சத்யா

கருப்பு என்பது நிறமல்ல – சத்யா கவிதை

சத்யா

கருப்பு என்பது நிறமல்ல
அது ஒரு அகன்றவெளி சாம்ராஜ்ஜியம்
அதை அள்ளிப் பூசிக்கொண்டு
ஆட்சி செய்யும் சக்கரவர்த்தினி அவள்

நீங்களெல்லாம் இரவுக்கு
நிலவு ஒளியூட்டுகிறது என்கிறீர்கள்
நானோ நிலவுக்கு மிளிரும் வாய்ப்பை
இரவே நல்குகிறது என்கிறேன்.

வண்ணங்களின் பொலிவுகளில்
வசியப்பட்டிருக்கும் உங்களுக்கு
அவள் கருமையின் மினுமினுப்பு
புரிவதற்கு நியாயமில்லை

காந்தக் கண்ணழகிகளின் கடைக்கண்
பார்வைக்கு காத்திருக்கும் உங்களுக்கு
என் காந்தநிறத்தழகியின்
அதிசயம் விளங்காமல்
போனதில் ஆச்சரியமேதுமில்லை

எந்நிறமாயினும் சரி
எவ்வொளியாயினும் சரி
அவளருகே மங்கலாகத்தான் இருக்கும்
ஏனெனில் கருப்பு என்பது நிறமல்ல
அது ஒரு மகுடம்
அதை உடம்பெல்லாம் சூட்டிச் சுமக்க
வைராக்கியகாரிகளால்தான் முடியும்

காலமெல்லாம் அவள்
கருமையின் ஆளுமையில்
சொக்கிக்கிடக்கும் நிலை தவிர
வேறொன்றும் வேண்டாம்
இப்பிறவி நிறைவு பெற.