சிவேந்திரன்

“இந்தக் கதைக்கான தேடல் என்னை விடுவித்தது” – சிவேந்திரன்

கண்ணாடி துடைப்பவன்” குறித்து சிவேந்திரன்:

கிழக்கு திமோரின் விடுதலைக்கு எதிராக அமெரிக்காவும், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் இருந்தன என்பது வரலாறு. ஆனால் காலப்போக்கில் அவற்றின் நிலைப்பாடு மாறியது. எந்த வடிவிலான விடுதலைப் போராட்டம் என்றாலும் அதன் இறுதி வெற்றியை முக்கிய உலக நாடுகளின் போக்கே தீர்மானிக்கின்றது என்பதை கிழக்கு திமோரின் விடுதலையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டப் பின்னடைவும் மீண்டும் உறுதிப்படுத்தின என்றே கூறவேண்டும்.

அண்மைக் கடந்த காலங்களில் சுதந்திரம் பெற்ற கிழக்குத் திமோரோ தெற்கு சூடானோ ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு நிகரான வலுவையோ அல்லது தியாகத்தையும், அர்ப்பணிப்பையுமோ கொண்டவையல்ல என்பது கடந்தகால உலக நடப்பை அவதானித்தவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தவொன்று. அந்த நிலைப்பாட்டில் இருந்தே இக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

கதையை எழுத ஆரம்பிக்கும்போது ஈழவிடுதலைப் போராட்டத்தின் தியாகத்தை மட்டும் உயர்வாகவும், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டத்தை மற்றைய நாடுகளின் பிச்சையில் கிடைத்ததாக தாழ்வாகவும் கருதிய மனநிலையில் இருந்தேன். ஆனால் இந்தக் கதைக்கான தேடல் என்னை விடுவித்தது. அவரவர்க்கு அவரவர் தியாகங்கள் முக்கியமானவை. போராட்டத்துக்கு நீதியான காரணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டுமே தவிர எமது மனவிருப்பு வெறுப்புகள், அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து குறைகளைக் கண்டு அதைக் கொச்சைப்படுத்திவிடக் கூடாது என்பதில் மனம் இயல்பாகவே அமைந்துகொண்டது.

இக்கதையின் அடித்தளமாகவுள்ள கிழக்கு திமோரிய நிகழ்வுகள் மிகப்பெரும்பாலானவை உண்மையானவை. அதன் மீது நடமாடும் சிப்பிரியானோ அல்விஸ் அமரல் வெவ்வேறு நிஜ மனிதர்களின் சாயல் கொண்ட ஒரு கற்பனை பாத்திரம். கிழக்குத் திமோரி ஒருவர் இந்தக் கதையை வாசித்தால் அவர் பிழை பிடித்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் தகவல்களும் புனைவும் பிணைக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

கண்ணாடி துடைப்பவர்களும் உண்மையானவர்கள். கண்ணாடி துடைப்பவர்களில் ஒருவரையும் சிப்பிரியானோவையும் சந்திக்க வைத்தபோது கதையை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள்.

சிவேந்திரன் எழுதிய “கண்ணாடி துடைப்பவன்”, சிறுகதை இங்கே

கண்ணாடி துடைப்பவன் – சிவேந்திரன்

சிவேந்திரன் –

சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தாலும் அனலடிக்கத் தொடங்கியிருந்தது. முகமன்கூறி வெளிவரும்போது, “ஏன் நீங்கள் இந்தக் கோடையில் வந்தீர்கள்? சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த காலம் ஒக்டோபரில் இருந்து மார்ச் வரைத்தான்”, என்றாள் ஹோட்டல் வரவேற்பறைஃபிலிப்பினோப் பெண். ஜூன் மாதம் பாலை நிலத்தில் பயணம் செய்வதற்கு உகந்ததல்ல. ஆனால் அதற்கு அடுத்துவரும் மாதங்கள் இதைவிட மோசமானவை. இந்த மாதத்தில்தான் எனக்கு விடுமுறை எடுக்கமுடியும். நான் சிரித்துக்கொண்டே, கோடைகாலத்தைத் தாங்கிவிடலாம், ஆனால் குளிர்காலத்தில் உங்கள் ஹோட்டல் கட்டணத்தைத் தாங்கமுடியாதே, என்றேன்.அவள் சிறிது தடுமாறி, குட் ஜோக், என்றாள். நான் பிரதான வாயிற்கதவை அடைய, குட் மோர்னிங்க், என்றவாறு கதவைத் திறந்துவிட்டான் ஆபிரிக்கக் காவலாளி.

வெளியில் வெய்யில் அலையலையாக படர்ந்திருந்தது. செல்லவேண்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. ஒரு இருபது நிமிட நடை. டாக்ஸிக்காக நின்று ஏறுவதற்குப் பொறுமை இல்லை. வெய்யிலை பொருட்படுத்தாமல் ஆட்கள் அங்கும் இங்குமாக விரைந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு நிறத்தவர்கள். அதிகம் இந்தியர்கள். இவர்கள் திமோரின் கடற்கரைகளிலுள்ள ஸ்ட்ராபெரி ஹெர்மிட் நண்டுகள்  இறந்த கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில் வாழ்வது போன்று அந்நிய தேசங்களில் வாழ்கிறார்கள் என்று தோன்றியது.

பாரசீக வளைகுடாவில் இருந்து உள்ளோடி வந்து காயல் தளும்பிக் கொண்டிருந்தது. இந்த வெயிலில் தண்ணீரை பார்ப்பதே மனதுக்கு குளிர்மையை வரவழைத்தது. நடந்து வந்த களைப்புக்கு, கடல் நீர் ஏரியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த நிழல்குடைகளுடனான நீண்ட மர இருக்கைகள் அருமையாக இருந்தன.இக்கரைச் சிறிய துறைக்கும் அக்கரைச் சிறிய துறைக்குமாக, முனைவுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைத்தூண்களில் கூரையைக் கொண்ட படகுகள் மிதமான வேகத்தில் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தன. படகில் வெய்யில் விழும் பக்கமாக அமர்ந்திருந்தவர்கள் மட்டைகளாலோ வெறும் கைகளாலோ தலையை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். கால்கள் வைக்கும் இடம் சுற்றிவர படகின் விளிம்பில் இருந்து சிறிதே பதிந்திருந்தது. அமர்வதற்காக நடுவில் ஒரு சாண் உயரத்தில் மேடை. அமர்ந்திருந்தவர்கள் தலைகீழாகக் கவிழ்த்த ‘வீ ‘ எழுத்தாக முழங்கால்களை உச்சியாகக் கொண்டு மடித்திருந்தனர். மேடையில் நடுவில் பெட்டிவடிவமாக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் நின்றுகொண்டு படகோட்டி அதைச் செலுத்திக்கொண்டிருந்தான். மறுகரையில் சில பெரிய சரக்குக் கப்பல்கள் கரையுடன் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. சரக்குகள் ஏற்றிய கப்பல் ஒன்று காயலிலிருந்து வளைகுடாக் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் மேற்புறத்தில் சரக்குகள் பாலித்தீன் போன்ற பெரிய கூடாரத் துணியொன்றால் மூடிக் கட்டப்படிருந்தன.

நான் இருந்த மர இருக்கையில்கூட மெதுவாக சூடு ஏறுவதை உணரமுடிந்தது. அணிந்திருந்த அரைக் கை சட்டையின் முன் பொக்கட்டைத் தடவிப் பார்த்தேன். அந்த ஒரு திர்ஹாம் நாணயம் கிடந்தது. அதன் ஒரு புறத்தில் ஒன்று என்ற இலக்கம் அரபியில் பொருக்காக உயர்ந்திருந்தது. மறுபக்கம் தேநீர் கேத்தல் போன்று சற்று நீண்ட வடிவம். அலாவுதீனின் அற்புதவிளக்காக இருக்கவேண்டும். பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் அதைத் தடவி துணியைத் தாண்டி உணர்ந்து கொண்டிருந்தேன்.வெளியில் எடுத்து தன்னிச்சையாக மேலே சுண்டி மீண்டும் பிடித்துக்கொண்டேன்.

இந்தச் சூட்டிலும் இவ்விடத்துக்கு வந்ததற்குக் காரணம் இன்றும் அவன் இவ்விடத்துக்கு வருவான் என்று நம்புவதால்தான். நேற்றைய மிகுதி வேலை இருக்கக்கூடும்.அவனைச் சந்திக்காமல் சென்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளாத பதிலொன்றோ அல்லது பதிலளிக்கப்படாத கேள்வியொன்றோ மனதில் கொழுவி இழுபட்டுக்கொண்டு இருக்கக்கூடும்.

நான் சிப்பிரியானோ அல்விஸ் அமரல்.தாய்லாந்துக்கான கிழக்குத் திமோர் தூதரகத்தின் பொறுப்புநிலை அதிகாரி. அப்படியென்றால் தூதர் இல்லாதவிடத்து அவரின் கடமைகளையாற்ற வேண்டிய நிலையில் இருப்பவன். விடுமுறைக்காலத்தின் சிலநாட்களுக்கு தனிப்பட்ட சுற்றுலாவாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறேன். மீதி விடுமுறையை கிழக்கு திமோரில் சொந்த ஊரில் கழிப்பதென்று திட்டம். இந்தப் பாலைவன தேசம் தன்னை எப்படிக் கட்டியெழுப்பி இருக்கின்றது என்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. செல்வச் செழிப்பின் பிரமாண்டமான, நவீன கட்டிடக்கலையில் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கட்டிடங்களும், செயற்கையான பொழுதுபோக்கு அம்சங்களும் சமாதானத்தினதும், அரசியல் உறுதிப்பாட்டினதும் காரணமான சர்வதேச வர்த்தகத்தின் விளைவுகள். செயற்கையின் அத்தனை பிரமிப்பையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் காயல்தான். பண்டைக்காலத்தில் மீன்பிடித்தலுக்கும், முத்துக்குளித்தலுக்கும், பிற நாட்டு வர்த்தகத்துக்கும் களமமைத்த மேடை இது என்று சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு கூறுகிறது. இந்த நாட்டின் ஆத்மா என்றே கூறவேண்டும். இதன் இருகரைகளிலும் இருந்துதான் இந்த நாடு உருவாகி உட்பரம்பியது.

இங்கு வந்த நாளில் இருந்து காலைப் பொழுதில் இதன் கரைகளில் நடந்து செல்வதும், சற்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் விருப்பமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அவன் நேற்று என் கண்ணில் பட்டான். கடும் பச்சைநிற நீளக்காற்சட்டையும் அதே நிறத்திலான மேற்சட்டையும் அணிந்திருந்தான். அதன் முதுகுப்பக்கமாக டொப் கிளினிங்க் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இடுப்புப்பட்டியில் முன்னாலும் பின்னாலும் தனித்தனியாக இரு பைகள் தொங்கின. வலதுபுறத்தில் வாள் உறைபோன்ற சற்று பெரிய கூம்புவடிவிலான தொட்டி தொங்கிக்கொண்டு இருந்தது. கையில் கூடைபோன்ற, செவ்வகவடிவிலான வாயைக்கொண்ட நீலநிறத்திலான தொட்டி. அதன் அரைப் பங்குக்கு மேலாக வெண்ணிறமாக நுரைத்துக் கொண்டிருந்த திரவம் நிரம்பியிருந்தது. மறுகையில் ‘டி’ வடிவிலான  நீண்ட துடைப்பான் போன்றவொன்று.

நீலநிற பிளாஸ்டிக் தொட்டியை நிலத்தில் வைத்த பின்னர் அந்த ‘டி’ வடிவிலான கருவியை சுவரில் சாத்திவிட்டு அதன் கண்ணாடியை விரலால் தொட்டுப் பார்த்தான். கண்ணாடி தூசு படிந்து ஒளி புகவிடாத பனிக்கட்டிபோன்று தென்பட்டது. சுட்டுவிரலால் அதில் நிமிர்ந்த நிலையிலான முட்டைபோன்ற உருவைக் கீறியவன் அதன் இடது மேற்பக்கத்தில் இருந்து வலது கீழ்ப் பக்கம்வரை மூலைவிட்டம்போன்று கோடு இழுத்தான். சிறிது உற்றுப்பார்த்தவன் ‘டி’ வடிவக் கருவியை எடுத்து தொட்டியின் நுரைத்திரவத்தை நனைத்தெடுத்தான். வேகமாக மேலிருந்து கீழாக கண்ணாடியில் பூசத்தொடங்கினான். சீமெந்து விளிம்புகளில் சற்று உள் தள்ளியிருந்த செவ்வகவடிவ நீண்ட கண்ணாடிகளை  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக பூசிக்கொண்டே சென்றான். பின்னர் முதலில் பூசிய கண்ணாடிக்கே வந்து இடுப்பில் கட்டியிருந்த கூம்புக்கூட்டிலிருந்து வழிப்பானை எடுத்தான். மேற்புறத்திலிருந்து வானவில் போன்று இடமிருந்து வலமாக வழித்தெடுக்கத் தொடங்கினான். இவ்வாறே அடிக்கண்ணாடிவரை வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக என்று துரிதமாக வானவில் வழிப்பை செய்துகொண்டான். எஞ்சிய நீர் கண்ணாடியில் கீழ்விளிம்பால் வழிந்துகொண்டது. கூம்புக்கூட்டில் முதல் வழிப்பானை வைத்துவிட்டு அதில் இருந்து சிறிய வழிப்பானை எடுத்து கீழ்விளிம்பில் தேங்கிய நீரை இழுத்துப் வெளியில் விட்டான். இடுப்புப் பட்டியில் பின்னால் தொங்கும் துணியை எடுத்து கண்ணாடியைத் துடைத்த பின்னர் அதை முன்னாலுள்ள பையில் போட்டுக்கொண்டான். இதையே வரிசையாக செய்துகொண்டு நகர்ந்தான். கட்டிடத்தின் பக்கவாட்டில் அவனைப்போன்றே சீருடை அணிந்த மேலும் இருவர் கண்ணாடியைத் துடைக்கும் வேலையில் இருந்தனர்.

நான் சற்று நகர்ந்து சென்று அருகில் உள்ள மர இருக்கையில் அமர்ந்து அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வெயில் உருக்கி ஊற்றத் தொடங்கிவிட்டது. 40°C இற்கு அதிகமாக இருக்கலாம். அவர்களின் உடைகள் வியர்வையில் தோய்ந்து உடலுடன் அங்கும் இங்குமாக ஒட்டிய இடங்கள் கருநிறமாகக் காட்சியளித்தன. அந்த இளைஞன் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி உதறினான். எனது அடிவயிற்றிலிருந்து இனப்புரியாத புகை எழுந்து மூச்சைத் திணறடித்தது போன்று தடுமாறினேன். இருக்கையின் மரச்சட்டத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். அந்த மேலாடையை மடித்து பையில் வைத்தவன் உள்ளிருந்து வேகமாக டி சேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு நான் இருந்த இருக்கையை நோக்கி வந்தான்.

அவன் எனக்கு காற்றில் வீசப்படும் சவுக்கை நினைவூட்டினான். உடற்கட்டுமானப் பயிற்சியால் கட்டியெழுப்பப்பட்டது போன்றதாக அல்லாமல் அவனின் உடல் குறுந்தூர ஓட்டவீரனுக்குரிய ஒடுங்கி இறுகியதாக இருந்தது. அவன் வலிமையில் நிற்கும் யானையல்ல, வேகத்தினை உடலாகக் கொண்ட சிறுத்தை போன்றவன் என்று எண்ணிக்கொண்டேன். சிறு புன்னகையுடன் அவனை எதிர்கொண்டேன். கடுமையான வெய்யில், 40°C இருக்கக்கூடும் என்று அவனுக்கு ஆங்கிலம் புரியுமோ என்ற தயக்கத்துடன் கூறினேன். இல்லை;45°C இருக்கும் என்று ஆங்கிலம் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இன்றி சாதாரணமாகக் கூறினான். அருகில் அமர்ந்த அவனுடன் பேசுவதற்கு விரும்பினேன். அவனும் பேசுவதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மெதுவாகத் தொடங்கிய உரையாடல் ஏதோ ஒரு கட்டத்தில் சுழன்று என்னைப் பற்றியதாக மெலெழுந்தது. அவன் கண்கள் விரிய ஒருவிதமான ஈர்ப்புடன் எனது கதையைக் கேட்டது என்னை உற்சாகத்துடன் மேலும் மேலும் பேசத்தூண்டியது.

தொண்ணூறொன்றாம் ஆண்டு மே மாதம் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு திமோரின் தலைநகருக்குத் திரும்பியபோது மீண்டும் சில காலத்தின் பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவிடுவேன் என்றே நினைத்திருந்தேன். அப்பொழுது நான் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன். பதினெட்டு வயது நிரம்பி பத்தொன்பது வயதில் இருந்தேன். திலியில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தலைமறைவு இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கம் மலைப்பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.அதற்குப் புறம்பாக மாணவர்கள், இளைஞர்களை கொண்ட நெகிழ்வான கட்டமைப்புடனான இரகசிய இயக்கம் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் குடிசார் எதிராட்டத்தை இந்தோனேசிய அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக நடத்திக்கொண்டிருந்தது.

உலகிலேயே இந்தோனேசியாவைப் போன்ற பன்மைத்துவ நாடு இல்லை. மற்றைய நாடுகள் மக்களால் மட்டுமே பன்மைத்துவமுடையவை நிலத்தால் பெருமளவுக்கு இணைக்கப்பட்டவை. இந்தோனேசியா மக்கள் தொகையால் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்காண தீவுகளாலான தேசம் என்பதால் பூகோளத்தாலும் பன்மைத்துவமுடையது. ஆனால் அதனுடன் இணையவிரும்பாத  எம் கிழக்குத் திமோர் தேசத்தை படைவலுவால் கைப்பற்றிக்கொண்டமை பன்மைத்துவம் என்பதையே கேலிக்குரியதாக்கிவிட்டது. கூட்டாட்சியின் அதிகாரத்தின் கீழல்லாமல் சுதந்திரமாகவும் சிறு தேசங்கள் இருக்கமுடியும் என்பதும் பன்மைத்துவம்தான்.

இந்தோனேசியா எமது நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கையை கையளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போத்துக்கேய நாட்டுப் பிரதிநிதிகளையும் ஊடகவியலாளர்களையும்கொண்ட குழுவொன்று வருகைதர இருந்தது. இது வரலாற்றில் முக்கியமான தருணம் என்பதால் எனது நாட்டில் இருந்தேயாக வேண்டும் என்று ஜகார்த்தாவில் இருந்து திலிக்குத் திரும்பினேன். மக்கள் மத்தியில் குழுவின் வருகை தொடர்பான செய்திகள் பெரும் உற்சாகக் கொந்தளிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. எந்தவிடத்திலும் மக்கள் சந்தித்தால் முதலில் இதைப்பற்றியே பேசிக்கொண்டார்கள். போத்துக்கல் குழுவின் வருகையின்போது கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்  நடத்தினால் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். அதனால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிட வேண்டும் என்று தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டோம். அதேவேளை கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் மாகாணம் என்றும் அதற்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை கிழக்குத் திமோரியர்களைக் கொண்டே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்து செயற்பட்டது.

அரசின் ஆர்ப்பாட்டத்துக்கான ஆட்சேர்ப்புகளில் கிழக்குத் திமோர் ஆதரவாளர்களும் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அதை அப்படியே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றிவிடுவது அவர்களின் திட்டம். அதேவேளை இராணுவமும் உளவாளிகளும் திமோர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். முன்னர் பாப்பரசர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தமையால் இந்தக் குழுவின் வருகையின் போது இடம்பெறலாம் என்று இராணுவம் சந்தேகித்தது. அவ்வாறு எதிராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.சில இடங்களில் இராணுவம் பகிரங்கமாக பாரிய புதைகுழிகளைக் கிண்டியது. அதன் செய்தி தெளிவானது.

கதையை நிறுத்தி சற்று இடைவெளிவிட்டு அமைதியாக அவனைப் பார்த்தேன். அவனின் முகத்தில் இருந்த, சிக்கித் தெரிந்த உணர்வுகளை வேறுபிரித்துக் கொள்ளமுடியவில்லை.

சற்று நேரத்தில், பிறகு?, என்றான் அவன்

தடியொன்றின் இருமுனைகளிலும் தென்னோலைகளால் மீன்களைக் கட்டித்தொங்கவிட்டு, தோளில் சுமந்து செல்லும் மீன் வியாபாரியைப் பின்தொடர்ந்து செல்லும் பூனைகளைப் போன்று இளைஞர்கள்,மாணவர்கள் பின்னால் கிழக்குத் திமோரிகளை உள்ளடக்கிய இராணுவ உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான பலரும் கைது செய்யப்பட்டனர். எனது வீட்டுக்கும் வந்து தேடிவிட்டு சென்றனர். அப்பொழுது வெளியில் சென்றிருந்தேன். தகவல் எட்டியதால் திரும்பிச் செல்லாமல் நண்பன் வீட்டில் தங்கிவிட்டேன்.

நாட்கள் நெருங்க நெருங்க தேடுதல்களும் கைதுகளும் தீவிரமடைந்தன. எதிர்ப்பை உலகறியச் செய்யவேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டே வந்தது. தேவாலயங்கள் தேடுதலுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அரிதாக இருந்ததால் மோடெயல் தேவாலயத்தில் குழுவொன்று தங்கியிருந்து பணிகளில் ஈடுபடுவது நல்லதென்று முடிவெடுத்தோம். மோடெயல் தேவாலயம் என்படும் திலியின் புனித அந்தோனியார் தேவாலயம் கடலை நோக்கியவாறு வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றிருந்தது. மறுபுறம் தொலைவில் தெரிந்த மலைகள் அந்தத் தேவாலயத்தின் வரலாற்றுக்கும்கூட சாட்சியாக அமைதியாக ஓய்ந்திருந்தன. நெடிந்து நீண்ட பிரார்த்தனை நடுக்கூடம். பிரதான வாயிலுக்கு முன்புறமாக சற்றுப்பதிந்து இறங்கிய தாழ்வாரம். அதில் தாமரை இதழின் மேற்பாதிபோன்ற, இருபுறமாக மேல்வளைந்து உச்சிகொண்ட நான்கு நுழைவாயில்கள். தேவாலயத்தின் முன் இடது மூலையில் சுவருடன் ஒட்டி, நீண்டு உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரம். அதன் உச்சியிலும் முன்பக்க நுழைவாயில்கள் போன்று தாமரை இதழின் மேற்பாதிபோன்ற இடைவெளிகளால் முழுமையாக வெளித்தெரியும்படி மணி கட்டப்பட்டிருந்தது. தேவாலயத்தின் இருமருங்கிலும் முன்புறம் போலவே தாழ்வாரங்கள் சுவரின் உச்சியில் இருந்து சற்றுக் கீழே ஆரம்பித்து சரிந்து நீண்டிருந்தன. ஆனால் அவை திறந்தவாறு அமையாமல் மூன்று புறமும் சுவரெழுப்பி கதவிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. நான்காம் பக்கம் சுவரற்று, நடுக்கூடத்தின் வெளியுடன் தனது வெளியை இணைத்தவாறு இருந்தது.

தேவாலயம் என்றால் அதன் கட்டிடமல்ல அதன் ஓங்கி உயர்ந்த உட்புறவெளிதான். பலமுறை சென்றிருந்தாலும் அந்த உட்புறம் பாதுகாப்புணர்வையும், பதட்டத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்துவதை தவிர்க்கவே முடிவதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்மனதில் படிந்த குகை வாழ்க்கை நினைவுகள் தூண்டுவதால் அந்தப் பாதுகாப்புணர்வு வருகின்றது என்று எண்ணிக்கொள்வதுண்டு. பதட்டத்துக்கான காரணத்தைத்தான் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மனிதனின் தேவைக்கு மிக அதிகமான, மேலதிக வெளி அளிக்கும் அசௌகரியமாக அது இருக்கக்கூடும்.

காலை மாலை இருநேரமும் ஆராதனைகள் நடைபெறுமாயினும் மாலையிலேயே கூட்டம் நெருக்கும். அந்தோனியாரை வேண்டிக் கொள்வதுடன் சூரியன் வீழ்ந்து மறைவதை ரசித்தபடி கடற்கரையோரமாக சிறுநடை செல்வதற்காக அதிக கூட்டம் வருகின்றது. ஆராதனை முடிந்து கூட்டம் கலைந்த பின்னர் இரவு முழுவதும் தேவாலயம் எமது கைக்குள் இருக்கும். தாழிட்டுவிட்டு உட்புறமாக தேவாலய மின் குழல் விளக்குகளை நிறுத்திவிடுவோம். நான்கைந்து பேராக குழுக்களாக வட்டவடிவில் அமர்ந்து இரவிரவாக பதாதைகள் வரைவது, படங்கள் வரைவது, கொடிகள் செய்வதென்று பணிகள் நீளும். நடுவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கும்.

போத்துக்கேய குழுவின் வருகை நாள் அண்மிக்க அண்மிக்க, நாடெங்கிலும் எதிர்பார்ப்புடனான பதட்டமும், பயமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. மக்களின் பேச்சுகள், தொடர்புகள், நடவடிக்கைகளில் எல்லாம் உளஎழுச்சியும் எச்சரிக்கை உணர்வும் நிறைந்திருந்தன. காற்றில்கூட அவை பரவித் ததும்புவதுபோன்று இருந்தது. ஒவ்வொருவரும் அதைப் பற்றிய உணர்வே இன்றி இயல்பாக இருப்பதாக இராணுவத்தினருக்கும், உளவாளிகளுக்கும் காட்டுவதற்கு முற்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்படும், காணாமல்போகும் தகவல்களை நாளாந்தம் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம் .தம்மைமீறி எதுவும் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் வெறியுடனிருந்தார்கள்.

தேவாலயத்தில் நாங்கள் எச்சரிக்கையாகவே செயற்பட்டோம்.அப்படியிருந்தும் வெளியே சென்று திரும்பிய சிலர் இந்தோனேசிய உளவாளிகளின் கண்களில் பட்டுவிட்டார்கள்.வழிபாட்டுக்குச் செல்வதாக கூறிவிட அவர்களும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.இந்த நிகழ்வு ஆலயத்தினுள் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. உளவாளிகள் பெரிதுபடுத்தாமல் சென்றதாலும், திடீரென்று வேறு இடத்துக்கு அனைத்தையும் மாற்றுவது சாத்தியமில்லை என்பதாலும் பணிகளைத் தொடர்ந்து செய்தோம்.

பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற சில பத்திரிகையாளர்களின் வருகையை இந்தோனேசிய அரசு எதிர்த்தமையால் போத்துக்கல் குழு வருகையை நிறுத்திவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. மெதுமெதுவாக மறைவான இடங்களுக்கு பதாகைகளையும், கொடிகளையும் கொண்டுபோய் சேர்த்த பின்னர் நாங்களும் இடம் மாறிக்கொள்ளலாம் என்று நினைத்தோம். தொண்ணூற்றொராம் ஆண்டு ஒக்டோபர் இருபத்தெட்டாம் நாளை எதை மறந்தாலும் என்னால் மறக்கமுடியாது. நள்ளிரவு தாண்டி ஒரு மணி இருக்கும்.தூரத்தில் நாய்களின் ஊளை எழுந்தது. அதைத் தொடர்ந்து நாய்களின் ஊளைகள் கிறிஸ்மஸுக்குக் கொழுத்தும் சரவெடி போன்று ஒன்றன்பின் ஒன்றாக நெருங்கி வந்தன. காற்று தேவாலய வளாகத்தை பல்வேறு அளவிலான ஊளை ஒலிகளைக் கொண்டுவந்து நிரப்பியது. என்ன நடக்கின்றது என்ற  பதட்டத்து எழுந்து நின்ற எங்களை ஒவ்வொரு பக்கமாக ஊன்றப்பட்டிருந்த மெழுகுதிரிகள் பல்வேறு திசைகளில் நிழல்களாக விழுத்தின. சில அடர்ந்தியானவை, சில மற்றைய ஒளியில் மங்கியவை. ஒன்றுடன் ஒன்று கலந்தும், பிரிந்தும்,குறுக்குவெட்டியும் அசைந்த நூற்றுக்கணக்கான நிழல்கள் நாய்களின் ஊளைச் சத்தத்துக்கு ஏற்ப நடனமிடுவது போன்றிருந்தன. வெளியில் ட்ரக் வண்டிகளின் இயந்தி ரஇழுவிசை ஓசைகள் கேட்டன. தேவாலயத்தின் உட்புறவெளி அச்சமாக மாறி அனைவர் மீதும் அழுத்தியது.

நானும் சிலரும் தேவாலயத்தின் தாழ்வாரம் மறைத்தபடி இருந்த பின்பகுதியின் பக்கவாட்டுக் கதவை திறந்து மெதுவாக வெளியில் வந்தோம். காற்று சுழன்றவாறு உள்நுழைந்து மெழுகுதிரிகளை அணைத்த வேளையில் ட்ரக் வண்டிகளின் ஓசை நின்று தடதடவென்று சப்பாத்துக்கால்கள் நிலத்தில் குதிக்கும் சப்தம் கேட்டது. கண நேர இடைவெளியில் தேவாலயக்கதவு உக்கிரத்துடன் தட்டப்படுவதும் அதைத் தொடர்ந்து கதவு உடைந்து திறபடும் சத்தமும், உள்ளிருந்தவர்களின் அபயக்குரல்களும் எழுந்தன. இந்தோனேசிய மொழியிலும், டெட்டும் மொழியிலுமான கூச்சல்களும், வாதாட்டங்களும், தள்ளுமுள்ளுகளும் கலந்து கேட்டது. அதைத் தொடர்ந்து வேட்டுச் சத்தங்களுடன், கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற அலறல் எழுந்தது. நான் பக்கவாட்டுச் சுவரில் உன்னி ஏறிக் கூரையில் குப்புறப்படுத்துக் கொண்டேன். கூரையில் படுத்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல. பக்கவாட்டில் தொலைவில் இருந்து பார்த்தால் கண்டுவிடக்கூடும். எந்த நேரமும் வெடி விழலாம் என்ற பதட்டத்தில் மூளையில் சிந்தனைகள் மங்கியோடின. இறங்கி ஓடினால் வெடி நிச்சயம். திடீரென்று கோயில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் கோயிலை நோக்கி வரும் சலசலப்புகள் கேட்டன. மக்கள் தேவாலயத்தைச் சூழ குழுமத் தொடங்கிவிட்டார்கள். கொலைகாரர்கள் என்று இராணுவத்தை திட்டுவதும்,கோயில் வளாகத்துக்குள் நுழைய முனையும் வாக்குவாதங்களும் தெளிவில்லாமல் இரைச்சலாகக் காதில் விழுந்தன.

சிறிது நேரத்தில் ஆயர் பெலோவின் குரல் கேட்டது. இராணுவத்தினருடன் வாதாடும் ஒலியும் அவர்கள் ஏதோ கூறுவதுமாக தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாத ஓசைகள். மக்கள் உள்ளே கூட்டமாக வளாகத்துக்கு நெருக்குப்பட்டு வேகமாக உள்வருவது தெரிந்தது. நான் மெதுவாக இறங்கி அவர்களுடன் கலந்தேன். தேவாலய முன்றலில், மின்விளக்கின் ஒளியில் இரு உடல்கள் கிடப்பது தெரிந்தது. பிரதான வாயிலில் இருந்து துடைப்பத்தால் பூசப்பட்ட தீந்தை போன்று விழுந்து கிடக்கும் உடல்கள் வரை இரத்தம் இழுபட்டிருந்தது. மண்ணில் தோய்ந்து ஒருபுறம் சரிந்திருந்த முகம்.நண்பன் செபஸ்டியாவ் கோமஸ். ஏசுவே… கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சற்று தலையை உதறி மற்றையதை நோக்கினேன் வாயைப் பிளந்தபடி கிடந்த அது இராணுவ உளவாளி அஃபொன்ஸோ. அவன் உடலில் செருகப்பட்டிருந்த கத்தியின்பிடி மட்டும் வெளித்தெரிந்தது. மக்கள் கூட்டத்தை தள்ளியபடி இராணுவத்தினர் ஏனைய நண்பர்களை ட்ரக் வண்டிகளை நோக்கி இழுத்துச் சென்றார்கள். கூட்டத்தின் மத்தியில் நான் தலையைக் குனிந்துகொண்டு நின்றேன். செபஸ்டியாவ்வின் உடலின் அருகில் இராணுவ சப்பாத்தினால் உருவான பள்ளத்தில் வழிந்த இரத்தம் தேங்கிநின்றது. ஆயர் பெல்லோ அதில் குனிந்து எதையோ எடுத்தார். செபஸ்டியாவ் அணிந்திருந்த சிலுவையுடனான சங்கிலி. இரத்தம் அதில் இருந்து துளித்துக் கொண்டிருந்தது.

கலைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சென்று நண்பன் ஒருவனின் வீட்டில் அடைக்கலமானேன். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தேவாலயத்தில் இருந்து சிலர் தப்பியதை அறிந்து கொண்ட இராணுவம் தேடுதலை முடுக்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு அதிகம் ஒரே இடத்தில் மறைந்திருக்காமல் இடம் மாறியபடியே இருந்தேன். இராணுவத்தினர் ஒருமுறை நான் தங்கியிருந்த வீட்டையும் தேடினர். வீட்டின் பின்புறமுள்ள கால்களை மடித்தவாறு ஒருவர்  குந்தியிருக்ககூடிய கிடங்கில் நான் அப்பொழுது ஒளிந்திருந்தேன். அதன் மீது காற்று வருவதற்கான சிறு இடைவெளிவிட்டு மரப்பலகை இடப்பட்டு அதன் மேலாக மண்ணைப் பரப்பிப் பழைய பொருட்களை இட்டிருந்தனர். இராணுவத்தினர் பின்புறம் எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் வரலாம் என்று சந்தேகம் எழுந்ததால் இரவோடு இரவாக வேறு இடத்துக்கு மாறவேண்டியதாகிவிட்டது.

போத்துக்கேயக் குழுவின் வருகை நிறுத்தப்பட்டது மக்களின் உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது. மழை சற்று தூறியிருந்தாலும் நவம்பர் மாதத்தில் காற்றில் தூசுகள் அடங்கவில்லை. அந்தத் தூசுகள் போன்று விரக்தி ஒவ்வொருவர் மீதும் படிந்து கொண்டிருந்தது. செபஸ்டியாவ் கோமஸின் படுகொலை உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அதையும், எதிர்பார்ப்பு முறிந்த ஏமாற்றத்தையும் இராணுவத்தின் ஆயுதங்கள் மீதான பயம் சாம்பலாக மூடியிருந்தது. ஆயினும் நாம் மனம் தளரவில்லை. செயற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து வேலை செய்து கொண்டிருந்ததால் தேவாலயக் கைதுகளுக்குப் பிறகும் தேக்கம் ஏற்படவில்லை. இதை எப்படி சாதகமாக மாற்றுவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தோம். எமது வழக்கப்படி இறப்பின் பின்னரான பதினாலாம் நாள் நினைவு வழிபாடு மேற்கொள்ளப்படும்.

செபஸ்தியா கோமஸின் நினைவுநாள் வழிபாட்டை இந்தோனேசிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்குத் தீர்மானித்தோம் .ஃபலின்டில் விடுதலைப் போராட்டத் தலைமைக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. குடிசார் எதிராட்டத்துக்கான இரகசிய இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் இருந்துவேறா க,சுயாதீனமாகச் செயற்பட்டாலும் முக்கிய நடவடிக்கைகளை அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் ஈடுபடுவதில்லை. விடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பில் அவர்களின் முதன்மை இடத்தை அங்கீகரித்தவர்களாகவே இருந்தோம். எந்தவித வன்முறையிலும் ஈடுபடாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஃபலின்டிலிடம் இருந்து பதில் வந்தது. ஆயத்தப்பணிகள் தீவிரமடைந்தன. தங்குமிடங்களும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பிரதிநிதி திலிக்கு வந்திருந்தமையால் அவர் இருந்த இடத்துக்கும் நினைவு நிகழ்வுடன் ஊர்வலமாகச் செல்வதற்கு திட்டமிடப்பட்டு நிகழ்வு ஒரு நாள் பின்தள்ளி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாள் விடிவதற்கான பதட்டத்துடன் சரிந்து கிடந்தேன். மனதில் ஏதேதோ குழப்பங்கள். நள்ளிரவில் திடீரென்று இரகசிய செயற்பாட்டு நண்பன் ஒருவன் வந்தான். அவசரமாக ஓரிடத்துக்கு செல்லவேண்டும் வா என்று அழைத்துச் சென்றான். வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகளாலும் வளவுகளுக்குள்ளாலும் இராணுவத்தால் உடைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்றான். சுற்றிவர புதர்கள் அடர்ந்து கூரைகள் எதுவுமற்ற சுற்றுப்புறச்சுவர் மட்டும் எஞ்சி நின்றது. கதவுகள், சாளரங்களின் நிலைகள் கழற்றி எடுக்கப்பட்ட வெறும் சிமெந்துச் சுவர்கள்.உள்ளே நிலத்தில்கூட வெடிப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே புதர்கள் எழுந்திருந்தன. கூரையுள்ள வீடு மனிதனுக்குத்தானே தேவை.

உள்அறை ஒன்றுக்கு சென்ற போது அதில் சிலர் துணியொன்றை விரித்து வட்டமாக அமர்ந்திருந்தனர். அருகில் கூடை ஒன்று கவிழ்க்கப்பட்டு இருந்தது. நெருங்கிச் சென்றபோது அவர்கள் இரகசிய செயற்பாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தது. ஒருவரை மட்டும் அடையாளம் தெரியவில்லை. நடுத்தர வயதுடையவர்; நெற்றி கால்வாசி தலை வரை மேலேறி விட்டிருந்தது.அதைச் சமப்படுத்தும் வெறியுடன் வளர்க்கப்பட்டு பின்புறமாக வாரி இழுத்த, சிக்கெடுக்கப்படாத முடி தோள்களில் புரண்டது. அதே போன்றே ஒழுங்காக்கப்படாத மீசை. யாரது என்ற பார்வையை நண்பனில் விட்டெறிந்தேன். ‘எல் செவின், எல் செவின்’ என்று தேவாலயத்தில் ஆராதனை நடைபெறும் போது பக்கத்தில் நிற்பவரிடம் அவசரமாக எதையாவது கூற நேர்வது போன்ற ஒருவித பதட்டத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.

நான் உறக்கத்தில் கனவு காண்கிறேனா இல்லை உண்மையாகவே நாட்டுப் புறக்கதைகளின் வீரனைக் காண்கிறேனா என்று திகைப்பெழுந்தடங்கியது. எல் செவினைப் பற்றி எத்தனை கதைகள். ஒருமுறை எல் செவினை இந்தோனேசிய இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கியபோது புகையாக மாறி மெலெழுந்து சென்றதாகவும் மலையைக் கடந்து சென்று மறுபக்கம் மழையாகப் பெய்து மீண்டும் எல் செவினாக மாறியதாகவும் வியப்புடன் பேசிக்கொள்வர். காட்டில் கொடியாக மாறி மரத்தில் படர்ந்து உச்சி வரை சென்றிருந்ததாகவும் இராணுவம் அதைக் கவனிக்காமல் கடந்துவிட்டதாகவும், இன்னுமொரு முறை பச்சைப் புறாவாக மாறிப் பறந்து சென்றதாகவும் இப்படிப் பல கதைகள்.

உங்களுக்காக இன்று எத்தனையோ அபாயங்களைத் தாண்டி வந்துள்ளேன். உடனடியாக செய்து முடித்துக் கிளம்பவேண்டும் என்று மெல்லிய புன்னகையுடன் அவரின் மீசை அசைந்தது. மற்றவர்களுடன் நானும் அரைவட்டமாக அமர்ந்தோம். நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் ஃபலின்டில் என்று எழுதப்பட்டிருந்தது அதன் மேற்புற விளிப்பின் மையத்தில் மரத்தாலான சிலுவை கிடையாக வைக்கப்பட்டிருந்தது.

எல் செவின் எழுந்து கூடையைத் தூக்கி கழுத்தில் பொன்னிற இறகுகளும் பழுப்பு நிறமும், சாம்பல் வெள்ளை சிறகுகளுமாக க்கெக் க்கெக் என்றுகொண்டிருந்த சேவலைப் பிடித்துக்கொண்டு வந்து அமர்ந்தார். தலையில் இருந்து மெதுவாகக் கழுத்துவரைத் தடவினார். சேவல் சிலிர்த்து அரைக் கண்ணை மூடியது. நாளை எமக்கு வெற்றியாக அமைய வேண்டும்.முன்னோர்கள் மலைகளில் இருந்து இறங்கி வந்து எமது கால்களிலும் தோள்களிலும் வலுச் சேர்க்கவேண்டும் என்று முணுமுணுத்தவாறு சடுதியாக ஒற்றைக் கையால் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். சிறகுகள் இரண்டும் படபடவென்று அடித்து இறகுகள் பறந்தன. உடல் துடித்து அமைதியானது. பின் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கியவாறு கழுத்தில் மெல்லிய கீறல். துணியில் வைக்கப்பட்ட குவளையில் இரத்தம் ஒழுகி நின்றது. வீட்டுக்கு வந்து படுத்தபோது மனத்தில் எதுவும் இருக்கவில்லை. மலை மீது ஏறி இறங்கியபின் வரும் ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்தேன். சேவல் கூவும் சத்ததுடன் எழுந்தேன். நேற்றைய உறக்கம் வியப்பாக இருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கான நேரம் நெருங்க உடலெங்கும் பதட்டத்துடனான பரவசமொன்று உருவாகிக் கொண்டிருந்தது.

சுத்தமாகி,உடைகளை மாற்றிக்கொண்டேன்.சுருட்டப்பட்டிருந்த பழைய படுக்கை விரிப்பை விரித்து உள்ளடங்கியிருந்த பதாகையையும் கொடியையும் எடுத்தேன். மேற்சட்டையை கழற்றி உடம்பின் சுற்றிக்கொண்டு மீண்டும் அணிந்து கொண்டேன். காலைக் குளிருக்கு இதமாக இருந்தது. தேவாலய ஆராதனைக்கு சென்றால் உளவாளிகள் என்னை அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதனால் ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவில் கலந்துகொள்வதற்காக காத்திருந்தேன். ஆராதனை அதிகாலை ஆறுமணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. முடிவதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். பதட்டத்துடனான காத்திருப்பு.

ஆர்ப்பாட்டத்தின் குரல் அலையலையாக நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீவா திமோர் லெஸ்தே, வீவா ஸனானா முழக்கங்களுடன் கலந்த இரைச்சல். உடல் சிலிர்த்தது. நூற்றுக்கணக்கானோரையே எதிர்பார்த்தோம். ஆனால் நிச்சயமாக அதைத் தாண்டியிருக்கின்றது. அருமை திமோர் லெஸ்தே உன் விதி மாறுகின்றது என்று பாடினேன். ஆர்ப்பாட்டத்தின் முனை நான் இருந்த இடத்தை தாண்டியது. கடந்து சென்று கொண்டிருப்பவர்களின் முழக்கமும் வந்துகொண்டிருப்பவர்களின் முழக்கமும் இருவேறு திசைகளில் இருந்து வரத்தொடங்கின .மின்னலென வெளிவந்து கூட்டத்துடன் கலந்தேன். அதே வேகத்தில் பதாகையும், கொடியும் உடலில் இருந்து வெளியில் வந்தன.

பெருமழை பெய்து வீடுகள், வளவுகள் எங்கிலும் இருந்து நீர் வீதிக்கு ஓடிவந்து இணைவது போன்று செல்லும் வழியெங்கும் திசைகள் எங்கிலும் இருந்து இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண்கள், பாடசாலைக்கு வந்த மாணவர்கள் இணைந்துகொண்டே இருந்தார்கள். காந்தமொன்று இரும்புத் துணிக்கைகளுக்கு இடையால் இழுக்கப்படுவதாக மக்களை ஊர்வலம் தன்னிச்சையாக ஈர்த்துக்கொண்டே சென்றது. பொலிசாரும், இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளிலும், வீதியோரங்களிலும் பெருமளவில் நின்றார்கள். அவர்கள் முகங்கள் நம்பவே முடியாத ஆச்சரியம், கோபம், வெறுப்பு என்று கலந்துகட்டிப் பிரதிபலித்துக் கொண்டன. இத்தனை மாதங்களாக எது நடைபெறக் கூடாதென்று இராப்பகலாகப் பாடுபட்டார்களோ அது அவர்களின் கண்முன்னே நடந்துகொண்டிருந்தது.

அரசியல் நாடகங்களால் ஆனது. வெறும் அரசியல் நிலைப்பாடுகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதன் அடிப்படையில் நடத்தப்படும் நாடகங்களே வரலாற்றை நகர்த்துகின்றன என்பது எம் இரகசிய அமைப்பினரின் கூட்டங்களில் அடிக்கடி கூறப்படும் வாசகமாகும். நிலைப்பாடு சரியாக இருந்தாலும் நாடகம் சரியாக அமையாவிட்டால் அந்த நிலைப்பாட்டை முன்னகர்த்த முடியாதென்பது அதன் இன்னுமொரு வடிவம். கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் ஒரு அங்கம் என்பதைக் காட்டுவதற்காக ஜகார்த்தா அரசும், தனி நாடு என்பதைக் காட்டுவதற்காக நாமும் போத்துக்கேயக் குழுவின் முன் ஆர்ப்பாட்ட நாடகங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தமை வருகை நிறுத்தப்பட்டதுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் ஒத்திகையை வீணாக்காமல் விடுதலை ஆதரவாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதை மறுதரப்பு ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் பார்த்துக்கொண்டு நிற்கிறது.

திட்டமிட்டபடி  ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தங்கியிருந்த ஹோட்டல் அமைந்த வீதிக்கு திரும்ப முயன்றோம். ஆனால் பொலிஸாரின் கடுமையான தடுப்பைமீறிச் செல்ல முடியவில்லை .தெற்காகத் திரும்பி இடுகாட்டை நோக்கித் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம். மண் எனும் சிலுவையில், எழவே முடியாதபடி மனிதர்களை வைத்து அறையப்பட்ட, ஒன்றைப் போன்று ஒன்றல்லாத சிமெந்து ஆணிகளின் தோட்டம் ஸண்டா க்ரூஸ். புகைப்படங்கள் பதிக்கப்பட்டவை, கண்ணைப் பறிக்கும் வண்ண டைல்ஸ் பதிக்கப்பட்டவை, இயேசுவின் சிலைகளைத் தாங்கியவை, சிறுவீடுகள் போன்றவை, பரிசுத்த ஆவியான புறா இறங்கிக் கொண்டிருப்பவை என்று கூறிக்கொண்டே போகலாம் .இவற்றுடன் செபஸ்டியாவ் கோமஸினதும் இணைந்துவிட்டது. புதிய மண் குவிக்கப்பட்டு பெரிய வெள்ளை சிலுவை உயர்ந்து நின்றது. நெடுக்காக ஆர்.ஐ.பி, பிறப்பு இறப்பு திகதி விபரங்களும், குறுக்காக செபஸ்டியாவ் கோமஸ் என்ற பெயரும் கறுத்த மையால் எழுதப்பட்டிருந்தன. பெரிய மலர் வளையம் ஒன்றை சிலுவையின் கழுத்தில் இட்டார்கள் .இதுவரை இருந்த ஒட்டுமொத்த உற்சாக மனநிலை வடிந்து வெறுமை குடிகொண்டது. இன்று அவனும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்! அவன் இருந்தால் இது நடைபெற்றே இருக்காதே என்று மறுவிநாடி தோன்றியது.

இடுகாட்டுக்குள்ளும் வெளியிலுமாகக் கூட்டம் நெரிபட்டது. எதிர்ப்புக் முழக்கங்கள் ஓயவில்லை. நான் மீண்டும் வெளியில் வந்து, வீதியைப் பார்த்த வண்ணம் ஏற்கனவே மதிலில் நின்றிருந்தவர்களுடன் ஏறிக் கொண்டேன். வீதியெங்கும் நிறைந்து வழிந்தது. வீவா திமோர் லெஸ்தே,வீவா ஸனானா முழக்கங்கள் எழுந்தன.

இராணுவ வாகனங்கள் வந்து கூட்டத்தின் காரணமாகத் திரும்புவதும் அதில் இருந்து சீருடை முழுமையாக அணிந்தவர்களும்,மேலாடை இல்லாமல் காற்சட்டை மட்டும் அணிந்தவர்களுமாக இறங்கி எதிரில் இருந்த இராணுவத்தினரின் இடுகாட்டுக்கு வரிசைகட்டிச் செல்வதும் தெரிந்தது. சற்று நேரத்தில் அவ்விடுகாட்டின் மதிற்சுவர்களிற்கு மேலால் துப்பாக்கிகள் எம்மை நோக்கி நீண்டன. பீதியுடனான கூச்சல் எழுந்தது. கையில் இருந்த மெகாபோனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருவர் நாம் அமைதியாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றோம், இராணுவத்தினர் எமக்குப் பாதுகாப்பளிக்கவே வந்துள்ளனர் என்று பதட்டத்துடன் கூறியவாறு நின்றிருந்தார். இராணுவத்தினர் வரிசையாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நின்றதையும் விசையை அழுத்தத் தயாரான அவர்களின் நிலையையும் புறக்கணித்தாலும்கூட அவர்களின் கண்களில் உறைந்து கொண்டிருந்த வேட்டையாடும் வெறி மூளையில் எச்சரித்தது. பின்புறமாகக் குதிக்கவும் துப்பாக்கிகள் வெடிகளைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.

எங்கும் கூக்குரல், மரண ஓலம். சில நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்துத் தள்ளின. நான் ஓடியும், கல்லறைகளுக்குள் பதுங்கி ஊர்ந்தும் நகர்ந்து கொண்டிருந்தேன். உண்மையில் பீதியில் கூச்சலும் வெடிச்சத்தமும் கேட்டதே தவிர சுற்றிவர என்ன நடக்கின்றது என்பதை எனது புலன்கள் அறியவில்லை. மூளை உறைந்துவிட்டது போன்ற நிலை. என்னைச் சுற்றி இருட்போர்வை போர்த்துக்கொண்டது போலவும் ஓடுவதற்கான காலடி வைக்கும் இடங்கள், பற்றுவதற்குரிய இடங்களை மட்டும் அப்போர்வை கிழிந்து கிழிந்து வெளிச்சத்தை அனுமதிப்பது போன்றும் இருந்ததாக பின்னர் நினைவுக் கூரும்போது தோன்றுகின்றது. இடுகாட்டின் பின்புறத்துக்கு வந்து மூச்சிரைக்க கல்லறையொன்றின் மறைவில் படுத்துக்கொண்டேன். சற்று தொலைவில் இன்னொரு கல்லறை மறைவிலிருந்து வெள்ளையர் ஒருவர் தனது வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தது தெரிந்து சற்று தெளிவடைந்தேன். எதிர்ப்பாட்டத்தை குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அவர்.

சட்டை முழுதும் இரத்தம் தெறித்திருந்தது. தடவிப் பார்த்தேன் . கால் கைகளில் சிராய்ப்புக் காயங்களைத் தவிர வேறில்லை. கூட்டமாக ஓடியபோது யாருடைய இரத்தமாவது பட்டிருக்க வேண்டும். முதுகில் குளிர்வது போன்று இருந்தது. கையால் தடவினேன் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தது. மனப்பதைப்புடன் இழுத்தெடுத்தேன் . இரத்தத்தால் ஊறிய தலைமயிர்கள் ஒருபுறமாகவும், பசைபோன்று வழுவழுத்த இரத்தம் சதைகளுடனான மறுபுறத்தையும் கொண்ட மண்டையோட்டின் துண்டு. கையை உதறி வீசினேன். முன்னரைப் போன்று தொடர்ச்சியாக அல்லாமல் இடைக்கிடை வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காயப்பட்டு விழுந்து கிடந்தவர்களைச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருந்தனர். விழுந்து துடித்து க்கொண்டிருந்த ஒருவரை சுடுவதற்கு முயல்வதும்.ரவை தீர்ந்ததால் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அவர் வயிற்றைக் கிழிப்பதும் தெரிந்தது. கழுத்தில் குளிரேறித் தலை விறைத்துக்கொண்டு வந்தது . கால்களில் வலுவைத் திரட்டி பின்மதிலால் பாய்ந்து ஓடத்தொடங்கினேன்.

மீண்டும் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்தது. ஸண்டா க்ரூஸ் மயானத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று பின்னர் தெரியவந்தது. நாளாந்தம் பயங்கரமான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் பலர் இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு இராணுவத்தினர் பெரிய கற்களால் மண்டைகளைப் பிளந்தும், காயங்களுக்கு குளிர்நீர் ஊற்றியும் அவர்களைப் படுகொலை செய்ததாக ஒளிந்திருந்து தப்பியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டோர் பலர் ஆற்றங்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டு வீசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. காயமடைந்தோர் நகரிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் தேடித்தேடி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைமறைவாக எவ்வளவு காலத்துக்கு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. தேடுதல் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருந்தது. பல்கலைக்கழகக் கல்வியை இடை நிறுத்திவிட்டு வந்த சில காலத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்லமுடியாத ஒற்றையடிப் பாதை வழியாக வெகுதூரம் வந்துவிட்டேன் என்றெண்ணித் திகைத்து நின்றேன். இனித் திரும்பிப் பார்ப்பதில் பயனில்லை.

திமோரின் நீட்டுவாக்காக, முதுகெலும்பாக மலைத்தொடர் சென்றது. சமவெளிகள் தாய், தந்தை; மலைகள் பாட்டன், பாட்டி என்பது திமோரிகளின் வழக்கு.தாய், தந்தை கைவிட்டாலும் பாட்டன், பாட்டி கைவிடுவதில்லை என்ற நம்பிக்கை எம்முடன் பின்னிப் பிணைந்தது. நானும் வேறு சில செயற்பாட்டாளர்களும் ஃபலின்டில் இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமுள்ள மலையடிக் கிராமமொன்றை அடைந்தோம். கிராமத் தலைவரிலிருந்து கிராமத்தவர் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த மலைப் பிரதேசங்களில் இந்தோனேசிய இராணுவத்தினர் எளிதில் நுழைந்துவிட முடியாது இராணுவ நடவடிக்கையொன்றால் மட்டுமே வரமுடியும். அங்கிருந்து நான் ஃபலின்டிலுக்கான ஓட்டவீரனாக செயற்படத் தொடங்கினேன். அதை எஸ்டா ஃபெடா என்று கூறுவார்கள். கடிதங்கள், உணவு, இராணுவ நடமாட்டத் தகவல்களை மலைக்காடுகளிலுள்ள இயக்கத்தினருக்கு எடுத்துச் செல்லும் பணி.

விரைவில் படைப்பயிற்சி பெற்று ஃபலின்டில் முழு நேர உறுப்பினராகிவிட்டேன். ஸண்டா க்ரூஸ் படுகொலைகளுக்குப் பிறகு என்னைப் போன்று வேறுபலரும் இணைந்திருந்தார்கள். இந்தோனேசியா பெரிய நாடு. அதை நேரடியாக வெற்றிகொள்ள முடியாதென்பதை நாம் அறிந்திருந்தோம். எமக்கான சூழல் உருவாகும்வரை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே ஃபலின்டிலின் நோக்கமாக இருந்தது. எதிரி நிலத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் நிம்மதியாக உறங்கக்கூடாது. நாங்கள் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செயற்பட்டோம். சிறுசிறு தாக்குதல்கள், கிராமங்களில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பது என்று பணிகள் இடைவிடாது இருந்துகொண்டிருந்தன.

ஸண்டா க்ரூஸ் படுகொலைகளின் ஒளிப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாக கிழக்குத் திமோர் மீதான சர்வதேசப் பார்வை மாறத்தொடங்கியது. அது அதிரடியான திருப்பம். வரலாறு சடுதியாக  எமது பக்கம் திரும்பியது. வெளிநாட்டு அழுத்தங்களால் படுகொலைக்குப்பின் எட்டாண்டுகளில் இந்தோனேசியா பொதுவாக்கெடுப்பு நடத்தியதும் கிழக்குத் திமோர் தனி நாடானது நாம் எவருமே நம்பியிருக்காத வகையில் நடைபெற்று முடிந்தன.

நான் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். கண்கள் ஒளியேறி மினுங்கின. எனது கைகளைப் பற்றி வாழ்த்துகள் என்றான். விடுதலையடைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், பலமுறை இவ்வாறான வாழ்த்துகளை கேட்டிருந்தாலும், அவனின் வாழ்த்து எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அவனின் கைகளைப் பிடித்து நன்றி, நன்றி என்று மீண்டும் மீண்டும் கூறினேன்.

விடுதலைப் போராட்ட வீரர்களில் குறைந்தபட்ச எழுத்தறிவற்றவர்களைத் தவிர ஏனையோர் கிழக்குத் திமோருக்கான இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் கிடைக்கும் என்றாலும் எனது இயல்புக்கு பொருத்தமற்றதென்பதால் நான் இராணுவத்தில் இணையவில்லை .எனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்வதற்குத் தீர்மானித்தேன். செல்வதற்கு முன் ஆயர் பெல்லோவை சந்திக்கச் சென்றேன். எமது புதிய நாட்டுக்குக் கற்றவர்கள் அதிகம் தேவை. நாட்டுக்கான பணி என்றும் முடிவடையக் கூடியதல்ல. பல்கலைக் கழகத்தில் ஓராண்டு கற்ற உன்னைப் போன்றவர்களை விட்டுவிடமுடியாது. நீ தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்கிறேன்; படி என்றார் அவர். முப்பது வயதாகி விட்டது இனி எப்படி என்றேன் தயங்கியபடி. உனக்கு தாய்லாந்தின் அஸம்ஷன் பல்கலைக் கழகத்தில் இடமெடுத்துத் தருகின்றேன் என்று கூறி, அதன்படி இடமெடுத்துத் தந்தார். நீ புறச்சவால்கள் பலதை வென்றவன் என்று தெரியும். தாய்லாந்து உன் அகத்துக்கான சோதனை. அதில் வென்று வந்தால் மட்டுமே நீ உண்மையான விடுதலை வீரன். இல்லாவிட்டால் வெறும் சாகச விரும்பி மட்டுமே என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார் பெல்லோ.

அங்கு பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் படித்து முடித்தேன். அங்கிருந்த கிழக்குத் திமோர் தூதரகம் என்னை உள்வாங்கிக்கொண்டது என்று கூறிவிட்டு அமைதியானேன். சற்று நேரத்தின் பின்னர் என்னைப் பற்றி இவ்வளவு கூறிவிட்டேன், உன்னைப் பற்றி அறியலாமா என்று கேட்டு அவனை ஏறிட்டேன். தனது சட்டைப் பையைத் தடவியவன் நாணயக் குற்றியொன்றை எடுத்தான். ஒரு திர்ஹாம். தலையா வாலா என்றான். குழப்பத்துடன் தலை என்றேன். மேலே சுண்ட, நாணயம் எழுந்து இறங்கி சுழன்று சரிந்தது; தலை. அவன் முகத்தில் மெல்லிய முறுவல். அப்பொழுது அவனின் நண்பன் அவனை நோக்கி வேகமாக வந்து ஏதோ கூறினான். அவன் சிரித்தபடி எனக்கான வாகனம் வந்துவிட்டது. செல்கிறேன் என்றவாறு நண்பனுடன் வேகமாக சென்று கட்டிடங்களில் மறைந்தான். எனக்கு எதுவுமே புரியவில்லை.கீழே கிடந்த நாணயத்தை எடுத்துப் கையில் வைத்து திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு நின்றிருந்தேன் .சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ஹொட்டேலுக்குத் திரும்பினேன்.

அவன் மேற்சட்டையை மாற்றியபோது அந்த உடலில் கண்ட தழும்புகள் மனதில் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. நிச்சயமாக அவை ஆயுதங்களால் ஏற்பட்டவை என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனுடன் அவ்வளவு ஈர்ப்புடன் உரையாடினேன். அவன் தனது ஊரின் பெயரை ஆங்கிலத்தில் ஒருவிதமாகவும் அவனது மொழியில் ஒருவிதமாகவும் கூறுவார்கள் என்று உச்சரித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. பட்டிக்கலோ என்பது ஒன்று. மற்றைய பெயர் எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் வரவில்லை.

ஒருநடுவ வட்டங்கள்

சிவேந்திரன் –

மஞ்சள் நிற வெளிச்சத்தை இருபுறங்களிலும் பாய்ச்சியபடி வீதியின் நடுவில் நின்றுகொண்டிருந்த விளக்கு கம்பங்களின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருந்தார் விரிப்பைக் காட்டிவாறு சென்று திருப்பத்தில் மறைந்தது. அதிலிருந்து விலகி சற்று தொலைவில் நடந்து செல்லும் உருவங்களை அதிகமாக இனம் காணமுடியாத அளவிற்கு இருட்டு போர்த்தியிருந்தது. வாகனங்கள் குறைவாகவே சென்றன. அவற்றில் பெரும்பாலானவை டாக்ஸிகள்.

வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். நிலவினை காணவில்லை. ஒரேயொரு நட்சத்திரம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதை நானும் உற்று நோக்கினேன். சுற்றிவர எல்லையற்று விரிந்து செல்லும் வானத்தில் தனித்து நிற்கும் அவ்விண்மீன் அலைகடலின் மத்தியில் இருக்கும் ஊர்காவற்றுறை கடற்கோட்டையை நினைவுபடுத்தியது. இப்போது அந்தக் கடற்கோட்டையும் இந்த உடுவினை நோக்கிக் கொண்டிருக்கக்கூடும். சடுதியில் மனம் மெல்ல அதிர்ந்தது. நட்சத்திரத்தை நோக்கி கை அசைத்தேன். உங்களை வியந்து வியந்து பார்த்த சிறுவன் எங்கோ மணற்காட்டில் எழுந்து நிற்கும் கட்டிடக்காட்டில் இருக்கிறான். இப்போது அவன், இளமைக்காலங்கள் மணற்கடிகாரத்தின் மணலைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவன் என்று அவ்விண்மீன் அந்தக் கடலிடமும் கடற்கோட்டையிடமும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன். (more…)