செல்வசங்கரன்

வெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை

கீழே என்பதற்கு இருக்கும் ஸ்திரத்தன்மை மேலேக்குக் கிடையாது
கீழே என்பதைப் போட்டால் அப்படியே கீழேயே கிடக்கும்
மேலே ஒரு கிளர்ச்சியான சொல்
அதனால் தான் பரந்து விரிந்த மணற்பரப்பை வியந்து பார்த்துக்
கிளம்புகிற சமயத்தில் என்ன செய்கிறது பார்ப்போமென
மேலே என்பதை அதற்கு மேலே வைத்து விட்டு வந்தேன்
மேலே என்றவுடன் கடற்கரை அந்தச் சொல்லுக்குக்
கீழே போய்க் கொண்டது
கால்களால் மணலை அளைந்தவாறு நடக்கும் போது
அவ்வளவு பெரிய மணற்பரப்பு ஒரு சின்ன சொல்லுக்குக் கீழேயிருந்தது
வினோதமாய் இருந்தது
அத்தனை பெரிய மணல் வெளியை இயல்பிற்கு கொண்டுவர எண்ணி
மேலேயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென முயலுகையில்
அருகே ஒரு எச்சரிக்கை பலகை கீழிருந்து மேல் நோக்கி முளைத்திருந்தது
அதை விட மேலே போலீஸார் அமருகின்ற கண்காணிப்பு கோபுரம்
நீண்டிருந்தது
அதையும் விட மேலே சிவப்பு கலரில் ஒரு பலூன் மிதந்தது
அதற்கும் மேலே பறவைக் கூட்டமொன்று வலசை போனது
கடலின் பிரமாண்டம் படுக்கை வசத்தில் இருந்தபடியால் அப்பொழுது
கீழேக்கு மேலே எளிதாக வைத்துவிட்டேன்
இது அது மாதிரி இல்லை
மேலேயென்று எழுதுவது போல இட வலமாக கூட்டிப் போகுமென்றால்
ஏமாந்துவிடுவோம்
மேலே மேலேயென அடுக்கி அப்படியே மேலேயே கூட்டிப் போகிறது
வெறும் சொற்களால் தான் கட்டுவது ஆனாலும்
கட்ட கட்ட அந்தரத்தில் குத்து வசமாக எழும்புவதென்னவோ
ஒரு பேனிக் வே

Advertisements

பின்னால் கூடி வருதல் – செல்வசங்கரன் கவிதை

பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி
ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது
வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால்
தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக
இவ்வாறு செய்வதாகக் கூறினான்
உடனடியாக ஆச்சர்யத்தை அங்கிருந்து லேசாக நகர்த்தியபடியே
இனி மரங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்ப வேண்டியதிருக்கும்
சட்டையை திருப்பிப் போட்டு அலைய வேண்டியதிருக்கும்
பைக்கைத் திடீரென நிறுத்தி எல்லாவற்றையும்
கழட்டி எறிய வேண்டியதிருக்கும்
எந்நேரமும் எதையாவது பிடித்து இழுக்க வேண்டியதிருக்கும்
வாய்க்குள்ளேயும் கையை விட்டு நோண்டி
ஒன்று ஒன்றாகப் பிய்க்க வேண்டியிருக்கும் பரவாயில்லையாயென
வெறும் சொன்னதற்காகப் போய்
பார்த்தவன் இவ்வளவு பறக்கிறான்
நான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறேனென
பின்னால் திரும்பியவன் பாவம் மிகவும் வருத்தப்பட்டு
பின்னால் கூடி வந்துகொண்டிருந்தான்

ஒலிக் குறிப்போடு இன்னொன்றையும் தூக்கிப் பறந்த பறவை -செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

 

அதைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லையே
குட்டியூண்டு சைஸ் ரொம்பக் குட்டி
கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே க்ரில்லில் அமர்ந்தபடி
எப்பொழுதும் கண்ணாடியைக் கொத்தியபடியேயிருக்கும்
வருகின்ற நேரம்தான் வந்துவிடும் இப்பொழுது பார்த்துவிடலாம்
கொஞ்சம் பொறுங்கள் வந்துவிட்டதென நினைக்கிறேன்
ஆம் ஆம் வந்துவிட்டது பிறகு பேசலாம்
எப்பொழுதும் போல தன் குட்டி அலகை வைத்து
தட்தட்தட்தட் தட்தட்தட்தட் என கொத்த ஆரம்பித்தது
பிறகு பேசலாமென சொன்னது இதைப் பற்றிதான்
மறந்த நிலையிலாக ஒருவேளை ஏற்கனவே சொல்லியிருந்தால்
அதுவும் இதுதான்
இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பதும் கூட இதுதான்
அதோ அலகை மட்டும் தானே முன்னால் கூப்பி பறந்துகொண்டிருக்கிறது
நீங்கள் சொல்லுகிற எதுவும் அலகில் இல்லையென சொல்கிறீர்களே
அதுவுமே இது தான்
இப்பொழுது இதையுமே தூக்கிப் பறந்து கொண்டிருக்கிறது
வாருங்கள் வந்து பார்த்தால் தெரியும் அது

சைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

சிரிப்பே வரவில்லை
இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க
இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா
இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால்
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்
சிரிக்கவில்லை எனக்குத் தெரியுமாதலால்
பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை
இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்
உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்
அக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்
பக்கத்தில் இருந்தவர்கள் தான்
பெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்
சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து
முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது
திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை
பாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்
என்ன செய்தும் சிரிப்பு வரவில்லை
சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென
காதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்
அவ்வழியில் போனால் போகப் போக
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து
ஒரே சிரிப்பு முழக்கம்
என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை
இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே
கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது
சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே
அதுவா இது
சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே
உங்களிடம் தான் கேட்கிறேன்
இல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்

முகம் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா