ஏகாந்தன்

காற்றினிலே, ஜீவிதம் – ஏகாந்தன் கவிதைகள்

ஏகாந்தன் 

 

 

காற்றினிலே

தன்வீட்டு வாசலில்
ஒரு அந்திப்பொழுதில்
தனியாக உட்கார்ந்திருக்கிறான்
அந்த வயதான மனிதன்
கண் மங்கி நாளாகிவிட்டது
காது நன்றாகக் கேட்கிறது
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள்
கேட்க ஆரம்பிக்கின்றன
அவனுக்கு எதிர்த் தெருவில்
அவர்கள் நெருங்க நெருங்க
அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில்
உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை
உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள்
கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ
காதுகளை மென்னொலி அலைகள்
கதகதப்பாய் வருடுகின்றன
சிலிர்த்துக்கொள்கிறான்
மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க
மயக்கும் குரல்கள் மங்கி மறைய
பெருமூச்சு விடுகிறான்
தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள்
தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக

 

**

ஜீவிதம்

கவிழ்க்கப்பட்ட நிலையில்
விசித்திர மதுக்கோப்பை
இந்த பிரம்மாண்ட ஆகாசம்
அதிகமாக நக்ஷத்திரமும்
மிதமாக சந்திரனும்
கொஞ்சமாக சூரியனுமாய்
கிறங்கவைக்கும் காக்டெய்ல்
களிப்போடு இதழ் பொருத்தி
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன்
கந்தர்வ போதையில்
கரைகிறது காலம்

 

**

ஏகாந்தன் ஐந்து கவிதைகள்

ஏகாந்தன் 

எங்கெங்கும் எப்போதும்

வெளியூர் போயிருந்த
குடும்பம் திரும்பியிருந்தது
கேட்டாள் பெண் கவலையோடு:
தனியா இருந்தது போரடிச்சதாப்பா?

என்று நான் தனியே இருந்தேன்
என்னுடன் அல்லவா
எப்போதுமிருக்கிறேன்
என்ன சொல்லி எப்படிப்
புரியவைப்பேன் மகளுக்கு ..

**
அம்மா நிலா

மொட்டைமாடிக்குத்
தூக்கிக்கொண்டுவந்து
அம்மா காட்டிய முதல் நிலா
அழகு மிகவாக இருந்தது
இப்போதும் ஒன்று அவ்வப்போது
வந்து நிற்கிறது என் வானத்தில்.
மேலே சுட்டுவிரல் நீட்டிக் காட்டி
கதை சொல்ல
அம்மாதான் அருகிலில்லை.
தானாக எதுவும்
புரிவதில்லை எனக்கும்

**
கணப்பொழுதே ..

தாத்தா தூங்கிண்டிருக்கார்
ரூமுக்குள்ள போகாதே !
அம்மாவின் எச்சரிக்கையை
காதில் வாங்காது
குடுகுடுவென உள்ளே வந்த
குட்டிப்பயல் கட்டிலில் தாவினான்
குப்புறப்படுத்திருந்த என்
முதுகிலேறி உட்கார்ந்து
திங் திங்கெனக் குதித்து
குதிரை சவாரிசெய்தான்
முதுகின்மேலே இந்தச் சின்ன கனம்
எவ்வளவு சுகமாயிருக்கு ..
மனம் இழைய ஆரம்பிக்கையில்
தடாலெனக் குதித்து ஓடிவிட்டான்
குதிரைக்காரன்

**

ஒத்துழைப்பு

ஜன்னலைத் திறந்துவைத்தேன்
மின்விசிறியைச் சுழலவிட்டேன்
சுகாசனத்தில் உட்கார்ந்தேன்
கண்ணை மெல்ல மூடியவாறு
’தியானம்!’ என்றேன்
உத்தரவிடுவதுபோல்.
அப்படியே ஆகட்டும் – என்றது
முன்னே தன் குப்பைக்கூடையை
திறந்துவைத்துக்கொண்டு
அருகிலமர்ந்துகொண்ட மனம்

**
நிலை

படுக்கையறையின் தரையில்
மல்லாக்கக் கிடந்தது கரப்பான்பூச்சி.
இல்லை, இறந்துவிட்டிருந்தது.
தன்னை நிமிர்த்திக்கொண்டு
ஓடி ஒளிவதற்கான ப்ரயத்தனம்
வாழ்வுப்போராட்டமாக மாறிவிட,
இறுதித் தோல்விகண்டு
உயிரை விட்டிருக்கிறது அந்த ஜீவன்.

நிமிர்ந்து படுத்து நிதானமாகக்
கூரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் –
உயிரோடு இன்னும் நானிருப்பதாக
நம்பிக்கொண்டு

டார்ச்சர்

ஏகாந்தன் 

பூங்காவைச் சுற்றிச் சுற்றி
வந்தது போதுமென கொஞ்சம்
ஓய்வு தனிமைக்கு ஆசைப்பட்டு
ஓரத்து காலி பெஞ்சில் உட்கார்ந்தேன்
நொடியில் நெருங்கிய ஒரு நோஞ்சான்
முகக்கவசத்தைக் கீழிறக்கி
பக்கத்தில் உட்கார்ந்து இளிக்க
பல்லைக் கடித்தேன் மனதுக்குள்
தள்ளி ஒரு பக்கமாக நகர்ந்தேன்
உடனே எழுந்து சென்றால்
உட்கார்ந்த மனிதனை
அவமதித்ததாக ஆகிவிடுமே ..
”இந்தக் கொரோனா விடாது சார்
எல்லாரையும் அனுப்பிச்சிட்டுத்தான் போகும்”
நூல்விட்டுப் பார்க்கும் ஆசாமியை
மேல்நோக்க ஆர்வமின்றி
பேருக்கு ஆட்டினேன் தலையை லேசாக
”கேஸ் ஜாஸ்தியாகிக்கிட்டிருக்கு சார் ..
மூணாவது அலை வந்தாச்சு !”
அதுக்கு என்னய்யா பண்ணச் சொல்ற
என்பதாக நேராக முறைத்து
போதும் என கையை உயர்த்தினேன்.
விட்டுருவானா அவ்வளவு ஈஸியா ..
”நார்த் கொரியால கொரோனா வந்த ஆளுங்கள
சுட்டுத் தள்ளிடறாங்களாம் சார்!”
இன்னும் யாரையும் நான் கொலை செய்ததில்லை
இன்று ஒரு கொலை விழுவதில் விருப்பமில்லை
என மனம் முணுமுணுக்க
எழுந்து நடக்கலானேன்

இன்று இங்கு வந்திருக்கிறேன்

ஏகாந்தன்

சிறகு போல் மிதக்கும்
மிருதுவான நினைவுகளோடு
உன்னூருக்கு
வந்திருக்கிறேன்
போய்விட்ட காலத்தின்
பொன் சுவடுகளுக்கேங்கி
அலைகிறேன் அங்குமிங்குமாக
இதோ உன் ராஜவீதி
பின்பக்கம் தள்ளியிருக்கும் கோவிலில்
பதற்றமின்றி நிற்பார் பெருமாள்
சத்தமாக இயங்கும் பெண்கள் பள்ளி
நிசப்தமாக நெருங்கி நிற்கும் அந்த மரம்
களைத்த முகங்களோடு
இளைத்த உடல்களோடு
நினைவுகளின் சிற்றலைகள்
நெஞ்சுக்கரையில் விசிறியடிக்க
நனைந்தவாறு நடக்கிறேன்
மெல்ல நெருங்குகிறது
உன் வீடு
என் கோவில்
நீ நிலவாத அகத்தின் அகத்திற்குள்
நீர்த்துப்போன கண்களால் துழாவுகிறேன்
எங்காவது அசையாதா உன் நிழல்
ம்ஹும் ..
என்று பிடிபட்டாய் ..
இன்று தரிசனம் தர