சிறில்

நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை

paakkuthotam-1

லண்டனில் பனிமூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் குடும்பத்துடன் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். நாற்பதடி தொலைவுக்கு மேல் இருந்தவை எல்லாமே பனித்திரையால் மறைக்கப்பட்டிருந்தன. ‘பனி மூட்டத்தில் அருகிலிருப்பவை மட்டும் நம் கண்ணுக்குத் தெரிவதும் தொலைவில் உள்ளவை தெரியாததும் ஏன்’ என என் மகன் கேட்டான். வழக்கம் போலவே என் மகளும் அந்தக் கேள்வியை தனதாக்கி ‘ஆமா ஏன்?’ என்றாள். பனிமூட்டத்தை வலைகள் போன்ற திரைச் சீலைகளுக்கு ஒப்பிட்டு விளக்கினேன். ஒன்றோ இரண்டோ மெல்லிய திரைச்சீலைகள் நம் பார்வையை அதிகம் மறைப்பதில்லை. ஆனால் தூரம் செல்லச் செல்ல பல திரைச் சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போடப்பட்டிருக்கும்போது அவை வலைபோல துவாரங்கள் உள்ளவையாய் இருந்தாலும் பல அடுக்குகளாய் இருக்கும்போது பார்வையை மறைக்க ஆரம்பிக்கின்றன.

மனிதக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குறிப்பாக பல்வேறு வகையான மக்களும் கூடும் இடங்ககளுக்குச் செல்லும் போதும் அந்தத்திரளில் எத்தனை மனித வாழ்க்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் எண்ணம் நமக்கு வந்துபோகும். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிரம் அனுபவங்கள் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. நம் அருகே இருக்கும் வாழ்க்கையை நாம் நேரடியாக கவனிக்கிறோம். தொலைவில் உள்ளவற்றை திரைச் சீலைகள் அல்லது பனிமூட்டங்கள் மறைக்கின்றன. நாமே நம்முன் இட்டுக்கொள்ளும் திரைச் சீலைகள். அவரவர் தங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் திரைச்சீலைகள்.  கருத்துக்கள், நம்பிக்கைகள், காலம், தூரம் எனும் பனிமூட்டங்கள் நம் கண்களுக்கு பிறரின் வாழ்கையை மறைத்துக்கொண்டே இருக்கின்றன. தனது “பாக்குத்தோட்டம்” சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகளின் வழியே பனிமூட்டம் மெல்ல விலகும்போது கிடைக்கும் காட்சிகளாக பத்து வாழ்கைகளை, அவற்றின் சில கணங்களை நமக்குக் காணத்தருகிறார் பாவண்ணன்.

சைக்கிளில் கூடைகட்டி கோழி விற்பவரின் மகன், பால் வியாபாரியின் குடும்பம், கல்லைக் குடைந்து தொட்டி செய்பவர், திருக்குறளை திருந்தச் சொல்லும் ஒரு இஸ்திரிக்காரர், அரச இலையில் படம் வரைந்து தெருவில் விற்கும் கலைஞர், மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்பவர் என  பல்வேறு வாழ்கைகளை பாக்குத்தோட்டம் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரின் புகைப்படத் தொகுப்பை திறந்து முகங்களை, நிலக்காட்சிகளை, சூழலை காண்பதைப் போல பாக்குத்தோட்டம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் முதல் கதை ‘சைக்கிள்‘. முதல் வாசிப்பில் எளிதாகத் தோன்றும் கதை. சைக்கிளில் கூடை வைத்து கோழிகளை எடுத்துச் சென்று விற்பவர்களின் சித்திரம் எத்தனை பழமையானதாய் இன்று தோன்றுகிறது? அது ஒரு மறைந்தே போன காலத்தின் சித்திரம். அநேகமாய் இருபது வருடங்களுக்கு முந்தையதாய் இருக்கலாம். கோழி விற்பவரின் மகனுக்கும் சைக்கிளுக்கும் ஒரு உறவு அல்லது பகை உள்ளது. அவனால் சைக்கிள் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் தந்தை வற்புறுத்துகிறார், தெருவில் போட்டு அடிக்கிறார். அவர் தந்தையின் நண்பர் ‘அப்துல்லா மாமா’ அன்பாக சொல்லித் தருகிறார். ஆனாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஒரு பிரத்யோகமான சிரமம் அவனுக்கு இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரன் அவன். அவனது தந்தை நம் கலாச்சாரத்தின் தேய்வழக்கான பொறுப்பற்ற குடிகார ஓடுகாலி. கதையின் இறுதியில் அப்பா ஓடிப்போகிறார். சைக்கிளை விற்று அவன் படிப்புக்கு பணம் கட்ட உதவுகிறார் அப்துல்லா மாமா. அவனுக்கு பிறர் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் ஒரு ஏக்கம் தோன்றுகிறது. கதையின் முடிவில் தெருவில் சைக்கிளில் ஒருவர் மணியடித்துச் செல்லும்போது அவன் முகம் மாறுகிறது. இங்கிருந்து கதையை மீள்வாசிப்புசெய்தால் சைக்கிள் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது. அது அவன் வாழ்க்கையில் இருந்ததும் இல்லாததுமான தந்தையைச் சுட்டும் ஒன்றாகிறது. அவனது கனவுகளுக்கு எதிரான ஒன்றை சுட்டும் ஒன்றாகிறது. ஒருவன் கோழி வியாபாரி ஆவதற்கும் படித்து பட்டம் பெறுவதற்கும் இடையேயான அசாதாரணமான மெல்லிய வித்தியாசத்தை சைக்கிள் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது கதை ‘கல்தொட்டி‘  பால் வியாபாரி ஒருவரின் மகன் சொல்லும் கதை. அவன் வீட்டில் அவனும் அவன் தந்தையும் தவிர அனைவரும் பெண்கள். இரண்டு அத்தைகள், ஆயா மற்றும் அம்மா. மாடுகளை பராமரிப்பதும் பால்கறந்து வைப்பதும் பெண்களின் வேலை. அதை மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்வது அவன் தந்தையின் தொழில். கதைசொல்லும் சிறுவனுக்கு பால் கணக்கெழுதும் வேலை. அவன் தந்தை கண்டிப்பான மனிதர்.  ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் கதையில் நுழைகிறார். அவர் முன்பு வேலைக்கு இருந்த பண்ணையாரின் பிள்ளைகள் பசுவை விற்றுவிட்டு பஸ்ஸை வாங்கி ஓட்டியதால் அவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. கல்லைக் குடைந்து தொட்டி செய்வது அவரது வேலை. கதையின் துவக்கத்திலேயே கன்றுக்குட்டி மண்தொட்டியை உடைத்துவிட்டதால் கல்தொட்டியின் தேவை இன்றியமையாததாகிறது. கதைசொல்லியின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள அந்த மனிதர் அந்த வீட்டின் பின்பக்கத்தில் தங்கி கல்தொட்டி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். இறுகிக் கடுமையாகி பயனற்று கிடக்கும் ஒரு கல் மெல்ல மெல்ல உடைந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக, தொட்டியாக மாறி வருவதை அந்தக் குடும்பமே வேடிக்கையுடன் பார்க்கிறது. மெல்ல மெல்ல கல்தொட்டி உருவாகி வரும்போதே சின்னச் சின்ன உரையாடல்கள் வழியே கதைசொல்லி சிறுவனுக்கும் கல்தொட்டி செய்பவருக்கும் நட்பு வளர்கிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் மேலே சென்று அந்தச் சிறுவன் ‘வெள்ளைக்கார துரைகளைப்போல’ குளிப்பதற்கு ஒரு குளியல் தொட்டியையும் செய்து கொடுக்கிறார். ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ என அழைக்கப்படும் இதமான கதையின் முடிவில் அந்தத் தொழிலாளி திடீரென பைசல் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகையில் அந்த வீடே உறைந்து நிற்கிறது. சட்டென ஒரு சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ‘கல்தொட்டி’  இந்தத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை. அதன் பாத்திரங்களின் எளிமை வியப்புக்குரியது . கதை முடிகையில் ஏற்படும் சோகம் பிரிவின்பாலா அல்லது ஏழ்மையின்பாலா என்பது வாசகரே கண்டடைய வேண்டியது.

பாக்குத்தோட்டம்‘ எனும் தலைப்புடைய கதை கர்நாடக பாரம்பரிய நிகழ்த்து கலையான யட்சகானத்தை ரசிக்கும் மூவரின் கதை. கதை சொல்லி, அவரது சக ஊழியர் மற்றும் கிராமத்துச் சிறுவன். இம்மூவரையும் இணைக்கும் புள்ளி யட்சகானம். அது கதாகாலட்சேபம் போன்றதொரு கலை. யாராவது ஒருவருக்கு மட்டுமே விடுப்பு அனுமதி என மேலாளர் சொல்ல. கதைசொல்லியை தன் கிராமத்துக்குச் சென்று யட்சகானம் காண வாய்ப்பளிக்கிறார் சக ஊழியர். கதைசொல்லி கிராமத்துக்குச் சென்று நண்பரின் வீட்டிலேயே தங்கி யட்சகானம் காண்கிறார். அங்கே கிராமத்துச் சிறுவர்கள் பொழுதுபோக்காய் யட்சகானத்தை பழகுவதைக் காண்கிறார். அதில் மிக தத்ரூபமாக நடித்த தலைமைச் சிறுவனோடு உரையாடுகிறார். அப்போது அவன் ‘பாக்குத்தோட்டத்தின்’ கதையை சுருங்கச் சொல்கிறான். அவன் ஏழைச் சிறுவன். அவன் ஏழ்மைக்குக் காரணம் பாக்குத்தோட்டம். அதையும் பிற சொத்துக்களையும் அவனது மூதாதை ஒருவர் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார். ஒரு குடும்பத்தின் ஏழ்மை இன்னொருவ‌ரின் செல்வம். அந்த இன்னொருவர் தன் சக ஊழியர் என அறியும்போது கதைசொல்லியின் மனம் திடுக்கிடுகிறது. விழாவின் கடைசி நிகழ்வு திரௌபதி வஸ்திராபரணம். அது கதைசொல்லியை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு கதை இன்றும் நம்மிடையே காணக் கிடைக்கிறது. அந்த மாபாரதக் கதையின் மாந்தர்களை தன் கண்முன் நேரடியாகக் காண்கிறார். யட்சகானம் காலத்தின் மேடையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அதில் அவரும் ஒரு பாத்திரம் என உணர்கிறார்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். மைய பாத்திரங்கள் எல்லாமே ஏதோவொரு திக்கற்ற நிலையில் இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு மனமுவந்து உதவி புரியும் நல்லவர்கள் அல்லது அவர்கள் மீது பரிவு காட்டுபவர்கள். அப்துல்லா மாமாவில் துவங்கி இங்கலீஷ் சார் வரைக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் கதைகளே இத்தொகுப்பிலுள்ளன. அவர்கள் பொருட்டே இக்கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன எனலாம். மனித மனங்களின் அவலங்களையும் இருண்ட பக்கங்களையும் யதார்த்த வாழ்வின் கொடூரங்களையும் மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் காட்டும் இந்நாட்களில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவற்றின் நம்பகத்தன்மை குறித்த அவநம்பிக்கை மிக இயல்பாக எழுகிறது. உண்மையிலேயே இன்றும் தன்னலம் பாராமல் பிறருக்காக மெனக்கெடுபவர்கள் இருக்கிறார்களா? ஆம் என்பதுவே பாவண்ணனின் பதிலாக இருக்கும். பத்தில் எட்டு கதைகள் மானுடம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. மிக எளிதாக சாதாரண ‘நல்லொழுக்கக்’ கதைகள் என வகைப்படுத்தப்பட தகுதியான இந்தக் கதைகளை பாத்திரப் படைப்பின் மூலமும், காட்சி விவரிப்பின் மூலமும் பாவண்ணன் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

பாக்குத்தோட்டத்திலேயே நாடகத்தனமாக தோன்றிய கதை ‘பெரியம்மா‘. இதிலும் ஆதரவற்றவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் என்று கதை சென்றாலும் முழுக்க முழுக்க மனிதனின் நன்மைத்தனத்தை மட்டுமே கொண்டு கதைகள் எழுதப்படும்போது அவை சிக்கலற்றவையாக, வாசிக்க சுவாரஸ்யமற்றவையாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது.  மிகுந்த ஒளியும் குருடாக்குவதுதான்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் நான் பெற்றது பல வண்ண வாழ்கைகளின் சித்திரங்கள். அவற்றின் நிதர்சன சிக்கல்கள்.  மனம் சோர்ந்து கைவிடப்படும் சில மனிதர்களின் வாழ்கையில் ஒரு பிடிகிளை கிட்டும் தருணங்களின் விவரிப்புகள். இலக்கியம் என்பது காம குரோத பேதங்களை மட்டுமல்ல அன்பையும், தன்னலமற்ற செயல்களையும்  பேச முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கதைகள். தேடுபவன் கண்டடைவான் எனும் நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.

அமெரிக்க அப்பாச்சே செவ்விந்தியர்களின் குடித்தலைவர்களில் பிரசித்தி பெற்றவராகிய ஜெராணிமோவை வெள்ளையர்கள் ஒரு வினோத கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரும் ஒரு காட்சிப்பொருள் என்பது வேறொரு சுவாரஸ்யம் என்றாலும் அவர் அங்கே இரு துருக்கியர்கள் வாள் சண்டையிடுவதைக் கண்டு வியக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க தீவிர சண்டைகளை இட்டு பல நூறுபேரைக் கொன்ற ஜெராணிமோவிற்கு அந்தச் சண்டைக் காட்சி வியப்பூட்டுவதாக இருப்பதற்குக் காரணம் அந்த வாள் வீரர்கள் ஒருவர் இன்னொருவரை காயப்படுத்துவதில்லை. அவர்களின் இலக்கு மற்றவரின் தலையை தன் வாளால் தொடுவது மட்டுமே. ஜெராணிமோவிற்கு இரத்தமில்லாத வாள் சண்டை மிக வினோதமானதும் ஆச்சர்யமூட்டுவதுமாயுள்ளது. அதே உணர்வே பாக்குத்தோட்டம் தொகுப்பு எனக்களித்தது. பாவண்ணன் இரத்தமின்றி வாழ்சுழற்றத் தெரிந்த வீரர்.