சிறுகதை

அன்பில் – கமலதேவி சிறுகதை

தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டதும் கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தி,சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார்.சற்று மூச்சுவாங்கியது. அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது.

இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா என்று தோன்றியது.இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழே வந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்த வயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரிசெய்து திரும்பினார்.

வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம்  நம்பர்ஒன் டோல்கேட் என்று அவர்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும். இதோ வந்துட்டோம்மா என்று மனசுக்குள் நினைக்காமலா இருப்பார்கள் என்று நினைத்தபடி மேற்குபக்கம் திரும்பி தெருவைப்பார்த்தார்.

காலை ஔியில் வீட்டுகேட்டிற்கு நேராக விரிந்த பாதையின் முடிவில் சங்கரன் நாய்கள் சூழ நின்றிருப்பது தெரிந்தது. அதைக்கண்டதும் சுந்தரவள்ளியம்மா  சங்கரனிடம் இன்று சொல்லிவிடவேண்டும் என்று தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்.

சருகுகளை அள்ளி மூலையில் குவித்தபடி சங்கரன் கேட்திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவர் வெளியே நாய்களுக்கு ரொட்டிகள் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நாய்களின் பவ்பவ்வ் என்ற குழைந்து தாழ்ந்த குரலால் தெரிந்தது. அவர் உள்ளேவந்து செருப்பை சுழற்றிக்கொண்டிருக்கையில் , “நில்லுங்கய்யா,”என்ற சுந்தரவள்ளியம்மா விளக்குமாரை கீழே போட்டுவிட்டு சங்கரன் அருகில் வந்தார்.

சங்கரன், “ஈரமா இருக்குல்ல மெதுவா வாங்கம்மா.சமயபுரத்துக்கு நடக்கற பொம்பளையாளுக என்னா வேகங்கறீங்க.. நம்மளால போட்டி போட முடியாதும்மா.காலையில இருந்து கும்பல் கும்பலா எத்தனை ஆட்கள்,”என்றார்.இந்தமனிதனிடம் எப்படி வீட்டைக்காலி பண்ண சொல்வது என்று சுந்தரவள்ளியம்மாவிற்கு மனதிற்குள் ஓடியது.

“ஆமாங்க.இனிமே அம்மாவுக்கு பூபோடுவாங்க. இப்படித்தான் வருவாங்க.உங்களுக்கு புதுசுல்ல…அப்பறம் கொஞ்சநாளாவே சொல்லனுன்னு இருந்தேன்….”என்றபடி சேலைமுந்தானையால் முகத்தைத் துடைத்தார்.

“என்னம்மா…”

“வீட்டக்காலி பண்ணமுடியுங்களா?”

“ஏம்மா தீடீர்ன்னு இப்படி சொல்றீங்களே…”என்று கண்களை விரித்துப் பார்த்தார்.

அவரின் கண்களைப்பார்க்காமல் அவருக்குப் பின்னாலிருந்த புங்கைக்கன்றைப்பார்த்தபடி“இல்ல…மூணுமாசம் அவகாசம் எடுத்துக்கங்க..”என்றார்.

“நீங்களும் ரிடையர்டு கப்பில்ஸ் தானே..திருச்சிக்கு வெளிய அமைதியா இந்த வீட்டப்பிடிக்க நாங்க பட்ட சிரமம் உங்களுக்கே தெரியுங்களே!”

அவரிடம் என்ன சொல்வது அவர் என்று தயங்கிக்கொண்டிக்கையில் சுந்தரவள்ளியம்மாவின் துணைவர் மேலிருந்து இறங்கி படிகளில் நின்றபடி, “குட் மார்னிங் சார்,”என்றார்.

“எனக்கு குட்மார்னிங் இல்லையே சார்,”

பத்மநாபன்,“வீடு காலிபண்றதுபத்தி பேசறீங்களா?”என்று உடனே நேரடியாகக் கேட்டார்.

“ஆமா…என்ன திடீர்ன்னு….”

“சார்..உங்கக்கிட்ட மறைக்க ஒன்னுமில்ல.நீங்க இப்படி வெளிய போகவரப்ப…வீட்டுக்கு முன்னாடி நாய்களுக்கு தீனி வைக்கறதால நாய்க இங்கயே சுத்தி வருது.நெறய பேர் கம்ப்லெய்ண்ட் பண்றாங்க.சின்ன பிள்ளங்க பயப்படுதுக,”

“இதுவரைக்கும் ஒருநாயும் ஒன்னும் பண்ணலயேங்க..”

“சார்…உங்களுக்கே தெரியும்.நாய் எப்ப என்ன பண்ணுன்னு.எதாவதுன்னா நீங்கதான் ஹவுஸ்ஓனர்.. பதில் சொல்லனுன்னு மூணாவதுவீட்டு எஸ்.ஐ வேகமா சொல்றார்..”

மூவரும் எதுவும் பேசாமல் கொஞ்சம் நேரம் நின்றார்கள்.பத்மநாபன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தபடி,“நாய்க சத்தம் நிம்மதியா இருக்க விடுதில்ல சார்…”என்றபடி மோட்டாரை தட்டிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட சென்றார்.

சுந்தரவள்ளியம்மா மெதுவாக படிகளில் ஏறத்தொடங்கினார்.

பத்மநாபன் ஒவ்வொரு செடியாக மரமாக தொட்டபடி தண்ணீர் விடத்தொடங்கினார். சங்கரன் உள்ளே சென்றதும்,தனம்மா வெளியே வந்து, “ வீடுகாலிபண்ண சொன்னீங்களாமே,”என்றார்.

“எங்களுக்கும் சங்கடம் தான். அவர இந்த நாய்களுக்கு தீனி போடற பழக்கத்த விட சொல்லுங்க.அதான் பிரச்சனையே..”

“இதுக்காக வீடு மாறிக்கிட்டே இருக்கோம்…சொன்னா கேட்டாதானே..இந்த முடியாத ஒடம்ப வச்சிகிட்டு வீடு மாத்தறது ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க..சொன்னா கேட்காத ஜென்மம்..”என்று படிகளில் அமர்ந்தார்.

அடுத்து இரண்டு நாட்களில் வீட்டின் முன்பு நாய்களின் சத்தம் கேட்கவில்லை. மீண்டும் அந்தமுடக்கில் அவர் நாய்கள் சூழ நின்றுகொண்டிருந்தார். அன்று அவர் மனைவி வீட்டிலிருந்த பிரட்,பிஸ்கெட் பைகளை எடுத்து வெளியில் வீசி கதவை மூடினார்.

அன்று இரவில் நாய்களின் சத்தம் குழைவான குரலைக் கேட்டு எழுந்த சுந்தரவள்ளியம்மா கழிவறைக்கு சென்றபின் வெளியில் எட்டிப்பார்த்தார். சங்கரன் தெருவிளக்கின் அடியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நாய்களுக்கு ரொட்டிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்நாய் அனேக இடங்களில் கடிவாங்கிய அடையாளம் தெரிந்தது.அது ஒருகாலைத்தூக்கி அவரின் தொடைமேல் வைத்து அழைத்தது.அவர் திரும்பி அதற்கு ரொட்டியை நீட்டினார்.அவர் சிரித்தபடி அதன் தலையில் தட்டினார். ஒருவாலறுந்த சிறுவன் முன்பின் தெரியாமல் சற்றுதூரம் ஓடியும் ,அருகில் வந்தும் காலை முகர்ந்தும் அழிச்சியாட்டியம் செய்து கொண்டிருந்தான்.அவர் அதன் கழுத்தைப்பிடித்து தூக்கிப்பார்த்து சிரித்தார்.அது உடலை வளைத்து நான்குகால்களையும் வாலையும் உள்ளிழுத்துக்கொள்வது, சட்டென்று மகளின் ஸ்கேனில் பார்த்த குழந்தையை போலத் தெரியவும் சுந்தரவள்ளியம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. ஜன்னலை சாத்திவிட்டு சுவரில் சாய்ந்து நின்றார்.

காலையில் எழுந்ததும் பத்மநாபனிடம், “ஏங்க..இது பாவமில்லயா? அவரு என்ன தப்புப் பண்ணிட்டார்ன்னு வீட்டக்காலி பண்ணனும்.நல்ல மனுஷங்க..”என்றார்.

“பாவமும் இல்ல…மண்ணாங்கட்டியுமில்ல. அந்த எஸ்.ஐ எப்படி மிரட்றாப்ல பேசறார் தெரியுமா?”

“நாம என்னத்துக்கு அவருக்கு பயப்படனும்..அவருக்கு நாய்ன்னா ஆகாதோ …என்னவோ..”என்று எழுந்து கீழே வந்தார்.

கோலமிட்டப்பின் மோட்டார் சாவியைத்தேடு கையில் சுற்றுசுவரின் சிறுபொந்தில் ஒரு ரொட்டிப்பை தட்டுப்பட்டது. சுந்தரவள்ளியம்மா திரும்பி மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று உள்ளே தள்ளி வைத்தார். நிமிரும் போது மீட்டர் பெட்டி மேல் ஒரு ரொட்டிப்பை கண்ணில்பட்டது. அதன் அருகில் செல்லும் போது பத்மநாபன் மாடியிலிருந்து இறங்கும் ஓசைக்கேட்கவும் திரும்பி, தண்ணீர் குழாயின் அருகில் சென்றார்.

இதென்ன கூத்து என்று அவருக்கு எரிச்சலாக வந்தது.உள்ளுக்குள் ஒரு பயம்.இன்னும் எங்கெங்கு ரொட்டிப்பைகள் கிடக்குமோ என்று.

அதை இவரிடம் சொல்லி விடலாம் என்று தோன்றும் கணம் ஒரு மெல்லிய பூ இறகு ஒன்று சுந்தரவள்ளியம்மாவின் மனதை மறைத்தது. அடுத்துவந்த நாட்களில் இரவில் நாய்களின் குறைப்புகள் அதிகமாக கேட்டு தூக்கத்தை கெடுத்தது. சிலஆட்கள் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுப்போனார்கள்.

சங்கரன் வீட்டிற்குள் சத்தம் கேட்டுக்கொண்டிப்பதை மேல்மாடியில் இருக்கும் இவர்கள் கேட்டபடியிருந்தார்கள்.

மஞ்சு,“வாடகைக்கு விடறப்பவே யோசிச்சிருக்கனும் மாமா..”என்றாள்.

“வயசானவங்க என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு விட்டாச்சு,”

“நான் சொல்லியிருந்த என்ஞ்ஜினியர வேணுன்னா இங்க குடிவைக்கலாம் மாமா..நமக்கும் நல்லது.தோட்டத்து மரங்கள வெட்டிட்டு சீக்கிரம் ஆகவேண்டியத பாத்தா நல்லதுன்னு அவரும் சொல்றார்.வீட்டக்கட்டி வாடகைக்கு விட்டா..வீடுகட்ற வேலையும் முடியும் .வருமானமும் வந்தமாதிரி இருக்கும்,”

“அதுக்குள்ள என்னம்மா? இந்தவீடுகட்டி ஐஞ்சுவருஷம்தான் ஆவுது.மரங்க செடிங்க இருந்தா நல்லதுதானம்மா.அந்த சின்னஎடத்தையும் அடைக்கணுமா ?”

கீழே தனம்மாவின் குரல் வேகமாகக் கேட்டது.

“தினமும் ஓயாம எதாச்சும் சலசலன்னு… அவங்க நெனக்கறபடி இருக்கனுன்னா அவங்க வீட்ல இருக்கனுங்கத்த, இதெல்லாம் தேவையா..சீக்கிரம் வெரட்டனும். நாசூக்கா அவங்களே காலிபண்றது நல்லது”

“அந்தம்மாவுக்கு சுத்தமா நாய்கள கண்டா ஆகாது..இவரு இப்படி.என்ன மஞ்சு பண்றது..சிலபேருக்கு சொன்னாதான் புரியுது”என்றபடி சுந்தரவள்ளியம்மா பெருமூச்சுவிட்டார்.

பத்மநாபன்,“இங்கபாரு சுந்தரம்..தனம்மாக்கிட்ட கண்டிப்பா சொல்லிடு.இவரு சரிப்பட்டு வரமாட்டார்.நமக்கு தொல்ல..இதென்ன மனுசன்.அந்த மாமரத்து கொப்புக்கு நடுவுல பிரட் பாக்கெட் இருக்கு.ஒரே எறும்பு வேற…அதுகளுக்கும் ஒருபிரட்டை வச்சிட்டு போறார்,”என்றார்.

சுந்தரவள்ளியம்மா பேசவில்லை.

நாளைக்கு காலி பண்றோம் என்று சங்கரன் சொல்லும் நேரம் இருவருக்கும் அவர் முகத்தைப்பார்க்க சங்கடமாக இருந்தது.

அன்றும் பின்னிரவில் நாய்களின் குரல் சுந்தரவள்ளியம்மாவை எழுப்பியது.படுக்கையிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்தார்.அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வீடுகட்டி வந்த நாட்கள் நினைவில் எழுந்தன.மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகி அனுப்பி “அப்பாடா,” என்று நிம்மதியாய் அன்பிலில் அமர்ந்த நாட்கள் அவை. இவர்கள் இருவரும் மீண்டும் பேசிக்கொள்ளத் தொடங்கிய நாட்கள். பத்மநாபன் பேருந்திலிருந்து இறங்கி வந்து வாசலில் அமரும் அந்திப்பொழுதில் நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அன்றுகாலையில் வேலையிலிருந்து வந்தவர் வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கோலமிடும் சுந்தரவள்ளியிடம் பேசத்தொடங்கினார்.

“இத்தன வருஷமா இந்தப்பேச்ச மறந்திருதீங்களே..”

“மறக்கல சுந்தரம்.என்னமோ ஒரு அலைச்சல் மனசில. நாங்கூட வேல டென்சன்னு நெனச்சிருந்தேன். இப்பவும் அதே வேல தான்.ஆனா பாரு…பாரமா தெரியல. மனசு பாரத்தை எல்லாத்தையும் ஏத்தி ,வேலமேல வைச்சு இப்ப எறக்கியாச்சு,”என்று சிரித்தார்.

சுந்தரவள்ளி தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோழிகளை கூண்டுகளில் இருந்து திறந்துவிடவும் ,பத்மநாபன் வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டு தீனிகளை எடுத்து கலன்களில் இட்டார்.

சுந்தரவள்ளி சிரித்தபடி, “போதும் வாங்க..நாமளும் டீ குடிக்கலாம்.,”என்றார்.

“அந்த ப்ரவுன் கோழியும் அதோட குலவான்களும் நல்லா இருக்குல்ல..”

சுந்தரவள்ளி,“ம்..இதெல்லாம் பாப்பீங்களா! எங்கம்மா குடுத்துவிட்ட கோழி சேவன்னு தானே கண்டுக்காம இருந்தீங்க,”என்று புருவதை சுளித்தார்.

“ஆமா…யாருபுள்ள நீ. நீயும் ஒந்நெனப்பும்.அந்தம்மா செத்து பத்து வருசமாவுது. நம்ம கல்யாணத்து சமயத்துல கொடுத்த ரெண்டுஉருப்படிதானே? இப்ப ஐம்பது நூறா நிக்கிதுங்க…இதுகள பாக்கையில சந்தோசமா இருக்கும்.பஞ்சுருண்டையாட்டம்.. இக்குணூண்டு கண்.. துள்ளியூண்டு காலு..யாருக்குதான் பிடிக்காது..எதையும் சொல்லிக்கறதில்ல”

வாழ்வில் இப்படி சாவகாசமாக நிமிர்ந்து சாய்ந்தமர்வதற்குள், பாப்பாவின் பிள்ளைப்பேறு, மருமகளின் பிள்ளைப்பேறு என்று மீண்டும் திருச்சிக்கும், பெங்களூருக்கும் ஓடிக் களைத்த நாட்களில் அவரும் ஓய்வுபெற்று வீட்டில் அமர்ந்தார்.

தன்ராஜ்,“சும்மா இங்க இருக்கறதுக்கு திருச்சியில் வீட்டக் கட்டி அங்க இருங்க. நான் வெளிநாடு போயி நாலுகாசு பாத்துட்டு வர்றேன். இந்த சனியன்கள தலமுழுகுங்க. நாத்தம் தாங்கலன்னு எத்தனமட்டம் சொன்னாலும் கேக்கறதில்ல. கோழிப்பண்ண உங்கக்கிட்ட தோத்துப்போவும். யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரமுடியுதா..”என்றான். அவன் கால்களுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு குடுகுடு வென்று ஓடி தாயுடன் சேர்ந்துகொண்டது.

“இந்தவீட்டுக்கென்னடா…இதுங்கபாட்டுக்கு வெளியிலதானே திரியுதுங்க..முட்டைய முழுங்கையில நாத்தம் தெரியலயா? ஏன் உங்கூட வாரவுங்க திங்கமாட்டாங்களா?”

“நான் பேசறதுதான் பேச்சுன்னு பேசக்கூடாது. காலத்துக்கு தக்கன மாறலன்னா என்ன மனுஷங்க..”

“நீ மாறிக்க..நாங்கமாறி என்ன பண்ணப்போறாம். மனகலக்கந்தான் மிச்சமாவும்.ஒரு ஈ எறும்பு ஆகாத பொழப்பு..”

“சும்மா வெறும்பேச்சு வேணாம்.ரெண்டுபேரும் சுயநலமாக இருக்காதீங்க…”

“….!” பத்மநாபன் கண்களால் சுந்தரவள்ளியை பேசவேண்டாமென்றார்.

பத்துநாளைக்குள் அன்பிலில் அனைத்தையும் முடித்து திருச்சிக்கு மாற சொல்லி தன்ராஜ் ஆணையிட்டுவிட்டு சென்றான். என்ன தான் அவசரம்..மனுசர் என்ன ஒன்னுமில்லாத கல்லா என்று மனசுதாங்காமல் முதலில் கோழிகளை விற்க ஆட்களுக்கு சொல்லிவிட்டார்கள்.

வண்டியிலேற்றி கொண்டு சென்றபின் உதிர்ந்து கிடந்த வெள்ளை, அழுக்குவெள்ளை, பழுப்பு, கருப்பு ,காப்பி வண்ண சிறுஇறகுகள் மேலும் குறு இறகுகளை குமித்துவிட்டு அமர்ந்த சுந்தர வள்ளியிடம் பணத்தைக்கொடுத்த பத்மநாபன், “என்னைக்கிருந்தாலும் காசுக்குக் கொடுக்கறதுதானே..விடு,”என்றார்.

ஆமாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் நெடுநாட்கள் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்ததை நினைத்தபடி சுந்தரவள்ளியம்மா எழுந்து ஜன்னல் பக்கம் சென்றார்.

சங்கரன் சிமெண்ட் பாலக்கட்டையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் நாய்கள் அமைதியாகப் படுத்திருந்தன.ஒன்று எழுந்து நடந்தது.பெண்நாய் அவரின் கால் செருப்பில் முகம் வைத்துப்படுத்திருந்தது. குனிந்து அதைப் பார்த்தபடியிருந்தார். சுந்தரவள்ளியம்மா திரும்பி கண்களை துடைத்தபடி படுக்கையில் படுத்து மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சங்கரன் வீட்டைகாலி செய்து சென்று இரண்டு தினங்களாக நாய்கள் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன. கேட்டிற்கு அருகில் அச்சத்தோடு வருவதும் போவதுமாக பரிதவித்தன. இரவிலும் நாய்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

நாட்கள் மசமசப்பாக கடந்துசென்றன. நாய்களின் கூட்டம் குறைந்தது அல்லது வெவவேறு பொழுதுகளில் வந்துசென்றன.

வீட்டின் முன் வந்து குறைத்த இரண்டுமூன்று நாய்களை பத்மநாபன் விரட்டினார். சுந்தரவள்ளியம்மாள் தெருவைப் பார்ப்பதும்,ஜன்னல் அருகே நிற்பதுமாக பத்துநாட்கள் கடந்தன.

அன்று காலையில் கோலமிடுகையில் மிக அருகில் வந்த அந்த தளர்ந்த நாயை கண்டு சுந்தரவள்ளியம்மா நெஞ்சில் கைவைத்து எழுந்தார். பின்னால் ஒருசிறுவன்.ஒட்டிய வயிறு.மின்னும் கண்களுடன் வாலையாட்டிக்கொண்டிருந்தான்.

“வீட்ல குடிவச்சதுக்கு பாவி…படுபாவி என்னய இந்த இம்சைக்கு கொண்டுவந்து விட்டுட்டானே,”என்றபடி சுந்தரவள்ளியம்மா கதவை பிடித்துக்கொண்டு நின்றார். அவரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்த பத்மநாபன்,“என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்..சுந்தரம் .அன்பிலுக்கு போனதும் முதல்ல கோழி சேவலும் வாங்கனும்.அதுங்க காவலுக்கு இங்கருந்து ஒருநாய்க்குட்டிய தூக்கிட்டு போகனும்”என்றார்.

அந்த அம்மா அதை நெஞ்சோடு சேர்த்தபடி தலையாட்டினார். அவர் அந்தம்மாவின் தோள்களில் கைவைத்து, கண்களைத் தூக்கிக்காட்டி நாய்கள் பக்கம் சுந்தரவள்ளியம்மாவை திருப்பினார்.

வண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா

உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட தென்னை ஓலை கீழே சரிந்து கிடந்தது , உதிரி பூக்கள் வீட்டு முன்ஓடையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது , ஒருகால் செருப்பு ஒன்றும் அதில் புதைந்திருந்தது, முன்மங்களாவில் இருந்து அடுக்காளை வரை கதவு திறந்து கிடந்தது, துஷ்டி விசாரிக்க வந்த பெண்கள் ஒரு கையால் வாயை மெதுவாக பொத்தியும் திறந்தும் குசுகுசுவென கதை அடித்து கொண்டிருந்தனர், காந்தி வெளியே நின்று “யம்மோவ் வெளுப்பு துணி இருந்தா போடுங்க” என்று கத்தினாள் , தாத்தா சம்சாரம் மாடவிளக்கு அருகே சுருண்டு படுத்திருந்தாள், மருமகள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் சென்று ஆங்காங்கே சுருட்டி கிடந்த துணிகளை பொருக்கி வந்தனர், மெட்ராஸ் காரி வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் பிரட்டிக்கொண்டிருந்தாள்.

மூத்தவள் பெரிய வேஷ்டியை வாசல் முன் விரித்து மொத்தமாய் துணியை போட்டதும் காந்தி உச்சஸ்தாயில் கத்தினாள், “இங்கேருக்கா ஒழுங்கா எண்ணி போடு, இல்லே துணிய காணும் மணிய காணும்னு எங்க மேல பழிய போட்ருவீங்க, ஒவ்வொன்னா போட்டுக்க”, இவள் கூறியதை கேட்டு மூத்தவள் துணிகளை போட இளையவள் சின்ன காகிதத்தில் துணிகளின் எண்ணிக்கையையும் வகையையும் குறித்து கொண்டாள், பெகளம் முடிந்ததும் மெட்ராஸ் காரி மெதுவாய் எழுந்து வந்தாள், காந்தியை நோக்கி “சரிம்மா உள்ள வந்து டீ குடிச்சிட்டு போமா” என்றாள், மூத்தவளும் இளையவளும் திருதிருவென விழித்தனர், பின்னே ஒரு வண்ணாத்தி வெள்ளாளன் வீட்டுக்குள் செல்லலாமா, “ஏன் கா உன் வீட்டு தீட்டு எனக்கும் புடிக்கத்துக்கா” என்று கோபப்பட்டவள் , “துணி ரெண்டு நாள் கழிச்சு கிடைக்கும் ” என்றபடி நடையைக்கட்டினாள், பாவம் மெட்ராஸ் காரி ஊருக்கு ஒரு கட்டுப்பாடு, சம்பிரதாயம் உண்டு என்று அறியாதவள், இதுவும் ஊருக்கேற்றபடி மாறிக்கொள்ளும்.

காந்தி முப்பது, முப்பத்தைந்து வயதை ஒட்டிய பெண்,கருமையான ஒடிசலான தேகம், ஒட்டிய வயிறு, எப்போதும் வெளிறிய பாவாடையும் சட்டையும் அணிவாள், கூந்தலை பின்னி சட்டை நிறத்துக்கு ஏற்றபடி ரிப்பன் கட்டிக்கொள்வாள், இவளுக்கு இரண்டு அக்கா மூத்தவள் ரெத்தினம், இளையவள் முத்து, இந்திரா நகர் இறக்கத்தில் வண்ணான்குடியில் இவர்கள் குடியிருந்தனர், வீட்டுமுன் அடையாளமாய் பெரிய கரியநிற மண்பானை புகை கக்கிய படி இருக்கும்.

மூட்டை மூட்டையாய் துணிகளை கட்டி பழையாறு வண்ணான்துறைக்கு பொழுது விடியும் முன்னே சிறு கூட்டம் செல்லும், ஆற்றங்கரை ஓரம் பெரிது பெரிதாய் கருங்கற்கள் நிரப்பி துவைப்பதற்கு வசமாய் எழுப்பிருந்தனர், கரையிறங்கி நுழையும் பாதையில் தென்னந்தோப்பு இருந்தது வெவ்வேறு, நிறங்களில் துணிகள் நீளமான கயிறுகளில் தென்னையில் கட்டப்பட்டு காற்றின் வேகத்தில் அசைந்தாடும், துணி அலச, குத்தி துவைக்க, அடித்து வெளுக்க என தனி ஆள் உண்டு, தூக்குவாளியில் கஞ்சியும் துவையலும் கட்டிக்கொண்டு அத்தனையும் துவைத்து காயப்போட்டு, காய்ந்ததை எடுத்து மடிக்கும் போது கருக்கள் நேரமாயிடும், இடையிடையே பாட்டு கச்சேரியும் உண்டு.

ரெத்தினத்திற்கும் மற்ற பெண்களை போல ஜோராக கல்யாணம் நடந்தது, மாப்பிள்ளை பாண்டிக்காரன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒருநாள் வீட்டு வாசல் முன் வள்ளியூர்காரி வந்து ஒப்பாரி வைத்தாள், சேதி அப்போதுதான் இவளுக்கு உரைத்தது, வந்தது முதல் சம்சாரம், ஆங்காரம் எடுத்த ரெத்தினம் அவனை வாரியலை எடுத்து அடித்தே விரட்டினாளாம், இந்த சம்பவம் நடந்தபின் மூன்று பெண்கள் தனியாய் வசித்தாலும் எள்ளளவு கூட ஆண்கள் நுழைய முடியாது, ரெத்தினத்தின் வைராக்யம் தான் என்னவோ தங்கச்சிகள் கூட கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.

இப்போதைக்கு வெளுப்புக்கு ஆட்கள் குறைவு, ஒன்றிரண்டு குடும்பங்களே இன்றும் இதை தொடர்ந்து செய்துவருகின்றனர், வண்ணாக்குடியில் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், அக்கா தங்கச்சிமாரின் பாட்டா வழி உறவுமுறை இசக்கிமுத்துவும் நாகராஜனும் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர், வண்ணான்குடியில் பள்ளி சென்ற முதல் தலைமுறை இருவரும் , இதுவும் காமராஜர் காலத்தில் வீட்டுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு இழுத்து வந்து படிக்க வைத்ததால் நடந்தது, படிப்பில் கெட்டிக்காரனாக இல்லாமல் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் அரசுவேலையும் கிடைத்தது, அக்கம்பக்கம் வசித்த பலர் இதை பார்த்து பொசுங்க ஆரம்பித்தனர், டீக்கடையிலும் சலூனிலும் இவர்கள் காதுப்படவே பொரும ஆரம்பித்து விட்டனர், அதிலும் இசக்கிமுத்து சைக்கிள் ஓட்டி போகும் போது தாங்க முடியாத சூடு சிலர் பின்னால் ஏறி மூலக்கடுப்பு வந்தவர்களும் உண்டு.

வண்ணான்குடியில் ஆட்கள் வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர், இன்று ஊர்காரர்களுக்கு துணி வெளுக்க காந்தி குடும்பம் மட்டுமே, வாரத்திற்கு இரண்டு மூன்று நாளைக்கு ஆற்றங்கரை செல்லுமளவுக்கே தொழில் இருந்தது ,மற்ற நாள் இவர்கள் தேவையில்லை, துவைப்பு இயந்திரமும் வந்தாச்சு , ஒருவேளை துஷ்டி விழுந்தால் இவர்கள் இல்லாமல் காரியம் நடக்குமோ, வீட்டில் இழவு விழுந்தால் நாவிதனை தேடுவதுதான் பெரிய வேலை, பாடை கட்டணும், கதம்பம் அடுக்கி கடைசியில் ஆத்துமண்ணை எழுப்பி குழி போட அவனை விட்டால் ஆள் இல்லை, இப்போதெல்லாம் ஊர்குடிமகன் என்று நாலைந்து ஊருக்கு ஒரு நாவிதன், அவனும் வேறு தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டான், ஆனால் துஷ்டி வீட்டில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானம் அல்லவோ,,எரியூட்டி வந்த அடுத்த நாள் காடாற்று, இறந்து எரியூட்டிய நாள் வரைக்கும் குவிந்த அழுக்கு துணிகளை வீட்டில் துவைக்க கூடாது, வண்ணான் மட்டுமே வெளுக்க வேண்டும். காந்தி வீட்டில் அடுப்பெரிவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

நெடுநாளாய் ஊர்க்கூட்டம் கூடவேண்டும் என்று இசக்கிமுத்துக்கு ஒரு எண்ணம் உண்டு, ஊரை சுற்றி எல்லா தெருக்களிலும் கோயில் உண்டு, ஆனால் இங்கே ஒரு சாமியும் இல்லை, இவர்கள் தெய்வம் மாடனும் ஆத்தங்கரைக்கு செல்லும் பாதையில் தான் கோயில் கொண்டுள்ளார், கோயில் என்று கூறமுடியாது பழுத்த ஆலமூடின் முன் எழுப்பப்பட்ட மண் பீடம் மட்டுமே, வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வழிபடுவதை தவிர, ஆண்டுக்கு ஒருமுறை வரி பிரித்து சித்திரை கடைசி வெள்ளி சேவல் பலிகொண்டு ஊர்க்கொடை நடத்துவது வழக்கம், இசக்கிமுத்துக்கு தோன்றியது மாடனை இங்கே மண் பிடித்து எழுப்பி வழிபடுவது அல்ல, வெள்ளாளத்தெரு, ஆசாரிமார் தெரு, சாலியர் தெரு, செட்டித்தெரு, சன்னதி தெரு, ரதவீதியில் வழிபடுவது போல பிள்ளையார் கோயில், கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மொத்த ஊருக்கும் அன்னதானம் போடவேண்டும் . இந்த எண்ணத்தை இவர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும், வீட்டுக்கு வரி பிரிக்க வேண்டும், எம்.எல்.ஏ, கவுன்சிலர் இவர்களிடம் பெரிய நன்கொடையும் , கடைத்தெரு வியாபாரிகளிடமும் கிடைக்கும் நன்கொடையை வசூலித்து கொள்ள வேண்டும், இது சாத்தியமா என்பது அவனுக்கு தெரியாது, ஆனால் இதை எப்படியாவது தன் தலைமுறையில் செய்து காட்டவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு இருந்தது.

இதைப்பற்றி நாகராஜனிடமும் பேச்சுக்கொடுத்தான், நாகராஜன் அப்பிராணி, தாசில்தார் அலுவலகத்தில் கணக்கர் வேலை, வேலைக்கேற்ற மரியாதையை எதிர்பார்த்தான், அவனுக்கு அடுத்தபடி உதவியாளர் வேலை பார்க்கும் முத்துசாமிக்கு கிடைக்கும் கால்வாசி மரியாதை கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம், ஏன் நாகராஜனின் பெயர் கூட முதுகுக்கு பின்னால் வெளுப்புக்காரன்தான், உள்ளூர பொருமி என்ன லாபம், எதிர்த்து கேட்க திராணி இல்லை, எத்தனை நாள் இதை எண்ணி வருந்திருப்பான், தூக்கமின்றி தவித்திருப்பான். இசக்கிமுத்துவின் யோசனை சரி என்றே பட நாகராஜனும் ஒத்துக்கொண்டான். இசக்கிமுத்துவும் சாதாரண ஆள் இல்லை, புலியை பூனையாக்குவான், எலியை யானையாக்குவான், இதனாலே ஆட்சியர் அலுவலகத்தில் ஊரில் என்ன வேலை நடக்க வேண்டுமென்றாலும் பெரிய தலைகள் இவன் வீட்டிற்கு நேரில் வந்து பேசி போவதுண்டு, காலம் மாறித்தானே ஆக வேண்டும், நம் பிள்ளைகளும் தலை குட்டப்பட்டே வாழ வேண்டுமா, பல சிந்தனைகள், இறுதியாக இசக்கிமுத்துக்கு காரியம் முதல்வகையில் கைகூடியது, வண்ணான்குடிக்கு புது பெயரும் முடிவு பண்ண வேண்டும்

இசக்கிமுத்துக்கு தெரியும் வண்ணான்குடியில் நாகராஜனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம், ஆள் அப்பிராணி எனவே இல்லை என்று சொல்லாது கேட்போருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவன், இவன் சொன்னாலே காரியம் நடக்கும், ஊர்கூட்டம் நாகராஜன் வீட்டிலே நடக்க விருப்பப்பட்டான், நாகராஜனும் சரி என்று சொல்ல கூட்டம் கூடும் நாள் முடிவு செய்யப்பட்டது. ஊர்மக்கள் நாகராஜன் வீட்டு முற்றத்தில் கூடினர், இசக்கிமுத்து இவனிடம் கூறிய எல்லாவற்றையும் கூட்டத்தில் எடுத்துரைத்தான், ஆதரவும் ஒரு சேர எதிர்ப்பும் உண்டானது, காந்திக்கு கோயில் கட்டுவது கூட பெரிதாய் தோன்றவில்லை ஆனால் தெரு பெயரை மாற்றினால் எங்கே தன் தொழில் கெடுமோ என்ற அச்சம் மனதில் உருவானது.

கூட்டத்தில் எல்லோரும் அமைதியாய் நிற்க, காந்தி குரல் எழுப்பினாள் “அண்ணே, எல்லாம் சரி கோயிலு கட்டுவோம், சேந்து சாமி கும்பிடுவோம்,தெருக்கு எதுக்கு புது பேரு, எங்க மூணு பேருக்கு இருக்க ஒரே பொழப்பு துணி வெளுக்கதுதான், வண்ணான்குடி பேர மாத்தினா வெளுக்க வாரவன் எங்க போவான், இப்போவே ஆடிக்கும் அமாவாசைக்கும் தான் வேல, இதுல எதாவது இடஞ்சல் வந்தா, நாங்க நாண்டுக்கிட்டுதான் நிக்கணும்”, “இங்க பாரு பொம்பளைகளா, இது ஊரு ஒண்ணா எடுத்துருக்க முடிவு, இதுனால உங்களுக்கு ஒன்னும் இடஞ்சலு வராது, வருமானம் வரத்தான் செய்யும்,, வேல நடக்கும், ஆனா இனி எவனும் நம்மல வண்ணான்குடி, வண்ணான் லா கூப்பிட கூடாது” என்றதும், கூடியிருந்த மக்களுக்கு எதுவானாலும் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பது போல் நமக்கும் ஒரு கோயில் என்பதே பிரமிப்பை கொடுத்தது, அக்கா தங்கச்சிமாருக்கு மாத்திரம் மனம் சங்கடத்துடன் குழம்பி இருந்தது. ஊரே விளக்கை அணைத்து நிம்மதியாய் உறங்க, ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது

ஒருவழியாக அனைவரும் ஒருசேர கோயில் கட்டுவது என முடிவு செய்தனர், தெரு தொடக்கத்திலே கோயில் கட்ட இடம் தேர்வு செய்தனர், இசக்கிமுத்து முனிசிபாலிட்டியில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டான், எம்.எல்.ஏ வை அழைத்து அடிக்கல் நாட்டினர், வடலிவிளை தங்கப்பன் மேஸ்திரி கோயில் எழுப்ப, மைலாடி கணபதி ஸ்தபதி சிலை வடிக்க என எல்லாம் முடிவாயிச்சு, முதல் பெரும்தொகையை நாகராஜன் கொடுக்க இசக்கிமுத்து அறகுழு பொறுப்பை எடுத்து வேலையை முழுவீச்சில் செய்தான், எல்லாவற்றிக்கும் கணக்கு எழுதினான், கோயிலும் எழும்பியது.

சாமிக்கு பெயர் தேர்வு செய்வதுதான் பாக்கி இருக்கும் வேலை, ஊரே கூடி வடிவீஸ்வரம் ராமய்யரை பார்த்து பெயர் தேர்வு செய்ய கோரினர், பலபெயர்கள் விவாதித்து இறுதியாக சித்தி விநாயகர் என முடிவு செய்யப்பட்டது, ராமய்யர் தலைமையில் எம்.எல்.ஏ முன்னிலையில் அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடந்தது, இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது, இசக்கிமுத்துக்கும் நாகராஜனுக்கும் விழா முடிவில் எம்.எல்.ஏ சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

ஒரு வாரம் கழிந்து, இசக்கிமுத்து தெரிந்த பெயிண்டரை அழைத்து தெருமுகப்பில் ‘சித்தி விநாயகர் கோயில் தெரு’ என பெரிதாய் எழுத சொன்னான், அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் இதை ஆச்சர்யமாகவே கண்டனர், எது எப்படியோ இனி இது வண்ணான்குடி கிடையாது சித்திவிநாயகர் கோயில் தெரு என்பதில் நாகராஜனும் இசக்கிமுத்துவும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

வருடாபிஷேகமும், பன்னிரண்டு வருஷத்திற்கு முறைக்கொரு நடத்தும் கும்பாபிஷேகமும் இருமுறை செழிப்பாய் நடந்து முடிந்தது. சித்தி விநாயகர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி ஆனார். திருநீறில் நனைத்த கயிறை இக்கோயிலில் பூஜித்து கையில் கட்டிக்கொண்டால் வியாதி குணமாகுமாம், கோயிலை சுற்றியிருந்த ஓலை குடிசையும், ஓட்டு வீடும் காணாமல் போயாச்சு, மாடிவீடுதான் எங்கும், அலங்கார கற்கள் விதித்த வீதி, சாக்கடைகள் எல்லாம் சிமெண்டால் மேல் வாக்கில் மூடி கிடந்தது, தண்ணீர் தொட்டி புதிதாய் போன ஆண்டுதான் திறக்கப்பட்டது.

அந்திநேரம், பள்ளி விட்ட குழந்தைகள் தெருவில் சுதந்திரமாய் விளையாடிக்கொண்டிருந்தனர், பூணூல் சட்டைக்கு வெளியே தெரிய வெளுத்த குண்டு பையன் கண்களை பொத்திக்கொண்டு எண்களை எண்ண ஆரம்பிக்க, சிலுவை கழுத்தில் தொங்க சுருள் முடி பையனும், கருத்த சட்டை போடாத பையனும் ஒழிய இடம் தேடி தட்டழிந்தனர். இதனிடையே குழந்தைகள் இடையே சிரிப்பு சத்தம், ஒழுங்காய் வாராத நரைத்த தலையும், பாவாடை சட்டையும் அணிந்த ஒடுங்கிய ஒருத்தி தலையில் துணி மூட்டையை சுமந்து கொண்டு தெருவில் இருந்த ஒரே இருண்ட குடிசையில் நுழைந்தாள், குழந்தைகள் அவள் பின்னாலே ஓடி நளி அடித்து கொண்டிருந்தனர், குடிசையில் இருந்த கிழவி ஒருத்தி வெளியே வந்து குழந்தைகளை விரட்டினாள் ,”எட்டி காந்தி ஏண்டி இவ்ளோ நேரம், சீக்கிரம் வாளியை எடுத்துட்டு போய் டீ வாங்கிட்டு வா” என்று மூட்டையை சுமந்து வந்தவளை பார்த்து கூறினாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்த வயதான, தடித்த, முடி எல்லாம் வெண்பஞ்சாய் நிறைத்த ஒருவர் மனதுக்குள் நினைத்து கொண்டார் “இந்த சனியன்கள இங்கிருந்து விரட்டணும்” , மெதுவாய் நகர்ந்து கோயில் வெளியே இருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே “உம்மால தான் நல்லாருக்கேன் ஆண்டவா” என்று வேண்டிக்கொண்டார், இக்கோயிலை பார்க்கும் போதெல்லாம் வடக்கூரில் வாங்கிப்போட்ட தென்னத்தோப்பும் நியாபகம் வருவதுண்டு, கோயில் முன் வேண்டி நிற்கும் போதே, பின்னால் இருந்து மற்றொரு வயதானவர் “ஏலேய், இசக்கி முத்து வா போவோம்” என்றார். “இந்தா வந்துட்டே நாகராஜா” என்றபடி அவர் வர, இருவரும் அங்கிருந்து நடந்து முக்குதெரு ஆறுமுகம் வீட்டுக்குள் நுழைந்தனர்.

வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, இருபுற மலைக்குன்றுகளும் அவற்றை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போலிருந்தது. இந்தியத் தத்துவமரபின் மேல் திடீர் காதல்கொண்டு ஆதிசங்கரர் அத்வைதம் தியானம் என திழைத்திருந்த வைரவன் பெரும்பாலும் பயணங்களில் பயணிக்கும் வாகனத்தின் வெளியே தன்னை ஒன்ற வைத்துக்கொள்வார். ஆனால் அவற்றோடு ஒன்றமுடியாமல் இன்று சற்று நிலைதடுமாறியிருந்தார்.

என்ன சார், திடீர்னு பேசுறத நிறுத்திட்டீங்க? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?”

எதற்காக பிரகாசம் என்னிடம் அந்த கேள்வியை கேட்கவேண்டுமென்ற நினைப்பு, வாகனத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியையும் தாண்டி எரிச்சலை உண்டாக்கியது வைரவனுக்கு.

ஒன்னுமில்ல பிரகாசம் . இன்னும் எவ்வளவு நேரமாகும்..?”

ஒரு 3 மணி நேரத்துல போயிடலாம் சார்..” என்ற பிரகாசம் சாலையிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

என் பொண்ணுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சுடுக்கு சார் என்று சொல்லிவிட்டு, உங்க பையன நீங்க ஏன் சார் மெடிக்கலுக்கு முயற்சி பண்ணச் சொல்லல என்று ஒட்டுநர் பிரகாசம் வெகுளித்தனமாகக் கேட்ட அந்த கேள்வி மீண்டும் நினைவில் வந்து வைரவனை எரிச்சலூட்டியது.

சரி. நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று அமர்ந்திருந்த முன்னிருக்கையை சற்று பின் தள்ளிச் சாய்த்து சாய்ந்தார். நண்பகல் வெய்யிலில் துளி மேகமுமின்றியிருந்த வெளிர்நீல வானத்தின் பிரகாசம் கார்க்கதவின் கண்ணாடியையும், வைரவனின் முகம் நிறைத்த குளிர் கண்ணாடியையும் தாண்டி அவர் கண்ணைக் கூசச் செய்தது. இந்த வானத்தைப்போல நிர்மால்யமாய்த்தான் தன் மனதும் இருந்ததாக தான் எண்ணியது தவறோ என்ற நினைப்போடு அருகிலிருந்த பிரகாசத்தை உற்றுநோக்கினார்.

இப்ப என் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கான். ஒண்ணும் வித்தியாசமா தோணலை. ஆனால் தன் மகள் நிவேதாவோடு வீட்டுக்கு வந்து அவளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை பெருமையாகச் சொல்லி என் பக்கத்தில் அமர முயன்றபோது மட்டும் எனக்குள் எழுந்த விலக்கமும் எரிச்சலும் வித்தியாசமாகத் தோன்றியது. “அப்பா..தள்ளிக்குங்க..” என்று பிரகாசம் அமருவதை நாசூக்காக தடுத்து என் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றுக்கொண்ட நிவேதாவின் புரிதல் ஆச்சரியத்தையளி்த்தது. அவளுக்கு நம்முடைய உள்ளுணர்வு புரிந்திருக்குமோ என்ற அச்சவுணர்வு இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டிக்கு அதிக வேலை கொடுத்தது. சூரிய ஒளியில் கூசியிருந்த கண்களோடு சேர்த்து உடம்பும் கூசியது. கைகளும் குளிரில் சற்று மரத்துப்போனது போலிருந்தது.

இந்த குளிரூட்டிகளின் மேல் வைரவனுக்கு இருக்கும் காதல் அலாதியானது. பள்ளிகால கோடை விடுமுறை நாட்களில், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு சென்ற மௌலானா பாயின் ஐஸ் ஃபேக்டரியில் ஆரம்பித்தது இந்த காதல். தண்ணீரை வெவ்வேறு வடிவங்களில் பனிக்கட்டிகளாகச் சிறைப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலைகள், குளிர்சாதன தொழிட்நுட்பங்கள் வளர்ச்சியுறாத 80ளில் மிகவும் பிரபலம். பெரும்பாலும் மீன் வியாபாரிகளும், கோடைகால நன்னாரி சர்பத் கடைகளும், மருத்துவமனை பிணவரைகளும் இத்தொழிற்சாலைகளின் வாடிக்கையாளர்கள். 24 மணிநேரமும் இயங்கும் மௌலானா பாயின் இந்த குட்டித்தொழிற்சாலையில் கிடைத்த 300 ரூபாய் வருமானம் வைரவனின் அடுத்த வருட ஒட்டுமொத்த கல்விச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.

ஏன் சாதிக்மணி பத்தாச்சு இன்னும் வைரவன் கடைக்கு வரலை…”

இல்ல மௌலானா பாய்..நேத்திக்கு நைட் அவந்தான் டியூட்டி பார்த்தான். காலைல 8 மணிக்கு வந்து நான்தான் மாத்திவிட்டேன்..”

ஏண்டா..இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.. காலைலயும் பார்த்துட்டு நைட்டும் எப்படிடா எளவு வேல பாக்கமுடியும்…”

பாய்அவனுக்கு இந்த வேல புடிச்சுப்போச்சு பாய். நைட்ல அசராம அத்தன பாக்ஸுலயும் தண்ணி ஊத்தி ஐஸாக்குற தொட்டில இறக்கி ஐஸானவொடனயே வெளிய எடுத்து..திரும்பவும் நிரப்பி… கையெல்லாம் மரத்துப்போய்என்னதான் இதுல அவனுக்கு ஆர்வம்னு தெரியல பாய்…”

மௌலானா சிரித்து அமைதியானார்.

மடக்கியிருக்கும் மடிக்கணினி வடிவிலிருக்கும் அந்த உறுதியான அலுமினியப்பெட்டிகளின் வாய்ப்பகுதியை விரல்களால் பற்றி அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஒருசேர அமிழ்த்தியெடுத்து நிறைப்பதில் மடித்துக் கட்டியிருக்கும் ராசியான பச்சைநிற கட்டம் போட்ட கைலியும் தண்ணீரால் நிறைந்து நனைந்து சற்று உப்பியிருக்கும். கனத்திருக்கும் அப்பெட்டிகளை தூக்கிச் சென்று கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த நீரால் நிரப்பட்ட மிகப்பெரிய மரக்கலனின் ஒரு நிரலில் அடுக்கிவிட்டு, அடுத்த நிரலுக்கான அலுமினியப் பெட்டிகளைத் தொடும்போது கைகளிரண்டும் முற்றிலும் மரத்தி்ருக்கும். அறையின் வெப்பநிலையிலி்ருக்கும் தண்ணீ்ரை மீண்டும் அப்பெட்டிகளில் நிரப்பும்போது மரத்திருந்த கைகள் அத்தண்ணீரின் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு தளர்வது ஒரு அலாதியான சுகம். ஆனால் இச்சுகம் அந்த மரக்கலனின் அடுத்த நிரலை இப்பெட்டிகளால் நிரப்பும்வரைதான். மீண்டும் அடுத்த நிரலுக்கான நடையெனத் தொடர்ந்து கடைசியாக 12வது நிரலை எட்டும்போது, இருகைகளிருக்கும் உணர்வே அற்றுப்போயிருக்கும்.

ஒருநாள் ஆர்வம் மிகுதியால் இந்த குளிரூட்டிகளுக்கு பின்னாலிருக்கும் அறிவியலை தெரிந்து கொள்ள முற்பட, அதற்கு மௌலானா பாய், என் உள்ளங்கையில் சிறு பனிக்கட்டித் துண்டை வைத்து கை குளிர்ந்ததும் “எதுடா குளிர்ச்சியா இருக்கு? கையா இல்ல ஐஸ்கட்டியா? “ என்று கண் சிமிட்டினார்.

ஐஸ்தான் பாய் குளிர்ச்சி…”

அப்ப கை ஏலேய் குளிருது…”

அப்போது எனக்கு ஆதிசங்கரர்லாம் தெரிந்திருந்தால் ‘என் கை குளிர்ச்சியானதால ஐஸ் குளிர்ச்சின்னு சொல்றேன் பாய்எனது புலன்கள் வேலை செய்வதால் ஐஸ் கட்டி குளிர்ச்சியா இருக்கு. இல்லன்னா உறைந்த இந்த கட்டியும் உருகும் இரும்புத்துண்டும் ஒண்ணுதா”ன்னு அத்வைதத்தை குழப்பியடிச்சிருப்பேன்.

ஆனால் தத்துவமோ அறிவியலோ அறிந்திராத அப்பருவத்தில் குழம்பி விழித்த என்னிடம், “இயற்கையோட விதிப்படி எல்லாமே தன்னோட சமநிலைக்கு வந்தாகனும். இதத்தான்லகார்ல் மார்க்ஸும் சொல்லுராரு…”

புரியாமல் முழித்த என்னிடம், கையின் அதிக வெப்பநிலை தன்னுடைய வெப்பத்தை, தன்னைவிட குறைந்த வெப்பநிலையிருக்கும் பனிக்கட்டிக்கு விட்டுக் கொடுத்து விடும் வெப்பக் கடத்தல் விதியைப் பற்றி விளக்கிச் சொன்னார்.

பாய்ட்ட எதக் கேட்டாலும் மார்க்ஸ்லெனின்னு புரியாத பாஷையிலயே பேசுவாரு. அவரோட பையன் ரஷ்யாவுல டாக்டருக்கு படிச்சதனால கூட இருக்கலாம். ஆனால் என்னையெல்லாம் ஒரு புழு மாதிரிதான் பார்ப்பாரு மௌலானா பாயின் டாக்டர் பையன். அவ்வளவாக படிப்பறிவில்லாத மௌலானா பாயிடமிருக்கும் சமத்துவ உணர்வு, அவரோட பையனிடமில்லையென்று அப்போதே விவரமறிந்த சாதிக் சொல்லுவான்.

எங்ககூட பாய் உட்கார்ந்து சாப்பிடறத பார்த்த நாள்ல இ்ருந்து, இந்த ஆளு பாயோட வீட்டுல சேர்ந்து சாப்புடுறதயே வுட்டுட்டுறார்னா பாத்துக்கயேன்…” என்ற சாதிக், இங்குள்ள சாதி சார்ந்த இடஒதுக்கீட்டு குழறுபடிகளால் அவர் +2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் இங்கு எந்தக் கல்லூரியிலும் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் விரக்தியுடன் இப்படிப்புக்காக ரஷ்யா வரை பய​​ணிக்க நேர்ந்ததையும் கூறினான்

சில வருடங்களுக்குப் பிறகு எனக்குச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியை மௌலானா பாயிடம் பகிர்ந்துகொண்டபோது அங்கிருந்த அவருடைய டாக்டர் பையனின் முகத்திலிருந்த வெறுப்பு சாதிக் சொன்னதை எனக்குப் புரியவைத்தது. இது தனக்கு கீழே இருப்பவர்கள் எப்போதும் அங்கேயே இருக்க வேண்டுமென்றெண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்பதையும் இப்போது வைரவனால் புரிந்துகொள்ள முடிகிறது.

காரின் இருக்கையில் சாய்ந்தவாரே குளிரூட்டியின் வேகத்தை குறைக்க மரத்துப்போன கையை நீட்ட முயன்று முடியாமல் “பிரகாசம், ஏசிய ஒரு பாயிண்ட் குறைப்பா…” என்றார்.

தன் கைகள் குளிரால் மரத்துப் போகுந்தோறும் மௌலானா பாயும், அவரின் ஐஸ் ஃபேக்டரியும்தான் இப்படி வைரவனின் நினைவடுக்களிலிருந்து மேலெழும்பும்.

அங்கு ஆரம்பித்த அந்த புரிதலும் உழைப்பும் தான் இந்த 50 வயதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெப்பமாற்றிகளை (Heat Exchangers) தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்க வைத்திருக்கிறது வைரவனை.

பிரகாசம் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே வைரவனுக்குப் பரிட்சயம். இன்னமும் கார் ஓட்டத் தெரியாத வைரவனுக்கு அப்போதிலிருந்தே பிரகாசம்தான் ஆஸ்தான ஓட்டுநர். ‘’என்ன சார் இன்னும் ஏன் ஆட்டோலயே வர்ரீங்க ஒரு கார வாங்குங்க..” என்று வைரவனுடைய முதல் காரை வாங்கத்தூண்டியதும் பிரகாசம்தான். கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவும் முடியாமல்; ஓட்டுநர்களும் சரிவர அமையாமல் மீண்டும் பிரகாசத்தின் ஆட்டோவையே நாடியபோது, தன் சொந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு விட்டு வைரவனின் காரை நிரந்தரமாக ஓட்ட ஆரம்பித்து பத்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அகோர பசிகொண்டு எதிர்வரும் சாலையை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது வண்டி. ‘நினைவோ ஒரு பறவை…’ என ராஜாவின் இசை சிறகடித்துக் கொண்டிருந்தது வண்டியினுள். வைரவனின் மரத்திருந்த கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் சமீப நாட்களாக பிரகாசத்தின் வழியாக தன்னுள்ளிருக்கும் அந்த ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுவதையுணர்ந்து சற்றுக் குறுக ஆரம்பித்தார். நான் மௌலானா பாயிடமிருந்து மட்டுமல்ல அவருடைய டாக்டர் பையனிடமிருந்தும் என்னையறியாமல் சிலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்த வைரவனுக்கு ‘நமக்குள்ளிருக்கும் ‘நாமறியாவற்றைப் பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள்’ என்று எங்கோ படித்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது.

மணவாழ்வின் மதியம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நைட் பூரா இருக்கணுமா”

“..”

“பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா”

“..”

அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது கையில் குடை. மழையால்தான் இவன் வர தாமதமாகிறது என்று எண்ணியிருந்தாள். ஏழேகாலுக்கு மேல் அவனுக்குத் தாமதாமாவதில்லை, அதிகபட்சம் எட்டரை, ஒன்பது, அதையும் முன்கூட்டியே சொல்லிவிடுவான். இப்போது போன் செய்து இரவு முழுதும் வர முடியாது என்கிறான்.

அறையை விட்டு வெளியே வந்தவள் அர்ஜுனை சாப்பிட அழைத்தாள். “அப்பா என்னமா இன்னும் வரலை,” என்று கேட்டவனிடம், “வர மாட்டா,” என்றாள். “அஸ்த்து மாதிரி பேசாதடி,” என்பாள் பாட்டி. “இன்னிக்கு நைட் வர மாட்டா, ஆபிஸ்ல வேலை இருக்காம்”. சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றான் அர்ஜுன். அடுத்த வருடம் பத்தாவது, ட்யூஷனுக்குச் செல்ல ஆரம்பித்து விடுவான். வீடு அவன் உண்ணும், உறங்கும் இடமாக மாறி விடும்.

வெளிக்கதவைப் பூட்டியபின் ஜன்னல்கள் சரியாக சாத்தப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்தாள். அபார்ட்மென்ட்டிற்கு செக்யுரிட்டி உண்டு, ஆனால் கிட்டத்தட்ட அறுபது வயது மதிக்கத்தக்க ஆசாமி. கடைசியாக இந்த வீட்டில் எப்போது தனியாகத் தூங்கினோம், சமையலறை விளக்கை அணைத்தாள். ஆயிரத்தி முன்னூற்றி ஐம்பது சதுர அடி, மூன்று படுக்கையறை -அதில் மிகச் சிறியது அர்ஜுனுக்கு. ஒன்றை உபயோகிக்க யாரும் இல்லை. ஹால், சமையலறை. அர்ஜுன் பிறந்த மறுவருடம் வாங்கிய வீடு, அப்போது பேறு கால விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். தன் சேமிப்பிலிருந்து ஏழு லட்சம் கொடுத்தாள். ஏழா, ஐந்தா? அவனும் தன் பங்கிற்கு ஒரு தொகையை தந்தான். ஈ.எம்.ஐயை அவன்தான் இத்தனை வருடங்களாக கட்டி வருகிறான். இன்னும் எத்தனை வருடங்கள் லோன் கட்ட வேண்டும் என்பது அவனுக்குத்தான் தெரியும். இரண்டு வருடம் முன்பு நான்கு லட்சம் பார்ட் பேமெண்ட் செய்யப் போவதாகச் சொன்னவன் செய்தானா?

அறைக்கு வந்தவள் விளக்கைப் போடாமல் படுக்கையின் மீதமர்ந்து அவனுக்கு இரு முறை அழைப்பு விடுத்தாள், பின் சாப்பிட்டாயிற்றா என்று வாட்ஸாப் செய்தி. அதற்கும் பதில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து பார்த்தாள், மெசேஜை அவன் இன்னும் பார்க்கவேயில்லை. ஒன்பதரை மணி, இப்போதும் அவன் பார்க்கவில்லை. ஜன்னலருகே சென்றாள். தெருவில் இன்னும் நடமாட்டமிருந்தது, ஜன்னல் திரைச் சீலையை போடாமல் திரும்பி வந்து படுத்தவள், தெருவில் செல்லும் வண்டிகளின் ஹெட்லைட் ஒளி அறையின் சுவற்றில் பட்டு, அந்த ஒளியில் தெரிந்த மின்விசிறியின் ஏழெட்டு கைகளை பார்த்தபடி உறங்கிப் போனாள்.

oOo

காலை ஐந்தரை மணிக்கு அவள் விடுத்த அழைப்புக்கும், அனுப்பிய வாட்ஸாப் கேள்விகளுக்கும் பதில் இல்லை, நேற்று அனுப்பிய செய்திகளையே அவன் இன்னும் பார்க்கவில்லை. ஏழு மணிக்கு திரும்பியவனிடம் “என்னாச்சு நேத்து?” என்று அவள் கேட்க, “வேல இருந்தது,” என்று மட்டும் கூறினான். இட்லி குக்கரை ஏற்றிவிட்டு அறைக்குள் வந்தவள் குளித்து முடித்து உடலைத் துவட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்து, “ஆபிஸா போறீங்க?” என்றாள்.

“வேறெங்க”

“இப்பத் தான வந்தீங்க”

“திருப்பி எட்டு, எட்டரைக்காவது கெளம்பனும்”

“நேத்து, இன்னிக்கும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணேன், மெசேஜ் அனுப்பினேன்”

உள்ளாடையை அணிந்து, முதலில் இடுப்புப் பகுதியின் இலாஸ்டிக்கை விரித்து நீவி விட்டுக் கொண்ட பின், விதைப் பகுதியை சரி செய்து கொண்டான். தொடையுடன் பிருஷ்டம் இணையும் இடம் மட்டும் அவனுடையை மாநிறத்தை விட சற்று கருப்பாக இருந்தது. திருமணமான முதல் ஓரிரு வாரத்திற்கு இருவருமே மற்றவர் முன் உடை மாற்ற கூச்சப்பட்டார்கள் .இவளுக்குதான் முதலில் அவன் முன் அரை, முழு நிர்வாணம் பழக்கமானது.

“சாப்டுட்டுதான கெளம்புவீங்க”

தலையசைத்தான்.

எட்டு மணிக்கு அர்ஜுனுடன் அவனும் கிளம்பியபின் வெளியே சாலையைப் பார்த்தபடி சாப்பிட்டு முடித்தாள். ஒன்பது மணிக்கு தூங்கச் சென்ற தெரு இனி மூன்றரை, நாலு மணிக்கு பள்ளி விட்டு குழந்தைகள் திரும்பும்போதுதான் விழிக்கும். ஆபிஸ் சென்று விட்டானா என்று கேட்க அலைபேசியை எடுத்தவள் அதை படுக்கையின் மீது வைத்தாள். ஐடியில் வேலை பார்ப்பவர்கள்தான் நாள் முழுவதும் வேலை பார்ப்பார்கள். இவனுக்கு இரவு முழுதும் அலுவலகத்தில் தங்கும்படி என்ன வேலை வந்திருக்கும்? தன்னிடம் சொல்லியிருக்கலாம், நிறைய விஷயங்களை அவன் பகிர்ந்து கொள்வதில்லை. என்ன சம்பளம் என்று தெரியாது, திருமணத்தின்போது நாற்பதாயிரம் என்று அவன் வீட்டில் சொன்னார்கள், இப்போது எவ்வளவு வாங்குகிறானோ? நேற்று ஏன் அலுவலகத்திலேயே தங்க வேண்டி வந்தது என்று என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

மாலை எப்போதும் போல் ஏழு மணிக்கே திரும்பினான். கதவைத் திறந்தவள் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குச் சென்றாள். உடை மாற்றிக் கொண்டு வந்தவன் “என்ன டின்னர்” என்று கேட்டதற்கு திரும்பாமல் பதில் சொன்னாள். சில கணங்கள் நின்றிருந்தவன், ஈயச் சொம்பின் மீதிருந்த தட்டை எடுத்து ரசத்தை முகர்ந்தபின் “நல்ல வாசனை, என்ன ஒடம்பு சரியில்லையா” என்று அவள் பின்னால் அருகில் நின்று கேட்டான். இல்லையென்று தலையசைத்தவளிடம் “வந்தவுடன கிச்சனுக்கு வந்துட்ட” என்றான். “பாதில விட்டுட்டா வர முடியும்”.

சாப்பிட்டபின் மூவரும் அன்றைய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க, அவன் எப்போதும் போல் அவற்றைக் குறித்த விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தான். விளையாட்டுச் செய்திகள் ஆரம்பித்தபோது உள்ளறைக்குச் சென்றாள். ஒரு விஷயத்தைப் பற்றி தனக்கு எந்தளவுக்கு தெரியும் என்ற பிரக்ஞை கொஞ்சம்கூட இல்லாமல் எல்லாவற்றைப் பற்றியும் தீர்ப்பு சொல்லிவிட வேண்டியது. அவை முட்டாள்தனமானவை என்று தெரிந்திருந்தும் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கிறேன் இத்தனை காலமாக. அதனால்தான் அவன் இப்போது அடல்ட்ரி குறித்த தீர்ப்பைப் பற்றிய தன்னுடைய அறிவிலி கருத்தை, எந்த சங்கோஜமும் இல்லாமல் முன்வைக்கிறான். அவன் குரலைக் கேட்டபடி அங்கு அமர்ந்திருப்பதற்கு இப்படி இருளில் தெருவில் செல்லும் வாகனங்களின் ஒலி எவ்வளவோ மேல்.

இவளுக்கு சமகால நிகழ்வுகளில் எப்போதுமே அக்கறை இருந்ததில்லை, நான் ஏதாவது சொன்னால் அதை நேர்மாறாக புரிந்து கொள்வாள் அல்லது எதுவும் பேசாமல் இருப்பாள். சென்ஸ் ஆப் ஹுமர் கிடையாது, எதையும் மேலோட்டமாக புரிந்து கொண்டு அதிலேயே பிடி கொடுக்காமல் இருப்பது.

ஸ்டெப்பியை விட செரீனா சிறந்த வீராங்கனை என்று இவன் சொல்வது உள்ளார்ந்த கருத்து என்றாலாவது அதைப் பற்றி உரையாடலாம். இவன் செலஸ் ரசிகன், என்னமோ ஸ்டெபி ஆள் வைத்து செலஸை தோளில் கத்தியால் குத்தியது போல் பேசுவான், இப்போது ஸ்டெபியை கீழ் இறக்க செரீனா ஒரு கருவி.

oOo

“என்னடி பண்ணிட்டிருக்க?” அலைபேசியில் அழைத்த மேரி கேட்டாள்.

“நானா, ஒன்னப் பத்தியே தாண்டி நெனச்சிக்கிட்டிருக்கேன்”

“அப்படியாடி”

வேலைக்கு முதன் முதலில் சேர்ந்தபோது கிடைத்த முதல் தோழி மேரி. அடுத்தடுத்த இருக்கைகளில் பணி. ஷிப்ட் முறை வந்தபோது ஒரே நேரத்தை இருவரும் கேட்டு ஒன்றாகச் சென்று வந்தார்கள்.

“இப்பவும் சிவா ஆபிஸ்லதான்டி வேல பார்க்கறேன்”. இவள் வேலையை விட்ட சில வருடங்களுக்குப் பின் மேரி ப்ரீலான்சிங் முறைக்கு மாறும்போது “டிவோர்ஸின்னா ஒரு நக்கல், வழிசல் இருக்குடி, ப்ரீலான்சிங்தான் போலான்னு இருக்கேன்” என்று புதுச்சேரியின் இரு பெருநிறுவனங்களில் வேலையை விட்டபின் கூறினாள்.

“அப்பறம் பேசறேண்டி”. போனைக் கட் செய்தாள் மேரி. வேலையை விட்டபோது வாங்கிக்கொண்டிருந்த இருபத்தி ரெண்டாயிரம் ரூபாய் இப்போது இருமடங்காயிருக்கக் கூடும். மகன் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் வேலையிலிருந்து நின்று விடுவதாகக் கூறியதற்கு அவன் தடையேதும் சொல்லாததை என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பதாக எண்ணியிருந்தது தவறு. ஏன் இந்த மாதம் அதிகப் பணம் தேவைப்படுகிறது, இது வீண் விரயம் என்று அவன் சொல்வதில்லை என்றாலும், இன்று தினசரி செலவுகளுக்குக்கூட அவனை எதிர்ப்பார்த்திருக்கும் சூழலை அப்போதே அவன் யூகித்திருக்கக்கூடும்.

“சண்டே ஷாப்பிங் போலாம்,” என்று அவன் கூறியதற்கு, “எனக்கெதுக்கு வீட்லதான் இருக்கேன், போன தீபாவளிக்கு வாங்கினதையே நாலஞ்சு வாட்டிக்கு மேல போட்டுக்கல” என்றாள்.

“வெளில போகாமையேவா இருக்க, நாம எப்பவும் வாங்கறதுதானே”.

“இந்த வருஷம் என்னமோ வேணாம்னு தோணுது, நீங்களும் அவனும் வாங்கிக்குங்க”

இப்போதிருக்கும் உடைகளை இன்னும் எத்தனை மாதங்களுக்கு இவள் உபயோகப்படுத்த முடியும், இறுதியில் என்னிடம்தான் வர வேண்டும்.

அவன் உடலசைகிறது. அடுத்து மூச்சுக் காற்று கழுத்தில் படும், பாதி விரைத்த குறியின் அழுத்தம் பின்தொடையிலோ, புட்டத்திலோ அழுத்தும். தூங்குவது போல் இருந்து விடலாம் அல்லது விருப்பமில்லை என்று சொல்லலாம். முட்டை வெடிக்கும் தினம் என்று சொன்னால் கடைசியாக பீரியட்ஸ் வந்த தேதியை வைத்து நான் சொல்வது பொய் என்று புரிந்து கொள்வானா? தயங்குகிறான், இன்னும் சில நொடிகள் இப்படியே இருந்தால் திரும்பிப் படுத்துக் கொள்வான். சற்று அசைந்து உடலில் கீழ் பகுதியை மட்டும் நகர்த்தியவளின், தோளை அவன் தொட, திரும்பினாள்.

உறங்கிவிட்டான். கல்லூரியில் படிக்கும்போது நாலைந்து தோழிகளுடன் காயத்ரியின் வீட்டிற்குச் சென்றபோது சில பார்ன் இதழ்களை காட்டினாள். கட்டுமஸ்தான உடல்கள், நீண்ட, தடிமனான குறிகள். தன் இடுப்பை இரு தொடைகளாலும் இறுக்கியிருந்த பெண்ணின் மீது முழுதும் படர்ந்திருந்த ஆணின் புட்டத்தை தொட்டு “என்னடி பன் மாதிரி இருக்கு,” என்று கேட்ட வெண்ணிலா, “ஒத்தனுக்கும் மீசை இல்ல, மழுமழுன்னு இருக்கானுங்க,” என்று சலித்துக் கொண்ட ஜெரால்டின். வெள்ளையினப் பெண்களுடன் கலவியில் ஈடுபடும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் புகைப்படங்கள்தான் இவளை அதிகம் ஈர்த்தன. திரும்பி அவனை எழுப்பலாம், இரவில் இரண்டு மூன்று முறை கலவியில் ஈடுபட்டிருக்கிறார்கள், இப்போதெல்லாம் மாதம் நாலைந்து முறை கலவி நிகழக்கூடும், கணக்கு வைத்துக்கொள்வதில்லை.

அன்று புகைப்படங்களில் பார்த்தவர்களைப் போல் கட்டுடல் இல்லையென்றாலும் தொப்பை விழவில்லை. அவர்களைவிட நீளத்தில் சிறிய, உள்ளங்கையை நிரப்பும் தடிமனுள்ள குறி. முயக்கத்தில் தேர்ந்தவன். ஆனால் வேறொரு ஆணுடன் கலவி கொண்டிராதபோது எப்படி சொல்ல முடியும்? அன்று பார்த்த ஒரு போட்டோவில் பெண்ணை தூக்கி நின்றபடி புணர்ந்து கொண்டிருந்தவன் போல் இவனால் இயங்க முடியாது. கால்களை உடலுடன் குறுக்கிக் கொண்டாள். அன்றுதான் காயத்ரி அனைவருக்கும் ஒரு சிப் வைன் கொடுத்தாள், கசப்பாக, குமட்டிக் கொண்டு வந்தது. “வீட்ல யாரும் இல்லைன்னு ரொம்ப ஆடாதடி,” என்றாள் அவள் தங்கை. இது பற்றி சொன்னால் என்ன செய்வான்?

சமையலறை விளக்கை அணைத்துவிட்டு படுக்கையறைக்குச் சென்று விட்டாள். டிவியை அணைத்துவிட்டு பெட்ரூம் கதவு வரை சென்றவன் திரும்பி ஹாலுக்கு வந்து, தொலைகாட்சியின் திரையில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான். நேற்று அவளருகே சென்றது மிகப் பெரிய கேவலம், பழகிய செய்கைகளை அறியாதவள் போல் படுத்திருந்து பின்பு திரும்புகிறாள். செக்ஸ் மூலம் என்னை வீழ்த்த நினைக்கிறாள். எவனுக்கு வேண்டும், எல்லா பெண்களிடம் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கிறது. அவள் முயங்கியதில் ஒரு அலட்சியம் இருந்ததோ? இனி அவளாக அழைத்தால் கூட கலவியில் ஈடுபடக் கூடாது. இன்னொரு படுக்கையறையை உபயோகிக்கலாம் என்றால், அர்ஜுனுக்கு விவரம் புரியும் வயது வந்து விட்டது. மொபைலில் நேரத்தை பார்த்தான், அவள் உள்ளே சென்று அரை மணி நேரமிருக்கும், தூங்கியிருப்பாள். எழுந்தான். அவன் கதவைத் திறக்கும் சத்தத்தை கேட்டவள், அருகில் அவன் உடல் படுக்க கர்லான் பெட் எழும்பி அமிழ்வதையும் உணர்ந்தாள். கண்களை மூடியபடி இருவரும் விழித்திருந்தார்கள்.

oOo

கடற்கரைக்கு அருகாமையில் உள்ள பார்க்கின் முன்பு பைக்கை நிறுத்தினான். எப்போதும் போல்தான் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தவன் இந்நேரம் இந்திரா காந்தி சிக்னலை அடைந்திருக்க வேண்டும். வண்டியை மீண்டும் இயக்கி முன்னும் பின்னுமாக நகர்த்தியபின் முடிவெடுத்து பார்க் செய்தவன் கடற்கரையை நோக்கி நடந்தான். பல ஆண்டுகளாக உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கும் சட்டசபை வளாகம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதிகள். அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று முன்பு ஆசைப்பட்டிருக்கிறான். காந்தி சிலை வரை நடந்தவன் பீச்சிற்கு வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

“பெஹேன்சோத்” என்று அந்த வடக்கத்திய பெண் முணுமுணுப்பாக திட்டும் ஆண் அவன் கணவனாக இருக்க வேண்டும். அவன் இவள் பக்கம் திரும்பவும், அருகிலிருக்கும் சிறுமியிடம் ஏதோ பேச ஆரம்பிக்கிறாள். முதல் முறை பெண் பார்க்கச் சென்றவளுக்கும் வடக்கதியவளைப் போல பருத்த மார்பகங்கள்தான். ஜாதகமும் பொருந்தி, அவளுடனான பத்து நிமிட தனிப் பேச்சும் பிசிறில்லாமல் சென்ற பின்பும், அந்த இடம் தகையவில்லை. கை புணர்ச்சியின்போது அந்த பெண்ணை தன்னுள் தோற்றுவித்துக் கொண்டிருந்தவன் திருமணம் முடித்து, கலவி சுரப்புக்களின் மணமும், இவனுடையை எச்சில் வாசமும் ஊறியிருக்கும் மனைவியின் சராசரி அளவிலான மார்பகங்களை உதடுகளால் வருடும்போது அவை அப்பெண்ணினுடையவையாக மாறி மீண்டும் முயங்க அழைக்கும். பெயர் மறந்து போய்விட்டவளின் துணைதான் இனி… ஆனால் திடீரென்று பாத்ரூமில் அதிக நேரம் செலவிட்டால் இவளுக்கு சந்தேகம் வரலாம், பதினான்கு வயதான மகனுடைய தந்தை செய்யக்கூடியதா இது? சக பணியாளர் சிலாகித்து தந்த நூலில் ‘நாற்பது வயதிலும் மாஸ்ட்ருபேட்டிங் பாஸ்டர்ட்ஸ்’ என்று படித்தது என்னளவில் உண்மையாகி விடும். வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டிருந்தவனிடம் “சாப்பாடு எடுத்து வெக்கட்டா?” என்றாள். “நீங்க?”’, “நாங்க சாப்டாச்சு”, “நா வெளிலயே சாப்டுட்டேன்”.

“நான் லஞ்ச் வெளிலையே பார்த்துக்கறேன்,” என்று கூறிவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பினான். பீச்சில் காலை நடை செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன், ஐநூறு ரூபாய்க்கு என்ன சுவையென்றே பிடிபடாத உணவை உண்டபின் அலுவலகம் சென்றான். மாலை கடற்கரையில் சுயமைதுனத்தின் சாத்தியக் கூறுகள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எந்த விடையும் கிட்டவில்லை. “சாப்பாடு வெக்கட்டுமா?” என்று கேட்டவளைப் பார்த்து தலையாட்டியவன், அவள் முகத்தை கவனித்தான். எப்போதும் போல்தான் இருக்கிறாள். இல்லை, இது நடிப்பு, உள்ளூர நான் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் வெளியே சாப்பிட பொருளாதாரமும், உடலும் ஒத்துழைக்காது என்பது அவளுக்கும் தெரியுமென்பதால் எழும் ஏளனம். ஒரு முறை மட்டும் சோற்றைப் போட்டு சாப்பிட்டபின் எழுந்து கொண்டவனிடம் எதுவும் கேட்காதவள், அவன் கையலம்பிக் கொண்டிருந்தபோது “நா மாடிக்கு போறேன், கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்,” என்றாள். அடுத்த நாள் இரவு வீட்டிற்குத் திரும்பியவன், “நானே போட்டு சாப்டுக்கறேன்,” என்றான். மறுநாள் அலுவலகம் முடித்து அவன் வந்தபோது அவள் மாடிக்குச் சென்று விட்டிருந்தாள்.

மாடியிலிருந்து முன்பு தெளிவாக காண முடிந்த ஆலமரம், அதனையொட்டிய ரெயில்வே ட்ராக், அதன் மறுபுறமுள்ள – மார்கழி பனியில் அசைவின்றி ஓவியம் போல் தெரியும் – தென்னை மர வரிசை எல்லாம் இப்போது வீடுகளால் மறைக்கப்பட்டு ஆலமரத்தின் உச்சியை மட்டும் காண முடிகிறது. குடி வந்த புதிதில் பம்பாய்க்கு போகும் ரெயில் ஏழு மணிக்கு இந்த இடத்தை கடக்கும்போது எழுப்பும் ஒலியால் விழித்த, எந்த அவசரமும் இன்றி மெதுவாக முயங்கிய ஞாயிறு காலைகள், அர்ஜுன் பிறப்பதற்கு பின் நிறைய முறை வந்தன. இப்போது இந்தப் பகுதி மொத்தமும் மின்சார இணைப்பு துண்டிக்கபட்டால் மட்டுமே ரயில் செல்லுமொலி கேட்கிறது.

மேரியை அழைத்தாள். “ரொம்ப வருஷம் ஆயிடுச்சேடி, நெறய புது ப்ராசஸ் வந்திருக்கு,” என்ற மேரியிடம், “ப்ரூப் ரீடிங்கூட ஓகேதாண்டி எனக்கு, அதுல என்ன சேஞ் இருக்கப் போகுது,” என்றாள்.

“அது என்ட்ரி லெவல் ஜாப்டி, நீ டீம் லீடா இருந்திருக்க, செட் ஆகாது”.

“அதெல்லாம் பிரச்சனையில்ல, ஒரு பேஜுக்கு என்ன தராங்க இப்ப”.

“பார்டி, பிப்டி இருக்கும், கண்டு பிடிக்கிற எர்ரர்ஸ பொறுத்து தான”

“அது போதுமடி”

“கேட்டுப்பாக்கறேன், ப்ரீலான்சிங் ஜாப் வாங்கி பண்ணலாம், ப்ரூப் ரீடிங் நீ வீட்லயே பண்ணலாம்”

“ஆபிஸ்கே வரேண்டி”

“ஏண்டி… எதாவது பிரச்சனையா”

“அதெல்லாம் இல்ல, வீட்லயே இருந்து இருந்து போர் அடிக்குது”

மேரி ஏதாவது ஏற்பாடு செய்வாள், அவள் இப்போது வேலை செய்யும் இடத்திலேயே கிடைத்தால் நல்லது. ஒவ்வொரு சிக்னலிலும் பச்சை விழுந்தபின் நின்றுகொண்டிருக்கும் வண்டிகளிலிருந்து எழும் நாராசமான ஒலிகூட வீட்டிலுள்ள மௌனத்தைவிட மென்மையானது. ஒரு நாள் இரவு முழுவதும் அலுவலகத்தில் சும்மாவேனும் தங்கிவிட்டு வர வேண்டும். இவனிடம் காரணம் சொல்லக் கூடாது. அன்றிரவு எதற்காக தங்கினான் என்று சொல்லத் தோன்றாதவனுக்கு என்னை கேட்க என்ன உரிமை? என்னிடம் மறைக்குமளவிற்கான விஷயம் எதுவும் இருக்க முடியாது.

மேரியுடன்தான் கேண்டீனுக்கு எப்போதும் செல்வாள். அங்கும் தன்னிடம் பேசிச் செல்பவர்களை கவனித்தபடி, “என்ட்டையா பேச வராங்க, ஒன்ன லுக் வுடனும் அதான்,” என்பாள் மேரி. பிறந்த நாளுக்கு அலுவலக காவலாளியிடம் பொம்மை கொடுத்தவன் யார் என்று இறுதி வரை இவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை “தெரியாது மேடம், இங்க இருந்தது,” என்று செக்யுரிட்டி மீண்டும் மீண்டும் சொன்னார். இவன்தான் சைட் அடித்ததைப் பற்றி சொல்லியிருக்கிறான். அதுதான் செய்ய இயலும், காதலிக்கிறேன் என்று ஒரு பெண்ணிடம் அப்போது சொல்லியிருக்கவோ, அடல்டரி தீர்ப்பைப் பற்றி கிண்டலடித்தாலும் இப்போது மணவுறவை தாண்டிய பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ, தைரியம் கிடையாது.

oOo

“ப்பா, பேப்பர்காரர் வந்திருக்கார்.” என்று மகன் சொன்னான். சென்ற மாதத்திற்கான பேப்பர் பணம் தந்த, பத்து பதினைந்து நிமிடங்களில் “ப்பா பால்காரர்”, அதன் பின் அபார்ட்மென்ட் மெயின்டெனன்ஸுக்காக முதல் தளத்தில் வசிக்கும் யுவராஜ். எப்போதும் முதல் அல்லது இரண்டாம் தேதி மாத செலவுக்கான பணத்தை கொடுத்து விடுபவன் இந்த மாதம் ஐந்தாம் தேதி வரை தரவில்லை. என்னிடம் கேட்பதற்கு பதில், அவர்களை ஞாயிறன்று வரச் சொல்லியிருக்கிறாள். திமிர் பிடித்த நாய், இத்தனை வருடம் என் பணத்தில் வாழ்ந்து விட்டு இப்போது ரோஷம் வருகிறது. மளிகை பொருட்கள் வாங்க என்னிடம்தான் எப்படியும் வர வேண்டும்,

புதன் காலை மலம் கழித்து விட்டு ப்ளஷ் செய்யும் போதுதான் கவனித்தான். வெஸ்டர்ன் டாய்லெட்டின் அடி விளிம்பில் மஞ்சள் நிறக் கோடுகள், மேற்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிகப்பு நிற மலத் துகள்கள். ஞாயிறன்று டாய்லெட்டை சுத்தம் செய்பவள் ஸ்ட்ரைக் செய்வதாக நினைக்கிறாள் போல். இவள் கருவுற்றிருந்தபோதும், குழந்தை பிறந்த ஒரு வருடம் வரைக்கும்கூட நான்தான் இதை செய்து வந்தேன். ஹார்ப்பிக்கை டாய்லெட்டினுள் ஊற்றியவன் பிரஷ்ஷை எடுத்தான்.

இப்படி அரைகுறையாக சுத்தம் செய்வதற்கு பாதி ஹார்பிக்கை வீணடித்திருப்பான். துணிகளை அடுக்கி வைத்தால் ஒரு வாரத்திற்கு மேல் நிலைப்பதில்லை, சட்டைகளுக்கு நடுவே ஜட்டி, பெர்முடாக்களுக்குள் சாக்ஸ் என்று எல்லாவற்றையும் மீண்டும் முறையாக அடுக்கி வைக்க மணி நேரம் ஆகிறது. அர்ஜுன் பாத்ரூமையும் சுத்தம் செய்வானா என்று அவனிடம் கேட்க வேண்டும்.

உடையணிந்து தயாராகிக் கொண்டிருந்தவனிடம், “ப்ரோவிஷன்ஸ் இன்னும் நாலஞ்சு நாள் தான் வரும்,” என்றாள். என்னாயிற்று இவளுடைய சுயமரியாதை, உடை வேண்டாமென்றவள் இதை மட்டும் கேட்கிறாள். ஷர்ட்டை டக் செய்து பெல்ட் போட்டுக்கொள்ளும் வரை எதுவும் சொல்லாதிருந்தவன், “நானே வாங்கிடட்டுமா” என்றபடி பர்ஸை பேண்டினுள் திணித்தபடி, அறையை விட்டு வெளியேற ஆரம்பிக்க, “உங்கிஷ்டம்”, என்றவள் சொன்னவுடன் திரும்பினான். என்னால் வாங்கி வர முடியாதென்று எண்ணும் அவளுடைய ஏளனப் பார்வை. தண்டச் சோறு உண்ணும்போதே இவ்வளவு அகங்காரம். “ஈவினிங் சொல்றேன்”

இடது காலில் சாக்ஸ் அணிந்த பின், ஷூவை எடுத்தான். திமிர் வழியும் இவள் முகத்தை சுவற்றில் வைத்துத் தேய்த்து, ஷூவினால் அடித்து வீட்டை விட்டு துரத்த வேண்டும். குக்கரிலிருந்து சோற்றை எடுத்து மேடையின் மீது வைத்தாள். அவ்வப்போது காய்கறி வாங்கி வருவதைத் தவிர என்ன தெரியும் இவனுக்கு. மாலை சொல்கிறானாம், எப்படியும் என்னிடம்தான் பணம் தருவான். அப்படியே இவன் மளிகைப் பொருட்கள் வாங்கினால் அன்றுடன் உலகம் அழிந்து விடும்.

டைனிங் டேபிள் மின்விசிறியின் கீழ் ஆற வைக்க, இடுக்கியில் சோற்றுப் பாத்திரத்தை பிடித்தபடி சமையலறையிலிருந்து வெளியே வரும்போது, ஒரு கையில் ஷூவும் மற்றொன்றில் சாக்ஸுமாக எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு நின்றாள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் சாக்ஸை மாற்றுவான், அவற்றை தோய்ப்பதற்காக எடுக்கும்போது குமட்டும். பெர்ஸனல் ஹைஜீன் என்பதே கிடையாது. இங்கிருந்தே அவன் மீது ஏனத்தை வீசலாம், அருகே சென்று சுடு சோற்றை கவிழ்த்தால் தரையில் கொஞ்சமும் சிந்தாது. இடுக்கியிலிருந்து நழுவிய பாத்திரத்தை இறுக்கிப் பிடித்தவள் நடக்க ஆரம்பித்தாள்.

காத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இன்னும் 10 நிமிடம் மட்டும்” என மனதிற்குள் சொல்லி கொண்டேன் , காலை 7 மணிக்கு வந்து நின்றது , வெயிலேறி  பின் வெயிலிறங்கி  இப்போது இருள் மூடும் நேரம் வரை வந்துவிட்டது . கிளம்பலாம் என எண்ணும்  போதெல்லாம் அம்மாவின் சோகமுகம் மனதில் வந்து  அந்த எண்ணத்தை தடுத்துவிடுகிறது  , அம்மாவின் ஞாபகம் வரும்பொழுது கூடவே  அம்மாவிற்கு என்னை விட அவனிடம்தான்  பாசம் அதிகம் எனும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை , இப்போது இந்த எண்ணம்   புன்னகைக்க கூடிய விசயமாக மாறிவிட்டது , ஆனால்   சிறுவயதில் அப்படியில்லை , இதற்காக தினமும் அம்மாவிடம் மல்லுக்கட்டுவேன் , இத்தனைக்கும் எனக்குதான் எப்போதும் முதலிடம்  , இருந்தாலும் எப்படியோ என் மனம் அதை கண்டு பிடித்து விடும் .

சிறுவயதிலேயே அண்ணன் தொட்டாசுனுங்கிதான் , யாரோடும்  அளவாகத்தான் பேசுவான் , சொந்தக்காரர்கள்  வீட்டிற்கு வந்தால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வரை வீடு பக்கமே எட்டி பார்க்க மாட்டான் , அவன் மலர்ச்சியாக  பேசுவது அபூர்வம்  , பெண்களை கண்டாலே நாணுவான்  , ஒளிந்து கொள்வான்  , அம்மா ,சித்தி தவிர அவன் வேறு பெண்களிடமே  பேசியதை நான் பார்த்ததே இல்லை . அவன் மாந்தளிர்  நிறம் , நெட்டையான உருவம் , பள்ளியில்  நெட்டை  என்ற கிண்டல் பெயரும்  உண்டு , ஆனால் நேரில் யாரும் அப்படி கூப்பிட மாட்டார்கள் , அடி விழும் . சுருள் முடியை எண்ணெய் வைத்து அடக்கமாக  சீவியிருப்பான்  , நீள முகம் , அப்பாவின் இளவயது புகைப்படத்தினை  பிரதியெடுத்தை  போலவே இருப்பான் .

அம்மா அடிக்கடி என்னிடம்  சொல்லும் ஓர் வாக்கியம் “அவனுக்கு நேரெதிர்டா நீ “என்று , ஆம் ,எனக்கென்று  பெரிதாக கவலை ஏதும் இல்லை , என் நண்பர்கள் , கல்வி மற்றும் பணி தோழர்கள்  எல்லோரும் இனியவர்களே  , எப்போதும் பேசிக்கொண்டிருப்பேன்  , திருகான் பழுதாகி  எந்நேரமும் ஒழுகும்  நீர்குழாய் போல . சிறு வயதுகளில்  பண்டிகைகளுக்காக நாட்கள் எண்ணிஎண்ணி காத்திருப்பேன்  , இப்போதும் அப்படிதான் , ஆனால் அதை வெளியே காட்டி கொள்வதில்லை , முன்பு எனக்கு ஆடைகள் எடுப்பதில் , கொண்டாடுவதில்  விருப்பம் இருந்தது , இப்போது அது அம்மாவிற்கு ஜெஸியாவிற்கும் வாங்கித்தந்து அவர்களை மகிழ்ச்சியடைய  செய்வதாக அது  மாறியிருக்கிறது , ஆம் ஜெஸியா என் தோழிதான்  , அண்ணன் திருமணத்திற்காக காத்திருக்கிறேன்  , பின் அவள் என் மனைவியாகி விடுவாள் .

அம்மாவிற்கு வெள்ளையும் சந்தனமும்  கலந்த கேரள வகை சீலையை  தேடி வாங்கி கொடுப்பேன் ,அவளுக்கு அந்த ரக சேலை மிக பிடிக்கும் , அம்மா அந்த சேலையை குழந்தையின் குதூகலத்துடன்  வாங்கி கொள்வாள் . அண்ணா என்னை விட இரு வருடம் மூத்தவன்  , கல்வி முடித்த சமயத்தில் அவனுக்கு வேலை அமைய வில்லை, இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்து , பின் அம்மாவின் புலம்பலை  சகிக்காமல்  பிடிக்காத ஒரு வேலையில் சேர்ந்து கொண்டான் , வேலை கிடைக்காத  நாட்களில்  அவன் முகத்திலிருந்த பிற மனிதர்களை எதிர்கொள்ள விரும்பாத  வெறுத்த பார்வை அதன் பிறகு அவனில் இருந்து அகலவே இல்லை .  எனக்கு படிப்பு  முடித்தவுடனே  நல்ல பணி அமைந்தது , நான் அவனுக்கு￰ உடை வாங்கி கொடுக்கும் போதெல்லாம் ” ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய் ” என்று திட்டுவான்  , ஆனால் அவனுக்கு என் மீது தணியாத  பாசம் உண்டு ,ஆனால் வெளிக்காட்ட  மாட்டான் , சிறுவயதில் என்னை இரண்டுபேர் அடித்து விட்டனர் என்று கோபம்கொண்டு இரத்தம்  வரும்வரை  அவர்களை பிளந்தெடுத்தான்  , பின்பு வீட்டுக்கு வந்தும் எனக்கும் ஒரு அறை விட்டான்  , இவனிடம்  சொல்லாமலே  இருந்திருக்கலாம் என அப்போது நினைத்து கொண்டேன் .

இனி காத்திருப்பது வீண் என தோன்றிய சமயத்தில் தூரத்தில்  ஒரு வண்டியின்  சத்தம் தூரத்தில் இருந்து கேட்டது , இது அண்ணனின் பைக் சத்தம்தான்  , rx100 , அண்ணன் இந்த பைக் மீது  பைத்தியம் கொண்டவன்  , ஒருநாள் மூன்று முறை துடைப்பான்  , அம்மா அதை பார்க்கும்போதெல்லாம் “இது போல நீயும் தினமும் குளிடா ” என்று கிண்டலடிப்பாள்  , அவன் கண்டுகொள்ளாதது  போல குனிந்து நின்று துடைப்பான் , அவன் முகத்தில் புன்னகை இருப்பதை அப்போது காண முடியும் , ஆம் ,அம்மா பேசும் போதுதான் அவனில்  சிரிப்பை  காண முடியும் , அம்மா வருந்தி வேலை செய்வதை விரும்ப மாட்டான் , தன் முதல் வருமானத்தில்  அம்மாவிற்கு வாஷிங் மிசின் வாங்கி கொடுத்தான் , வீட்டின் முன் இருக்கும் தாழ்வான கூரை , அம்மாவின் பலகை இருக்கை, விறகுகள்  அடுக்கப்பட்டிருக்கும்  பெட்டி , குட்டிவீடு போல காட்சியளிக்கும்  கோழிபெட்டி,  சமையல்  பொருள் அடுக்க வைக்கப்பட்டிருக்கும்  ப்ளைவுட்டினால் செய்யப்பட்ட ரேக்  என  எல்லாம் அம்மாவுக்காக  அவன் செய்து கொடுத்தது , அவன் ஏதாவது இப்படி செய்யும் போது என்ன செய்து கொண்டிருக்கிறான்  என்றே கண்டு பிடிக்க இயலாது , கேட்டால் ஏதும் சொல்ல மாட்டான்

கூட நிற்க வைத்து  எடுபிடி  வேலை வாங்குவான் , பொருளை தொட்டால்  கூட திட்டுவான் , முடிவில் பாகங்களை இணைத்து பிரமாதமான பொருளாக  ஆக்கிவிடுவான் , “நீ எங்க போய் ஆசாரி  வேலையெல்லாம் கத்துகிட்ட  “என்று கிண்டலடிப்பேன்  ,  அப்போது அவனில் வெட்க சிரிப்பு தெரியும் .

படிப்பு முடிந்த பிறகுதான் அவன் மாற தொடங்கினான்  , பேச்சு மிக குறைந்தது , எங்களூரில்  அவனுக்கு சிநேகிதம்  என்று அவனுக்கு ஒரே அண்ணா தான் உண்டு , அவர் பெயர் ரகு , திருமணமாகாதவர்  , அரசியல், சித்தாந்தம் என சொல்லி வேலைக்கு எதுவும் போகாமல்  ஊரூராக  சுற்றி கொண்டிருப்பவர்  , தடிமனான  கண்கண்ணாடி  போட்டு , முடியை  மேல் நோக்கி வாரி சீவியிருப்பார்  , பசை  ஏதாவது தடவியிருப்பாரோ என சந்தேகம் வருமளவிற்கு  சீவும் முடி கணத்தில் எப்படியிருக்குமோ  அதுபோலவே எப்போதும் அவர் முடி இருக்கும் , அடர்த்தியான  தாடி , அவர் தன் அழகின்மையை மறைக்கத்தான்  தாடி வைத்திருக்கின்றார்  என தோன்றும் , ஒருநாள் அதை விளையாட்டாக அண்ணனிடம் சொன்னேன் , அவன் கடிந்து  கொண்டான் , “ரொம்ப அழகா இருக்கறதா  உனக்கு நினப்போ ”  என்று கேட்டான்  .  ஒருமுறை  அண்ணனை தேடி வந்தவர் அண்ணன் வெளியே போயிருந்ததால்  என்னிடம் பேச்சு கொடுத்தார் , அதன் பிறகு அவரை பார்த்தாலே தலைதெறிக்க ஓடி விடுவேன் , அகங்காரத்தின் உருவமாக  அவர் தெரிந்தார் , மக்கள் எல்லாம் மடையர்கள்  போலவும் ,இவர் பெரிய சிந்தனாவாதி போலவும் பேசினார் , பேச்சின் ஸ்வாரஸ்யத்தின் இடையே நான்  “அப்பறம் ஏன் னா எப்போதும் பேயறைந்த  மாதிரியே இருக்கீங்க”  என்றேன் ,” மடையன்” என என்னை திட்டினார் , “சரிங்க புத்திசாலி அண்ணா “என்று திரும்ப சொன்னேன் , கோவித்து  பதில் சொல்லாமல் கிளம்பினார் , பிறகு இரவு அண்ணன்  வீட்டிற்கு வந்து “எனக்கு திமிர் அதிகமாகி  விட்டது” என ஒரு மணிநேரம் அர்ச்சனை  பண்ணினான் , அவன் திட்டி  கொண்டே சமயலறைக்கு உள்ளே வர நான் தோசையை  மெய்மறந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் , என்னை பார்த்தவன்  “உன்னை திட்டறதுக்கு  பதில் சும்மா  இருக்கலாம்” என்றான்  , கோபம் மறைந்து முகத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த திணறுவது தெரிந்தது .

பைக்கின் முகப்புஒளி இருளை  கிழித்து வந்தது , நிறுத்தியதும்  ஒளி அணைத்து மீண்டும்  இருள் சூழ்ந்து கொண்டது , என்னை அவன் கவனிக்க வில்லை , மாடி  ஏறி கதவு திறந்து உள்சென்றதும்  கதவை  சாத்தி கொண்டான் , வீட்டில் கூட இப்படித்தான் , தன் அறைக்குள் போய் தாளிட்டு  கொள்வான் , அம்மா உண்பதற்காக  தட்டும்போது  மட்டுமே வெளியே வருவான் , நான் அவன் அறைக்குள் வருவதை விரும்ப மாட்டான் , ஆனால் என் எல்லா விஷயத்திலும் தலையிட்டு  அவனே முடிவும்  எடுத்து என்னிடம் செயல்படுத்த மட்டும் சொல்வான் , பிடிக்கல என்றால் “மூடிட்டு  நான் சொல்றத செய் ” என்பான்  , ஆனால் எப்போதும் சரியானதை  மட்டுமே எனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறான்  , என் சிவில் இன்ஜினியரிங் படிப்பு , என் பைக் என என்னுடையதெல்லாம்  பெரும்பாலும் அவன் தேர்ந்தெடுத்து  கொடுத்ததுதான் .

மூடிய கதவை பார்த்தபடி  ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்தேன்  , பின் படியேறி  கதவை தட்டினேன்  , கதவை திறந்தவன்  ஆச்சிரிய முகபாவத்துடன்  என்னை பார்த்தான் , “வா “என்று உள்ளே போனான் , அறையில் இருக்கைகள் ஏதும் இல்லை , ஒரு பாயை  எடுத்து விரித்து அமர  சொன்னான்  அவன் எதிரில் வெறும் தரையில் அமர்ந்தான்  , தாடி வைத்திருந்தான்  , சட்டை இல்லாத  அவன் மேலுடம்பில்  அவன் மிக இளைத்திருந்தது  தெரிந்தது ,கோபம் வந்து “சோறெல்லாம்  திங்க  மாட்டாயா ” என்றேன் , அவன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தான் , வீட்டில் இருக்கும் போது இருந்த அவன் முகம் அப்போதுதான்  திரும்ப வந்தது .  பின்

அறையில்  கண்களால் அலைந்தேன்  ,முதல் தோற்றத்தில்   பாழடைந்த  வீடு போல இருந்தது ,

பிறகு கவனிக்க அது புது வீடுதான் , சுவரின்  நிறமும் , வெளிச்சம் குறைவான மின்விளக்கும் அத்தகைய  தோற்றத்தை கொடுப்பதை  உணர்ந்தேன் , அவன் அமர்ந்த  சுவரின் வலதுஓரத்தில் இருந்த அடுக்கின் மேல் வரிசையில்  சில புத்தகங்கள் இருந்தன , அடுத்த அடுக்கில் துணிகள் சுருண்டு  கிடந்தன  . அவன் ”  என்ன பாக்கற ”  என்றான் , கொஞ்சம் “வெளிச்சமான  லைட்டையாவது  போட வேண்டியதுதான ” என்றேன் , அவன் பதிலேதும்  சொல்ல வில்லை

“எதுக்கு இந்நேரம் வந்திருக்க” என்றான் , “நான் காலைல வந்தது” என்றேன் ,அவன் முகத்தில் மெல்லதிர்ச்சியும்  சோகமும்  எட்டிப்பார்த்தன , “போன் பண்ண வேண்டியதுதான ‘என்றான் , “மாசத்துக்கு ஒரு நம்பர் மாத்தறவன்  நம்பரெல்லாம்  எனக்கெப்படி  தெரியும் “என்றேன் , அவன் பதில் சொல்லாமல் இருந்தான்

“ஏன் இப்படி காத்திருக்க  , நான்  இல்லைனா இன்னொரு நாள் வர வேண்டியதுதான ”  என்றான் ,   “அம்மா பார்த்துட்டு வர சொல்லிச்சு  , மூணு நாளா , அம்மாட்ட உன்னை பார்க்கல னு சொன்னா அழும் , அதான் எப்படியும் உன்னை பார்த்துட்டுதான் போகணும் னு இங்கயே  இருந்துட்டேன் ”  என்றேன் .

“சாப்ட்டயா  “என்றான் ,நான் அதை பொருட்படுத்தாது  அவனை நோக்கி பார்த்தபடி இருந்தேன் , கண்கள் சந்திப்பதை  தவிர்த்தபடி  பார்வை வேறுவேறு பக்கம் திரும்பியபடி  இருந்தான் .

பிறகு ”  ஏதாவது விஷயமா ”  என்றான் , ”  வேறென்ன  ,உன் பிறந்த நாள்தான் , சனிக்கிழமை ,அம்மா உன்னை வீட்டுக்கு கண்டிப்பா வர சொல்லிச்சு , என்னை அலைய விட்டுடாத , போன முறை நீ வராம போனதால  என்கிட்ட  கொடுத்துவிட்டு , நான் அதை வேற ஒருத்தருக்கு கொடுத்து ,  நீ  அதை சாப்பிட்ட  னு பொய் சொன்னேன் , இந்த முறை அப்படி ஏதும் பண்ணிடாத  ”  என்றேன் . எங்கள் இருவரின் பிறந்த நாளை அம்மா எப்போதும் விமரிசையாக  கொண்டாடுவாள்  , விமரிசை  என்பது உணவில்,  பாயசம்  ,அவில் ,இஞ்சிப்புளி  , இரண்டு பொரியல் ,கூட்டு என அமர்க்களப்படும் , என் பிறந்த நாளில் என் நண்பர்களை உணவிற்கு அழைத்து விடுவேன் , அவன் பிறந்த நாளுக்கு யாரையும் அழைக்க மாட்டான் என்பதால் அவன் பிறந்த நாளுக்கும்  என் நண்பர்களை  அழைப்பேன்!  , நாங்கள் வேலைக்கு போகும் வயது வந்தும்  அம்மா இவ்வியல்பை மாற்றிக்கொள்ள  வில்லை .

இந்த முறை அண்ணனின் பிறந்த நாள் நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே  நச்சரிக்க  ஆரம்பித்து விட்டாள் , “போய் அவனை பார்த்து வா ”  ஒவ்வொருநாள்  இரவும் எனக்காக வாசலில் காத்திருந்து  மலர்ச்சியோடு  ‘பார்த்தாயா ” என்பாள்  , சோகமும்  அண்ணன் மேல் கோபமுமாக  வரும் ,  நாலாவது  நாளாக காத்திருந்து இன்றுதான் இவனை பிடித்தேன்  , இவன் அறை புறநகர் தாண்டி இந்த பொட்டல்வெளியில்  நான்கைந்து வீடுகளில் ஒன்றில் இருந்தது , 7 மணிக்கெல்லாம் இங்கு  இருட்டும்  நாய்களும்தான்  இருக்கும் . இங்கு வரவே கூடாது என்று நினைப்பேன் , ஆனால் அம்மாவிடம் பதில் சொல்ல இயலாத குற்றஉணர்வு இங்கு கொண்டுவந்து என்னை நிறுத்தி  விடும் .இன்று  காலையில் அவள் இஞ்சிப்புளி  செய்து கொண்டிருந்தாள் , அண்ணனுக்கு பிடிக்கும் என்று. அவன் மெதுவான  குரலில் ” வேலையிருக்கு  ,இன்னொரு நாள் வரேன் ”  என்றான் ,

”  நீ மூடிட்டு வா ,வேலை நாசமா  போட்டும்  ”  என்று கத்தினேன்  , அவன் முகம் துளி கூட அதிர்வு  இல்லாமல் இருந்தது . அதை பார்க்க கோபம் வந்தது , பிறகு கோபம் கொள்வது வீண் என்று அமைதியானேன்  .

” அண்ணா , இப்ப அம்மாக்கு அடிக்கடி உடம்பு முடியாம ஆயிடுது , அடிக்கடி யதோ நினைச்சு அழறா , நீ வந்தா எல்லாம் சரியாகிடும் , வாரம் ஒருமுறை வா போதும் , அம்மா பழையபடி ஆயிடுவா  , என்னை விட உன் மேலதான் அம்மாக்கு பிரியம் அதிகம் “என்றேன் , அவன் தரையை  பார்த்தபடி  அமைதியாக  இருந்தான் .

பிறகு என் மனதிலிருந்ததை  வெகுநாளாக  அவனை பற்றி எண்ணியிருந்ததை  கொட்டிவிட்டேன்  .”  அண்ணா , நீ புக்கு  படிக்கறவன்  , அறிவாளி  , உன்னோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நீ பேசறது உன்னோட பார்வை எல்லாமே எனக்கு புதுசா தெரியும் ,  மனசுக்குள்ள உன்னை பெருமையா  நினைச்சுக்குவேன் ” , ஆனா இது இப்படி உன்னை தனியாளாக்கும்  நான் நினைக்கவே இல்ல , அண்ணா எனக்கு தெரிஞ்சது இதுதான் , வாழ்க்கைக்கிறது  சந்தோசமா இருக்கறதுக்குத்தான்  , கூட இருக்கறவங்கள சந்தோசமா வச்சுக்கறதும்தான்  , ஆனா நீ இப்படி விலகி போயி ,நீயும் இப்படி  இருட்டுக்குள்ள உட்கார்ந்து , இதெல்லாம் எதுக்குன்னா ”  ,” சரி ,ஏதோ ஒரு விஷயம் சரி னு நம்பி அது பின்னாடி போற , அது கடைசில  தப்புனு தெரிஞ்சா என்ன பண்ணுவ  , வாழ்க்கையை , உலகத்தை அப்படி ஒரு தியரிலயோ  இல்லனா அந்த சோடாபுட்டி  ரகு அண்ணா ‘சித்தாந்தம் ‘னு ஒரு வார்த்தை சொல்லுவாரே அதுலயே கொண்டு வந்திட  முடியாது “,

” நீ என்ன வேணும்னாலும் செய் ,அதுக்காக ஏன் உன்னோட சந்தோசத்தை கை விடற , நான் உன் fb பக்கத்தை தினமும் பார்ப்பேன் , எப்பவும் யாரையாவது திட்டுவ  , கவர்மெண்ட் ,அரசியல்வாதி அதுஇது  னு , உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருக்குறவனுகளும்  இதே ரகம்தான் , சந்தோசமான பதிவே  உன்னோடதுல  பார்த்ததில்ல , நீ  எழுதறது எல்லாம் சரியா கூட இருக்கலாம் , ஆனா சந்தோசம் இல்லாத சரி ங்றது உண்மைல சரியான ஒன்னா இருக்காது , அதுக்கு உதாரணமா உன்னையே  சொல்லலாம் , உனக்கு என்ன குறை இருக்கு , ஆனா எப்பவும் வீடு இடிஞ்சு  விழந்தவன் மாதிரியே இருக்க . ”  என எண்ணுவதையெல்லாம்  கொட்டினேன்  .

பிறகு அவன் திட்டுவான் என எதிர்பார்த்தேன் , மாறாக புன்னகைத்தான் , “பேசற அளவு வளந்திட்ட  ”  என்றான் , பின் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கொள்ள  வில்லை , பின் அமைதியான குளத்தில்  சட்டென சலனங்கள்  வந்ததை போல ” எனக்கு நான் கிற என்னமோ , என்னோட சந்தோஷமோ  பெரிய விஷயம் இல்ல ,எனக்கு ஒருசில கனவுகள் இருக்கு , நான் சில விஷயங்களை என் கடமையா  நினைக்கிறேன் , அதை நோக்கி போறது மட்டும்தான் எனக்கு நிம்மதி கொடுக்கும் , என்னால வீட்டுல உன்னை போல  இருக்க முடியாது .. அதான் எனக்கு பதில் நீ சந்தோசமா இருக்கையே அது போதும் ”  என்றான் .

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன் ,பின் ” அண்ணா , எனக்கு நீ பேசறது ரகு அண்ணா பேசறததான்  ஞாபக படுத்தது  , அவரை நான் தன்னைத்தானே வருத்தி   கொள்ற ரகம் னு நினைப்பேன் , உண்மைல  இங்க ஒரு வசதியும்  இல்லாதவன் கூட சந்தோசமாதான்  இருக்கான் , சந்தோசம் என்பது வசதில இல்ல ,நீங்களா அவங்களை சந்தோஷமில்லாதவங்களா  நினைச்கறீங்க  ,  அதுக்கு காரணம் அவங்களை மேல இருக்கறவங்க சுரண்டராங்க  னு நினைச்சுக்குவீங்க  , ஆனா இது மனித குணம் , இதே வசதியில்லாதவன்  மேல போய்  இருந்தானாலும்  இப்படித்தான் மத்தவங்களை  சுரண்டிட்டு இருப்பான் ,இத மாத்த முடியாது , ஆனா இந்த இயல்புக்கும் சந்தோஷத்துக்கும் சம்பந்தமில்லை , எந்த நிலையிலும் சந்தோசமா இருக்க முடியும் , அம்மா நம்ம இரண்டு பேத்தை  அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தாங்க  , நீயோ  நானோ என்ன சோகமாவா  வளந்தோம்  , அம்மாக்கு அப்பா இல்லாதத தவிர வேறென்ன சோகம் இருந்தது ”  என்றேன்

அவன் ஏதும் பதில் சொல்லாமல் எழுந்தான்  ,பின்  “டைம் ஆச்சு கிளம்பு” என்றான் , பிறகு ஆணியில்  மாட்டியிருந்த  சட்டையில் கைவிட்டு பணம் எடுத்து என்னிடம்  கொடுத்து “வைத்து கொள் “என்றான் , “அண்ணா ,எங்கிட்ட இருக்கு ,வேணாம் என்றேன் ”  “பரவால்ல வை ”  என்று என்  மேல்சட்டை பாக்கெட்டில் திணித்தான்  .

நான் முக அசைவினால்  விடைபெற்று  கிளம்பி வாசல் வந்தேன்  , அண்ணா பின்னால்  இருந்து ”  டே அந்த பொண்ணு கிறிஸ்டினா ”  என்றான் , தயக்கம் கலந்த வெட்கத்துடன்  திரும்பி பார்த்தேன்.

“பொண்ணு நல்லாத்தான் இருக்கா ” என்றான் சிரித்தபடி  , “சரி வரேன் ”  சொல்லி படியிறங்கி பைக் பக்கம் வந்த போதுதான் சாவியை  மறந்து மேலேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது , திரும்பி அறைக்குள் போன போது அவன் ஒரு புத்தகத்தை திறந்து அதனுள் மூழ்கியிருந்தை பார்த்தேன் , அவன் திறந்த பக்கத்தில் அம்மாவின் ஒரு பழைய போட்டோ இருந்தது , சட்டென நான் வந்ததை உணர்ந்து புத்தகத்தை மூடி என்ன என்பது போல் என்னை பார்த்தான்   ,” சாவி  மறந்துட்டேன்” என்று சொல்லி எடுத்து வெளியே வந்தேன் , பின்தான் அவன் கண்கள் கலங்கியிருப்பதை  காண தாங்க முடியாமல் சட்டென வெளியேறியதை உணர்ந்தேன் .

பைக்கை எடுத்து கட் ரோட்டிலிருந்து  மெயின் ரோடிற்க்கு  வந்து நிறுத்தினேன் , பின்பு திரும்பி அவன் அறையை பார்த்தபோது கதவு மூடப்படாமல் இருந்ததை கண்டேன் .