சிவசுப்ரமணியம் காமாட்சி

நிம்மதி – கா.சிவா சிறுகதை

“ராமகிருஷ்ணன் வீடு இங்க பக்கத்தில்தானே இருக்கிறது ” என என் கணவர் கேட்டவுடனேயே மனதில் திடுக்கென்றது. அவன் திருமணத்திற்கு முன் என்னைக் காதலித்தவன். பேச்சுவாக்கில் சொன்னதை மறந்திருப்பாரென நினைத்தேன். பெயரைக்கூட இந்த அளவிற்கு ஞாபகம் வைத்திருந்தது அச்சத்தை உண்டாக்கியது. “இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவரையும் பார்த்துவிட்டு போய்விடுவோம் ” என அவர் கூறியபோது முகத்தைப் பார்த்தேன். அதில் வஞ்சம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் , ஆண்களின் மனம் இம்மாதிரி விஷயத்தில் எப்படிச் செயல்படுமென யாரால் கணிக்கவியலும்.

திருமணம் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிறந்து ஆறு மாதமான பையனுடன் டவர் பார்க்கில் அமர்ந்து அந்தியில் மரத்தையடைந்த பறவைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் கேட்டார், “காதலென்றால் என்னவென்று தெரியுமா ”
“எனக்குத் தெரியாது”
“நல்லவேளை , நிம்மதியா இருக்க”
என்றவர் சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு ” எல்லோரும் காதல்னா மகிழ்ச்சி, இன்பம்னு சொல்றாங்க, இதைவிட அதில் வேதனைதான் அதிகம்னு யாருமே சொல்றதில்லை, ஏன்னா, உணராதவங்களால அதைப் புரிந்துகொள்ள முடியாது” எனக் கூறி சூரியன் மறைந்து சாம்பல் பூத்த தனல்போலத் தெரிந்த வானத்தை அமைதியாக சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவராகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

” என் மச்சான் போன்ல பேசினான். கலா பத்தி ஏதுவும் என்கிட்ட சொல்லாதடான்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான். சரி, அவனும் தன் மனசுல இருக்கிறத யார்கிட்டதான் சொல்லுவான் ” என்று பொதுவாகப் பேசியபடி அமைதியானார். கலா இவரின் ஒன்றுவிட்ட அத்தை பெண். ஜாதகம் சரியில்லையென திருமணம் செய்துவைக்க கலாவின் அப்பா மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்துவிட்டாராம். சில நிமிடங்களுக்குப் பிறகு தன் விழிகளைத் துடைத்தபடி “நீ யாரையும் காதலிக்கலை. ஆனா, உன்னை காதலிக்கிறேன்னு யாராவது சுத்தியிருக்காங்களா” எனக் கேட்டார். அப்படியொரு மென்மையாக கேட்டபோது சொல்லலாமா என யோசிக்கத் தோன்றாமல் “ஆமா, ஒருத்தர் இருந்தார். ராமக்கிருஷ்ணண்னு ” எனக் கூறிவிட்டேன். சற்று கூர்ந்து நோக்கி “உங்க ஊர்க்காரரா ” என்றார்
“இல்ல, எங்க பெரியம்மா ஊர். பள்ளிக்கூட விடுமுறைக்கெல்லாம் அங்கதான் போவேன். பெரியப்பாவோட தூரத்து சொந்தம் அவரு. நான் அங்கே போறப்பல்லாம் ஏதாவது வேலையா வந்துட்டுப் போவாரு. எங்கிட்ட ஏதும் பேசியதில்லை. ஆனா பெரியம்மா பையன்கிட்ட சொல்லியிருக்காரு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா. தம்பிதான் என்கிட்ட சொன்னான். நான் சொல்லிட்டேன், எதுவாயிருந்தாலும் எங்கப்பாக்கிட்ட பேசிக்கட்டுமின்னு. அவருவந்து அப்பாக்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்க”.
என்று சொல்லிமுடித்தேன். இப்படி லாவகமாக பேசியதற்கு என்னையே மெச்சிக்கொண்டேன், அப்போதும் இந்த நினைவுவந்த வேறு சில தருணங்களிலும்.

“அதற்குப்பிறகு அவரைப் பார்க்கவில்லையா?”
“இல்லை, நாம பெரியம்மா வீட்டிற்கு விருந்துக்காக போனப்ப, தம்பிதான் சொன்னான்.. கல்யாணத்துக்கு வந்தாராம், பின்னால நின்னு பார்த்துட்டு சாப்பிடாமலே கிளம்பிட்டார்னு”.
சற்றுநேரம் யோசித்தவர் கிளம்பலாம் என எழுந்தார்.

அதன்பின் இந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசியதேயில்லை. ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் கிளம்பி வந்து அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள , பெரியம்மாவையும் பார்த்துவிட்டுப் போகலாம் என இங்கு வந்தோம். பார்த்து நலம் விசாரித்து விட்டு கிளம்பும்போதுதான் இராமகிருஷ்ணன் வீட்டிற்கு போகலாம் எனக்கேட்டார்.
வீட்டிலிருந்த தம்பி ரமேஷைக் கூப்பிட்டபோது சற்று குழப்பத்துடன்தான் கிளம்பினான். என் பையனை தம்பி தூக்கிக்கொள்ள ஒருவயது மகளை என் கணவர் தூக்கிக் கொள்ள நடக்க ஆரம்பித்தோம். “ரமேஷ், இப்ப அவர் வீட்டில் இருப்பாருல்ல” என தம்பியிடம் கேட்டார்.
“இன்னைக்கி வேலையேதும் இல்ல, வீட்டில்தான் இருப்பார்” என்றான்.
“என்ன வேலை பார்க்கிறார்”
“அவங்க தாத்தாவழி நிலம் இருக்குது. அதுக்கு வேலிபோட்டு, போர்வெல் மோட்டார் போட்டு பாதி வாழையும் பாதி நெல்லும் போட்டிருக்கார்”.

நான் தெருவோரங்களில் இருந்த ஆடாதொடை செடிகளையும் கள்ளிச் செடிகளையும் பார்த்தபடி நடந்தேன்.
“”இந்த வீடுதான்” என ரமேஷ் காட்டிய இரும்பு கிரில் கதவருகே நின்றோம். நான்கடி உயர சுற்றுச் சுவர் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ரமேஷ் திண்ணையோடிருந்த போர்டிக்கோவைக் கடந்து சென்று வீட்டின் கதவைத் தட்டினான். நாங்களும் உடன் சென்றோம். கதவைத் திறந்த ராமக்கிருஷ்ணன் சற்று பெருத்திருந்தார் . ரமேஷைப் பார்த்ததும் புன்னகைத்தவர் உடனிருந்த என் கணவரையும் தொடர்ந்து என்னையும் பார்த்தவுடன் திகைத்தார். “அத்தான்தான் உங்களைப் பார்க்கனும்னு சொன்னார். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என ரமேஷ் சொன்னதும் திகைப்பு நீங்காமலேயே ” வாங்க, உள்ளே வாங்க ” என்றபடி இன்னொரு கதவையும் திறந்தபடி உள்ளே நுழைத்தார்.

உள்ளே ஒரு சோபாவும் மூன்று நாற்காலிகளும் இருந்தன. அவர் “உட்காருங்க” எனக் கூறவும் ரமேஷும் என் கணவரும் சோபாவில் அமர, நான் நாற்காலியில் அமர்ந்தேன். “அக்கா எங்கே அத்தான் ” என ரமேஷ் கேட்கும்போதே பின்பக்கமிருந்து தன் சிறு மகளை நடக்க வைத்தபடி வந்த ஒல்லியான பெண் “வாங்க.. வாங்க” என புன்னகைத்தாள் .தன் கணவன் முகத்தைப் பார்த்தவுடன் “இதோ வருகிறேன்” என்று அடுப்படிக்குள் நுழைந்தாள் .

இராமக்கிருஷ்ணன் என்ன பேசுவதென்று தோன்றாமல் நிற்க, ரமேஷ்தான் “இவர்தான் எங்க அத்தான். சென்னை அம்பத்தூர்ல ரெஜிஸ்டர் ஆபீசுல வேலை பார்க்கிறாரு. அம்மாவப் பார்க்கிறதுக்காக வந்தாங்க. கிளம்பும்போது உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க. அதனாலதான் கூட்டிக் கொண்டு வந்தேன்” என்றான். என் கணவர் அவரை நோக்கி புன்னகைக்க அவரும் முறுவலித்தார். இவர் பேச எத்தனிக்கும்போது அடுப்படியிலிருந்து அந்தப் பெண் காபி தம்ளர்களுடன் வந்தாள். பேசும் முயற்சியை கைவிட்டு காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். நான் காபியை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு அவர்களின் பெண்ணை கையில் பிடித்தேன். அவள் நெளிந்தபடியே அருகில் வந்தாள். அவள் பெயரைக் கேட்காமல் அவள் அம்மாவின் பெயர் என்ன என்று கேட்டேன். “ராமலட்சுமி” என இழுத்துக் கூறியது. என் கணவர் எழுந்து “பேசிகிட்டு இருங்க, இப்போ வந்துவிடுகிறோம்” எனப் பொதுவாகக் கூறிவிட்டு ராமக்கிருஷ்ணனை பார்வையாலும் கையசைவாலும் சற்று வாருங்கள் என அழைத்தபடி வீட்டின் பின்பக்கம் நகர அவரும் பின் தொடர்ந்தார்.

என் பிள்ளைகளுடன் ரமேஷ் விளையாடிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்த ராமலட்சுமியிடம் அவளின் ஊர், தந்தை ,உடன் பிறந்தவர்கள் பற்றி பொதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் கூறிய எதுவும் மனதிற்குள் செல்லவில்லை. பின்னால் சென்றவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள், அல்லது பேச்சாகத்தான் இருக்குமா , தம்பியை போய் பார்க்கச் சொல்லலாமா என மனம் படபடத்தது. கணவர் பெரிதாகக் கோபப்பட்டு பார்த்ததில்லை என்றாலும் ராமக்கிருஷ்ணனின் குணம் எனக்குத் தெரியாததால் ஏதாவது சத்தம் கேட்கிறதாவென கூர்ந்திருந்தேன்.

ஐந்து நிமிடத்திற்குப்பின் என் கணவர் முன்னால் வர தொடர்ந்து அவர் வந்தார். வந்தபோது பார்த்ததைவிட சற்று முகம் தெளிவடைந்திருந்தது போலத் தோன்றியது . என் கணவரின் முகமும் மலர்ந்திருந்தது எனக்கு ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் இருந்தது. வரும் போதே கிளம்பலாம் என சைகை காட்டியதால் நான் எழுந்தேன். ரமேஷும் பிள்ளைகளுடன் எழ, நான் மகனை கையில் பிடித்துக்கொண்டு “ஆன்ட்டிக்கு பாய் சொல்லுங்க” எனக் கூறியதும் பிள்ளைகள் டாட்டா காட்டின. வருகிறோம் என பொதுவாக நானும் கணவருடன் இணைந்து சொல்ல அவர்கள் தலையாட்டினார்கள்.

ரமேஷ் பேருந்து நிறுத்தம் வரை உடன் வந்து, பேருந்தில் ஏற்றிவிட்டுச் சென்றான். அறுவடைக்குக் காத்திருந்த பழுத்த நெற்கதிர்களில் கவனம் பதித்திருந்தவரிடம் “அவர்கிட்ட என்னங்க பேசினீங்க, ஒன்னுமே சொல்லாம திடீர்னு பார்க்கனும் பேசனும்னு சொன்னதும் என்னால மறுக்கவும் முடியல, ஏன்னு கேட்கவும் முடியல. இப்பவாவது சொல்லுங்க ” என கெஞ்சுவது போலக் கேட்டேன்.
“நீ என்ன நினைக்கிற ”
“என்னால ஒன்னும் நினைக்க முடியல. நீங்களே சொல்லுங்க”
“அதுசரி, உனக்கெப்படி தெரியும். உண்மையா காதலிச்சவங்களுக்குத்தான் தெரியும்” எனக் கூறிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். கண்கள் கலங்குவது போலத் தெரிந்தது.
“ஒவ்வொருத்தனும் ஒரு பொண்ண விரும்பறான்னா அந்தப் பொண்ண மற்ற யாரையும் விட தன்னாலதான் மகிழ்ச்சியா வச்சுக்க முடியும்னு நம்பறான். சில சமயத்துல தன்னவிட வேறொருத்தன் அவள சந்தோசமா வச்சுக்குவான்னு புரிஞ்சா விட்டுக் கொடுக்கவும் தயங்க மாட்டான். அப்படியில்லாம தடுக்க முடியாம வேறொருத்தன்கூட கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவ எப்படியிருக்காளோன்னு கவலை அவனை தினந்தோறும் கொன்னுக்கிட்டேயிருக்கும். எனக்கு மாதிரி “.
“இதெல்லாம் இருக்கட்டும் அவர்கிட்ட என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க”
” இனிமே அவன் நிம்மதியா இருப்பான்” என்ற பீடிகையுடன் சொன்னதைக் கேட்டவுடன்
நான் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன். பதட்டம் குறைந்ததில் விழி கலங்கி ஒருதுளி புடவையில் வழிந்தபோது சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லையோ என யோசித்துக்கொண்டிருந்தபோது “அவனோட பொண்ணு பேரு என்னன்னு கேட்டியா ” எனக் கேட்டார்.
“கேட்கவில்லை”
“கேட்டுத்தான் தெரிஞ்சுக்கனுமாக்கும்” என்றபடி என்னை அணைத்துக் கொண்டவரோடு ஒட்டிக்கொண்டேன்.
அவர் உண்மையை எல்லாம் சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. இப்போதே எதையாவது கூறி மழுப்பியிருக்கலாம், மனம் நிம்மதியடைந்திருக்கும். என்னாலும் இனிக் கூறமுடியாது. அவர் இப்போது சொல்லாததற்கு வேறு வஞ்சகத் திட்டம் ஏதேனும் இருக்குமோ. பிறகு எப்படியாவது தெரியும்போது இவரிடம் என் நிலைமை என்னவாகுமோ என்ற எண்ணங்கள் வளர, வெள்ளத்தில் நகரும் இலையில் சிக்கிய சிற்றுயிரென மனம் பதைக்கத் தொடங்கியது.

விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை

சென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்  அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.   டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும்  வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.

“இன்னும் ஒரு மணி நேரமாகும்”
“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”
“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு?”
“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”
அந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”
“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”
“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம்  சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.
“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”
“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.

அவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும்  கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி  சென்றோம்.

வானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து ,  வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும்  மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட  பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல்  அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு  பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட  சாமியானதால்  அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார்.  தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன்   போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின்  இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.

இப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால்    என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி,  அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு,  கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும்,  சில நேரங்களில் அடியும் வாங்குவோம்.      சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி  திருமணமோ,  அரிச்சந்திர மயான காண்டமோ  எந்த நாடகமாயிருந்தாலும்  விடியும்வரை பார்த்துவிட்டு  யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை  ஊரிலிருந்து  அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.

சீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.
இன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க,  வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்”  என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.

வயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய்.  கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால்  அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில்,  மணலில் கால்புதைய  நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.
“என்னாச்சுடா”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..பய கால்ல”
“உண்மையாவா,ஏய்…முள்ளு ஏதாவது குத்தியிருக்குண்டா”
“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.

வெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி  ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது.  அதைப் பார்த்தவுடனேயே ஏனோ  சட்டென கோபம் தணிந்தது.   ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை.  கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது.  சுற்றிலும் பார்த்தேன்.  சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.

“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.
“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி”  என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய  உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன்.  நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ”  என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது  மட்டும் காரணமல்ல ,  உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான  விழிகளென,  மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி  நம்பிக்கையை தக்கவைத்த  அந்தப் பாம்பின் விழிகளும்தான்.

கோயிலையடைந்து,  அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும்  என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது.  இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை.  திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை  அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு   கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில்  ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப்  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என   உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.

சீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.

வண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின்   வயிற்றை இரு  கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன்  முதுகில் தலையை  சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது,  சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று  ஆறு மாதத்திற்குப் பிறகு  ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக  ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல   இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.

கிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள்  நாலைந்து பேர்  குதித்து குளித்துக்  கொண்டிருக்க, இருவர்,  கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த  படிக்கல்லில்  அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய  தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.  கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல்  ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு  அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும்  மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப்  பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு.  நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்”  என்றார் ஊசி போட்டபடி.

அறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச்  செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.

“பாம்புதான்னு தெரியுமா”
“ஆமா, டாக்டர்”
“ஏன்னா, சிலர்  பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”
”  பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.
“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”
“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு”  என்றார் கோபமாக.
“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும்.    பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை  அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான்.  நான் முகத்தை பார்க்கவில்லை.  செவிலி வந்து  ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.

சோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல  அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த  அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும்.   “சாமி,  பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை  நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல்    “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன்,  நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.

கண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை

அம்மாவுடன் மலர்க்கொடி அத்தை வீட்டிற்கு சென்றபோது பத்துமணியாகிவிட்டது.சுற்றுச் சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்த பூத்திருந்த செம்பருத்தி  செடிகளுக்கு காலையில் ஊற்றிய நீரின் ஈரம்  காயாமல் இருந்த மண்ணில் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த புழு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது.  எனக்கு இங்கு  வர விருப்பமேயில்லை.இம்மாதிரியான நேரத்தில் யார் வீட்டிற்கும் செல்வதற்கு பிடிப்பதேயில்லை.இன்று ஊருக்கு கிளம்புகிறார்களாம்..பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகுமாம் வருவதற்கு, கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம் என அம்மா, நச்சரித்தவுடன் வரவேண்டியதாகிவிட்டது.

வாசலோரம் கிடந்த காலணிகளைப் பார்த்தபோது  வேறு சிலரும் வந்திருப்பார்கள் எனத் தோன்றியது.எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.பத்து வருடங்களுக்குப்பின் வருவது கேதம் கேட்பதற்காகவா இருக்கவேண்டும்.கடைசியாக நான் வந்தது சிங்கப்பூர் செல்வதற்கு விடை பெற்றுச்செல்ல.அப்போது தேனம்மையை எனக்கு மணமுடித்துத் தருவார்கள் என நானும் என் குடும்பமும் நம்பிக்கொண்டிருந்த சமயம்.அவர்களுக்கும் விருப்பம் என்பதுபோலவே அவர்கள் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தை மாமாவிடம் எவ்விதமான குறிப்புகளையும் என்னால் உய்த்தறிய முடியவில்லை.தேனம்மையின் பேச்சிலும் எதுவும் தென்படவில்லை.சென்று வருகிறேன் எனக் கூறியபோது அவளுடைய அடையாளமான காகிதமலர்ப் புன்னகையுடனேயே தலையாட்டினாள்.

சிங்கப்பூர் சென்று மூன்று மாதங்களுக்குப் பின் என் சின்னக்கா  தொலைபேசும்போது சொன்னார்கள், தேனம்மையை அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என.அத்தையின் அம்மா மரணத்தருவாயில் அவர்கள் ஊரில்தான் தேனம்மையை மணமுடிக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம்.தசாவதாரத்தில் கமல் சொல்லும் “கேயாஸ் ” தியரியை அப்போதுதான் உணர்ந்தேன். அத்தை எப்போதுமே உற்சாகமானவர்.அவர் முகம் சோர்ந்தோ,புன்னகையின்றியோ பார்த்த நினைவில்லை.குறையாக இருந்தாலும் அதிலொரு நிறையைக் கூறி பெருமைப்படுவார்.ஊருக்குச் செல்ல ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ரயிலில் சென்றால்  பேருந்துபோல வீட்டருகிலேயே இறங்கமுடியுமா எனக் கூறியபடி கடந்துவிடுவார்.வாங்குவதற்கு சிறிய வீடாக அமைந்தபோது இப்படி இருந்தால்தான் சுத்தமாக பராமரிக்க இயலும் எனக் கூறினார்.மூத்த பையன் காதல் மணம் செய்துகொண்டபோது பொண்ணு தேடும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே அருமையான பெண்ணை பார்த்துவிட்டான் என விழிவிரியச் சமாளித்தார்.மாமா சீட்டுப் பிடிக்கிறேனென சில லட்சங்களை இழந்தபோது, கண்டம் இருப்பதாக ஜாதகத்தில் இருந்தது,ஆளுக்கு ஏதுமில்லாமல் பணத்தோடு  போயிற்றே என மகிழ்ந்தார்.தேனம்மையின் கணவர் பணியாற்றிய பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறு தொழிற்சாலையில் பணியாற்ற நேர்ந்தபோது சம்பாத்தியம் குறைவாக இருந்தால்தான் மாமியார் வீட்டினரை தாழ்த்திப் பேசாமல் கொஞ்சமாவது மதிப்போடு நடத்துவார் என மெல்லிய குரலில் கூறினாராம்.

நாங்கள் இப்போது வந்திருப்பது, தேனம்மையின் கணவர் சில நாட்களுக்குமுன் இறந்ததற்கு கேதம் கேட்பதற்காக. விருப்பம் இல்லாமல் வந்தாலும் உள்ளுக்குள் ஓர் ஆர்வம் ஊறிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொண்டு மருமகன்  மாய்ந்தற்கு  எம்மாதிரியான காரணம் கூறப்போகிறார் என. வாசலுக்கருகில் சென்றதுமே ஒளி மாறுபாட்டை கவனித்து திரும்பிய அத்தை “வாங்க ” என்று  எழுந்தார்.”பரவாயில்ல அத்தாச்சி , உக்காருங்க” என்றபடி நுழைந்து காலியாக இருந்த நாற்காலியில் அம்மா அமர்ந்து , அருகில் அமர எனக்கு கை காட்டினார். எங்களைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தம்பதியர் போன்றிருந்தவர்கள் “பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்முன் சென்றுவிடவேண்டும் “என்றபடி எழ அத்தை மெல்ல தலையசைத்தவுடன் கிளம்பினார்கள். அத்தையின் உடல் சற்று பருத்திருந்தபோதும் தளரந்திருந்தார்.   அத்தை எழுந்துபோய் இரண்டு சிறிய தம்ளர்களில் காபி எடுத்துவந்தார்.நான்,இன்றைய தேதியைக் காட்டிய காலண்டரையும் சற்று தள்ளி மாட்டியிருந்த பெரிதாக்கப்பட்ட அவர்களின் குடும்பப் புன்னகையைக் காட்டிய புகைப்படத்தையும் , மேசை மீீீது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சாடியையும் நோக்குவது போல அம்மாவின் உரையாடலுக்காக செவியைக் கூர்ந்திருந்தேன்.

“எப்படி அத்தாச்சி, திடீர்னு இம்மாதிரி முடிவுக்கு போனாரு..விசயத்தை கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியல.வேற யாராவது இருக்கும்னு இவனப்பாக்கிட்ட கோபமா திட்டினேன்.அவருதான் நல்லா விசாரிச்சிட்டேன்.மலரோட மாப்பிள்ளைதான்னு சொன்னாரு.அப்பயிருந்து இன்னும் மனசே ஆறல.அழகுபெத்த புள்ள இப்ப நாதியத்து நிக்குதே.எப்படித்தான் நீங்க தாங்கிக்கிட்டு இருக்கீங்களோ ” என்றபடி அத்தையின் கைகளை தன் பருத்த கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி விசும்பினாள்.எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான், பயணம் முழுக்க  கூடவேயிருந்து  ஏதாவது விபரங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வருபவர்கள் கேத வீட்டின் அருகில் வந்தவுடன் சட்டென சன்னதம் வந்ததுபோல கதறியபடி வீட்டை நோக்கி ஓடுவதும் நெருங்கிய உறவினரை கட்டிக்கொண்டு ஓங்கிய குரலில்  அழுவதும். பெண்களின் அறிய முடியாத ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஆண்களால் இயன்றது , தலையை தொங்கப்போட்டபடி சென்று அங்கு நின்று கை நீட்டும் ஆண்களின் விரல்களை ஆதுரத்துடன் அழுத்துவது மட்டும்தான்.

சற்றுநேரம் விசும்பிய அத்தை அதை நிறுத்தியபோது பார்வையைத் திருப்பி அவரின் விழிகளை நோக்கினேன்.நீர்வழிந்தபடியிருந்தாலும் சட்டென சிறு சுடர் ஒன்று எழுந்தது. “என்ன சொல்வது,என் வினையோ  அல்லது தேனோட வினையோ நல்லாத்தான் பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருந்திருக்காரு.மறுநாள் குடும்பத்தோட  குற்றாலத்திற்கு போறதா இருந்ததாம்.இருந்த கம்பளியாடகளே  போதுமான்னு பாத்தப்ப பெரியவளுக்கு இருந்தது சேராத மாதிரி தெரிஞ்சிருக்கு.வாங்கிட்டு வந்தர்றேன்னு கிளம்பி போனவர்தான். ஏழு மணிக்கு போனவரை ஒன்பது மணிவரை வரலையேன்னு போன் பண்ணியிருக்கா.போனை எடுக்கலை.என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அவரோட தம்பிக்கு போன் பண்ணி இந்த மாதிரி போனவரை இவ்வளவு நேரம் காணல,எங்கே ,எப்படி  தேடுவதுன்னு புலம்பியிருக்கா.அவருதான் இவளையும் கூட்டிக்கிட்டு கடைத்தெருப்பக்கமெல்லாம் தேடியிருக்காரு.அப்பறம் ஏதோ தோணியிருக்கு,கம்பெனிப் பக்கம் போயிருப்பாரோன்னு.அங்க போயி செக்யுரிட்டிகிட்ட கேட்டப்ப ஆமா , எட்டு மணியப்போல உள்ள போனாருன்னு சொல்லியிருக்கான்.உள்ள போயி ஆபீஸ் ரூம்,மெசின் ஹாலெல்லாம் பார்த்தும் ஆளக் காணாம பழைய சாமான்களெல்லாம் போட்டுவைக்கிற சின்ன அறை ஒண்ணு பின்னாடி இருக்கிறது நினைவுக்கு வந்து ,போய் பார்த்தா … உடைந்த,தேய்ந்துபோன மெசின் பாகங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களுமா நெறஞ்ச  ஆறுக்கு எட்டு அடில இருக்கற அந்த இடத்தில பேன் மாட்ற கொக்கியில கயிறக் கட்டி தொங்கிட்டிருக்காரு.என்ன பிரச்சனையின்னு யாருக்கிட்டையும் சொல்லவும் இல்ல காட்டிக்கிடவும் இல்லை…”என்றபடி குலுங்கியழ ஆரம்பித்தார்.

எனக்கென்னவோ இன்னும் சொல்லி முடிக்கவில்லையெனத் தோன்றியது.நான் எதிர்பார்த்து வந்ததை இன்னும் கூறவில்லையே. குலுங்கல் சற்று தணிந்தபோது அரிதான தின்பண்டத்தைப் பார்த்து உமிழூறும் சிறுவனென  கூர்ந்து கவனித்தேன்.விழிகள் சற்று மலர, “என்னதான் இருந்தாலும் இதுவரை இப்படி பார்த்ததோ கேள்விப்பட்டதேயில்லை.அவரோட லேப்டாப்ல கடைசியா என்ன பார்த்திருக்கிறார்னு பார்த்தா அதுல வலிக்காம தூக்குப்போட்டுக்கிறது எப்படின்னு பார்த்திருக்கார்.எந்த மாதிரி கயறு வாங்கனும் எந்த மாதிரி முடிச்சுப் போடனும் ,எம்மாதிரி போட்டா முகம் விகாரமா தெரியாதுங்கறதயெல்லாம் பார்த்திருக்கார்.அதே மாதிரி செஞ்சிருக்காரு.நாங்க போயி பார்க்கிறப்ப சும்மா படுத்து தூங்கற மாதிரியே இருக்கு. அந்த கந்தசாமி மகன் செத்தப்ப  பார்க்க சகிக்காத மாதிரி நாக்கு ஒருபுறம் கடிபட்டு தொங்க அந்த மூஞ்சி வேற பக்கம்  இழுத்துக்கிட்டு கிடந்தது.ஆனா இவர் முகத்துல எந்த வலியோ வேதனையோ எதுவுமே தெரியலை.காலையில பறிச்ச பூ மாதிரியே பொலிவா இருந்துச்சு.செத்தாலும் இந்த மாதிரியில்ல சாகனும்னு மகராசன் காட்டிட்டு போயிருக்கான்” என்றபடி மூக்கைச் சிந்தினார்.

கடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்

கடப்பதெப்படி

இருமலுக்குப் பயந்து
புகைக்கக் கற்கவில்லை ..
நாற்றம் பிடிக்காமல்
நாடவில்லை மதுவை ..
மயக்கும் பிறவற்றோடு
பழக்கம் ஏதுமில்லை ..
இல்லத்திலிருக்கும் மஞ்சமோ
தாத்தா காலத்தியது ..

கருந்தேநீர் உறிஞ்சியபடி
கொடுங்கவிதை இரண்டை  எழுதித்தான் கடக்கவேண்டும்
இன்றைய மனக்கொந்தளிப்பை

நிரப்புதல்

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது

புதிதாக திறந்த கடையில் பழங்களும் கிடைக்கின்றன

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன் …
சிறு போன்சாய் தொட்டியை

அன்பு மழை – கா.சிவா கவிதை

ஒவ்வொரு துளியாக
ஆவியாகிறது எப்போதும்
அதற்கிணையான
வெம்மையை அளித்துவிட்டு
உயிரே  வெந்து
ஆவியாகும் கணத்தில்
மெல்லிய சாரலாய் தொடங்கி
துளித் துளியாகவே
பொழிகிறது
முந்திவரும் சில துளிகளே
உள்நுழைந்து உயிரையும்  நனைத்துவிட
தொடர்ந்து பொழிந்து வழிவதை
சேமிக்க முயலாமல்
மனம் குளிரக் காண்கிறேன் …
வேறு வேறல்ல
மழையும் அவளன்பும்