சிறுகதை

கூடடைதல் – லோகேஷ் சிறுகதை

நான் தங்கியிருந்த தனியறையின் பக்கவாட்டு சுவரில் சுவற்றுப் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டு அந்த சத்தத்தை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன். சுவரின் அந்த பக்கத்தில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. அந்த பொந்திற்கு அவ்வப்போது ஒரு புறா வந்துகொண்டிருக்கும். அறைக்கு பின்பக்கத்தில் கண்ணுக்கு மறைவாக அந்த பொந்து இருந்தது. ஆகவே புறாவை பார்க்க முடியாது. அதன் ஓசையை வைத்துக்கொண்டு தான் அதனை அறிய முடியும். அது எழுப்பும் குறுகல் ஒலிக்காக தான் நான் காதை சுவரோடு ஒட்டி அப்படி கேட்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். முதலில் கேட்ட போது அந்த குறுகல் ஒலி எனக்கு எங்கள் ஊரின் மகமாயி கோயிலின் மாடப்புறாவைத் தான் ஞாபகப்படுத்தியது. சரியாக காலை விடியும் வேளையில் அந்த குறுகல் ஓசை எழும். அதில் அந்த சுவரே முனகுவது போல இருக்கும். அந்த முனகலில் தான் என் கண் விழிப்பு. பின்னர் மாலை அந்தி வேளையில் நான் வேலை முடிந்து திரும்பி வந்ததும் மீண்டும் ஒருமுறை காதை வைத்து கேட்பேன். சுவரே சடசடக்கும். புறா அதன் சிறகு அதிர புறப்பட துடித்துக்கொண்டிருக்கும். கூடடைவதற்கான தன் புறப்பாடை அதன் சிறகுகளைக் கொண்டு அதிர்த்தி தெரிவிப்பது போல. அது சென்ற பிறகும் அந்த சடசடப்பு அந்த சுவற்றில் எஞ்சும்.

நான் எனக்கான சிறகுகளை எப்போது பெறப் போகிறேன்? ஒவ்வொரு நாளும் அந்த சிறகடிப்பின் சடசடப்பில் புறாவோடு புறாவாக அந்த சுவரும், அந்த சுவரோடு ஒட்டிய நானும் பறந்துவிடலாகாதா என்ன?

எனக்கான சிறகுகளைப் பெற்று என கூடடைய எழுந்திருக்கிறேன் இப்போது. எனக்கு வயது முப்பத்தி இரண்டு. இருவதாவது அகவைகளை அரை பாக்கெட் சிகரெட்டிலும், வெட்டப்படாத தாடியிலும், பன்னிரெண்டு மணி நேர உறக்கத்திலும், ஆற்றங்கரை ஒரத்திலுள்ள பாழடைந்த மண்டபத்திலும் கழித்து பொறுப்பின் சலனம் இல்லாத இளைஞர்களுள் நானும் ஒருவன். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்றோ மாதம் எட்டாயிரம் ரூபாய் வருவாய். சொந்த ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் வேலை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்ல அனுமதி. அங்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால்… என் வீடு… அப்பா… மனைவி… தங்கை… அவர்களது காலைகள்.

கொல்லைபக்கம் தோட்டத்தில் விழுந்து இறைந்து கிடக்கும் தன் மனைவி வளர்த்த பவழமல்லி செடியின் பூக்களை தன் அரைப் பார்வைக்கொண்டு நேற்றைய பூ எது இன்றைய பூ எது என்று பகுத்து அன்றைய பூக்களை மட்டும் பொறுக்கி எடுத்து வந்து சாமி அலமாரிக்கு முன் தன் மகள் போட்ட அரசி மாவு கோலத்திற்கு மேல் அலங்கரிப்பார் அப்பா. மீதியிருக்கும் பூக்களை பூக்கூடையிலேயே விட்டுவைப்பார். அதனை என் மனைவி எடுத்து பவழமல்லியின் செந்தூரக்காம்புகளில் ஊசியை நுழைத்து கோர்த்து தொடுத்து சரமாக்கி என் அம்மா படத்திற்கும் ஏனைய சாமி படங்களுக்கும் சாத்துவாள். மீதியிருக்கும் அரை முழம் பவழ மல்லி சரத்தை தங்கை பள்ளிக்குச் செல்லும் போது அவளது தலையில் வைத்துவிடுவாள். இந்த பவழமல்லி கதையை எனக்கு எழுதும் கடிதத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் அப்பா. ஒவ்வொரு நாளும் எப்படி அந்த பவழ மல்லிச் செடி ஓரே எண்ணிக்கையில் பூக்களைத் தருகின்றன என்று அவரது வியப்பு அந்த கடிதத்தில் கலந்து இருக்கும். அங்கிருந்த வரை அவர்களது காலைகளில் எனக்கு பெரிதாக இடம் ஏதும் இருந்தது இல்லை. இன்று அவர்களுடன் என் பிள்ளையும். பிறந்த முதல் இன்று வரை தனது தந்தையவனின் முகம் கூட நுகரா பால் வண்ணம் மாறா ஆறு மாத கைக்குழந்தை. இங்கு இரை தேடி வந்து வீடு திரும்பும் பறவையாய் நான். ஊரிலிருந்து வேலைக்கு சேர்ந்து எட்டு மாதம் ஆகிவிட்டது. இதுவே என் முதல் வீடு திரும்பல். இங்கிருந்து ஊருக்கு எழு நூறு மைல் வரை தொடர்வண்டியில் சென்ற பின் மலைப்பாதை கடந்து சாலை மார்க்கமாய் இரண்டரை நாட்களில் சென்றடையலாம்.

ஒன்றரை நாள் ஆகிவிட்டது. நான் வந்த தொடர்வண்டி மழை காரணமாய் நடுவிலே நிறுத்தப்பட்டது. என்ன செய்வதென்று அறியாது முழித்தேன். மொத்தம் ஏழு நாள் தான் விடுமுறை. ஐந்து நாள் போக வர பயணத்திற்கே சரியாக இருக்கும். மீதி இரண்டு நாட்கள் தான். இந்த எட்டு மாதங்களாய் என் உயிரை ஓட்டி கொண்டிருந்தது இந்த இரண்டு நாட்கள் தான். இரவு பதினோரு மணி. ரயிலை விட்டு இறங்க முடிவு செய்தேன். இன்னும் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் அருகில் உள்ள பேருந்துகள் இயங்கப்பெறும் ஊருக்கு சென்றடையலாம். அங்கிருந்து என் ஊருக்கு ஐந்து மணி நேரம் தான் என்ற நம்பிக்கையில் நடந்தேன். நிலா வெளிச்சம் நிறையப் பெற்று இருந்தது வழியெல்லாம். மனித நடமாட்டமாய் எதையும் அறிய முடியவில்லை. ஆந்தையின் அலறல். மழை மேகங்கள் மழையை பனியாய் மாற்றிப் பொழியும் குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை.வேலைக்கு செல்வதற்கு முன் என் மனைவி கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் நினைவுக்கு வந்தது. பெட்டியில் இருந்து எடுத்து அணிந்துகொண்டேன். கூடவே அவள் சம்பந்தப்பட்ட நினைவுகளும் எழுந்து என்னை அணைந்துகொண்டன.

அன்று என்னையும் என் இயலாமை தெரிந்தும் என்னை ஏற்றுகொண்டு என்னோடு வாழ வந்தவள் தான் என் மனைவி. அவளது மெளனங்களை என் வாழ்க்கை தராசில் நிறுத்தினால் என்னால் ஈடு செய்ய முடியாது. நான் பொறுப்பில்லாமல் இருந்த காலங்களில் அவள் எந்த நம்பிக்கையில் என்னை ஏற்றுகொண்டாள் என்று நான் இன்று வரை அவளிடம் கேட்டதில்லை. திருமணத்திற்கு பின்னான நாட்களில் இரவு படுக்கைக்கு முன் அரைப் பாக்கெட் சிகரெட்டையும் காலி செய்து நெஞ்சு நிறைந்த புகையை தேக்கி வெளியில் விடாமல் அந்த போதையிலேயே திளைப்பேன். ஆரம்ப காலத்திலிருந்தே சிகரெட் புகையை நெஞ்சில் தேக்கி மூச்சை அடக்கும் இந்த பழக்கம் என் நட்பு வட்டத்தின் மூலம் நன்கு பரிச்சயமாகியிருந்தது. கண்கள் சிவந்து பொங்கியெழ வந்து அவள் அருகில் படுப்பேன். படுத்து உறங்கிய சிறிது நேரத்திலேயே அந்த நெஞ்சுப்புகை என் கண்களிலும் காதுகளிலும் மூச்சிலுமாக வெளியே கசியும் ஒரு நிலக்கரி இன்ஜினைப்போல. அருகில் படுப்பவர்களுக்கு குடலையே உமிழும் அளவிற்கு நாற்றம் பிறட்டும். அத்தனையும் தாங்கிக் கொண்டு தன் சேலை முந்தானையால் தன் முகத்தினை மூடிக்கொண்டு சற்று கமறி படுத்துக்கொள்வாள். அவ்வளவுதான். என்னிடம் எந்த புகாரும் அவளுக்கு இருந்ததில்லையா என்ன? இத்தனையும் எதற்கு ஒருத்தி தாங்கிகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை கூட இருக்கிறது. அதற்கும் அவள் மெளனத்தையே பதிலாய் உரைப்பாள். அவளது மெளனங்களால் என்னை அலட்சியப் படுத்துகிறாளா என்று கூட தோன்றும்.

வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி என்னைச் சூழ்ந்த போது என் சொந்த ஊரே என்னை விரட்டியடித்தது. நான் நின்று கொண்டிருக்கிற நிலமே கூசுவது போல் இருந்தது. அப்போது அவள் மட்டும் மெளனம் காத்தாள். அவளது அந்த மெளனத்தை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. “எல்லாரும் என்ன திட்டி தீக்குறாங்க, நீ மட்டும் ஏன் இன்னும் மிச்சம் வச்சுருக்க? ஏதாவது சொல்லு” என்று அவளை உலுக்காத குறையாக கேட்டேன். ‘இல்ல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல’ என்றாள். நான் அவளது தயக்க எல்லையை கடக்க முற்பட்டு, “என்ன தயங்குற. சொல்றதுகென்ன.” என்றேன்.

“தயக்கம்லாம் இல்ல உண்மையாவே அவ்ளோ தான்” என்றாள்.

இப்படித்தான் தயக்கத்திலேயே முழுமையாய் முடிந்துவிடுவாள் அவள். பின்னர் எதுவென்றோ ஆனவனாகி,

கனத்த குரலில் ‘நீ ஏன் இப்படி இருக்க? எதுவுமே பேசமாட்டேங்குற. என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு வார்த்தையே இல்லையா?

உனக்கு எம்மேல கொஞ்ச நஞ்ச உரிமைக்கூட இல்லையா என்ன?’

‘ஒருத்தங்கள அப்படியே ஏத்துக்கறதுல உரிமையில்லாம ஆய்டுமா என்ன?’ என்றாள்.

அவளிடம் மேற்கொண்டு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அவ்வார்த்தை என்னை நிறைத்ததா? இல்லை முழுதும் இறைத்ததா? தெரியவில்லை. இலை தளத்தில் நழுவும் பனி நீர் சுடுமணலில் விழுவதைப் போல அவ்வார்த்தையை அப்படியே உறிந்துகொண்டேன். அதிலிருந்த தண்மையும் உயிரோட்டமும் எனக்கு மட்டுமே அணுக்கமானது என்று பின்னர் பல தடவை நினைவு கூறி ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன். அதன் பின் அவளது மெளனங்களை அளக்க நான் முற்பட்டதில்லை. அதை சார்ந்த எந்த ஐயங்களும் இல்லை. எழுந்தாலும் அவளிடம் கேட்க போவதுமில்லை. அவளது மெளனங்களே எனக்கு காப்பாகவும் மாறியிருந்ததை சில சமயங்களில் உணரமுடிந்தது. அவளது வார்த்தைகளும் புளியமரத்தை உலுக்கி பொறுக்கி எடுக்கப்படும் புளியம்பழங்களைப் போல தான். அடி நாக்கில் எஞ்சும் அந்த இனிப்பு தாண்டிய புளிப்பைப் போல அவள் உகுக்கும் வார்த்தைகளின் சாரத்தை நான் சேகரம் செய்து கொள்வேன். நான் கிளம்பும்போது என்னை அணைத்து “இனிமேல் என் வேலையை இது செய்யும்” என்று கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் தான் இது.

இறுகி அணைத்தபடியே நடந்தேன். ஒரு ஐந்தாறு கிலோமீட்டர் நடந்திருப்பேன். சாலையை அடைந்துவிட்டேன். எதேனும் பஸ்ஸோ லாரியோ வருகிறதா என்று பார்த்து கொண்டே நின்றிருந்தேன். எதும் தென்படவில்லை. மணி ஒன்று இருக்கும். கால் கடுக்க நின்றிருந்தேன். தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில் வர வரக் கூடிற்று. ஒரு ஆம்னி வேன் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்த கை நீட்டினேன். ட்ரைவர் சற்று தூரம் போய் நிறுத்தினார். என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டியின் அருகில் சென்றேன். ட்ரைவரிடம் நடந்ததை கூறி விவரித்தேன். உள்ளிருந்து கணத்த இருமல் சத்தம் கேட்டது. ஒரு அறுவது வயது அம்மாவும் முப்பது முப்பத்திரண்டு வயது மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் சால்வையை மூடிக்கொண்டு தொடர்ந்து கத்திக்கொண்டும் இரும்பிக்கொண்டும் இருந்தாள். அம்மா அவளை தடவி கொடுத்து சமாதான படுத்தியவாறே இருந்தாள். ட்ரைவர் என்னை ‘ஏறுங்க சார்’ என்றார். அந்த மகளுக்கு என்ன தோனியதோ தெரியவில்லை என்னை பார்த்து அனத்திக்கொண்டே வந்தாள். “இந்த ஆளும் முகரயுமே சரி இல்ல…ஏன் இந்த ஆள வண்டில ஏத்துனீங்க ..?” என்று அம்மாவிடமும் ட்ரைவரிடமும் அனத்திக்கொண்டே வந்தாள். ஆம், என் முகமும் அப்படித்தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் என் விஷயத்தில் அது தப்பி விட்டது. திருடனும் எளிதாய் கைக்காட்டி திருட்டு பழியை சுமத்தி விட்டு தப்பிவிடுவான். அப்படிப்பட்ட முக அம்சம் பொருந்தியவன் நான். என்னை முதலில் பார்பவர்களுக்கு நான் சந்தேகப்படும்படியாகவும் இழிவாகவும் தெரிவதை நான் பல சமயங்களில் ஊகித்திருக்கிறேன். ஒருவரைத் தவிர – அவள் தான் என் மனைவி. போக போக அந்த பெண்ணின் அனத்தல் உச்சத்தை தொட்டது. இரைச்சலாய் மாறியது. அந்த வேனின் ஓரக்கண்ணாடியில் என் முகத்தை பார்த்தவாறே புழுவினும் இழிந்த நிலையை எண்ணினேன். வாழ்க்கையே இழிவாய் மாறிய தருணம் அது.

போக வேற்று வழி இல்லாமல் என் உணர்ச்சிகளை கண்ணீராய் பதிவு செய்த தருணமும் அது தான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் நிலைமை மோசமாக உரத்தக் குரலில் கத்தினாள். “ட்ரைவர், வண்டிய நிப்பாட்டுங்க, இந்த ஆள எறங்க சொல்லுங்க” என்று சத்தம் போட்டாள். அவள் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. ட்ரைவரும், “பக்கத்து ஊர்ல இவர் எறங்கிருவாருமா அது வரை அட்ஜஸ் பண்ணிகோங்க” என்றார். ஆனாலும் அவள் மூச்சுத் திணற திணற சத்தம் போட்டாள். அவள் அம்மா “தயவு செஞ்சு அவர எறக்கி விடுங்க” என்று கேட்டுக்கொண்டபடியே தண்ணீர் பாட்டிலை எடுத்து மகளிடம் தந்து மாத்திரை கொடுத்தாள். ட்ரைவரும் வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்தி என்னை தனியே இழுத்து சென்று, “சார் தப்பா நெனைக்காதீங்க. அந்த பொண்ணுக்கு ஹிஸ்டீரியா கம்ப்ளைண்ட், டிபி வேற அதான் இப்டி நடந்துக்குறாங்க. நீங்க வேற பஸ் லாரி புடிச்சு போய்க்கோங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.

மறுபடியும் தொலைந்து போனேன். ஒரு கண்ணில் என் குடும்பம். ஒரு கண்ணில் அந்த பெண்ணின் வசை மொழிகள் கணம் கணம் தோன்றி மறைந்தன. கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி வந்தது தெரிந்தது. மூன்று மணி இருக்கும். கையை நீட்டினேன். வண்டி வேகம் குறைந்து நின்றது. ட்ரைவர் ஒத்துக்கொண்டார். நடந்ததை மனதில் வைத்துகொள்ளாமல் குடும்பத்தை எண்ணியவாறே கண் அயர்ந்தேன். விடிந்தது. கண் முழித்துப்பார்த்தேன். தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம். சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று இருந்தது. போலீஸ் ஜீப்பும் அருகில் நின்றது. விபத்து நிகழ்ந்ததற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தது. லாரி ட்ரைவர் வண்டியை நிறுத்தி இறங்க முற்பட்டார். அதற்குள் ஒரு போலீசுகாரர் அவரை தடுத்து “வண்டியலாம் இப்டி தேவ இல்லாம ஓரங்கட்டாத…கெளம்பு…கெளம்பு” என்றார் “என்ன சார் ஆச்சு?” என்று லாரி ட்ரைவெர் அவரை வினவ, ” ஒரு அம்மாவும் பொண்ணும் வந்துருக்கராங்கையா….ட்ரைவர் பனில வண்டி ஓட்டத் தெரியாம தடுமாறி இருக்கான். வளைவுல கல்’ல மோதி ஆக்சிடென்டு. அதுல அம்மாவும் மகளும் ஸ்பாட் ஔட். ட்ரைவெர் அடிப்பட்டு கெடக்குறான்யா” என்று வழியை சரி செய்து அனுப்பினார். இதை கேட்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லாரி ட்ரைவர் “யாரு செஞ்ச பாவமோ? இப்டி ரத்தம் பட்டு கெடக்குதுங்க” என்று புலம்பினார் என்னிடம். என்னை வண்டியிலிருந்து இறக்கி விட்டதனால் தான் அவர்களுக்கு இந்த கதியா என்ன? என்ற எண்ணம் எழாமலில்லை. ச்ச, என்ன அபத்தம் இது? ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன் நான்? லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை நானே தேடி ஒருமுறை பார்த்துக்கொண்டேன். இது மாதிரி தருணங்களில் தான் ஒரு கண்ணாடியின் தேவையை நான் மிகவும் உணருகிறேனோ?

இப்படி பலவித எண்ணப்பரிமாற்றங்களுடன் அந்த ஊர் வந்து சேர்ந்தேன். லாரி ட்ரைவர் “இதான் சார் பஸ் ஸ்டாண்ட். இங்கேந்து உங்க ஊருக்கு பஸ் கெடைக்கும். பாத்து கேட்டு போய்டு வாங்க” என்றார். வண்டியை விட்டு இறங்கிய பின் ட்ரைவரிடம் “இந்தாங்க இத வச்சுகோங்க” என்றேன். ட்ரைவர் “அதலாம் வேணாம். ஒதவி செஞ்சு ஒருத்தன் அடையற விசாலத்த இப்படி பணங்கொடுத்து குறுக்கப் பாக்கறீங்களே சார். நாட்டுல எல்லாத்துக்கு மாத்தா இது இருக்கு. மனுசன் மனசுக்கு மட்டும் வேணாமே. என்ன சொல்றீங்க? ஓயாம லாரி ஓட்டுறவன் நான். எதோ என்னால முடிஞ்சது.” என்று புன்னகையுடன் மறுதலித்தார். “எல்லாரும் இப்படி பண்ணமாட்டாங்கள்ள ணா. அதனால தான்…” என்றேன். “அவங்கள வுடுங்க சார்” என்று லாரியின் கியரை மாற்றினார்.

மணி ஆறு முப்பதுக்கெல்லாம் என் ஊருக்கு பஸ் ஏறிவிட்டேன். அரசங்கொல்லை என் ஊர். மீண்டும் எண்ண ஓட்டங்கள். அந்தப் பெண்ணின் அரற்றல். அந்த வேன் ட்ரைவரின் மன்றாடல். அந்த லாரி ட்ரைவர் புன்முறுவல் என்று மாறி மாறி. ஒரு வழியாக ஊர் வந்து சேர்தல் ஆயிற்று. வீட்டுக்கதவை தட்டியவுடன் அப்பா கதவு திறந்தார். புத்தகத்தை கீழே போட்டு விட்டு ஓடி வந்து தன் கண்ணாடி வலையல்கள் நொறுங்க கட்டி அணைத்தாள் தங்கை, சமையல் வேலையைப் போட்டது போட்டபடி விட்டு வேகமாய் வந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து வந்து கையில் கொடுத்து என் தோளில் மெளனச் சாய்வு சாய்ந்தாள் மனைவி. “என்னடா பையன், அசப்புல உன்ன போலயே மூக்கும் முழியுமா இருக்கான் பாரு” என்றார் அப்பா. கையில் இருந்த என் மகன் மெலிதாய் சிரித்தான். நானோ அழுதேன். ஆம் என் முகத்தை தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எந்த கண்ணாடியும் என் எதிரில் இல்லை இப்போது.

விழித்த என் கண்களின் ஈரத்தை வற்றச்செய்தது பேருந்தின் ஜன்னல் ஓரம் வீசும் எதிர்காற்று. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். என் உடலில் முளைத்த சிறகுகளை எவரோ பிடுங்கி எறிவதைப் போல ஒரு வலி மிஞ்சியிருந்தது. அறைக்கதவைத் திறந்தபோது, தள்ளிய வேகத்தில் இருந்த காற்றழுத்த வேறுபாட்டினால், திறந்திருந்த ஜன்னலின் அடித்தளத்தில் இருந்து ஒரு இறகு அசைவுற்று கதவின் பின்புறம் வந்து விழுந்தது.

பிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை

ஒரு சிறு விலக்கம் இத்தனைவிதமாக அர்த்தப்படுமா? என்று சந்தியா மனதை குடைந்தபடி, மிக்சியில் வடைக்கு மசித்த பருப்பை எடுத்து சாந்தாம்மாவிடம், “பெரியம்மா பதம்பாருங்க..”என்று காட்டினாள்.

“போதும் சாமி…வழிச்சிடு…ரொம்ப அரச்சா ருசிக்காது,” என்றார்.வீட்டில் நுழைந்ததும் கதிரின் தோள்களைத் தொட்ட அவள் கைகளிலிருந்து அவன் விலகிக்கொண்டான்.ஏன்? எதாச்சும் இருக்கும்.தணியட்டும் என்று விட்டுவிட்டாள்.என்றாலும் அந்தவிலகல் மனதை சுற்றிசுற்றி வந்து மனதை கலைத்துக்கொண்டிருந்தது.

சுமோவின் சத்தம் வாசலில் கேட்கவும் சாந்தாம்மா, “பத்துநிமிசம் கழிச்சு வரமாட்டான்…இந்த வடையப் போட்டெடுத்துருக்கலாம்.ப்ரிட்ஜில மாவ வச்சுட்டு கையக்கழுவு,”என்றபடி சமையலறையை ஒருநோட்டம்விட்டப்பின்,வெளியே அவசரப்படுத்திக்கொண்டிருந்த சத்தங்களுக்கு விடையாக, “தோ…வந்திட்டோம்,”என்று மருமகளின் தோளைத்தட்டி, “ சீக்கிரம் சுமி,” என்றபடி சிலிண்டர் ரெகுலட்டரை மீண்டும் சரிபார்த்தார்.

கதிர் சந்தியாவிடம்,“துளசி ஏன் வரல?”என்றான்.

“அவனுக்கு இதில நம்பிக்கை இல்ல..”

“எதுலதான் அவனுக்கு நம்பிக்க உண்டு.அம்மாச்சிக்கூடவே ஹாஸ்பிடல்ல இருந்தான்ல..மனசுல இருந்து அதஎடுக்க வேணாம்.சும்மா..டென்சன் டென்சன்னு எல்லாத்தையும் விழுந்து கடிக்கறான்..”

“ஆமா…ஆனா அவனுக்கு நம்பிக்கையில்ல..நீ ஏன் இவ்வளவு கோபமா…”என்று கதிரின் தோளில் கைவைக்கச் சென்றவளை மறுத்து நகர்ந்தான்.இவன்களுக்கு என்னதான் சிக்கல்? என்று அவளுக்கு எரிச்சலாகவந்தது.

மீண்டும்,“சும்மா அதையே சொல்லாத..உனக்கு நம்பிக்க இருக்கா?”என்றான்.

“தெரியல,”என்றவளை உற்றுப்பார்த்து “என்ன பதில் இது?”என்றபடி சுமோவை நோக்கிச்சென்றான்.

நடுஇருக்கையில் பயல்களுடன் அமர்ந்த கதிர் சுமியிடம் “கதவைசாத்து,” என்றான்.பின்னால் நேர்எதிர் இருக்கைகளில் ஒன்றில் சந்தியாஅம்மா,சாந்தாம்மாவும் எதிர் இருக்கையில் சந்தியாவும் நல்லுஅய்யாவும்.

முன்புற இருக்கையிலிருந்தபடி சந்தியாவின் பெரியய்யா, “ஆச்சு..கெளம்புய்யா..”என்று அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த ஓட்டுநரின் கவனத்தை அவன் இருக்கைக்கு கொண்டுவந்தார். கைகளை விரித்து வெட்டவெளியில் அன்னாந்து பார்க்க வைக்கும் எல்லைமாரியம்மனைத் தாண்டி துறையூரினுள் மெல்லப்புகுந்து திருச்சி சாலையில் வேகமெடுத்தது வண்டி.

“எல்லயத்தாண்டிருச்சு ஊரு…முன்னெல்லாம் காவாத்தா கோயில்ன்னா ஆறுமணிக்குமேல நடமாட்டமிருக்காது..இன்னிக்கி பக்கத்திலயே குடியிருக்கறோம்…”என்ற பெரிய்யாவிடம் சந்தியா, “காவாத்தாவுக்கு தனியாயிருந்து சலிச்சிருச்சு..அதான் மக்கள பக்கத்துல வச்சிக்கப்பாக்குது..”என்றாள்.

கதிர் முறைத்தான். “இருக்கும்..இருக்கும்…சாமின்னாலும் நம்மளாட்டம் தானே.எத்தனவருசத்துக்கு தனியா நிக்கும்.அதுக்கையில ஒரு பிள்ளசாமிய வைக்கமாட்டானுங்க..”என்றவரைப் பார்த்து புன்னகைத்து, “ஊரகாப்பத்த போலீஸ் வந்தப்புறம் அதுக்கும் பொழுது போகனுமில்ல..”என்றாள்.

“ய்யா…நீங்க வேற.இவ என்னத்து சொல்றான்று புரியாது.கிண்டல் பண்ணுவா..”

“இல்லல்ல பாப்பா சரியாத்தான் சொல்லுது.வேல வெட்டியில்லாம என்னதுக்கு சாமி.திருவெள்ளரையில பெரியபாறமேல அத்தாம்பெரியக் கோவிலு..என்னத்துக்கு புண்ணியம்..”என்று சலித்துக்கொண்டார்.

தாமரைக்கண்ணனிடம் எதையாச்சும் கேட்டிருப்பாராக இருக்கும் என்று சந்தியா நினைத்துக்கொண்டாள்.

ஓட்டுநர், “அந்தக்கோயிலுக்கு எப்பபோனீங்கய்யா..”என்றான்.

“வெள்ளிகிழம சாயங்காலமா போனேன்,”

“அதான்…வேண்டுதல்லாம் காலையில வைக்கனும்ன்னு எங்கம்மா சொல்லும்,”என்றான்.

அது சரி… கண்விரிய அந்த கொம்பன் நாச்சியாரை பார்த்தபடி நாழி கேட்டான் வாசலில் சர்வாலங்காரபூஜிதனாய் நின்றுகொண்டு, இவரை விட்டுவிட்டான் என்று சந்தியாவின் மனதிற்கு ஓட புன்னகைத்துக் கொண்டாள்.

“அது என்ன? சாமின்னா போற நேரத்துக்கு வழிக்கொடுக்கனுமில்ல…கடங்காரனா காலையில வா, மதியானமா வான்னு…”என்று யதார்த்தத்தை சொன்னார்.ஓட்டுநர், “பின்ன..”என்று வேகமாக தலையாட்டினான்.

சாந்தாம்மா, “எல்லாத்தையும் உங்கக்கட வியாபாரமா பாக்காதீங்க..சாமிட்ட அடங்கிநிக்கனும்..”என்றபடி பெரியய்யாவை முறைத்தார்.

பக்கத்திலிருந்த நல்லுவைப்பார்த்த சந்தியா ,அய்யா…அய்யா என்று நாலுமுறையாவது அழைத்து , அவர்அய்யா என்பதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என்று நினைத்து, “அய்யா…நல்லா உக்காருங்க,”என்றாள்.அவள்அம்மாவின் சமவயது மாமாமகன் இவர்.

கதிரிடம் நல்லுஅய்யா,“ஏண்டா ஒருபக்கமா ஒக்காந்திருக்க,”என்றார்.

“காலையில எந்திரிக்கையில் தச பெறடிக்கிச்சுய்யா,”என்று திரும்பாமல் சொன்னான்.

சாந்தாம்மா,“எங்கய்யாவுக்கு இப்படிதான் அடிக்கடி ஆவும்…அய்யாவ குப்புற தரயில படுக்கவச்சி அம்மிகுழவிய முதுகுல உருட்டுவாங்க,”என்று பெருமூச்சுவிட்டார்.கோடைவெப்பத்தில் உடல் நசநசக்க சந்தியா பின்னாலிருந்த கண்ணாடி, கதவா? இல்லையா என்று திரும்பிப்பார்த்தாள். பயல்கள் உறங்கவும் வண்டியில் பேச்சுநின்றது.

புலிவலம் காட்டை வண்டி கடந்து கொண்டிருந்தது.காடு சுள்ளிகளை அடையாளமாக நிறுத்தியபடிமுதல்மழைத்துளிக்கு தவமிருந்தது.

“காடு காஞ்சு போகவும்..சிறுத்த நடமாட்டம் தெரியுது,”என்றபடி ஓட்டுநர் வண்டியை முடுக்கினார்.

“ இந்தக்காட்டுல சிறுத்த இருக்குதாய்யா….”

“நீங்க வேற.. பாக்கற வரைக்கும் நானும் நம்பல…”என்று சிரித்தான்.

சுமி, “முதுகுபிடிப்புன்னா.. முதுகுல குத்தனுன்னா சொன்னீங்க…எத்தன தடவ குத்தனும்,”என்று கதிரை பார்த்தபடி கேட்டாள்.

சாந்தாம்மா,“நீ பரவாயில்லயே.. விட்டா குத்தி எடுத்து முறத்துல போட்டு புடச்சிருவியாட்டுக்கே..”என்று சிரித்தார்.

கதிர்,“முதல்ல கோயம்புத்தூர்காரனுக்கு நாலுகுத்துகுத்தி பாத்து தெரிஞ்சுக்கிட்டு இங்க வா,”என்றான்.

“எங்கண்ணன்னா முதுகு வலிக்குதுன்னு சொன்னுச்சு..எப்படின்னு தெரிஞ்சுகிட்டா அவசரத்துக்கு யூஸ்ஆகுன்னு கேட்டேன்,”என்றாள்.

வண்டி காட்டை உதறிவிட்டது போல வேகத்தைக்குறைத்தது.இவ்வளவு வேகமாக வந்தது அதற்குத்தானே என்று சந்தியாவிற்கு தோன்றியது.சாந்தாம்மா கால்வலியில் முனகியபடி இருந்தார்.

நல்லுஅய்யா, “தினமும் கொஞ்சநேரம் கைகால் பயிற்சி பண்ணனும்..வயசு ஐம்பத்தஞ்ச தாண்டுதுல்ல…நம்ம உடம்பையும் பாக்கனுமில்ல..”என்றார்.

“என்னபண்றது..வேலவேலன்னு வீட்ல கடயவச்சுக்கிட்டு எங்க முடியுது,”

“வேல இருக்கதான் செய்யும்,”

“உன்னமாதிரி தனியாளா? இல்ல போனமா வந்தமா வேலயா..”என்றதும் சந்தியாவிற்கு சுருக்கென்றது. பக்கவாட்டில் நல்லுஅய்யா புன்னகைத்தபடி, “செய்யனும் …”என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

தனியாளாக சமைத்து ,பள்ளிவாகனத்தின் ஓட்டுநராக,பள்ளி மைதானத்தின் துப்புரவாளராக, பள்ளியின் தலையாசியராக, ஆசிரியராக இருப்பவர். மெதுவாக, “ய்யா…எல்லா பள்ளிக்கூட வேலயயும் இப்படிதான் நெனக்கிறாங்களா…”என்றாள்.

“எல்லாரும் இந்தமாதிரிதானே..தன்வேலதான் கஷ்ட்டங்கற எண்ணம். சம்பதிக்கமுடியலன்னா வேலய மாத்தலாம்…கனவ மாத்தமுடியுமா?,”என்று சாலையைப்பார்த்தார்.இவர் ஏன் அந்தகாலத்திலேயே கல்யாணத்தை உதறினார் என்று கேட்க நினைத்தவள் தன்மீதே திரும்பும் வம்பெதற்கு என்று விட்டுவிட்டாள்.

வெயிலேறிய பொழுதில் திருவரங்கத்தினுள் வண்டிநுழைந்தது.மேற்குதிசையில் சென்ற வண்டி மெதுவாக தெற்குபக்கம் வளைந்து திரும்புகையில் சந்தியாவின் கழுத்து கீழிருந்து மெல்ல அன்னாந்து நோக்கியது.சட்டென்று யாரோ ஒருஅழகன் பேருரு எடுத்து கைகளை இடையில் ஊன்றி நிமிர்ந்து பார்ப்பதைப்போல ராஜகோபுரம் எழுந்தது.சந்தியா உள்ளே சயனித்திருக்கும் அவன் தான் என்று புன்னகைத்தாள்.

வண்டி தெற்கு நோக்கி மேடான சாலையில் பயணித்தது.கண்கள் காண்கையிலேயே கோபுரம் மெல்லசிறுத்து காரின் பின்கண்ணாடியில் அடங்கியது.

“டக்குன்று இறங்கனும்…ரெண்டுநிமிஷதுக்கு மேல இங்க வண்டிநிக்கக்கூடாது..”என்று பெரியய்யா அவசரப்படுத்தினார்.இறங்கி இரண்டு கைகளில் இரண்டுபயல்களைப்பிடித்தபடி ஓடிவந்து அம்மாமண்டபத்தின் முன் நின்று சந்தியா, “அவங்களுக்கு முன்ன வந்துட்டம்ல..”என்று பயல்களைப்பார்த்து சிரித்தாள்.

பெரியவன்,“அத்த..அவங்கல்லாம் இன்னும் வரல,”என்று வாய்பொத்தி சிரித்தான்.சின்னவன் மொழியால் சொல்லத்தெரியாத உவகையால் கை, கால்களை ஆட்டிக்குதித்தான்.

பெரணி விஸ்வரூபம் எடுத்ததைப் போன்ற முகப்புத்தூண் சிற்பத்தை வெண்சுண்ணத்தால் மெழுகி வைத்திருந்தார்கள்.இதன்சிற்பி அதிகாலையில் நீராடலில், கிணற்றில் அமர்ந்திருகையில் மனதில் எழுந்ததோ என்று நினைத்துக்கொண்டாள்.அவரின் கண்களில் பட்டு நான் நான் என்று தான் இலைக்கைகளை நீட்டி சொல்லியிருக்குமா? சந்தியாவின்அம்மாச்சி பெரணிச்செடியை, “ இந்தக்கழுத தவங்கெடந்து பிறவியெடுக்கும்,”என்று கிணற்றைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சொல்வார்.

“என்ன நெனப்பில இருப்ப..கையில பிள்ளங்கள பிடிச்சுக்கிட்டு வழியிலயே நிக்கற. உள்ளப்போகவேண்டியது தானே..”என்ற பெரியய்யாவின் குரலால் கலைந்து மண்டபத்தின் உள்ளே சென்றாள்.சட்டென்று மெல்லிய தண்மையான இருள் வந்து அனைத்துப்புலன்களையும் தொட்டு ஆறுதல்படுத்தியது.

சின்னவன், “ஜாலி…ஜாலி..இங்க நல்லாருக்கு,”என்று குதித்தான். “இவன மேய்க்கமுடியாது,”என்றபடி கதிர் சின்னவனின் கையைபிடித்தபடி முன்னே செல்ல ,அவன் கையைவெடுக்கென்று இழுத்து உதறினான்.கதிர் அவன்முதுகில் ஒன்று வைக்கவும் கத்தியபடி கீழே அமர்ந்து கொண்டான்.

இருபுறமும் நெடுகதூண்கள் .அடுத்த நிறைதூண்களை பலகைகற்களை அடுக்கி சுவராக்கியிருந்தனர்.குகைகளில் வாழ்ந்த நினைப்பில்தான் இந்தமாதிரி கல்லால் ஆன இடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நாமும் இன்று இதை இத்தனை விருப்புகிறோமா? என்று சந்தியா நினைத்துமுடிப்பதற்குள் முக்கால்வாசி மண்டபத்தை கடந்திருந்தார்கள்.சட்டென்று ஔி.இருபுறமும் சுவர்அடைப்பில்லாத தூண்கள் .

இடப்பக்கம் இருந்த திறப்பிற்கு அருகில் புரோகிதருக்காக காத்திருக்கையில் தூயவெண்ணிறத்தில் இளம்பசு அல்லது வளர்ந்த கன்று குறைந்த உயரத்தில் கொழுக்கட்டையென அழகுவழிய நின்றிருந்தது.சட்டென்று பெரியவனை கண்கள் தேடியது.அவன் முன்பே கண்களைவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிடமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“இவங்கண்ணுல எங்கருந்தாலும் மாடுதப்பமுடியாது..பேசாம இருடா”என்ற சுமி தூணில் சாய்ந்துகொண்டாள்.

சாந்தாம்மா,“தவமா கெடக்கறான்..மாட்டக்கண்டா என்னமா இருக்குமா? நேரம்போறது தெரியாம நின்னுகிட்டிருப்பான்…டேய் அடம்பண்ணாத…அப்பறம் கூட்டிட்டு போறேன்..”என்றார்.

அவன் கைகால்கள் ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று பார்த்தபடி சந்தியாவை தேர்வுசெய்தான்.

“அத்த..அத்த வாங்க கோமாதா பாக்கப்போலாம்…ப்ளீஸ் அத்த,”

கூம்பிய சிறுமுகமும், இன்னும் கூம்பிய உதடுகளும் ,விரிந்தகண்களையும் மறுக்க அவளால் முடியவில்லை.அவன் கன்னத்தில் வழிந்த வியர்வையை தன்கைக்குட்டையால் துடைத்தபடி , “மாடு பாக்க போலான்னு சொல்லு..போலாம்,”என்றாள்.

“நல்லபிள்ளயையும் கெடுப்ப நீ…”என்ற அம்மாவை கவனிக்காமல் அவனைப்பார்த்தாள்.உதடுகள் விரிய சிணுக்கத்துடன், “மாடும்மா பாக்கப்போலாம்…”என்றான்.சந்தியா வேகமாக சரித்தபடி அவனை தன்னோடு இழுத்துக்கொண்டாள்.

அகத்திஇலைகள் தன்குழம்புகளில் மிதிபட, மைவிழிகளில் புது மனிதரைக்காணும் எந்தபதட்டமும் இன்றி இளம்பசு பார்த்தது.சந்தியா அவனை கையில் பிடித்தபடி, “ இங்கயே நில்லுடா,” என்றாள்.

அவன் அவள்கையை வேகமாக உதறி பசுவை சுற்றிசுற்றி வந்தான்.அப்படிஎன்ன இந்தப்பயலுக்கு? என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அத்த ….எங்க மடியவே காணோம்,”என்றாள்.

எப்பவும் கேட்பதுதான் என்பதால், “ இங்க வா,” என்றழைத்து அங்கப்பாரு..”என்றாள்.

“பாப்பாத்த..”

“இதெல்லாம் எங்கடா கத்துக்கற…”என்றவளை கவனிக்காமல் கீழே குவிந்தும், இறைந்தும் கிடந்த அகத்திஇலைகளை எடுத்து நீட்டினான்.பசு அலட்சியமாக திரும்பிக்கொண்டது.இவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று அலைபாய்ந்தான்.

“ஏந்த்த..என்னிய பிடிக்கலாயா இதுக்கு..”

“ஒரே தீனிய நீ திம்பியா..அதுக்கும் அப்படிதானே…இந்த எலப்பிடிக்கல..”

“ஏன் இத குடுக்கறாங்க..அதுக்குப்பிடிச்சத குடுக்கல..”

அதுவிதி என்று நினைத்து சொல்லாமல் அந்தப்பசுவைப் பார்த்தாள்.என்ன மாதிரி உடல்..இதுவரைக்கும் பார்க்காத அழகு..இங்கருக்கற செல மாதிரி.. என்று நினைக்கும்போதே… இந்தஅங்கலட்சணம் தான் இத இங்க கொண்டுவந்து தள்ளியிருக்கு என்று நினைத்து திரும்பிக்கொண்டாள்.சேவல்கள் ,கோழிகள் என்று அவன் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

“ந்தா..வரமாட்டிங்க.ஆத்துக்குபோயிட்டுவரனும்..”என்ற குரலால் இருவரும் சுதாரித்து மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.புராகிதர் தன் அம்பு சேனையுடன் அமர்ந்திருந்தார்.

“போய்..காவிரியில முழுகிண்டு வாங்கோ..இங்க தாயாரா இருக்கும்..துண்ட விட்டுட்டு வாங்கா,”என்று பெரியய்யாவைப் பார்த்து சொன்னார்.

முகப்புமண்டபத்தில் திருநங்கைகள் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.சந்தியா, “அக்கா..அவங்களோட வந்தோம்..”என்றதும் அவள் சிரித்தபடி, “போ,”என்று நடந்தாள்.

முகமண்டபத்திலிருந்து இறங்கி பிள்ளையார் சன்னிதிக்கு அருகிலிருந்த வேம்பைக்கடந்து அரசமர நிழலில் நடந்தார்கள்.வழியெங்கும் சிமெண்ட் பரப்பில் நாற்களங்கள் கோலமாவினால் வரையப்பட்டிருந்தன.நான்குபக்கங்களின் மையத்தில் வாசல்கள்.ஒவ்வொரு மடிப்பிலும் கலயங்கள்.வினைமுடித்தக்கலயங்கள் மக்களின் கால்களால் இலக்கில்லாமல் உருண்டுகொண்டிருந்தன.நாய் ஒன்று நாற்களத்தின் நடுவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.

மேட்டிலிருந்து ஆற்றில் இறங்கும்போதே, “காவிரி என்ன சாக்கடையாட்டம் இருக்கு,”என்று சந்தியா முகம் சுளித்தாள்.

பின்னால் வந்தவர், “தண்ணியப்பழிச்சா கடசியில ஒருவா தண்ணிக்கு அலையனும்,”என்றபடி ஆற்றில் கால்வைக்கத்தயங்கிய சிறுமியை கைபிடித்து அழைத்துக்கொண்டிருந்தார்.

கால்களை மணலிலும் நீரிலும் கிடந்த துண்டுகள், வேட்டிகள் தடுக்க சின்னவன் கதிரை தூக்குமானு அழுது காரியம் சாதித்தான்.

கால்கள் சுடு மணலில் புதைய நடுவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் ஒற்றைவிரலை நோக்கிச்சென்றார்கள்.ஆழமான இடம்..தயங்கி தயங்கி நகரும் காவிரி ‘நான் இருக்கறனில்லே’என்றபடி சூரியக்கதிர்கள் மினுமினுக்கும் குளிர்ந்த சிற்றலைகளால் கால்களைத் தடவினாள்.

காவிரியின் ஆழத்திற்கு நடந்து“அப்பாடா..சொகமா இருக்கு..”என்றபடி பெரியய்யா சட்டையைக்கழட்டினார்.தண்ணீரைக்கண்டது பயல்கள் அவர் பின்னாலேயே ஓடினார்கள்.

காவிரியில் நனைந்து எழுந்து ,எதிரே தும்பிக்கையை மடித்து வாயில் விட்டபடி படுத்திருக்கும் பெரும்யானை என தன்னைக்காட்டிய மலைக்கோட்டையை கும்பிட்டபடி சாந்தாம்மா , “எங்கய்யாவ மாதிரி எங்கம்மாவையும் உங்காலடியில சேத்துக்க பிள்ளையாரப்பா,”என்று வேகமாக சொன்னார்.

சந்தியா மலைக்கோட்டையைப் பார்த்தபடி முழங்கால்அளவு தண்ணீரில் நின்றிருந்தாள்.தலைக்குமேலே காயும் சூரியன்..அதற்கும் கீழே கலைந்துவிரிந்த கூந்தலென மேகப்போதி அம்மாச்சியின் சேலைமுந்தானையாகக் கடக்க , நின்ற சந்தியாவின் முதுகில் அண்ணி தட்டியதை உணர்ந்து திரும்பினாள்.

மணலில் நடக்கும் போது காலில் குத்திய ஊக்கை எடுத்தபடி நிமிர்ந்து கதிரைப்பார்த்தாள்.ஒருகணம் விழிகள் நிலைத்து பின் முன்னே நடந்தான். இருபயல்களின் மீன்கள் பற்றிய கதைகளை கேட்டபடி நடந்தார்கள்.

“அந்த மீன் என்ட்ட சொன்னிச்சு..”

“இல்ல..நீ பொய் சொல்ற..”என்றபடி இருவரும் முடியைப்பிடித்துக்கொண்டார்கள்.சுமி முதுகில் இரண்டு வைத்து இரண்டையும் பிரித்து விரட்டிவிட்டாள்.

சாந்தாம்மா தன்தங்கையிடம், “அந்த சிவப்பு புடவை கட்டியிருக்கற அம்மா நம்மஅம்மா மாதிரியில்லம்மா..”என்று காட்டியபடி கால்வலியால் தங்கையின் தோளைப்பிடித்துக்கொண்டு நடந்தார்.

சுமி, “அவ்வா நெனப்பு ஒருவிருஷமா நம்மள சுத்துது…அதுக்குதான் இதெல்லாம் செய்யறது..”என்றாள்.சூடான மென்மணல்பரப்பில் கால்கள் நன்கு புதைந்தன.வெப்பமான மணல்.சந்தியா குனிந்து மணலை அள்ளி கையில் எடுத்து பாலை என்று தோன்ற, பின்னால் திரும்பி ஆறு தன்உள்ளங்கையில் பிடித்துவைத்து ஒழுகவிட்ட நீரைப்பார்த்தாள்.மாறி மாறி இரண்டையும் பார்த்தபடி நடந்தாள்.

அம்மா மண்டபத்தினுள் புகை மறைத்த வழிகளால் பெரியய்யாவைக்காண அழகாய் இருந்தார். வெள்ளை வேட்டியில் சட்டையில்லாமல் தோய்ந்த தோள்களுடன் சிறுதொப்பையுடன் தளர்ந்து பலகையில் அமர்ந்து சிறுபிள்ளை போல புரோகிதரை  விழித்துப்பார்த்து  அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்.

முன்னோர் வரிசையைக்கேட்கும் போது அம்மா பெரியம்மா பக்கம் திரும்பி பிட்டடித்து சொல்லிக்கொண்டிருந்தார்.அம்மாச்சியின் பாட்டி பெயருக்காக விழிக்கையில் சந்தியா, “காவரியம்மாள்,”என்றாள்.

“சமத்து…தெரியாதுன்னா இவளதான் சொல்லனும்.கங்காதேவின்னு சொல்லலாம்.ஆனா..கொஞ்சம் ஒட்டுதல் வாரது பாருங்கோ..”என்று காவிரியை உரிமை கொண்டாடியபடி தன்மூட்டையைக் கட்டிகொண்டு, “பிண்டத்தைக்கரச்சுட்டு… கரையில இருக்கற காசிவிஸ்வநாதர, காவரித்தாய, பி்ள்ளயாரை சேவிச்சுட்டு நமக்கு முன்னாடி அங்க இருக்கற ஆஞ்சநேயர சேவிச்சிட்டு கிளம்புங்கோ. உங்க சேமத்த பாத்துண்டு குழந்தைகளோட நன்னாருங்கோ,”என்று கைதூக்கி வாழ்த்தி கும்பிட்டு நடந்தார்.

மலர்களுடன் எள்ளுடன் இருந்த மாவுஉருண்டைகள் நீரில் கரைந்து பால் எனமாறி பின் நீரென்றாகியது. வணங்கியப்பின் சந்தியா காவிரியை நோக்கிய முகப்புமண்டபத்தில் நின்றாள்.எதிரே மலைக்கோட்டையில், காவிரியில்,கரையிலிருந்த தென்னந்தோப்புகளில் நிலைத்திருந்தன அவளின் விழிகள்.இதுதான் இருகுடும்பங்களுக்கும் பொதுவான கடைசிசடங்கா ? என்று மனது தேடியது.எத்தனை கண்ணுக்குத்தெரியாத அலைகள் என்று காவிரியைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது அவளுக்குத்தோன்றியது.

அனைவரும் அமைதியாக நிற்க, படிகளில் ஏறி அவள் அருகில் நின்ற பெரியய்யா, “உங்கம்மாவுக்கு செய்யவண்டியதெல்லாம் செஞ்சாச்சு.போதுமாத்தா,”என்று பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்தார்.இருவரும் அமைதியாக தலையாட்டினார்கள்.

சந்தியாஅம்மா முன்னால் நகர பெரியய்யா சாந்தாம்மாவைப்பார்த்து , “இனிமே புலம்பாம பிள்ளைங்களைப் பாக்கனும்,”என்று நடந்து கொழுந்தியாளிடம், “உனக்குதாஞ் சொல்றேன்.இனிமே நமக்கெந்த பெறந்தஎடன்னு நெனக்காத…நீ எந்தக்கொறையும் சொல்லி கேக்க நாங்க இருக்கோம்.உனக்கு மாமன் மவந்தானே நான்.ஒங்கம்மா வழிதானே..ம்..”என்று சொல்லிவிட்டு அவர் தம்பியிடம் பேசியபடி நடந்தார்.

சந்தியா கதிரிடம், “அங்கபாரு..தென்னைதோப்புக்கு நடுவுல நிக்கறது ஜோசப்சர்ச்..ஆத்துமேட்டுல ஏறி நேராநடந்தா சர்ச் பக்கமாதான் இருக்கனும்..நம்மதான் ரோடு போட்டு தூரமாக்கிட்டோம் போல ”என்றாள்.

கதிர் உற்றுபார்த்தபடி, “சர்ச்சா..? தென்னமரம்மாதிரி தெரியுது..”என்றான்.பயல்கள் “அத்த என்ன காட்றாங்க…எனக்கும்.. எனக்கும்,” என்று எம்பினார்கள்.

பெரியய்யா தன்தம்பியுடன் மண்பத்திற்குள் நடந்தார்.ஏற்றிக்கடிய தூயவெள்ளை வேட்டியின் கீழ் காணுகால்களிலிருந்து பாதம் தெரிந்தது.மண்டபதில் மெல்லிய இருள் பரவிநிற்க நடுவில் அவர் நடந்து கொண்டிருந்தார்.

சந்தியா சுற்றிலும் பார்த்தாள்.யாரோ யாருடனோ..யார்களோ யார்களுடனோ..பேசியபடி, சிரித்தபடி, பிணங்கியபடி ,கத்தியபடி இருந்தார்கள்.யார் இவர்கள் எல்லாம்? என்ற தோன்ற துணுக்குற்று எண்ணத்தை மாற்றிநடந்தாள்.

மண்டபத்தின் வெளியே வண்டிக்காக காத்துநின்றார்கள்.சந்தியா மேலே அனந்தசயனனின் சிலையைப்பார்த்தாள்.அதற்கு மேல கதிரவன்.அதற்கு மேல வெளி…கண்கள் கூசி கண்ணீர் வழிய கீழே குனிந்தாள்.குடிநீர்குழாய் வழிந்து தேங்கிய பள்ளத்தின் நீர், தன்மீது விழுந்த அகாயத்தை பரதிபலித்த ஔியால் மீண்டும் கண்களை சுருக்கினாள்.வந்து நின்ற வண்டியின் கண்ணாடியில் மீண்டும் அதே ஔியின் கூச்சம்.வண்டிக்குள் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

கதிர் பின்னால் திரும்பி , “ஏறுன சூரியன எதுத்துப்பாக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…வானத்தப்பாக்காத..”என்றபடி அவளின் தலையில் கைவைத்தான்.

அரங்கத்தின் போக்குவரத்து அலைகளில் தானும் ஒருஅலையென நகர்ந்தது அவர்களின் வாகனம்.

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’
‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.
‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’
‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’
‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம தூங்கிட்டு காத்தால ஏழு மணிக்கு தான் எழுந்துக்கறேன்..’
‘இது நிறைய பேருக்கு வர கனவு தான், நத்திங் ந்யு ஆர் ஸ்பெஷல்’
‘நான் முடிக்கல ஸார். கனவுன்னு நான் சொன்னேன்ல, அது தப்பு. ஆக்‌ஷுவலா அது கனவுக்குள்ள கனவு, அதாவது என் கனவுல நான் ட்வல்த் ஸ்டூடன்ட்டா   இருக்கேன்ல , அந்த பையன் தான் பரீட்சைக்கு எதுவும் படிக்கமா தூங்கிடற மாதிரி கனவு காணறான், நான் இல்ல.. அவன் பயந்து போய் முழிச்சுகிட்டு எல்லாம் கனவுன்னு புரிஞ்சுக்கிறான், அதே நேரம் எனக்கும் தூக்கம் கலஞ்சிருச்சு’
‘சரி இதுக்கும் நீ மொதல்ல சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்’
‘இனிமே தான் விஷயமே இருக்கு. நான் ஒரு குறுநாவல் எழுதிட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்லையா’
‘அதான் ரெண்டு வருஷமா நீ முக்கி முக்கி எழுதிட்டிருக்கறத என்கிட்டே அப்பப்ப படிக்க குடுக்கறியே’
‘அதுல பத்து நாளா திருத்தங்கள் செஞ்சிட்டிருக்கேன் ஸார்’
‘அப்ப அதையும் என் கிட்ட படிக்க தரப் போற, எத்தனை தடவையா உன் செங்கல்பட்டு புராணத்தை படிக்கறது’
‘அத விடுங்க. கதைல அந்த பண்ணண்டாவது படிக்கற பையன் இருக்கான்ல..’
‘நீதான அவன், மூணாவது மனுஷனை பத்தி சொல்ற மாதிரி பேசற’
‘கதைப்படி அவன் பாத்திரம் தானே ஸார். அந்த பையன் இதே மாதிரி, அதாவது, எக்ஸாமுக்கு ப்ரேபர் பண்ணாத மாதிரி கனவு கண்டு பயந்து எழுந்துக்கற மாதிரி ஒரு பகுதி எழுதியிருக்கேன் ஸார். அதுக்கு அடுத்த நாள் நைட் எனக்கு இந்த மாதிரி கனவு வருது, லைப் இமிடேட்ஸ் ஆர்ட். நீங்க ரைட்டர்/புக் பேர்லாம் தான சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க, ஸோ ‘க்வோட்ஸ்’ யூஸ் பண்றது தப்பில்லை.’
‘நீ திருந்த மாட்ட’
‘வாழ்கையே ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டோட புனைவு மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னது கரெக்ட் தானே ஸார்’
‘ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டா, என்னய்யா ஹாரி பாட்டர கதைக்குள்ள கொண்டாற’
‘நீங்க தானே நேம் ட்ராப்பிங் கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க நீங்களே புக் பெயரை சொல்றீங்க. எல்லாரும் கவனிங்க முற்றுப்புள்ளி ஸார் தான் அவர் சொன்னதை தானே மீறியிருக்கார், நான் இல்ல’
‘ஏன்யா திடீர்னு அந்தப் பக்கம் பார்த்து பேசற’
‘வாசகாஸ் கிட்ட பேசறேன் ஸார், போர்த் வால்ல ப்ரேக் பண்லாம்னு தான்’
‘வாசகாஸா, கஷ்டம். போர்த் வால்ன்னா என்னனு தெரியுமாய்யா, விட்டா சுவத்த பார்த்து பேசுவ போல’
‘வுட்டி அல்லன்லாம் அதை உடைச்சிருக்கார்ன்னு கேள்விப் பட்டிருக்கேன் சார்’
‘அதுக்காக நீயும் கடப்பாறைய எடுத்துக்கிட்டு வந்து வீட்டு சவுத்த உடைச்சிறாத. நீ பண்ணக் கூடிய ஆளு தான். இலக்கியம்னு இல்ல பொதுவாவே ஆர்ட்ட பொறுத்த வரைக்கும் படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் கேஸ்யா நீ’
‘அதெல்லாம் மாட்டேன் ஸார்.’
‘பார் எ சேஞ் நீ சொல்ற கனவு விஷயம் ஓரளவுக்கு சுவாரஸ்யமா இருக்கு, இதை கதையாக்க ட்ரை பண்ணு’
‘இன்னொரு ஐடியாவும் இருக்கு ஸார்’
‘இதான் ஒன்கிட்ட பிரச்சனை, நிறைய ஐடியா இருக்கு, எதையும் உருப்படியா எக்ஸிக்யூட் பண்றதில்ல’
‘கேளுங்க. காலத்துகள் குறுநாவல் எழுதிட்டிருக்கார், அதுல வர கனவு மாதிரியே நிஜத்துலயும் அவருக்கு ஒரு கனவு வருது, இப்ப நான் சொன்ன அதே விஷயம் தான். இதை வெச்சு அவருக்கு ஒரு ஐடியா கிடைக்குது, போர்ஹெஸ பாத்திரமா வெச்சு குறுங்கதை எழுதிட்டு தூங்கப் போறார். அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் அந்தக் கதையை ப்ரைஸ் பண்றாங்க. தூங்கி எழுந்த காலத்துகள், அந்தக் கனவை தன கதைல சேர்க்கிறார். அன்னிக்கு நைட்டும் அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் வராங்க. கதைல வர காலத்துகளுக்கு கனவு வருதா இல்லை கதையை எழுதற காலத்துகளுக்கா, எது நிஜ கனவு எது கனவுல வர கனவுன்னு புரியாத அளவுக்கு கதை ரிகர்ஸிவ் லூப்ல சுத்திட்டே இருக்குது’
‘ஹாரிபிள். இப்படி கன்றாவியா கனவு கண்டே உன் லிடிரரி லைப் முடியப்போகுது’
‘லைப், வாட் இஸ் இட் பட் எ ட்ரீம்’
‘உனக்கு ட்ரீம்யா,  எனக்கும் போர்ஹெஸுக்கும் நீ பண்றதெல்லாம் நைட்மேர்’

அன்பில் – கமலதேவி சிறுகதை

தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டதும் கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தி,சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார்.சற்று மூச்சுவாங்கியது. அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது.

இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா என்று தோன்றியது.இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழே வந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்த வயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரிசெய்து திரும்பினார்.

வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம்  நம்பர்ஒன் டோல்கேட் என்று அவர்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும். இதோ வந்துட்டோம்மா என்று மனசுக்குள் நினைக்காமலா இருப்பார்கள் என்று நினைத்தபடி மேற்குபக்கம் திரும்பி தெருவைப்பார்த்தார்.

காலை ஔியில் வீட்டுகேட்டிற்கு நேராக விரிந்த பாதையின் முடிவில் சங்கரன் நாய்கள் சூழ நின்றிருப்பது தெரிந்தது. அதைக்கண்டதும் சுந்தரவள்ளியம்மா  சங்கரனிடம் இன்று சொல்லிவிடவேண்டும் என்று தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்.

சருகுகளை அள்ளி மூலையில் குவித்தபடி சங்கரன் கேட்திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவர் வெளியே நாய்களுக்கு ரொட்டிகள் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நாய்களின் பவ்பவ்வ் என்ற குழைந்து தாழ்ந்த குரலால் தெரிந்தது. அவர் உள்ளேவந்து செருப்பை சுழற்றிக்கொண்டிருக்கையில் , “நில்லுங்கய்யா,”என்ற சுந்தரவள்ளியம்மா விளக்குமாரை கீழே போட்டுவிட்டு சங்கரன் அருகில் வந்தார்.

சங்கரன், “ஈரமா இருக்குல்ல மெதுவா வாங்கம்மா.சமயபுரத்துக்கு நடக்கற பொம்பளையாளுக என்னா வேகங்கறீங்க.. நம்மளால போட்டி போட முடியாதும்மா.காலையில இருந்து கும்பல் கும்பலா எத்தனை ஆட்கள்,”என்றார்.இந்தமனிதனிடம் எப்படி வீட்டைக்காலி பண்ண சொல்வது என்று சுந்தரவள்ளியம்மாவிற்கு மனதிற்குள் ஓடியது.

“ஆமாங்க.இனிமே அம்மாவுக்கு பூபோடுவாங்க. இப்படித்தான் வருவாங்க.உங்களுக்கு புதுசுல்ல…அப்பறம் கொஞ்சநாளாவே சொல்லனுன்னு இருந்தேன்….”என்றபடி சேலைமுந்தானையால் முகத்தைத் துடைத்தார்.

“என்னம்மா…”

“வீட்டக்காலி பண்ணமுடியுங்களா?”

“ஏம்மா தீடீர்ன்னு இப்படி சொல்றீங்களே…”என்று கண்களை விரித்துப் பார்த்தார்.

அவரின் கண்களைப்பார்க்காமல் அவருக்குப் பின்னாலிருந்த புங்கைக்கன்றைப்பார்த்தபடி“இல்ல…மூணுமாசம் அவகாசம் எடுத்துக்கங்க..”என்றார்.

“நீங்களும் ரிடையர்டு கப்பில்ஸ் தானே..திருச்சிக்கு வெளிய அமைதியா இந்த வீட்டப்பிடிக்க நாங்க பட்ட சிரமம் உங்களுக்கே தெரியுங்களே!”

அவரிடம் என்ன சொல்வது அவர் என்று தயங்கிக்கொண்டிக்கையில் சுந்தரவள்ளியம்மாவின் துணைவர் மேலிருந்து இறங்கி படிகளில் நின்றபடி, “குட் மார்னிங் சார்,”என்றார்.

“எனக்கு குட்மார்னிங் இல்லையே சார்,”

பத்மநாபன்,“வீடு காலிபண்றதுபத்தி பேசறீங்களா?”என்று உடனே நேரடியாகக் கேட்டார்.

“ஆமா…என்ன திடீர்ன்னு….”

“சார்..உங்கக்கிட்ட மறைக்க ஒன்னுமில்ல.நீங்க இப்படி வெளிய போகவரப்ப…வீட்டுக்கு முன்னாடி நாய்களுக்கு தீனி வைக்கறதால நாய்க இங்கயே சுத்தி வருது.நெறய பேர் கம்ப்லெய்ண்ட் பண்றாங்க.சின்ன பிள்ளங்க பயப்படுதுக,”

“இதுவரைக்கும் ஒருநாயும் ஒன்னும் பண்ணலயேங்க..”

“சார்…உங்களுக்கே தெரியும்.நாய் எப்ப என்ன பண்ணுன்னு.எதாவதுன்னா நீங்கதான் ஹவுஸ்ஓனர்.. பதில் சொல்லனுன்னு மூணாவதுவீட்டு எஸ்.ஐ வேகமா சொல்றார்..”

மூவரும் எதுவும் பேசாமல் கொஞ்சம் நேரம் நின்றார்கள்.பத்மநாபன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தபடி,“நாய்க சத்தம் நிம்மதியா இருக்க விடுதில்ல சார்…”என்றபடி மோட்டாரை தட்டிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட சென்றார்.

சுந்தரவள்ளியம்மா மெதுவாக படிகளில் ஏறத்தொடங்கினார்.

பத்மநாபன் ஒவ்வொரு செடியாக மரமாக தொட்டபடி தண்ணீர் விடத்தொடங்கினார். சங்கரன் உள்ளே சென்றதும்,தனம்மா வெளியே வந்து, “ வீடுகாலிபண்ண சொன்னீங்களாமே,”என்றார்.

“எங்களுக்கும் சங்கடம் தான். அவர இந்த நாய்களுக்கு தீனி போடற பழக்கத்த விட சொல்லுங்க.அதான் பிரச்சனையே..”

“இதுக்காக வீடு மாறிக்கிட்டே இருக்கோம்…சொன்னா கேட்டாதானே..இந்த முடியாத ஒடம்ப வச்சிகிட்டு வீடு மாத்தறது ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க..சொன்னா கேட்காத ஜென்மம்..”என்று படிகளில் அமர்ந்தார்.

அடுத்து இரண்டு நாட்களில் வீட்டின் முன்பு நாய்களின் சத்தம் கேட்கவில்லை. மீண்டும் அந்தமுடக்கில் அவர் நாய்கள் சூழ நின்றுகொண்டிருந்தார். அன்று அவர் மனைவி வீட்டிலிருந்த பிரட்,பிஸ்கெட் பைகளை எடுத்து வெளியில் வீசி கதவை மூடினார்.

அன்று இரவில் நாய்களின் சத்தம் குழைவான குரலைக் கேட்டு எழுந்த சுந்தரவள்ளியம்மா கழிவறைக்கு சென்றபின் வெளியில் எட்டிப்பார்த்தார். சங்கரன் தெருவிளக்கின் அடியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நாய்களுக்கு ரொட்டிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்நாய் அனேக இடங்களில் கடிவாங்கிய அடையாளம் தெரிந்தது.அது ஒருகாலைத்தூக்கி அவரின் தொடைமேல் வைத்து அழைத்தது.அவர் திரும்பி அதற்கு ரொட்டியை நீட்டினார்.அவர் சிரித்தபடி அதன் தலையில் தட்டினார். ஒருவாலறுந்த சிறுவன் முன்பின் தெரியாமல் சற்றுதூரம் ஓடியும் ,அருகில் வந்தும் காலை முகர்ந்தும் அழிச்சியாட்டியம் செய்து கொண்டிருந்தான்.அவர் அதன் கழுத்தைப்பிடித்து தூக்கிப்பார்த்து சிரித்தார்.அது உடலை வளைத்து நான்குகால்களையும் வாலையும் உள்ளிழுத்துக்கொள்வது, சட்டென்று மகளின் ஸ்கேனில் பார்த்த குழந்தையை போலத் தெரியவும் சுந்தரவள்ளியம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. ஜன்னலை சாத்திவிட்டு சுவரில் சாய்ந்து நின்றார்.

காலையில் எழுந்ததும் பத்மநாபனிடம், “ஏங்க..இது பாவமில்லயா? அவரு என்ன தப்புப் பண்ணிட்டார்ன்னு வீட்டக்காலி பண்ணனும்.நல்ல மனுஷங்க..”என்றார்.

“பாவமும் இல்ல…மண்ணாங்கட்டியுமில்ல. அந்த எஸ்.ஐ எப்படி மிரட்றாப்ல பேசறார் தெரியுமா?”

“நாம என்னத்துக்கு அவருக்கு பயப்படனும்..அவருக்கு நாய்ன்னா ஆகாதோ …என்னவோ..”என்று எழுந்து கீழே வந்தார்.

கோலமிட்டப்பின் மோட்டார் சாவியைத்தேடு கையில் சுற்றுசுவரின் சிறுபொந்தில் ஒரு ரொட்டிப்பை தட்டுப்பட்டது. சுந்தரவள்ளியம்மா திரும்பி மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று உள்ளே தள்ளி வைத்தார். நிமிரும் போது மீட்டர் பெட்டி மேல் ஒரு ரொட்டிப்பை கண்ணில்பட்டது. அதன் அருகில் செல்லும் போது பத்மநாபன் மாடியிலிருந்து இறங்கும் ஓசைக்கேட்கவும் திரும்பி, தண்ணீர் குழாயின் அருகில் சென்றார்.

இதென்ன கூத்து என்று அவருக்கு எரிச்சலாக வந்தது.உள்ளுக்குள் ஒரு பயம்.இன்னும் எங்கெங்கு ரொட்டிப்பைகள் கிடக்குமோ என்று.

அதை இவரிடம் சொல்லி விடலாம் என்று தோன்றும் கணம் ஒரு மெல்லிய பூ இறகு ஒன்று சுந்தரவள்ளியம்மாவின் மனதை மறைத்தது. அடுத்துவந்த நாட்களில் இரவில் நாய்களின் குறைப்புகள் அதிகமாக கேட்டு தூக்கத்தை கெடுத்தது. சிலஆட்கள் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுப்போனார்கள்.

சங்கரன் வீட்டிற்குள் சத்தம் கேட்டுக்கொண்டிப்பதை மேல்மாடியில் இருக்கும் இவர்கள் கேட்டபடியிருந்தார்கள்.

மஞ்சு,“வாடகைக்கு விடறப்பவே யோசிச்சிருக்கனும் மாமா..”என்றாள்.

“வயசானவங்க என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு விட்டாச்சு,”

“நான் சொல்லியிருந்த என்ஞ்ஜினியர வேணுன்னா இங்க குடிவைக்கலாம் மாமா..நமக்கும் நல்லது.தோட்டத்து மரங்கள வெட்டிட்டு சீக்கிரம் ஆகவேண்டியத பாத்தா நல்லதுன்னு அவரும் சொல்றார்.வீட்டக்கட்டி வாடகைக்கு விட்டா..வீடுகட்ற வேலையும் முடியும் .வருமானமும் வந்தமாதிரி இருக்கும்,”

“அதுக்குள்ள என்னம்மா? இந்தவீடுகட்டி ஐஞ்சுவருஷம்தான் ஆவுது.மரங்க செடிங்க இருந்தா நல்லதுதானம்மா.அந்த சின்னஎடத்தையும் அடைக்கணுமா ?”

கீழே தனம்மாவின் குரல் வேகமாகக் கேட்டது.

“தினமும் ஓயாம எதாச்சும் சலசலன்னு… அவங்க நெனக்கறபடி இருக்கனுன்னா அவங்க வீட்ல இருக்கனுங்கத்த, இதெல்லாம் தேவையா..சீக்கிரம் வெரட்டனும். நாசூக்கா அவங்களே காலிபண்றது நல்லது”

“அந்தம்மாவுக்கு சுத்தமா நாய்கள கண்டா ஆகாது..இவரு இப்படி.என்ன மஞ்சு பண்றது..சிலபேருக்கு சொன்னாதான் புரியுது”என்றபடி சுந்தரவள்ளியம்மா பெருமூச்சுவிட்டார்.

பத்மநாபன்,“இங்கபாரு சுந்தரம்..தனம்மாக்கிட்ட கண்டிப்பா சொல்லிடு.இவரு சரிப்பட்டு வரமாட்டார்.நமக்கு தொல்ல..இதென்ன மனுசன்.அந்த மாமரத்து கொப்புக்கு நடுவுல பிரட் பாக்கெட் இருக்கு.ஒரே எறும்பு வேற…அதுகளுக்கும் ஒருபிரட்டை வச்சிட்டு போறார்,”என்றார்.

சுந்தரவள்ளியம்மா பேசவில்லை.

நாளைக்கு காலி பண்றோம் என்று சங்கரன் சொல்லும் நேரம் இருவருக்கும் அவர் முகத்தைப்பார்க்க சங்கடமாக இருந்தது.

அன்றும் பின்னிரவில் நாய்களின் குரல் சுந்தரவள்ளியம்மாவை எழுப்பியது.படுக்கையிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்தார்.அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வீடுகட்டி வந்த நாட்கள் நினைவில் எழுந்தன.மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகி அனுப்பி “அப்பாடா,” என்று நிம்மதியாய் அன்பிலில் அமர்ந்த நாட்கள் அவை. இவர்கள் இருவரும் மீண்டும் பேசிக்கொள்ளத் தொடங்கிய நாட்கள். பத்மநாபன் பேருந்திலிருந்து இறங்கி வந்து வாசலில் அமரும் அந்திப்பொழுதில் நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அன்றுகாலையில் வேலையிலிருந்து வந்தவர் வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கோலமிடும் சுந்தரவள்ளியிடம் பேசத்தொடங்கினார்.

“இத்தன வருஷமா இந்தப்பேச்ச மறந்திருதீங்களே..”

“மறக்கல சுந்தரம்.என்னமோ ஒரு அலைச்சல் மனசில. நாங்கூட வேல டென்சன்னு நெனச்சிருந்தேன். இப்பவும் அதே வேல தான்.ஆனா பாரு…பாரமா தெரியல. மனசு பாரத்தை எல்லாத்தையும் ஏத்தி ,வேலமேல வைச்சு இப்ப எறக்கியாச்சு,”என்று சிரித்தார்.

சுந்தரவள்ளி தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோழிகளை கூண்டுகளில் இருந்து திறந்துவிடவும் ,பத்மநாபன் வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டு தீனிகளை எடுத்து கலன்களில் இட்டார்.

சுந்தரவள்ளி சிரித்தபடி, “போதும் வாங்க..நாமளும் டீ குடிக்கலாம்.,”என்றார்.

“அந்த ப்ரவுன் கோழியும் அதோட குலவான்களும் நல்லா இருக்குல்ல..”

சுந்தரவள்ளி,“ம்..இதெல்லாம் பாப்பீங்களா! எங்கம்மா குடுத்துவிட்ட கோழி சேவன்னு தானே கண்டுக்காம இருந்தீங்க,”என்று புருவதை சுளித்தார்.

“ஆமா…யாருபுள்ள நீ. நீயும் ஒந்நெனப்பும்.அந்தம்மா செத்து பத்து வருசமாவுது. நம்ம கல்யாணத்து சமயத்துல கொடுத்த ரெண்டுஉருப்படிதானே? இப்ப ஐம்பது நூறா நிக்கிதுங்க…இதுகள பாக்கையில சந்தோசமா இருக்கும்.பஞ்சுருண்டையாட்டம்.. இக்குணூண்டு கண்.. துள்ளியூண்டு காலு..யாருக்குதான் பிடிக்காது..எதையும் சொல்லிக்கறதில்ல”

வாழ்வில் இப்படி சாவகாசமாக நிமிர்ந்து சாய்ந்தமர்வதற்குள், பாப்பாவின் பிள்ளைப்பேறு, மருமகளின் பிள்ளைப்பேறு என்று மீண்டும் திருச்சிக்கும், பெங்களூருக்கும் ஓடிக் களைத்த நாட்களில் அவரும் ஓய்வுபெற்று வீட்டில் அமர்ந்தார்.

தன்ராஜ்,“சும்மா இங்க இருக்கறதுக்கு திருச்சியில் வீட்டக் கட்டி அங்க இருங்க. நான் வெளிநாடு போயி நாலுகாசு பாத்துட்டு வர்றேன். இந்த சனியன்கள தலமுழுகுங்க. நாத்தம் தாங்கலன்னு எத்தனமட்டம் சொன்னாலும் கேக்கறதில்ல. கோழிப்பண்ண உங்கக்கிட்ட தோத்துப்போவும். யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரமுடியுதா..”என்றான். அவன் கால்களுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு குடுகுடு வென்று ஓடி தாயுடன் சேர்ந்துகொண்டது.

“இந்தவீட்டுக்கென்னடா…இதுங்கபாட்டுக்கு வெளியிலதானே திரியுதுங்க..முட்டைய முழுங்கையில நாத்தம் தெரியலயா? ஏன் உங்கூட வாரவுங்க திங்கமாட்டாங்களா?”

“நான் பேசறதுதான் பேச்சுன்னு பேசக்கூடாது. காலத்துக்கு தக்கன மாறலன்னா என்ன மனுஷங்க..”

“நீ மாறிக்க..நாங்கமாறி என்ன பண்ணப்போறாம். மனகலக்கந்தான் மிச்சமாவும்.ஒரு ஈ எறும்பு ஆகாத பொழப்பு..”

“சும்மா வெறும்பேச்சு வேணாம்.ரெண்டுபேரும் சுயநலமாக இருக்காதீங்க…”

“….!” பத்மநாபன் கண்களால் சுந்தரவள்ளியை பேசவேண்டாமென்றார்.

பத்துநாளைக்குள் அன்பிலில் அனைத்தையும் முடித்து திருச்சிக்கு மாற சொல்லி தன்ராஜ் ஆணையிட்டுவிட்டு சென்றான். என்ன தான் அவசரம்..மனுசர் என்ன ஒன்னுமில்லாத கல்லா என்று மனசுதாங்காமல் முதலில் கோழிகளை விற்க ஆட்களுக்கு சொல்லிவிட்டார்கள்.

வண்டியிலேற்றி கொண்டு சென்றபின் உதிர்ந்து கிடந்த வெள்ளை, அழுக்குவெள்ளை, பழுப்பு, கருப்பு ,காப்பி வண்ண சிறுஇறகுகள் மேலும் குறு இறகுகளை குமித்துவிட்டு அமர்ந்த சுந்தர வள்ளியிடம் பணத்தைக்கொடுத்த பத்மநாபன், “என்னைக்கிருந்தாலும் காசுக்குக் கொடுக்கறதுதானே..விடு,”என்றார்.

ஆமாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் நெடுநாட்கள் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்ததை நினைத்தபடி சுந்தரவள்ளியம்மா எழுந்து ஜன்னல் பக்கம் சென்றார்.

சங்கரன் சிமெண்ட் பாலக்கட்டையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் நாய்கள் அமைதியாகப் படுத்திருந்தன.ஒன்று எழுந்து நடந்தது.பெண்நாய் அவரின் கால் செருப்பில் முகம் வைத்துப்படுத்திருந்தது. குனிந்து அதைப் பார்த்தபடியிருந்தார். சுந்தரவள்ளியம்மா திரும்பி கண்களை துடைத்தபடி படுக்கையில் படுத்து மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சங்கரன் வீட்டைகாலி செய்து சென்று இரண்டு தினங்களாக நாய்கள் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன. கேட்டிற்கு அருகில் அச்சத்தோடு வருவதும் போவதுமாக பரிதவித்தன. இரவிலும் நாய்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

நாட்கள் மசமசப்பாக கடந்துசென்றன. நாய்களின் கூட்டம் குறைந்தது அல்லது வெவவேறு பொழுதுகளில் வந்துசென்றன.

வீட்டின் முன் வந்து குறைத்த இரண்டுமூன்று நாய்களை பத்மநாபன் விரட்டினார். சுந்தரவள்ளியம்மாள் தெருவைப் பார்ப்பதும்,ஜன்னல் அருகே நிற்பதுமாக பத்துநாட்கள் கடந்தன.

அன்று காலையில் கோலமிடுகையில் மிக அருகில் வந்த அந்த தளர்ந்த நாயை கண்டு சுந்தரவள்ளியம்மா நெஞ்சில் கைவைத்து எழுந்தார். பின்னால் ஒருசிறுவன்.ஒட்டிய வயிறு.மின்னும் கண்களுடன் வாலையாட்டிக்கொண்டிருந்தான்.

“வீட்ல குடிவச்சதுக்கு பாவி…படுபாவி என்னய இந்த இம்சைக்கு கொண்டுவந்து விட்டுட்டானே,”என்றபடி சுந்தரவள்ளியம்மா கதவை பிடித்துக்கொண்டு நின்றார். அவரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்த பத்மநாபன்,“என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்..சுந்தரம் .அன்பிலுக்கு போனதும் முதல்ல கோழி சேவலும் வாங்கனும்.அதுங்க காவலுக்கு இங்கருந்து ஒருநாய்க்குட்டிய தூக்கிட்டு போகனும்”என்றார்.

அந்த அம்மா அதை நெஞ்சோடு சேர்த்தபடி தலையாட்டினார். அவர் அந்தம்மாவின் தோள்களில் கைவைத்து, கண்களைத் தூக்கிக்காட்டி நாய்கள் பக்கம் சுந்தரவள்ளியம்மாவை திருப்பினார்.

வண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா

உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட தென்னை ஓலை கீழே சரிந்து கிடந்தது , உதிரி பூக்கள் வீட்டு முன்ஓடையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது , ஒருகால் செருப்பு ஒன்றும் அதில் புதைந்திருந்தது, முன்மங்களாவில் இருந்து அடுக்காளை வரை கதவு திறந்து கிடந்தது, துஷ்டி விசாரிக்க வந்த பெண்கள் ஒரு கையால் வாயை மெதுவாக பொத்தியும் திறந்தும் குசுகுசுவென கதை அடித்து கொண்டிருந்தனர், காந்தி வெளியே நின்று “யம்மோவ் வெளுப்பு துணி இருந்தா போடுங்க” என்று கத்தினாள் , தாத்தா சம்சாரம் மாடவிளக்கு அருகே சுருண்டு படுத்திருந்தாள், மருமகள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் சென்று ஆங்காங்கே சுருட்டி கிடந்த துணிகளை பொருக்கி வந்தனர், மெட்ராஸ் காரி வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் பிரட்டிக்கொண்டிருந்தாள்.

மூத்தவள் பெரிய வேஷ்டியை வாசல் முன் விரித்து மொத்தமாய் துணியை போட்டதும் காந்தி உச்சஸ்தாயில் கத்தினாள், “இங்கேருக்கா ஒழுங்கா எண்ணி போடு, இல்லே துணிய காணும் மணிய காணும்னு எங்க மேல பழிய போட்ருவீங்க, ஒவ்வொன்னா போட்டுக்க”, இவள் கூறியதை கேட்டு மூத்தவள் துணிகளை போட இளையவள் சின்ன காகிதத்தில் துணிகளின் எண்ணிக்கையையும் வகையையும் குறித்து கொண்டாள், பெகளம் முடிந்ததும் மெட்ராஸ் காரி மெதுவாய் எழுந்து வந்தாள், காந்தியை நோக்கி “சரிம்மா உள்ள வந்து டீ குடிச்சிட்டு போமா” என்றாள், மூத்தவளும் இளையவளும் திருதிருவென விழித்தனர், பின்னே ஒரு வண்ணாத்தி வெள்ளாளன் வீட்டுக்குள் செல்லலாமா, “ஏன் கா உன் வீட்டு தீட்டு எனக்கும் புடிக்கத்துக்கா” என்று கோபப்பட்டவள் , “துணி ரெண்டு நாள் கழிச்சு கிடைக்கும் ” என்றபடி நடையைக்கட்டினாள், பாவம் மெட்ராஸ் காரி ஊருக்கு ஒரு கட்டுப்பாடு, சம்பிரதாயம் உண்டு என்று அறியாதவள், இதுவும் ஊருக்கேற்றபடி மாறிக்கொள்ளும்.

காந்தி முப்பது, முப்பத்தைந்து வயதை ஒட்டிய பெண்,கருமையான ஒடிசலான தேகம், ஒட்டிய வயிறு, எப்போதும் வெளிறிய பாவாடையும் சட்டையும் அணிவாள், கூந்தலை பின்னி சட்டை நிறத்துக்கு ஏற்றபடி ரிப்பன் கட்டிக்கொள்வாள், இவளுக்கு இரண்டு அக்கா மூத்தவள் ரெத்தினம், இளையவள் முத்து, இந்திரா நகர் இறக்கத்தில் வண்ணான்குடியில் இவர்கள் குடியிருந்தனர், வீட்டுமுன் அடையாளமாய் பெரிய கரியநிற மண்பானை புகை கக்கிய படி இருக்கும்.

மூட்டை மூட்டையாய் துணிகளை கட்டி பழையாறு வண்ணான்துறைக்கு பொழுது விடியும் முன்னே சிறு கூட்டம் செல்லும், ஆற்றங்கரை ஓரம் பெரிது பெரிதாய் கருங்கற்கள் நிரப்பி துவைப்பதற்கு வசமாய் எழுப்பிருந்தனர், கரையிறங்கி நுழையும் பாதையில் தென்னந்தோப்பு இருந்தது வெவ்வேறு, நிறங்களில் துணிகள் நீளமான கயிறுகளில் தென்னையில் கட்டப்பட்டு காற்றின் வேகத்தில் அசைந்தாடும், துணி அலச, குத்தி துவைக்க, அடித்து வெளுக்க என தனி ஆள் உண்டு, தூக்குவாளியில் கஞ்சியும் துவையலும் கட்டிக்கொண்டு அத்தனையும் துவைத்து காயப்போட்டு, காய்ந்ததை எடுத்து மடிக்கும் போது கருக்கள் நேரமாயிடும், இடையிடையே பாட்டு கச்சேரியும் உண்டு.

ரெத்தினத்திற்கும் மற்ற பெண்களை போல ஜோராக கல்யாணம் நடந்தது, மாப்பிள்ளை பாண்டிக்காரன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒருநாள் வீட்டு வாசல் முன் வள்ளியூர்காரி வந்து ஒப்பாரி வைத்தாள், சேதி அப்போதுதான் இவளுக்கு உரைத்தது, வந்தது முதல் சம்சாரம், ஆங்காரம் எடுத்த ரெத்தினம் அவனை வாரியலை எடுத்து அடித்தே விரட்டினாளாம், இந்த சம்பவம் நடந்தபின் மூன்று பெண்கள் தனியாய் வசித்தாலும் எள்ளளவு கூட ஆண்கள் நுழைய முடியாது, ரெத்தினத்தின் வைராக்யம் தான் என்னவோ தங்கச்சிகள் கூட கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.

இப்போதைக்கு வெளுப்புக்கு ஆட்கள் குறைவு, ஒன்றிரண்டு குடும்பங்களே இன்றும் இதை தொடர்ந்து செய்துவருகின்றனர், வண்ணாக்குடியில் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், அக்கா தங்கச்சிமாரின் பாட்டா வழி உறவுமுறை இசக்கிமுத்துவும் நாகராஜனும் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர், வண்ணான்குடியில் பள்ளி சென்ற முதல் தலைமுறை இருவரும் , இதுவும் காமராஜர் காலத்தில் வீட்டுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு இழுத்து வந்து படிக்க வைத்ததால் நடந்தது, படிப்பில் கெட்டிக்காரனாக இல்லாமல் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் அரசுவேலையும் கிடைத்தது, அக்கம்பக்கம் வசித்த பலர் இதை பார்த்து பொசுங்க ஆரம்பித்தனர், டீக்கடையிலும் சலூனிலும் இவர்கள் காதுப்படவே பொரும ஆரம்பித்து விட்டனர், அதிலும் இசக்கிமுத்து சைக்கிள் ஓட்டி போகும் போது தாங்க முடியாத சூடு சிலர் பின்னால் ஏறி மூலக்கடுப்பு வந்தவர்களும் உண்டு.

வண்ணான்குடியில் ஆட்கள் வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர், இன்று ஊர்காரர்களுக்கு துணி வெளுக்க காந்தி குடும்பம் மட்டுமே, வாரத்திற்கு இரண்டு மூன்று நாளைக்கு ஆற்றங்கரை செல்லுமளவுக்கே தொழில் இருந்தது ,மற்ற நாள் இவர்கள் தேவையில்லை, துவைப்பு இயந்திரமும் வந்தாச்சு , ஒருவேளை துஷ்டி விழுந்தால் இவர்கள் இல்லாமல் காரியம் நடக்குமோ, வீட்டில் இழவு விழுந்தால் நாவிதனை தேடுவதுதான் பெரிய வேலை, பாடை கட்டணும், கதம்பம் அடுக்கி கடைசியில் ஆத்துமண்ணை எழுப்பி குழி போட அவனை விட்டால் ஆள் இல்லை, இப்போதெல்லாம் ஊர்குடிமகன் என்று நாலைந்து ஊருக்கு ஒரு நாவிதன், அவனும் வேறு தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டான், ஆனால் துஷ்டி வீட்டில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானம் அல்லவோ,,எரியூட்டி வந்த அடுத்த நாள் காடாற்று, இறந்து எரியூட்டிய நாள் வரைக்கும் குவிந்த அழுக்கு துணிகளை வீட்டில் துவைக்க கூடாது, வண்ணான் மட்டுமே வெளுக்க வேண்டும். காந்தி வீட்டில் அடுப்பெரிவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

நெடுநாளாய் ஊர்க்கூட்டம் கூடவேண்டும் என்று இசக்கிமுத்துக்கு ஒரு எண்ணம் உண்டு, ஊரை சுற்றி எல்லா தெருக்களிலும் கோயில் உண்டு, ஆனால் இங்கே ஒரு சாமியும் இல்லை, இவர்கள் தெய்வம் மாடனும் ஆத்தங்கரைக்கு செல்லும் பாதையில் தான் கோயில் கொண்டுள்ளார், கோயில் என்று கூறமுடியாது பழுத்த ஆலமூடின் முன் எழுப்பப்பட்ட மண் பீடம் மட்டுமே, வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வழிபடுவதை தவிர, ஆண்டுக்கு ஒருமுறை வரி பிரித்து சித்திரை கடைசி வெள்ளி சேவல் பலிகொண்டு ஊர்க்கொடை நடத்துவது வழக்கம், இசக்கிமுத்துக்கு தோன்றியது மாடனை இங்கே மண் பிடித்து எழுப்பி வழிபடுவது அல்ல, வெள்ளாளத்தெரு, ஆசாரிமார் தெரு, சாலியர் தெரு, செட்டித்தெரு, சன்னதி தெரு, ரதவீதியில் வழிபடுவது போல பிள்ளையார் கோயில், கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மொத்த ஊருக்கும் அன்னதானம் போடவேண்டும் . இந்த எண்ணத்தை இவர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும், வீட்டுக்கு வரி பிரிக்க வேண்டும், எம்.எல்.ஏ, கவுன்சிலர் இவர்களிடம் பெரிய நன்கொடையும் , கடைத்தெரு வியாபாரிகளிடமும் கிடைக்கும் நன்கொடையை வசூலித்து கொள்ள வேண்டும், இது சாத்தியமா என்பது அவனுக்கு தெரியாது, ஆனால் இதை எப்படியாவது தன் தலைமுறையில் செய்து காட்டவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு இருந்தது.

இதைப்பற்றி நாகராஜனிடமும் பேச்சுக்கொடுத்தான், நாகராஜன் அப்பிராணி, தாசில்தார் அலுவலகத்தில் கணக்கர் வேலை, வேலைக்கேற்ற மரியாதையை எதிர்பார்த்தான், அவனுக்கு அடுத்தபடி உதவியாளர் வேலை பார்க்கும் முத்துசாமிக்கு கிடைக்கும் கால்வாசி மரியாதை கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம், ஏன் நாகராஜனின் பெயர் கூட முதுகுக்கு பின்னால் வெளுப்புக்காரன்தான், உள்ளூர பொருமி என்ன லாபம், எதிர்த்து கேட்க திராணி இல்லை, எத்தனை நாள் இதை எண்ணி வருந்திருப்பான், தூக்கமின்றி தவித்திருப்பான். இசக்கிமுத்துவின் யோசனை சரி என்றே பட நாகராஜனும் ஒத்துக்கொண்டான். இசக்கிமுத்துவும் சாதாரண ஆள் இல்லை, புலியை பூனையாக்குவான், எலியை யானையாக்குவான், இதனாலே ஆட்சியர் அலுவலகத்தில் ஊரில் என்ன வேலை நடக்க வேண்டுமென்றாலும் பெரிய தலைகள் இவன் வீட்டிற்கு நேரில் வந்து பேசி போவதுண்டு, காலம் மாறித்தானே ஆக வேண்டும், நம் பிள்ளைகளும் தலை குட்டப்பட்டே வாழ வேண்டுமா, பல சிந்தனைகள், இறுதியாக இசக்கிமுத்துக்கு காரியம் முதல்வகையில் கைகூடியது, வண்ணான்குடிக்கு புது பெயரும் முடிவு பண்ண வேண்டும்

இசக்கிமுத்துக்கு தெரியும் வண்ணான்குடியில் நாகராஜனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம், ஆள் அப்பிராணி எனவே இல்லை என்று சொல்லாது கேட்போருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவன், இவன் சொன்னாலே காரியம் நடக்கும், ஊர்கூட்டம் நாகராஜன் வீட்டிலே நடக்க விருப்பப்பட்டான், நாகராஜனும் சரி என்று சொல்ல கூட்டம் கூடும் நாள் முடிவு செய்யப்பட்டது. ஊர்மக்கள் நாகராஜன் வீட்டு முற்றத்தில் கூடினர், இசக்கிமுத்து இவனிடம் கூறிய எல்லாவற்றையும் கூட்டத்தில் எடுத்துரைத்தான், ஆதரவும் ஒரு சேர எதிர்ப்பும் உண்டானது, காந்திக்கு கோயில் கட்டுவது கூட பெரிதாய் தோன்றவில்லை ஆனால் தெரு பெயரை மாற்றினால் எங்கே தன் தொழில் கெடுமோ என்ற அச்சம் மனதில் உருவானது.

கூட்டத்தில் எல்லோரும் அமைதியாய் நிற்க, காந்தி குரல் எழுப்பினாள் “அண்ணே, எல்லாம் சரி கோயிலு கட்டுவோம், சேந்து சாமி கும்பிடுவோம்,தெருக்கு எதுக்கு புது பேரு, எங்க மூணு பேருக்கு இருக்க ஒரே பொழப்பு துணி வெளுக்கதுதான், வண்ணான்குடி பேர மாத்தினா வெளுக்க வாரவன் எங்க போவான், இப்போவே ஆடிக்கும் அமாவாசைக்கும் தான் வேல, இதுல எதாவது இடஞ்சல் வந்தா, நாங்க நாண்டுக்கிட்டுதான் நிக்கணும்”, “இங்க பாரு பொம்பளைகளா, இது ஊரு ஒண்ணா எடுத்துருக்க முடிவு, இதுனால உங்களுக்கு ஒன்னும் இடஞ்சலு வராது, வருமானம் வரத்தான் செய்யும்,, வேல நடக்கும், ஆனா இனி எவனும் நம்மல வண்ணான்குடி, வண்ணான் லா கூப்பிட கூடாது” என்றதும், கூடியிருந்த மக்களுக்கு எதுவானாலும் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பது போல் நமக்கும் ஒரு கோயில் என்பதே பிரமிப்பை கொடுத்தது, அக்கா தங்கச்சிமாருக்கு மாத்திரம் மனம் சங்கடத்துடன் குழம்பி இருந்தது. ஊரே விளக்கை அணைத்து நிம்மதியாய் உறங்க, ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது

ஒருவழியாக அனைவரும் ஒருசேர கோயில் கட்டுவது என முடிவு செய்தனர், தெரு தொடக்கத்திலே கோயில் கட்ட இடம் தேர்வு செய்தனர், இசக்கிமுத்து முனிசிபாலிட்டியில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டான், எம்.எல்.ஏ வை அழைத்து அடிக்கல் நாட்டினர், வடலிவிளை தங்கப்பன் மேஸ்திரி கோயில் எழுப்ப, மைலாடி கணபதி ஸ்தபதி சிலை வடிக்க என எல்லாம் முடிவாயிச்சு, முதல் பெரும்தொகையை நாகராஜன் கொடுக்க இசக்கிமுத்து அறகுழு பொறுப்பை எடுத்து வேலையை முழுவீச்சில் செய்தான், எல்லாவற்றிக்கும் கணக்கு எழுதினான், கோயிலும் எழும்பியது.

சாமிக்கு பெயர் தேர்வு செய்வதுதான் பாக்கி இருக்கும் வேலை, ஊரே கூடி வடிவீஸ்வரம் ராமய்யரை பார்த்து பெயர் தேர்வு செய்ய கோரினர், பலபெயர்கள் விவாதித்து இறுதியாக சித்தி விநாயகர் என முடிவு செய்யப்பட்டது, ராமய்யர் தலைமையில் எம்.எல்.ஏ முன்னிலையில் அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடந்தது, இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது, இசக்கிமுத்துக்கும் நாகராஜனுக்கும் விழா முடிவில் எம்.எல்.ஏ சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

ஒரு வாரம் கழிந்து, இசக்கிமுத்து தெரிந்த பெயிண்டரை அழைத்து தெருமுகப்பில் ‘சித்தி விநாயகர் கோயில் தெரு’ என பெரிதாய் எழுத சொன்னான், அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் இதை ஆச்சர்யமாகவே கண்டனர், எது எப்படியோ இனி இது வண்ணான்குடி கிடையாது சித்திவிநாயகர் கோயில் தெரு என்பதில் நாகராஜனும் இசக்கிமுத்துவும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

வருடாபிஷேகமும், பன்னிரண்டு வருஷத்திற்கு முறைக்கொரு நடத்தும் கும்பாபிஷேகமும் இருமுறை செழிப்பாய் நடந்து முடிந்தது. சித்தி விநாயகர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி ஆனார். திருநீறில் நனைத்த கயிறை இக்கோயிலில் பூஜித்து கையில் கட்டிக்கொண்டால் வியாதி குணமாகுமாம், கோயிலை சுற்றியிருந்த ஓலை குடிசையும், ஓட்டு வீடும் காணாமல் போயாச்சு, மாடிவீடுதான் எங்கும், அலங்கார கற்கள் விதித்த வீதி, சாக்கடைகள் எல்லாம் சிமெண்டால் மேல் வாக்கில் மூடி கிடந்தது, தண்ணீர் தொட்டி புதிதாய் போன ஆண்டுதான் திறக்கப்பட்டது.

அந்திநேரம், பள்ளி விட்ட குழந்தைகள் தெருவில் சுதந்திரமாய் விளையாடிக்கொண்டிருந்தனர், பூணூல் சட்டைக்கு வெளியே தெரிய வெளுத்த குண்டு பையன் கண்களை பொத்திக்கொண்டு எண்களை எண்ண ஆரம்பிக்க, சிலுவை கழுத்தில் தொங்க சுருள் முடி பையனும், கருத்த சட்டை போடாத பையனும் ஒழிய இடம் தேடி தட்டழிந்தனர். இதனிடையே குழந்தைகள் இடையே சிரிப்பு சத்தம், ஒழுங்காய் வாராத நரைத்த தலையும், பாவாடை சட்டையும் அணிந்த ஒடுங்கிய ஒருத்தி தலையில் துணி மூட்டையை சுமந்து கொண்டு தெருவில் இருந்த ஒரே இருண்ட குடிசையில் நுழைந்தாள், குழந்தைகள் அவள் பின்னாலே ஓடி நளி அடித்து கொண்டிருந்தனர், குடிசையில் இருந்த கிழவி ஒருத்தி வெளியே வந்து குழந்தைகளை விரட்டினாள் ,”எட்டி காந்தி ஏண்டி இவ்ளோ நேரம், சீக்கிரம் வாளியை எடுத்துட்டு போய் டீ வாங்கிட்டு வா” என்று மூட்டையை சுமந்து வந்தவளை பார்த்து கூறினாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்த வயதான, தடித்த, முடி எல்லாம் வெண்பஞ்சாய் நிறைத்த ஒருவர் மனதுக்குள் நினைத்து கொண்டார் “இந்த சனியன்கள இங்கிருந்து விரட்டணும்” , மெதுவாய் நகர்ந்து கோயில் வெளியே இருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே “உம்மால தான் நல்லாருக்கேன் ஆண்டவா” என்று வேண்டிக்கொண்டார், இக்கோயிலை பார்க்கும் போதெல்லாம் வடக்கூரில் வாங்கிப்போட்ட தென்னத்தோப்பும் நியாபகம் வருவதுண்டு, கோயில் முன் வேண்டி நிற்கும் போதே, பின்னால் இருந்து மற்றொரு வயதானவர் “ஏலேய், இசக்கி முத்து வா போவோம்” என்றார். “இந்தா வந்துட்டே நாகராஜா” என்றபடி அவர் வர, இருவரும் அங்கிருந்து நடந்து முக்குதெரு ஆறுமுகம் வீட்டுக்குள் நுழைந்தனர்.