தொலைக்காட்சியில் நிகழ்ச்சிக்கிடையே அந்த விளம்பரம் வந்தது. எல்லா நிகழ்ச்சிகளிலுமே பத்து நிமிடங்களுக்கொரு முறை, எதிர்கட்சியை கேலி செய்யும் வெவ்வேறு மாதிரியான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதால், ஒருவித சலிப்புடன், செல்வம் ஒலியை அணைத்தபோது தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த அம்மா இவனைப் பார்த்தார். அவன் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையைக் கண்டு “என்னாச்சு” என்றார்.
செல்வமும் அவன் அப்பா கணபதியும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். டீபாயின் மேல் கிடந்த லேசாகக் கசங்கிய தமிழ் நாளிதழின்மேல் அம்மாவின் கண்ணாடி இருந்தது.
“பத்து வருசமா இருந்தவனுங்க, தான் செஞ்சத சொல்லாம அடுத்தவங்கள கிண்டல் பண்றானுங்க. நீயும் இவனுங்களுத்தான் ஓட்டப் போடுவ”
அம்மா லேசாக புன்னகைத்து, “அப்படியே பழகிடுச்சு. என்ன பண்ணச் சொல்ற” என்றார்.
கணபதி எந்த உணர்வும் காட்டாத முகத்துடன் ஒலியின்றி ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தார்.
“இதனாலதான் அவனுங்க மேல வர்ற கோபத்தவிட ஒங்க மேல அதிகமா கோபம் வருது”
“ஏன்”
“தலைவரா இருந்த அந்தம்மா இருந்தவரைக்கும் எப்படி பம்மிக்கிட்டு இருந்தானுங்க. இப்ப எப்படி துள்ளிக்கிட்டு திரியிறானுங்க”
“அவங்க துள்றதுல ஒனக்கு என்ன பிரச்சனை”
“எனக்கு பிரச்சனையில்ல. நம்ம மாநிலத்துக்குதான். அந்தம்மா ஏத்துக்காம இருந்த திட்டத்தையெல்லாம் நம்ம மேல திணிச்சப்ப பல்ல இளிச்சுக்கிட்டே ஏத்துக்கிட்டாங்களே அது ஒங்களுக்குப் புரியுதா”
“எவ்ளோ கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நம்ம புள்ளைங்க படிச்சு மொத எடத்துக்கு வந்திருங்க. அதப் பத்தி நீ கவலப்படாத”
பதில் சொல்ல முயன்றபோது அலைபேசி அழைத்தது. சண்முகம் அண்ணன்தான் அழைத்தார். அம்மா செல்வத்தின் முகத்தில் தெரிந்த தவிப்பை கவனித்ததும் பார்வையைத் திருப்பி தொலைக்காட்சியை பார்த்தார். அம்மாவின் பாவனையை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்காமலேயே அறையைவிட்டு பால்கனிக்கு வந்தபின் அழைப்பை ஏற்றான். சண்முகம், செல்வத்தின் பெரியப்பா மகன்.
“சொல்லுங்கண்ணே”
“செல்வம் வீட்ல இருக்கியா. கொஞ்சம் அவசரம் அதுக்காகத்தான் இப்ப கூப்ட வேண்டியதாயிடுச்சு. சாரிப்பா”
“பரவாயில்ல, சொல்லுங்கண்ணே”
“ஒன் அண்ணிக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. ஆஸ்பிடல் போகனும்”
“என்னாச்சுண்ணே. பயப்படற மாதிரி ஒண்ணுமில்லையே” அதிர்ச்சி தொனிக்கும் குரலில் செல்வம் கேட்டான்.
“ஒனக்குதான் தெரியுமே. பய நெனப்புலேயே ஒழுங்கா சாப்பிடாம ஒடம்பு எளச்சிட்டா. மதியத்துல சாப்பிடராளோ இல்லையோ தெரியல. நான் வந்தவுடன எனக்கு காபி கொண்டாறேன்னு அடுப்படிக்கு போனவ மயங்கி கீழே விழுந்துட்டா”
“அய்ய்யோ. அடி எதுவும் படலையே”
“இல்லையில்ல. செவத்த ஒட்டியே விழுந்ததால அடி எதுவும் படல. மொகத்துல தண்ணி தெளிச்சவுடனே முழிச்சிட்டா”
“ஒடனே பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்கண்ணே”
“கூட்டிட்டு போகனும். அதுக்காத்தான் ஒன்னய கூப்பிட்டேன்…” தயக்கத்துடன் இழுபட்டது வார்த்தை.
“தயங்காம சொல்லுங்கண்ணே. எவ்வளவு வேணும்”
“செல்வம், ஏற்கனவே நெறைய கொடுத்திருக்க. மறுபடியும் கேக்கறதுக்கு தயக்கமாதான் இருக்கு. வேற யாருக்கிட்டயும் கேக்க முடியாமத்தான்… ஒங்கிட்ட கேக்கறேன். ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதடா”
“ஏண்ணே இப்படியெல்லாம் பேசுற. ஒரு ஐயாயிரம் ரூபாய ஒன் அக்கௌன்ட்ல போடறேன். மொதல்ல அண்ணிய ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போங்க. மறுபடியும் கவனமில்லாம இருக்காதீங்க,” என்று இணைப்பைத் துண்டித்தான். அலைபேசியிலேயே அவரின் கணக்குக்கு பணத்தை அனுப்பினான். பணம் சென்றடைந்ததைக் கூறும் குறுத்தகவலுக்காக காத்திருந்த நேரத்தில் கீழே தரையில் வைக்கப்பட்டு முதல்தளம் வரை வளர்ந்து வந்து பூத்திருந்த முல்லை மலர்களைப் பார்த்தபடி அதன் சிறிய இலைகளை வருடினான். அதன் மெல்லிய மணம் மனதின் பதட்டத்தை சற்று நிதானமாக்கியது. குறுந்தகவல் வந்தவுடன் உள்ளே சென்றான்.
நுழைந்தபோதே, அடுப்படியில் இருந்த மனைவி ரமா விழிகளாலேயே செல்வத்தை அழைத்தாள். என்ன என்ற முக பாவத்துடன் சென்றவனிடம் “எதுக்குங்க அத்தைக்கிட்ட இத கேட்டுக்கிட்டு இருக்கீங்க. அவங்களப் பத்திதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே. என்ன சொன்னாலும் அவங்க கேக்கப் போறதில்ல. ஒங்களுக்குதான் டென்சன்” என்றாள்.
அவள் பேசும்போது உதட்டசைவிற்கு ஆமா போடுவதுபோல காதில் தொங்கிய ஜிமிக்கி முன்னும் பின்னும் ஆடியது. சாளரம் வழியாக வந்த காற்றால் உந்தப்பட்ட நான்கைந்து குழல்கள் இணைந்து காதிற்கு முன்புறம் வந்து துள்ளின.
ஜிமிக்கியையும் குழலையும் நோக்கிக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் சொல்றத கவனிச்சிங்களா இல்லையா?” எனக் கேட்டாள்.
“என்ன சொன்ன?”
“சரியாப் போச்சு. அத்தைக்கிட்ட ஓட்டுப் போடறதப் பத்தி எதுவும் கேக்காதீங்க,” என்றாள்.
“ஆமால்ல. பேசிக்கிட்டு இருந்தத மறந்தே போயிட்டேன். இந்தத் தடவையும் எப்படி அதே சின்னத்துக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு நல்லாக் கேக்கலாம். நீயும் வா.”
“அய்யா சாமி.. ஒங்களையே கேக்க வேண்டாம்னு சொல்றேன். என்னய வேற கூப்படறீங்களா. இத்தன தடவ முடியாததையா இப்ப மாத்தப் போறீங்க. நீங்க ஏதாவது பண்ணுங்க, என்னய இழுக்காதீங்க சாமி,” கும்பிடும் பாவனையில் கையை குவித்துவிட்டு அடுப்பை நோக்கித் திரும்பியவளின் கையைப் பிடித்தான். இறுக்கமாக கையின் மேல்பக்கம் அழுத்திக் கொண்டிருந்த வளையலை தளர்த்தியபடி “ரமா, நீ சொல்லு. நீ யாருக்கு ஓட்டுப் போடுவ?” என்று கேட்டான்.
“ஏன்.. இதிலென்ன சந்தேகம் எப்பவும் போடறதுக்குதான்”
“அதத்தான் யாருக்குன்னு கேக்கறேன்”
“அத நீங்க கேட்டா ஒடனே சொல்லனுமா. எனக்கு யாருக்குத் தோணுதோ அவங்களுக்குப் போடுவேன். ஒங்கக்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை,” என்றபடி கையை இழுத்துக் கொண்டு திரும்பியவள், தோளை மெல்ல உலுக்கிக் கொண்டு உதட்டை லேசாகக் கடித்தபடி புன்னகைத்துக் கொண்டாள்.
இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான் என்று முணுமுணுத்தபடி உள்ளே வந்தான். தொலைக்காட்சியில் அடுத்த நெடுந்தொடரின் விளம்பர நேரத்தில் அதே போன்ற கேலி அரசியல் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒலியைக் குறைத்துவிட்டு இவனை நோக்கிய அம்மா, “போன்ல யாரு, அந்தப் பாவியோட மவனா?” என்று கேட்டார்.
“ஏம்மா, பெரியப்பாவே போயிச் சேந்துட்டாரு. இன்னும் கோபத்தை விடாம வச்சுக்கிட்டு இருக்க”
“அவம் போயிட்டானா செஞ்சதெல்லாம் மறைஞ்சிருமா?”
“சரி, அவரு செஞ்சதுக்கு சண்முகண்ணே என்ன பண்ணுவாரு?”
“அவஞ் சம்பாதிச்சு சேத்ததுக்கெல்லாம் இவந்தானே வாரிசு. நல்லதுக்கு மட்டுமில்ல கெட்டதுக்கும் பாவத்துக்கும் சேத்துத்தான்”
“சரி விடும்மா, எல்லாத்தையும் எழந்துட்டு நிர்க்கதியா நிக்கறாரு”
“நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். அவங்கிட்ட எந்தத் தொடர்பும் வச்சுக்காத. அவனுக்கு உள்ளத அவன் அனுபவிப்பான். யாராலயும் காப்பாத்த முடியாது. கை கொடுக்கறேன்னு நீயும் உள்ள விழுத்திடாத… அம்புட்டுதான் நாஞ்சொல்வேன்”
“அத நான் பாத்துக்கிறேன் நீ கவலப்படாதம்மா. நாம பேசுன விசயத்துக்கு வருவோம்”
“என்ன?”
“ஓட்டுப் போடறதப் பத்தி. இவங்க தலைவி எறந்து போனாங்களே. அதுல மர்மம் இருக்குன்னு சொல்லி யுத்தம் தொடங்கினாரே. அப்பறம் ரெண்டு பேரும் ஒண்ணாக் கூடின ஒடனே மர்மமெல்லாம் மாயமா ஆயிடுச்சே… அதக் கவனிச்சிங்களா”
“எப்டியோ அவங்க போயிட்டாங்க. இப்ப விசாரிச்சு என்னாகப் போகுது?”
அப்போது கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்த செல்வம் “வாங்க சார்” என்று எழுந்தான். வீட்டு உரிமையாளர் மாணிக்கம் உள்ளே வந்தார். அம்மா காலை மடக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தார். அப்பா முகத்திலும் லேசாக முறுவல் தோன்றியது.
“ஒக்காருங்க” என்று அம்மா சொன்னபோது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். மாணிக்கம் மாநகராட்சியில் இளநிலை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
“நல்லாருக்கீங்களா. உங்களத்தான் பகல்ல பாக்கவே முடியறதில்ல”
“எங்க, காலையில கெளம்பி வேலைக்குப் போனா… வந்து சேர ஏழுமணிக்கு மேல ஆயிடுது. இப்ப எலக்சன் டூட்டி வேற போட்டிருக்காங்க. இன்னைக்கு ரெண்டாவது நாள் டிரெயினிங். முடிஞ்சு கெளம்பி வர்றதுக்கு இவ்ளோ நேரமாயிடுச்சு”
“வாங்க சார்” என்றபடி வந்த ரமா காபிக் கோப்பையை அவரிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவர் “எப்படிமா சொல்லாமலேயே காபி கொண்டு வந்திட்ட”
“உங்க குரல் கேட்டுச்சு. அதான் காபியோடவே வந்திட்டேன்”
அவரின் புன்னகையில் அவளின் செயலை பாராட்டும் தொணியிருந்தது.
“ஒருநாள் எலக்சன் டூட்டிக்கு எவ்வளவு தர்றாங்க” என்று அம்மா கேட்டார்.
“போனதடவ ரெண்டாயிரத்து ஐநூறு கொடுத்தாங்க. இந்தத் தடவ கொஞ்சம் அதிகமா தருவாங்கன்னு நெனக்கிறேன்”
“பரவாயில்லையே, ஒரு நாளைக்கு இவ்ளோ கொடுக்கிறது”
“நீங்க வேறம்மா. ஒரு நாளுன்னு ஈசியா சொல்றீங்க. மூணு நாளைக்கு ட்ரெயினிங். அப்புறம் எலக்சனுக்கு மொத நாளு சாயந்திரமே அங்க போகணும். அதோட எலக்சன் முடிஞ்சவுடனே கெளம்ப முடியாது. எல்லாத்தையும் சீல் வச்சுட்டு, பெட்டி எடுக்கறதுக்கு அவங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும். ஒருதடவ நைட்டு ரெண்டு மணிக்குதான் வந்தாங்க. அதுக்கப்புறம் கெளம்பி வீட்டுக்கு வரணும்” என்றவர் “வேல நேரம் கூட பரவாயில்லம்மா… பக்கத்துல சாப்பாடு கெடைக்காது. கழிவறை சரியா இருக்காது. அதோட கொசுக்கடி வேற. ரெண்டு நாளு நைட்டும் சரியா தூங்க முடியாது. ஒடம்பு நார்மல் ஆறதுக்கு, மூணு நாளாகும் ”
“ஒங்க வேலையும் நார்மலா கஷ்டந்தான். ஆனா, சம்பளத்தோட லீவு விட்டாக்கூட நேரா வந்து ஓட்டுப் போட்டுட்டு போறதுக்கு பல பேருக்கு மனசு வரமாட்டேங்குது” என்றார் அம்மா.
“ஆமா … தேவையில்லாதவங்களுக்கு ஓட்டுப் போடறதவிட போடாம இருக்கறவன் மேல்தான்” என்றான் செல்வம் கேலியாக அம்மாவை நோக்கியபடி.
“என்ன செல்வம் இப்படிச் சொல்லிட்ட. மக்கள ஓட்டுப் போட வைக்கிறதுக்கே எவ்ளோ செலவாகுது தெரியும்ல”
“தெரியுது சார். ஆனா எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம போடறவங்களுக்கேதான் போடுவேன்னு சொல்றவங்கள என்ன செய்யறது”
செல்வம் அவன் அம்மாவைத்தான் சொல்கிறான் எனப் புரிந்து கொண்டவர், “சில பெரியவங்க மாறமாட்டாங்க. அதுக்கு என்ன பண்றது. சரி இந்தா இந்த மாச வாடகைக் கணக்கு, ஒரு ரெண்டு நாள்ல கொடுத்திட்டீங்கன்னா நல்லாருக்கும்” என்று செல்வத்திடம் ஒரு தாளை கொடுத்துவிட்டு எழுந்தார். குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை அவர் உடலில் தெரிந்தது. “வர்றேங்க” என்று அம்மாவிடம் கூறிவிட்டு எல்லோரையும் பார்த்து தலையாட்டியபடி சென்றார்.
“தம்பீ… இப்ப எதுக்கு அவருகிட்ட போயி இப்படில்லாம் பேசற” செல்வத்தைப் பார்த்து அம்மா கேட்டார்.
“நமக்கு மேலேயிருந்து வரவேண்டிய எதையுமே கேட்டு வாங்காம, நமக்குப் பாதகமா அவங்க சொல்றதயெல்லாம் தலையாட்டிக்கிட்டே செய்றாங்களே… அவங்களுக்குதான் ஓட்டுப் போடுவேன்னு சொல்றியே… இது சரியா”
“எதுத்துக் கேட்டா மட்டும் தடுக்க முடியுமா? அவங்களுக்கு யாரோட தயவும் தேவையில்லாத நெலமையில அவங்கள எப்படி கட்டுப்படுத்த முடியும்?
இப்ப எதுக்கு மூச்சப் பிடிச்சு பேசிகிட்டிருக்கே. நானும் செய்தியெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். எனக்கு தெரியும் எது நாயமுன்னு,” என்று தொடர்ந்து பேசிய அம்மாவை எப்படி மறுப்பதென யோசித்தபடி பார்த்தான் செல்வம். அருகிலிருந்த கணபதி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒலியின்று ஓடிய நெடுந்தொடரை வாயசைவை வைத்து புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.
“எனக்கு எட்டு வயசாகறப்பவே எங்க அப்பாவோட போயி கோயில்கள்ல நடக்கற மகாபாரத உபன்யாசங்கள கேட்டிருக்கேன். ஒவ்வொரு கோயில்லயும் வேறவேற ஆளுங்களும் அவங்க வயசுக்குத் தகுந்த மாதிரி, அனுபவத்துக் தகுந்தபடி, ஒவ்வொரு விதமா சொல்வாங்க. ஆனா கதையோட மையமான கருத்து எப்பவுமே மாறாது. ஒவ்வொரு தடவயும் கேட்டுட்டு வர்றப்ப, மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சது ஒரு விசயந்தான். அத எப்பவுமே அழிக்க முடியாது”
இத்தனை வருடங்களில் அம்மா இதைச் சொன்னதில்லை. செல்வமும் இத்தனை அழுத்தி விவாதித்ததில்லை. எனவே வார்த்தை எழும்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வந்த ரமா செல்வத்தின் தோளில் கை வைத்தபடி நின்று அத்தை கூறுவதை கவனித்தாள். கணபதியும் திரும்பி அம்மாவை பார்த்தார்.
“பங்காளியோட பங்க இல்லைன்னு சொல்லி தொரத்துரவனோட வம்சமே ஒண்ணுமில்லாமப் போயிடும்,” என்று அழுத்தமாக கூறியபோது கண்கள் கலங்கி தளும்பியது. மருமகளின் முன் கண்ணீர் சிந்திவிடக் கூடாதென எண்ணியவர் போல வேகமாக எழுந்து பால்கனியை நோக்கிச் சென்றார்.
செல்வமும் ரமாவும் புரியாமல் கணபதியைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஏப்பா, இப்ப ஓட்டுப் போடறதுக்கும் அம்மா சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இத எப்படிச் சொல்றது” என்று கூறியபடி யோசித்த கணபதி, சொற்களை தனக்குள் தொகுத்துக் கொண்டதைப் போலிருந்தது. “பெண்கள் தங்களோட ஆழ்மனசு சொல்றமாதிரி ஒரு முடிவ எடுத்துட்டாங்கன்னா அதுல இருந்து அவங்கள மாத்த முடியாது. ரமாகிட்ட கேட்டாக் கூட, நீ வருத்தப்படக் கூடாதுங்கிறதுக்காக உனக்குப் பிடிச்சத சொல்லிட்டு அவ நினைச்சதத்தான் செய்வா. அது நீ சொல்றதாக் கூட இருக்கலாம். ஆனா, அது அவளுக்குப் பிடிச்சதுக்கு வேற ஏதாவது ஒரு காரணம் இருக்கும்”.
“இந்தக் கட்சியோட வரலாறு ஒனக்கு தெரியுமுன்னு நெனக்கிறேன். அதுவரைக்கும் கட்சிக்காக ஒழச்சவரை, “கட்சியில எந்தப் பங்குமில்லை, எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு” சொல்லி தொரத்துனதனாலதானே இந்தக் கட்சியே உருவாச்சு. அதே சமயத்துலதான் ஒன் பெரியப்பாவும் அப்படிப் பண்ணினாரு. நம்மள ஏமாத்திட்டாங்கன்னு உள்ளம் கொதிச்ச அந்தத் தருணத்துல, எப்படியோ… திருதராஷ்டிரன், ஒன் பெரியப்பா, இந்தக் கட்சி உருவாக காரணமா இருந்தவரு எல்லாரையும் ஒரே குணமுள்ள எதிரிகளா வரிச்சுக்கிட்டா போலிருக்கு. அதனாலதான் ஒண்ணப்பத்தி பேசறப்போ மத்ததும் நினைவுக்கு வந்து ஒரு கொதிநிலைக்குப் போயிடறா” என்றார்.
செல்வம் சொல்லின்றி திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். ரமா அவன் தோளில் லேசாக ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தாள். அப்போது, அலைபேசியில் சண்முகம் அழைத்தார். அழைப்பைத் துண்டித்துவிட்டு அம்மாவை நோக்கிச் சென்றான்.