கே. என். செந்தில்

மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’

 கே. என். செந்தில்

”அர்த்தங்கள் சார்ந்த புதிய கோணங்களையும் அவற்றுடன் இணைந்த வெளிப்பாட்டு முறையையுமே நான் எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கிறேன்”
-’மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரையில்.

Image result for k.n senthil

வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்துவிட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ்பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம். பொறுக்கியெடுத்த அளவான சொற்களால் எதையும் கூடுதலாகச் சொல்லி விடக்கூடாது எனும் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவருடையவை. இந்த பிரக்ஞையே, தான் அதிகம் எழுத முடியாததற்கு, பெரிய வடிவமாக யோசிக்க முடியாததற்கான காரணியென நேர்காணலொன்றில் சுரேஷ் சொல்கிறார். அவர் சொல்லும் அந்த பிரக்ஞையை ‘இறுகிய’ பிரக்ஞை என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

மெளனியும் சா. கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கிச் சுரேஷ் சென்றுவிடுவதே காரணம். ஏனெனில் அகச்சலனங்களை, ஓரிடத்திலிருக்கும்போதே வேறிடத்துக்கு கற்பனையின் துணையால் சட்டென்று போய் அமர்ந்து கொள்வதை, அங்கு ஒரு முழு வாழ்க்கையையே சில நிமிடங்களில் வாழ்ந்து விட்டு திரும்பி வரும் வினோதங்களை, நோக்கிச் செல்பவராக இருக்கிறார் என்பதே. இவர் கூறுமுறையின் தொடர்ச்சியும் அதன் சில சாயைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளில் எழுத வந்த குலசேகரன், எஸ்.செந்தில்குமார் (எஸ்.ரா-வின் பாதிப்பும் இவருக்குண்டு) ஆகியோரிடம் காணக் கிடைக்கின்றன.

‘நானும் ஒருவன்’ என்னும் சுரேஷின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு வெளியான ஓராண்டுக்குள் வந்திருக்கும் ’நடனமங்கை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதி வரும் காலகட்டத்தின் பகுதியிலிருந்து கிட்டியிருக்கும் தொகுப்பு எனக் கொள்ள முடியும். மனப்புதிர்களின் மேல் அதன் மர்மமான நகர்வுகளின் மேல் ஈடுபாடுடையவர் சுரேஷ். முந்தையக் கணத்தில் தோன்றிய எண்ணத்துக்கு நேரெதிராக அல்லது சம்பந்தமற்ற எண்ணத்திற்குள் செல்லும் மனதை காட்டும் தருணங்கள் கதைகளுக்குள் கலந்து வருகின்றன. (“ஏமாற்றப்பட்டு கையறு நிலையில் செய்வதறியாது அமரும்போது, மறுவினாடியே டெலிபோன் பில் கட்டவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது கோவில் பிரகாரம்’). இந்த புரிபடா நிலையை நிறமற்ற மொழிநடையில் அவரது முந்தைய தொகுதிகளிலிருந்து ஒரு வித தொடர்ச்சி போலவும் (கதை சொல்லும் முறையில்) ஒரு அர்த்தத்தில் தொடர்பற்றும் (கதைக்கருக்களின் தேர்வில்) எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள் இவை.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நடன மங்கை’ மற்றும் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…’ ஆகிய இரண்டையும் அருகருகே வைக்க முடியும். ஏனெனில் பிரதான பாத்திரத்தின் கற்பனை மேற்கொள்ளும் மனப்பயணமே- அதுவும் பெண்ணின் ‘வசீகரம்’ சார்ந்து- இவ்விரு கதைகளும் தொட்டுக் கொள்ளும் அண்மையில் இருப்பதை உணர்த்துகிறது. ஓரிடத்தில் ’இருந்து’ கொண்டே தான் ஆசைப்படுவது பலவும் அடுத்தடுத்து நடப்பதாக எண்ணி மகிழ்ந்து கொள்வது மனித இயல்பிற்குள் உள்ள அம்சமே. ஆனால் அதை கதையினுள் கொண்டு வந்தவர்/ வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். சில வாக்கியங்களுக்குள் ஒருவனின் கதையை சொல்லி முடித்து வைப்பதையும் சுட்டத் தோன்றுகிறது. இக்கதைகளில் மனக்கோலங்களின் புள்ளிகளை காண்பதிலிருந்து நகர்ந்து அவற்றைக் கதைகளாகச் சொல்லியிருக்கிறார்.

இத்தொகுதி கதைகளுக்குள் காணக் கிடைக்கும் ஒற்றுமை, பெரும்பாலான மையப் பாத்திரங்கள் பெண்களே. அவர்களே கதையை நகர்த்திச் செல்வதற்கான ஆதார விசையாக இருக்கிறார்கள். ‘புன்னகை’, ‘கணவன் மனைவி’, ‘கால்பந்தும் அவளும்’, போன்றவை அத்தகையவையே. இவற்றுக்குள் தற்செயல்கள் பிரதான காரணியாக இருக்கின்றன. பெரியாரின் பேச்சை அகஸ்மாத்தமாக கேட்க நேரும் நீலமேகம் பத்தொன்பது வயதில் விதவையாகிவிட்ட தன் மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார். பிறகு அவளது வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இக்கதை அவளது மரணத்திலிருந்து தொடங்கினாலும் நீலமேகம் அந்த உரையைக் கேட்பது தற்செயலே. போலவே ‘கால்பந்தும் அவளும்’. ‘கணவன் மனைவி’ சிறுகதையை வாசித்ததும், தட்டையாக, பல பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி ஓய்ந்த சக்கையை மீண்டும் மென்று பார்க்கும் உணர்வையே அளித்தது. வெகு சுமாரான கதை. அசேதனப் பொருட்களான டிரான்சிஸ்டர் (’வீடு திரும்புதல்’), கால்பந்து (கால்பந்தும் அவளும்), விசிறியடிக்கப்பட்ட துணி (நடன மங்கை) போன்றவை ஒரு கட்டத்தில் நினைவின் குறியீடுகளாக ஆகிவிடுவதையும் குறிப்பிட வேண்டும்.

இரு பெண்களும் தங்களது வேறுபட்ட தனிமைகளுக்குள் இருந்து விடுபடுவதை (விடுதலை பெறுவதை?) காட்டும் கதைகள் ‘கோவில் பிரகாரம்’, ‘வீடு திரும்புதல்’. இவ்விரு கதைகளும் இயலாமையின் மேல் எழுதப்பட்டிருப்பினும்கூட மனிதனின் விசித்திரச் செயல்களைக் காட்டுகின்றன. ஆயினும் சில ஒளிப்புள்ளிகளை மட்டும் தந்துவிட்டு உடனே அணைந்து விடுகின்றன.

மிகுபுனைவு கதைகளிலும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியில் மாற்றமேதுமில்லை. அதே சட்டகத்துக்குள்ளேயே நடை போடுகிறது. இது பெரும் குறை. ஆனால் பெண்களின் மீதான ஈர்ப்பைச் சுட்டும் நடையில் ‘மெளனி’யின் நிழல் விழுந்து கிடக்கிறது. மனதில் உள் அசைவுகளை, விளங்காப் புதிரை அறியத்தரும் சில கதைகளே நல்ல வாசிப்பை அளிக்கின்றன. பிற கதைகளைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை.