சிறுகதை

ருத்ரதாரி

எஸ். சுரேஷ் 

Image credit: craiyon.com

அவன் கையை மேலேயும் கீழேயும் ஆட்டி காரை நிறுத்துமாறு சைகை செய்தான். கார் நின்றது. பிறகு வர்ஷா உட்கார்ந்திருந்த பக்கம் வந்து, “என் பெயர் தரம். டூரிஸ்ட் கைடு. உங்களை ருத்ரதாரி அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான்.

வர்ஷா டிரைவரை பார்த்து, “கைட் வேண்டுமா?” என்று கேட்டாள். “அருவி காட்டுக்குள் இருக்கிறது மேடம். கைடு இருந்தால் நல்லது,” என்றான்.

“எவ்வளவு?” என்று வர்ஷா கேட்டாள்

“ஐநூறு ரூபாய் மேடம்”

“நானூறு கொடுக்கறேன்”

தரம் தலையை சொறிந்தான். “நானூறுக்கு  ஒப்புக்கொள்,” என்றான் டிரைவர்.

“சரி”.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு குடிசை, அதில் ஒரு டீக்கடை இருந்தது. நாலாபுரமும் ஹிமாலய மலைத்தொடர் அவர்களை சூழ்ந்திருந்தது. வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. சூரிய ஒளியில் பச்சை பசேல் என்று இருந்த மலைகள் இப்பொழுது கரும்பச்சை நிறமாக தோற்றமளித்தன. சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்த கோமதி நதியின் சலசலப்பு கேட்டது. இருள் சூழ்ந்திருந்த அந்த பிரதேசம் ஒரு கனவு உலகு போல் தோற்றமளித்தது. உடலை ஊடுருவி பனிக்காற்று வீசியது.

வர்ஷா தன் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்துவரை இழுத்தாள். உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் குளிருக்கு அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. சில்லென்று இருந்த கைகளால் தன் முகத்தை தடவிக் கொடுத்தாள். குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டு மேகங்களை பார்த்தாள். ஒரு முறை எல்லா மலைகளையும் நோட்டமிட்டாள். இது போன்ற அழகு ஹிமாலயா பகுதியில்தான் கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கருமேகங்களை பார்த்தபடி, “மழை வரும் போல் இருக்கிறதே,” என்றாள்.

“இல்லை மேடம். மழை வராது. இரவு பனி பெய்யலாம் ஆனால் இப்பொழுது மழை வராது,” என்றான்.

“அவ்வளவு உறுதியாக உன்னால் எப்படி சொல்ல முடியும்?”

அவன் சிரித்துக் கொண்டே, “நான் பல ஆண்டுகளாக இங்கு கைடாக இருக்கிறேன். மேகங்களைப் பார்த்தால் மழை வருமா வராதா என்பது தெரிந்து விடும்”

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முதலில் பாதை மேலே ஏறியது. “ரொம்ப அப்ஹில்லா இருக்குமா?” என்று வர்ஷா கேட்க, “கடைசியில் கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும். இப்போது கிட்டதட்ட சமதரைதான்” என்றான் தரம்.

மேலே ஏறியவர்கள், கீழ் நோக்கி  ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அங்கு கோமதி நதி ஒரு பெரிய ஓடை போல் இருந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் ஓடியது. நதிக்கரையில் பெரிய கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு குளிர் இன்னும் அதிகமாக இருப்பது போல் வர்ஷாவுக்கு தோன்றியது. கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கிப் போர்த்துக் கொண்டாள்.

தரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இன்று குளிர் அதிகம் இல்லை. சலேங்கே தோ டண்ட் நகின் லகேகா. நடந்தால் குளிர் தெரியாது”

வர்ஷா கரையில் நின்றுகொண்டு நதியில் கை வைத்தாள். கையில் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தாள். சட்டென்று தண்ணீரிலிருந்து கையை எடுத்துவிட்டு தரமைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவன், “தண்ணீரில்  நடந்து நதியைக் கடப்போமா?” என்றான். “ஒ நோ. இந்த குளிர் எனக்கு தாங்காது,” என்றாள் வர்ஷா. நதியின் நடுவில் இருந்த கற்களின் மேலே நடந்து நதியை கடந்தார்கள்.

உயர்ந்த மரங்கள். காட்டுக்குள் நுழைந்தார்கள். காட்டில் இருட்டு அதிகமாக இருந்தது. “நிச்சயமாக மழை வராதா?” என்று வர்ஷா கேட்க, “நிச்சயம் வராது. என்னை நம்புங்கள்” என்றான் தரம்.

சற்று தொலைவு நடந்த பிறகு ஒரு சிறு ஓடை வந்தது. அதை ஒரு மரக்கிளை ஏறிக் கடக்க வேண்டும். முதலில் சென்ற தரம், தான் கிளையை விட்டு விழுந்து விடுவதுபோல் நடித்தான். இரண்டு கைகளையும் நீட்டி, ஒரு காலில் ஏதோ நர்த்தனம் செய்வது போல் செய்தான். தன் முன் சேட்டை செய்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞனின் வெகுளித்தனத்தை கண்டு வர்ஷாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் இந்த இயற்கை போல் கல்மிஷம் இல்லாதவனாக தென்பட்டான். நடந்து நடந்து அவனுடைய உடல் சிக்கென்று இருந்தது. அவன் வெகு சுலபமாக நடந்து கொண்டிருந்தான்.

“நீங்க கௌசானிக்கு வருவது இதுதான் முதல் முறையா?”

“ஆமாம். உத்தராகண்டுக்கே இது தான் முதல் முறை. நீ எவ்வளவு நாட்களாக கைடு வேலை செய்கிறாய்?”

“ஐந்து. நீங்க ஏன் தனியாக  வந்திருக்கிறீர்கள்? உங்கள் கணவர் வரவில்லையா?”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை”

“உங்க போல அழகான பெண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை. நம்ப முடியலை”

எல்லோரும் அடிக்கடி கல்யாணப் பேச்சு எடுப்பதால், அவளுக்கு இதைப் பற்றி பேசினாலே எரிச்சலாக இருந்தது. ஆனால் இப்பொழுது தரம் இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்டதால், அவள் பதில் கூறினாள். “எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை. கல்யாணம் செய்து கொண்டால் அது நடக்காது. நான் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

தரம் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது அவர்கள் காட்டைக் கடந்துவிட்டு, புல்வெளி நிறைத்த இடத்துக்கு வந்திருந்தார்கள். காட்டை விட்டு வெளியே வந்ததும் குளிர் அதிகமானது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்றிருந்த வெளியை பார்த்து, “ஆஹா இந்த இடம் அற்புதமாக இருக்கிறது” என்றாள் வர்ஷா.

“காலையில் நன்றாக இருக்கும். இருட்டிவிட்டால் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கும். எப்பொழுதாவது கரடியும் வரும்” என்றான் தரம்.

வர்ஷா இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தாள். “இப்பொழுது கண்ணில் படுமா?”

தரம் சிரித்துவிட்டு, தன் இரு கைகளையும் உயர்த்தி, புலி போல் கர்ஜித்தான். “இந்த மிருகத்தைதான் நீங்கள் இங்கே பார்க்க முடியும்” என்றான். கள்ளம் கபடம் இல்லாத அந்த இளைஞனைப் பார்த்து வர்ஷா மறுபடியும் சிரித்தாள்.

அவர்கள் அந்த நடையின் கடைசி கட்டத்தை அடைந்து விட்டார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்த ஒரு மலையை ஏற வேண்டும். தரம் சுலபமாக ஏறிக் கொண்டிருந்தான். வர்ஷாவுக்கு மூச்சிறைத்தது. நடந்து வந்ததால் உடல் சூடேறியிருந்தது. ஜாக்கெட்டின் ஜிப்பை கீழிறக்கினாள். குளிர் காற்று அவள் நெஞ்சில் அடித்தது.

இருவரும் அருவிக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரதாரி அருவி உயரத்திலிருந்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அருவி விழும் இடத்தில் ஒரு குளம் உண்டாகியிருந்தது. தண்ணீரின் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அப்புறத்தில் ஒரு கோவில்.

தரம் குளத்தை காட்டி, “இதில் குளிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

வர்ஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. அதைக் கண்டு தரம் சிரித்தான். “பல பேர் குளித்திருக்கிறார்கள்”.

“அவர்கள் குளித்து விட்டுப் போகட்டும். நான் தண்ணீரில்  இறங்குவதாக இல்லை ”

பாலத்தைக் கடந்து கோவில் அருகில் வந்தார்கள். ஷூவை கழட்டி காலை கீழே வைத்த வர்ஷாவுக்கு மறுபடியும் ஷாக் அடித்தது போல் இருந்தது. “தரை எவ்வளவு சில்லென்று இருக்கிறது!” என்றாள்

ஒரே ஒரு அறை கொண்ட சிறிய கோவில். அறையில் ஒரு விக்ரஹமும், சுவற்றில் சில சாமி படங்களும் இருந்தன. ஒரு மூலையில் பாயும் கம்பளியும் பார்த்த வர்ஷா, “இங்கு யாராவது இருப்பார்களா?” என்று கேட்டாள்

“ஒரு ஸ்வாமிஜி இருப்பார். இப்பொழுது ரிஷிகேஷ் சென்றிருக்கிறார்”

“தனியாகவா இருப்பார்?”

“ஆமாம்”

“அவருக்கு குளிராதா? இரவில் காட்டுக்குள் இருப்பது அவருக்கு அச்சம்  தராதா?”

தரம் சிரித்தான். “அவர் இங்கே இருபது வருடங்களாக இருக்கிறார்”

கோவிலுக்கு வெளியே வந்து வர்ஷா ஒரு பாறை மேல் அமர்ந்தாள். நதி கீழே தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சத்தம் அருவியின் இரைச்சலை மீறி கேட்டது. மெல்லிய குளிர்க் காற்று வீசியது. வர்ஷாவையும் தரமையும் தவிர அங்கு எவரும் இல்லை. அந்த ஏகாந்தமான வேளையில் என்றும் காணாத அமைதியை வர்ஷா அடைந்தாள். இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் தரம் இப்பொழுது வர்ஷாவின் மனதை அறிந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்த வர்ஷா, வேண்டா வெறுப்பாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். தரம் அவள் பின்னால் வந்தான். கீழே இறங்கி புல்வெளியை அடைந்தார்கள்.

“நீங்க எந்த ஊரு?” என்று தரம் கேட்டான்

“சென்னை”

“சென்னை?”

“மெட்ராஸ்”

“ஆ. மத்ராஸ்”

“ஆனால் நான் இப்போ தில்லியில் வேலை செய்கிறேன்”

அவர்கள் நதியை அடைந்தபோது, நதிக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஓர் இளைஞன் உட்கார்ந்திருப்பதை வர்ஷா பார்த்தாள். அவன் தரமை பார்த்து சிரித்தான். நதியைக் கடக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.

“இது என் நண்பன், ரோஹித். அவனும் ஒரு கைடு.”

“இன்று நீ யாரையும் கைடு செய்யவில்லையா” என்று வர்ஷா அவனைப்  பார்த்து கேட்டாள்.

“இல்லை மேடம். இது டூரிஸ்ட் சீஸன் இல்லை. ஒருவரோ இருவரோதான் வருவார்கள்”

நதியை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைக்கு பக்கத்தில் வழவழப்பான ஒரு பெரிய பாறை இருந்தது. தரம் அதைக் காட்டி கேட்டான், “உங்களால் இந்த பாறை மேலஏற முடியுமா?”

“இது மேல் எப்படி ஏற முடியும். இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது”

“நாங்கள் ஏறுவோம் பாருங்கள்,” என்று கூறிவிட்டு தரமும் ரோஹித்தும் வீதியில் நடப்பது அந்த பாறை மேல் ஏறினார்கள். தரம் வர்ஷாவைப் பார்த்து சிரித்தான். “இன்னும் பெரிய பெரிய பாறைகள் எல்லாம் ஏறுவோம்” என்றான்.

“உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீங்கள்  எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்”

அவர்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். “மேடம் ஒரு டீ குடிப்போம்,” என்றான் தரம். அந்த குளிருக்கு டீ இதமாக இருந்தது. தரமும் வர்ஷாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ரோஹித் நின்றுகொண்டே டீ குடித்தான்.

அப்பொழுது வானம் சற்று வெளுத்திருந்தது. கிளம்பியபொழுது அப்பிக் கொண்டிருந்த இருள் இப்பொழுது இல்லை. தூரத்து மலைகள் இப்பொழுது தெளிவாக தெரிந்தன. விவரிக்க முடியாத வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.

வர்ஷா தரமை பார்த்து, “இப்போ மேகங்கள் அதிகம் இல்லை பார்,” என்றாள்

“மனிதர்களை போல் இயற்கையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்,” என்றான் தரம்.

“ஆனால் இயற்கை தன் சமநிலையை குலைத்துக் கொள்வதில்லை,” என்று ரோஹித் முடித்தான்.

பேசியது நானூறு ரூபாய் தான் என்றாலும் வர்ஷா தரமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். “நீ நன்றாக வழி காட்டினாய். ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்”

“மேடம். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆசை. நாங்கள்  தில்லிக்கு வந்து வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று தரம் கேட்டான்.

“இந்த அழகான இடத்தை விட்டுவிட்டு எதற்கு  தில்லி வர நினைக்கிறீர்கள்? நல்ல காற்று, சுத்தமான தண்ணீரை விட்டுவிட்டு எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கின்ற தில்லிக்கு எதற்கு  போகவேண்டும்?”

“வாழ்க்கைக்கு காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது இல்லையா மேடம். எங்களுக்கு வருவாய் மிகவும் குறைவு. டூரிஸ்ட் சீஸன்போது ஏதோ கொஞ்சம் பணம் வரும். இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் வராது. எங்கள் தோட்டத்தில் சில காய்கறிகள் விளையும். மற்றபடி இந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தில்லிக்கு வந்தால் மாதா மாதம் சம்பளம் கிடைக்கும். இங்க கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையை ஒரு அளவுக்கு நல்லபடியாக ஓட்டலாம்”

“இவ்வளவு நாள் ஏன் முயற்சி செய்யவில்லை?”

“ஆறு மாதம் முன்னாடிதான் கலியாணம் ஆனது மேடம். மனைவி வந்த பிறகு பொறுப்பு அதிகரித்து விட்டது. உங்களால் உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.”

“சரி. உங்க நம்பர் கொடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்.”

வர்ஷா தில்லிக்கு திரும்பிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, தரமுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “தரம், இங்க புதுசா ஆரம்பிக்கற ஒரு கம்பெனிக்கு அட்மின் அசிஸ்டண்ட்கள் வேண்டுமாம். நீயும் ரோஹித்தும் கிளம்பி வாருங்கள்.”

 

ர்ஷாவின் சிபாரிசு பேரில் இருவரும் டில்லியில் வேலைக்கு சேர்ந்தார்கள். முதல் மாத சம்பளம் வந்தவுடன் இருவரும் இனிப்பு வகைகளை வாங்கிக்கொண்டு வந்து வர்ஷாவுக்கு கொடுத்தார்கள். ஆறு மாதம் கழித்து வர்ஷா வேலை மாறி பெங்களூருக்கு வந்தாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு அவள் தரமிடம் தொடர்பில் இல்லை.

டிசம்பர் மாதத்தில் மறுபடியும் கௌசானிக்குச் செல்ல வர்ஷா முடிவெடுத்தாள். அவள் அங்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. டில்லிக்கு சென்று, அங்கிருந்த சதாப்தி பிடித்து காத்கோடாம் வந்தடைந்து, காரில் நைனிதால் சென்று, அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, அடுத்த நாள் ஜோகேஷ்வரில் கோவில்களை பார்த்த பின்பு, அல்மோரா வழியாக கௌசானி வந்து சேர்ந்தாள். அன்று மாலை பனிமலைத் தொடர்களை மறையும் சூரியனின் சிவப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. நந்தா தேவி, திரிஷுல், நந்தா கோட் மலைகள் தெளிவாக தெரிந்தன. தூரத்தில் பஞ்சசூலி மாலையும் தெரிந்தது. பத்து நிமிடங்களுக்கு வர்ஷா அவற்றை வாய் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகையும் குளிரையும் காமிராவில் கொண்டுவர முடியாது என்று அவளுக்கு நன்றாகவே  தெரிந்திருந்தும் தன் காமிராவில் படங்களை எடுத்துத் தள்ளினாள்.

காலை சிற்றுண்டி ரிசார்டில் திறந்த வெளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேகமூட்டமாக இருந்ததால் தூரத்து மலைகள் தெரியவில்லை. டிசம்பர் மாத குளிர் உடம்புக்குள் ஊடுருவி சென்றது. இருந்தாலும் திறந்த வெளியிலேயே சாப்பிடுகிறேன் என்று வர்ஷா சொன்னதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் அழைகை ரசித்துக்கொண்டே, ஆலூ பரோட்டாவை ருசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் பெண் வர்ஷாவைத் தேடி வந்தாள்.

அவள் நீல நிற சுடிதார் மேல் சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வர்ஷாவைப் போல் அவள் தலையில் குரங்கு குல்லா அணிந்திருக்கவில்லை. அந்த ஊர் மக்கள் போல் அவளும் சிவப்பாக இருந்தாள். அழகான தோற்றமுடைய அவள், “நீங்கள்தான் வர்ஷா மேடமா?” என்று கேட்டாள்.

“ஆம்”

“உங்களுக்கு ரோஹித் ஞாபகம் இருக்கா?”

வர்ஷா யோசித்தாள்.

“தரமின் நண்பன். அவர்கள் இருவருக்கும் நீங்கள்தான் டில்லியில் வேலை வாங்கி கொடுத்தீர்கள்”

“ஓஹோ. ரோஹித். ஞாபகம் இருக்கிறது. நீங்கள்?”

“நான் ரோஹித்தின் மனைவி.”

“ரோஹித் எப்படி இருக்கிறான்?”

“இப்போது அவர் டில்லியில் இல்லை. திரும்பி கௌசானிக்கே வந்துவிட்டார்”

“ஏன்?”

“அதைப் பற்றிதான் பேசவேண்டும்”

சாப்பிட்டு முடித்த வர்ஷா, கையை துடைத்துக்கொண்டு, கிளொஸை மாட்டிக் கொண்டாள்.

“உங்க பேர் சொல்லவில்லையே?”

“என் பேர் ரேணு”

சூரியன் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான். மெல்லிய ஒளி புல்தரையின் மேல் பரவியது.

“ரோஹித் ஏன் தில்லியை விட்டு வந்தான்?”

“போகும்போது மகிழ்ச்சியாகதான் போனான். ஒரு ஆறு மாதத்தில் என்னை டில்லிக்கு அழைத்துக் கொள்கிறேன்  என்று சொல்விலிட்டுப் போனான். ஆனால் ஆறு மாதத்தில் அவனே திரும்பி வந்துவிட்டான். நான் எதற்கு  இப்படி செய்கிறாய் என்று  கேட்டேன். நகரம் மனிதனை மிகவம் மாற்றி விடுகிறது. எனக்கு இந்த கைடு வேலையே போதும் என்று சொன்னான். நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் மறுபடியும் டில்லிக்கு போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஆனா அவன் இனி போவான் என்று எனக்கு தோன்றவில்லை.”

“மனிதர்கள் எப்படி மாறுகிறார்களாம்?”

“ரோஹித்தும் தரமும் ஒரே கம்பெனியில்தான் இருந்தார்கள். தரம் ஏதோ லஞ்சம் வாங்குகிறான் என்று சொன்னார்கள். ரோஹித் லஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தான். ஆனா அவன் மேலதிகாரிக்கு அது பிடிக்கவில்லை. அந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குபவர். அவனும் உத்தராகண்ட் ஆள்தான். அவன் ரோஹித்தை அவமானப்படுத்த ஆரம்பித்தான். ரோஹித் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். வர்ஷா முகம் சில்லென்றாவதை உணர்ந்தாள்.

ரேணு தொடர்ந்தாள், “இப்போ தரமை பாருங்கள். அவன் தன் வீட்டுக்கு மேல் மாடி கட்டிவிட்டான். புதிய நிலம் வாங்கியிருக்கிறான். மனைவியையும் மகனையும் டில்லிக்கு அழைத்துக் கொண்டு  போய் விட்டான். அவன் குழந்தை நல்ல பள்ளிக்கூடத்தில் படிப்பான். அவன் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு போவான். என்  பையன் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்து  ஏதோ டிரைவராகவோ கைடாகவோ போவான். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நான் பார்க்கிறேன். ரோஹித் என் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அவனோடு பேசுங்கள். இது பற்றியெல்லாம் புரிய வையுங்கள். நீங்கள்  சொன்னால் அவன் கேட்பான்.”

வர்ஷாவுக்கு வேறொருவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ரேணு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தாள். “இன்றைக்கு அவன் எங்கே இருப்பான்?”

“நீங்கள் காலையில் ருத்ரதாரி அருவிக்கு போகிற இடத்தில்தான் இருப்பான்”

“சரி. நான் பேசுகிறேன்”

“ரொம்ப நன்றி மேடம்.”

“டீ குடித்துவிட்டுப் போ”

இருவரும் டீ அருந்திய பின், ரேணு விடைபெற்றுக் கொண்டாள்.

வர்ஷா இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அட்மின், பர்சேஸ் போன்ற பிரிவுகளில் லஞ்சம் வாங்குவது சகஜம் என்று அவளுக்கு தெரியும். ரோஹித்துக்கு இது போன்ற ஒரு பிரிவில்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ரோஹித்தை நிர்பந்தப்படுத்துவது சரியில்லை என்று வர்ஷா நினைத்தாள். அதே சமயம் ரேணுவின் கோரிக்கை தவறில்லை என்றும் அவளுக்கு பட்டது. சரி, ரோஹித்துடன் பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ருத்ரதாரி அருவியை நோக்கி சென்றாள்.

ரோஹித் டீக்கடையில் கடைக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “ஹாய் ரோஹித்” என்ற சொன்ன வர்ஷாவை திரும்பிப் பார்த்த அவன், ஒரு வினாடி இது யார் என்று தெரியாமல் முழித்தான். பிறகு, “அரே மேடம். நமஸ்தே” என்றான். “எங்கே? ருத்ரதாரிக்கா?”

“இல்லை. உன்னுடன் பேச வந்தேன்”

ரோஹித், “ஒரு டீ சொல்லுங்கள், பேசலாம்”

வர்ஷா டீ கோப்பையை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அறிவுரை சொல்லி பழக்கமில்லை. எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.

சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தான். மலைகள் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தன. வெகு தொலைவில் உள்ள மலைகளும் தெளிவாக தெரிந்தன. வானத்தின் ஒரு பகுதியில் கருமேகங்கள் இருந்தாலும் இன்னொரு பகுதி மேகங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு மலையில் சன்னமான அருவி உருவாகிக் கொண்டிருப்பதை வர்ஷா பார்த்தாள். தூரத்தில் காரொன்று வளைத்து நெளியும் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மனையிலிருந்து வெள்ளைப் புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தன் கண்கள் வழியாக வர்ஷா மனதினுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக காட்சி மாறியது. கருமேகங்கள் சூரியனை சூழ்ந்துகொண்டன. வெளிச்சம் மறைய தொடங்கியது. மலைகளில் நிறம் மெதுவாக கரும்பச்சையாக மாறியது. தூரத்திலிருந்த மலைகள் மறைந்தன. மெல்லிய சாரல் அடிக்க ஆரம்பித்தது. காட்சி முழுவதும் மாறிவிட்டிருந்ததை பார்த்த வர்ஷா ரோஹித்திடம், “இயற்கை எப்படி மாறுகிறது பார். மாறுவதுதான் இயற்கையின் நியதி போல்” என்றாள். ரோஹித் பதில் ஏதும் சொல்லாமல் டீ அருந்திக்கொண்டிருந்தான்.

வர்ஷா பேசி முடித்த சில வினாடிகளிலேயே காட்சி மறுபடியும் மாறியது. கரு மேகங்களை காற்று செலுத்திச் செல்ல, மறுபடியும் சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது. மழைச்சாரல் நின்றது. எல்லா மலைகளும் மறுபடியும் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லாம் பழைய  நிலைக்கே திரும்பியிருந்தன.

ரோஹித் வர்ஷாவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாக டீ அருந்த ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

வான்நீலம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ராகவ் குண்டக்கல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தான். இங்கிருந்து பெல்லாரி செல்ல வேண்டும். பெல்லாரியிலிருந்து ஜின்டால் ஸ்டீல் செல்ல வேண்டும். அங்கு வேலைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. முதல் முறை தமிழ்நாடு தாண்டி ஒரு நிலம். புதிய பாஷை. தெலுங்கு கன்னடம் இரண்டும் பேசப்பட்டது குன்டக்கல்லில். பெல்லாரியிலும் அப்படித்தான் என மாமா சொல்லியிருக்கிறார்.

இயல்பாக ஒரு பதற்றம் பரவியிருந்தது. முதுகில் ஒரு பை கையில் ஒரு பெரிய பை. பையை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ப்ளாட்பாரத்தில் விற்றுச் செல்பவர்களிடம் வாங்கி சாப்பிடலாமா அல்லது ஹோட்டலில் சாப்பிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் ரயில் நிலைய அறிவிப்பு ஒலித்தது. எம்மொழி என்று சொல்ல இயலவில்லை. பெல்லாரிக்கான ரயில் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என டிக்கெட் கவுன்டரில் கேட்டு அறிந்திருந்தான். பையை இறுக்கியது போதுமென மெல்ல தளர்த்திக் கொண்டான். இயல்பாக அமர முயன்றான். அம்மாவின் முகம் அக்காவின் முகம் தங்கையின் முகம் என முகங்களாக வந்தன. அப்பாவின் முகமும். அந்த மெக்கானிக் யூனிபார்ம் – சாம்பல் நிறத்தில் சற்றே அழுக்கு படிந்த உடையுடன் நினைவுக்கு வந்தார். வெற்றிலைச் சிவப்பு வாயுடன்.

பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்தது. எடுத்து ப்ரௌஸரை திறந்தான். “Africa a land of varied climate from rainforests to deserts. The land of great game” எனும் வரிகளைப் பார்த்தான். மழைக்காடுகளிலிருந்து பாலைவனம் வரை -ஆம் மழையில் செழிக்கும் மண்ணிலிருந்து ஆண்டுகளுக்கு நீர் அறியாத மண். கேலரியைத் திறந்தான். மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகக் காட்டியது எண்ணிக்கை. நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அம்மா அக்காவுடன் வண்டலூர் சென்றபோது எடுத்துக்கொண்டவை, தங்கை புத்தகத்தின் மீது தலை தாழ்த்தி படிக்கும் நிலையில் தூங்கும் படம், கமலா அத்தை சப்தமாக சிரிப்பது பதிவாகியிருந்தது, அம்மா காலை நேரப் பதற்றத்துடன் மூக்குக்குக் கீழ் வியர்வை அரும்பியிருக்க தோசை வார்க்கும் படம், அக்கா தன் புது நீல நிறச் சுடியில் ஒற்றைக் காலை மடித்து பின்புறமாக சுவரில் ஊன்றிக்கொண்டு கைக்கட்டி எங்கோ பார்த்துக்கொண்டு கொடுத்த போஸ், தன் முகத்தில் அரும்பிய பருக்களை இவன் எடுத்து வைத்திருந்த போட்டோக்கள், செல்வி சித்தியின் கல்யாண படங்கள் கொத்தாக மஞ்சள் நிற விழாவின் குதூகல ஒளியில் வரிசையாக இருந்தன. நண்பர்களுடன் சினிமா தியேட்டரில் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அப்பா கொக்கியில் தொங்கும் தன் யூனிபார்மை எடுக்கும் படம், பின் வந்தது அவளின் ஒரு போட்டோ. அவள் நடக்கும் போது யாருமறியாமல் க்ளிக் செய்த போட்டோ. வான்நீல சுடிதார் வெள்ளை நிற ஷால், வெள்ளை மணிக்கட்டில் கருப்பு நிற வாட்ச், டயல் உள்முகமாகக் கட்டப்பட்டிருக்கும். அப்புகைப்படத்தில் பெரம்பூர் ரயில் நிலையம் எனும் வார்த்தைகளும் இருந்தன. ப்ளாட்ஃபாரத்தின் துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையல்ல. ப்ளாட்பார்ம் கூரையை தாங்கி நிற்கும் இரும்பு பில்லர்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு வெள்ளை நிறப் பலகையில் இருக்கும் அடர் நீல நிற எழுத்துக்கள். அவள் பார்வை சற்று தாழ்ந்து தரையைப் பார்த்திருக்கும் படம்.

அன்று காலை உணவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தான். அம்முவை பள்ளியில் ட்ராப் செய்யவும் முடியாது என மறுத்துவிட்டிருந்தான். “அக்கா, சும்மதான இருக்க, பொழுதனைக்கும் யு ட்யூப் ஷார்ட்ஸ் பாத்துட்டு இருக்கதுக்கு அவள போய் ட்ராப் பண்ணேன்” என்று விட்டு வேகவேகமாக நடந்தான், புன்னகைத்தபடி. தான் எப்பொழுதுமே புன்னகைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கவும் மேலும் புன்னகை, வெட்கத்துடன். பால ஆஞ்சநேயர் ஆலயம் கடந்து வில்லிவாகம் ரயில் நிலையம். அப்பா கண்டிப்பாகச் சொல்வதுண்டு, “எதுக்கு வேலமெனக்கிட்டி படி கட்டி வெச்சிருக்கான். அதவுட்டு கொரங்கு மாறி தண்டவாளத்த தாண்டினுருக்கது” என்பார். “உடம்புல பெலம் இருக்கணும். ரென்டு படி ஏறலன்னா நீ என்னத்த கீக்க போற லைப்புல.” ஓட்டமாக ஏறினான். படியில் ஏறி ஓடிக்கொண்டிருக்கையில் அவனுக்கு நேர் கீழே ரயிலும் வந்துவிட்டது. ஏறவும்தான் தாமதம். சிறு ஆட்டத்துடன் சீராகக் கிளம்பியது மின்சார ரயில்.

மஞ்சள் நிறச் சுடிதார் மஞ்சள் லெக்கின்ஸ் கழுத்தில் மெல்லிதான மிக மெல்லிதான சற்று மெலிந்தால் சிலந்தி நூலிழை எனும் அளவிற்கு மெல்லிய ஒரு தங்க செயின். கையில் உள்முகமாகக் கட்டிய கருப்பு வாட்ச். அன்று அவனுக்கு வாழ்வில் முதல் முறையாகத் தோன்றியது, “என் மாலை வானம் இவள்” என்று.

எம் ஸி ஸியில் படித்தாள் அவள். தாம்பரத்தில் எம் ஸ் ஸி எதிரில் இருக்கும் பஸ் நிலையத்திலேயே ஒரு நாளைக் கழிக்க முடிந்தது அவள் எதிரில் இருக்கும் கல்லூரியின் எண்ணற்ற பழைய கட்டிடங்களில் ஏதோ ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் எனும் நினைப்பொன்றுடன். பின் தினமும் பெரம்பூரிலிருந்து சென்ட்ரல் செல்லும் தூரம்தான் அவனை மலர்களை விரும்பச் செய்தது. சிரிக்கும் வெட்கத்துடன், “நான் ஒரு மலர்க்காடா மாறிட்டேன்” என டைரியில் எழுதி வைத்தான். வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படித் தோன்றியது.

அன்று பெரம்பூரில் சற்று கூட்டம் அதிகம். மழை வேறு, அக்டோபர் பாதி கடந்து கொண்டிருந்தது. ரயில் நிற்கும் முன்னமே அவளைக் கண்டு கொள்ளும் இவன் கண்கள் வெகு நேரம் கூட்டத்தைத் துழாவின. அங்கங்கு ரெயின் கோட்டுகளும் குடைகளும். அவள் இல்லை. ஏறிவிட்டாளா? இல்லை என உறுதியாகத் தோன்றியது. அந்த ரயிலில் அவள் இல்லை என்பதை அவ்வளவு உறுதியாய் உணர்ந்தான். ரயில் கிளம்பும் நேரம் ரயில் விட்டு இறங்கிவிட்டான். மரத்தைச் சுற்றி அமைந்த கல் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவள் வழக்கமாக வரும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு பெண் வந்தாள், ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஒரு பெண். ஆனால் அவள் இல்லை. திடீரெனத் தோன்றியது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என.

ஆறு மாதமாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு முறை கூட பேசியது கிடையாது. பார்க்க சக வயதினளாக தெரிகிறாளே ஒழிய மூத்த பெண்ணாகக் கூட இருக்கலாம். ஒருநாள் அவள் தோழி அழைத்ததை வைத்துதான் பெயரை அறிந்துகொண்டான்.வர்ஷா அவள் பெயர். மழை என்று அர்த்தம். அதை அறிந்த நாள், “என் மழை, அவள் என் மழை, வான் அவள், என் மழைக் காடு,” என எழுதி வைத்தான். ஆனால் இப்போது ஒரு கேள்வி எழுந்தது. நான் என்ற ஒருவனின் இருப்பை அவள் அறிவாளா? கண்டிப்பாக அறிவாள் எனத் தோன்றியது. அவளால் என் உலகம் தலை கீழாக திரும்பும் போது ஒரு சிற்றலை கூடவா அவள் ஏரியில் எழுந்திருக்காது. கண்டிப்பாக அவள் என்னை அறிவாள். ஒரு நாளை ஒரு வாரத்தை ஒரு மாதத்தை அவளால் நிரப்பிக்கொண்டிருக்கையில் ஒரு க்ஷணமாவது அவள்…. இல்லை அவள் என்னை நிறைக்கும் அளவிற்கே நானும் அவளை நிறைக்கிறேன். ஆனால் அவள் அதை இன்னும் அறியவில்லை. சிறு மேடுதான், ஏறினால் அப்பக்கம் பெருங்கடலொன்று. வெறும் வார்த்தைகளும் ஸ்தூலமுமான விஷயங்களால் மட்டுமானதல்ல உலகம். “World is not just physical” என எண்ணிக்கொண்டான். அப்பொழுது வந்தாள். நீல நிறச் சுடியில் வெள்ளை நிற ஷாலுடன். பார்த்துக்கொண்டே இருந்தான். அவனைக் கடக்கையில் அவளும் பார்த்தாள். மெல்லிய புன்னகையொன்று.

உடலுக்குள் ஒரு சூடான பெருங்குமிழி வெடித்தது போல் இருந்தது. முகத்திலெல்லாம் ரத்தம் வேகமெடுப்பதை உணர்ந்தான். அசையாமல் அமர்ந்துவிட்டான். கையில் குடையுடன் சற்று தள்ளிதான் நின்றாள். என்ன மணம்? மூக்கை நன்றாக இழுத்தான். “மழைவாசம் அவளுடையது,” எனத் தோன்றியது. சிரித்துவிட்டாள். உண்மையில் சிரித்தாளா என மனம் துழாவிய போது, அவ்வளவு உறுதியாக அவள் ரயிலில் இல்லையென்று அறிவித்த ஒன்று உறுதியாகச் சொன்னது, அவள் அவன் கண்கோத்து புன்னகைத்ததை. வழக்கமாக கடந்த ஆறு மாதமாக அவனுள் ஓயாமல் இருக்கும் ஒரு மகிழ்ச்சி வெடித்துச் சிதறியது. சிரித்தான் வாய்விட்டு. ஓட வேண்டும் போலிருந்தது. flash ஓடுவானே அவனைபோல். க்ஷணத்தில் முழு சென்னையையும் ஏன் பாண்டிச்சேரி வரை ஏன் கன்னியாகுமரி வரை ஓடவேண்டும் போலிருந்தது. மழைத் தூறல் வலுத்தது. எல்லோரும் ப்ளாட்ஃபாரத்தின் கீழ் ஒதுங்கினர். அவள் மரத்தடியில் ஒதுங்கிக்கொண்டாள், அவனருகில்.

அன்று மாலைதான் அப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முழுவதும் சென்னையின் மழையில் எம் ஸி ஸி எதிரில் அமர்ந்திருந்தான். பின் அவளுடனேயே திரும்பினான். ஆனால் பேசக்கூடவில்லை. பெரம்பூரில் இறங்கினாள் அவள். மின்சார ரயிலில் வாயிலோரம் நின்றபடி கிளிக் செய்தான். க்ளிக் செய்யவும் லோ பாட்டரியில் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகவும் சரியாக இருந்தது. பெரம்பூரில் வானத்தில் ஏறி மழைமேகங்களூடே பயணித்து வில்லிவாக்கத்தில் தரை இறங்கியது ரயில். மழை பொருட்டின்றி வீடு நோக்கி நடந்தான். மீண்டும் அந்த பால ஆஞ்சநேயர் ஆலயம். வீட்டிற்கு போனதும் சார்ஜ் போட்டு அந்த போட்டோவைப் பார்க்க வேண்டும். “என் வாழ்வின் மழைக்காலம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீழ்ந்த சிறு துளிகளாலானது,” என எழுதவேண்டும்.

வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கமலா அத்தையிடம் கேட்டான். அவள் அழுதபடி விஷயத்தைச் சொன்னாள். “அப்பா வேல பாக்குற எடத்துலேந்து போன் வந்ததுப்பா.. நெஞ்சு வலியாம்… உனக்கு யாரும் ஃபோன் பண்ணலயா,” என்றாள். போனைக் கொஞ்சம் போல சார்ஜ் செய்து அவன் அக்காவிற்கு அடித்தான். மழையோடு மழையாக எக்மோரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். அப்பா இறந்து விட்ட செய்திதான் அவனுக்குக் காத்திருந்தது. எதுவும் புரியாத நிலை. அம்மா கொஞ்சம் நகையைக் கொடுத்து பேங்கில் வைத்து பணம் வாங்கி வரும்படிச் சொன்னாள். மாமா இன்னும் வரவில்லை. வந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மீண்டும் மழையோடு மழையாக பாங்கிற்கு விரைந்தான். “கோல்ட் மேல லோன் வேணும் ஸார்” என்றான், கவுன்ட்டரில் இருப்பவரிடம். அவர் மற்றோரு கவுன்ட்டரைக் காட்டினார். அங்கு யாருமில்லை. வருவார் என்றார்கள். எப்போது என சொல்லப்படவில்லை. இருபது நிமிடம் கழித்து வந்தார். பாஸ்புக் கேட்டார். தன்னிடம் பாஸ்புக் இல்லை என்றான். அக்கவுண்ட் நம்பர்?. அதுவும் இல்லை. சிரித்தபடி எப்படி லோன் கொடுப்பது என்றார். ‘கோல்ட் வெச்சுகிட்டு தர முடியாதா?’ என்றான். “ஸேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கணும், ஒண்ணு ஓப்பன் பண்ணிக்கப்பா’ என்றார். ‘ஆதார் கார்ட் பான் கார்ட் ரெண்டு போட்டோ’ என்றார். எல்லாம் வீட்டிலிருந்தது. தொடர்ந்து ‘அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆக ஒரு நாள் வேணும். க்ளொஸிங் டைம் நெருங்கிருச்சு. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டுப் போங்க நாளைக்கு காலையிலேயே லோன் எடுத்துக்கலாம், என்றார். ‘இல்ல இப்பவே வேணும் ஸார் ப்ளீஸ்’ என்றான். அவர் கோபமாவது தெரிந்தது. ‘அப்போ பேமிலில யாருக்காவது இங்க ஸேவிங்ஸ் அக்கவுன்ட் இருக்கா?’ என்றார். அக்காவிற்கு போன் அடித்தான். எந்த கிளையில் இருக்கிறாய் எனக் கேட்டு அங்கு வந்தாள். அவளுக்கு அக்கவுண்ட் இருந்தது. நகைக் கடன் தாமதமானது. அன்றைய மழை மேலும் தாமதமாக்கியது விஷயங்களை. மற்றதெல்லாம் படு வேகமாக நடந்தேறியது. ராகவை ஜின்டால் ஸ்டீல்ஸுக்கு வேலைக்கு அனுப்புவது வரை.

அவனுக்கு மழைநிலத்திலிருந்து தன் வாழ்வு எவ்வளவு வேகமாக பாலைக்கு பயணித்தது என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. அக்காவிற்கு கருணை அடிப்படையில் அப்பாவின் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அக்கா டிகிரி முடித்திருந்தாள். இவன் டிப்ளமோ முடித்து மூன்றாண்டுகள் பணியிலிருந்துவிட்டு அப்போதுதான் பொறியியல் சேர்ந்திருந்தான். அக்காவின் வரன் பார்க்கும் படலம் காலவரையறையற்று ஒத்திப்போடப்பட்டது. நல்ல சம்பளம் எனச் சொல்லப்பட்டு மாமாவின் வழி ஒரு சிபாரிசின் பேரில் அவனுக்கும் ஜின்டால் வேலை உறுதியானது.

குன்டக்கல் ரயில் நிலையம் அமைதியாய் கிடந்தது. பகல் பதினொன்று மணி. சஞ்சாரமில்லாமல் கிடந்த நிலையத்தில் நாயொன்று ஒவ்வொரு இருக்கையாக முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. பின் சத்தம். எந்த அறிவுப்பும் இல்லையே? என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த சரக்கு ரயில் சூர வேகத்தில் வருவதை உணர்ந்தான். ரயில் நிலையத்தின் மோனத்தை கத்தியால் கிழிப்பதுபோல் அலறியபடி கடந்தது. அதன் வேகத்தில் புழுதி கிளம்பிப் பறந்தது. தடக் தட்க் அதிர்வுக்கு கூரை இடியக்கூடும் எனும் வேகம். இவன் அமர்ந்திருந்த கல் இருக்கை அதிர்ந்தகொண்டிருந்தது. நாய் ஆனால் எதையும் சட்டை செய்யாமல் சற்று தள்ளி ஓடிக்கொண்டிருந்தது. கரி ஏற்றிச் செல்லும் ரயில் – ஒரு ஆம்புலன்ஸ் இவ்வளவு வேகமெடுப்பதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கரியேற்றிச் செல்லும் சரக்கு ரயிலுக்கு அசுர வேகம் ஏன்? சரக்கு ரயில் நீங்கிய பின்னும் வெகு நேரம் அது அங்கேயே இருப்பது போலிருந்தது.

பெல்லாரிக்கான ரயில் சரியாக பதினொன்று நாற்பதுக்கு வந்தது. எந்த அறிவுப்புமில்லை. எப்படியோ விசாரித்து அன்ரிஸர்வ்டில் ஏறி அமர்ந்துகொண்டான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் பெல்லாரி. ஒரு நிமிடம் கூட ஆகியிராது, கிளம்பியது ரயில். இருபக்கமும் பசுமை அருகிய காட்சிகள். பாறைகள். பாறைகளால் ஆன சிறு குன்றுகள். ஒரு குன்றின் மீது சிறு புள்ளிகளாக ஆடுகள் மேய்வது தெரிந்தது. அனல் ஏறிக் கொண்டே வந்தது. ஒரு பெருமூச்சுடன் போனை எடுத்தான். கேலரியை எடுத்து இரண்டு மூன்று ஸ்வைப்பில் வான் நீல சுடிதாரும் மேக வண்ண ஷாலுமிருக்கும் போட்டோவை எடுத்தான். குப்பைத்தொட்டி படமிட்டிருக்கும் டெலீட் ஆப்ஷனை ஒத்தினான். “Are you sure you want to delete this image?”

வெற்றி என்பது யாதெனில் -ஆங்கிலம், விகாஸ் பிரகாஷ் ஜோஷி, தமிழில் வைஜெயந்தி ராஜேந்திரன்

வைஜெயந்தி ராஜேந்திரன்

அவள் பெயர் பல்லவி. அவள் புனேவில் உள்ள செயின்ட் வின்சென்ட் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.

அந்த வகுப்பில் படிக்கும் மற்ற எல்லா ஆண் பிள்ளைகளைப் போலவே நீரத்துக்கும் பல்லவி மேல் ஒரு ஈர்ப்பு. அவன் அவளை மிகவும் விரும்பினான்.

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவளின் அழகிய கவர்ச்சிகரமான தோற்றம், நல்ல கட்டமைப்புடன் கூடிய உடல்வாகு, மென்மையான அவளின் தேகம், அழகிய புன்னகை இவையெல்லாம் யாரையும் அவளைப் பார்த்தவுடன் அவளிடம் நட்பு கொள்ளவே தூண்டும்.

நீரத் அவளை தூரத்திலிருந்தே ரசித்துக்கொண்டிருப்பான். அவன் பெண்களுடன் அவ்வளவு சீக்கிரத்தில் பேசிப்பழகக்கூடியவன் அல்ல. அதனால் பல்லவியை தூரத்திலிருந்து பார்த்து ரசிப்பதிலேயே திருப்தி அடைந்தான் அவன்.

பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மூன்று மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் நீரத். அவன், “இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், பல்லவி என்னுடையவளாகிவிடுவாள்” என்று அடிக்கடி தன் மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அவன் எதிர்பார்த்தது போலவே போட்டி நடைபெற்ற நாளன்று பல்லவி கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தாள்.

நீரத் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படத்திலிருந்து “தன்ஹா தில்” (தனிமையான இதயம்) என்ற ஹிட்டான பாடலான பாடலைப் பாடினான். அவன் பாடலைக்கேட்டு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அவன் மிக நன்றாக பாடினான் என்பது அந்த கைதட்டலில் இருந்து தெரிந்தது. பல்லவி பாரட்டிய விதம் நீரத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிறைய பாடகர்கள் வந்து பாடிவிட்டுச் சென்றார்கள் ஆனால் அவர்களில் அன்று நீரத் மட்டுமே உண்மையில் நட்சத்திரமாய் ஜொலித்தான்.

இப்போது பத்தாம் வகுப்பைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா, பாடப் போகிறான் என்ற அறிவிப்பு வந்தது. அவன் 10ஆம் வகுப்பின் மாணவர் தலைவன். ஆனால், சுதிர் முறையாக சங்கீதம் கற்றவன் அல்ல. இருந்தாலும், புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறான்.

சுதீர் பாட ஆரம்பித்தவுடன் நீரத் மற்றும் அவனது மற்ற நண்பர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் சிரிக்கத் ஆரம்பித்தனர்.

அவர்கள் “ஓ…!” “ஓ…l” என கூட்டலிட்டபடி அரங்கத்தில் எழுந்து நின்று கத்தத் தொடங்கினார்கள்.

சுதீர் பாடி முடித்ததும் மேடையை விட்டு அமைதியாக கீழே இறங்கினான்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே நீரத் முதல் பரிசு பெற்றான். கோப்பையை பெற்றவுடன் நீரத்தின் கண்கள், கூட்டத்தில் பல்லவி எங்கே இருக்கிறாள் என ஆவலுடன் தேடியது. ஆனால், அவள் அங்கு இல்லை.

நீரத் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தான்.

ஓரிடத்தில் பல்லவி சுதீருடன் அமந்திருப்பதையும், அவள் சுதீருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறான் நீரத்.

நீரத்தைப் பார்த்தவுடன் கோபமாக எழுந்து நின்றாள் பல்லவி.

ஏய் முட்டாள், ஏன் அவனை கேலி செய்தாய் என்று நீரத்தைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் பல்லவி.

சுதிர் மௌனமாய் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தான்.

“சுதிர் ஒரு நல்ல பாடகரான இல்லாமல் இருக்கலாம், அவன் உன்னைப் போல் நன்றாக பாட முடியாதவனாய் இருக்கலாம். ஆனால், அதுவே அவனை கேலி செய்யும் உரிமையை உனக்குத் தராது என்பதை நீ புரிந்துகொள்ளவில்லையா?.

அவனுக்கு பாடத் தெரியாது என்றாலும் அவன் பாட முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொண்டான். ஆனால் நீ எப்பொழுதாவது அது போல் முயற்சி செய்திருக்கிறாயா? நீ நடந்துகொண்ட விதத்தில் அவன் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நீ கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா ? என படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள் பல்லவி.

அமைதியாக அமர்ந்திருந்த சுதீருக்கு ஆறுதல் கூறுவது போல் அவன் தோளில் கை வைத்திருந்தாள் பல்லவி.

சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தான் நீரத். பிறகு தன் தவறை உணர்ந்தவனாய், “சுதிர், நாங்கள் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறோம். நாங்கள் அப்படி நடந்து கொண்டது தவறு தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம் என்றான் நீரத்.

சுதீர் பரவாயில்லை என்பது பல் தலையை மெதுவாக அசைத்து தனது கண்ணீரை அடக்கிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, பல்லவியைப் பார்த்து “பல்லவி, வீட்டிற்கு போகலையா ?” என்றான் நீரத்
சிறிது நேரம் ஏதும் பதில் சொல்லாம் அமைதியாக இருந்தாள் பல்லவி.

பிறகு, சற்றே தயங்கிய குரலில், “என் வீடும் சுதீரின் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. சுதீர் அப்பா வந்ததும் நான் அவனுடன் சேர்ந்து சென்று கொள்கிறேன்” என்று ஒரு தீர்மானத்துடன் சொன்னாள் பல்லவி.

ஏதும் சொல்லாமல் திரும்பி தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் நீரத். அவனுடைய கைகளில் இருந்த வெற்றிக்கோப்பை இப்போது அவனுக்கு மிக மலிவான இரும்பு கோப்பையாகக் கனத்தது.

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

தேவைகள் – உஷாதீபன் சிறுகதை

நா வரலை – என்றாள் மல்லிகா. அருகே படுத்திருக்கும் மாமியாருக்கும், இரண்டு மைத்துனிகளுக்கும் கேட்டு விடக் கூடாது என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள். அடுத்த அறையில் அவன் அப்பாவும், தம்பியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மனோகரன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். வளையல் சத்தம் கேட்டுவிடக் கூடாதே என்று பயமாயிருந்தது அவளுக்கு. அம்மா லேசாக அசைந்தது போலிருந்தது. என்ன முரட்டுத்தனம்…!

விடுங்க…இப்டியா இழுக்கிறது? அசிங்கமாயில்ல…?…-கையை உதறினாள். அவளுக்குத் துவண்டு வந்தது. இருட்டிலும் அவன் கண்களின் கோபம் தெரிந்தது. அந்த இன்னொன்று….அதையும் பார்த்தாள் அவள். ! எதுவும் அந்தக் கணம் பொருட்டில்லை அவனுக்கு.

       கடுமையாகச் சிணுங்கினாள். அது அவனுக்குப் புரிந்திருக்குமா தெரியவில்லை. மாடி வீடு. தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் மாடிப் பகுதியில் விழாது. சாம்பல் படர்ந்திருப்பது போல் ஒரு மெல்லிய நிழல் கலந்த ஒளி மேலே பரவி வந்திருந்தது. வானத்தின் வெளிச்சமாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. ஆட்கள் படுத்திருப்பதை அந்த ஒளியிலேயே உணர முடியும். அம்மா புரண்டு மறுபுறமாய்த் திரும்பிக் கொண்டாள். தெரிந்துதான் செய்கிறாளோ? அடுத்த அறையில் உடம்பு வலி தாளாமல் தூக்கத்தில் அப்பா அரற்றினார். அவனுக்குள் பதற்றம் பற்றிக் கொண்டது.

       உள் பக்கமா எதுக்குப் படுக்கிறே? நாலு பேரைத்தாண்டி உன்னை நான் கூப்பிடமாடேன்னு நினைச்சிட்டியா? எத்தனைவாட்டி சொல்றது? அறிவில்ல…?-அவன் கேட்டிருக்கிறான். .ஏற்கனவே சொன்னதுதான். இருக்கும் இட வசதி பொறுத்துதானே படுக்க முடியும்? தனியே இருக்கையில் நிச்சயம் எரிந்து விழுவான். எத்தனைவாட்டி சொன்னாலும் தெரியாதா? பொட்டக் கழுத…!

       கொஞ்சம் பெரிய சமையலறை அது. அங்குதான் பெண்கள் படுத்துக் கொள்வார்கள். அடுத்தாற்போல் ஒரு சின்ன அறை. அதற்கு அடுத்து ஒரு சிறு பால்கனி. அதில் ஒராள் நடக்கலாம்.ஒரடி அகலம்தான். பேருக்கு அது.  இவ்வளவுதான் வீடு. சமையலறையை ஒட்டி மாடிப்படி. கழிப்பறையெல்லாம் கீழேதான். மொத்தம் ஏழு வீடுகளுக்கான கழிப்பறைகள் மூன்று மட்டுமே. அதிலும் பெண்களுக்கென்று ஒன்றுதான். அதில்தான் நுழையணும். இன்னொன்றில் மாறி நுழைந்து விடக் கூடாது. எழுதாத சட்டமாய் இருந்தது. அவசரமாய்ப் போகும்போது காலியாயிருக்கணும்…அது வேறு…!

 வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கீழேயுள்ள வீட்டு சொந்தக்காரர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் ஐந்து வீடுகளையும் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படிச் செல்லும்போது சிலரின் பார்வை திரும்பிப் கொண்டேயிருக்கும். எல்லாம் இரண்டிரண்டு அறைகள் கொண்ட வீடுகள்தான் என்பதால் பெரும்பாலும் வெளி வராண்டாவில்தான் ஆட்கள் அமர்ந்திருப்பார்கள். இரவில் படுத்து உருளுவார்கள். ஒரு முறைக்கு இருமுறை கக்கூஸ் போனால் கூச்சமாக இருக்கும். அதுவே பெரிய தண்டனை.. அவர்கள் கால்களில் தடுக்கிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். ஆள் வருவதைப் பார்த்துக் கூட மடக்கிக் கொள்ள மாட்டார்கள். திடீரென்று புரண்டால் போச்சு…!

எல்லோரும் அந்தப் பகுதியில் இருந்த வெள்ளைக்காரன் காலத்து  மில்லில் வேலை பார்ப்பவர்கள். பெரும்பாலான வீடுகள் அந்தத் தொழிலாளர்களை உள்ளடக்கியதுதான். பல ஆண்டுகளாய்க் குடியிருப்பவர்கள். ஷிப்ட் முறையில் பணிக்குச் சென்று திரும்புபவர்கள். அதனால் அந்தப் பகுதியே உறங்கா வீடுகளாய்த் தென்படும். ஆள் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். எங்காவது  பேச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

இரவு இரண்டு மணிக்குக் கூட எழுந்து மில் வெளிக்கு சென்று சூடாய் சூப் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். பெரும்பாலும் பச்சைப்பழம்தான் இருக்கும். வாய் வழியாயும், மூக்கு வழியாயும் உள் செல்லும் பஞ்சுத் துகள்கள் காலையில் வெளிக்கிருக்கையில் சிக்கலின்றி வெளியேற வேண்டும். ஒரு மில்லுக்கு ஐம்பது தள்ளுவண்டிகள் நிற்கும். அத்தனையும் விற்றுப் போகும்தான். அதை நம்பியிருக்கும் சிறு வியாபாரிகள்.

       யாரும் எதுவும் இன்றுவரை சொன்னதில்லைதான். இவளுக்குத்தான் ஒருமாதிரியாய் இருந்தது. ஒருவேளை ஆள் நகர்ந்த பின்னால் முனகிக் கொள்வார்களோ என்னவோ? சதா வாளியைத் தூக்கிக்கிட்டு வந்திருதுகளே…? சாப்பிடுறதத்தனையும் வெளிக்கிருந்தே கழிச்சிடுவாக போல்ருக்கு….- என்று சொல்லிச் சிரித்துக் கொண்டது ஒரு நாள் மாடியேறி வந்தபோது லேசாகக் காதில் விழுந்தது. ஒவ்வொரு வீட்டுக்குமான வாசல் பகுதி மழை மறைப்பு ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடியேறுகையில் அவர்களைக் காண்பிக்காது. பேச்சு மட்டும் காதில் விழும். தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் லேசாக அங்கு பரவியிருக்கும். அவரவர் வீட்டு வாசல் லைட்டை எட்டரைக்கே அணைத்து விடுவார்கள். ஒரு பூரான், தேள் என்று நகர்ந்தாலும் தெரியாது. அதில்தான் பயமின்றிப் படுத்து உருளுகிறார்கள். காற்றோட்டம் அந்த உழைப்பாளிகளை அடித்துப் போட்டதுபோல் தூங்க வைத்து விடும்.

       கூசிக் குறுகினாள் மல்லிகா. பொழுது விடிந்தால் அதுவே அவளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. காலையில் மட்டும் இரண்டு மூன்று தரம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஒரே தடவையில் வயிற்றை சுத்தம் செய்தோம் என்று இல்லை. உடல் வாகு அப்படி. நினைத்து நினைத்து வருகிறது.  தூக்கத்திலிருந்து எழும்போதே கலக்கி விடுகிறதுதான். அந்த நேரம் பார்த்து வாளியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு விடுவிடுவென்று அடக்க முடியாமல் ஓடும்போது அங்கே கக்கூசில் யாரேனும் போய் கதவை அடைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியே காத்து நிற்கப் படு கூச்சமாயும், பயமாயும் இருக்கும். பொம்பிளை அப்படி நிற்பது கேலிக்குரியதாகும். வாளியை அடையாளத்திற்கு வைத்து விட்டும் வர முடியாது. சமயங்களில் கால் தட்டி தண்ணீர் கவிழ்ந்து வலி தாள முடியாமல் கீழ் வீட்டுப் பெரியம்மா…திட்டிக் கொண்டே போனது இவளுக்கு இன்னும் மறக்கவில்லைதான். எழுந்தவுடன் ஒரு முறை என்றால், பிறகு காபி குடித்து விட்டு இன்னொரு முறை. காபி குடிக்கிறமட்டும் பொறுக்க மாட்டியா? அதுக்குள்ளயும் வாளியத் தூக்கிட்டு ஓடணுமா? மனோகரனின் அம்மாவே கேட்டிருக்கிறாள். மனசு வெட்கப்பட்டு மறுகும்.  அடக்க முடியாமல் ஓடுவாள். பிறகு வேலைக்குப் புறப்படும் முன் ஒரு முறை. அது சந்தேகத்துக்கு.

 அவள் வேலை பார்க்கும் இடத்தில் கழிப்பறையில் கால் வைக்க முடியாது. தண்ணீர் பஞ்சத்தில் நாறித் தொலையும். தவிர்க்க முடியாமல் போய் வந்தால் கால் கழுவத் தண்ணீர் இருக்காது. பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரில் ஒரு வாய் கொப்பளித்து விட்டு, அப்படியே போய் உட்கார்ந்து கொள்வாள். என்ன வியாதி தொத்தப் போகுதோ? என்று மனசு பதறும். கூட வேலை பார்க்கும் பெண்கள் சர்வ சகஜமாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றுக்கு நெருக்காதா? என்று நினைப்பாள் இவள். அருகிலுள்ள செப்டிக் டாங்க் மாசத்துக்கு ஒரு முறை என்று நிரம்பிப் போகும். இதுக்கு எம்புட்டுத்தான் தண்டம் அழுகிறது? என்று லாரிக்குச் சொல்லி முதலாளி கத்துவார். எல்லார் வீடும் ரெண்டு கி.மீ.க்கு உட்பட்டுத்தான் இருக்கும். ஆனால் வீட்டுக்குச் சென்று இருந்துவிட்டு வர அனுமதிக்க மாட்டார். வாசலில் செக்யூரிட்டி முறுக்கிய மீசையோடு கர்ண கடூரமாக நிற்பான். அவன் கவனத்தை எவ்விதத்திலும் சிதைக்க முடியாது. ஆள் நகர்ந்தால் சொல்லி விடுவான். கொத்தடிமை நிலைதான்.

பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள் அவள். சிறிய நிறுவனம்தான். ரொம்பவும் இடுக்குப் பிடித்த இடத்தில் முப்பது நாற்பது பேர் உட்கார்ந்து இடைவிடாது துணி தைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனையும் பெண்கள். அவர்களை நிர்வகிப்பதுவும் இரண்டு வயதான பெண்மணிகள். அருகில் வந்து விரட்டிக் கொண்டேயிருப்பார்கள். எத்தனை முடிச்சிருக்கே? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். கத்திரி ஓடும் லாவகம் வித்தியாகமாய் இருந்தால் காதுக்கு எட்டிவிடும். சட்டென்று போய் நின்று எச்சரிப்பார்கள். ஏதோ நினைப்பில் துணியை வெட்டி கோணல் மாணலாகிவிட்டால் அந்தத் துணிக்காசு பிடித்தமாகிப் போகும்.  நகரிலுள்ள எந்தெந்தக் கடைகளுக்கு சரக்கு சென்றாக வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொரு கடைக்குமான எண்ணிக்கையை இவர்கள் தலையில் வம்படியாகக் கட்டி சக்கையாய்ப் பிழிந்துதான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.. பணியாட்களுக்குப் போதிய அவகாசம் அளித்து வேலை வாங்குதல் என்பது கிடையாது. தலையை அப்படி இப்படித் திருப்ப இயலாது. ரெண்டு வார்த்தை பொழுது போக்காய்ப் பேசி விட முடியாது. தலையில் குட்டு விழும். அத்தனையும் பொறுத்துக் கொண்டு தையல் வேலைக்கு வர பெண்கள் இருந்துகொண்டேதான் இருந்தார்கள். இரண்டு பக்கமும் தேவை இருந்தது.

தையல் பயிற்சி தர என்று ஒரு வீடு அமர்ந்தியிருந்தார் முதலாளி. அதைக் கற்றுக் கொள்ள ஆட்கள் வரிசையில் நின்றார்கள். அப்ரென்டிஸ் என்று மிகக் குறைந்த தொகையே கொடுக்கப்பட்டது. அங்கு ஒரு நாளுக்கு இத்தனை துணி என்று தைத்துக் காண்பித்தால்தான் நிறுவனத்திற்கே அனுப்புவார்கள். அந்தக் கஷ்டமெல்லாம் முடித்துதான் வேலையை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. மற்றவர்கள் செய்து முடிப்பதைவிட சற்று எண்ணிக்கை கூடவே இருக்கும் இவள் கணக்கில். அதனால் நிலைத்தாள். ஆள விடுங்கடா சாமிகளா…என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடினவர்கள்தான் அதிகம்.  வீட்டுக்கு வந்து நிம்மதியாய்ச் சாப்பிடக் கூடப் பொறுமை இருக்காது. உடம்பு அப்படியொரு தவிப்பில் உருகும். என்னைப் படுக்கையில் கிடத்து என்று மனசு கெஞ்சும்.

மனோகரனின் தாய் நல்லவள். நீ கண்டிப்பா வேலைக்குப் போகத்தான் வேணுமா? என்றுதான் கேட்டாள். ஏம்மா…அந்தக் காசு வந்தா வீட்டுக்கு ஆகும்ல…போகட்டும்மா….வீட்டுல உட்கார்ந்து என்ன செய்யப் போறா? என்று விட்டான் மனோகரன். தையல் மிஷினை விட்டு இப்படி அப்படி அசையாத அந்த வேலை அவள் உடம்பைச் சிதிலமாக்கிக் கொண்டிருந்தது. இளம் வயசிற்கான எந்த உற்சாகமோ, துடிப்போ அவளிடம் காணப்படவில்லை. கசங்கிய துணியாய் வந்து விழுந்து அடுத்த கணம் கண் செருகி விடும். அவள் ஸ்திதி அறியாதவன் மனோகரன். அவனுக்கு அவன் எண்ணம்தான்…நோக்கம்தான். அதில் அவளுக்கு மிகுந்த ஆதங்கம். தன் சங்கடங்களை அறியாதவனாய், ஆறுதலாய்க் கேட்கக் கூடத் தெரியாதவனாய் இருக்கிறானே என்று மனதுக்குள் புழுங்குவாள்.

எப்பப் பார்த்தாலும் கக்கூஸ்தானா? எதுக்கு இப்டி அடிக்கடி போயிட்டிருக்கே? இந்தத் தீனிக்கே இப்டிப் போனீன்னா…இன்னும் வசதி வாய்ப்போட இருந்திட்டாலும்…? – வீட்டில் எல்லோர் முன்னிலையிலும்தான் மனோகரன் சத்தம் போட்டான் அவளை. தனியாகச் சொல்ல வேண்டியவைகளைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்…இப்படித் தம்பி தங்கைகள் முன் கேலி செய்வது போல் கண்டிப்பது போல் சொன்னால் அவர்களுக்கு அண்ணியின் மேல் மதிப்பு மரியாதை எப்படி வரும் என்கிற சூட்சுமமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரியாதா அல்லது அவனது அதிகாரத்தை எல்லோர் முன்னிலும் காண்பிக்க வேண்டுமென்று தன்னைத் திட்டித் தீர்க்கிறானா என்று  சந்தேகமாகத்தான் இருந்தது மல்லிகாவிற்கு. செய்யும் அதிகாரத்தை, அவனோடு தனியே இருக்கும்போது காட்டினால் போதாதா? என்று நினைத்தாள் அவள்.

வீட்டிலிருப்பவர்கள் முன் எப்போதும் அவன் அவளிடம் சுமுகமாகப் பேசியதேயில்லை. ஏன் அப்படி என்று நினைத்தாள். பெண்டாட்டிதாசன் என்று நினைத்து விடுவார்களோ என்று கூச்சம் கொள்கிறானோ? என்று தோன்றியது. பல முறை கவனித்து விட்டாள்தான். அவன் அம்மாவிடமோ அல்லது தம்பி, தங்கைகளிடமோ சகஜமாகப் பேசுவதுபோல் அவளிடம் என்றுமே பேசியதில்லை. தனியாக இருக்கும்போதாவது அப்படிப் பேசி நடந்து கொண்டிருக்கிறானா என்று யோசித்தும், இல்லை என்கிற பதில்தான் கிடைத்தது. தன்னைப் பிடிக்கவில்லையோ என்றும் அடிக்கடி சந்தேகம் வந்தது.

இரவில் அவன் நடந்து கொள்ளுகிற முறை? அதுவும் கொடூரம்தான். இரையைக் கவ்விக் குதற நினைக்கும் கொடிய மிருகம் எப்படி இயங்குமோ அப்படி ஆக்ரோஷமாக இருந்தது அவனது அணுகுமுறை. ஒரு பூவைப் போல் ரசித்து, முகர்ந்து மென்மையாய் ருசிக்க வேண்டும்…அதில் அவள்பாலான தன் பேரன்பை அவளுக்கு உணர்த்த வேண்டும், நானே உனக்கு என்றுமான காவலன் என்று அந்த நெருக்கத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதான மென்மைப் போக்கெல்லாம் அவனிடம் இல்லை. அதை எதிர்பார்த்தாள் அவள். விநோதமாய்ச் சில சமயம் பேசுவான். அவளோடு சேர்ந்திருக்கும்போது ஏதேனும் ஒரு நடிகையைச் சொல்லுவான். அவளை மாதிரி ஒருவாட்டி சிரியேன் என்பான். என்னானாலும் அவ தொடை மாதிரி வராதுடீ….!  என்று சொல்லிக்கொண்டே அவள் காலைத் தூக்கித் தன் மேல் போட்டு இறுக்குவான். தனியாய்த் தூங்குகையில் நடிகைகளைக் கனவு கண்டு கொண்டிருப்பானோ என்று தோன்றும். அவன் குப்புறக் கிடக்கும் கிடப்பு அந்த மாதிரி எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

கூட மில்லில் வேலை பார்க்கும் செவ்வந்தியை அடிக்கடி சொல்லுவான். அவ ஸ்டெரச்சரப் பார்த்திட்டே இருக்கலாம்…என்று மயக்கமாய் ஏங்குவான். அந்த வார்த்தையைக் எங்கிருந்து கண்டு பிடித்தான் தெரியாது. தன்னை அணுகும்போது வேறு எவளையாவதுபற்றி அவன் என்றும் பேசாமல் இருந்ததில்லை என்பதே அவளுக்குப் பெரிய ஆதங்கமாய் இருந்தது. போதுமான கவர்ச்சி தன்னிடம் இல்லையோ என்று மறுகினாள். அவன் அணைப்பிற்கும், புரட்டலுக்கும், இறுக்கலுக்கும் திருப்தியான பெண்ணாய்த் தான் இல்லையே என்று வருந்தினாள். உடம்பத் தொடைச்சிட்டு வந்து படு…நாறித் தொலையுது…என்று கறுவுவான். துணி மாற்றிக் கொண்டுதான் அவனோடு போய்ப் படுப்பாள்.

 மனோ அப்பாதான் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சுத் துகள்களுக்கு நடுவே வேலை செய்வது அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மூச்சிழுப்பு வந்தது. சரியாக வேலைக்குப் போகாமல் இருத்தல், சுருட்டி மடக்கிப் படுத்துக் கொள்ளல், சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது வெளியூர் போய், நண்பர்களோடு சுற்றிவிட்டு சாவகாசமாய் வருதல் என்று அடம் பிடித்தவன்தான். ஒரு வட்டத்துக்குள் அவனைச் சிக்க வைக்க அவன் தந்தை பெரும்பாடு பட்டார்.  ஒரு கட்டத்தில் தாயார் சொல்லுக்குத்தான் அடங்கினான். குடும்பத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லிப் பணிய வைத்தது அவன் அம்மாதான்.

அவன் சொல்லித்தான் அவளை அவன் அப்பா போய்ப் பார்த்து முடிவு செய்தார். கல்யாணத்தின்போதெல்லாம் கொஞ்சம் பூசினாற்போலத்தான் இருந்தாள் மல்லிகா. அடியே…உன் சிரிப்புலதாண்டி விழுந்தேன்… என்று சொன்னான் மனோகரன்.  என்ன காரணம் என்றே தெரியவில்லை அவள் உடம்பு அதற்குப்பின் ஏறவேயில்லை. சரியாவே சாப்பிடமாட்டா…வேல…வேலன்னு ஓடிடுவா…கொஞ்சம் பார்த்துக்குங்க…என்று மல்லிகாவின் தாய் கண் கலங்கியபோது….மனோகரனின் அம்மா…நானும் ரெண்டு பெண்டுகள வச்சிருக்கிறவதான்…ஒண்ணும் கவலைப்படாதீங்க…என் மக மாதிரிப் பார்த்துக்கிடுறேன்….என்று சமாதானம் சொன்னாள். வாயால்தான் வழிய விட முடிந்தது. வீட்டில் வசதி வாய்ப்பா பெருகிக் கிடக்கிறது? இருக்கும் குச்சிலுக்குள் ஏழு பேர் கும்மியடிக்க வேண்டியிருந்தது. கால் வீசி நடந்தோம் என்பதில்லை. எதிலாவது இடித்துக் கொண்டேயிருந்தது. ஒதுக்கி வைக்க இடமில்லை என்று பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள் நடைபாதை ஓரமாய் வரிசை கட்டியிருந்தன. கவனிக்காமல் நுழைந்தால் இடிதான். அப்படி எத்தனையோ முறை தடுக்கிக் கொண்டிருக்கிறாள் மல்லிகா. அந்த வீட்டில் பாதகமின்றி நடப்பதற்கே தனிப் பயிற்சி தேவையாயிருந்தது.

உங்க ரெண்டுபேர் சம்பளத்துலதாம்மா இந்தக் குடும்பத்துல உள்ள ஏழுபேரும் சாப்பிடணும்…என்று சொன்னாள் மல்லிகாவிடம். மனோகரனின் அப்பா ஓய்வு பெற்றபோது வந்த சேமநலநிதிப் பணம், சம்பள சேமிப்புப்  பணிக்கொடைப் பணம் என்று ஏதோ கொஞ்சத்தை வங்கியில் டெபாசிட் பண்ணியிருந்தார்கள். அதிலிருந்து வட்டி வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கடி நெஞ்சு வலி, முழங்கால் மூட்டு வலி என்று ஆஸ்பத்திரிக்குக் கொடுக்கவும் சரியாய் இருந்தது. நான் கருத்தா சேர்த்த பணமெல்லாம் இப்டிக் கரியாப் போகுதே என்று புலம்பினார். இதுக்குத்தான் வீட்டுல முடங்கமாட்டேன்னு சொன்னேன்…நெல்பேட்ட கோடவுனுக்கு வேலைக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டீங்க….இப்ப தண்டமா உட்கார்ந்து செறிக்கமாட்டாமத் தின்னுட்டு வெட்டிக்கு உட்கார்ந்திட்டிருக்கேன்…..என்று கண்ணீர் விட்டார்..

பலவற்றையும் போட்டு மனதில் புழுங்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. வெளியில் சொல்ல முடியாததும், ஆதரவற்ற நிலையும், அப்படிச் சொல்லப் புகுந்தால் என்ன நடக்குமோ என்கிற பயமும், அவளுக்கு பலவிதமான உடல் உபாதைகளை விடாது ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எண்ணமும் மனசும் நடுங்கிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் சுதந்திரமாய் இயங்குவது? நம்பிக் கை பிடித்த நாயகனே நழுவி நழுவி நிற்கும்போது எந்த ஆதரவை எதிர்நோக்கி அவள் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாள்?

       வீட்டுக்கு வீடு அம்மிக்கல் போட்டு டங்கு டங்கென்று இடித்து அரைக்கக் கூடாது என்று பொதுவாக இரண்டே இரண்டு அம்மிகள் மட்டும் கிடந்தன அங்கே.  ஓரமாய் நீளவாக்கில் வாய்க்கால் போல் கோடிழுத்து இருபக்க சரிவாகக் கட்டிவிடப்பட்டுள்ள  இடத்தில் பாலம் போல் சுவற்றோடு சுவராக அந்த அம்மிக்கல்கள் பதிக்கப்பட்டுக் குந்தியிருக்கும். அழுக்குத் தண்ணீரும் எச்சிலும் துப்பலும் வாய்க்கால் வழி ஓடிக் கொண்டிருக்கையில்தான் குழம்புக்கோ, சட்டினிக்கோ அரைக்க வேண்டியிருக்கும். அந்த அசிங்கமெல்லாம் பார்க்க முடியாது அங்கே. அதுபாட்டுக்கு அது…இதுபாட்டுக்கு இது…! கீழ் வீட்டிலிருப்போர் அனைவரும் பல் விளக்குவது,  கார் கார் என்று உமிழ்வது, முகம் கைகால் கழுவுவது, ஏன் அவசரத்துக்கு வெட்ட வெளியில் குளிப்பது என்று கூட அனைத்தும் அங்கேதான் நடந்தது. ஆண்கள் குளிக்கையில் வாளித் தண்ணீரோடு கடப்பது இவளைக் கூனிக் குறுக்கி விடும். வந்து தொலைக்கிறதே..சனியன்…!

மூன்று கழிவறைகளையொட்டி இரண்டே இரண்டு குளியலறைகள்..! அதில் பெண்கள்தான் போய்க் குளிப்பார்கள். கீழ் வீட்டு ஆண்கள் பூராவும் வெட்ட வெளிதான். பொந்தாம் பொசுக்கென்று துண்டைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி இப்படித் திரும்பும்போது ஈரத் துண்டோடு தெரியத்தான் செய்யும். பொருட்படுத்தமாட்டார்கள். அன்ட்ராயர், ஜட்டியோடு ஆனந்தமாய்ப் போடும் குளியல் வெயில் சூட்டோடு இதமாய்ப் பரிமளிக்கும். அந்தப் பகுதியிலேயே இதெல்லாம் சகஜம். வீட்டிற்குள் துளியும் இடம் இல்லாதவர்கள், வாசலில் ஒரு கல்லைப் போட்டு, அதன் மீது அமர்ந்து எனக்கென்ன என்று ஜலக்கரீடை செய்வார்கள். பொம்பிளைகள் வெட்ட வெளியில் தங்கள் புருஷனுக்கு  முதுகு தேய்த்து விடும் காட்சி அன்றாடம் அந்தப் பகுதியில் சர்வ சகஜம்.

 புழக்கம் யார் கண்ணிலும் படாத மாடி வீடு என்பது ஒன்றுதான் அங்கு உள்ள  ஒரே வசதி. அத்தோடு இட நெருக்கடி ஏற்படுகையில் சட்டென்று மொட்டை மாடிக்குச் சென்று உட்கார்ந்து கொள்ளலாம். சுள்ளென்று வெயில் தகிக்கும் காலங்களில் அதுவும் நடவாது. இரவில்தான் வசதி. அந்த மொட்டை மாடிக்கு யாரும் வரமாட்டார்கள். காரணம் மாடிவீட்டின் அடுப்படி வழியாக அந்தப் படிக்கட்டு செல்வதுதான். அதன்படி பார்த்தால் மாடியில் குடியிருப்பவர்களுக்குத்தான் மொட்டை மாடியும் என்றாகிவிடுகிறதே…! படியை வெளியே விட்டிருந்தால் அடுப்படி சுருங்கிப் போயிருக்கும். அதனாலேயே நூறு ரூபாய் வாடகை அதிகம். ஆனால் எப்போதேனும் மாடிக்கு வரும் கீழ் வீட்டுக்காரர்களிடம் அதைச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லி, சண்டை வந்து, அதனாலேயே வீட்டைக் காலி செய்து கொண்டு போனவர்கள்தான் இதற்கு முன்பு இருந்தவர்கள். கீழ் வீட்டுக்காரர்களுக்கும் மாடியில் உரிமையுண்டு என்ற விபரம் முன்பு காலி செய்து கொண்டு போனவர்கள் வழி தெரிய வந்தது.

       அங்க ஏன் போறீங்க…? அந்தம்மா பெரிய அடாவடியாச்சே…! என்றுதான் முதல் தகவல் அறிக்கை. ஆனாலும் கட்டுபடியாகும் வாடகை என்று தேடும்போது சில பிரச்னைகள் பெரிதாய்த் தோன்றுவதில்லை! அதென்னவோ இவர்கள் குடி வந்ததிலிருந்து யாரும் மாடிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.

       நா போறேன்….வந்திரணும்….. –குரலில் ஒரு கடூரம். சத்தமின்றி அவன் மாடி ஏறுவது அந்த இருட்டுக்குள் தெரிந்தது. இவள் எழுந்திரிக்க மனமின்றிப் படுத்திருந்தாள். அந்த இடத்தில் அவர்களோடு படுத்திருக்கும் கதகதப்பு மேலே போனால் அவளுக்குக் கிடைக்காது. கோடைகாலம்தான் என்றாலும், பாதி இரவுக்கு மேல் ஒரு குளிர் காற்று வீச ஆரம்பிக்கும். அந்தக் காற்று இவளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. மூக்குக்குள் நெரு நெருவென்று நிமிண்டிக் கொண்டேயிருக்கும். மறுநாள் அது தும்மலாக மாறும் அபாயமுண்டு. தடுமம் வந்து விடக் கூடாதே என்று பயந்து சாவாள் மல்லிகா. காட்டுக் கத்துக் கத்துவான்..

நச்சு நச்சென்று தும்மல் போட்டால் அவனுக்குப் பிடிக்காது. ஒரு கர்சீப்பை வச்சிக்கிட்டுத் தும்மித் தொலைய வேண்டிதானே? இப்டியா வீடு பூராவும் சாரலடிக்கிற மாதிரிப் பொழிவே? வாய் நாத்தம் பரவலா அடிக்குது…என்று ஒரு நாள் அவன் சொல்லி வைக்க தங்கைகள் இருவரும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். அதற்குப் பிறகாவது அவனின் அம்மாதிரியான பேச்சுக்களை நிறுத்திக் கொண்டிருக்கலாம். வீட்டிலிருப்பவர்கள் முன் தன் மனைவியைக் கண்டிப்பதோ, கேலி செய்வதோ கூடாது, அப்படியிருந்தால் அவர்களுக்கு அவள் மீது மதிப்பு மரியாதை இருக்காது என்பதை அவன் உணர வேண்டும். ஆனால் அவனுக்கு அது தெரிவதில்லை. அவன் எதிர்பார்க்கும்போதெல்லாம் அலங்காரப் பதுமையாய் அவன் முன் நின்றாக வேண்டும். உடலுறவுக்கு என்று தவிர வேறு எவ்வகையிலும் அவன் அவளை அணுகியதில்லை. பெண்டாட்டி அதற்கு மட்டும்தான் என்பதில் தீர்மானமாய் இருந்தான். மற்றப்படி அவளது தேவைகளை அவளே உணர்ந்து சொல்லி, அதற்கு நாலு முறை சலித்து, கோவித்து ஒதுங்கி, பிறகுதான் சரி வா…போவோம் என்பான்.அப்படியாவது செய்கிறானே என்றுதான் இருந்தது இவளுக்கு.

த்தமின்றி எழுந்தாள். யார் மீதும் கால் பட்டு விடாமல் புடவையை இழுத்துக் கொண்டு தாண்டினாள். மேலே போவதற்கு முன் ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து விடுவோம் என்று தயாராயிருந்த வாளித் தண்ணீரை எடுத்துக் கொண்டு இறங்கினாள். சிறுநீர் கழிக்க என்றாலும் தண்ணீரை அடித்து ஊற்றாமல் வர முடியாதே…! நாற்றம் வாசல் வரை அடிக்குமே…! வழியெல்லாம் படுத்திருக்கிறார்களே?  அந்த நடு இரவு நெருங்கும் நேரத்தில் அப்படி கக்கூஸ் நோக்கிப் போவது ரொம்பவும் சங்கடமாயிருந்தது. அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்தம் வந்தால் கோபப்படுவார்கள். தூக்கத்தில் உளறுவதுபோல் என்னவாவது கெட்ட வார்த்தையைப் பேசித் திட்டுவார்கள். பதிலுக்குக் கோபித்துக் கொள்ள முடியாது. வழியில் கால்மாடு, தலைமாடாக ஆட்கள் படுத்திருந்தார்கள். எப்போது தூக்கத்தில் புரளுவார்கள் என்று சொல்ல முடியாது என்கிற ஜாக்கிரதையில், யார் மீதும் கால் பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் தாண்டித் தாண்டிப் போய் கழிவறையை அடைந்தபோது, அவளுக்கு திடீரென்று வயிற்றைக் கலக்கியது. ஒன்றுக்கு வந்த இடத்தில் ரெண்டுக்குப் போகணும் போல உறுத்தியது. கதவைச் சாத்தியபோது அந்தத் தகரக் கதவு கரகரவென்று சத்தமிட்டது. அழுத்தி உள் கொக்கியைப் போட்டாள். அதற்குக் கூட சக்தியில்லை அவளிடம். கையும் காலும் வெலெ வெலவென்று வந்தது.

சனியம்பிடிச்ச வயிறு….வெறுமே பட்டினி போட்டாத்தான் சரிப்படும் போல்ருக்கு…- என்னவோ சுருட்டிக் கொண்டதுபோல் வயிற்றைப் பிசைந்தது. சூடு பிடித்துக் கொண்டதுபோல் ஒன்றுக்கு வர மறுத்தது. மாத ஒதுக்கலுக்கு நாளாகி விட்டதோ என்று அப்போதுதான் நினைப்பு வந்தது அவளுக்கு. வந்த நேரம் உடம்பில் இருந்த பதட்டத்தில் அது நடந்தே விட்டது. அதற்கென்ன நேரம் காலமா குறித்து வைத்திருக்கிறது?

ப்பச் சொன்னேன்…எப்ப வர்ற நீ…? என்றான் அவன். உனக்காக முழிச்சிக்கிட்டு தவங்கிடக்கணுமா நான்..? .என்று தொடர்ந்து. சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்துச் சடாரென்று இழுத்துக் கீழே சாய்த்தான். மாத விலக்குப் பெற்று,  மாடி வந்து இருட்டோடு இருட்டாக அதற்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு அவள் மொட்டை மாடியை அடைய, உடலும் மனசும் தளர்ந்து கிடந்த அந்தக் கணத்தில் அதை அறியாத அவனின் செய்கை அவளுக்கு அசாத்திய எரிச்சலையும், கோபத்தையும் கிளர்த்தியது. அவளை இழுத்து இறுக்கி அவன் அணைத்த அந்தக் கணத்தில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று முடிவுசெய்து அவள் சொன்னாள்..

”ஏங்க….நாம ஒரு தனி வீடு பார்த்திட்டுப் போயிடலாமே….இங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது தெனமும்….”

அவள் சொன்னதைக் காதில் வாங்கியதாகவே தெரியாமல், கலவி மயக்கத்தில் கண்கள் செருக… அவன் அவளை மேலும் இறுக்கி நெருக்கினான்…! …அதையும் பொறுத்துக் கொண்டு, அவன் மூச்சுக் காற்று அவள் மேல் படர அனிச்சமாய் அவள் குழைந்து தழையும் முன் மேலும் உண்டான தன்னுணர்வில் மீண்டும் அவன் காதுக்கு நெருங்கி அதைத் துல்லியமாய்ச் சொன்னாள். “இன்னைக்கு எதுவும் வேண்டாங்க….!”