம்மைக் கேட்டுக் கொள்ளவேண்டிய முக்கியமான கேள்வி இது. நல்ல எழுத்துக்கு மொழித்தேர்ச்சி மட்டுமே போதாது. எதற்காக எழுதுகிறோம் என்ற தெளிவும் தேவை.

‘நான்’ ஏன் எழுதுகிறேன்’ (Why I write) என்ற தலைப்பில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கட்டுரையில் தான் மட்டுமன்றி பொதுவில் எழுத்தாளர்கள் எழுதுவதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்:

  1. உலகில் தன் அடையாளமாக எதையோ விட்டுச் செல்லும் அகந்தை உணர்வு (sheer egoism),
  2. மொழியின் வடிவிலும் சப்தங்களின் மேலும் அவற்றை உபயோகிக்கும் திறனிலும் உள்ள அழகுணர்ச்சி சார்ந்த ஆர்வம் (aesthetic enthusiasm),
  3. உலகை அப்படியே பார்த்துப் புரிந்துகொள்ள முனைந்து அதை எழுத்தில் ஒரு வரலாற்று ஆவணமாய் வருங்காலத்துக்கு விட்டுச் செல்லும் வேட்கை (Historical impulse),
  4. மக்களின் எண்ணங்களை பாதிக்குமளவினால எழுத்தின் மூலம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் (Political purpose).

ஒவ்வொரு எழுத்தாளரிடமும் இவற்றில் ஒன்றாவது காணப்படும். இவற்றில் அகந்தையுணர்வு பொதுவான மனித இயல்பு – நாம் குழந்தைகளை உருவாக்குவதற்கும் அதுதானே காரணம்? ஆனால் மற்ற மூன்றில் ஒன்றின் வலிமையாவது இருந்தாலன்றி சிறப்பான எழுத்தைப் படைக்க இயலாதென்றே தோன்றுகிறது.

ஒரு உணர்வோ, எண்ணமோ, கருத்தோ அதை எழுதிப் பார்க்கையில் அதைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. முதலில் பிரம்மாண்டமாய் தோன்றிய பிரச்சினைகளின் ஆகிருதிக்கு முக்கிய காரணம் நம் அகங்காரம்தான் எனப் புரிகிறது. எழுத்தில் கோர்வையாய் சொல்லமுடியாது போகிற போது நம் எண்ணங்களின் அபத்தம் புலனாகிறது. இதே காரணத்தாலேயே எழுத்துக்கு நம்மையே யார் என்று நமக்குப் புலப்படுத்தும் வலிமை இருப்பதாகத் தோன்றுகிறது. நம் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு உணர்வையோ, எண்ணத்தையோ எழுத்தில் வெளிப்படுத்திப் பார்க்கையில் அதன் பல பரிமாணங்களில் பகுத்தறிய முடிகிறது. இத்தகைய பயிற்சி ஒருவிதத்தில் நம்மை சாந்தப்படுத்த, நல்லறிவு நிலையில்(with sanity) வைக்க  உதவுவதாகவும் தோன்றுகிறது. ஜோன் டிடியன் என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார்: ‘”நான் எழுதுவதற்கு முற்றுமான காரணம் நான் என்ன நினைக்கிறேன், நான் எதைப் பார்க்கிறேன், என்ன காண்கிறேன், அதன் பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே.'”

சில வருடங்களுக்கு வலைப்பக்கங்களில் இதே கேள்வியைக் கேட்ட போது பலரும் சொன்ன பதில் ”பகிர்தலுக்காக”. மனிதர்களிடையே தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கான தாபம் இயற்கையாகவே இருக்கிறது. அதே சமயம் அவற்றைப் பகிர்வதில் கூச்சமும் உள்ளது. அவசரகதியில் இயங்கும் இன்றைய உலகில் குடும்பத்தினரிடையே கூட பகிர்தல் குறைந்து வருகிறது. இதனால் மன அழுத்தமும் புரியாமையும் அதிகரித்து வருகின்றன. எனக்குத் தெரிந்த பல பெண்கள் கடிதத்திலோ டயரியிலோ எழுதுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறதாகச் சொல்கிறார்கள். மருத்துவரான என் நண்பர் வார்த்தைகளுடன் பழகிக் கொண்டிருப்பது மறதி அல்ஜைமர் போன்றவை வராமலிருக்க உதவும் என்கிறார். எல்லோரும் எழுதுவது நல்லது எனினும் எழுதியதைப் பிறரிடம் தடையின்றி பகிர்வதில் உள்ள கூச்சம், மொழியில் தேர்ச்சி, அதை கையாளும் லாகவம், முனைப்பு இவை அனைவருக்கும் அமைவதில்லை. அதனால்தான் பலரும் எழுதுவதில்லை.

இணையத்துக்குப் பின் தம்மை யார் என வெளிப்படுத்தாமல் அன்னியர்களுடன்கூட எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தடையின்றி பகிர்வதற்கு எழுத்து உதவுகிறது. இதே காரணத்தினாலேயே நானும் சில வருடங்கள் ஒரு வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். அன்னியர்கள் நம்மை நாம் எழுதுவதை வைத்து மதிப்பிடமாட்டார்கள் என்ற நிச்சயம் தடையின்றி எழுத உதவியது. அந்த வலைப்பக்கத்தில் கிடைத்த பயிற்சிதான் பின்வந்த வருடங்களில் என் பெயரிலேயே சில கதை/ கட்டுரைகளை எழுதும் துணிச்சலையும் கொடுத்தது.அந்த  அனுபவம் பிறர் படிக்க, பாராட்டத்தான் எழுத வேண்டுமென்பதில்லை, எழுதுவதே திருப்தியை அளிக்கும் திறன்கொண்டது என்றும் புரிந்தது.

எழுத்தாளர்கள் பலருக்கும் ஆரம்ப காலத்தில் எழுதுவதற்கான உத்வேகம் அவர்களுக்கு முன்னோடியான படைப்பாளிகளிடமிருந்து கிடைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு மகத்தான படைப்புகளைப் படிக்கையில்  ‘”எழுதினால் இப்படி எழுத வேண்டும். இல்லையெனில் எழுதக்கூடாது'” என்றே தோன்றும். இளமையிலேயே எழுத ஆரம்பிக்காததால்தானோ என்னவோ சிறந்த படைப்புகளைப் படிக்கும்போது அவற்றை மொழிபெயர்த்து இன்னும் பலருக்கும் அந்த வாசக அனுபவம் கிடைக்க வேண்டும் என்னும் உத்வேகமே தோன்றுகிறது. சிறப்பான எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தினால் பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது எனக்குப் பிடிக்கிறது. இதில் எனக்கு ஒரு படைப்பு அனுபவமும் கிடைக்கிறது; ஒரு விதத்தில் மொழிபெயர்ப்பும் ஒரு மீள்படைப்பு எனவே எண்ணுகிறேன். மூல எழுத்தின் சிந்தனையும் மொழி லாகவமும் சிதைபடாமல் இன்னொரு மொழியில் மாற்றம் செய்வது சிரமமானதாய் இருந்தாலும் முடிவில் அது ஓரளவேனும் (அதுதான் சாத்தியம்) மூலஎழுத்துக்கு நெருக்கமாக அமையுமெனில் கிடைக்கும் நிறைவு அந்த சிரமத்தை நியாயப்படுத்துவதாய் இருக்கிறது.

மொழிமாற்றம் செய்ய வெறும் மொழிஞானம் மட்டும் போதாது. ரசிப்பும் ஆழ்ந்த புரிதலும் தேவைப்படுகின்றன. என்னைக் கவர்ந்த படைப்பை மொழிபெயர்க்க இன்னும் ஆழமாகப் படிக்கையில் என் வாசிப்பனுபவம் முழுமையடைகிறது. மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை மட்டும் மொழிமாற்றம் செய்வது அல்ல – கதையின் அந்நியமான களத்தின் மனிதர்கள் சமூகம், மொழிவழக்குகள் போன்றவையும் வாசகர் உணருமளவிற்கு சரியான இணைப்பதங்கள், வார்த்தை பிரயோகங்கள் என பலவித சவால்களை ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் மூல எழுத்தாளரின் மொழியை விட்டு வெகுவாய்  விலகிச் செல்லும் உரிமையையும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால்தான் இதை ஒரு மீள்படைப்பு என நினைக்கிறேன். அப்படி நினைப்பது எனக்கு மொழிபெயர்க்கும் ஆர்வத்தை நீடிப்பதாலும் கூட இருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கு மொழிபெயர்ப்பில் நான் ஈடுபட உந்தும் மேற்சொன்ன காரணங்களையே, அவை என்னுடைய கற்பனையே ஆயினும், சொல்லலாம். ஒரு சிறந்த படைப்பாளியின் எழுத்தை அவருடைய மொழியிலேயே படிக்கையில் கிடைத்த அனுபவத்தை மொழிபெயர்ப்பின் வாசகர் உணரும் அளவில் மொழிமாற்றம் செய்வது ஒரு பெரும்பணி. என்றாவது கூடுமானவரை அதை அடையும் முயற்சிதான் என் எழுத்துக்கான தூண்டுதல்.

oOo

(“எழுத்ததே அறிமுகம் அதன் பின்னுள்ள எழுத்தாளரை அறிவது அநாவசியம்  என்னும் எண்ணத்தில் பொதுவாய் அறிமுகத்தைத் தவிர்க்க விரும்புபவள். சொல்லிக்கொள்ளுமளவில் எதுவும் படைத்ததில்லை என்பதினாலும். நல்ல எழுத்தின் மேலுள்ள ஆர்வம் சொல்வனம் பதிப்புக் குழுவில் இணைந்து செயல்படுவதற்கான ஊக்கம். நான்கு மொழிகள் ஓரளவுக்கு நன்றாகத் தெரியும் என்பது மொழிபெயர்ப்புக்கு துணை செய்கிறது. பெங்களுர்வாசி.”)