சிவசுப்ரமணியம் காமாட்சி

வாய்ப்பது – கா.சிவா கவிதை

இடமூலையில் வேம்பு
வடமூலையில் மா
நடுவில் பலா
இடையில் நெல்லி எலுமிச்சை
இடைவெளிகளில்​​
ரோஜாவும் செம்பருத்தியும் என்ற பெருவிழைவை
செயல்படுத்தியபோது
கழிவுநீர்த் தொட்டி
மாவினிடத்தைப் பெற்றது
ஆழ்துளைக் கிணறு பறித்தது
வேம்பினிடத்தை
நீர்சேகரத் தொட்டி அடைத்தது
பிறவற்றின் இடத்தை

​எதிரீடு – கா.சிவா கவிதை

ஒவ்வொரு தடவையும்
விலகிட துடிப்பதற்கு​​
முந்தைய கணம்
ஒருதுளி சொட்டியிருக்கும் …

அவள் மீதான பிரியம்
மிளிர்கரு வண்ணத்
தேன் துளியாய்
சேகரமாகும் கண்ணாடிக் குடுவையினுள்

இன்னுமொரு துளி விழும்போது
தோன்றுகிறது
இனந்தெரியா வெறுப்பு

பிறிதொருமுறை சொட்டும்போது
எழுகிறது பெருஞ்சினம்

குதிக்கும் பெருவிழைவை
எழுப்பியபடி பெருகும்
கடுவிடத் துளிகளை
பதைப்புடன் நோக்கியபடி
அமர்ந்திருக்கிறது ..
ஈரக்காற்றிற்கே உதிர்ந்திடும்
மென் சிறகை
மெல்ல விசிறியபடி
என்னுள் அமைந்த வண்ணத்துப்பூச்சி…

பழைமையின் நினைவு – கா.சிவா கவிதை

இலையையுதிர்க்கும் மரமென
வாழ்ந்த மனிதர்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது ஊர்

கைவிடப்பட்ட தேன்கூடென
காற்றால் உலைந்துகொண்டிருக்கும் ஊரை
நிறைதேரலை நினைந்து சுற்றும் தேனீயென
சுற்றியபடி திகைக்கிறது இளமையை கடக்கவியலா மனம்